கட்டுரைகள்

எலீ வீஸலின், ‘இரவு’ புத்தக விமர்சனம் – சரத்

கட்டுரை | வாசகசாலை

‘எத்தனை இரவுகள் வந்தாலும், என் வாழ்க்கையின் மிக நீண்ட இரவான அந்நாளை நான் என்றும் மறக்கமாட்டேன். மனதளவில் பல பூகம்பங்கள் வெடித்துக் கொண்டிருந்தபோது, என்னைச் சுற்றிப் பரவியிருந்த அந்த அமைதியை நான் என்றும் மறக்கமாட்டேன். என்றும்….’

தான் எழுதிய Night என்னும் உலகப் புகழ் பெற்ற நூலில் இருந்து எடுக்கப்பட எலீ வீசலின் (Elie Wiesel) வார்த்தைகள் இவை.

யார் இந்த எலீ?

ஹிட்லரின் வதை முகாம்களுள் ஒன்று ஆஷ்விட்ச். அங்கு கொண்டுவரப்படும் யூதர்களுக்கு மரணம் நிச்சயம். மரணத் தூதுவர்கள் ஒன்றாகச் சங்கமிக்கும் இடம் அது. அங்கு தான் நாஜிப்படை வீரர்கள் விதவிதமான முறையில் கொலை செய்திடக் கற்றுக்கொண்டனர். கொத்துக் கொத்தாகக் கொலையுண்டும், கற்பழிக்கப்பட்டும் யூத இனத்தவர்கள் அங்கு மாண்டு போனார்கள்.

1944.

தனது பதினைந்து வயதில் குடும்பத்துடன் நாஜிப்படை வீரர்களால் கைது செய்யப்படுகிறார் எலீ. ஆஷ்விட்ச் மரணவாசல் அவர்களை இரு கைகள் விரித்து வரவேற்கிறது.

முகாமிற்குச் சென்றடைந்த அதே நாளில் எலீயின் தாயும், இளைய சகோதரியும் நாஜிப்படை வீரர்களால் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.

தந்தையைத் தன் கண்முன்னே அடித்துத் துன்புறுத்திய வீரர்கள், அவரை மிகவும் கடினமாக வேலைகள் இருக்கும் ஆயுதக் கிடங்கு ஒன்றிற்கு அனுப்புகிறார்கள். எலீ நிர்வாணமாக்கப்படுகிறார். அவர் வயதொத்த மற்ற யூதர்கள் இருக்கும் சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

அன்று காலை வரை அவர் வாழ்ந்த வாழ்க்கை வேறு. இப்போது தான் இருக்கும் இந்த உலகம் வேறு.

நேற்று வரை அம்மாவின் அணைப்பில் இருந்த அவர் இன்று தனித்து விடப்பட்டிருந்தார். நேற்று வரை அவரோடு விளையாடிக்கொண்டிருந்த சகோதரி இன்று உயிரோடு இல்லை. ஒரே நாளில் எல்லாம் மாறிப்போனது. அந்த இரவு ஏனோ அவருக்கு மிகவும் நீண்டதாக இருந்தது. பயத்தை ஊட்டியது. நடுக்கத்தைக் கூட்டியது.

எலீயும் அவர் தந்தையும் அங்குப் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தனர். மனிதர்களால் செய்ய முடியாத அத்தனை கடினமான வேலைகளும் அவர்களுக்குத் தரப்பட்டன.

அங்கு அவர்களுக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. ஒன்று வேலை செய்து சாக வேண்டும். மற்றொன்று நாஜிப்படை வீரர்களால் சாக வேண்டும். ஆக மொத்தம் மரணம் என்பது மட்டும் உறுதி.

1945 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்.

எலீயும் அவர் தந்தையும் ஆஷ்விட்சிலிருந்து இன்னொரு வதைமுகாமான புச்சன்வால்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்குப் பிற கைதிகளுடன் எலீயின் தந்தை உணவிற்காகச் சண்டை போட, இதைப் பார்த்த நாஜிப்படை வீரர்கள் கோபமுற்றனர். அதே இடத்தில் நாஜிப்படை வீரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் எலீயின் தந்தை.

இதைக்கேள்விப்பட்ட எலீ உடைந்து அழுதார். பின்னாலில் தான் எழுதிய புத்தகத்தில் இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, ஒரே இடத்தில் இருந்தும் தந்தையைக் காப்பாற்ற முடியாத கோழையானேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

  1. ஏப்ரல் மாதம்.

இரண்டாம் உலகப்போர் முடியும் தருணம். ஹிட்லரின் வீழ்ச்சி காலம். வதைமுகாம்களில் சிக்கியிருக்கும் யூதர்களை அமெரிக்க ராணுவம் மீட்டது. எலும்பும் தோலுமாக அங்கே அடைபட்டிருந்த மனிதர்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இன்றும் உலகின் மிக கொடிய பக்கங்களை நமக்கு நினைவூட்டுகின்றன.

மேலே நீங்கள் பார்க்கும் இந்தப் படத்தில்,

முதல் வரிசையில் இடமிருந்து வலமாக ஏழாவது ஆளாக எட்டிப்பார்பவர் தான் எலீ!!

வெளியே வந்த எலீக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இத்தனை நாட்கள் தான் அனுபவித்த கொடுமைகள் ஏதோ கனவு போல முன்வந்து நின்றன. அவரால் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை. கொடிய கனவுகள் அவரைத் துரத்தின. மனதளவில் தீவிரமாகப் பாதிக்கப்பட்டிருந்தார் எலீ. அதிலிருந்து வெளியே வர பல வருடங்கள் அவர் போராட வேண்டியிருந்தது.

எலீ இப்போது உலகத்தை வேறு பார்வையில் உற்று நோக்கினார். தனது அனுபவங்களை எல்லாம் எழுதி அதைப் புத்தகமாக வெளியிட்டார். மறைக்கப்பட்ட பல உண்மைகளை அவர் புத்தகங்கள் பேசின. அவர் எழுதிய Night எனும் புத்தகம் இன்றளவும் விற்பனையில் முதன்மையான ஒன்றாக உள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதித் தள்ளினார் எலீ.

பல தன்னார்வலர்களுடன் இணைந்து எளிய மக்களுக்குச் சேவை புரிந்தார். அரசியல் பேசினார். மேடைகளில் விவாதம் செய்தார். அன்பைப் போதித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 1986ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார் எலீ. உலகப் புகழ் அடைந்தார்.

2016ம் ஆண்டு, தனது 87வது வயதில் இயற்கையாக மரணமடைந்தார்.

ஹிட்லரின் வதைமுகாம்களில் தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே. விடுவிக்கப்பட்ட பின்னரும் அவர்கள், பலவித மனநோய்களால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

எலீ வீசல் போன்ற ஒருசிலர் மட்டுமே தங்களின் வாழ்க்கையை வெளி உலகத்தோடு இணைத்து அதில் வெற்றி கண்டவர்கள்.

எலீயின் வாழ்க்கையை ஒரு நிமிடம் உற்று நோக்கினால் போதும், இறைவன் நமக்களித்த வாழ்க்கை எவ்வளவு அமைதியானது என்பது புரியும்.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button