சேதி கேட்டு அதிர்ந்து
மெய் பார்த்து
பெருந்தீ கண்ணுற்று
திரும்புகையில்
நீர் குளித்த வீட்டில்
சின்னஞ்சிறு சுடராகி
நின்று விடுகிறது
வாழ்வு.
காலம் அமைதியில்
உறங்குகிறது
புழக்கடையில்
கதாபாத்திரங்கள்
எதிரொலிக்கின்றன
வாழ்ந்த வாழ்வினை.
காலக் குளத்தில்
பேரமைதியோடு
விழுகிறது கல்.
அடர்ந்த மனசின்
கீழ்வாரத்தில்
பட்டென சிறு ஒசை.
இப்போதுதான்
பறந்திருக்கிறது பறவை.
இறகில் இருந்தது
எழுதி வைத்த
உயிர்க்குறிப்பு.
பெருங்கல் போர்த்தி
படுத்துக் கிடப்பதென
அவதி.
குறுஞ்சொல் கூட
கிடைக்காத இரவு.
புதைந்து கிடக்கிற
கூழாங்கல்லுக்குள்
ஓடுகிறது.
நினைவிலுள்ள நதி.
வெளிச்சம் நிரம்பி
வழிகிறது
துளி இருளையாவது
சுகிக்க வேண்டி
அலைகிறது அறை.
பாவம்
அடியாழத்தில்
தகித்து தளும்பும்
வன்மம்.
நவீன நயம் பூசிய
நந்தியே!
கொஞ்சம் விலகு.
என் தரிசனம் வேண்டும்
எனக்கு.
தனித்திருத்தலின் மீதான
அச்சமாகவும் இருக்கலாம்
அன்பின் மையம்.
***
- era.mathibala@gmail.com