இணைய இதழ்இணைய இதழ் 63சிறுகதைகள்

காந்தல் – அசோக்ராஜ் 

சிறுகதை | வாசகசாலை

செல்வா மச்சான் வந்திருக்கிறார் என்று உமா ஃபோனில் சொன்னதிலிருந்து எனக்கு வேலை ஓடவில்லை. அவர் இப்படி முன்னறிவிப்பின்றி வந்திருக்கிறார் என்றாலே ஏதாவது பண விவகாரமாகத்தான் இருக்கும். அடுத்தவர் சங்கடம் உணராத மனுஷன். இந்த மதிய நேரத்திற்கு வந்திருக்கிறார் எனில், சென்னையில் அதிகாலையிலேயே பஸ் ஏறியிருக்க வேண்டும். எதற்கு வந்திருக்கிறார் என்று உமாவிடம் கேட்டேன். அவரிடமே பேசிக்கொள்ளச் சொல்லி ஃபோனைக் கொடுக்கப் போனாள். வேண்டாமென்று மறுத்தேன். வேலையாக இருக்கிறேன்; நேரில் பேசிக் கொள்ளலாம் என்று ஃபோனை வைத்தேன். 

சியாமளாவை அழைத்து விசாரிக்கலாமா என்று கூட யோசித்தேன். அலுவலுக்கான ஒழுங்கமைப்பில் இருக்கும் மனநிலையை தலைகீழாகத் திருப்பிப் போடும்படி அவள் ஏதாவது சொல்லிவிடக் கூடும். ஏற்கனவே நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன். அதனால் அந்த யோசனையைக் கைவிட்டேன். ஆனாலும் அதற்குப் பிறகு பிரஸ்ஸில் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆவணி மாத கல்யாண சீசன். பிரிண்ட் போட்டுக் கொடுக்க வேண்டிய சுப நிகழ்ச்சிப் பத்திரிக்கைகள் டஜன் கணக்கில் இருக்கின்றன. இந்தப் பயல்கள் நான் இருந்தால்தான் வேலையே பார்ப்பான்கள். அஞ்சு நிமிஷம் சிகரெட் பிடிக்க நழுவினால் கூட இங்கே வேலை நிற்கும். வெட்டிக் கதையடிப்பான்கள். முதலாளி கொடுக்கிற சம்பளத்திற்கு அவர் இருக்கிற நேரம் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்று எல்லா பயல்களும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறான்களோ என்று தோன்றும். அதனாலேயே மதியம் வீட்டுக்குச் சாப்பிடப் போனால் கூட அரைமணி நேரத்தில் திரும்ப பிரஸ்ஸுக்கு ஓடி வந்துவிடுவேன். தூங்குவதாய் இருந்தால் கூட பிரஸ்ஸிலேயே உட்கார்ந்த மேனிக்குத் தூங்குவேனே ஒழிய, வீட்டில் இருக்கமாட்டேன். 

டெலிஃபோன் அடித்தது. அனேகமாக அந்த பூதலூர் பார்ட்டியாகத்தான் இருக்கும். காலையிலிருந்து ஆறு தடவை அழைத்துவிட்டார். மகளின் கல்யாணப் பத்திரிக்கையை குலதெய்வம் கோயிலில் வைக்க இன்றுதான் நாள் வாய்க்கிறதாம். பனிரெண்டு மணிக்கு ரெடியாகிவிடும் என்று சொல்லியிருந்தேன். மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. இன்னும் ஆனபாடில்லை. அவர் குலதெய்வம் கோயிலுக்கு மாலையோ அல்லது நாளையோதான் செல்ல முடியும். இருக்கிற இரண்டு மெஷினில் ஓடும் பத்திரிக்கைகள் முடியவே மாலை நாலு மணி ஆகிவிடும். 

பழனி அண்ணனை அழைத்தேன். “பூதலூர்காரரா இருந்தா நான் சாப்பிடப் போயிருக்கேனு சொல்லிடுங்கண்ணே.. சாயந்தரம் நாலு மணிக்கு டெலிவரி கொடுத்துடலாம்னு சொல்லி வைங்க.. பார்த்துக்கலாம். நான் சாப்ட்டு ஓடியாந்துடறேன். மச்சான் வேற வீட்டுக்கு வந்துருக்காரு. என்னானு பார்த்துட்டு வந்துடறேன். பயலுக டேக்கா கொடுக்காம இழுத்துப் புடிங்க” 

“யாரு, செல்வா தம்பிங்களா?” என்று அனாவசியமாகக் கேட்ட பழனி அண்ணன், கூடவே நமுட்டுச் சிரிப்பையும் உதிர்த்தார். கிட்டத்தட்ட நான் பிரிண்டர்ஸ் ஆரம்பித்த காலத்திலிருந்து என்னுடன் இருப்பவர். அப்பா மறைவு, சியாமளா கல்யாணம், என் கல்யாணம் என்று எல்லாவற்றையும் பார்த்தவர், உடன் நின்றவர். 

“எனக்கிருக்கிறது எத்தனை மச்சான்ணே..” – என்றேன். ஏறத்தாழ அவர் உதிர்த்த அதே சிரிப்பை திரும்ப அவருக்கே வழங்கிவிட்டு, அடிக்கும் டெலிஃபோனை எடுங்கள் என்று ஜாடை காட்டிவிட்டு நகர்ந்தேன். பிரிண்டிங் மை கறை படர்ந்த அழுக்கு பனியனுடன், டெலிஃபோனில் குழையும் உடல்மொழியைக் கொட்டிக் கொண்டிருந்தார் பழனி அண்ணன். அதன்படி அந்த முனையில் பூதலூர்காரர் தான் என்று ஊர்ஜித்தவாறே பைக்கை எடுத்தேன். 

ஏறத்தாழ ஒரு வருடம் இருக்கும் செல்வா மச்சானைப் பார்த்து. கடைசியாகப் பார்த்ததை விடவும் இப்போது சற்று இளைத்திருப்பதாகப் பட்டது. முழுக்கையை மடித்துவிடாமல், அதன் பட்டனையும் போடாமல் சற்றே தொளதொளப்பான சட்டை அணிந்திருந்தார். இடுப்புக்கு நிற்காத பேன்டை பெல்ட்டை வைத்து இறுக்கியிருப்பது அதன் ஜிப் பகுதியில் சுருங்கியிருப்பதில் தெரிந்தது. பரிதாபப்பட வேண்டும் என்றே வளர்த்த தாடியோ என்று யோசித்தேன். ஆங்காங்கே நரைத்து துருத்திக் கொண்டிருந்த இரண்டு வார தாடியுடன் பார்ப்பதற்குப் பரிதாபமாகத்தான் இருந்தார். சியாமளாவைப் பெண் பார்க்க வரும் போது எப்படி இருந்த மாப்பிள்ளை? மீசை தாடியை மழித்து, அவர் போட்டிருந்த ஷூவை விடவும் பளபளத்து இருந்தது அவர் முகம். சொந்த வீடில்லாத குடும்பம் என்று அம்மா மறுத்தாள். சியாமளாவுக்கும், அவளை விட எனக்கும் இவரைப் பிடித்துப் போயிருந்தது. இரண்டு தம்பிகளுடன் வீட்டிற்கு மூத்தவர் எனினும், தனியார் வங்கியில் ஓரளவுக்கு நல்ல சம்பளத்தில் வேலை. ‘எல்லாரையும் சொத்தை வெச்சு அளக்காதம்மா’ என்று அம்மாவை சரிகட்டி சியாமளாவுக்கு இவரைக் கட்டி வைத்தோம். 

இருவரையும் கை கால் அலம்பச் சொல்லி சாப்பிட அழைத்தாள் உமா. டைனிங் டேபிளைத் தவிர்த்து ‘இருக்கட்டும்மா’ என்று சட்டென கீழே உட்கார்ந்துவிட்டார் மச்சான். நான் மேலே உட்கார்ந்திருந்தேன். உமா என்னை கண்களால் கீழே உட்காரப் பணித்தாள். சலித்துக் கொண்டே கீழே உட்கார்ந்தேன். 

“வர்றேன்னு சொல்லியிருந்தீங்கன்னா சிக்கனாவது வாங்கியிருப்பேன்லணே..” என்றாள். அவள் சும்மாத்தான் சொல்கிறாள். இன்று செவ்வாய் கிழமை. கவுச்சி செய்ய மாட்டாள். வெண்டிக்காய் சாம்பாருக்கும் வாழைக்காய் வறுவலுக்கும் என்ன குறைச்சல்? 

“அம்மாச்சிக்கு என்ன உடம்பு மச்சான்? அத்த அங்க போயிருக்காங்களாம்?” என்று கேட்ட மச்சான், சூழல் கோருகிற சம்பாஷணைக்காக ஏதோ இட்டு நிரப்புகிறார் என்பது அவர் கேட்கும் தொனியிலேயே தெரிந்தது. வாயில் வெண்டியில் குழைத்த சோறும் வாழைக்காயும் இருந்ததால் எனக்கே அவர் குரல் குழறலாகத்தான் கேட்டது. அவருக்கு இதற்கான பதில் அனாவசியம் என்றாலும் சொன்னேன். 

“வழக்கமான மூட்டுவலிதான். இந்த தடவை கொஞ்சம் அதிகம். நடக்க உக்கார முடியலை அம்மாச்சிக்கு. வயசாகுதுல்ல.. சியாமளா எப்படி இருக்கு?” – இந்த முறை இட்டு நிரப்பும் வேலையை நான் எடுத்துக் கொள்வது போல கேட்டேன். 

சாம்பார் வரை ஓட்டப்பந்தயத்திற்கு முன்பான வார்ம் அப் போல பேசிக் கொண்டிருந்தோம். ரசத்திற்கு வரும் போது அடுக்களைக்குச் சென்றிருந்த உமா, வருகிறாளா என்று எட்டிப் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டு, “கொஞ்சம் கடனாகிடுச்சு மச்சான்” என்றார் செல்வா மச்சான். நிஜ ஓட்டப்பந்தயத்திற்குத் தயாரானோம். இந்தப் பந்தயம் சற்று வித்தியாசமானது. நாங்கள் இருவர் மட்டுமே போட்டியாளர்கள். வழக்கமாக நான் ஓட, அவர் துரத்துவார். இலக்கு எப்போதும் பணம் தான். 

எத்தனையாவது தடவையாக இப்படியான சூழலில் சிக்குகிறார் என்று மனதிற்குள் கணக்கு ஓடியது. இவர் வந்திருப்பதாக உமா ஃபோன் செய்ததிலிருந்து இதோ இந்த நிமிடத்திற்குத்தான் காத்திருந்தேன். அடைமழை வருவதற்கு முன்பான கருமேகத் திரட்சி போல, அவர் இந்த வார்த்தைகளை உதிர்ப்பதற்கு முன்பு தொடர்பற்ற எத்தனையோ வார்த்தைகளைத் திரட்டுவார். சொல்லப் போனால் இந்த முறை சற்றே சடுதியில் விஷயத்திற்கு வந்திருக்கிறார். சில சமயங்களில் மணிக்கணக்கில் இந்த வீண் வார்த்தைகள் திரண்டபடியே இருக்கும். அப்போதெல்லாம் ‘எப்படா பணம் கேட்கப் போறே’ என்று என் மனம் கூவிக் கொண்டிருக்கும்.

எம்.காம் படித்துவிட்டு தஞ்சையில் தனியார் வங்கியில் லோன் பிரிவில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் சியாமளாவுக்கு வரனாக வந்திருந்த போது, அவர் வங்கி ஊழியர்கள் சிலரிடமே அவரைப் பற்றி அவரின் நற்குண அறிதலுக்காக விசாரித்தேன். சிகரெட், குடி என்று எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர் என்பதில் நிம்மதி அடைந்தேன். வங்கி வாட்ச்மேன் ‘பயங்கர செலவாளி’ என்றார். அப்படி பயங்கரமாக என்ன செலவு செய்வார் என்று கேட்டதற்கு, அலுவலகத்தில் எல்லோருக்கும் முட்டை பப்ஸ் வாங்கித் தருவார் என்றும், தனக்கே பல முறை பிரியாணி வாங்கிக் கொடுத்திருப்பதாக வாட்ச்மேன் சொன்ன போது எனக்கு சிரிப்புதான் வந்தது. இதெல்லாம் ஒரு செலவா? சக மனிதர்கள் மீதான அக்கறை அல்லவா? அந்த ஒரு தகுதியே போதுமென்று ஏன் நினைத்தேனோ.. எனக்கு இவர் தான் மைத்துனர் என்று மனதில் வரித்துக் கொண்டுவிட்டிருந்தேன். மனதிற்குள் ‘செல்வகுமார் மச்சான்’ என்று சொல்லிப் பார்த்துக் கொண்டேன். 

சியாமளாவுக்கு உள்ளூர விருப்பென்றாலும், ‘உனக்கும் அம்மாவுக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் ஓகே’ என்று சினிமா பார்த்து வருவித்துக் கொண்ட வெட்கத்துடன் சொன்னாள். காமாலையில் அப்பா மறைந்த ஒரு வருடத்திற்குப் பிறகு வீட்டில் ஒரு சுபகாரியம் நடத்தியே தீர வேண்டும் என்ற அம்மாவின் விருப்பம், செல்வகுமார் – சியாமளா திருமணத்தினால் இனிதே நிறைவேறியது. அப்பாவின் சேமிப்பு மற்றும் என் சேமிப்போடு சேர்த்து, வெளியில் வாங்கிய மூன்றரை லட்சம் கடன் எல்லாம் சேர்த்து சியாமளாவுக்கு இருபத்தைந்து பவுன், மாப்பிள்ளைக்கு ஐந்து பவுன் மற்றும் ஒரு கருப்பு நிற பல்சர் பைக். அதோடு தேக்குக் கட்டில், மெத்தை என்று சகல சீர்வரிசையுடன் குறைவின்றி செய்தேன். ஒரே தங்கை. வீட்டில் ராணி போல வளைய வந்தவள். அப்பாவின் செல்ல தேவதை. மலைக்கோட்டையிலேயே பெரிய மண்டபத்தில் என் தங்கையின் கல்யாணத்தை நடத்தினேன். 

சித்தியும் அத்தையும் பிரமித்துப் போய் மலைத்து நின்றதாக அம்மா சொல்லிச் சொல்லி பெருமைப்பட்டாள். இத்தனைக்கும் இப்போது இருப்பதை விடவும் மிகச் சிறிய பிரிண்ட்டிங் பிரஸ்தான் அப்போது நான் வைத்திருந்தேன். அது ஒரு டப்பா அறை. ஒரே ஒரு சி.ஆர்.டி கம்ப்யூட்டரும், ஒரு கெனன் பிரிண்ட்டரும்தான் சொத்து. இங்கே டிசைன் செய்து, மாஸ்டர் காப்பியை பிரிண்ட் போட மலைக்கோட்டை நாடார் பிரஸ்ஸுக்கு ஓடுவேன். 

‘இளங்கோ, காசை தண்ணியா எறச்சிருக்கியே.. தங்கச்சிக்காக ரொம்ப கடன் வாங்கியிருக்கியாடீ என் மவராசா’ என்று வாஞ்சையாக கேட்பது போல கமலா அத்தை கேட்டாலும், ‘இதுக்கெல்லாம் ஏதுடா காசு’ என்ற மலைப்பும் திகைப்பும்தான் அவள் கண்களில் இருந்தன. அப்பா இறந்த அடுத்த வருடம், இத்தனை செலவு செய்து சியாமளாவுக்கு என்னால் கல்யாணம் நடத்த முடியும் என்று அவர்கள் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. மாப்பிள்ளை பெண்ணை விடவும் எனக்கு அதிக திருஷ்டி பட்டுவிட்டதாக அம்மா அங்கலாய்த்தாள். இப்படி ஒரு தடபுடலான கல்யாணமும், இந்த அளவு வரதட்சணை சீரும் எனக்கு நிகழாது என்ற தெளிவும் அம்மாவுக்கு இருந்தது. ப்ளஸ் டூ முடித்துவிட்டு குடும்ப நிர்பந்தத்தில் தொழிலில் இறங்கிவிட்ட எனக்கு ஒரு டிகிரியாவது இருந்தால் தேவலாம் என்று அம்மா அப்போதெல்லாம் புலம்ப ஆரம்பித்திருந்தாள். ‘என் தொழில் திறமைக்கு முன்னால, படிச்சவன் பக்கத்துல நிக்க முடியுமாம்மா’ என்று தெனாவெட்டாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். 

ஆறு மாதங்கள் கழித்து சியாமளா கர்ப்பமாகியிருந்த நிலையில் வீட்டிற்கு வந்திருந்த போதுதான் மாப்பிள்ளை மூன்று மாதமாக வேலைக்குப் போகவில்லை என்பதைச் சொன்னாள். நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஃபைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கும் திட்டத்தில் மாப்பிள்ளை இருப்பதாகச் சொன்னபோது அதன் நேர்மறை அம்சங்களை மட்டும்தான் சிந்தித்தேன். வேலையை விட்டுவிட்டு மாப்பிள்ளை ஒரு தொழில் ஆரம்பிக்கிறார் எனில், அதன் சாதக பாதகங்களை அறியாமலா இருப்பார்? ஒரு தொழிலில் இருப்பவனாக, செய்யும் தொழிலில் மேலும் மேலும் முன்னேறும் முனைப்புடன் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பவனாக, என் மாப்பிள்ளையும் ஒரு தொழிலதிபர் ஆகும் முயற்சியில் இருப்பதை என்னால் வரவேற்காமல் இருக்க முடியவில்லை. 

‘நல்ல முடிவுதான். அதுக்காக ஏன் வேலையை விடணும்? வேலைல இருந்துட்டே பிஸினஸ் முயற்சிகளை செய்ய முடியாதாமா?’ என்று மட்டும் சியாமளாவிடம் கேட்டேன். 

மூன்று நண்பர்கள் சேர்ந்து ஆரம்பிக்கும் இந்தக் கம்பெனியின் தொடக்க நிலை ஏற்பாடுகளுக்கு குறைந்தபட்ச அலைச்சலாக மூன்று மாதமாவது தேவைப்படும் என்று மாப்பிள்ளை சொல்லியிருக்கிறார். ஆனால், மூன்று மாதம் போதவில்லை. மேலும் மூன்று மாதம் அலைந்தார். அதற்குள் சியாமளா சீமந்தம் வந்துவிட்டது. அன்று அவள் கைகளில் கண்ணாடி வளையல்கள் மட்டுமே குலுங்கிக் கொண்டிருந்தன. கைக்கு மூன்று பவுன் என்று ஆறு பவுனில் காப்பு தடிமனில் நான் வாங்கிக் கொடுத்திருந்த வளையல்கள் இல்லை. இரண்டு மாதத்திற்கு முன்பு மச்சான் அதை விற்றுவிட்டதை அறிந்து கோபம் தலைக்கேறினாலும் காட்டிக் கொள்ளவில்லை. 

பிரசவத்திற்கு சியாமளாவை எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்த போது, மாப்பிள்ளை வீட்டில் இல்லாத நேரத்தில் மாமாவிடமும் அத்தையிடமும் பொதுவாக வருத்தப்பட்டேன். “பிஸ்னஸ்னா முன்னபின்ன இருக்கும். அதுக்காக பொம்பள புள்ள நகையை வித்துடலாமா.. பெரியவங்க நீங்களாவது எடுத்துச் சொல்லக் கூடாதா?” – ஏதோ ஒரு வேகத்தில் இப்படிப் பேசினேன்தான் எனினும், அடுத்தக் கணமே அதற்கு வருத்தமும் பட்டேன். அனாவசியமாக அவர்களை குற்றவுணர்ச்சிக்கு உட்படுத்துகிறேனோ என்ற தயக்கத்தால் விளைந்த வருத்தம் அது. 

“சொன்னா கேட்க மாட்றான் மாப்ளை.. பார்த்துட்டிருந்தது நல்ல வேலை. சம்பளம் பத்தலைதான். ஆனா, புரோமோஷன் கிடைச்சிடும். இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு அலையறானோன்னு பயமாத்தான் இருக்கு” 

மாமாவுக்கும் மச்சானுக்கும் இதன் பொருட்டு வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் நடப்பதையும், அப்பாவை அதட்டுவதைப் பொறுக்காமல் தம்பிகள் சண்டைக்கு வருவதையும், அதனால் மச்சான் குழந்தை பிறந்த பிறகு தனிக்குடித்தனம் போகும் யோசனையில் இருப்பதையும் அறிந்து என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன். மாமா சொல்வதைக் கேட்கும் போது எனக்கும் இந்த பயம் தொற்றிக் கொண்டது. உள்ளதும் போய்விடுமோ என்ற அச்சத்தில் மச்சானிடம் விசாரித்தேன். தற்போது சம்பாதிக்கும் பணத்தை விடவும், மூன்று மடங்கு சம்பாத்தியம் வரும் என்று அச்சாரம் சொன்னார். அதற்கு மேல் அவர் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட நான் நினைக்கவில்லை. வெல்வார் என்றே நம்பினேன். 

சியாமளாவுக்கு பெண் குழந்தை பிறந்த அடுத்த மாதம், தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சாலையில் ‘சஹானா அசோசியேட்ஸ்’ என்று தன் பச்சிளங்குழந்தை பெயரிலேயே ஃபைனான்ஸ் அலுவலகத் திறப்புவிழா நடத்தினார் செல்வா மச்சான். 

உள்ளூர் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், வணிகர் சங்க நிர்வாகிகள், சில அரசியல் பிரமுகர்கள் என்று திறப்புவிழாவின் குட்டி பிரம்மாண்டத்தில் ஒருவித திகிலாம்சம் இருந்ததை உணர்ந்தேன். அனுபவத்தினால் வந்த எச்சரிக்கை உணர்வா அல்லது பெயர் தெரியாத உள்ளுணர்வா தெரியவில்லை, அகலக்கால் வைக்கிறாரோ என்று மனதில் பதைபதைப்பு இருந்தது. அந்த நேரத்தில் சியாமளாவின் கழுத்தில் தொங்கிய மூன்று பவுன் தாலிச் சங்கிலியைத் தவிர வேறு நகைகளே அவளிடத்தில் இல்லை என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 

சரியாக ஒரே வருடத்தில் அந்த நிறுவனம், இருந்த தடம் தெரியாமல் மறைந்து, போன நகைகள் தவிரவும், நிகரமாக மச்சான் எட்டு லட்சம் கடனில் மாட்டினார். எப்படிப் போனது என்று சியாமளாவிடம் இப்போது கேட்டாலும் அவளுக்கு சொல்லத் தெரியாது. ஏதோ மாய மந்திரம் மாதிரி கேட்ட போதெல்லாம் கழட்டிக் கொடுத்திருக்கிறாள். இடைப்பட்ட நாட்களில் எனக்கும் உமாவுக்கும் கல்யாணம் ஆகி, அவள் வயிற்றில் என் மகன் கிருஷ்ணா உருவாகியிருந்தான். நான் வைத்திருந்த டப்பா சைஸ் ‘இளங்கோ பிரிண்டர்ஸ்’ அலுவலகம் இடம் மாறி மலைக்கோட்டை வடக்கு வீதியில் ‘இளங்கோ ஆப்செட் பிரண்டர்ஸ்’ ஆக முன்னேற்றம் கண்டிருந்தது. கோயம்புத்தூரிலிருந்து இரண்டாம் விற்பனையில் சல்லிசாக ஷெட்ஃபீட் ஆப்செட் மெஷினை இறக்கியிருந்தேன். இனி மாஸ்டர் காப்பியைத் தூக்கிக் கொண்டு நாடார் பிரஸ்ஸுக்கு ஓட வேண்டியதில்லை. எந்தப் பத்திரிக்கை, நோட்டீசையும் நாங்களே அடிக்கலாம். உதவியாளர் பழனி அண்ணன், சூபர்வைசர் ஆகியிருந்தார். இரண்டு பசங்களை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். என்னுடைய பத்தாண்டு கால கடின உழைப்பின் நியாயமான வளர்ச்சியைக் கூட சியாமளாவிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளத் தயங்கினேன். 

எல்லாவற்றையும் அவள் அம்மா வழியாக அறிந்து சந்தோஷப்பட்டாள் எனினும், எனக்கும் அம்மாவுக்கும் அவளின் வறுமை, நெஞ்சில் விழுந்த கீறலாக இம்சித்துக் கொண்டே இருந்தது. ஒரு நாள் என் அலுவலகம் வந்திருந்த மாமா, மச்சானின் கடன்காரர்கள் கொடுக்கும் அழுத்தம் குறித்து வருத்தப்பட்டார். தற்போது அவர்கள் மச்சானுடன் இல்லை. தனியே சென்றுவிட்டார்கள். கைக்குழந்தையுடன் மூத்த மகனின் குடும்பம் படும் கஷ்டம் பொறுக்க முடியாமல் மாமா என்னிடம் வந்து புலம்பினார். 

பார்ட்னர்கள் அதிக கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, தகுதியில்லாத நபர்களுக்கு வங்கிகளில் கடன் வாங்கிக் கொடுத்தது, அதற்காக போலியான ஆவணங்கள் தயார் செய்தது, அவர்களுடைய உறவினர்கள் பெயரில் கடன் வாங்கி அதை அவர்களே எடுத்துக் கொண்டது, குறைந்த வட்டிக்கு வாங்கி பலரிடம் அதிக வட்டிக்கு விட்டது.. இப்படி ஓட்டை பெரிதாகிக் கொண்டே போனதுதான் மச்சான் ஓட்டாண்டி ஆனதிற்கு காரணம் என்று மாமா என்னிடம் சொல்லி அழுதார். மச்சான் செய்த ஒரே தவறு பார்ட்னர்களாக இருந்த நண்பர்களை நம்பியது என்ற தொனியில்தான் மாமா பேசினார். 

“தொழில் வேற; பழக்கவழக்கம் வேற மாமா.. மச்சான் ஏதும் தப்பே செய்யலைங்கற மாதிரி பேசாதீங்க.. கவனக்குறைவா இருக்கிறதுதான் பெரிய தப்பே. பிஸ்னஸ்னா சும்மா இல்ல மாமா.. நொண்டிச் சாக்கு சொல்லாதீங்க” – தோற்றவனின் சால்ஜாப்புகள் போல எரிச்சல் ஏற்படுத்தும் வஸ்து ஏதுமில்லை.

‘வீட்டுக்கு ஃபைனான்ஸ்காரங்க தேடிட்டு வந்தா கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சிகிட்டு சியாமளாவ விட்டு சமாளிக்கச் சொல்றான் மாப்ள’ – தன் மகன் என்றும் பாராமல் இந்த விஷயத்தை என்னிடம் சொல்லும் மாமாவை நான் கடிந்து கொள்வதா, ஆறுதல் சொல்வதா என்று குழம்பினேன். என் தங்கைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஆணையா, அவளுக்கு கணவன் ஆக்கினேன்? மச்சான் கட்டிலுக்கடியில் படுத்திருப்பதாக கற்பனையில் நினைக்க நினைக்க மச்சான் மீது வெறுப்பும் கசப்பும் கூடிக் கொண்டே போனது. அவை என் வார்த்தைகளில் தன்னியல்பாக வெளிப்பட்டன.

“பொழைக்கத் தெரியாதவன்ட பொண்ணைக் கொடுத்துட்டு எனக்கும் என்ன பண்றதுன்னே தெரியல மாமா. எத்தனை தடவை நான் சியாமளாவுக்கு பணம் கொடுத்திருக்கேன் தெரியுமா மாமா? அவங்க குடும்பம் ஓடறதே உமாவுக்குத் தெரியாம நான் அனுப்பற பணத்துலதான். அம்மா பொண்ணுக்கு செய்.. பொண்ணுக்கு செய்னு நச்சரிக்குது.. நானும் எவ்ளோதான் செய்றது. உமாவுக்குத் தெரிஞ்சா அவளுக்கும் அம்மாக்கும் பொல்லாப்பாகிடுமோனு பயமா இருக்கு. சியாமளாவோ மச்சானோ என்னைப் பார்க்க வந்தாலே பணத்துக்குத்தான் வர்றாங்க. அவங்களைப் பொறுத்தவரை நான் ஒரு பணம் காய்ச்சி மரம். நானும் கடன்லதான் இந்த மெஷின்லாம் வாங்கிப் போட்ருக்கேன் மாமா. ஆனா, அதைக் கொண்டு எப்படி சம்பாரிக்கிறதுனு எனக்குத் தெரியும். மறுபடி மாப்பிள்ளை வேலைக்குப் போனாதான் என்ன? திரும்பவும் ஏன் பிஸ்னஸ் பிஸ்னஸ்னு அலையறார்.. அந்த திறமை தான் இல்லனு தெரியுதுல்ல?”

“நீங்களே வந்து பேசி ஒரு வழி பண்ணுங்க மாப்ளே.. அவங்கள காப்பாத்த உங்களாலதான் முடியும்” – மாமா இப்படிச் சொல்லும் போது அவர் கைகள் கூப்பியிருந்தன. நிராதரவானவன் கடைசியாக தெய்வத்திடம் வேண்டி நிற்பது போல என்னிடம் நின்றார். கேட்கும் விதத்தில் கேட்டால் என்னால் மறுக்க முடியாது என்று கூட அவர் நினைத்திருக்கலாம். சொல்பேச்சு கேளாமல் திமிறி ஓடி தடுக்கி விழுந்த பிள்ளையை ஓடிச்சென்று காபந்து செய்யும் தகப்பனின் தவிப்பு.

“யோசிக்கிறேன் மாமா! என்னை இப்படி கும்பிடாதீங்க.. கையை இறக்குங்க” என்று அவரை அனுப்பி வைத்தேன். 

மாமா வந்து சென்ற அடுத்த வாரம் தஞ்சாவூரில் மச்சான் வீட்டுக்கு நானும் அம்மாவும் போயிருந்தோம். சியாமளா கழுத்தில் தாலிச்சங்கிலியும் இல்லை. மஞ்சள் கயிறை துப்பட்டாவால் மறைக்கும் முயற்சிகளில் தோற்றுக் கொண்டு நின்றாள். ‘இனி உன்னிடம் கொடுப்பதற்கு என்னதான் இருக்கு’ என்று நான் கேட்கவில்லை. அப்படியாகப் பார்த்தேன். மச்சான் என்னை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டு, என் அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

மாமாவையும் அத்தையையும் வரச் சொல்லியிருந்தோம். எல்லோரும் கூடிப் பேசினோம். கையில் குழந்தையுடன் உள்ளூரில் லட்சக் கணக்கில் கடனை வைத்துக் கொண்டு உருப்படியாக ஒரு வேலைக்கும் போக முடியாது, நிம்மதியாக வாழ முடியாது.. அதனால் இரவோடு இரவாக எங்காவது வெளியூருக்கு மச்சான் குடும்பத்தை அனுப்பிவிடுவது என்று தீர்மானித்தோம். 

“போனது போகட்டும். இங்க இருக்காதீங்க.. திருச்சிக்கும் வர வேணாம். சென்னைல வீடு பார்த்து செட்டில் பண்ணி வைக்கிறேன். ஒரு மூணு மாசத்துல ஏதாவது வேலை தேடிக்க வேண்டியது மச்சான் பொறுப்பு. அங்க வீட்டுக்கு அட்வான்ஸ், மூணு மாசம் குடும்பத்துக்கு தேவையான மளிகை சாமான், கைச் செலவுக்குக் காசு எல்லாம் நான் தர்றேன்” – இப்படி நான் சொன்னதும் சியாமளா மகிழ்ச்சியுடன் சிரிப்பாள் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால், நான் முற்றிலும் எதிர்பாரா வண்ணம் கதறி அழுதாள். கூடவே அம்மாவும் அத்தையும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்கள். 

நானும், மச்சானும் மாமாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சற்று அமைதியாக இருந்தோம். பிறகு மாமாதான், “இப்ப என்ன ஆகிப் போச்சுனு ஒப்பாரி வைக்கறீங்க.. வேற ஏதாவது வழி இருக்கா சொல்லுங்க?” அவர்களின் அழுகைக்கு நடுவில் இந்தக் கேள்வியைப் போட்டார். 

“எல்லாரும் சேர்ந்து இருந்தாலும் வருத்தப்படலாம்.. தனிக்குடித்தனம்னு ஆகிப்போச்சு.. இங்க இருக்கிறதுக்கு பதிலா வெளியூர்ல இருக்கப் போறாங்க. நினைச்சா போய் பார்த்துட்டு வருவோம்..” என்று நான் சொல்ல, அடுத்த பதினைந்து நாளில் மச்சான், சியாமளா, குழந்தை சஹானா மூவரையும் சென்னை மூலக்கடையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியமர்த்திவிட்டு வந்தோம். எல்லாம் சரியாகிவிடும் என்று எல்லோரும் நம்பினோம். ஒரு வருடம் ஆகியிருந்தது. இடையில் ஒரு தடவை சியாமளாவும் சஹானாவும் வந்து சென்றார்கள். அப்போது கூட அவள் இந்த புதிய பிரச்சனை பற்றி எதுவும் சொல்லவில்லை. திடீரென்று இப்போது திரும்பவும் வந்து நிற்கிறார் மச்சான்.

எவ்வளவு கடன் என்று கூட கேட்கவில்லை. அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டு, அவர் சாப்பிட்டு முடித்த கையோடு அலுவலகத்துக்கு அழைத்து வந்தேன். மூவாயிரம் சதுர அடியில் முன்னால் எனக்கென்று தனியே ஏஸி பொருத்திய கேபின், பின்னால் இரண்டு ஆப்செட் பிரிண்டர் மெஷின், ஆறு வேலையாட்கள், மூன்று கம்ப்யூட்டர்கள் இருக்கிற, ஏஸி பொருத்திய டிசைனிங் அறை என்று சென்ற வருடத்திற்கு இந்த வருடம் மேலும் மாறியிருக்கிற என் பிரஸ் அலுவலகத்தை நோட்டம் விட்ட மச்சானுக்கு, அங்கே என்னைத் தவிர தெரிந்த நபர் பழனி அண்ணன்தான். அவரைப் பார்த்து கையசைத்துச் சிரித்தார். 

வேடிக்கைப் பார்த்தது போதும் இங்கே திரும்பு என்பது போல திடுதிப்பென்று, “நீங்க யாரு மச்சான்?” என்றேன். இப்படித்தான் கேட்டேன். எனக்கு எதிரே உட்கார்ந்திருந்தவரின் இடப்பக்கம் கண்ணாடித் தடுப்பைத் தாண்டி மெஷின் இயங்குவதை பார்த்துக் கொண்டிருந்தவர் என் பக்கம் திரும்பிப் பார்த்தார். இந்தக் கேள்வியின் எதிர்பாரா அம்சம் அவரிடம் சின்ன வியப்பை ஏற்படுத்தியிருந்தது. சரியாக காதில் வாங்காதவராக அல்லது அவர் காதில் வாங்கிய வார்த்தைகள் நிஜம்தானா என்ற சந்தேகம் இருப்பவர் போல விழித்தார். அவர் முகத்திலும் உடல்மொழியிலும் வெளிப்பட்ட சன்னமான திக்குமுக்காடலை ரசித்தேன். நிஜமாக நன்றாக நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல நாலு வார்த்தை கேட்கவே நினைத்தேன். நாசூக்காக எப்படி நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைப்பது? எப்படியாவது அவரை இன்று அழச் செய்துவிட வேண்டும். அவர் அவமானத்தில் குறுகிப் போய்விட வேண்டும், இப்படியெல்லாம்தான் என் அடிமன நோக்கம் இருந்தது. கேட்ட போதெல்லாம் கொடுத்துக் கொடுத்து எனக்குள் உருவாகியிருந்த வெறுப்புணர்வு, அதை உருப்படி செய்யாமல் சொதப்பி வைக்கிற மச்சான் மீது விஷமத்தனமாக தற்போது மாறிக் கொண்டிருந்தது.

“என்ன மச்சான் கேட்டீங்க?”

“இல்ல நீங்க யாருனு கேட்டேன். சும்மா உங்களைப் பத்தி சுருக்கமா சொல்லுங்களேன்” – என்றேன். என் குரலில் நையாண்டி தொனி. அவர் என் நக்கலை உணர்ந்து நான் எதிர்பார்ப்பதை உள்வாங்கி பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நானே எடுத்துக் கொடுத்தேன். 

“இப்ப என்னைப் பத்திக் கேட்டீங்கன்னா, நான் கிருஷ்ணா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஓனர்னு சொல்லுவேன். ப்ளஸ் டூ பாஸ் பண்ணதுக்கு அப்புறம் வேலய்யா பிரஸ்ஸுல ஆஃபிஸ் பாயா சேர்ந்ததிலிருந்து இன்னிக்கு வரைக்கும் ஒரே தொழில்ல இருந்து நின்னு, ஜெயிச்சு..” 

வெற்றி கொடுக்கும் கர்வம் பீறிட நான் பேசி முடிப்பதற்குள் மச்சான் இடைமறித்துச் சொன்னார் “அந்த கன்டெக்ஸ்ட்ல கேட்டீங்கன்னா.. நான் ஒரு தோத்துப் போன மனுஷன்னு சொல்லுவேன் மச்சான். யெஸ் அம் அ ஃபெயிலியர்” – கடைசி வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்ததில் தீர்மானமான சரணாகதி இருந்தது. இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த அதிர்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. இல்லையில்லை, ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஏதாவது பாசாங்கு செய்வார் என்று நினைத்தேன். தொடர் தோல்விகளில் இருந்தாலும் தன்னை விட்டுக் கொடுக்காமல் நிறுவுவார் என்று எதிர்பார்த்தேன். அப்படி அவர் பேசினால்தானே எனக்கும் விவாதிக்க முடியும்? எடுத்த எடுப்பில் தோற்றுப்போனவன் என்று சொல்லிவிட்டால், அதற்கு மேல் என்ன பேசுவது என்று குழம்பினேன். 

திரும்பவும் அவரைத் திக்குமுக்காட வைக்க, ஒருவகையில் அவரை அவமானப்படுத்த, ஒருவகையில் அவரிடம் இல்லாததாக நான் கருதிக் கொண்டிருக்கிற சூடு சொரணையை வர வைக்க, எப்படியாவது என்னை பணத்திற்காக அணுகாமல் அவரை விரட்டியடிக்க, தேவையான வார்த்தைகளைத் தேடினேன். 

“சியாமளாவைக் கட்டிக் கொடுத்ததிலிருந்து நீங்க சுயமா சம்பாரிச்ச பணம் எவ்வளவு மச்சான்? கல்யாணம் பண்ணி மூணு மாசத்துலேயே வேலையை விட்டுட்டீங்க.. அன்னிலருந்து இன்னிக்கு வரைக்கும் இருக்கிறதை வித்து தின்னுருக்கீங்க, ஊரைச் சுத்தி கடன் வாங்கியிருக்கீங்க, இன்னிக்கும் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்ட முடியாது. எங்கிட்ட கணக்கில்லாத காசு வாங்கியிருக்கீங்க..வாழ்க்கை பூரா இப்படியே ஓட்டிலாம்னு நினைக்கிறீங்களா மச்சான். திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சாலே சம்பாரிக்க ஆரம்பிச்சுடுவீங்க.. உங்களுக்கு அந்த நினைப்பே இல்லை.” 

ஏதாவது பதில் பேசுவார் என்று எதிர்பார்த்து, இப்படி நான் பேசிய வகையில் நானே திருப்தியுற்று சற்று நிறுத்தினேன். மச்சான் எந்த விதமான அதிர்வும் இன்றி கையில் அகப்பட்ட பேப்பர் வெயிட்டை எடுத்து உருட்டிக்கொண்டிருந்தார். அவர் பதிலுக்காகத்தான் நான் நிறுத்தியிருக்கிறேன் என்பதையும் புரிந்து கொண்டு, “நீங்க பேசி முடிங்க மச்சான்” என்றவரைப் பார்த்து கண்கள் விரியச் சிரித்தேன். 

“சென்னைல செட்டில் பண்ணி வெச்சேன். ஒரே மாசத்துல வேலை வாங்கினீங்க.. அந்த வேலைக்கு என்ன குறைச்சல், ஏன் மூணே மாசத்துல ரிசைன் பண்ணீங்க? ஏதோ எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் செய்யப் போறதா சியாமளா சொன்னுச்சு. இப்ப வந்து கடன் ஆகிப்போச்சுங்கறீங்க.. நானும் செலவுக்கு எவ்வளவுதான் மச்சான் பணம் அனுப்பறது? போன வருசத்துக்கு இந்த வருசம் புதுசா இன்னொரு மெஷின் வாங்கியிருக்கேன். டர்னோவர் ஜாஸ்தி பண்ணியிருக்கேன், புதுசா பசங்களை சேர்த்திருக்கேன். நீங்க அப்படியேதான் இருக்கீங்க.. அது கூட இல்லை, இன்னும் கீழே போயிருக்கீங்க..”

உருட்டிக் கொண்டிருந்த பேப்பர் வெயிட்டை நிறுத்தினார். சற்று நிமிர்ந்து உட்கார்ந்து நேராக என்னைப் பார்த்தார். பெருமூச்சு விட்டார். அவரின் வழக்கமான குரலை சற்றே தாழ்த்தி, பேசும் வேகத்தையும் குறைத்து, வார்த்தைகளை எழுத்துக் கூட்டிப் படிப்பது போல பேச ஆரம்பித்தார். “சின்ன வயசுலருந்து கஷ்டப்படற குடும்பம்தான் மச்சான். எப்படியாவது முன்னேறணும்ங்கற நினைப்பு எல்லாரையும் போல எனக்கும் இருந்துச்சு. சியாமளாவை நான் கல்யாணம் பண்ணப்ப தம்பிங்க ரெண்டு பேரும் காலேஜ் படிச்சிட்டிருந்தானுங்க.. ரெண்டு பேரும் இஞ்சினியரிங், ஒருத்தன் மூணாவது வருஷம், சின்னவன் மொத வருஷம். அவனுங்க காலேஜ் ஃபீஸ், வீட்டு வாடகை, மத்த செலவுன்னு என் சம்பளத்துக்கு மேல கமிட்மெண்ட்ஸ் இருந்துச்சு..” 

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். அவரே பேசட்டும் என்று காத்திருந்தேன். பழனி அண்ணனை அழைத்து டீ சொல்லச் சொன்னேன். பக்கத்துக் கடையிலிருந்து டீ வரும் வரையிலும் கூட இருவரும் பேசிக் கொள்ளவில்லை. டீக்கடை பையனைப் பார்த்துச் சிரித்த செல்வா மச்சான், பிரக்ஞையுடன் அதைச் செய்யவில்லை. சிந்தனை எங்கோ இருக்க, ஏனோ அவனைப் பார்த்துச் சிரித்தார். அவரே பேசட்டும் என்று நான் காத்திருந்தது பலன் அளித்தது. 

“சியாமளாவோட நகையெல்லாம் வித்துத் திங்கணும், உங்க கிட்ட காசு கேட்டு புடுங்கணும்னு எனக்கு எந்த திட்டமும் இல்ல மச்சான். தொழில் செஞ்சு ஜெயிக்கணும்னு நினைச்சேன். சில நண்பர்களை நம்புனேன், சில முடிவுகளை எடுத்தேன். சொதப்பிடுச்சு. என்னை நம்பித்தான் நீங்க பொண்ணைக் கொடுத்தீங்க.. சியாமளாவும் என்னை நம்பித்தான் போட்டிருந்த நகையெல்லாம் கொடுத்துச்சு. அது என் மேல வெச்ச நம்பிக்கைக்கு எப்படியாவது பிஸினஸ்ல ஜெயிச்சு, அது வெச்சிருந்த நகையை விட ஜாஸ்தி எடுத்துக் கொடுக்கணும்னு எனக்கு கனவு இருக்கு மச்சான். லட்சக்கணக்குல விட்டுட்டு ஆயிரக்கணக்குல சம்பாரிக்கிற வாழ்க்கை எனக்குப் புடிக்கலை மச்சான். நான் நினைச்சது ஒன்னு, எனக்கு நடந்தது ஒன்னு.. எப்படியாவது ஜெயிக்கணும்னு வெறி இருக்கு. உங்களையும் சேர்த்து கடன் வாங்கின ஒவ்வொருத்தருக்கும் பைசா சுத்தமா செட்டில் பண்ணனும்னு பேராசை இருக்கு. ஒவ்வொரு நாளும் என்னை தூங்க விடாம துரத்திட்டிருக்கிறது இந்த நினைப்புதான் மச்சான். அதனாலேயே என்னால வேற எந்த வேலைலயும் நிலைக்கவும் முடியலை. என் பிரச்சனை என்னனு எனக்கே புரியது. கிட்டத்தட்ட பைத்தியம் மாதிரி” எவ்வளவு நிதானமாகப் பேசினாரோ அதே நிதானத்துடன் எழுந்தவர், தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்து எதையோ துழாவினார். மெலிந்து நெளிந்திருந்த அந்த பர்ஸில் பணம் என்று பெரிதாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்ன தேடுகிறார் என்று நானும் ஆர்வமாகப் பார்த்தேன். 

நாலாய் மடித்திருந்த ஒரு சீட்டை எடுத்து என்னிடம் வீசினார். இதுவரை அவருக்கு நான் கொடுத்திருந்த பண விபரங்களை தேதி வாரியாக அதில் எழுதி வைத்திருந்தார். அதோடு தஞ்சையில் வாங்கியிருக்கிற கடன் விபரங்கள், சியாமளா நகை விற்ற விபரங்கள் என்று அந்த தாள் முழுவதும் எண்களாலும் பெயர்களாலும் நிரம்பியிருந்தன. கொஞ்ச நேரம் அந்தக் காகிதத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த எண்கள் எனக்கு மலைப்பைத் தந்தன. எண்களால் எழுதியிருந்த ஒரு தோல்விக் கதை அதில் விரிந்தது. இன்னும் கொஞ்ச நேரம் வைத்திருந்தால் அவரிடமிருக்கும் மன அழுத்தம் எனக்குத் தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம் வந்தது. அவசரமாக அதைப் பிரித்த வண்ணமே மடித்து திரும்ப அவர் பக்கம் தள்ளி நகர்த்தினேன். ஒரு நிமிடம் அவரின் அதீத கடனுலகில் சஞ்சரித்துவிட்டு திரும்ப எதார்த்தத்திற்கு வந்தேன். 

“இப்படி எழுதி பர்ஸுல வெச்சிட்டு அலையறதுனால நீங்க பிஸ்னஸ்ல ஜெயிச்சுடுவீங்கன்னோ, நான் கொடுத்த பணத்தையெல்லாம் திருப்பி கொடுத்துடுவீங்கன்னோ அர்த்தம் கிடையாது மச்சான். முதல்ல இதைக் கசக்கித் தூக்கிப் போடுங்க. சரியா ப்ளான் பண்ணுங்க, ஜெயிச்சுக்காட்டுங்க..” மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டேன். ஆனால், இந்த முறை அவரை அவமானப்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லை. அவரால் எடுக்கப்படாமல் இருந்த அந்தத் தாளை நானே எடுத்து சுக்கலாகக் கிழித்தேன். 

“மச்சான்.. திரும்ப எழுதிக்குவேன். எல்லாம் மைண்ட்ல இருக்கு..” 

“அது மைண்ட்லயே இருக்கட்டும். ஏற்கனவே கேட்கணும்னு இருந்தேன். உங்க தம்பிங்க ரெண்டு பேரும் நல்ல வேலை கிடைச்சு பெங்களூர்ல செட்டில் ஆகிட்டதா சியாமளா சொன்னுச்சு. அவங்க ஹெல்ப் பண்ண மாட்டாங்களா மச்சான்?” என்றேன். 

“கேட்கணும்னு தோணலை” – என்றார். இரண்டே வார்த்தைகள்தான். அவர்களைப் பற்றி ஏதாவது அங்கலாய்ப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். குப்பைத் தொட்டியில் கிடந்த அந்த கிழிந்த காகிதத்தைப் பார்த்துக் கொண்டே டீயை எடுத்தார். “சுத்தமா ஆறிடுச்சு மச்சான்” என்றார். நானும் டீயை பருகியிருக்கவில்லை. இருவரது டீயும் குடிக்கும் தகுதியை இழந்து ஆறியிருந்தது. 

“அதனால என்ன மச்சான்.. இன்னொன்னு சொல்லிட்டாப் போச்சு” என்றேன். பழனி அண்ணனை அழைத்து ‘மறுபடி ரெண்டு டீ’ என்றேன். நானும் மச்சானும் சூடான புதிய தேநீருக்காக காத்திருந்தோம்.

*******

asokraj.writer@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button