பூலோகத்தில் எமதர்மன் இப்படி ஒரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை. கிழவி கேட்ட கேள்வியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருந்தது. சாகக்கூட முடியாத படைப்பாக தான் சிருஷ்டிக்கப்பட்டதன் இம்சையை அவர் இப்போது அனுபவிக்கிறார். சகல ஜீவராசிகளுக்கும் ஏன் ஜடப்பொருட்களுக்கும்கூட முடிவு நிச்ச்சயிக்கப்பட்டிருப்பது போல தனக்கும் வாய்த்திருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும் என்று எண்ணினார். அது சாத்தியமே இல்லை என்றெண்ணும்போது தன் மீதே அவருக்கு அர்த்தமற்ற சினம் கொந்தளித்தது!
‘ச்சே! என்ன பிறவி இது!.’
‘உன்னால என் உசிரெத்தானே எடுத்துக்கிட்டுப் போவ முடியும்? இந்த உடலைக்கூட தூக்கிட்டுப்போவ உனக்குத் தெறம இருக்கா? யோசிச்சிப் பாரு. ஒண்ண வேறயா மாத்த முடியும். உன்னால அழிக்க முடியுமா? அடியோட இல்லாம ஆக்க முடியுமா? அதெ உன்னப் படச்ச கடவுளாலேயே செய்ய முடியாதே. அப்பறமின்னா உனக்கு? பழசுன்னா அவ்வளவு கிள்ளுக்கீரென்னா நெனச்சே?’
அந்தக் கிழவி என்ன தெனாவெட்டாகப் பேசினாள்? ‘உன்னால வேறயா மாத்த முடியும், அழிக்க முடியுமா?’ என்கிற கேள்வி ஒரு தர்மதேவனை புண்படுத்தும் வண்ணம் கேட்கப்பட்ட கேள்வியாக, என் இயலாமையையும் சுட்டிக்காட்டி இழிவு செய்ததே? நான் இனி தர்மதேவனாக இருந்து என்ன புண்ணியம்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு பரலோகம் போவேன்?
என்னை நானே முழுமையாக அறியாத ஆளுமையாக இருக்கிறேனே. உடலை எடுத்துக் கொண்டு போகிற திறமை எனக்கு இல்லை என்று கேலி பண்ணிவிட்டாளே கிழவி. சாதாரண மானுடப் பிறவி, இறப்புக் கடவுளான என்னையே இழிவு செய்துவிட்டாளே! என்னைக் கேட்டாளே ஒரு கேள்வி.. ‘அடியோட இல்லாம ஆக்க முடியுமான்னு, என்ன படச்ச கடவுளாலகூட முடியாது’ என்று சொல்லி விட்டாளே! அப்படியென்றால் அவள் என்னை ஒரு முக்கியமான கடவுளா மதிக்கவே இல்ல! வெட்கக் கேடு!
போயும் போயும் ஒரு குடு குடு கிழவிக்கிட்ட தோற்று இப்படி குடுகுடுவென்று ஒடி வந்து விட்டோமே! இன்னும் கொஞ்ச நேரம் அங்கே நின்றிருந்தால் என்னவெல்லாம் பேசியிருப்பாளோ. இருக்கிற கொஞ்சநஞ்ச மானமும் கப்பலேறியிருக்குமே! கடவுள் என்று கூட பார்க்காமல் கெட்ட வார்த்தையெல்லாம் பேசியிருந்தால் என்னாவது? நல்ல வேளயா தப்பித்து வந்தோம். ஒரு கெட்ட வார்த்தையை நினைத்துப்பார்த்தார்.. காது கூசியது. கடவுள் மீது அல்ப மனுஷி பாவிக்கும் கெட்ட வார்த்தை எத்துணை கீழானது!
இந்நேரம் பேரேட்டில் கிழவியின் பெயரையும் மாண்டவர் பட்டியலில் சிவப்பு மையில் டிக் செய்திருப்பானே சித்ரகுப்தன்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது?
கூப்பிட்ட குரலுக்கு வந்து குனிந்து நின்று கட்டளைக்கு செவிமடுத்து காரியம் முடிக்கும் அவன் இனி என்னை மதிப்பானா? சரியாக பணிமுடிக்கும் சித்திரகுப்தன் ‘அண்ணன் எப்ப போவாரு திண்ண எப்ப காலியாகும்’ என்று காத்துக் கொண்டிருக்கிறான். இதான் சமயம் என்று மேலிடத்தில் போட்டுக்கொடுத்து என் பதவியையைப் பறித்துவிடக்கூட வாய்ப்பு உண்டு. அப்புறம் போய் என் சிம்மாசனத்துல கம்பீரமாக உட்காந்திடுவான். என் பிழைப்புக்கு மண்ணை வாரி நானே போட்டுக்கொண்டேனே!
என் அதிகாரத்துக்கு, என் கட்டளைக்கு அடுத்த நொடி, பயந்து நடுங்கிக் காரியமாற்றும் கிங்கரர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? ‘இவ்ளோதானா நீயி!: என்று தரம் குறைத்து நினைக்கவும் கூடும்!.
‘ஏன் ராஜா, நாங்க தவறு செஞ்சா மட்டும் பூமிக்கும் வானத்துக்கு குதிப்பீங்க, கெழவி உசிர கையோட கொண்டாராம இப்படி வெறுங்கையோட வந்து நிக்கிறீங்களே?’ என்று ஏளனமாக பேசட்டார்களா என்ன?
என் வரலாற்றுல ஒரு கேஸ கூட புடீச்சி வராம இல்லை. நான் நூத்துக்கு நூறு எசமான். இன்னிக்கி நான் போறேன்னு வீராப்பா போனீங்களே, அப்படி என்னாத்த புடுங்கியாந்தீங்க?” என்று முகத்தில் அறைந்தாற்போல சித்ரகுப்தன் கேட்டுவிட்டால் மூஞ்சை எங்கே வைத்துக்கொள்வது?
எமதர்மனுக்கு வாழ்வில் முதன்முறையாக வியர்த்துக் கொட்டியது. தன் கட்டளைகளுக்கு ‘ஆகட்டும் மகராஜா’ என்று அடிபணியும் அடிநிலை ஊழியர்கள் முன்னே எப்படி தலை நிமிர்ந்து நிற்பது? இவர்கள் முகத்திலும் முழிக்க வேண்டும் என்று நினைக்கும்தோறும் அச்சம் மேலோங்கிக்கொண்டே இருந்தது.,
அத்தருணத்தில் எமதர்மனின் வாகனம் ஒரு தும்மல் போட்டது. எமன் கிழவியோடு போராடிக்கொண்டிருந்தபோது பனியில் நின்றிருந்ததால் அதற்கு ஜலதோஷம் கண்டிருந்தது. அந்தரத்தில் பறக்கும்போது போட்ட தும்மலால் ஒரு குலுங்கு குலுங்கியது எம வாகனம். அதன் முதுகின் மீதமர்ந்து திமிலை ஆதரவாகப் பிடித்துக்கொண்டிருந்த எமதர்மனின் பிடிநழுவி கீழே விழப் பார்த்தார். நல்ல வேளையாகச் சுதாரித்துக் கொண்டார்.
‘அப்பாடா…..’ என்று பெருமூச்செறிந்து.. இந்த உயரத்திலிருந்து விழுந்திருந்தால் இந்நேரம் எலும்பு முறிவுகள் எண்ணி மாளாது. ‘என்னை நினைத்து உலகமே அஞ்சி நடுங்கும்போது நான் இதற்குப்போய் பயந்து விட்டேனே!’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். அவருக்கு எப்போதும் இப்படி நடந்ததில்லை. எருமையின் தும்மல் காரி உமிழ்வது போல இருந்தது. எல்லாம் கிழவி கொடுத்த பதட்டம்! நிலைதடுமாறி விட்டிருந்தார்.
முன்னர் ஒருமுறை மார்கண்டேயனிடம் தோற்றது இப்போது நினைவுக்கு வந்தது. சிவலிங்கத்தை கெட்டியாக கட்டிபிடிதுக் கொண்டு ‘உன்னால் ஆனதைப் பாரும்’ என்று சவால் விட்டானே. சிவபெருமான் மட்டும் மார்க்கண்டேயனுக்கு பக்கபலமா இல்லை என்றால் அவன் கதைய பதினாறு வயதிலேயே முடித்திருப்பேன். அந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்தக் கிழவிக்கு குளிர்விட்டுப்போச்சு! மார்க்கண்டேயனைக் காப்பாற்ற சிவகடாட்சம் இருந்ததுபோல, இந்தக் கிழவிக்குக் கிட்டவில்லை! இவளைக் காப்பாற்ற சிவன் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆமாமாம் அது பெரிய இடமல்லவா அதனால்தான் சிறப்புச் சலுகை!!
அந்தச் சிவனின் பேராற்றலை விடவும், கிழவியின் வாய்ச்சவடால் தன்னை பூலோகத்தை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடிக்க வைத்துவிட்டது. இனி இந்தக் கிழவியின் சங்காத்தாமே வேண்டாம் என முடிவெடுத்து சட்டென்று விலகி வந்துவிட்டதென்னவோ அப்போதைக்கான தீர்வாக அமைந்துவிட்டிருந்தது.
ஆனால்….. இப்போது…… அந்தத் தோல்வியால் அவர் எதிர்கொள்ளப்போகும் பிரச்னை பூதாகாரமாக எழுந்து அச்சுறுத்தியது..
சித்ரகுப்தன் தனக்காக வாசலில் காத்திருப்பது தூரத்திலிருந்தே தெரிந்தது. நெருங்க நெருங்க அவன் பேரேட்டை திறந்து வைத்துக்கொண்டு நின்றிருப்பது தெளிவாய்ப் பார்க்க முடிந்தது.
எமதர்மனுக்கு நிலைகொள்ளவில்லை!
“மகாராஜா கெழவி உசிரெ பிடிச்சியாந்துட்டீங்களா?”
“பேரேட்டுல பதிவு செய்து விட்டாயா என்ன?”
“பதிவு செஞ்சிட்டேன்.” சித்ரகுப்தன் எழுதுகோலும் கையுமாக நின்றிருப்பதைப் பார்க்கும்போது, அவருக்கு என்ன சொல்வெதென்று தெரியவில்லை. எச்சிலைக்கூட்டி விழுங்க முனைந்தார். மேலண்ணத்தில் ஈரம் கூடிவரவில்லை! ஒரு கிண்ணம் தண்ணீர் கிடைத்தால் தேவலாம்.
“எனக்காகக் காத்திருக்க மாட்டியா? உனக்கேன் அவ்ளோ அவசரம்?” முன்னர் போல இயல்பாக இல்லாமல் அவரின் அதிகாரத் தொணியில் சற்று தொய்வு உண்டாகி இருந்தது.?”
“எஜமான், நீங்க போனாலே கண்டிப்பா காரியத்த முடிச்சிட்டுதான் மறுவேல பாப்பீங்க. வயசான கெழவி வேற,”
வயதான கிழவி என்று எளிதாகச் சொல்லி விட்டான் இவன்! கிழவியிடம் நான் பட்ட பாடு இவனுக்கென்ன தெரியும்?
“சுளுவா முடிச்சிட்டு வெரசா வந்துருவீங்கன்னு நெனச்சா இவ்ளோ தாமசமா வரீங்க? எங்க மாரியா நீங்க? நீங்க கறாரா வேற இருப்பீங்க!” என்றான் சித்ரகுப்தன். அப்போதுதான் பார்த்தான் எமதர்மனின வாடிவதங்கிய முகத்தை.
சிதரகுப்தன் சொன்னதுபோல, மார்க்கண்டேயனிடம் தோல்வி கண்டதிலிருந்து நான் மிக கவனமாகத்தான் காரியமாற்றி வருகிறேன்.ஆனால், இந்த்க் கிழவியால் வந்த பின்னடைவு என் வரலாற்றில் இன்னொரு கருப்புப்புள்ளி.
இப்படி ஏமாற்றமடைந்து முகத்தோடு எமனைப் பார்த்தறியாத சிதர்குப்தன் கேட்டான், “ஏன் எஜமான் சோர்வா இருக்கீங்க? மொகம் வாடியிருக்கே! என்னா ஆச்சு?”
எமன் முகததைக் கீழே போட்டிருந்தார்.
“மகராஜா வாய்த்தொறந்து பேசுங்க, என்ன நடந்தது?”
“அதை அழித்து விடு.”
“அது எப்படி முடியும்? எப்ப எழுதினத அழிச்சிருக்கோம்? எழுதினா எழுதினதுதான. எல்லாருக்கும் மரணம்னு ஒன்னு இருக்கே. காலம் முடிஞ்சிபோச்சின்னு நீங்கதான் பொறப்பட்டுப் போனீங்க. கெழவி கத முடிஞ்சிபோன கதையாச்சே!”
எமராஜா முகம் சுருங்கி தாழ்ந்த தொணியில் சொன்னார், “அதை அழித்து விடு. நான் கிழவியிடம் தோற்று விட்டேன்!”
”எஜமான்…!!
“ஆமா, மேற்கொண்டு எதுவும் கேக்காதே”
சித்ரகுப்தான் அவரை ஏறிட்டு நோக்கினான்.
“மார்க்கண்டேயனுக்கு நாம் முன்பு செய்ததுதானே! இது புதித்து இல்லையே!!”
சிதரகுப்தன் அதற்கு மேல் பேசவில்லை. தனக்கு மேலே உள்ளவர் கட்டளையிட்டால் அதனை எப்போதுமே மீறியது இல்லை!
ஆனால், பேரேட்டில் எழுதியதை எப்படி நீக்குவது என்றுதான் புரியவில்லை சித்ரகுப்தனுக்கு!
அவள் தலைவிதியை மாற்றி எழுதுவதற்கு பிரம்மாவிடம் பதில் சொல்லவேண்டி வருமே!!
[புதுமைப் பித்தனின் ‘காலனும் கிழவியும்’ கதையின் தொடர்ச்சியாகப் புனையப்பட்டுள்ளது]