
(“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்)
சுந்தரத்தை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து யாரோ தொட்டெழுப்பியது போலிருந்தது. இன்னும் வழக்கமான அதிகாலையாகவில்லை. சுற்றிலும் பேரமைதி நிலவியது. அதை சிள்வண்டுகளின் ஓயாத இரைச்சல் அதிகப்படுத்தியது. உற்றுக் கேட்டால் அகால பட்சிகளின் அலறல்கள், பக்கத்து வீட்டு கல்லுபள்ளியாவின் ஆட்டுச் செருமல்கள், எங்கோ ரயில் ஓடும் ஓசை காதில் விழும். விளக்கைப் போடாமல் மெல்ல எழுந்தார். அரையிருட்டில் வாசல் மட்டும் வெளிச்சமாயிருந்தது. நடுவில் நெற்குவியல் சிறிய கோயில் கோபுரத்தைப் போல் நின்றிருந்தது. அதுதான் உறக்கத்தில் தோன்றி அழைத்திருக்கிறது. அவர் எண்ணற்ற முறை விதை விட்டிருக்கிறார். ஒருமுறையும் ஆவல் அடங்கவில்லை. கை காலும் கழுவாமல் அருகில் சென்றார். நெஞ்சு படபடக்க போர்த்தியிருந்த சாக்குப் பையின் முனையை விலக்கினார். வெப்பமாக ஆவி முகத்தில் வீசியது. உள்ளே முளைகள் முத்துகளைப் போல் ஒளிர்ந்தன. அவருக்குப் புல்லரித்தது. சாக்குகளை ஒவ்வொன்றாக நீக்கினார். அனைத்து நெற்களும் முளை விட்டுப் பூத்துக் குவிந்திருந்தன. இப்போதுதான் பிறந்து கண் திறக்காத சிறு புழுக்களைப்போல் வானை நோக்கி தலையுயர்த்தியிருந்தன. இது இயற்கையின் நிற்காத துடிப்பு. அவருக்குள் நம்பிக்கை துளிர்த்தது. இப்போகம் அமோகமாக விளையும் என்றுபட்டது.
நேற்றுதான் சுந்தரம் விதை விட தீர்மானித்தார். வானொலிப் பெட்டிக்குப் அருகில் வைத்திருந்த பஞ்சாங்கத்தை எடுத்தார். கெட்ட வேளைகளில் பக்கத்து நகரத்துக்கும் போக மாட்டார். கதர் வேட்டி, சட்டை கசங்க கைப் பையுடன் சாய்விருக்கையில் படுத்திருப்பார். அவர் நாட்களின் கோள்களையும் நட்சத்திரங்களையும் கவனமாக ஆராய்ந்தார். கொல்லையின் முன்புற வயல்கள் நீண்ட காலம் கரம்பாகக் கிடந்தன. பற்பல வண்ணப் பூக்களுடன் களைகளும் புற்களும் செழித்து வளர்ந்திருந்தன. நிலம் பாறையாக கெட்டிபட்டிருந்தது. அப்போது அவருடைய இறந்த அம்மா அசரீரியைப்போல் ஊன்றுகோலை ஒங்கி தரையில் தட்டினாள். அதற்கு “ஒண்ணையும் பாக்காம வெதைப்பா” என்று அர்த்தம். அதுதான் பஞ்சாங்கத்திலும் போட்டிருக்கும். சக கொல்லைக்காரர் கோபால் முன்பே கூறியதுதான். நாளை நெல் விதை விட வேண்டும். பருவ மழைக்குப் பிறகு அறுக்கலாம். புது அரிசியில் பொங்கல் வைக்கலாம். அவர் பஞ்சாங்கத்தில் நெல் அறுவடை செய்யப்போகும் மாதத்தைப் புரட்டிப் பார்த்தார்.
அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள். “தெனம் கொல்லக்கிப் போகணும்பா. ஒரு நா தவறக் கூடாது. இல்லாட்டி யாருனா மண்ணத் திருடிப்பாங்க.” அதிகாலையில் சுந்தரத்தை மெல்லக் கூப்பிடுவாள். அவர் குளிருக்கு இதமாக சுருண்டிருப்பார். சற்று நேரம் கழித்து தொட்டு அசைப்பாள். “கண்ணு போயி வாப்பா.” அவ்வேளையானால் சுந்தரத்துக்கு தானாக விழிப்பு வந்துவிடும். கல்யாணமான புதிதில் சுந்தரமும் பொன்னம்மாவும் எதிர் அறையில் படுத்திருந்தார்கள். தாழ்வாரத்தில் சுப்பம்மா விடியலில் கைத்தடியால் லொட் லொட்டென தட்டினாள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சுந்தரம் விருட்டென எழுந்தார். காதில் கை வைத்துக் கேட்டார். “இன்னக்கித் தவறாம கரும்புக்கு ஒரம் வைக்கணும்… நெல்லு நாத்து விடணும்… அப்புறம்…” என்றார். பக்கத்தில் கசங்கிய கனகாம்பரம் சரம் தொங்கும் தலையை நிமிர்த்தி பொன்னம்மா ஆச்சரியப்பட்டாள். “யாரு சொன்னது?” அவள் பயப்படுவாள் என்று சுந்தரம் தயங்கினார். வேறுவழியில்லாமல் “அம்மாதான் சொல்றாங்க” என்றார். பொன்னம்மா எழுந்து வெளியில் சென்று பார்த்தாள். “அவங்க அசந்து தூங்கறாங்க” என்றாள். “இல்ல, சொல்லிட்டுத் திரும்பவும் படுத்திருப்பாங்க,” சுந்தரம் சமாதானப்படுத்த முயன்றார். அம்மா இறந்து நீண்ட காலமாகியும் முக்கியத் தருணங்களில் ஊன்றுகோலைத் தட்டினாள். அவருக்கு நன்கு புரிந்தது. “நெல்லு முத்தியாச்சு. ராத்திரி காவலுக்குப் போகணும்.” சுந்தரம் படுக்கையிலிருந்து எழுந்து கொள்வார். “அடுத்து சம்பா விடு.” “சரிம்மா” என்று அதற்கும் தலையாட்டினார். “கெழவி செத்து ரொம்ப நாளாவுது. இது வெறும் மனப்பிரமை,” இருட்டில் பொன்னம்மா மறுபுறம் திரும்பி முணுமுணுத்தாள்.
சுந்தரம் வளர்ந்ததும் அம்மா வற்புறுத்தத் தொடங்கினாள். “பள்ளிக்கூடம் முடிஞ்சதும் கொல்லக்கிப் போ. இன்னிக்கி நெல்லறுப்பு.” “நாளைக்கி பொணை கட்டணும்.” “மறுநாளைக்கி போர் ஒதர்றது.” அவர் நான்காவது பாரம் முடித்து ஆசிரியராக ஆசைப்பட்டார். அதுதான் சமுதாயத்தில் கௌரவமான வேலை. அனைவரும் ஆசிரியர்களை நடமாடும் தெய்வங்களாக நினைத்தார்கள். வெளியூர் கல்லூரியில் படிக்க பெரும் செல்வந்தர்களால்தான் முடியும். தான் துவக்கப்பள்ளி ஆசிரியராக தெருவில் தலை நிமிர்ந்து செல்ல வேண்டும். பக்கத்து ஊரில் பள்ளிக்கு இடம் தானமளித்த பஞ்சாயத்து தலைவர் பெருமாளை அணுகினார். ஊரில் அவர் மட்டும்தான் தூய கதராடை அணிபவர். தோளில் மடித்த கதர் துண்டு. அவர் மேலுள்ள கதர் துணியைப்போல் அபூர்வமான எளிமையோடிருப்பார். அமைதியான குரலில் பேசுவார். கவனித்துக் கேட்டால்தான் புரியும். “வாத்தியார் மத்தவங்களுக்குப் பாடமாயிருக்கணும்… நீ அப்புறமா வா, பாக்கலாம்.” அப்போது சுந்தரம் பாப்லின் சட்டை போட்டிருந்தார். புது கல்வியாண்டு துவங்குவதற்கு முன் தினம் பெருமாள் சொல்லியனுப்பினார். அவர் பள்ளிக்குப் பக்கத்திலிருந்த குளத்தருகில் நின்றிருந்தார். “நாளையிலிருந்து பசங்களுக்கு பாடம் நடத்து,” ஆசிர்வதிப்பதைப் போன்ற புன்னகையுடன் மெல்ல சொன்னார்.
மறுநாள் கொல்லைக்குப் போகாமல் சுந்தரம் பள்ளிக்குச் சென்றார். நீண்ட ஜிப்பா போன்ற கஞ்சி போடாத கதர் சட்டை. அதை தலை வழியாகத்தான் மாட்ட வேண்டும். மெல்லிய கரை வைத்த கதர் வேட்டி. அன்றிலிருந்து கறி சாப்பிடுவதை கைவிட்டிருந்தார். சுப்பம்மா ஒரே பிள்ளையை இழந்துவிடுவோமென பயந்தாள். சுதந்திரத்துக்காக கட்சிக்காரர்களுடன் சேர்ந்து போராடி சிறைக்குப் போவான் என்று நினைத்தாள். அவள் தொள்ளைக் காதுக் கம்மல்கள் ஆட மறுத்தாள். “அந்தக் கொல்லய வாங்க எவ்வள பாடுபட்டிருக்கேன்… அடுப்போட வெறகா, எண்ணெயில பண்டமா. அத வுடக் கூடாது.” அவர் பள்ளிக்குச் சென்றாலும் குரல் தொடர்ந்தது. “அது கொற சம்பளம். என்னயிருந்தாலும் கொல்லயில கெடைக்கறதுக்கு ஈடாவாது.” குழந்தைகள் பாடங்களைக் கத்தும் குரல்களையும் மீறிக் கேட்டது. “கொல்ல குத்தகைக்கு விடணுமாம். அது அப்பிடியே ஏமாத்திப் புடுங்கறது.” நள்ளிரவுகளிலும் தனக்குத்தானே பேசுவாள். “நாம நாடோடியா வந்தவங்க. இந்த மண்ணுல ஆழக் காலு ஊணுனம், பாத்துக்க.” அவள் காணவில்லையென்று சுந்தரத்துக்கு பள்ளி இடைவேளையில் தகவல் வந்தது. ஊரெல்லாம் தேடி ஆற்றில் கண்டுபிடித்தார்கள். கொதிக்கும் மணலில் கொல்லைக்கு நகர்ந்து சென்ற தடம் ஆழமாகப் பதிந்திருந்தது. அவள் புட்டங்கள் கன்றியிருந்தன.
பெருமாள் கூப்பிட்டு சொன்னார். “அம்மா சொல்றத செய்யி. எல்லாம் ஒண்ணுதான். நாம கடமைய நிறைவேத்திதான் ஆகணும்.” சுந்தரம் மறுபடியும் கொல்லைக்குப் போக ஆரம்பித்தார். கடுங்கோடையில் கிணறு வறண்டு கரும் பாறைகள் புலப்பட்டன. குத்தகைதாரர் ராஜா வயல்களை தரிசாகப் போட்டிருந்தார். அவர் குடிலுக்குப் பக்கத்தில் மட்டும் நாலைந்து வயல்களில் கேழ்வரகுப் பயிர்கள் பசுமையாயிருந்தன. களைகள் மண்டி மீதிக் கொல்லை மயானம் போலிருந்தது. மாலையில் சோர்ந்து வந்தவருக்கு சுப்பம்மா நம்பிக்கையூட்டினாள். “நெலத்தைக் காலியா விடறது பெரும் பாவம். அது ஏழு தலைமொறையச் சுத்தும். நீ வெதயப் போடு” என்றாள். அவள் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் சரி சமமாக நீண்ட கைத்தடி. அதை தெற்கு வீட்டு சுப்பணாசாரியிடம் சொல்லி வாங்கியிருந்தாள். நன்கு முதிர்ந்த மூங்கில். கணுக்களை செதுக்கி உலோகத்தால் செய்யப்பட்டதைப் போலிருந்தது. கூனி நடக்கையில் மற்றொரு காலைப் போலிருந்தது. கொஞ்சமும் தளரவில்லை. “இத வச்சி கெணத்த இன்னும் மெட்டுங்க வெட்டு. கண்டிப்பா தண்ணி ஊறும்,” அவள் ஊன்றுகோலைத் தட்டினாள். கனத்த தங்க வடத்தை தலை குனிந்து கழற்றினாள். அது பல்லாண்டு வேர்வையும் அழுக்கும் படிந்திருந்தது. ஆனால் கையில் பொதிந்திருக்கையில் சாம்பல் பூத்த தீக்கங்கைபோல் பளபளத்தது.
கொல்லையை வாங்குகையில் வட்டக் கிணறு களத்துக்குப் பின்னாலிருந்தது. நாலு புறமும் ஏற்றமடிக்கும் அளவு பெரிது. பக்கத்து ஐயர் கொல்லை, கோபால் கொல்லைக் கிணறுகளை விட ஆழமானது. சுவரில் அரச மரச் செடி விடாமல் முளைக்கும். தூக்கணாங் குருவிக்கூடுகள் கனிகளைப்போல் தொங்கும். அவை இல்லாத கோடை காலத்தில் ராஜா இடுப்புக் கயிறுடன் இறங்கி கிளைகளை அடியோடு தறிப்பார். செங்கற்கள் அங்கங்கே பெயர்ந்து பொடியாயிருந்தன. கிணற்றில் கரும் பாறைகள் தட்டவும் தோண்டாமல் விட்டிருந்தார்கள். அதை வெடி வைத்து ஆழமாக்க சுப்பம்மா வெகுகாலம் ஆசைப்பட்டிருந்தாள். ஆனால் கைம்பெண்ணால் முன் நிற்க முடியாது. சுந்தரம் அரைகுறை மனதுடன் இசைந்தார். அவருக்குள் பள்ளிக்குப் போகும் விருப்பம் மங்கவில்லை. கிணற்றிலிருந்து கிளம்பிய வெடிச் சப்தத்தில் பூமி அதிர்ந்தது. தூரத்து மலைகளில் எதிரொலித்தது. ஓசை தனக்கும் கேட்டதாக சுப்பம்மா பூரிப்புடன் சொன்னாள். அவள் இறந்த பிறகும் இரட்டை வட சங்கிலியை மீட்க முடியவில்லை.
“எவ்வளப் புட்டியாச்சு? வெல என்ன போட்ட? கம்மின்னா இருப்பு வச்சுக்க,” சுப்பம்மா ஊன்றுகோலால் கேட்டாள். அவளால் பேச முடியவில்லை. கோரைப் பாயில் படுத்திருந்தாள். அவ்வப்போது கைத் தடியை ஓங்காரமாகத் தரையில் அடித்தாள். “தட், தட். நா உயிரோடிருக்கேன்.” அருகில் வந்தவர்கள் மேல் கம்பை வீசினாள். “நா மண்ண விட்டுப் போவ மாட்டேன்.” அவளுடைய எண்ணம்போல் ஊன்றுகோலும் உறுதியாயிருந்தது. வார்த்தைகள் விட்டத்தில் மோதி எதிரொலித்தன. பொன்னம்மாவும் பிள்ளைகளும் பயத்தில் நெருங்குவதில்லை. திடீரென நள்ளிரவில் மௌனம் சூழ்ந்தது. அவள் இறந்ததைக் காலையில்தான் கண்டு பிடித்தார்கள். ஊன்றுகோல் தூரக் கிடந்தது. கெட்ட நேரத்தில் உயிர் பிரிந்ததாக ஜோதிடர் தெரிவித்தார். அவர் கூறியபடி உயிர் விட்ட இடத்தை மூன்று மாதங்களுக்கு ஓலைத் தட்டிகளால் மறைத்தார்கள். பிள்ளைகள் இடுக்கில் புகுந்து ஒளிந்து கண்டு பிடித்து விளையாடினார்கள். உள்ளே மனையில் சுப்பிக் கிழவியின் ஊன்றுகோலும் பழம் புடவைகளுமிருந்தன. நீர்க் குவளை காலியாகியிருந்தது. சுந்தரம் கைத்தடியை எடுத்து பரணில் பாதுகாப்பாக வைத்தார். அதன் பேச்சு மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.
கடைசியாக சுந்தரம் விதைப்பதற்கு மறு நாளை நிர்ணயித்தார். பஞ்சாங்கத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றுவிட்டார்கள். பொன்னம்மா வாசலுக்கு மறுபக்கம் தாழ்வாரத்தில் கால் நீட்டி அரிசி ஆய்ந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் கற்களும் கருக்காக்களும் இறைந்திருந்தன. சுந்தரம் முறத்தை நோக்கியபடி “நாளைக்கு விதை வுடணும், நெல்லு எடுத்துத் தா” என்றார். பொன்னம்மா நொடிப்பாள் என்று எதிர்பார்த்தார். அவள் சப்பிக்கொண்டிருந்த ஒரு அரிசியை நறுக்கென கடித்து விழுங்கினாள். “எத எடுக்கறது?” என்றாள். “இந்த தரம் பொன்னி போடலாம்” என்றார் ஆர்வமுடன். கோபாலும் அதைதான் விதைக்கச் சொல்லியிருந்தார். அவள் முறத்தை தள்ளிவிட்டு எழுந்தாள். கூடையை எடுத்துக்கொண்டு மூலை அறைக்கு சென்றாள். அதுதான் அவளும் பிள்ளைகளும் ஒன்றாகப் படுக்கும் இடம்.
உள்ளே பகலிலேயே அரையிருட்டு நிலவும். உயரத்தில் கண்ணைப் போன்ற சிறிய சாளரம் திறந்திருந்தது. விளக்கைப் போட்டும் அறை மங்கியிருந்தது. இரு பக்க சுவர்களோரம் மண் பானைகள் வரிசையாக நின்றிருந்தன. இரவில் கரும் பூதங்களைப் போல் தோன்றும். கீழே வைக்கோல் பிரிமனைகள் சுருண்டிருந்தன. மேலே ஆளுயுரத்துக்கு பானையடுக்குகள் ஆட்களைப்போல் நின்றன. மூதாதைகள் மௌனமாக கண்காணிப்பதைப் போலிருந்தது. அவற்றில் சுப்பம்மாவின் பானைகள்தான் அதிகம். பொன்னம்மாவுக்கும் சீதனமாகக் கிடைத்திருந்தன. முடியும்போதெல்லாம் ஆசையுடன் வாங்கியும் சேர்த்திருந்தாள். பானை வரிசைகளை தனியாக நெருங்குகையில் பயம் கவியும். பேச்சிழந்து அமைதியாகிவிடுவாள். ஒவ்வொரு பானையின் வடிவத்தையும் உள்ளேயிருக்கும் பொருளையும் நன்கு அறிவாள். அவை நீண்ட காலமாக பழகியவை.
மூன்று, நான்கு போகம் முன்பு பொன்னி நெல் விளைந்திருந்தது. சுந்தரம்தான் பாதுகாப்பாக பானையில் கொட்டி வைத்திருந்தார். அதை பொன்னம்மா மறந்திருந்தாள். முதலில் மூலைக் குதிரில் எட்டிப் பார்த்தாள். வெல்லத்தின் அழுகிய பழ நாற்றம் மூச்சடைத்தது. அதை அப்படியே மேல் பானையால் மூடினாள். பக்கத்துக் குதிரின் வாய் சிறிய பானையுடன் சேர்த்து சாணி பூசி மெழுகியிருந்தது. உள்ளே அடியில் கறுப்பு எள் கிடக்கும். எத்தனை வருடமானாலும் கெடாது. மிகவும் விலை மதிப்பு வாய்ந்தது. குதிரில் ஓர் ஆள் தாராளமாக உட்காரலாம். அப்படித்தான் அந்தக் காலத்தில் இறந்தவர்களைப் புதைத்தார்கள் என்று கேள்விப்பட்டிருந்தாள். கூடவே நெல் கொட்டியிருக்கும் என்பார்கள். பொன்னம்மா அடுத்த அடுக்கை இடுப்பில் வைத்து சிரமத்துடன் இறக்கினாள். அடிப் பானையில் ஒரு முறம் கறுத்த தானியங்களிருந்தன. கையில் எடுத்து தடவினாள். அரையிருட்டில் பவழத்தைப் போல் மின்னின. அவை என்னவென்று கண்டு பிடிக்க முடியாமல் பழையபடி மூடினாள். சுப்பிக் கிழவி கட்டிய பித்தளைத் தகடுபோன்ற பட்டுப் புடவையை ஒன்றில் கண்டாள். தெள்ளுப்பூச்சிகள் மாவைப்போல் அரித்திருந்தன. மற்றொரு பானையில் கொட்டைகளைப் போன்ற நெம்பர் நெல் நிரம்பியிருந்தது. இன்னொன்றில் கோது நீக்கிய புளி அடைத்திருந்தது. கொஞ்சத்தை எடுத்து வெளியில் வைத்துக்கொண்டாள். ஒரு பானை முழுவதும் நைந்த பழந் துணிகள் கிடந்தன. அதைக் கிளறி உடுத்தலாம் போன்ற ஒரு புடவையை எடுத்துக்கொண்டாள். மொந்தையில் எப்போதோ போட்டு மறந்த மாவடுக்கள். மேல் பானையில் விலைக்குப் போட சேர்த்திருந்த புளியங்கொட்டைகள். பானைகளில் ஒன்றிலிருப்பது மறுபடியும் தேடினால் கிடைக்காது. வேறு பொருட்களிருக்கும். பல முறை வரிசையில் அடுக்கிப் பார்த்திருக்கிறாள். அது தன் குழப்பத்தால் விளைவது என்று நினைத்துக்கொள்வாள். அல்லது முன்னோர்கள் ஆவிகளாக வந்து நிகழ்த்தும் விளையாட்டாயிருக்கலாம்.
பொன்னம்மா சலிப்புடன் உட்கார்ந்தாள். பள்ளிவிட்டு வந்தால் சின்னவள் விஜயா உதவுவாள். அவளுக்கு பானைகளில் என்ன உள்ளது என்பது அத்துபடி. சின்னவன் மோகன் அடிப்பானையில் காலை வைத்து மேலுள்ள பானையில் வேர்க்கடலைகளை சாகசம்போல் எடுப்பான். அவள் களைப்புடன் கண்களை மூடிக்கொண்டாள். அப்படியே உறங்க விரும்பினாள். மிக நீண்ட ஓய்வெடுக்க வேண்டும். இந்தப் போகங்கள் பருவ காலங்களைப்போல் ஒன்றையொன்று விடாமல் சுற்றி வருபவை. அவற்றைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் என்று எண்ணினாள். அவளைச் சுற்றிலும் இறக்கிய பானைகள் பெரும் பிராணிகளின் மண்டையோடுகளைப்போல் கிடந்தன. அறை முழுவதும் அகன்ற வாய்களைத் திறந்திருந்தன. இன்னும் தேடாதவை வீம்புடன் நின்றிருந்தன. பெரும்பாலும் காலியானவை. இனி அவை ஒருபோதும் நிரம்ப முடியாது என்று பட்டது.
வெளியில் சுந்தரம் மீசையற்ற உதடுகளின் மேல் வேர்வைத் துளிகள் மினுங்க ஆத்திரத்தில் முணுமுணுப்பார். அவர் வெடிக்கும் முன் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று பொன்னம்மா பதற்றமானாள். பொன்னி மெலிந்து நீண்ட நெல். பெயருக்கேற்றாற்போல் பொன்னிறம். உமியில் மிகச் சிறிய தூவிகள் ஒட்டியிருக்கும். அவளுக்கு நன்றாக ஞாபகமிருந்தது. எழுந்து கண்களை மூடி நாலாவது அடுக்கை அடைந்தாள். எஞ்சிய பானைகளை ஒவ்வொன்றாக இறக்கினாள். கீழே பொன்னி நெற்கள் தகதகத்தன. நாலைந்து மரக்காலுக்கு மேலிருக்கும். இரு கைகளாலும் அள்ளிக் கூடையில் கொட்டினாள். நகர்த்தி வந்து வாசலில் வைத்தாள். சுந்தரம் பரணிலிருந்து பழைய பித்தளை அண்டாவை இறக்கியிருந்தார். அதில் தண்ணீரை நிரப்பியிருந்தார். நெல்லைக் கொட்டித் துழாவினார். மிதந்த கருக்குகள், சாவிகளை கோரிக் கீழே போட்டார். நீருக்குள் நெல் மணிகள் பொற்துகள்களைப்போல் மின்னின. அவர் திருப்தியடைந்தார்.
சுந்தரத்தின் நம்பிக்கை வீணாகவில்லை. இப்போது நெற்கள் பூரணமாக முளை அரும்பியிருந்தன. பழையபடி சாக்குப் பைகளால் குவியலை மூடினார். கொஞ்ச நேரத்தில் பெரிய முருகன் எடுத்துப்போக வருவார். மூலை அறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டார். மாடத்திலிருந்து பூஜை பொருட்களை சேகரித்தார். வீட்டுப் பூஜையை கொல்லைக்குப் போய் வந்து செய்ய வேண்டும். அறையோரத்தில் பொன்னம்மாவும் பிள்ளைகளும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். சுற்றிலும் நேற்று இறக்கிய பானைகள் சிறிதும் பெரிதுமாயிருந்தன. பொன்னம்மா களைப்பால் இன்னும் அடுக்கியிருக்கவில்லை. அடிப் பானைகள் வரிசையாக தத்தம் இடங்களிலிருந்தன. அவற்றில் அரைகுறையாக பல வகை தானியங்கள் நிரம்பியிருந்தன. சில வெறுமையாயிருந்தன. திறந்த குதிர் பள்ளத்தைப் போல் இருண்டிருந்தது. உள்ளே விழுந்தால் பழைய காலத்துக்கு சென்று திரும்பலாம் என்று தோன்றியது. சின்னவன் ஓடுவதைப்போல் பாயிலிருந்து நகர்ந்து தரையில் கிடந்தான். பெரிய மகள் தூக்கத்தில் முனகும் சப்தம். பொன்னம்மா விழித்துக்கொண்டதைக் காட்ட லேசாக கனைத்தாள். அவர் அறையிலிருந்து வேகமாக வெளியேறினார்.
இன்னும் இருள் விலகவில்லை. வேலையாள் பெரிய முருகன் வந்தார். கூடையில் வைக்கோலைப் பரப்பி விதை நெல்லைக் கொட்டினார். பெருங் கூடை நிரம்பியது. சுந்தரம் கைப்பிடிக்க தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தார். பளுவால் தலை ஆடிக்கொண்டிருந்தது. சுந்தரம் பின் தொடர்ந்தார். கதவைச் சாத்த வந்த பொன்னம்மா மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஏக்கம் நிரம்பியது போலிருந்தது. அவர் தெருவில் நடந்தார். பெரியமுருகன் இருட்டில் நன்கு வழியறிந்தவரைபோல் சென்றுகொண்டிருந்தார். தெருக்களில் நடந்து, எல்லையம்மன் கோயிலைத் தாண்டி ஆற்றில் இறங்கினார்கள். வறண்ட ஆறு மெல்லிய வெளிச்சமுடனிருந்தது. புதை மணலில் பெரிய முருகனின் வேகம் குறையவில்லை. கால்கள் நடனம்போல் அசைந்தன. சுந்தரம் அவருடன் ஏறக்குறைய ஓட வேண்டியிருந்தது. ஆற்றின் கடைசியில் சிறிய ஓடைபோல் நீர் நெளிந்து சென்றுகொண்டிருந்தது. பெரிய முருகன் திரும்பியும் பார்க்கவில்லை. நீரில் பாதங்கள் சப்தமில்லாமல் அமிழ நடந்தார். கொல்லையின் பின்புறக் குறுக்கு வழியாக வரப்புகளில் தடுமாறாமல் நடந்தார். நேராக நாற்று விடும் வயலை அடைந்தார். விதைக் கூடையை இறக்கி வைத்துவிட்டு நின்றார். அவருக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.
சுந்தரம் சற்று நேரம் கழித்து வந்தார். இம்முறை நல்ல நேரத்துக்கு கொஞ்சம் முன்னால் வந்துவிட்டதாக சந்தேகமேற்பட்டது. வயலிலிருந்து சிறிது மண்ணை புங்க மரத்தின் வேரடியில் பிடித்து வைத்தார். சேறு நன்றாகப் பிசைந்ததைப் போலிருந்தது. சுற்றிலும் அழுகிய இலை தழைகளின் மணம். சுந்தரம் பூமி பூஜை செய்தார். அந்த இடத்தில் அவை பல முறை செய்யப்பட்டவை. கைகள் தாமாக இயங்கின. பொழுது விடிந்துகொண்டிருந்தது. ஜவ்வாது மலை விளிம்புகள் ஒளியால் துலங்கிக்கொண்டிருந்தன. பட்சிகளின் குரல்கள் கொல்லை முழுவதும் நிறைந்தன. முதலில் கண்ணாடி பரப்பு போல் வயல் வெளிச்சமடைந்தது. பிறகு மெல்ல வானின் நீலத்தைப் பிரதிபலித்தது. அருகருகேயுள்ள மரங்கள் தலைகீழாகத் தெரிந்தன. நீரில் அவரும் பெரிய முருகனும் நீண்டு ஒன்று கலந்திருந்தார்கள். காற்றின் சிறு சலனத்தில் பிம்பங்கள் கலைந்தன. மீண்டும் கூடின. பெரிய முருகன் முறத்துடன் கரையிலிருந்து இறங்கினார். வயலில் அனைத்து உருவங்களும் மறைந்தன. விதைகளை வாரியிறைத்தபடி சேற்றில் நடந்தார். கால்கள் மாறி மாறிப் புதையும் ஓசை. எங்கிருந்தோ அம்மா “வெதை, வெதை” என்று ஊன்றுகோலைத் தட்டுவதைபோல் சுந்தரத்துக்குப்பட்டது.
சிறு நெல்லே வேர்கள் விட்டு, நீர் அருந்தி, பச்சை நாக்குகளாக எழுந்து, ஒளி நோக்கி வளர்ந்து, தாள்கள் நீட்டி, கதிர்கள் விரித்து, பசும் நெல் அரும்பி, பால் ஊறி, இறுகிக் கனிந்து மீண்டும் பல நெல் மணிகளாகின்றன. அந்த மாற்றத்தை சுந்தரத்தால் ஒவ்வொருமுறை காணும்போதும் நம்ப முடிவதில்லை. நெற்கள் வேறு என்றும் விதைகள் வேறு என்றும் நினைப்பார். பச்சையாக பயிர்கள் வளரும் நாட்கள் மிகுந்த நம்பிக்கையூட்டுபவை. அவற்றில் களையும் நோய்களும் அண்டுவதில்லை. எவ்வித எதிர்பார்ப்பையும் உண்டாக்குவதுமில்லை. அப்போது பயிர்களை வளர்ப்பது மட்டுமே கடமையாயிருக்கும். ஆனால் விளைச்சல் பெருகுகிற கனவுகள் மட்டும் எப்போதும் தொடர்ந்துகொண்டிருப்பவை.
தூரத்தில் சாலை ஓடிக்கொண்டிருந்தது. மேலே வாகனங்கள் தொடர்ச்சியாக போய் வந்துகொண்டிருந்தன. எதுவும் பாதிக்காமல் பெரிய முருகன் வயலில் தொடர்ந்து விதைத்துக்கொண்டிருந்தார். அவர் ஆளே மாறி சன்னதம் வந்தவரைப்போலிருந்தார். கால் வைத்து நகர்ந்த இடம் பள்ளமாகி மீண்டும் சமமானது. விதை நெற்கள் பரவலாக விழுந்துகொண்டிருந்தன. மண்ணில் மூழ்கி மறைந்தன. உடனே பயிர்கள் முளைத்தெழுந்து விட்டதைபோல் சுந்தரத்துக்கு தோன்றியது. சிறு துளிர்கள் நிமிர்ந்து நின்றன. எங்கும் பசுமையானது. சிறிய காலியிடமும் இல்லை. அவருக்கு நிறைவேற்பட்டது. இனிமேல் கொல்லையை சற்றும் தரிசாக விடக் கூடதென நினைத்தார். காலமெல்லாம் எதையாவது விதைத்துக்கொண்டிருக்க வேண்டும். விளைச்சலைப் பற்றி கவலைப்படக்கூடாது.
******