இணைய இதழ்இணைய இதழ் 58சிறுகதைகள்

இளநகை – கமலதேவி 

சிறுகதை | வாசகசாலை

த்துநாட்களுக்கு மேலாக தினமும் சாயங்காலம் வரும் மழை இன்றும் தப்பாமல் வந்து கோலத்தை நனைத்து அழித்துக் கொண்டிருந்தது. பக்கத்துவீட்டு ஓட்டுக்கூறையில் இருந்து வழிந்த நீர்த்தாரைகள் சாக்கடையில் கலந்து மறைந்தன. மழையைப் பார்த்தபடி வாசல்படியில் பால்காரனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். வித்யாவின் கணவர் சதீஸ் ஆயுள் காப்பீட்டு முகவராகப் பதிவு செய்திருந்தார். சென்னையிலிருந்த வேலையை விட்டுவிட்டு நிரந்தரமாக ஊருக்குத் திரும்பி இரண்டு மாதங்களாகிறது. சங்கர் அவரை வீட்டிற்கு அழைத்து வருவதாகச் சொல்லியிருந்தான். இன்னும் சற்று நேரத்தில் இருவரும் வந்துவிடுவார்கள். அலைபேசி ஒலித்தது. எடுத்து, “எப்ப வரீங்க?,” என்றேன்.

“உன்னோட டிகிரி சர்ட்டிஃபிகேட்.. ஆதார் கார்டை எடுத்து வை…அப்பறம் ஏதோ சிரிச்சபடிக்கு செல்ஃபி எடுக்கனுமாம்..புரியுதுல்ல,”

“எதுக்கு செல்ஃபி?,”

“இப்பெல்லாம் லைவ் ஃபோட்டா தானாம்,” என்று வைத்துவிட்டான்.

மதியம் கேட்டதற்கும் சரியாக பதில் சொல்லாமல் அவசர அவசரமாக தயிர்சோற்றை அள்ளிப்போட்டு கொண்டு வண்டியில் பறந்தான். அவனுக்கு எப்போதும் நெல் மிஷின், அரிசி, தவிடு, சிப்பம், கணக்கு வழக்கு மட்டும் தான் நினைப்பு முழுவதும் இருக்கும். சாக்கு, சணல் கணக்குகளைக் கூட அவன் பார்த்து சரி செய்தால்தான் உறக்கம் வரும். 

நேற்றிலிருந்து யோசனையாகவே இருந்தான். எப்போதையும் விட சிடுசிடுப்பாக இருப்பதாகப்பட்டது. ‘உடம்புக்கு முடியலையா?’ என்று கேட்டதற்கு ‘இல்லை’ என்று தலையாட்டினான். முகத்தைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. எதையாவது சொல்லித் தொலைத்தால் என்ன? இந்த வித்யாவை சொல்லனும்.நேற்று மில்லிற்கு வந்து இவனிடம் மணிக்கணக்காகப் பேசியிருக்கிறாள். “நீயும் போய் மில்லுல ஒக்காந்துக்க ஹேமா..வேலையப் பாத்துக்கிட்டே நல்லா பேசறாரு..நம்ம மாமாவான்னு எனக்கே அதிசயமா இருக்கு,”என்று அலைபேசியில் கூறினாள்.

திருமணம் முடிவான அன்றே, “நம்ம மாமா..நம்ம மாமா,”என்று தான் எடுத்ததெற்கெல்லாம் சொல்வாள். அவளின் திருமணத்தின் போதும், “எங்க மாமா,” என்று தான் சதீஸீடம் அறிமுகப்படுத்தினாள். அவளுக்கு தாய்மாமா இல்லையென்பதை இப்படி மாற்றிக்கொள்கிறாள் என்று தோன்றும். ஊரே தாய்மாமன் சீர், தாய்மாமன் உறவு என்று பேசும்போது ‘ஏக்கமாத்தான்’ இருக்கு என்று சிறு வயதிலேயே சொல்வாள். ஏற்கனவே இத்தனை ஆயுள்காப்பீடு இருக்கும் போது அவள் சொல்வதை தவிர்க்க முடியாமல் சங்கர் ஆயுள்காப்பிட்டிற்கு ஒத்துக்கொண்டானோ? எதையும் நேராக மறுக்கிற ஆள். வித்யாவிடம் கொஞ்சம் நாசூக்கு பார்ப்பான்.

நேற்று பேசும் போது இறுதியாக,”சஸ்பென்ஸ் இருக்கு..முதல்ல மாமா பதில் சொல்லட்டும். பிறவு நம்ம ஆட்டம்தான்,” என்று சிரித்தாள். குழந்தை விஷயமாக மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஒப்புக்கொண்டிருப்பானோ? வாயைத் திறக்காமல் இருப்பதைப் பார்த்தால் வியாபாரத்தில் எதுவும் நஷ்டம் விழுந்திருக்கும் என்றே மனதிற்குப்படுகிறது. அந்த மாதிரி சமயங்களில் தான் இப்படி இருப்பான். “யாராச்சும் ஒருத்தர் கலகலப்பா இருந்தாதானே வீடு நல்லாருக்கும். காலேஜ் அனுப்பி படிக்க வச்சும் ஒரு மண்ணும் தெரியல. ஹேமாவுக்கு பதிலா வித்யாவையாச்சும் சங்கருக்கு கட்டி வச்சிருக்கலாம்,” என்று அப்பா விளையாட்டிற்கு சொல்வார்.

“மருமவப்பிள்ளைக்கு.. வூட்ல இருக்கறப்பக் கூட நெல் அவிக்கிற ட்ரம் முன்னாடி ஆவி அடிக்கறபடிக்கு தான் முகலட்சணம்,” என்று அம்மா சிரிப்பாள்.

பக்கத்துவீட்டு பூஜா பால்கிண்ணத்துடன் வெளியே வந்தாள். மழைநீரில் பாத்திரத்தை நீட்டிக் கழுவியபடி திரும்பினாள்.

“என்னக்கா…சினிமாவுக்கேதும் போறீங்களா? புடவையில கிளம்பி இருக்கீங்க..டார்க் ப்ளு நல்லாயிருக்கு,”

“நீ வேற சினிமாவுக்கெல்லாம் உங்க மாமா கூட்டிட்டு போவாராக்கும். அங்க வந்து புண்ணாக்கு கணக்கு பேசிக்கிட்டிருப்பாரு,”

“மாமா மாதிரி கிடைக்கனுமே,”

“அப்படீன்னா…நீ வேணுன்னா கட்டிக்கடி,” என்றேன். அவள் சிரித்தபடி கும்பிட்டாள். ‘வேணாம் சாமி’ என்பது மாதிரி இருந்தது.

பால்காரனை இன்னும் காணவில்லை. அவனுக்கு இன்னும் தன்மையான முகம். பார்ப்பவர்கள் இரண்டு அடி பின்னால் நகர்ந்து விடுவார்கள். அவன் வருவதற்குள் வாசலில் பால்வாளியுடன் நிற்க வேண்டும். இல்லையென்றால் பார்க்கும் பார்வையே வேறு. ஆம்புலன்ஸ் அலாரம் மாதிரி ஒரு ஹாரன் சப்தம் வைத்திருக்கிறான். இவன் வீடு எப்போதும் பொங்கிக் கொண்டுதான் இருக்கும் என்று நினைத்ததும் புன்னகையில் முகம் விரிவதை உணர்ந்து, அவசரஅவசரமாக எழுந்து ஓடி கண்ணாடி முன் நிற்கும்போதே, ஹாரன் சப்தம் கேட்டுத் திரும்பி ஓடிவந்தேன்.

பால்வாளியுடன் திரும்பி வந்து கண்ணாடி முன் நிற்கும்போது முகத்தில் புன்னகை இல்லை. புன்னகைத்துப் பார்த்தேன். வரவில்லை. பாகற்காய் வாயில் இருப்பதைப்போல முகம் இருந்தது. என்றைக்கும் போல இருந்தால் கூட கொஞ்சமாவது சிரிப்பு வந்து தொலையும். நேற்றிலிருந்து ‘இந்த சிவன் எப்ப நெத்திக்கண்ண தெறக்குமோன்னே’ பதறிகிட்டே இருந்தா எப்படி சிரிப்பு வரும்?.

பால்வாளியை வைத்துவிட்டு வந்து கண்ணாடி முன் நின்றேன். நெற்றிப்பொட்டை சரி செய்து புன்னகைத்துப் பார்த்தேன். சிரிக்க வேண்டும் என்றால் சிரிக்கவே முடியாது போல. சங்கர் திருமணத்தன்று புகைப்படம் எடுக்கும் பையன்களிடம், “ நேருக்கு நேரா இருக்கிற மேனிக்கு படம் எடுங்க. சும்மா அப்பிடி நில்லு. இப்பிடி பாருங்கறங்கறதெல்லாம் வேணாம். யாரும் ஃபோட்டோ சரியில்லைன்னு சொல்ல மாட்டோம். பணம் போக்குவரத்து கணக்கு வழக்கெல்லாம் சரியா முடிச்சு தந்திருவேன்,”என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான். திருமணங்களிலெல்லாம் அதிகாரம் செய்து கொண்டிருந்த அந்தப் பையன்கள் பாவம் போல சத்தமில்லாமல் வேலை செய்தார்கள். புகைப்படத்தொகுப்பு என்னவோ நன்றாகத் தான் இருந்தது. அம்மாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

“பாக்கறதுக்கு சங்கட்டமில்லாம நல்லா இருக்கு ஹேமா..நீயும் மருமகப்பிள்ளையும் இருக்கற மேனிக்கு அழகா இருக்கீங்க,” என்று அம்மா அடிக்கடி எடுத்துப்பார்த்தாள். சங்கர் கூட குடத்திலிருந்து மோதிரம் எடுக்கும் போது, மெட்டி அணிவிக்கும் போது சிரித்த மாதிரி இருந்தான். திருமணமான இரண்டு ஆண்டுகள் சுறுசுறுப்பாக இருந்தான். அதற்குப்பின் அதையே வழக்கமாக மாற்றிக்கொண்டான். யாருடைய பார்வையில் இருந்தோ, கேள்வியில் இருந்தோ தப்பிப்பவனைப் போல வியாபாரத்தை நோக்கி ஓடினான். நெல் மூட்டைகளை அடுக்கியதைப்போல லாபத்திற்கு மேல் லாபம். வீட்டில் இருக்கும் நேரமே குறைவு. என்னுடைய பூஜை, விரதங்களுக்கு சரியான நேரத்தில் வந்து நிற்பான். அப்பொழுதெல்லாம் என் கண்களைப் பார்க்க பயந்தவன் போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருப்பான். கலங்கிய கண்களுடன் அவன் முன் நிற்கக்கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும் தோற்று போகிறேன். யாருக்கும் அவனிடம் ‘குழந்தை இல்லையா?’ என்று கேட்கும் துணிவு வரவில்லை. அது இருமடங்காக என்னிடம் வந்து சேர்ந்தது. அவனுக்கு எதிலும் பிடிவாதம்.

“கையில இருக்கிற முதலை அழிச்சிட்டு லாபம் பாக்க முடியுமா? இதுக்கெல்லாம் டாக்டருக்கிட்ட போய் நின்னா மருந்து மாத்திரைன்னு ஒடம்பே அழிஞ்சி போகும்…நீயும் எனக்குத்தெரியாம போகக்கூடாது,” என்று ஒவ்வொரு முறையும் கண்டிப்பாகச் சொல்வான்.

அம்மா ஒருமுறை,”படிச்ச பிள்ள இப்பிடி இருக்கீங்களே…”என்றாள்.

“படிச்சதுனாலதான் சொல்றேன்…” என்று வேகமாக சொல்லிவிட்டுச் சென்றவன் மில்லில் இருந்து மூன்றுநாட்கள் வீட்டிற்கு வரவில்லை.

ஒரு முறை மனசங்கடத்தில் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டேன். அம்மா, ‘நான் போய் மருமகப்பிள்ளைக்கிட்ட பேசறேன்’ என்றாள். அப்பாவுக்கு தான் சென்று என்ன கேட்பது என்று சங்கடம். மாமாதான் என் படுக்கையில் வந்து அமர்ந்து கொண்டு பேசினார்.

“அவரை எதிலேயும் சேக்க முடியாதும்மா. மெட்டி போடுன்னா நம்ம பயக அக்கா தங்கச்சிய கைக்காட்டி விட்ருவானுங்க. விளையாட்டுக்கு கேட்டு பாத்ததுக்கே..இவரு டக்குன்னு குனிஞ்சு போட்டுட்டாருல்ல. வெகுளி தான். வியாபாரம்னு தலையில எழுதியிருக்கே. என்ன பண்ணுவாரு. வியாபாரத்தை சமாளிக்கனுமில்ல. அதுக்குன்னு ஒரு மொகராசி வேணும் ஹேமா. இல்லாட்டி அத்தனை ஆளுகள வச்சு மில்லு நடத்த முடியுமா. கோவமும் பட்றக்கூடாது. சிரிக்கவும் கூடாது. எங்களுக்கு மட்டும் என்ன பிள்ளக்குட்டி இருக்கா என்ன?” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெளியே சங்கரின் குரல் கேட்டது. சட்டென்று எழுந்து நின்றேன்.

“சொல்லல..அவரே வந்துட்டாரு. ஒனக்கு நல்ல விதின்னு நான் சொல்லல,” என்று தோள்களில் கைப்போட்டு கட்டிக்கொண்டார்.

திருமணத்தன்று புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் அப்படிப் பேசியவன் உணவு நேரத்தின் போது, “ஃபோட்டோ எடுத்துட்டீங்கல்ல? எங்க கூட ஒக்காந்து சாப்பிட்டுட்டு இனிமே எடுக்கறத எடுத்துக்கலாம். கடைசியா ஒன்னுமே இருக்காது,”என்று அவர்களை அவன் பக்கத்தில் அமர்த்தினான்.

ஆறு மணிக்கு மேல் சதீஸ் வந்தார். பின்னாலேயே சங்கர் வந்தான். சதீஸ் என் விவரங்களைக் கேட்டுக்கேட்டு எழுதினார். வேலை, சம்பளம், ஆண்டு வருமானம் போன்றவற்றிற்கு சங்கர் பதில் சொன்னான். படிக்கும் போது இப்படியெல்லாம் நினைக்கக்கூட இல்லை. டிகிரி முடித்ததும் வேலைக்குச் சென்று ஹேண்ட் பேக்குடன் திரும்பும் சித்திரம் மனதில் இருந்தது. அந்த சித்திரம் இன்னும் அசையவே இல்லை.

“ஹேமா..எடுத்து வைக்க சொன்னதெல்லாம் கொண்டு வா. நைட்டியே போட்டுட்டு இல்லாம..சுடிதார் போட்டுக்கலாமில்ல,”என்று நிமிர்ந்தான். என் பார்வையைக் கண்டு ஒரு முறை பார்த்துவிட்டு குனிந்து கொண்டான். நான் புடவை முந்தானையை செருகியபடி பார்த்துக் கொண்டிருந்தேன். சதீஸ் வாய்க்குள் சிரிப்பை அடக்கியபடி,” முகம் மட்டும் தானே?” என்று அலைபேசியை பார்க்கத் தொடங்கினார். தேடி எடுத்து வைத்திருந்திருந்த நகல்களை எடுத்து வந்தேன்.

“ஒரிஜினல எடுத்துட்டு வா…”

“எல்லாத்துக்கும் ஜெராக்ஸ் தானே கேப்பாங்கன்னு தேடி எடுத்தேன்,”

“இப்பெல்லாம் ஆன்லைன்ல தாம்மா. ஒரிஜினல மொபைல்ல ஃபோட்டோ எடுத்துக்கலாம்,” என்ற சதீஸ் அலைபேசியில் விவரங்களைப் பதிந்து கொண்டார். சங்கர் சுவர் கடிகாரத்தைப் பார்த்தான்.

சதீஸ், “ஹால்ல லைட்ட ஆன் பண்ணும்மா..” என்றபடி எழுந்தார்.

“லைட்டுக்கு எதிர்த்தாப்ல நில்லு..ஸ்க்ரீன நேராப் பாத்து சிரிம்மா..இங்க க்ரீன் டிக் வந்தா ஓ.கே,” என்றபடி அலைபேசியை தந்தார். இரண்டு நிமிடங்கள் கழித்து, “என்ன முழிக்கிற…செல்ஃபீ தானே,” என்றபடி சங்கர் எழுந்து அருகில் வந்தான். 

“நீங்க பக்கத்துல போகாதீங்க. உங்க இமேஜீம் விழும் ..”

நான் புன்னகைக்க முயன்றேன். அவர்கள் இருவரின் முன்பாக இப்படி நிற்பது ஒருமாதிரி இருந்தது. என் புன்னகையை ஏற்காத திரை ‘ஸ்மைல் ப்ளீஸ்… ஸ்மைல் ப்ளீஸ்’என்றே பத்து நிமிடங்களாக காட்டியது. “நல்லா சிரிம்மா.. ஸ்மைலி எமோஜி இருக்குல்ல. அந்த மாதிரி வாய் அகலமா சிரிக்கனும். அப்பதான் ரெககனைஸ் ஆகும்,”. நேரம் ஆக ஆக சங்கடமாக இருந்தது. அவர் மறுபடி வந்து அலைபேசியை வாங்கி யாருக்கோ பேசினார்.

“சங்கர்..உங்க மொபைல்ல வை பை ஆன் பண்ணிக்கலாமா? இங்க நெட் ஸ்லோ… அதான் நேரமாகுது,”

எனக்கு கன்னங்கள் லேசாக வலித்தன. திரும்பி தொலைக்காட்சித் திரையில் தெரிந்த என் முகத்தைப் பார்த்தேன். டெண்டுல்கர் சதம் அடித்து மட்டையை உயர்த்தினார். கைத்தட்டி சிரித்தேன். பின்னால் இருந்து அம்மா, “அப்பிடி என்ன சிரிப்பு? பயக தான் குதிக்கறானுங்கன்னா நீயும் ஆடுற,” சுற்றிலும் ஒருமுறை பார்த்தேன். அண்ணனும் அவனுடைய நண்பர்களும் என்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் மெதுவாக அங்கிருந்து எழுந்து வாசல் பக்கம் சென்றேன்.

கல்லூரிக்கு வீட்டிலிருந்து பேருந்தில் சென்று வந்தேன். சன்னல் ஓரமாக அமர்ந்தாலும் பேருந்தில் ஒலிக்கும் பாடல்களுக்கு தன்னை மறந்து புன்னகைக்க முடியாது. கைக்குட்டையை வைத்து மறைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் என்னை பார்த்து தான் சிரிக்கிறாள் என்று எவனாவது சொல்லத்தொடங்கி அதை உண்மையாக்குவார்கள். தினமும் பேருந்தில் சில பயல்கள் ஒரே இடத்தில் நிற்பதால் பேருந்திலும் இறுக்கமாகவே இருக்க வேண்டும். கழுத்து வலித்தாலும் அடிக்கடி இப்படி அப்படி திரும்ப முடியாது. ஊர்க்காரர்கள் யாராவது எதையாவது சொல்லிவைத்தால் படிச்சது போதும் என்று எவன் கையிலாவது பிடித்து கொடுத்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை இருந்து கொண்டே இருக்கும். 

அம்மாவிடம் எப்போதாவது இதையெல்லாம் சொன்னால், “ எல்லாத்தையும் தாண்டினாத்தான் படிப்பு. எங்களுக்கெல்லாம் கிடைச்சுதா என்ன? ஒரு தலை ராகம் படத்துத்துல காலேஜ் காட்றாங்கன்னே மூணு வாட்டி போனோம். இப்டி ஒக்காந்து எந்திரிக்கறதுக்குள்ள கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க,”என்று பேசிக்கொண்டே செல்வாள்.

கல்லூரியில் பேசிக்கொண்டிருக்கும் போது,”பசங்க விளையாட்டுக்குப் பேசறது… செய்யறதெல்லாம் நமக்கு சிக்கலாவே இருக்கே..எப்பதான் நம்மள மறந்து சிரிக்கறது,” என்று வித்யாவிடம் கேட்டால் அவள் சிரித்தடி, “விடு..இப்ப நம்ம நேரம் அப்படி..கல்யாணத்துக்கு அப்புறம் பிடிச்சமாதிரி இருந்துக்கலாம்,” என்பாள். பெண்பார்க்க வரும் போதே சங்கர் அவசரஅவசரமாகத்தான் வந்தான். “பையன் எம்.எஸ்.சி படிச்சிருக்கான். சொந்தமா மில் இருக்கு. நல்ல வருமானம். பொறுப்பான பையன். விட்டா கிடைக்காது,”என்று தரகர் சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தால் கட்டிவத்து விடும் ஆவலாதி அவருக்கு இருந்தது.

அன்று தேநீர் கொடுக்கும் போது ஒரே ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான். அன்று இருந்த பதட்டத்தில் சிரித்தானா என்று கூட நினைவில் இல்லை. அப்பா,மாமா என்று ஆண்கள் அனைவருக்கும் சங்கர் மீது அப்படி ஒரு அபிப்ராயம்.

“இந்தக்குட்டிக்கு நல்ல விதியிருக்கு,” என்று மாமா சிரித்தபடி தலையைத் தடவினார். அம்மா மட்டும்,” எல்லாம் பரவாயில்லை..பையன் இன்னும் கொஞ்சம் தன்மையா இருக்கலாம்,” என்று திருமணதன்று கூட சொன்னாள்.

பெண் பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள் வித்யா, “என்னடி மாப்ள பிடிச்சிருக்கா?,” என்றாள்.

“பிடிக்கலன்னு சொல்ல முடியாது,”

“மாதவன் மாதிரி வேணும்பியே…அதான் கேட்டேன்,”

“க்கும்.சுத்தம்… நரசிம்மராவ் வந்து வாச்சிருக்கு,” என்று சிரித்தேன்.

“விடு…விடு. சட்டென உடைந்தது நெஞ்சம்ன்னு எதாவது ஒரு மொமண்ட் வரும்..” – என்று தலையில் தட்டினாள்.

அது இன்னும் வரவில்லை. எப்போதாவது சிரிப்பான். அதுதான் சட்டுன்னு வருவது தெரியாமல் வந்துட்டு மறைஞ்சு போகும். 

“இந்த காலத்துப்பிள்ள தானே..முகம் பாத்து சிரிச்சா என்ன? மருமகன் நல்லா பேசி சிரிக்கறவரா இருக்கனும். நம்ம பிள்ளையாட்டம்னு எத்தனை ஆசை இருந்துச்சு. நமக்கு அமைஞ்சது அவ்வளவு தான்..” என்று அம்மா விசேஷங்களில் சொந்தபந்தங்களுடன் ஒன்றாக நிற்கும் போது சொல்லிச் சொல்லி எரிச்சலாக்குவாள். நண்பர்களுடன் நிற்கும் போது கூட தலையைக் குனிந்தோ, முகம் விரிந்தோ தான் பார்க்க முடியும். “வியாபாரின்னா வீட்ல சிரிக்கக்கூடாதுன்னு எதாவது பிசினஸ் எத்திக்ஸ் இருக்கா?” என்று கல்யாணமான புதிதில் கேட்டாள். அதற்கும் ஒரு புன்னகைதான். 

“ஹேமா…என்னத்த யோசிக்கற,” என்று சங்கரின் குரல் அதட்டியது.

முகத்தை நன்றாக மலர்த்தி உதடுகளை விரித்துக் காத்திருந்தேன். அப்போதும் பச்சை நிற டிக் வரவில்லை. ‘இது என்ன சங்கடம்’ என்று கழுத்தை சொடுக்கினேன். “என்ன பண்ற ஹேமா..” என்று சங்கரின் குரல் மீண்டும் கேட்டது. முகம் மேலும் சுருங்கியது.

“நீங்க கொஞ்சம் பேசாம இருங்க. அதுவே சிரிக்க முடியாம கஸ்ட்டப்படுது,”

முகத்திற்கு நேராக அலைபேசியை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தேன். ‘பொம்பளப் பிள்ளைக்கு பூஞ்சிரிப்புதான் அழகு’ என்று கொஞ்சும் அப்பாவின் முகம் முன்னால் வந்தது. அவரை நாலு வார்த்தை கேக்கலேன்னா பாரு என்று மனதிற்குள் நினைப்பதற்குள் முகத்தில் எரிச்சல் படர்ந்திருக்க வேண்டும். “நம்ம இருக்கறதால கூச்சப்படுதுன்னு நினைக்கறேன்..நீ டிக் வந்தா கூப்பிடும்மா,” என்ற சதீஸ் வாசல் பக்கமாகச் சென்றார். சங்கர் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான். 

‘இதென்ன கண்றாவி.. என்று எத்தனை முயன்று சிரித்தாலும் அலைபேசி பச்சை நிறம் காட்டவேயில்லை. உன்னோட விதி வந்து நிக்கிற ரூபத்தை பாத்தியா?’ என்று எனக்குள்ளேயே நினைத்து கொண்ட போது முதல் ‘டிக்’ விழுந்தது. சதீஸ் பரபரப்பாக அடுத்த வேலையைப் பார்த்தார்.

“இன்னையிலருந்து ஹேமா லைஃப் கவராகுது சங்கர்,”

சங்கர் புருவத்தை மட்டு சுருக்கிப் பார்த்தான்.

“இன்னைல இருந்து ஹேமாவுக்கு லைஃப் ரிஸ்க் எதாவதுன்னா உங்களுக்கு பத்து லட்சம் கிடைக்கும்,”

திரும்பி என்னைப் பார்த்தான்.

“நீங்க தானே நாமினி. அதான் உங்கக்கிட்ட சொன்னேன்,” என்ற சதீஸ்,”மொபைலை அந்த பொசிசன்லயே பிடிச்சுக்கோ…” என்று அலைபேசியை மீண்டும் கொடுத்தார்.

எதையும் நினைக்காமல் சிரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து முகத்தை விரித்தேன். “டிக் வந்திருச்சு,” என்றதும் சதீஸ் வேகமாக வந்தார். 

“நோ இமேஜ் அவெய்லபில்,” என்று திரை ஒரு பொம்மையைக் காட்டியது.

“ச்.. இந்த ஆன்லைன் வேலையே இப்படித்தான். மறுபடி ட்ரை பண்ணும்மா..இன்னும் ஐஞ்சு செல்ஃபி வரிசையா வேணும். சங்கர்…பத்து வருஷமா ஏழு வருஷமா?”

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

பதில் கூறியப்பின் என்னிடம் திரும்பி, ”என்னம்மா ஆச்சு..?” என்றார்.

நெற்றியில் வியர்வை படற நாற்காலியில் அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தேன். சதீஸ் அலைபேசியை வாங்கி கைக்குட்டையால் அலைபேசியின் பின்புறத்தில் முன்புறத்தில் என்று புகைப்பட ஆடியைத் துடைத்தார்.

“டிக் வந்தா..அக்ரியை டச் பண்ணி… அடுத்தடுத்த செல்ஃபி எடும்மா,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவர் கையிலிருந்த காகிதங்களை பார்க்கத் தொடங்கினார். நேரம் சென்று கொண்டிருந்தது. “எப்பப்பாத்தாலும் என்னைய சிரிக்கலேன்னு சொல்லுவ. சிரிக்கறது எவ்வளவு கஸ்ட்டம் பாத்தியா,” என்றவாறு சங்கர் கதவுப் பக்கமாக தள்ளி நின்றான்.

“நேத்து வித்யா நெல்மிஷினுக்கு வந்திருந்தா,”

“தெரியும்.. அவ கூட மணிகணக்கா என்ன பேசுனீங்க. எங்கிட்ட சொல்லவே இல்ல,”

“நீ மட்டும் என்னைய நரசிம்மராவ்ன்னு எனக்கு முன்னாடியா சொல்ற,”

 அடுத்த டிக் விழுந்தது.

“ரொம்ப நேரம் பேசினா..மாதவன் பாட்டு கூட எதோ சொன்னாளே,”

“அப்பறம் என்ன சொன்னா?,”

“கொஞ்சம் சிரிச்சபடி இருந்தா என்ன மாமான்னு கேட்டா,”

அடுத்தடுத்த டிக்குகள் விழுந்தன. சதீஸ் அலைபேசியை வாங்கி தன்னுடைய வேலையைப் பார்த்தார். இன்னும் சங்கர் பேசிக்கொண்டிருந்தான்.

“இதெல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தானே..நேத்து பேசறப்ப இத்தனை எல்.ஐ.சி வேணான்னு அப்பா சொன்னாரு. இதென்னடா இப்ப செத்தா.. அப்ப செத்தான்னு. அவர் காலம் வேற…இவர் கொடுத்த ப்ளான் டீடெய்ல்ஸ் எல்லாம் மில்லுலயே படிச்சிட்டேன். நேத்து நைட் பூரா ஒரே யோசனை..”

அவனுடைய மலர்ந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“வித்யா என்னமோ சொன்னதா சொன்னாளே,”

“கல்லணையில தண்ணி நிரம்பி வருதாம். முக்கொம்பு போலான்னு சொன்னா,”

“…”

“போலாம்,”

“மில்லு,”

“ஒருநாள் தானே..அப்பா போறேன்னாரு,”

“அது மட்டும் தான் சொன்னாளா…மணிக்கணக்கா பேசினதா சொன்னாளே,”

“ஆமா..பாப்பாவையும் கூட்டிட்டு வரேன்னு சொன்னா..பார்க்குல நிறைய விளையாட்டு இருக்கு. பாப்பாவோட விளையாடலாம்,” என்ற போது இயல்பாகவே அவன் கண்களில் இதழ்களில் முகத்தில் என்று சிரிப்பு பரவியது. அலைபேசியில் இருந்து கண்களை எடுத்த சதீஸ்,”கடைசியா ஒரு செல்ஃபிம்மா,”என்று நீட்டினார். வேலை முடிந்ததும் இருவருக்கும் தேநீர் தந்தேன். சதீஸ் புன்னகைத்து, “லைஃப் சேஃப்,” என்றபடி தேநீரை ரசித்துக் குடித்தபடி, “வித்யா வேற என்னமோ சொன்னாளே,” என்றார்.

“ஆமாமா..இப்பதான் அப்பா அம்மாவ பாத்து பேசினேன். கல்லணையிலருந்து திரும்பி வர வழியில அன்னை ஹோம்க்கு போய் குழந்தைகளை பாத்துட்டு வரலாம்…நமக்கு குழந்தை வேணுன்னு அப்ளை பண்ணிட்டு வரலாமா?” என்றபடி என்னை நோக்கி புன்னகைத்தான். பின் திரும்பி சதீஸிடம்,”நம்ம பாப்பா மாதிரி வளர்ந்த பிள்ளையா இருந்தா பரவாயில்ல…பிள்ளைக்கு எல்லா விவரமும் தெரிஞ்சு வளர்த்தாதான் நல்லது. வளர்ந்த குழந்தைன்னா சுலபமா கிடைக்குன்னு வித்யா சொன்னா..பிள்ளைக்கிட்ட பொய் சொல்லி வளக்கற சங்கடம் நமக்கு வேணாம்,” என்றான். அவன் விரல்கள் சோபாவில் தத்திக்கொண்டிருந்தன. உதடுகளை கடித்தபடி உடலே தழும்ப நிலைகொள்ளாமல் இருந்தான். பெண்பிள்ளைக்கு தகப்பனாகிற தகுதி இப்போதே வந்திருந்தது.

நான் அவன் புன்னகை மாறாமல் இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். வெளியே ஓய்ந்திருந்த மழை சில்லென்ற காற்றுடன் சட்டென மீண்டும் பிடித்துக்கொண்டது.

******

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button