வாசிப்பு அனுபவம்; தீபா ஸ்ரீதரனின், ‘ஜன்னல் மனம்’ சிறுகதைத் தொகுப்பு – நந்தினி
கட்டுரை | வாசகசாலை
கடல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள, ‘ஜன்னல் மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தீபா ஸ்ரீதரன் என்ற படைப்பாளியின் முதல் தொகுப்பு. இதிலுள்ள பதினோரு கதைகளும் அறியாத பாதைகளில் அலைந்து திரிந்து, வகுக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லைகளைத் தாண்டிச் செல்லத் துடிக்கும் மனித மனங்களைப் பரிசீலனை செய்கின்றன.
‘குறுக்குத் தெருவும் குறுந்தாடிக்காரனும்’, ‘குங்குமப்பூத்தோட்டம்’, ‘நாட்டைக்குறிஞ்சி’ போன்ற கதைகளில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மிகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பிழைப்பு என்ற நிலையில் மட்டுமே இருக்கும் தங்கள் இருப்பைக் கூட அகவிசாலத்தால் வாழ்வு என்ற நிலைக்கு உயர்த்துவதன் மூலம் அவர்கள் தளராது முன்நகர்கிறார்கள். வலிகளைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை நேசிக்கிறார்கள்
‘விரகநீட்சி’, ‘நான்கு சுவர்கள்’, ‘டின்டர் முத்தம்’, ‘ஸ்டிரின்ங்’, ‘அம்மண(ன)ம்’ போன்ற கதைகள் மனித மனங்களின் நெளிவுகளைப் பற்றிப் பேசுகின்றன. இந்த மனநெளிவுகளைக் கீழ்மையான எதிர்மறை நோக்கில் பார்க்காமல் பரிமாண வளர்ச்சியின் இயல்பான போக்கில் உணரச்செய்வதே இந்தப்படைப்புகளின் தனிச்சிறப்பாகும். மனிதர்களின் அசாதாரணங்களின் மீது பழி சுமத்தாமல் அவற்றைப் பற்றின தப்பெண்ணங்களைத் துடைத்தெறிந்து அவர்களையும் கருணையுடன் அணுகச் சொல்கின்றன இந்தக் கதைகள்.
சொற்சிக்கனத்தாலும் கட்டுக்கோப்பாலும் வாசக இடைவெளியாலும் மையத்தெளிவாலும் இத்தொகுப்பின் பெரும்பான்மைக் கதைகள் சிறப்பான கதைகளாக மாறுகின்றன. விலங்குமுறிக்கும் மனதின் தீவிரத்தைக் கூட எளிமையாகக் கடத்துகிறது இதன் மொழிநடை. சுழிப்புகளும் அலங்காரச் சொற்களும் இல்லாத நேரடியான மொழியில் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. சிலவற்றில் மட்டும் மொழி கதைகளின் தனித்தன்மைக்குத் தக்கவாறு பிரத்யேகமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
வளமான வரலாறு கொண்ட தமிழ் சிறுகதையுலகுக்கு கவித்துவமான மொழியாளுமையும், சரளமான எழுத்துநடையும், எளிமையான கூறுமுறையும், நுண்மையான உளவியல் தேர்ச்சியும் முன்னோக்கிய சமூகப் பார்வையும் கொண்ட தீபா ஸ்ரீதரன் எனும் மற்றுமொரு எழுத்தாளர், ‘ஜன்னல் மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் சிறப்பாக அறிமுகமாகியுள்ளார்.
நூல்; ஜன்னல் மனம் (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்; தீபா ஸ்ரீதரன்
விலை; ரூ.200
தொடர்புக்கு; 8680844408
*******