இணைய இதழ் 102சிறுகதைகள்

ஜென்ரல் கம்பார்ட்மெண்ட்- ஜெயபால் பழனியாண்டி

சிறுகதை | வாசகசாலை

அதிகாலை கோயம்புத்தூரில் கிளம்பிய ரயில் திருப்பூரைச் சந்திக்கும் பொழுது காலை ஏழு மணியாக இருந்தது. அப்பொழுதே சூரியனின் கடைக்கண் பார்வை பட்டது மனதிற்கு சற்று இதமாகத்தானிருந்தது. மெல்ல ஈரோடு நகரத்தை அடையும்பொழுது வானில் கொஞ்சம் மூட்டத்தைப் பார்க்க முடிந்தது. அதுவே சேலத்தை அடையும் பொழுது ஒரு பெருமழை அடித்துவிட்டு அப்பொழுதுதான் வானம் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரும் என்பதாகத்தான் இருந்தது வானின் மொழி. சேலம் இரயில் நிலையத்திலிருந்து இரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் தடாலடியாக வந்து நின்றாள் அவள்.

இங்கே உட்காரலாமா.. இங்கே உடகாரலாமா.. அதுதான் இடம் கெடக்கே கொஞ்சோ தள்ளி உட்காந்தா என்ன?

பொம்முடியில் இறங்க வேண்டிய அந்த பெரியவர் விடுவதாக இல்லை. இங்கே அவ்ளோதான் உட்காரமுடியும். குழந்தைகளை வச்சுட்டு அவுங்க எப்படி உட்காருவாங்க?

மூணுபேருதானு கொஞ்ச நகுந்தா நான் உட்காந்துக்கப் போறேன்.

ஓ… இவுங்க இப்பதான் வந்தாங்கலாம். உடனே எடம் கொடுக்கணுமா.. கொஞ்சநேரம் நின்னுட்டு வா.. அப்புறோ உட்காருவையாம்மா. ஒரு பத்து நிமிசம் நின்னுட்டு வா. நாங்க இறங்குனதும் உட்காருவையாக்கும்.

எதையோ முணுமுணுத்தப்படி அந்தப் பக்கம் சென்று விட்டாள். நல்ல வேளை அந்த அம்மா போயிருச்சு என்று நான் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் யோசித்திருப்பர்.

வானம் தனது இடைவேளையை முடித்துக்கொண்டு தனது அடுத்த இன்னிங்சை தொடர ஆரம்பித்தது. முதலில் ஒரு ஒரு ரன்னாக சேர்ப்பதாக தொடங்கி அடுத்து பவுண்டரிகளுக்கு பந்தைத் தள்ளுவதாக சர்ப்ராஸ்கானும் ரிஷப் பந்த்தும் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடங்கியிருந்த அதேசமயத்தில், வானமும் தனது அதிரடியைத் தொடங்கி இருந்தது. இடை இடையே செல்போன் டவர் ஏமாற்றியதுபோல் அன்று வானம் ஏமாற்ற மாட்டேன் என்று முடிவாக இருந்தது போலும். மழை ஒரு காட்டு காட்டிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் பொம்முடி ரயில் நிலையம் வர நனைந்த தலையோடே வந்து நின்றன ரயில் பெட்டிகள். வயதான தம்பதியர் இறங்கிச் செல்ல மீண்டும் அவளின் பிரவேசத்தை அப்பெட்டியில் காணமுடிந்தது. எப்படியும் அவர்கள் இறங்கிவிடுவார்கள் நாம் இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம் என்று மீனின் வருகைக்காக காத்திருந்த கொக்காய் அவள் அந்த இருக்கையைப் கொத்திக்கொண்டாள்.

இனிதான் ஆட்டம் ஆரம்பம் என்பதாக நியூசிலாந்து அணிக்கு சவால் விடுவதாக சர்ப்பராஸ் மற்றும் பந்த்தின் ஜோடி மிரட்டுவது போன்றதாக அவளின் எண்ட்ரியும் இருந்தது. இரயிலில் விற்பனை செய்யும் ஒருவரையும் விடுவதில்லை என்பதாக முடிவெடுத்துக் கொண்டாள் போலும். ஹெட்செட் விற்கும் பெண்மணி ஒருத்தி அப்பொழுதான் கடந்து போனாள். அவளைத் தொடர்ந்து அன்னாசி விற்கும் பெண்மணி. அவளைச் சிறிதுநேரம் தன் பொழுதுபோக்கிற்கு இரையாக்கிக் கொண்டாள். ஹெட்செட் விற்ற பெண்மணி மீண்டும் திரும்பி வர அங்கிருந்த ரெயின்கோட் அணிந்திருந்த சிறுமி அன்னாசி பழம் வேண்டும் என அடம்பிடிக்க அவளின் அம்மாவோ வாங்கித்தர மறுக்கிறாள். மழை பெய்கின்றது வேண்டாம் என்கிறாள். சிறுமி அம்மா.. அம்மா வென்று அன்னாசியை நோக்கி கைக்காட்டுவதாக இருக்கிறாள். சன்னல் இருக்கைதான் வேண்டும் என்று அடம்பிடித்து அந்த இளைஞனின் மடியில் அமர்ந்த அவள் அந்த இளைஞனின் சமாதானத்தையும் கேட்பதாக இல்லை. மழைக்கு ஒதுங்கி ஒரு இடத்தில் நிற்பதுபோல் ஹெட்செட் விற்கும் பெண்மணியும் அங்கேயே நின்றுவிட்டாள்.

நின்றவள் என்ன நினைத்தாளோ தனக்கு அவ்விடத்தில் வியாபாரம் ஆகாத போதும் சிறுமிக்காக அன்னாசித்துண்டுகளை வாங்கிக் கொண்டாள் போலும். சிறுமியின் கையில் ஒன்றைத் திணித்துவிட்டு தான் ஒன்றைக் கடிக்க ஆரம்பித்தாள். அன்னாசி ஒன்றினை வாங்கிய சிறுமி இப்பொழுது அதைக் கடிக்கவா வேண்டாமா எனும் தோரணையில் அம்மாவிடம் அனுமதி கேட்பதாக இருந்தது அவளின் பார்வை. அம்மா பெரிய அதட்டலாக வேண்டவே வேண்டாம் என்கிறாள். ஹெட்செட் விற்பனை செய்யும் பெண்மணி இது சூடுதான்மா ஒன்னும் செய்யாது என்கிறாள். எவ்வளவு சொல்லியும் சிறுமியின் அம்மா சட்டைசெய்யாமல் அவளிடமே திருப்பிக் கொடுக்க வைத்துவிட்டாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத உணர்வு அச்சிறுமியின் கண்களில் தென்பட்டது.

அன்னாசியைக் கடித்துக் கொண்டிருந்த ஹெட்செட் விற்பனை செய்பவளின் பட்டன் போன் ஒலிக்க, எடுத்து பேசமுனைபவளைப் பார்த்து அவள் கேட்கிறாள்.. யார் அவள்.. அவள்தான் இக்கதையின் நாயகி. நீலப்புடவை அணிந்த அறுபது வயதிற்கு மேல் மதிக்கத்தக்க அவள்தான் அவளேதான்.

ஆமா இந்த போனலயும் பாட்டு கேட்கலாமா.. அதுலகூடவா பாட்டு இருக்கும்?

ஹிம்ம்.. பாட்டு இருந்தா கேட்கலாம்தான்.. கொடு ஒஃபோன போட்டுக்காட்டுறேன்.

எங்கிட்ட எங்க போனு இருக்கு.. நீதானு இந்த பாட்டு கேட்குறதா விக்குற.. நீ கொஞ்சோ போட்டுக் காட்டு கேக்குறேன்.

இது நல்லா இருக்கே என்று சொல்லிவிட்டு அவள் போனில் எதிரில் அழைத்த நபரோடு பேசிக்கொண்டே அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விட்டாள். சிறிது நேரத்திற்கெல்லாம் ஐஸ்கிரீம்.. ஐஸ்கிரீம் என்று சத்தம் எழுப்பிக் கொண்டு விற்பனையாளன் உள்ளே நுழைய.. இந்த மழையில எவனாவது ஐஸ்கிரீம் திம்பானா.. என்று போட்டாள் பாருங்க ஒரு போடு. அந்த பெட்டியில் இருந்த அனைவருமே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சற்றுநேரத்திற்கு முன்புதான் இரயில்ல பயணம் செஞ்சோம்ணா பாக்கெட்டுல இருக்குற அத்தனை காசையும் காலி பண்ணிவுட்டுருவாணுங்க என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கேற்றாற் போல் இருந்தது அவளின் நையாண்டி.

ஸ்தம்பித்து நின்ற ஐஸ்கிரீம் விற்பனையாளர்.. உனக்கென்ன பிரச்சனை நீ வாங்குலானா விடு. ஏன் என் வியாபாரத்தைக் கெடுக்குற.. என்று சொல்ல, பாட்டிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதற்கும் ஒரு நமட்டுச் சிரிப்பை சிரித்து வைத்தாள். சமோசா.. சமோசா… சத்தமும் வாசமும் அப்பெட்டியைக் கடக்க முயற்சித்தன. காலை உணவை முடித்தவருக்கு இப்போது டீ குடிக்கும் நேரம். ஆகவே மழைக்கு இப்பொழுது சமோசாவோ வடையோ தேவலாம் என்று எண்ணம் ஓடிய பலரும் சமோசா விற்பனையாளனை நகர விடவில்லை. பாட்டிக்கும் அந்த ஆசை விட்டு வைக்கவில்லை. சமோசாவின் விலை பத்து என்று சொல்ல தனக்கும் தன் உடன் வந்தவருக்கும் மூன்று சமோசா ஒரு பருப்பு வடை, ஒரு உளுந்து வடை என்று வாங்கிக் கொண்டாள். விற்பனையாளன் அறுபது ரூபாய் கேட்க பெட்டிக்குள் ஒரே களேபரம் வெடிக்கின்றது.

பத்து ரூபானுதானு சொன்ன இப்போ அறுபது ரூபா கேட்குற என்றாள்.

ஆமாமா சமோசா பத்து, வடை பதினைந்து என்றான்.

எது இந்த தம்மா துண்டு வடை பதினைந்தா.. கல்லுமாறி இருக்கு இதைப்போயி பதினைந்துங்குற உனக்கு மனசாட்சி இல்ல… சரி இந்தா. ஒரு வடைதான் சாப்பிட்டேன்.. மீதி ஒரு வடைய வச்சுக்கிட்டு சமோசா கொடு.

ஏம்மா நீ வாங்கி ஒன்ன சாப்புட்டுட்டு இன்னொன்ன வாங்கிக்கணு கொடுத்தா யாராச்சும் வாங்குவாங்கலா..

நீதான்யா சமோசா பத்துனு சொன்ன அதான் வாங்குனேன்.

சமோசா பத்துனுதான் சொன்னேன். வடை பத்துனுன்னா சொன்னேன்.

என்னய்யா இது கரக்காட்டகாரன் வாழைப்பழ கணக்கா சொல்லுற.. இப்படி பொளச்சங்கீங்னா நாங்க எங்க போறது.

அட ஏம்மா எங்களுக்கே அஞ்சு ரூபா பத்து ரூபாதான் கெடைக்கும். அதையும் நீ கெடுத்து உட்டுருவயாட்டுக்கு.. நல்லா பொளப்பு பொளச்ச போ.. என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவள் வடையை மல்லுக்கட்டி வாயில் திணித்துக் கொண்டிருந்தாள்.

இவளின் அடாவடியைப் பார்த்துக்கொண்டிருந்த கீழே அழுக்கு ஆடையோடும் கையில் சிறு துண்டோடும் அமர்ந்திருந்த ஒருவன் அவளிடம் மெல்ல பேச்சினைத் தொடுக்க ஆரம்பித்தான்.

ஏம்மா, வர ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டேங்குற.. இனிமே டீவில கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி வந்தா நான் உன்னையும் அந்த சமோசாகாரனையும்தான் நினைச்சுப்பேன். ஆமா, அரக்கோணம் வந்தா சொல்லு. எனக்கு எங்க எறங்கனும்ணு தெரியாது. எனக்கு கண்டுபிடிக்க தொியாது என்று அவன் சொல்ல, நாங்க மட்டும் என்ன அடிக்கடியா வந்துட்டு போயிட்டு இருக்கோம். நாங்க ஏறுன்னா இறங்குற இடம் அவ்ளோதான் எனக்குத் தொியும். நீ சொல்ற அரக்கோணம் கிரக்கோணம்லாம் எனக்குத் தெரியாது. நாங்க திருப்பதி போறோம். இங்க ஏறுனொம்னா அப்புறம் எறங்குற இடம் தான். இடையில எல்லாம் எனக்குத் தெரியாது என அவள் உரைக்க.. அவனோ, ஆமா; இன்னைக்கு சனிக்கிழமை நாளு போயி திருப்பதி போறேணு சொல்றீங்க?

ஏன் சனிக்கிழமை போனா சாமி வேணாங்குதா.

அதுக்கில்ல மொத புரட்டாசி புடிச்சோனாயே அந்த வாரமே போயிட்டு வந்துரோணும்ல. நீ என்னடானா இப்போ போறேங்குற. நான் பொரட்டாசி ஒன்னுக்கே போயிட்டு வந்துட்டேன். இப்போ ரெண்டாவது வாட்டி போறேன்.

மொத தடவ போறப்போ வாரேணு சொல்லிட்டு வந்தீங்களா?

அதை எதுக்கு சொல்லிட்டு வரணும்.

இல்ல இப்போ ரெண்டாவதுவாட்டி போறீங்களே அதான் கேட்டேன்.

சொல்லிட்டுதான் போணுமா என்ன. எப்போ போனாலும் கையெடுத்துக் கும்பிட்டா சாமி ஏத்துக்க போவுது. சரிம்மா வரும்போது எனக்கு கொஞ்சோ லட்டு மட்டும் கொடுத்துட்டு போமா.

நான் வரப்போ நீ என்ன அதே ரயில்லயா வரப்போற..

கண்டிப்பா நீ வேணா பாரு. நான் அந்த டிரெயின்ல இருப்பேன்.

ஆமாமா நீ ரயில்லயேதான் குடியிருப்ப போல. பாத்தா அப்படித்தான் தெரியுது.

திருப்பத்தூர் கடந்து ஜோலார்பேட்டையைக் கடக்க வானம் ஓய்ந்திருந்தது. முட்டை பிரியாணி விற்பனையாளன் கடந்து செல்ல அவனோ. அம்மா ஒன்ர வயசுல எத்தனையோ பேருக்கு சோறு போட்டுருப்ப உன் கையால. எனக்கு பிரியாணி வாங்கி குடும்மா..

அதெல்லாம் வாங்கித் தர மாட்டேன்.

ஏம்மா கோயிலுக்குப்போற வாங்கிக் கொடுத்தா என்னம்மா.

கோயிலுக்குப் போம்போதெல்லாம் யாருக்கும் வாங்கிக் கொடுக்கறதுல்ல.

அப்போ வரும் போது…

வரும்போதும் வாங்கிக் கொடுக்கறது இல்ல.

என்னம்மா இப்படி சொல்லிட்ட. திருப்பதி போறேங்குற வாங்கி கொடுத்தா என்ன.

அதெல்லாம் வாங்கி தர முடியாது. நீ தான் ரயில்லயே குடியிருக்குற ஆளாச்சே கேட்டு வாங்கித்தின்னு.

இப்படி பேச்சிற்கிடையை இரயில் ஆம்பூரை வந்து அடைந்திருந்தது. நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் எங்களை இறக்கிவிட்டுவிட்டு அவனையும் அவளையும் மீண்டும் ஓர் உரையாடலுக்குள் கூட்டிச்சென்றிருந்தது சென்னை இரயில்.

-jaayapal@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button