சுந்தர், சமூக வலைதளங்கள் பிரபலமாகாத காலத்தில் வளர்ந்தவன். சுந்தரின் கல்லூரி நாட்களில் இணையமும், மின்அஞ்சலும் அவனுக்கு பரிச்சயமான ஒன்றுதான். பிரவுசிங் சென்டர்கள் சென்று முகமறியா பெண்களோடு கடலை போட கூட ஒரு காலத்தில் முயற்சி செய்திருக்கிறான். ஆனால், இப்படி வளர்ந்த சுந்தருக்கு இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ டுயூப், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற தளங்களில் பலர் போடும் வீடியோக்கள், குறிப்பாக இளசுகள் போடும் வீடியோக்களை பார்க்க பார்க்க கோபம் கொப்பளித்தது. “அது என்ன பிரைவசின்னு ஒண்ணு இவங்களுக்கு கிடையாதா?” என்று புலம்புவான்.
நேரம் கிடைக்கும் போது அவன் கையில் சிக்கும் இளவட்டங்களுக்கு அறிவுரைகளை அள்ளித் தருவான். அப்போதெல்லாம் அவன் மனதில் பெருமிதம் பொங்கும். பாவம் அவனுக்கு தெரியாதது அந்த இளசுகள் அவனுக்கு வைத்த பட்டப்பெயர் ‘பூமர் அங்கிள்’ என்று.
பூமர் சூயிங்கம் தெரியும் … அதென்ன ‘பூமர் அங்கிள்’? என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரிகிறது. பூமர் அங்கிள் என்ற சொல் இன்றைய இளசுகளின் மொழியில், தேவையில்லாமல் அறிவுரை தரும் பெரியவர் என்ற பொருளைத் தருகிறது.
பதின் பருவத்தை அடைந்த அவனது மகளின் ஸ்மார்ட் ஃபோன் ஆசையை அறிவுரை கொடுத்தே நிராகரித்தான் சுந்தர். இருப்பினும் அவளது பள்ளி சம்பந்தப்பட்ட செய்திகள் ஊரடங்கு காலம் துவங்கி வாட்ஸ் ஆப் மூலம் வரத் துவங்கிவிட்டது. இதை குறித்து அவன் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும இல்லை. பெரும்பாலான ஆசிரியர்களும் , பெற்றோர்களும் இந்தத் தகவல் தொடர்பு முறையை ஆதரித்தனர். இதனால் மகளின் வகுப்பாசிரியர் எண் முதல் அனைத்து பாட ஆசிரியர்கள் எண்களும் அவன் திறன் பேசியில் பதிவாயின. இதன் விளைவு, அனைவரின் பிறந்தநாட்களும் மாணவர்கள் மத்தியில் பிரபலமானது. ஆசிரியர்கள் பிறந்த நாளோடு நின்றால் பரவாயில்லை… ஆசியர்களின் திருமண நாள், அவர்கள் கணவர்/மனைவி/ குழந்தைகளின் பிறந்த நாள், அவர்கள் குடும்பத்தோடு சென்று வந்த சுற்றுலாக்கள், வார இறுதிகளில் சென்ற உணவகங்கள் என்று அனைத்து நிகழ்வுகளும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் மூலம் சுந்தரின் மகள் மற்றும் அவளது நண்பர்களுக்கு தெரியவந்தது. அவர்களுக்கு பேச்சுப் பொருளாகவும் மாறியது.
தினமும் ஸ்டேட்டஸ்களை பார்த்து பொருமிய சுந்தர், மகளின் வகுப்பாசிரியர் ஷியாம் போடுகிற ஸ்டேட்டஸ்களைப் பார்த்து வெகுண்டெழுந்தான். புதிதாக திருமணமான ஷியாம் அவனது திருமணம், தேன் நிலவு, என்று ஆரம்பித்து தினமும் ஆசை மனைவியை கொஞ்சும் விதமாக கடந்த மூன்று மாசங்களாக பதிவுகள் இட்டு வருகிறான். “மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று சொல்லுவாங்களே… இந்த வாத்திக்கு எப்போ மோகமும் ஆசையும் அடங்கும் மாலா? எரியுது டீ மாலா… ஃபேன பன்னண்டுல போடு…” என்று வைகைப்புயல் வடிவேலுவைப் போல தன் மனைவி மாலாவிடம் புலம்பித் தவித்தான் சுந்தர். மாலாவும், அவனது மகளும் எத்தனை சொல்லியும் அவனது கோபம் அடங்கவில்லை. அன்று வகுப்பாசிரியர் அவன் மனைவியோடு சேர்ந்து போட்ட ‘காதல் சடுகுடு’ ரீலைப் பார்த்து பள்ளியை நோக்கிப் படையெடுத்தான் சுந்தர்.
பள்ளியின் ஸ்டாஃப் ரூமில் இருந்தார் வகுப்பாசிரியர் ஷியாம். “சொல்லுங்க சார்! உங்களுக்கு எந்த விதத்துல என்னால உதவ முடியும்?” என்று பணிவாக ஆங்கிலத்தில் சுந்தரிடம் கேட்டார் அவர். அவரை சுற்றி சக ஆசிரியர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலரும் ஸ்டேட்டஸ் போடுபவர்கள். சுந்தர் சற்றே தயங்கினான். சீனியர் வகுப்பு ஒருங்கிணைப்பாளரை ஒருமுறை தனியறையில் சந்தித்தது நினைவுக்கு வரவே, அவரது எண்ணை வாங்கிக் கொண்டு அவரை சந்திக்க அவர் அறையின் வெளியில் போட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தான் சுந்தர்.
ஒருங்கிணைப்பாளர் சந்திராவின் ஸ்டேட்டஸ் அவன் கண்ணுக்கு தென்பட்டது. சந்திராவிற்கு அன்று இருபதாவது திருமண நாள். கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, “ என் அருமை கணவர் குரு பிரசாதிற்கு வாழ்துக்கள். நீங்கள்தான் எனது உயிர்…” என்று ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். ‘அட நம்ம குருவா இது?’ என்ற சந்தேகத்தில் அந்த படத்தை சற்று உற்று நோக்கினான் சுந்தர். அது அவனது தலைமை டைரக்டர் குருதான். குருவிற்கு அவரது பிறந்த நாளன்று தனிமையில் சந்தித்து வாழ்த்துகள் கூறினால் கூட பிடிக்காது. அப்படிப்பட்ட குருவே தனது மனைவியின் செயலை ஏற்றுக்கொண்ட போது, தான் அவர் மனைவியிடம் இந்த ஸ்டேட்டஸ் விவகாரம் பற்றி புகார் கூறினால் சரியாக இருக்காது என்று பள்ளியிலிருந்து புறப்பட்டான் சுந்தர்.
அவனுக்கு திருமணமான புதிதில் மாலா வைத்திருந்த காலர் டியூனை நினைவு கூர்ந்தான்… “எஸ்… ஐ லவ் திஸ் இடியட்… ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்…” என்று ஒவ்வொரு முறையும் அவள் அலைபேசி ஒலித்ததை அவன் எப்படி பொறுமையாக ஏற்றுக்கொண்டான் என்று வியந்து போனான். மாலாவாக உணர்ந்து அந்தப் பாட்டை மாற்றும் வரை பொறுமை காத்தான். அந்த நினைவு அவன் அதரங்களில் புன்னகை வரவைத்தது. உடனே தன் அலைபேசியை எடுத்து அந்த ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை மியூட் செய்து, ஷியாமின் செயலை கடந்து சென்றான் பூமர் அங்கிள், மன்னிக்கவும் சுந்தர்.