![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/04/images-2020-04-22T124459.814-712x405.jpeg)
#Departures #Japanese #2008
“மரணம் என்பது அடுத்த கட்டத்திற்கான வாசற்படி” எனும் பொருளோடு வந்திருக்கும் இத்திரைப்படம், நமக்கு மிகவும் நெருக்கமான படமாக அமைவதற்கு இதன் கதைக்கரு மட்டுமல்ல,அது உருவாக்கப்பட்ட விதமும் பெரும்பங்கு வகிக்கின்றது. அன்றாட வாழ்வில் நமக்கு மிகவும் நெருக்கமாய் இருந்த நபர்களின் மரணம் நம்மை நிலைகுலையச் செய்துவிடும். எத்தனை வருடமானாலும் அவர்களின் நினைவு நம்மிடையே தொடர்ந்து வரும். இப்படம் காணும் சமயம் அவர்களின் நினைவுகளோடு உங்கள் கண்களிலிருந்து சில துளிக் கண்ணீராவது எட்டிப்பார்க்கும். அந்த கண்ணீர்த்துளிகள்தான் இப்படத்தின் வெற்றி.
இசைக்கலைஞனான நாயகன் தான் பணிபுரிந்து வந்த இசைக்குழு திடீரென கலைக்கப்படுவதால் தன் சொந்த கிராமத்திற்கு மனைவியுடன் இடம் பெயர்கிறான். நகர வாழ்க்கையை விட்டு கிராமத்தில் குடியேற மகிழ்ச்சியாக ஒப்புக்கொள்ளும் தன் மனைவியுடன், சொந்த வீட்டில் வாழ்க்கையை துவக்கினாலும் தகுந்த வேலைக்கான முயற்சியில் ஈடுபடுகிறான். நாளிதழில் வரும் விளம்பர அறிவிப்பைப் பார்த்து அந்த அலுவலகத்திற்குச் செல்லும் நாயகனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது ஏனென்றால் அவன் நினைத்துச் சென்றது போல அது மக்களின் பயணத்தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனமல்ல, மரணித்தவர்களின் இறுதிப் பயணத்துக்கான சடங்குகளை (ஒப்பனை மற்றும் அழகுப்படுத்துவது)செய்யும் ஸ்தாபனம்.
நேர்முகத் தேர்வில் எந்தக் கேள்வியுமின்றி எதிர்ப்பார்த்ததை விட அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பணியில் இருந்து விலகலாம் என்ற உத்திரவாதத்துடன் நாயகனுக்கு அமையும் முதல் வேலையே அவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. தன் வேலையைப்பற்றி அறிந்த மனைவி பிறந்தகம் செல்வது, நண்பர்களால் ஒதுக்கப்படுவது எனப் பல சவால்களை சந்தித்தாலும் தான் செய்வது ஒரு மகத்தான காரியம் என சில சம்பவங்கள் மூலம் அறியும் நாயகன், தனது நிகழ்கால வாழ்க்கையை எண்ணிப் பெருமை அடைகிறான். பிரிந்து சென்ற மனைவி அவனைத் தேடி மீண்டும் வரும் சமயம் நண்பரின் தாயார் காலமாகிவிட, அவருக்கு நாயகன் செய்யும் இறுதிக் காரியத்தைக் கண்ட மனைவியும், அந்த நண்பரும் தவறை உணர்கின்றனர். சிறு வயதில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையின் மறைவுச் செய்தி அறிந்து அவருக்கு ஒப்பனை செய்யும் பொழுது தான் சிறு வயதில் அவருக்களித்த கல்லை அவர் கையில் இருப்பதைக் கண்டு கண்கலங்கியவாரே அதை தன் மனைவிக்கு அளிப்பது நெகிழ்ச்சியான காட்சி.
தன் பெற்றோர்கள், உடன்பிறந்தோர், நெருங்கிய நட்பு என யாராக இருந்தாலும் அவர்தம் இறப்புக்குப் பின் அவர்களைத் தொட்டு குளிப்பாட்டி உடை மாற்றுவது என்பது கடினமே, ஏன் பலர் அருவருப்பாகப் பார்க்கக்கூடிய இச்செயல்களை சம்பந்தமே இல்லாத ஒருவர் அவர்களை மரியாதையுடன் தயார்படுத்துவது என்பது சாதாரண பணி அல்ல, அவர்களைப் போன்றவரை அவமதிப்பது மட்டுமல்லாமல் அவர்களை சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கும் அவலம்தான் இன்றும் உலகின் பல பகுதிகளில் நடந்து வருகின்றது. இந்தப்படம் வந்த பின் அது ஒரளவிற்கு ஜப்பானில் குறைந்துள்ளது எனப் படித்த செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. இப்படம் அமைய காரணமாக இருந்த நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.
இப்பட நாயகன் Masahiro Motikiயின் இந்தியப் பயணம் குறிப்பாக வாரணாசியில் தகனம் செய்யப்படும் காட்சிகளை கண்ட பின்னரே மரணத்தைப்பற்றிய தனது தேடல்கள் துவங்கியதாகவும், பல புத்தகங்களைப் படித்து இப்படத்தை எடுக்க முயற்சி எடுத்தாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் எடுத்திருப்பதை அவர் கலைநயத்துடன் இறந்தவர்க்கு ஒப்பனை செய்யும் காட்சிகள்அத்தனை அழகு. படத்தை தயாரிக்க மட்டுமல்ல, அதன் வெளியீட்டிலும் பல சவால்களை சந்தித்துள்ளனர் படக்குழுவினர், காரணம் காலகாலமாக இம்மனிதர்களைப் பற்றி அந்நாட்டு மக்களிடையே இருந்து வந்த எண்ணங்களே.
‘மரணம் என்பது இறுதி ஊர்வலமல்ல, அது அடுத்த கட்டத்திற்கான வாசற்படி’ என முடியும் இப்படம் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கார் விருதைப் பெற்று திரைப்பட உலகிற்கு அகிரா கொராசேவா போன்ற பல உன்னத கலைஞர்களை அளித்த ஜப்பான் திரையுலகத்திற்கு பெருமை பெற்று தந்துள்ளது.
தவற விடக்கூடாத படம்.
பி.கு: Netfflixல் ‘செத்தும் ஆயிரம் பொன்’ பார்த்த பின்பு, அதைப்பற்றி விவாதித்தபொழுது தான் இப்படத்தைப் பற்றி் நண்பர்கள் சிவசங்கர் மற்றும் மலர்வண்ணன் மூலமாக தெரிந்து கொண்டது. அவசியம் பார்க்கவும்.
மரணம் முடிவல்ல என்பதற்கு சான்றாக, இங்கும் (நிறைவான வாழ்க்கை வாழ்ந்த முதியோர்களின்) மரணங்கள் கொண்டாட்டமாகவே இருக்கிறது…
இறந்தவர்களை போட்டோ எடுப்பது தமிழ்படங்களில் கூட நகைச்சுவையாகவும், உருக்கமாகவும் கட்டப்பட்டிருக்கிறது…