’பாரதி கவிதைகள்; எரிகின்ற அறிவின் பெரும் சுடர்..!’ – ஜீவன் பென்னி
கட்டுரை | வாசகசாலை

பாரதி கவிதைகள் – முழுத் தொகுப்பு – பதிப்பாசிரியர் : பழ.அதியமான் – காலச்சுவடு.
தமிழின் ஆகச்சிறந்த கவி ஆளுமைகளில் முதன்மையானவனர் பாரதி. அவரின் காலத்தில் அவரளவிற்கு எல்லாவித வடிவங்களிலும் எழுதிக்குவித்தவர் யாருமில்லை. பல மொழிகளில் தனிப்புலமை பெற்றிருந்த அவர் பிற மொழிகளிலும் எழுதியிருக்கிறார், மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் கவிதைகள் மற்றும் பாடல்களடங்கிய முழுத்தொகுப்புகள் நிறைய்ய வந்திருக்கின்றன. பழ.அதியமான் அவர்கள் தொகுத்து, காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு மிகச்சிறப்பான கட்டமைப்பில், நேர்த்தியான வடிவத்தில் மற்றும் பாடல்களைச் சந்தி பிரித்து, நிறுத்தற்குறிகளுடன், அருஞ்சொற்களின் பொருளுடன் வாசித்துப் புரிந்து கொள்வதற்கான எளிய வடிவில், அதன் செம்மைத்தன்மைக்கு எவ்வித ஊறும் விளைவிக்காமல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தேசியப் பாடல்கள், தெய்வப் பாடல்கள், முப்பெரும் பாடல்கள், பல்வகைப் பாடல்கள், மற்றும் வசன கவிதைகள் என்ற பிரிவுகளுக்குள் முழுமையான வகைப்படுத்தப்பட்ட தொகுப்பாகவும், மேலும் மேற்சொன்ன சிறப்புகளுடனமைந்த முதல் முழுத்தொகுப்பாகவும் இது அமைந்திருக்கிறது. பாரதியின் எழுத்துக்களுக்கான பதிப்புகளில் இதுவரை செய்யப்பட்டு வந்திருக்கும் மாற்றங்களின் வரலாற்றுப் பிண்ணனிகளையும், இத்தொகுப்பிற்கான பதிப்பில் கையாளப்பட்டிருக்கும் புதிய உத்திகளையும் மிகத் தெளிவாகத் தன் முன்னுரையில் விவரித்து எழுதியிருக்கிறார் பதிப்பாசிரியர். ஏறக்குறைய நூற்றாண்டு கடந்து விட்ட பாரதி எழுத்துக்களின் விசாலமான தன்மைகளைப் புரிந்து கொள்வதில் இக்காலத்தில் இருக்கும் பெரும் சாவல்களைக் கடந்து செல்வதற்கும், சொற்களின் பொருளிலிருக்கும் வீரியத்தை அனுபவிப்பதற்கும் ஏதுவாக, மொழியின் எளிய ஜனநாயக வழிமுறைகளுடன் தகவமைக்கப்பட்டிருக்கும் இம்முறையிலான மாற்றங்கள் தவிர்க்க இயலாதவையே. இலக்கியப் படைப்புகள் அனைத்தும் அதை வாசிக்கும் மக்களால்தான் மீண்டும் மீண்டும் அதன் அனுகூலத்தையும், நுட்பமான புரிதலின் எல்லைகளின் தீவிரத்தையும் தொடர்ந்து விரிவாக்குகின்றன. ஆகவே இம்மாற்றங்கள் இன்றியமையாதவை மற்றும் வரவேற்கப்பட வேண்டியவையே.
உணர்ச்சிகள் மிகுந்த சொற்களின் வழியே தன் காலத்தின் எல்லாச் செயல்பாடுகளிலும் உட்புறமாக நுழைந்து எல்லையற்ற பெரும் தீயின் சக்தியாக வெளியேறிக் கொண்டிருந்தவன் பாரதி. கவிஞர்களுக்கான வசீகரமும், பெருமையும், கர்வமும் அவனிடமிருந்தே தொடங்குகின்றன. இயற்கையையும், காதலையும், நட்பையும், சக உயிரிகளின் இருப்பையும், பெண் சக்தியின் வீச்சையும், தேச விடுதலைக்கானத் தூண்டுதல்களையும், கனலும் அறிவின் நுட்பத்தையும், காட்சி நிலை வசீகரங்களையும், ஆன்மத் தேடல்களின் புள்ளிகளையும், தெளிவின் ஓர்மையில் அழமான கவிதைகளாக உலகிற்கு வழங்கியிருப்பவன் பாரதி. தான் சார்ந்திருந்த நிலத்திற்காக மட்டுமில்லாமல் உலக மக்கள் முழுமைக்குமான மகத்தான தேடல்களைத் தன் சொற்களில் கடத்தியிருந்த பிரதானத் தன்மையே அவனைத் தீர்க்கதரிசியாகவும், நவீனத்துவம் சார்ந்த கவிஞனாகவும் பார்க்க வைக்கிறது. சக மனிதர்களின், உயிரிகளின், இயற்கையின் ஆகப்பெரிய சக்திகள் நிறைந்த எல்லையற்ற அன்பின் ஆழத்தையும், அதன் தீயைப் போன்றிருக்கும் உண்மையையுமே அவன் தெய்வம் என்று நம்பிக்கொண்டிருந்தான். அவனது மந்திரச் சொற்கள் ஒவ்வொரு மனிதனுக்கான ஆன்மத் தேடல்களைத் துவக்கி வைக்கின்றன. உள்ளூர், வெளியூர் சுரண்டல்வாதிகளால் அடிமையாக்கப்பட்டுக் கிடந்த, சாதிகளின் வழியே பிரித்து நசுக்கப்பட்டுக் கிடந்த எளிய மக்களுக்கான சுதந்திரத்தையே வேண்டி நின்றன அவனது பிரார்த்தனைகள். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அணைந்திடாது எரிந்து கொண்டிருக்கும் அறிவின் சுடர்தான் இப்பிரபஞ்சத்தின் ஒளி எனத் தன் தனித்தன்மைகள் நிறைந்த பாடல்களாலும், வாள் வீச்சின் லாவகம் கொண்ட கவிதைகளாலும் உலகிற்குத் தீர்க்கமாகச் சொல்லிச் சென்றவன் அவன்.
உலகில் சிறந்த கவிஞர்களின் வரிசையில் பாரதியின் இடம் தனித்தன்மையானது. ஒருங்கிணைப்பிற்கு முன்னதான இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் பாரதியின் வாழ்வும், இருப்பும், அவரது உணர்ச்சிகள் மிகுந்த கவிதைகளின் பேராற்றலும், சமூக மன அமைப்பின் எண்ணற்ற நோய்களிலிலிருந்து விடுபடவும், அடிமை விலங்குகளை உடைத்தெறியவும், அவற்றைச் சீர் படுத்துவதற்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் மிக முக்கியமான காரணியாக இருந்திருக்கிறது. பிரிட்டன் ஆட்சியில், இந்தியாவின் ஒரு பகுதியாகயிருந்த பர்மாவில் பாரதியின் படைப்புகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன, அவை குறித்த முக்கியமான விவாதங்கள் சென்னை மாகாண சட்ட சபையில் நடந்திருக்கின்றன. அவரது எழுத்துக்கள் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தன. மேலும் பெரும் மக்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரிய ஆற்றலாக அவனது சொற்கள் இருந்தன. சுதந்திரப் போராட்டச் சூழலிலிருந்த முக்கியமான அனைவரிடமும் நேரடியான பழக்கமும், தன் கருத்துச் செறிவு மிக்க உரையாடல்களினால் மிகுந்த நெருக்கமும், அன்பும் கொண்டிருந்தவர் பாரதி. அடிமைத்தனமும், பசியும், பயமும், சாதியப் பாகுபாடுகளும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்திருந்த சமூகத்தின் மீதான தீராத கோபங்களும், அவற்றிலிருந்து விடுதலைக்காக ஏங்கும் மனதும், இயற்கையின் / சக உயிரிகளின் மீதான அளப்பரிய நேசங்களுமே பாரதியின் கவிதைகளில் பிரதானத் தன்மையைக் கொண்டுள்ளன. சமஸ்தானத்தில் பணி செய்தவராகவும், வறுமையில் காசியில் அலைந்து திரிந்தவராகவும், எதுவுமே எழுதிடாத ஏழாண்டுகள் வெறுமையிலிருந்தவராகவும், பத்திரிகையாசிரியராகவும், பள்ளி ஆசிரியராகவும், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவராகவும் அவரின் வாழ்வு முழுவதுமாக நிரம்பிக் கிடந்த துயரமான அனுபவங்களின் ஊடாக வெறுமனே நசிந்து போகாமல், செறிவான சொல் வளமும், உண்மையின் ஆற்றலும், பெரும் ஆகிருதியும், சக்தியும் கொண்ட மகத்தான படைப்புகள் வழியே தன்னைப் புதுப்பித்துக் கொண்டு மகாகவியாக நீரூபித்துக் காட்டியவன் பாரதி.
அவரது இறுதி அஞ்சலிக்குக் கூட வர முடிந்திடாத அன்றைய தமிழ்ச் சமூக மக்களின் குழந்தைகள்தான் பாடநூல்களின் வழியே அவர் படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு கவிஞனின் மறைவுக்குப் பிறகும் அவனது கவிதைகள் பெரும் ஆற்றலுடன், வசீகரத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு, நம் காலத்தில் பாரதி கவிதைகள் ஒரு வரலாற்று சாட்சியாக விளங்குகிறது. தமிழ் வாசிப்பில் ஆர்வங் கொள்ளும் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும், பாரதியின் கனன்று கொண்டிருக்கும் கவிதைகளை, பாடல்களை அவற்றின் சீரிய நோக்கங்களில் எவ்விதமான மாற்றங்களுமில்லாமல், அவை எழுதப்பட்ட அடிப்படைத் தளத்திலே கொண்டு சேர்க்க முடிந்திருப்பதும், நம் மொழியின் மகத்தான கவிஞனை மிக நெருக்கமாக உணர்ந்து கொள்ள வைத்திருப்பதுமே இத்தொகுப்பின் மிகப் பெரிய வெற்றியாகக் கருத முடிகிறது. இத்தொகுப்பிற்கான மிகத் தீவிரமான தொடர் தேடல்களும், வாசிப்பும், ஆய்வுகளும், பொறுமையும் மிகத் திடமான நம்பிக்கைகளின் நிறைவையும், நேர்த்தியையும், உழைப்பையும் முழுமையாகக் கொண்டிருப்பவை. எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அறிவின் பெரும் சுடர்தான் பாரதி. அப்பெரும் ஒளியின் மாபெரும் தரிசனத்தைதான் இத்தொகுப்பு நமக்கு முழுவதுமாகத் தருகிறது.
பாரதி கவிதைகள் – முழுத் தொகுப்பு – ஆசிரியர் : சுப்பிரமணிய பாரதி,
பதிப்பாசிரியர் – பழ.அதியமான்,
காலச்சுவடு வெளியீடு,
முதல் பதிப்பு – டிசம்பர் 2014.
விலை – ரூ. 750/-