இணைய இதழ்இணைய இதழ் 66கட்டுரைகள்

இந்தியப் பார்வையில் உலக அரசியல் – எஸ். நரசிம்மன்

கட்டுரை | வாசகசாலை

‘மு.இராமனாதனிடம் எனக்குப் பிடித்தமானது அவரது எளிமையும் கச்சிதமும்’ – “கிழக்கும் மேற்கும்” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள சமஸ் இப்படிக் கூறுகிறார். நூலின் ஒவ்வொரு கட்டுரையும் இந்தக் கூற்றை நிரூபிக்கிறது. 

வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளானாலும் அவற்றின் இலக்கு தெளிவாக இருப்பதால் இந்த நூல் விரும்பி வாசிக்கப்படும் என்று எண்ணுகிறேன். அதிலும் நாம் அறிந்திராத பல பன்னாட்டுச் செய்திகளை முழு விவரங்களுடன், தெளிவான புரிதலோடு, அழகு தமிழில் தருகிறார் இராமனாதன். கட்டுரையில் இடம்பெறும் நாடுகள் தற்போது எதிர்நோக்கும் சிக்கல்களைப் பின்புலத்தோடு விவரித்து, காரணங்களை ஆராய்ந்து, தீர்வுகளையும் கோடிட்டுக் காட்டுகிறார். எல்லாக் கட்டுரைகளிலும் இந்தியாவின் கோணம் இடம் பெறுகிறது. 

இத் தொகுப்பு நூலின் 34 கட்டுரைகளில் 16 கட்டுரைகள் சீனாவைப் பற்றியவை. ஒன்பது அமெரிக்காவைப் பற்றியவை. மற்றவை இன்னபிற ஆசிய, ஐரோப்பிய நாடுகளைப் பற்றியவை. எனினும் நூலின் ஆதார சுருதி சீனக் கட்டுரைகள்தாம். 

“இது ஷி ஜிங்பிங்கின் காலம்” எனும் கட்டுரை, சீனக் குடியரசு 1912இல் தோன்றியதில் தொடங்கி, மாசேதுங் தலைமையிலான புரட்சியை விவரித்து, தாராளமயமாக்கலின் வெளிச்சத்தில் இன்றையச் சீனாவின் அசுர வளர்ச்சியை அலசி, அதன் வருங்காலத் திட்டங்கள் வரை ஆராய்கிறது.

“சீனா பறக்க விடும் இந்தியக் கொடி” எனும் கட்டுரை, அவ்வப்போது “சீனாவைப் புறக்கணிப்போம்” என்று சொன்னாலும் ஏன் நம்மால் சீனப் பொருட்களைத் தவிர்க்க முடிவதில்லை என்று விளக்குகிறது. 2021இல் இந்தியாவின் சீன இறக்குமதி 100 பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது. முழக்கங்களைத் தாண்டி நாம் எடுக்கவேண்டிய முயற்சிகளையும் இந்தக் கட்டுரை விவரிக்கிறது. வெறும் அறிவுரைகளையும் தரவுகளையும் அடுக்காமல், ‘தனது நண்பர் வாங்கும் பிள்ளையார் பொம்மை’, ‘ நமது சபாநாயகர் அடைந்த சங்கடம்’, ‘மதுரை உணவக உரிமையாளரின் கோபம்’ போன்ற அனுபவக் குறிப்புகளால் சுவை கூட்டுகிறார் ஆசிரியர்.

“என்று தணியும் இந்திய சீன எல்லை தகராறு?” என்கிற கட்டுரையில் நம்மில் பலருக்கும் மேலோட்டமாகத் தெரிந்த, ஆனால் ஆழமாகப் புரியாத எல்லைப் பிரச்சினையை விளக்குகிறார். மேற்கில் அக்சை-சின், கிழக்கே அருணாச்சலப் பிரதேசம், மேலே திபெத் என்று எல்லைப் பரப்பையும், இதுவரை நடந்த சண்டைகளையும், சமரசப் பேச்சுக்களையும் எளிமையாகவும் விரிவாகவும் விளக்குகிறார். இந்தச் சிக்கலை இந்தியா எப்படிக் கையாள வேண்டும் என்ற வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறார். 

ஆசிரியரின் பார்வையில்: 

-போர் எந்தக் கருத்து வேற்றுமையையும் களைந்ததாக வரலாறு இல்லை.
-எல்லைக் கோடுகளுக்கு புனிதத்துவம் கற்பிக்கத் தேவையில்லை. 
– நடைமுறைச் சிக்கல்களும் கள யதார்த்தங்களும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். 

ஆகிய கருத்துக்கள் தொடர்ந்து சுட்டப்படுகின்றன. அதேசமயம், “வலசை போகும் சீனர்கள்” என்கிற கட்டுரை புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் துயரங்களைக் காட்சிப்படுத்துகிறது. சமூகப் பொறுப்புணர்வு கொண்ட பொறியாளரான இராமனாதன் சீனப் பெருமழையின் (2021) விளைவுகளைப் பற்றிப் பேசுகிறபோது, மறக்காமல் சென்னைப் பெருமழையையும் (2015) சேர்த்துக் கொள்கிறார். பொறியியல் ரீதியான தீர்வுகளும் தருகிறார். 

“சீனாவின் ஒற்றைக் குழந்தைகள்”- மிக முக்கியமான சமூகச் சிக்கலைப் பற்றி கரிசனத்தோடு எழுதப்பட்ட கட்டுரை. சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைதான் மக்கள் தொகைப் பெருக்கம். ஆனால், அதைக் கையாண்ட விதம் வேறுபட்டதால் விளைந்த பலன்களை விவரமாகச் சொல்லி, இனிமேல் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

“செய்யும் தொழிலே தெய்வம்”- என்னைப் பொறுத்தவரை இத்தொகுதியின் நட்சத்திரக் கட்டுரை இது-இந்தியாவைப் பற்றியது. ஒரு பக்கம் வேலையின்மை, இன்னொரு பக்கம் திறன் மிகுந்த தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை- என்று ஒரு வினோதமான நிலை நிலவுகிறது என்கிறார் ஆசிரியர். இதற்கு என்ன காரணம்? நம் சமூகம், உடலுழைப்பைத் தாழ்வானதாகவும் மூளை உழைப்பை மேலானதாகவும் கருதுகிறது என்கிறார் ஆசிரியர். அதேநேரம், சீனா இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிக்கிறது? உடலுழைப்புக் கோரும் பணிகளை அவர்கள் தரக்குறைவாக நினைப்பதில்லை… வகிக்கும் பதவியால் ஒருவருக்குத் தாழ்ச்சியோ உயர்ச்சியோ வருவதில்லை – மிகச் செறிவான இந்தக் கருப்பொருளைத் தனது நேரடி அனுபவங்களைக் கொண்டே எளிமைப்படுத்தியுள்ளார் ஆசிரியர். தனது எழுத்தாற்றலால் ஒரு வாசகனைச் சிந்திக்கவும் வைப்பது படைப்பாளிக்குக் கிடைக்கும் வெற்றி.

“சீனாவின் வளர்ச்சியும், வறுமை ஒழிப்பும் முன்னுதாரணம் இல்லாதவை. இவை சீனாவின் ஒரு முகம்; சீனாவின் யதேச்சாதிகாரமும் மேலாதிக்கமும் இன்னொரு முகம்.” -என்று ஒரு இடத்தில் சொல்கிறார். இந்நூலில் உள்ள கட்டுரைகள் சீனாவின் இரண்டு முகங்களையும் எடுத்துக் காட்டுகின்றன. தான் வெகுகாலம் வாழ்ந்த சீனாவைப் பற்றிய ஆழ்ந்த அறிவும், இந்தியாவைப் பற்றிய அக்கறையும் அவரது எல்லாக் கட்டுரைகளிலும் வெளிப்படுகின்றன. 

சீனாவைப் பற்றி மட்டுமல்ல மற்ற பல நாடுகளைப் பற்றிய கட்டுரைகளும் ஆழமானவை, சிறப்பானவை. டிரம்ப் அமெரிக்காவிற்கு உண்டாக்கிய சேதாரம், ஆஸ்திரேலியத் தேர்தலின் புதுமைகள், புதிய பிரிட்டிஷ் பிரதமரின் பின்னணி, உக்ரைன் யுத்தத்தின் உக்கிரம், காட்சிகளும் ஆட்சிகளும் மாறும் மியான்மர், இந்தியாவுடன் வணிகத்தில் போட்டியிடும் வங்கதேசம் என்று எல்லாக் கட்டுரைகளுமே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உகந்தவை.

பல கட்டுரைகள் ஆசிரியரின் நேரடி அனுபவத்திலிருந்து உருவானவை. சிகாகோ வீதியில் நின்று கொண்டு பால்புதுமையினரின் ஊர்வலத்தைப் பற்றி எழுதுகிறார். ரங்கூன் பயணத்தில் அங்கு சந்தித்த பர்மீயத் தமிழர்களின் சிரமங்களைப் பேசிகிறார். ஆஸ்திரேலியாவின் புத்தகக் கலாச்சாரத்தை சிட்னி நகரின் புத்தகக் கடை ஒன்றிலிருந்து விளக்குகிறார். அந்தக் கட்டுரையில், “புத்தகங்களைப் படித்தால் சமூக அக்கறை மிகும். அறிவு செழுமையுறும். படிப்பு கூடும்போது அடக்கம் வரும். எல்லா மாயத்தையும் இந்த அச்சடித்த புத்தகங்களால் நிகழ்த்த முடியும்” என்கிறார். இந்தப் புத்தகத்தாலும் அப்படியான மாயங்களை நிகழ்த்த முடியும்.

கட்டுரையாளர் – எஸ். நரசிம்மன்

கிழக்கும் மேற்கும் 
பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்
மு இராமனாதன்
விலை: ரூ. 290
காலச்சுவடு பதிப்பகம்
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525

******

snntamil@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button