தன் வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டு என்னை அழைக்கும் அந்த ஆமைக்கு ‘வீட்டைப் பூட்டி விட்டு வருகிறேன்’ என்று சொல்வது எவ்வளவு பெரிய கேளிக்கையாக இருக்கும்? அதன் அழைப்பு இதுவரை வாடிக்கையாகவே இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் அதன் நடைக்குப் பழக்கப்பட்டு விட்டேன். அது அழைத்துப் போகும் இடங்களுக்கு தாராளமாகச் சென்று வந்து கொண்டிருந்த காலமாக அதை எடுத்துக் கொள்ளலாம். இதுவரை என் இல்லத்தில், கணக்கில் உள்ளதாக சுமார் நாற்பது உயிரினங்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.
அப்படியிருக்க இங்கிருக்கும் ஒவ்வொன்றின் பெயரில் தொடங்கி அதன் வடிவம், நிறம், குரல், மொழி என நீண்டு கொண்டே போகும் பட்டியலில் இப்போது என் பெயரையும் இடையில் சேர்த்துக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறேன். அது மிகப் பெரிய வன்முறை என்று தெரிந்தும் சிறிய சுயநலத்தின் காரணமாகவே அப்படி முறையிட நேர்ந்தது. அச்சுயநலத்தின் விதை மனித முகங்களிலிருந்து விடுபட்ட கணங்களிலிருந்து தொடங்கியதாகவே கருதுகிறேன். அது தன்னிச்சையாக நடந்த ஒன்றா? இல்லை அதற்குள் நான் இழுத்து வரப்பட்டேனா என்று யோசிக்கையில் என் எண்ணங்கள் முழுவதும் எங்கோ தன் நிலையிலிருந்து விடுபடுவதை உணர முடிந்தது. அது ஒரு பிறப்பை அங்கு இயல்பாக நிறுவிவிட்டு செல்லும். அத்தருணங்களுக்காகவே மீண்டும் மீண்டும் முடிந்தளவு இவை நழுவும் போதெல்லாம் என்னை முழுவதுமாக அதனோடு பிணைத்து முடிச்சிட்டு வந்திருக்கிறேன். அது நடக்கும் சமயங்களில் என்னை எங்ஙனம் மறைத்துக் கொள்ள அல்லது மீண்டு வர என்று நினைக்கும் நேரங்களில் உறுதுணையாக இருந்தது நான் எப்போதும் வணங்கும் எனது காளான்களையே. அதன் சிறிய வாழ்நாளில் எனக்கான பாதுகாப்பை அது வழங்கிட ஒரு போதும் தவறியதில்லை. எப்போதும் காளான் தனக்கான ஒளியை எப்படி எடுத்துக் கொண்டு வளர்கிறது என்பதைக் கொண்டு இங்கு மிகப் பெரிய சர்ச்சை இருக்கிறது. பசுமைத் தாவரங்களில் அதைச் சேர்த்தாலும் ஒரு துளி பச்சை இல்லாத ஒன்றாகத் தன்னை வரித்துக் கொள்ளுதல் எப்படி என்கிற கூற்றிற்கு ‘வாழ்தலில் இருக்கக் கூடிய சாத்தியத்தை எப்போதும் நிலை நிறுத்துவதாகவே’ அறிந்து வைத்திருக்கிறேன். தனக்கான சக்தியை உயிரற்றதிலிருந்தும் எடுத்துக் கொள்ளுதல் எப்போதும் ஆச்சரியத்தையே கொடுத்திருக்கிறது. ஆதலால் அதற்கே என் பட்டியலில் முதல் இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படியேனும் இப்பட்டியலில் இன்னும் இன்னும் என்று பல உயிரினங்களை அழைத்திட என்னால் முடிந்த அளவு முயன்று கொண்டே வருகிறேன். அதற்காக முழுமுதலாக என்னை ஒப்புக்கொடுத்து விட்டதாகப் பேச்சுக்கள் எழும் போதெல்லாம் மனதில் தானாக ஒரு கிறுக்கல் நிகழ்ந்து விடும். அதை அழிக்கப் போராடும் நேரத்தின் விலையை யாரிடம் சென்று வாங்குவது என்று தெரியாது விழித்துக் கொண்டே இருக்கிறேன். அந்நேரங்களில் தாராளமாகக் கல்லடிபடுவது நிஜம்தான். ஜன்னலின் வழியே பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். சிறிய கல் அவ்வளவு கச்சிதமாக அப்பழத்தினை தனதாக்கிக் கொண்டது. யாரும் வீட்டில் இருப்பதாக தெரியவில்லை என்று உள்ளே குதித்த சிறுவன் அதை எடுக்கச் செல்லும் போது எப்படி என்னைக் கடக்காமல் இருக்க முடியும்? என்னைப் பார்த்த மறுகணத்தில் உளறும் வார்த்தைகளின் பொருளை அவனின் உடல் மொழி நன்கு வெளிப்படுத்தியது.
’ஒரு பழம்’ என்று கூறி முடித்தவனிடம், சிறிய அமைதிக்குப் பின் ‘ நாளை இங்கு வந்து இங்குள்ள அனைவரிடமும் அறிமுகமாகிய பின் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறிய எனக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்றான். பல நாட்களுக்குப் பிறகு ஒரு மனித முகத்தைக் காணும் போது ஒரு வித அந்நியத் தன்மை கூடியிருப்பதாக எண்ணினேன். அம்முகத்தின் கோணங்கள் யாவையும் மறக்க முயன்றும் மீண்டும் மீண்டும் அதை நினைவுபடுத்தி கொண்டே இருக்க அப்பழம் விழுந்த இடத்திற்குத் தானாகக் கால்கள் சென்று முடிந்தது. அது இப்போது விதையாக மாறியிருந்தது. அதைக் கொறித்த தடயங்களை வைத்துப் பார்க்கையில் என்னால் யாரது என்று சரியாகக் கணிக்க முடிந்தது.
‘நாளை அவன் வந்தால்? என்ன செய்ய‘ எதற்கும் அதைப் பத்திரமாக எடுத்து வந்து எனது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க முற்பட்டேன். விளக்குகள் அணைக்கப்பட்டது.
அப்பெரும் இருட்டில் எப்போதும் எனது தாயைப் பற்றிக்கொண்ட நெருப்பை என்னால் காண முடியும். அதன் எண்ணம் என்னுடைய தாயை அழிப்பதாகவே இருந்தது. அது சிறு கருணை கூட காட்டவில்லை என்கிற கோபம் என்னுள் பல நாட்களாக இருந்தது. கருணையைத் தாண்டி என்னுடைய பார்வையில் அவ்வளவு கொடூரமாகவா தன்னை நிலைநிறுத்தி, எதை நிரூபித்துக் கொள்ள என்று அக்கணம் என்னைச் சீண்டியது. ஓடிப்போய் எனக்கு எட்டும் உயரத்திலிருந்த அவளின் மரணத்தைப் பிடிக்க முயன்று தோற்றுப் போனேன். அவளின் அந்த நடனம் அவள் எப்போதுமிடும் எண்ணிக்கையற்ற கோலங்களின் வளைவுகளாகவும், புள்ளிகளாகவுமே என்னுள் இடம் பெற்றிருந்தது. அம்மா எப்போதும் இடும் கோலங்களை வேடிக்கை பார்க்கும் ஒருத்தி அதில் இருக்கக் கூடிய எண்ணற்ற வடிவங்கள் அனைத்தும் அவள் வெளிப்படுத்தும் எண்ணங்களாகவே எப்போதும் எனக்குச் சொல்லுவாள். அதில் அம்மா தன்னை நிலைநிறுத்திக் கொண்டது கிடையாது. அடுத்த நாள் அது இன்னொரு வடிவம் பெரும். பெரும் மழை தானிட்ட கோலங்களை அழிப்பதை எந்த வித எதிர்ப்பும் இன்றி பார்ப்பாள். நாளை வேறொன்றை இட அவளுக்கு எந்த சலிப்பும் இருந்ததில்லை என்பதே உண்மை. அதில் மட்டுமின்றி ஒவ்வொரு அசைவிலும் எண்ணங்களைப் பார்க்கக் கற்றுக்கொண்டதின் ஆரம்பப் புள்ளியாகவே அது அமைந்தது. என்னைச் சுற்றி இருந்த அனைவரிடத்திலும் அதை கவனிக்க தொடங்கியிருந்தேன்.
அப்படி ஓர் தீப நாளில் நடந்தேறிய ஒன்றை அவள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுவிட்டதாகவே பட்டது. அவளின் இறுதி தருணங்கள் அவ்வளவு எளிதில் நிறைவு பெற்றது. அதற்கு பிறகான காலங்களில் எங்கோ அலைந்து திரிந்து நானும் எனது தந்தையும் இங்கு வந்து சேர்ந்திருந்தோம். ஏனோ என் தந்தைக்கு வேலையின் பளு அம்மாவை இயல்பாக மறக்கடித்தது போன்ற பாவனையிலிருந்தார். ஆனால், என்னால் அவ்வளவு எளிதில் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. தினம் அவள் இடும் கோலங்களை நினைவு கூர்ந்து அவள் சொல்ல முற்பட்டதைக் கணித்துக் கணித்து சோர்ந்து போய்க் கொண்டே இருந்தேன். மேலும், அது என் தந்தையைப் பாதிப்புக்குள்ளாக்கியது என்பதே சாரம். பல நாள் எங்கள் வீட்டில் நெருப்பு உள் நுழையாது இருந்த காரணத்தினால் தந்தைக்கு உடல் ரீதியாக நிறையச் சிரமங்களையும் சந்திக்க நேர்ந்தது. நெருப்பின் உருவம் இருக்கும் இடங்கள் எல்லாம் என்னை மேலும் மேலும் பெரும் அமைதியற்ற தன்மைக்குள் கொண்டு சென்று கொண்டேயிருந்தது. மூப்பின் மரணத்தை விபத்து கேலி செய்து கொண்டே இருந்தது. அதிலிருந்து மீண்டு வருவதென்பது இயல்பு என்று பாசாங்கிட்ட தந்தை மரணித்துப் போனார். அதற்குப் பிறகு எவ்வளவோ மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் எனப் பல விதத்தில் பலர் என்னை ஆற்றுப்படுத்த முயன்ற காலங்களில் அவர்களைப் பலவாறு காயப்படுத்தியிருக்கிறேன். ஏனோ விடாது துரத்திக் கொண்டிருந்த நெருப்பை அணைக்க எப்போதும் துணையாகத் தண்ணீரை அழைத்துக் கொள்ளக் கூடிய காலம் வந்தது. அப்போது என்னைச் சுற்றி இருந்த அனைவராலும் ‘பைத்தியம்’ என்று கைவிடப்பட்டேன். அதன் நன்மை மேலும் என்னைத் தண்ணீரில் மூழ்கடிக்கப் பார்த்தது. அதில் ஆனந்தமாக சில காலங்கள் வாழ்ந்து வந்தேன். எந்த வித பயமோ, தொந்தரவோ இன்றி தன்னளவில் மகிழ்வுற்றிருந்த என்னை எவரும் கண்டுகொள்ளாத தனிமை மேலும் குதுகலிக்க வைத்தது. ஆனால், அது அவ்வளவு நாள் நீடித்திருக்கவில்லை மூச்சு முட்டப் பழைய எண்ணங்கள் முளை விடத் தொடங்கியது. தண்ணீர் நெருப்பாகக் கலங்க என்னால் முடிந்த அளவு முயன்று தோற்றுக் கொண்டே இருந்தேன். மூச்சு முட்டி எழும்பி வரும்போதெல்லாம் அடுத்த வளைவில் அம்மா வைத்திருக்கும் ஆச்சரியங்கள், பயங்கள், வெறுமை என அனைத்திலும் தடுமாறி அவளின் எண்ணங்களை அறிந்திடாது வேடிக்கை பார்க்கும் சிறுமியான என்னைப் பார்த்துச் சிரித்தவள் மீண்டும் ஒருமுறை எரியக் கூடாது என்று வேண்டாத இடங்கள் இல்லை. அவ்வில்லத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன் நாங்கள் வாழ்ந்த இடத்தில் என் பார்வைக்கு அகப்பட்ட கோணங்கள் அனைத்தின் வழியாகவும் அதை அழிக்க முயன்று கொண்டே இருந்தேன். ஆனால் இன்று வரை அதை முயன்று கொண்டு தான் இருக்கிறேன். அனைத்தையும் நிலை நிறுத்த முற்பட்டு மண்ணாகிய தந்தையையும், தான் படைத்தவை கண் முன் எரிந்து போனாலும் எந்த வித சலனமும் இல்லாதவளின் மகள். அதன் படியே தினமும் தண்ணீரையும், மண்ணையும் தொடாத நாள் இருக்கக் கூடாது என்கிற நினைப்பின் படி எனது அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்தேன். என்னைச் சுற்றி மிகப்பெரிய வனத்தை உருவாக்கத் தொடங்கினேன். அதில் எப்போதும் சுதந்திரமாக அலைய வேண்டி சில வரைமுறைகளையும் வகுத்துக் கொண்டேன். ஆரம்பத்தில் என்னை சுற்றியான வனம் இப்போது என்னோடு இணைந்து வளரத் தொடங்கியிருந்தவை எங்கோ தனக்கான ஒளியினை உருவாக்கத் தொடங்கியிருந்தது.
காலை விழிக்கையில் என் இல்லத்தில் புதிதாக ஒரு உயிரினம் நடமாடுவதை என்னால் உணர முடிந்தது. அதன் அசைவுகள் கொண்ட யாவையும் என்னால் நன்றாகக் கணிக்க முடிந்தது. இதற்கு முன் சிறிதும் பழக்கப் படாத தன் உடலை நெளித்து வளைக்கும் போது ஏற்படும் அந்நிய ஓசைகளை அவ்வுடல் வெளிப்படுத்த தவறவில்லை. ஆனால், அதில் இருக்கக் கூடிய அசவுகரியத்தைத் தாண்டி தன் செயலில் முழுவதுமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. முக்கியமாக அவ்வுயிரினத்தின் வருகை இங்கு யாரையும் அச்சுறுத்தவோ அல்லது கேலிக்குள்ளாகவோ இல்லை; அவைகள் அனைத்தும் அவனது செயலில் தெரியக் கூடிய உண்மையை அறிந்திருப்பது அவர்களின் பண்பு. அதுமட்டுமில்லாது என்னைப் போல அவைகளுக்கும் முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தது. கண்டிப்பாக இதில் என்ன சந்தேகம் ‘அச்சிறுவனே’ தான்.
என் வருகைக்காக காத்திராது உதிர்ந்திருந்த இலைகளைத் தனதாக்கிக் கொண்டு அதனை அம்மரத்தின் அனுமதியோடு அகற்றியிருந்தான். அளவுக்கு அதிகமாக எல்லா மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது, உதிர்ந்திருந்த பூக்களோடு அனைத்து பூக்களையும் செடிகளிடமிருந்து களவாடி பறவைகளுக்குத் தண்ணீர் நிரப்பும் குடுவையில் நிரப்பியிருந்தான். இப்படி எண்ணற்ற பணிகளை என் நிலத்தில் வன்முறையாகவே நிகழ்த்தியது போல இருந்தது. என்னைக் கண்டதும் அந்நியனின் நகர்வைப் போன்று ஓர் அடி பின் நகர்ந்து ‘நான் நிகழ்த்திவிட்டேன்’ என்கிற பாவனையில் அண்டினான்.
என்னிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்குக்காக்கக் காத்திருந்த அவனுக்கு முதலில் என் நிலத்தில் இருப்பவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்து அவனை அழைத்து வந்து என் காளான் முன் நிறுத்தினேன். நான் கையெடுத்துக் கும்பிட்டதைப் பார்த்தவன் அவனும் அதைத் திருப்பி செய்தது சிரிப்பை ஏற்படுத்தியது. ஏனென்று தெரியாது இந்த வெள்ளந்தியான வணக்கம் அவனை மேலும் எங்கள் வாழ்விடத்தில் இளைப்பாற அனுமதி வழங்கியது.
“நேத்து நடந்ததுக்குச் சாரி மேம்…” என்று தடுமாற்றத்துடன் கூறினான். அதற்கு அவன் எதிர்பார்க்கும் பதிலை அவன் இங்கு வந்த அடுத்த கணமே பெற்றுவிட்டான் என்பதைத் தெரியாதவனாக என்னை மீண்டும் அணுகியது ஒரு வித ஈர்ப்பை வழங்கியது. உரையாடலுக்கு ஏற்ற செவிகளை அவன் வைத்திருப்பது அவனுக்கான பலமாக கூட இருக்கலாம்.
“இங்க மறுபடியும் வரணும்னு எப்படி தோணுச்சு…?” என்று கேட்ட எனக்கு அவன் சொல்ல நினைத்துத் தடுமாறி பின் அதை ஒழுங்காகக் கூற முடியாது திணறும் எண்ணற்ற முறை அவ்விடயங்களிலிருந்திருக்கிறேன். அதன் சாரத்தின் நிலம் எதை விளைவிக்கக் கூடியது என்பதை நன்கு அறிந்தவளாக அவனிடத்தில் ஒன்றைக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் இங்கு வந்து நின்றிருப்பது போதும்; மற்றவற்றை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
“இப்போதான் முத தடவ மண்ணை வெட்டுறியோ..?” என்று கேட்ட மறுநொடி இதுவரை திணறிய வாய் தெளிவாக எனது பேச்சினை அறிந்து கொண்டது போல, “இப்போதான் மேம் மம்பட்டியவே புடிக்கிறேன்.. எந்தப் பக்கம் வச்சு வெட்டுரதுனே தெரில.. எல்லாத்தையும் பாத்ருக்கேன், தெரியும். ஆனா, இப்போதான் செய்யறேன்” என்று சிரித்தது மட்டும் இல்லாமல் அடுத்து எதையோ பேச வந்து நிறுத்திக் கொண்டான். அது எதுவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்பும் முன் அவன் பள்ளி சீருடையில் இருப்பது புரிந்தது. சுமார் என்னை விட நாற்பது வயது இளையவனாக இருக்கலாம். அவனது செயல், பேச்சு என அனைத்தும் அந்நியப்பட்ட என்னிடம் மீண்டும் ஒரு முறை இப்படி வந்து நிற்பது எதைக் குறிக்கிறது என்று தெரியாது. நான் தான் நேற்று மிகக் கடுமையாக நடந்து கொண்டது போலத் தோன்றியது.
“ஸ்கூல் போகணும்ல …”
“பக்கம் தான் மேம் …சீக்கிரம் போயர்லாம்..” என்ற பதில் எங்கள் அனைவரிடம் பழகி விட்ட ஒன்றின் வெளிப்பாடாகவே இருந்தது.
நான் அவனை அங்கு இருக்கச் சொல்லி விட்டு நேற்று அவன் அடித்த பழத்தினை எடுத்து வந்தேன். அது அவன் நினைத்ததாக இப்போது இல்லை என்று அறிந்து கொண்டவன் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டான். அதற்கடுத்தான செயலை நன்கு அறிந்திருந்தவன் போல பத்திரமாக எடுத்து தனது பள்ளிப் பையில் வைத்தவன் மீண்டும் இங்கு வருவதாகச் சொன்னான். அதற்கு எந்த மறுப்பும் இங்கு இருப்பவர்கள் யாரும் தெரியப்படுத்தப் போவது இல்லை. நீட்டிய எனது கைகள் நெருப்பில் அமிழ்ந்து கருகி இருப்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ள மறைமுகமாக அல்லது திருட்டுத்தனமாகப் பார்த்தான். அவ்விதையிடம் பின்னர் அதைக் குறித்து சிறிய உரையாடலை நிகழ்த்தலாம்.