இணைய இதழ் 109தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள்-16; மு.இராமனாதன்

தொடர் | வாசகசாலை

சட்டத்தின் மாட்சிமை

தர்மேந்திர பிரதான் நான்காண்டுகளாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருக்கிறார். எனினும் அவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் இப்போதுதான் நன்றாக அறிந்துகொண்டது. அவரிடமிருந்துதான் இந்தக் கட்டுரைக்கான உந்துதலைப் பெற்றேன். அவர் சொன்னார்: ‘மும்மொழிக் கொள்கை என்பது rule of law.’ அமைச்சரின் கூற்றில் இரண்டு சொற்றொடர்கள் உள்ளன- மும்மொழிக் கொள்கை, rule of law. இந்தக் கட்டுரையின் பேசுபொருள் முதல் சொற்றொடர் அல்ல. அதைப் பற்றி பிறிதொரு கட்டுரை எழுதிவிட்டேன் (இந்து தமிழ் திசை, 25.2.25). இரண்டாவது சொற்றொடர் எனக்கு நெருக்கமானது. இந்தக் கட்டுரை அதைப் பற்றியது. ஆகவே, மும்மொழி, பன்மொழி ஆதரவாளர்கள் இடை நீங்காது தொடர்க!

Rule of law என்கிற சொற்றொடரை நான் அணுக்கமாக அறியத் தொடங்கியது 1995இல். அந்த ஆண்டுதான் நான் ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தேன். அது சமூக ஊடகங்களுக்கும், ‘உடனடிச் செய்தி’களுக்கும் முந்தைய காலம். செய்திகள் காலை நேரங்களில் அச்சில் வரும்; மாலை நேரங்களில் வான் வழியாக வரவேற்பறைக்குள் வரும். அந்நாளில் ஹாங்காங் நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் இந்தச் சொற்றொடரை மந்திரம் போல் உச்சரித்தன. Rule of law என்பது சட்ட விதிமுறைகள் மட்டுமல்ல. அது ஒரு நாட்டில் நிலவும் சட்டத்தின் மாட்சிமையையும் குறிக்கும்.

சட்டத்தின் மாட்சிமை என்பதாவது யாது? சிலர் இதைச் சுருக்கமாக, ‘சட்டத்திற்கு மேலானவர்கள் யாருமில்லை’ என்பார்கள். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்கிற கூற்றும் அதையேதான் சொல்கிறது.

தாமஸ் பிங்ஹாம் எனும் ஆங்கிலேய நீதியரசர், ‘Rule of law’ என்றே ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவர் சொல்கிற  அடிப்படைக் கூறுகள் இவை: “ஒரு நாட்டில் உள்ள அனைவருக்கும் சட்டம் பொதுவானதாகவும், எல்லோரது நலனுக்கானதாகவும் இருக்க வேண்டும்; அதன் நற்பயன்களை அனைவரும் துய்க்க வேண்டும். அதை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.” 

1995இல் நான் ஹாங்காங் ஏகியபோது இவையெல்லாம் அங்கே இருந்தன. அப்போது ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அதன் குத்தகைக் காலம் 1997இல் முடிவுக்கு வரவிருந்தது. அதன் பின் நகரம் சீனாவின் ஆளுகையின் கீழ் வரும். அந்த  மாற்றத்திற்கான முன் தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன. மக்கள் அதுகாறும் தாங்கள் துய்த்துக்கொண்டிருந்த எழுத்துரிமையும் பேச்சுரிமையும் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். ஹாங்காங்கின் நீதித் துறை சுயேச்சையானது. நகரம் பாதுகாப்பானது. கல்வியும் பொதுப் போக்குவரத்தும் நிர்வாகமும் உலகத் தரமானவை. குடிமக்கள் யாருக்கும் கையூட்டு தர வேண்டியதில்லை. சீனா ஆட்சிப் பொறுபேற்ற பின்னும் இவையெல்லாம் தொடர வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் குடிமைச் சமூகத்தினரும் வற்புறுத்தினார்கள். இதையே சுருக்கமாக, ஹாங்காங்கில் நிலவி வரும் சட்டத்தின் மாட்சிமை தொடர வேண்டும் என்றார்கள்.

தன்னாட்சியும் மாட்சியும்

‘அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு இவை தொடரும்’ என்று வாக்களித்தார் மறைந்த சீனத் தலைவர் டெங் ஸியோ பிங். சீனாவில் ஒரு-கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அதன் அரசமைப்புச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் மிகுதி. என்றாலும் ஹாங்காங்கிற்கு விலக்கு அளிக்க டெங் ஸியோ பிங் ஒப்புக்கொண்டார். அவர் முன்மொழிந்ததுதான் ஒரு தேசம் ஈராட்சி முறை (One Country Two Systems). அதாவது, சீன ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போதும், ஹாங்காங் மாநிலம் ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’யாக (Special Administrative Region) விளங்கும்; அயலுறவு, பாதுகாப்பு நீங்கலாகப் பிற துறைகளில் ஹாங்காங் தன்னாட்சியோடு விளங்கும்; முதலாளித்துவம், பேச்சுச் சுதந்திரம், கட்டற்ற வணிகம், சுயேச்சையான நீதித்துறை போன்ற ஹாங்காங்கின் அடையாளங்கள் தொடரும். ஹாங்காங்கிற்கு நாணயம், கடவுச்சீட்டு, கொடி முதலானவை தனியானதாக இருக்கும். இதற்காக ஹாங்காங்கிற்கென்றே தனியான ஆதார விதிகள் (Basic Law) இயற்றப்பட்டன. இதை ஹாங்காங்கின் அரசமைப்புச் சட்டம் எனலாம்.

1997, ஜூலை 1ஆம் தேதி யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, மக்கள் சீனத்தின் கொடியும், கூடவே  ஹாங்காங்கின் தனிக்கொடியும் ஏற்றப்பட்டன. சட்டத்தின் மாட்சிமை தொடர்ந்தது.

வணிகம், வாழ்க்கை

சட்டத்தின் மாட்சிமை என்பது சட்டப் புத்தகத்திலும் நிதிமன்றங்களிலும் மட்டுமே இருக்கிறது என்பார் அறியார். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதுவே துணை. இப்படிச் சொன்னவர் ஆலன் கிரீன்ஸ்பான், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர். அவரிடம் கேட்டார்கள்: ‘ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான ஒற்றைக் காரணி என்றால் எதைச் சொல்வீர்கள்?’ அவர் சொன்ன விடை பிரசித்தமானது. ‘சட்டத்தின் மாட்சிமை’.

இந்தச் சட்டத்தின் மாட்சிமைதான் ஹாங்காங்கை ஒரு பன்னாட்டு வணிக மையமாக உருவாக்கியிருக்கிறது. உலகெங்குமுள்ள தொழில் மையங்கள் தங்கள் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் ஹாங்காங்கைப் பயன்கொள்வது அதனால்தான். அதன் சட்டங்கள் தெளிவாகவும், வசதிக்கேற்றாற் போல் வளைக்க முடியாதததாகவும் இருக்கின்றன.

ஹாங்காங்கின் இயல்பு வாழ்க்கையில் இந்த மாட்சிமை ஊடாடிக்கொண்டே இருக்கக் காணலாம். இங்கு ஜி.எஸ்.டி கிடையாது. வருமான வரி குறைவானது. வரிப்பணத்தை மாநில அரசே வசூலிக்கும், அதுவே பயன்படுத்தும். இக்கட்டான காலங்களில் ஒன்றிய அரசு உதவும்.

ஹாங்காங் அரசின் நிர்வாக அலகுகள் மக்களுக்குப் பணியாற்றுவதையே தங்கள் இலக்காகக் கொண்டு இயங்குகின்றன. வங்கியில் போய் வரிசையில் நின்றால், ஊழியர் ஒருவர் உங்களிடம் வருவார். நீங்கள் கவுண்டரை அடையும் முன்பு உங்களது படிவங்கள் முறையாக நிரப்பப்படிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வார். தேவைப்பட்டால் அவரே நிரப்பித் தருவார். படிவங்கள் இருமொழியில்- சீனத்திலும் ஆங்கிலத்திலும்- இருக்கும். ‘வாடிக்கையாளர்தான் எம் எஜமானர்’ என்று நம்மூரில் சில இடங்களில் எழுதி வைத்திருப்பார்கள். ஹாங்காங்கில் அப்படி எழுதி அறிவிப்பதில்லை. அது நடைமுறையில் இருக்கிறது. அதை வாடிக்கையாளரால் உணர முடியும்.

கட்டுமானம் பலமானது

ஹாங்காங் கட்டுமானங்கள் சிலவற்றில் பணியாற்றுகிற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஹாங்காங் அடுக்ககங்களால் ஆனது. நகரத்தின் குடிமக்கள் அனைவரும் அடுக்ககங்களில்தான் வசிக்கிறார்கள். ஆகவே அடுக்ககங்களின் பாதுகாப்பு என்பது அதில் குடியிருக்கும் மக்களின் பாதுகாப்பும்தான். அவை நல்ல தரத்திலும் போதுமான பாதுகாப்போடும் கட்டப்படுகின்றன. இதற்கு விரிவான விதிமுறைகளும் அவை சமரசமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதும் காரணங்கள்.

ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் விரிவான வரைபடங்களை அரசின் கட்டடத் துறைக்குச் (Buildings Department) சமர்ப்பிக்க வேண்டும்.  தளங்கள், உத்திரங்கள், தூண்கள், அடித்தளங்கள் என கட்டுமானத்தின் அனைத்து உறுப்புகளின் படங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒரு மூன்று மாடிக் கட்டடத்திற்கு 250 வரைபடங்கள் வரைய வேண்டி வரும். அவை ஒவ்வொன்றும் கட்டடத் துறையால் சரி பார்க்கப்படும். கட்டுமானம் பல கட்டங்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு கட்டம் முடிந்த பிறகும் அரசின் ஒப்புதல் பெற வேண்டும். எனினும் எல்லாம் குறித்த காலத்தில் நடக்கும்.

நமது நாட்டில் ஒரு கருத்து பரவலாக உலவுகிறது. ‘விதிமுறைகள் அதிகமிருந்தால் அவை தாமதத்திற்கும் ஊழலுக்கும் வழி கோலும்’. அரசுத் துறைகள், அவ்வப்போது சட்டங்களைக் குறைப்பதற்கும் எளிதாக்குவதற்கும் இதைத்தான் காரணங்களாகச் சொல்லும். இதுவே, ‘எளிதாகத் தொழில் செய்ய ஏது செய்வது’ (ease of doing business) எனப்படுகிறது. எனது ஹாங்காங் அனுபவம் எதிர்த் திசையைக் கை காட்டுகிறது. சட்டங்கள் தெளிவாகவும், அதை நிறைவேற்றுகிற பொறுப்பில் உள்ளவர்கள் ஆற்றலும் நேர்மையும் மிக்கவர்களாகவும் இருந்தால், அதிகமான விதிகள் ஒரு பிரச்சனையே அல்ல. ஹாங்காங்கில் இப்போது சுமார் 9000 அடுக்ககங்கள் இருக்கின்றன. இதில் சரிபாதி 300 அடிக்கு மேல் உயரமானவை. இந்தக் கட்டுமானங்கள் அனைத்தும் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் கட்டப்பட்டவை. அவை குறித்து யாருக்கும் புகார் இல்லை. அந்த விதிகள் கட்டுமானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன.

கைத்தலம் பற்றாது கையூட்டு

ஹாங்காங்கில் நிலவும் சட்டத்தின் மாட்சிமையின் இன்னொரு நிரூபணம் அங்கு கையூட்டும் ஊழலும் சகித்துக்கொள்ளப்படுவதில்லை. ஊழல் ஆணையம் (Independent Commission Against Corruption- ICAC) சுயேச்சையானது. அது கண்கொத்திப் பாம்பாய் கவனித்துக்கொண்டிருக்கும். 2015இல் ஆணையம் டொனால்ட் சங் மீது வழக்குத் தொடுத்தது. அவர் 2005 முதல் 2012 வரை ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவராக (CEO, முதல்வருக்கு இணையான பதவி) இருந்தவர். ஓய்வு பெற்ற பின் வசிப்பதற்காகத் தனது பதவிக் காலத்தில் ஆடம்பர அடுக்ககம் ஒன்றை வாங்கினார் சங். அதை அரசிடம் தெரிவிக்கவில்லை. அதைக் கட்டிய தொழிலதிபருக்குத் தனது பதவிக் காலத்தில் வானொலி உரிமம் ஒன்றையும் வழங்கினார். நீதிமன்றம் அவருக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதித்தது. ஆணையத்தின் முன் அனைவரும் சமம், நீதியரசர்களும் விலக்கல்ல.

தில்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட சமீபத்திய வழக்கொன்று இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. ‘உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மீது கையூட்டு வழக்குத் தொடுக்கலாமா?’ இந்தக் கேள்வி முதலில் லோக்பாலிடத்தில் வந்தது. ‘நீதியரசர்கள் அரசு ஊழியர்களே, ஆகவே விசாரிக்கலாம்’ என்று தீர்ப்புரைத்தது லோக்பால். உடனே உச்ச நீதிமன்றம் இதைத் தானே ஒரு வழக்காக எடுத்துக்கொண்டது. விசாரித்தது. லோக்பாலின் தீர்ப்பை இடை நிறுத்தியது. ஏன்? அவர்கள் சொன்னது: நீதியரசர்களை விசாரித்தால், அது நீதித்துறையின் தற்சார்பைப் பாதிக்கும். சொல்லாதது:  அவர்கள் நீதிக்கு அரசர்கள், ஆகவே சட்டத்திற்கு மேலானவர்கள்.

மக்கள் மதிக்கும் சட்டம்

மைக்கேல் சுகானி ஹாங்காங் ஊடகவியலாளர். இந்திய வம்சாவளியினர். அவர் இப்படிச் சொன்னார்: “சட்டத்தின் மாட்சிமை குடிமக்களைப் பாதுகாக்கும். அதே வேளையில் மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டும்.” ஹாங்காங் மக்கள் சட்டத்தை எப்படி மதிக்கிறார்கள்?

மக்கள் கூடுகிற இடங்களில், பேருந்து நிறுத்தங்களில், வங்கிகளில், அங்காடிகளில், அஞ்சல் நிலையங்களில், சில பிரபலமான உணவுக்கூடங்களில், ஒரு சேவையைப் பெற ஒன்றுக்கு மேற்பட்டவர் நிற்கும் எந்த இடத்திலும், வரிசை இருக்கும். யாரும் யாரையும் நெரிப்பதில்லை. யாரும் எந்த சிபாரிசையும் நாடுவதில்லை. சாமர்த்தியமாக வரிசையை முறிப்பதோ, அதில் பெருமை பீற்றுவதோ இல்லை. சிறப்புக் கட்டண தரிசனங்கள் இல்லை.

மற்ற பல மேலை நாடுகளைப் போலவே ஹாங்காங்கிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்கள் இருப்பதில்லை. யாரும் சாலை விதிகளை மீறுவதில்லை.

மக்கள் சட்டங்களை மதிக்கும் பாங்கை இரண்டு எடுத்துக்காட்டுகளால் பார்க்கலாம். நாய் வளர்ப்பவர்கள் மாலை நேரங்களில் அவற்றை நடத்திக்கொண்டு போவார்கள். அப்போது அவர்கள் கைகளில் கொத்தனார்கள் பயன்படுத்துவது போன்ற கரண்டியும் பழைய செய்தித்தாள்களும், தண்ணீர்ப் போத்தலும் இருக்கும். நாய்க் கழிவுகளை உடன் அப்புறப்படுத்த  வேண்டுமென்பது சட்டம். யாரும் கழிவுகளை வீதியில் விட்டுப்போக மாட்டார்கள்.

சென்னையில் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் வசிக்கும் பகுதிகளில் காலை நேரம் நடைப்பயிற்சிக்கு நாயை அழைத்துச் செல்வோரைப் பார்க்கலாம். ஆனால் தத்தமது நாய்க் கழிவுகளை அவர்கள் தீண்டமாட்டார்கள். அது அவர்கள் வேலையல்ல. அவர்கள் கனவான்கள். சட்டத்தின் முன்னும் சமூகத்தின் முன்னும் உயர்ந்த பீடங்களில் இருப்பவர்கள்.

அடுத்து, இரண்டாவது எடுத்துக்காட்டு. நான் ஹாங்காங் போன புதிதில் நடந்தது. புறநகர் ஒன்றில் உள்ள கட்டடப் பணித்தலத்துக்கு உடன் பணியாற்றும் இளைஞர் என்னை அழைத்துச் சென்றார். மெட்ரோ ரயிலிலிருந்து இலகு ரயிலில் மாறிச் செல்ல வேண்டும். இலகு ரயில் புறநகர்களில் மட்டும் ஓடும், இரண்டு பெட்டிகள் மட்டுமே இருக்கும். தண்டவாளங்களும் நடைமேடையும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல பொது வெளியோ (concourse) கட்டணக் கதவுகளோ இராது. பயணச்சீட்டு வாங்க சிறிய இயந்திரம் இருக்கும். சீட்டு இல்லாமலும் ரயிலில் ஏற முடியும், இறங்கவும் முடியும். நான் அந்தப் பணித்தலத்துக்குப் போகும் போதும் திரும்பி வரும்போதும் கவனித்துக்கொண்டே இருந்தேன்.  சீட்டு இல்லாமல் யாரும் பயணிக்கவில்லை. உடன் வந்த இளைஞரிடம் “இது உங்களுக்கு எப்படிச் சாத்தியமானது?” என்று கேட்டேன். “நாங்கள் இதைப் பள்ளிகளில் சொல்லிக் கொடுத்துவிடுவோம்” என்று அவர் பதிலளித்தார். அவர் சொன்னதன் பொருள், ‘சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதை எம் பள்ளிகளில் பயிற்றுவிக்கிறோம்’ என்பது.

பிற்பாடு இதை நானும் அறிந்துகொண்டேன். ஆண்டு 1998ஆக இருக்கலாம். விடுமுறையில் குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தோம். மகனை ஒரு நண்பரின் கடைக்கு அழைத்துச் சென்றேன். அவன் அப்போது ஹாங்காங்கில் யூ.கே.ஜி படித்துக்கொண்டிருந்தான். நண்பர் அவனுக்கு ஒரு மிட்டாய் கொடுத்தார். அது ஒரு கண்ணாடிக் காகிதத்தில் பொதிந்திருந்தது. இவன் ஆர்வமாக உரித்து மிட்டாயை வாய்க்குள் போட்டுக்கொண்டான். அடுத்து, அந்தக் காகிதத்தைப் போடுவதற்கு ஒரு குப்பைத் தொட்டியை அவன் கண்கள் தேடியிருக்கின்றன. உரையாடலின் சுவாரசியத்தில் நான் கவனிக்கவில்லை. நண்பர் கவனித்துவிட்டார். அவர் சொன்னார்: “தம்பி, இது ஒங்க ஊரு இல்ல. நாங்க குப்பத் தொட்டியெல்லாம் வெச்சுக்கறதில்லை.” நண்பர் இப்போது சாலையை நோக்கிக் கை காட்டியபடி தொடர்ந்து சொன்னார்: “இதுதான் எங்க குப்பத் தொட்டி, பெரிய குப்பத் தொட்டி, எங்க வேணும்னாலும் போடலாம்.” சொல்லிவிட்டுச் சிரித்தார். நண்பர் கடை முதலாளி. ஆகவே அவரது நகைச்சுவைக்கு ஊழியர்களும் சிரித்தனர். அவர்களும் அந்தக் காகிதத்தைத் தெருவில் போடச் சொல்லி அவனை ஊக்குவித்தனர். இந்த அறிவுரையும் பகடியும் அவனுக்கு முழுதும் புரிந்திருக்காது. ஆனால் குப்பையைப் பொது இடங்களில் போடலாகாது என்பது அவனது சின்ன மூளையில் திருகி ஏற்றப்பட்டிருந்தது. அவன் அந்தக் காகிதத்தை மடித்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டான்.

இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இன்னொரு சம்பவமும் சுவாரசியமானது. சூப்பர் ஸ்டாரின் படம் ஒன்று ஹாங்காங் வந்தது. முதல் காட்சி. நாயகனின் பிரவேசம். சென்னை விமான நிலையம். நாயகன் வெளிநாட்டில் இருந்து திரும்புகிறான். மின் ஏணியில் உற்சாகமாக இறங்குகிறான். சூயிங்-கம் ஒன்றை அலட்சியமாக வாய்க்குள் போட்டுக்கொண்டு, அதைப் பொதிந்திருந்த காகிதத்தைக் கசக்கி வீசி எறிகிறான்- ஸ்டைலாக. அரங்கத்தில் இருந்த சிறுவர் பலர் ஒரே நேரத்தில் littering என்று கத்தினார்கள். பொறுப்பான தமிழ்ப் பெற்றோர் பிள்ளைகளை அடக்கினார்கள்.

நிறையாத கோப்பை- ஜனநாயகம்

ஹாங்காங்கைப் பற்றிப் பேசுகிற போது அதன் ஜனநாயகத்தைப் பற்றியும் பேசியாக வேண்டும். ஹாங்காங்கின் ஜனநாயகம் முழுமையானதல்ல. அதன் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் செயலாட்சித் தலைவரை ஓர் உயர்நிலைக் குழு தேர்ந்தெடுக்கிறது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பலரும் பெய்ஜிங் ஆதரவாவர்கள். செயலாட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர். 

செயலாட்சித் தலைவரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற போராட்டம் 2014இலும் மீண்டும் 2019இலும் நடந்தது. இரண்டாவது போராட்டம் ஆறு மாதங்களுக்கு மேல் நீண்டது. ஆனால் கொரோனாவால் முடிவுக்கு வந்தது. 2020இல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தைக் கொணர்ந்தது ஒன்றிய அரசு. அதன் விதிமுறைகள் கடுமையானவை. இப்போது ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு சக்திகள் பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கின்றன.

World Justice Project (WJP) என்கிற அமைப்பு  சுமார் 140 நாடுகளில் பேணப்படும் சட்டத்தின் மாட்சிமையை ஆண்டுதோறும் மதிப்பிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் 2019க்கு முன்பு  ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 14ஆம் இடத்தில் இருந்த ஹாங்காங், 2019க்குப் பிறகு 23ஆம் இடத்திற்கு வந்துவிட்டது (இந்தியா- 79, சிங்கப்பூர்-17). ஹாங்காங் மக்கள் அரசியல் வேட்கையுள்ளவர்கள், பரந்துபட்ட ஜனநாயகத்தை அவர்கள் மீட்டெடுப்பார்கள் என்கிற நம்பிக்கை ஆர்வலர்கள் மத்தியில் இருக்கிறது. ஹாங்காங்கின் ஜனநாயகம் நிரம்பாத கோப்பையாக இருந்தாலும் அதன் அரசும் மக்களும் சட்டத்தின் மாட்சிமையைப் பேணுகிறார்கள்.

நாமும் சட்டமும் மாட்சிமையும்

தர்மேந்திர பிரதான் rule of law என்கிற தொடரை அது இந்த நாட்டின் சட்டம் என்கிற பொருளில்தான் பயன்படுத்தியிருக்கிறார். சட்டத்தின் மாட்சிமை என்கிற பொருளில் அல்ல. தனது Rule of Law நூலில் தாமஸ் பிங்ஹாம் சொல்கிறார்:  ‘அமைச்சர்களும் அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்தை நல்ல நோக்கத்துடனும் நியாயமாகவும் பயன்படுத்த வேண்டும்; வரம்பு மீறல் கூடாது. அனைத்துத் தரப்பினரின் உரிமைகளையும் சட்டம் பாதுகாக்க வேண்டும்’.

ஒன்றிய அமைச்சர் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் கருத்தில்கொண்டு அரசமைப்புச் சட்டம் அவருக்கு அளித்திருக்கும் அதிகாரத்தை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்த வேண்டும். அதுவே சட்டத்தின் மாட்சிமையைப் பேணுவதாகும். எல்லா அமைச்சர்களும் அதிகாரிகளும் அதைச் செய்ய வேண்டும். நீதிமன்றங்களும் அதை நிறைவேற்ற வேண்டும். நமது சட்டங்கள் எல்லோரது நலனுக்கானதாகவும் இருக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நடப்பில் வர வேண்டும். மக்களாகிய நாமும் சட்டத்தை மதிக்க வேண்டும். அப்போது ஹாங்காங்கையும் சிங்கப்பூரையும் மேலை நாடுகளையும் பார்த்து நாம் காதில் புகைவிட வேண்டியிராது.

தொடரும்….

Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. காகிதத்தை பொது வெளியில் எறிந்தவுடன் littering என்று சிறுவர்கள் கத்தினர்களே, அசந்தே போய் விட்டேன்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button