
விசாரணை அறையில் அமர்ந்திருந்தான் சண்முகம். அந்த தொழிற்சாலையின் மையத்தில் நான்கு பக்கமும் கண்ணாடிகளால் தடுக்கப்பட்ட அறை அது. தவறு செய்பவர்கள் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். அனைவரும் அதை காணும்படி அமைக்கப்பட்டுள்ளது.பொது.மேலாளர் முன்புதான் விசாரணை நடக்கும். பொது.மேலாளர் தவிற மற்ற அனைவருக்குமே விசாரணை உண்டு. வருடத்திற்கு ஒரு முறைதான் நிர்வாக இயக்குனர் தொழிற்சாலைக்கு வருவார். நிர்வாக இயக்குனரின் பிரதிநிதி பொது.மேலாளர். ஒரு நாளின் பெரும்பாலான நேரங்களை அவர் தொழிற்சாலையிலேயே செலவிடுவார். தொழிற்சாலை எங்கும் மூன்றாம் கண் பதித்து வைத்திருப்பார். அவருக்கு தெரியாமல் ஒரு பொருளும் உள்ளே வராது. வெளியேயும் செல்லாது. தர்மமகாராஜாவைப் போல் நீதிமானாகவும் இருப்பார்.
சண்முகம் அந்த மாதத்தில் மூன்று முறை தாமதமாக வந்ததால் மன்னிப்பு கடிதம் எழுதி பொது.மேலாளரிடம் கையெழுத்து வாங்கி சம்பள கணக்கு பிரிவில் தந்தால்தான் சம்பளம் முழுமையாக கிடைக்கும். தாமதமாக வந்ததற்கான காரணம் மூன்று முறையும் ஒரே மாதிரியாக இருந்ததால் மேலாளரிடம் அது பற்றி பேசிவிட்டு கூப்பிடுவதாக சொல்லி அனுப்பிவிட்டார்-பொது.மேலாளர்.
சண்முகத்திற்கு ஏற்பட்ட அதே காரணங்கள் உடன் பணியாற்றும் மற்ற தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால்,அதை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை. பொது. மேலாளருக்கு இது விசாரணையில் தெரிய வந்தது.
நிசப்தமான சாலையிலிருந்து தானாக மூடிக் கொள்ளும் கதவை திறந்தாலே தொழிற்சாலையின் இயந்திர சப்தம் முகத்தில் அறைந்தார் போல் கேட்கும். உள்ளும் வெளியும் என பிரித்துக் காட்டும் எந்திர ஓலங்கள். மனிதர்களின் வேலையை குறைத்து தானாகவே வேலை செய்து கொள்ளும் தானியங்கி எந்திரங்கள் வெளித்தள்ளும் இரும்பு பிசிறுகளை எடுத்து தொழிற்சாலையின் பின் புறத்தில் கொட்டும் பணி மட்டும் மனிதனுடையது.
இளமையில் வெயிலோடு விளையாடியவர்கள் படித்து பின் இயந்திரங்களை மேய்கிறார்கள். வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைதான்-அது.ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் குன்று போல் குவிந்திருக்கும் இரும்பு பிசிறுகளை லாரியில் ஏற்றி விற்பனை செய்துவிடுவார்கள். அதில் கிடைக்கும் வரும்படியிலே தொழிலாளர்களுக்கு சம்பளம் தந்துவிடுவார்கள். இரும்புக் கழிவுகளை வாங்குவதில் தரகர்களுக்குள் போட்டி உண்டு. அரசியல் செல்வாக்கு உள்ள உள்ளூர் ஆட்களே இதன் தரகர். இதற்காக கொலையும் நடப்பதுண்டு.
ஒரு காலத்தில் ஏறிப்பாசனம் மூலம் நெல் விளைந்த நிலங்கள்தான் தொழிற்சாலைகளாக உறுமிக் கொண்டு இருக்கிறது. ஏரித் தண்ணீர் கலுங்கு தட்டி போய்க் கொண்டிருந்த ஆறு இன்று ரசாயன சாக்கடையாக மாறிவிட்டது. மழைக் கால வெள்ளம் ஆற்றை சுத்தம் செய்துவிடும். முன்பு இதில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் தான் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
தாமதத்திற்கான காரணம் சண்முகம் கடிதம் மூலமாக தந்தது, பொது.மேலாளருக்கு சற்று நெருடலாகவே இருந்தது. மேலாளரிடம் அது பற்றி பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று இருந்தார். ஆனால்,அதற்கு போதுமான நேரம் அவருக்கு இல்லை.
வருடத்திற்கு ஒரு முறை மூன்று நாட்களுக்கு ஆடிட்டிங் நடக்கும். அது போல் அன்று தகவல் பலகையில் மூன்று நாட்கள் ஆடிட்டிங் என்று அறிவிப்பு இருந்தது. ஆடிட்டிங் என்றால் எல்லோரும் ஏழு மணிக்கே தொழிற்சாலையில் ஆஜராகிவிட வேண்டும். தாமதமாக வந்தால் வேலை பறி போய்விடும். ஆனால்,காலை உணவும் மதிய உணவும் சுவையாக கிடைக்கும். கம்பெனி செலவில் வயிற்றை நிறைத்துக் கொள்ளலாம். ஆடிட்டிங் என்பதே எந்திரத்தையும் தொழிற்சாலையையும் துடைத்து ஒழுங்கு படுத்துவது ஆகும். இதை முன் நின்று மேலாளர்தான் செய்வார். அன்றுதான் தொழிற்சாலையின் உட்புற சுவர்களுக்கும் தரைதளத்திற்கும் பெயிண்ட் அடிப்பார்கள்.பின்பு சுவர்களில் முழக்க அட்டைகள் தொங்கவிடுவார்கள். அவை, ‘மேம்பட்ட பணியிட மேலாண்மை’, ‘சிறந்த பணியிட பயன்பாடு’, ‘நேரம் வீணாகுதல் குறைப்பு’, ‘உற்பத்தி மற்றும் திறன் மேம்பாடு’-என்றிருக்கும்.
அன்று ஏழு மணிக்கே அனைவரும் தாமதமின்றி வந்துவிட்டார்கள். ஆனால்,மேலாளர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால் அவர் விசாரணை அறையில் அமர்ந்திருந்தார். சண்முகம் அவர் முகத்தை பார்த்த போது அவர் முகம் வெளுத்து இருந்தது. பொது.மேலாளரின் விசாரணையில், மேலாளர் சொன்ன காரணம் சண்முகம் சொன்ன காரணங்களோடு ஒத்துப் போனது. பொது.மேலாளர் இதன் மீது உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பொது.மேலாளர் தனது குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து சண்முகம் தந்த கடிதத்தை நிதானமாக வாசித்தார். அதில்…
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்!
நான் இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை தாமதமாக வந்ததற்கு காரணம் எனது இரு சக்கர வாகனம் பஞ்சராகிவிடுவதால்தான். நமது தொழிற்சாலையின் முன் பக்கத்திலும், தெருவிலும் கீழே விழும் இரும்பு பிசிறுகளை வழக்கமாக எடுக்கும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரை தெருவுக்குள்ளே வரக் கூடாது எனவும் மீறி வந்தால் திருட்டு குற்றம் சுமத்தி காவல் துறையினரிடம் ஒப்படைப்போம் எனவும் மிரட்டியதால் அவர் வருவதில்லை. அதனால்தான் வாகனம் பஞ்சராகிறது என்பதை டயர்களின் உட்புறத்தில் சோதனை செய்த போது ஒவ்வொரு முறையும் இரும்பு பிசிறுகளே தைத்திருந்தது தெரிய வந்தது. அதனால்தான் இதை உறுதி செய்கிறேன். மேலாளரே இதற்கு பொறுப்பாவார்கள். உடனே இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
உண்மையுள்ள தொழிலாளி,
சி.சண்முகம்.
நரியை வேட்டையாடியதால் நரிக்குறவர் எனவும் குருவியை வேட்டையாடியதால் குருவிக்காரர்கள் எனவும் அழைக்கப்பட்டவர்கள்தான் வனம் அழிந்தவுடன் பிழைப்புக்காக தங்கள் தொழிலையும் மாற்றிக் கொண்டார்கள். எப்போதும் இவர்கள் கையில் ஒரு தடியும் அதன் ஒரு முனையில் காந்தமும் பொருத்தப்பட்டிருக்கும். சாலையில் தப்பி விழும் இரும்பு பிசிறுகளை காந்தத்தால் எடுத்து தோளில் தொங்கும் தோல் பையில் போட்டுக் கொள்வார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வரும்படியில்தான் அவர்களின் தினசரி வாழ்க்கை நடக்கிறது. அவர்கள் ஒரு போதும் தொழிற்சாலைக்குள் வந்து இரும்புகளை திருடுவதே இல்லை.
கதிர் அறுத்து களத்தில் போடும் முன் விழும் தப்புக் கதிர்களை கிராமத்தில் எடுக்க மாட்டார்கள். அதை எடுத்து குத்தி சேமித்து ஒரு வேளை உணவு சமைத்து உண்டு வாழும் மனுஷ ஜீவன்கள் கிராமத்தில் உண்டு. தப்புக் கதிர் சேமித்தால் தப்பில்லைதானே.
வாரா வாரம் ஒரு லாரி நிறைய இரும்பு பிசிறுகளை ஏற்றி அனுப்பும் போது அதில் சிந்தும் இரும்பு பிசிறுகளை அந்த சமுகத்தினர் எடுத்து சேமித்து பணமாக மாற்றுவது மட்டுமா நடக்கிறது, அந்தச் சாலையும் சுத்தமாகிறதுதானே.
சம்பா! ஐம்பது வயது மதிக்கத்தக்கவர்.தனது மூன்றாம் கரத்தால் சாலையில் சிந்தும் இரும்பு பிசிறுகளை சேமிப்பவராயினும், கரோனா காலத்தில் சாப்பாட்டுக்கு பணம் தந்து உதவிய சம்பாவை சண்முகம் மறக்கவில்லை. சம்பாக்கள் அந்த பகுதியை பிரித்துக் கொள்வார்கள். அவரவர் பகுதியில் அவரவரே பிசிறு எடுப்பார்கள். பின்பு அங்கு உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டியின் நிழலில் குடும்ப விஷயங்கள் நடக்கும். இவர்களுக்கு யாரும் உதவுவதே இல்லை. யாரிடமும் இவர்கள் உதவி கேட்பதும் இல்லை. இரும்பு மனிதர்கள்!
அன்று காலையிலே பொது.மேலாளர் தொழிற்சாலைக்கு வந்துவிட்டார். சண்முகத்தை அழைத்துக் கொண்டு சம்பாவை பார்த்துவிட புறப்பட்டார். மேல் நிலை நீர் தேக்க தொட்டியின் கீழ் சம்பாவின் மனைவி ரெட்டம்மா மட்டுமே இருந்தாள். அவளிடம் விசாரித்து பின் சம்பாவை பார்க்க இரு சக்கர வாகனத்தில் ஆற்றங்கரையோரமாக கடந்து போனார்கள். ஆற்றின் இரு புறமும் நாணல்கள் அடர்ந்து இருந்தன. ஆற்றில் லாரிகளை இறக்கி கழுவிக் கொண்டிருந்தார்கள். பேச்சொலி அற்ற ஆற்றின் மறு கரையை அடைந்த போதுதான் அங்கு சம்பாவை கண்டான் சண்முகம். அது ஒரு எரிமேடை. கான்கிரீட் கூரை வேயப்பட்டு இருந்தது. நேற்று இரவு அதில் ஒரு பிணம் எரிந்திருக்க வேண்டும். அதன் சாம்பல் மெலிதாக புகைந்து கொண்டிருந்தது. பிணம் எடுத்து வந்த பச்சை மூங்கிலும், காய்ந்த வைக்கோலும், கிழிந்த வஸ்திரங்களும், மது பாட்டில்களும் அங்கு கிடந்தன. ஓலைக் கொட்டான்களில் மாட்டின் தொப்புள் கொடிகள் காய்ந்து மரமல்லி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. மரமல்லி பூக்கள் தரையெங்கும் உதிர்ந்து கிடந்தன. அதன் சுகந்த மணம் நாசியை துளைத்தது. அது நல்ல குளிர் காலம். ஆற்றில் தண்ணீர் போய்க் கொண்டிருந்தது.
“சம்பா!”-என்று உரக்க கூப்பிட்டான் சண்முகம். பிணம் எரிந்த சாம்பலுக்குள்ளிருந்து எழுந்து வந்தார் சம்பா. அது கண கணப்பாக இருப்பதால் அதில் படுத்து உறங்கிவிட்டதாக சொன்னார். ‘என்ன மனிதர் இவர்!’-பொது.மேலாளர் பேச்சின்றி உறைந்து போனார். நூறு ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார். சம்பா,வாங்கிக் கொள்ளவில்லை.
“நீ எப்போதும் போல் உன் தொழிலை செய். உன்னை யாரும் தடுக்க மாட்டார்கள்”-பொது.மேலாளர் சொல்லிவிட்டு அவரை நேருக்கு நேர் பார்க் மனமின்றி தரையை பார்த்தார். தன் காந்தக் கழியையும் தோல் பையையும் எடுத்துக் கொண்டு நடந்தார் சம்பா. கண் எட்டும் தூரம் வரை சம்பா கடந்து போவதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டார்கள்.
‘ஒரு பஞ்சருக்கு நூறு ரூபாய் வாங்குகிறார்கள்.ஹைவேயில் இரு நூறு ரூபாய் வாங்கிவிடுகிறார்கள்!’-என்று ஆதங்கத்தோடு சொல்லிக் கொண்டு வந்தான் சண்முகம். இரு சக்கர வாகனத்தை சீராக செலுத்திக் கொண்டிருந்தார் பொது.மேலாளர்.
அரசிடம் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்து லட்சங்களை பதுக்குபவர்கள்தான் சாலையில் சிந்தும் இரும்பு பிசிறுகளில் கூட அரசியல் செய்கிறார்கள்.
*********
பிப்ரவரி 2024 புதிய கோடாங்கி மாத இதழில் வெளியான சிறுகதை.
ஆசிரியரின் உரிய அனுமதியோடு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
*********