
பயணியின் குரல்
ஒரு ரயில் பிரயாணியாகக் கேட்கிறேன்
ரயில் பயணம் என்றால் என்ன பிதாவே?
பசித்த வயிறோடு புல்லாங்குழலில் நுழையும் காற்று
நெளிந்த காலுடையோளின் யாசகக் குரல்
காதுகளால் பார்ப்போரின் குச்சி சத்தம்
அதிகாலையில் சமைத்த சாம்பாரின் மணம்
காதலர்களின் திருட்டு முத்தங்கள்
எல்லாவற்றுக்கும் உச்சமாக
எந்த நிறுத்தத்தில் இறங்குவதெனத் தெரியாது
பயணிக்கும் என்னைப் போன்றோர் சக பயணி.
****
யாருமற்ற இரவு ரயிலில்
எதையோ விட்டுச் சென்ற
ஏதோ ஒருவனின் அவலக்குரல்
எனக்கு மட்டுந்தான் கேட்கிறதா?
பால்யத்தில் தண்டவாளத்தால்
பிழியப்பட்ட காலோடு யாசகம் கேட்கும்
ஒருத்தியை எனக்குத் தெரியும்
அவளுக்கு வயதுக்கு வந்ததே தெரியாதாம்
குருதி ஒழுகும்போதெல்லாம்
சக்தியின் குங்குமம் என்று கடந்துவிடும்படி
யாரோ ஒருத்தி இவளுக்குச் சொல்லியிருக்க வேண்டும்
ஒழுகும் குருதியை எவ்வளவு அழகாக இழுத்துச் செல்கிறாள்!
****
ரயில் புல்லாங்குழலாய்
மனிதர்களின் சத்தத்தைக் கடத்துகிறது
காற்று வெளியேறும் அத்துளைகள்
வழியாக மனிதர்கள் சுவாசிக்கலாம்
இசை ரயிலெங்கும் மிதங்கிறது
மொழி கடந்து புது மொழிக்கு வருபவனின்
விம்மல் குரலை அங்கு நீங்கள் கேட்கலாம்
இருள் அப்பிக்கொள்ளும்போதெல்லாம்
சக மூச்சுகாற்றுகள் அரவணைத்துக் கொள்கின்றன.
புல்லாங்குழலாய் ரயிலின் ஜன்னல்களும்
புதுப் புது இசையால் மனதை அறுத்தெடுகின்றன.
******