
இறகை இழந்த மயில்
குப்புறப்படுத்து
விளையாட அழைக்கும்
எட்டுமாத தங்கையிடம்
மயில் பொம்மையைக் கொடுத்து
விளையாடவிட்டு
வீட்டுப் பாடத்தைக் கவனிக்கிறாள்
அக்கா சிறுமி
படித்து முடித்து தன்
மயிலிறகுக்கொழுந்தை
வருடிக்கொடுத்து
புத்தகத்தை சாத்தி
திரும்புகிறாள்
தன் கையைச் சுருட்டிக்கொண்டு
உறங்கிக்கொண்டிருக்கிறாள்
குழந்தை
அவள் விரல்களை ஆசையுடன்
மெல்ல திறக்கிறாள்
உள்ளங்கை முழுதும்
குட்டிப்போட்டிருந்தன
வெண்ணிற கீற்று
மயிலிறகுகள்
தூக்கத்தில் சிரித்துக்கொண்டிருந்த
குழந்தையின் கனவில்
தோகைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது
அக்காவின் புத்தகத்தில் சருகுற்றிருந்த
அந்த இறகை இழந்த மயில்.
***
பெரியமனுஷனின் குரல்
முன்நிசிப் பொழுது
மழை கனக்க கனக்க
உடை துரும்புற்று
உடல் வெளியேறிக்கொண்டிருந்தது
தன் நிர்வாணத்தை
துவட்டிக்கொள்ள
ஒரு மறைவிடத்தில்
ஒதுங்குகிறாள்
இருள் சற்று
பாதுகாப்பாக இருக்கிறது
அவளுக்கு.
இருளுக்குத்தான்
கொஞ்சம் வெளிச்சம்.
கூட,
பளீரென வெளிச்சம் மின்னி செல்பேசியழைப்பு
பதறி,
பின் தணிகிறாள்
“எங்க இருக்க?” தன் இருப்பிடத்தின்
லேண்ட் மார்க்கைச் சொல்லி
கைப்பேசிச் சூட்டில்
சற்று கன்னம் ஆற்றிக்கொள்கிறாள்
ஐந்து நிமிடத்தில்
அவள் ஒண்டிய இடமடைந்தான்
விரைந்து.
இவ்வளவு மழையிலும்
அவன் வண்டியைப்போலவே
அவனும் அழல்பூத்துக்கிடந்தான்
பின்னிருக்கையில் அமர்ந்து
உடலை அவன் முதுகில்
இருக்கிப் போர்த்திக்கொண்டாள்
முச்சந்தி கூடும் சாலையில்
ஒரு அரைவெண்ணிற காவலாளி.
பழக்கக்குறை நெருடலில்
வண்டியின் வேகம் குறைக்கிறான்
அவ்விளம் பின்னிருக்கைக்காரியை
அவதானித்த
அக்காவலாளி
“கெளம்பு கெளம்பு நிக்காத கெளம்பு”என
குரல் உயர்த்தி துரத்துகிறான்
அவளை இத்தனை நேரமாய்
வீட்டுக்கு துரத்திக்கொண்டிருந்த
அந்த பெரும் மழையைப்போலவே
இருந்தது
அந்த பெரியமனுஷனின் குரல்.
***
பறை, பறவை
இறுதி ஊர்வலத்தின்
இசையில் லயித்து
அந்தரத்தினூடே
பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு இறகு
அது
கொஞ்சகாலத்திற்கு முந்தி
ஒரு சிறகிலும்
அந்த சிறகு
ஒரு பறவையிலும்
அந்த பறவை
ஒரு முதுகிலும்
அந்த முதுகு இப்போது பறையிலும்.
பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்
அந்த இறகைப்போல
எல்லோரும் இறுதி ஊர்வலத்தில்.
***