இணைய இதழ்இணைய இதழ் 91சிறுகதைகள்

பிரகிருதி – உஷாதீபன்

சிறுகதை | வாசகசாலை

ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால் கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓராண்டுதான் பாக்கியிருக்கிறது இவருக்கு. அதற்குள்ளாகவாவது இவர் மனதில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிக் காத்திருக்கிறேன். அப்பழுக்கில்லாத ஆசாமி. நல்லவர். ஆனால், வல்லவர் இல்லை. 

அதாவது சாமர்த்தியசாலி இல்லை என்று சொல்ல வந்தேன். உலகமே கை கோர்த்திருக்கிறது என்னோடு. இவருக்கு மட்டும் என்ன கொள்ளை? என்ன இப்படிக் கேட்கிறேன் என்று நினைக்காதீர்கள். அவர் மேலுள்ள அதீதக் கோபம் என்னை அப்படிக் கேட்க வைக்கிறது.

காரணம் நிரந்தர வேலை கிடைக்குமுன் சுமார் ஐந்து வருடங்கள் பல அலுவலகங்களிலும் தற்காலிகமாகப் பணியாற்றி நல்ல அனுபவத்தைச் சேகரித்திருந்தார். ஆனால், அங்கும் இவர் என்னை எப்போதும் நெருங்க விட்டதில்லை. சீந்தியதேயில்லை. அதுதான் சரியான வார்த்தை.

பரவால்ல…இருக்கட்டும்…….என்று பலரும் நெருக்கியிருக்கிறார்கள். சட்டையில் திணித்திருக்கிறார்கள். விரலால் கூடத் தொட மாட்டார். அவர்களைக் கொண்டே எடுக்கச் சொல்லி விடுவார். .இம்மியும் அசைந்து கொடுத்ததில்லை. அதெல்லாம் உங்களோடயே….என்று கண்ணியமாகச் சொல்லி விலகி விடுவார். ஒரு மென்மையான புன்னகையோடு அவர் விலகுவதே தனி அழகு. அவரது உறுதியின் அடையாளம் அது.. சலனமில்லாத மெய்ப்பாடு. நானே அதிர்ந்து போயிருக்கிறேன். அவரோடு எப்போது கை குலுக்குவது என்று எண்ணி எண்ணி ஏங்கியிருக்கிறேன்.

வெவ்வேறு ரூபத்தில் நான் இருக்கிறேன் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். ஆபீசே பஜ்ஜி, வடை, டீ…காப்பி என்று கொண்டாட்டமாய் இருக்கும். ஒப்பந்ததாரர்களின் உபயம். எளிய மனிதர்கள்…சுலபமாய் வளையக் கூடிய யதார்த்தவாதிகள். மிடில் க்ளாஸ்….பிலோ மிடில் க்ளாஸ்….வலிய வருவதை ஒருபோதும் ஒதுக்கியதில்லை. அப்படி மறுப்பது பாபம் என்கிற கருதுகோளில் நிற்பவர்கள். யார் மனதையும், எதற்காகவும் புண்படுத்தக் கூடாது என்ற கொள்கையுடையவர்கள். 

சிறிதும் சலனமில்லாமல் எழுந்து சென்று டீக்கடைக்குப் போய் தன் பையிலிருந்து பைசா எடுத்துக் கொடுத்து தேநீர் அருந்திவிட்டு அமைதியாக வந்து உட்கார்ந்து கொண்டு தன்பாட்டுக்கு வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த இடத்திற்கே பொருந்தாதவர் என்பது துல்லியமாய்த் தெரியும். ஆனாலும் அலுவலகங்கள் எப்போதும் தன் கடமையை ஒழுங்காகச் செய்பவர்களைக் கை கழுவுவதில்லை. அவர்கள்தான் அந்த அவர்களுக்கு எப்போதுமான அரண். வேலை செய்பவர்களுக்கு வேலையைக் கொடு, அல்லாதவர்களுக்கு சம்பளத்தைக் கொடு என்கிற தாரக மந்திரம் என்றோ நிலைபெற்றுவிட்ட பொன்னுலகம் அது.

அவர்கள் யாரும் இவரை எப்போதும் வெறுத்ததில்லை. தம்பி…தம்பி…என்று அன்பாகவே வைத்துக் கொள்வார்கள். ஆரம்ப காலம் அது. அந்தப் பங்கு எப்போதும் பரவலாகிக் கொண்டிருக்கிறதே என்கிற ஆதரவாகக் கூட இருக்கலாம்.

அனுப்பும் ஒவ்வொரு பேப்பரிலும் லட்சுமி தேவியின் முகம் பார்க்கும் அத்தனை பேரின் நடுவில் நிச்சலனமாய் அப்படி ஒருவன் இருக்கவே முடியாது. லட்சுமிதேவின்னா சாமிய்யா…அந்தப் பேரப்போய் அதுக்கு சூட்டுறீங்க…இப்படியா களங்கப்படுத்தறது? என்று எரிந்து விழுந்திருக்கிறார்

அலுவலகத்தில் உள்ளோர் அதிகாரியைத் தூண்டினார்கள். சொல்லிக் கொடுத்தார்கள். பிரச்னையான ஆளுக நமக்கெதுக்கு சார்…? என்று லேசாக தூபம் போட்டார்கள். தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாமும் மனுஷன்தானே என்கிற பயமிருந்தது அவர்களுக்கும்.

இவரது இந்த குணத்தினால் இதுவரை இவர் தமிழ்நாட்டில் போகாத இடமில்லை. எங்கு போட்டாலும் தயங்காமல் மூட்டையைக் கட்டி விடுவார். வீடு அதுபாட்டுக்கு ஒரு ஊரில் இருந்தது. இவர்தான் அங்கங்கு பறந்து கொண்டிருந்தார். நம்மை இதனால்தான், இதற்காகத்தான் மாற்றம் செய்கிறார்கள் என்று புரிந்துதான் செல்கிறாரா? அல்லது துறை என்றால் இம்மாதிரி மாறுதல் என்பது வந்து கொண்டுதான் இருக்கும் என்று விகல்பமின்றி நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்று தோன்றியது பலருக்கும். உள்ளுக்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். நாயா அலையுறான்யா….! அவர் எங்கு போனாலும் நானும் அவருக்குத் துணையாக, அவரறியாது பின்னால் போய்க் கொண்டுதான் இருந்தேன். அவர்தான் என்னை ஒரு நாளும் திரும்பிப் பார்த்ததேயில்லை. என்னங்க…அனுபவமில்லாத ஆளா இருக்காரு…டிபார்ட்மென்டுக்குப் புதிசு போல்ருக்கு என்று அவரைப்பற்றித் தெரியாதவர்கள் கூறினார்கள். தம்பி…ஆபீஸ் எப்படி ஃபங்ஷன் ஆகுதோ அதுபடி ஒத்துப் போகப் பாருங்க…அதுதான் உங்களுக்கு நல்லது….என்றார்கள். காலைல பத்துலேர்ந்து, சாயங்காம் அஞ்சரை வரை ஃபங்ஷன் ஆகுது…நான்தான் முன்னாடியே வந்து, பின்னாடிதானே போறேன்…வேறென்ன ஒத்துப் போகணும்? என்றார். இந்த பதில் இருப்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டியது. இவன் நம்மை கிண்டல் பண்றான்யா…இருக்கட்டும்…இருக்கட்டும்…ஒரு நாளைக்கு வசமா ஆப்பு வைப்போம்….என்று கருவிக் கொண்டார்கள். எண்ண அளவில் பலரையும் தொந்தரவு செய்தது அவரது இருப்பு.

இந்த மாதம் உங்க டர்ன்….டிரஷரிக்குப் போறது, பில் பாஸ் பண்றது, கேஷ் பண்றது…எல்லாம் நீங்கதான்… என்று மேலாளர் சொன்னபோது, ம்ம்…போறேன்….என்று ஆள் கிளம்பியாச்சு. அங்க போனாலும் பிரச்னைதான். சார்…என் ஜி.பி.எப்…என்னைக்குப் பாஸ் பண்றது…என்னைக்கு நான் பணத்தக் கண்ணால பார்க்குறது? இந்தாள அனுப்பிச்சா வேலையாகுமா சார்…நானே போறேன்….என்று கிளம்பினார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்றார்கள். உனக்கு வேணும்னா நீ கொடு…எனக்கென்னய்யா வந்திச்சு? பில் ப்ராப்பரா இருக்குன்னா பாஸ் பண்ண வேண்டியதுதான அவன் வேலை? அதுக்கென்ன கை நீட்டுறது? ஒழுங்கா பாஸ் பண்ணுங்கன்னுதான் என்னால சொல்ல முடியும்…தரகு வேல பார்க்குறது எல்லாம் என்னால ஆகாது….. அந்த வாரத்தில் டிரஷரிக்குப் போவது நின்றது. ஆபீஸ்ல உட்கார்ந்து, இருந்த எடத்துல வேலயப் பார்க்குறதுக்குத்தான் சார் அந்தாளு லாயக்கு….நான் போறேன் சார்…என்று கில்லாடி சிலர் வலியக் கிளம்பினார்கள். பில் பாஸ் பண்ண, கேஷ் வாங்க என்று கிளம்பினால் மத்தியானம் சாப்பாட்டுக்கு மேல் நாலு மணி போல் மீண்டும் ஆபீஸ் வந்து, ஒரு மணி நேரம் பேருக்கு பெஞ்சைத் தடவி விட்டு வீட்டுக்குக் கிளம்பி விடலாமே…! இந்த வசதி ஆபீசிலேயே ஆணியடித்தாற் போல் உட்கார்ந்து கிடப்பதில் கிடைக்குமா? ஏதாச்சும் அவசர ஃபைல் என்றால் அவர்களே, அதாவது மேலாளரே எடுத்து செய்து கொள்வார்…பொறுப்பு விட்டது. அநாவசிய டென்ஷன் கிடையாது….டிரஷரி என்று கிளம்ப, அந்த வளாகத்தில் நண்பர்களைப் பார்க்க,பேச…டீக்கடையில் போய் நிற்க, வடையைத் திங்க…என்று பொழுது கழியும்…அந்த சுகம் எங்கு கிடைக்கும்? 

என்ன..உங்க சர்வீஸ் ரிஜிஸ்டரைப் பார்த்தா எல்லாம் ஒரு வருஷம், ஒன்றரை வருஷம், அதிக பட்சம் ரெண்டு வருஷம்னே இருக்கு…? எங்கயுமே நிலைக்கல போல்ருக்கு… ஏனிப்படி…? என்று அலுவலக மேலாளர் கேட்டதற்கு….எனக்கென்ன தெரியும் சார்…போட்டாங்க…போனேன்…என்று பட்டுக் கொள்ளாமல் பதில் சொல்லி அமைதியாகி விடுவார்.  அவரை யாரும் அதற்குமேல் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தது என்பதுதான் உண்மை. வேலையில் கச்சிதமான ஆளாயிற்றே….

கொஞ்சம் கொஞ்சமாய் வைங்க…எதுக்கு ஒரே நாள்ல இத்தனை ஃபைலை இறக்குறீங்க…? வேலையே செய்யாத ஆட்களுக்கு மத்தியில் இப்டி ஒரு பிரகிருதி….என்று ஒரு நாள் மேலாளர் முனகியது எப்படியோ அவர் காதுக்குப் போய்விட்டது. சின்சியரா வேலை செய்றவனை பாராட்டாட்டாலும், குத்தம் குறை சொல்லாமயாச்சும் இருக்கலாம்ல…அதுக்கு வக்கில்ல இங்க….என்றுவிட்டார் பதிலுக்கு. இந்த பதிலும் மேலாளரின் காதுக்குச் சென்று விட்டதுதான். வேறென்ன….அடுத்தாற்போல் டிரான்ஸ்ஃபர்தான். தயாராயிருக்கச் சொல்லு அந்தாள….! அட போய்யா…இந்த மடம் இல்லன்னா…சந்த மடம்….இதுதான் அவரின் பதிலாய் இருந்தது. சுதந்திரநாதன் என்று யார் பெயர் வைத்தது இவருக்கு என்று நினைத்துக் கொண்டேன் நான். இவரைப்பற்றி விசாரித்த இடத்திலெல்லாம் இப்படித்தான் சொன்னார்கள்….நல்ல ஆள்தாங்க…ஆனா ஒத்துவரமாட்டாரு…-ஊர் பூராவும் இதே பேச்சாயிருந்தது. மாறுதல் என்கிற பெயரில் உள்ளூரிலேயே இவரை வேறு ஆபீசுக்கு மாற்றி விடலாமென்றாலும்…எனக்கு வேண்டாம்…உனக்கு வேண்டாம் என்றார்கள்.சரி…பாவம் போகட்டும் என்று பக்கத்தில் எதாச்சும் ஊருக்கு அனுப்புவோமென்றாலும், தன் விருப்பத்தைத் தெரிவிப்பதில்லை அவர். அதெல்லாம் என்னால எதுவும் கேட்க முடியாது சார்…நீங்க எங்க போடணுமோ போடுங்க…எனக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லை…போற எடத்துல வேலை செய்தா சம்பளம் கிடைக்குமுல்ல…அது போதும் எனக்கு….என்று முறித்துச் சொன்னார். இவரின் இந்த பதிலிலேயே டென்ஷனாகிப் போனார்கள் பலரும். பல மாதங்களாய்க் காலியாய்க் கிடக்கும் இடத்திற்குத் தூக்கியடித்தார்கள். அங்க போய் குப்பையாக் கிடக்கும் ஃபைல்களைக் கட்டியழட்டும்…என்று அவர் காது கேட்கவே சொன்னார்கள்.

அவர் மறுத்தது ஒன்றே ஒன்றைத்தான். தணிக்கைப் பிரிவில் போட்டார்கள் ஒரு முறை. ஊர் ஊராய்ப் போகும் வேலை அது. இங்கிருப்பதை விட அது மேல் என்று கிளம்பினால் அதுவும் ஒத்து வரவில்லை. எனக்கே சந்தேகமாய்த்தான் இருந்தது. நான் பரிபூர்ணமாய் நிறைந்திருக்கும் இடம் அது. தணிக்கை மறுப்புப் பத்திகள் நிறைய எழுதிக் கையில் வைத்துக் கொண்டு அலைவார்கள் குழுவினர். கடைசி நாளில்தான் அறிக்கை தயாரிக்கப்படும். அதுவரை மறுப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்துவிட்டால் அந்தப் பத்திகளை எடுத்து விடலாம். அதுவும் திருப்திகரமாய் இருந்தாக வேண்டும். திருப்திகரமாய் இருந்தாலும் இது சரியில்லை, அது சரியில்லை என்று சொல்லி அல்லாட விடலாமே…பேரம் படிய வேறு என்னதான் வழி…! பேரம் படிந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள் மறுப்பாவது ஒண்ணாவது….அந்தப் பத்திகளே காணாமல் போகும். அப்படிக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டவை ஏராளம்…ஏராளம்…இப்படியெல்லாம் உலவும் குழுவில் இந்தாளைக் கொண்டு போட்டால் விளங்குமா? தணிக்கைக் குழுவிற்கு என்று உள்ள கண்காணிப்பாளரே சொன்னாலும் கேட்கமாட்டானே இந்த ஆள். அதெல்லாம் முடியாது சார்…டிஃபெக்டை ரெக்டிஃபை பண்ணச் சொல்லுங்க…அப்ஜெக்ஷனை டிராப் பண்றேன்…இந்த ஒரே பதிலைத்தான் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் சுதந்திரநாதன். என்னடா இது வம்பாப் போச்சு….பூனைய மடில கட்டிட்டு சகுனம் பார்த்தாப்போல ஆயிடுச்சே…என்று மறுநாளே எனக்கு இந்த ஆள் வேண்டாம்…வேறே டீமுக்கு மாத்துங்க…இல்லன்னா எதாச்சும் ஆபீஸ்ல தூக்கிப் போட்டுக்குங்க…என்று கையைக் கழுவினார் க.கா. நம்மாளா அசறுவது? நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு கமுக்கமாய்க் கிடந்தார். இருடி இரு…ஆர்டர் வந்திட்டிருக்கு உனக்கு…என்று கறுவினர் குழுவிலுள்ளோர். மயிரக் கட்டி மலையையே இழுப்பன்யா நான்…போய்யா…அதுக்கெல்லாம் வேறே ஆளப்பாரு…. என்று நம்மாள் நிற்க….ஆடிட் பிரிவு அத்தோடு முடிந்தது தனிக் கதை.

எதற்கும் ஆள் அசருவதாய் இல்லை. இவங்கள மாதிரி ஈனப் பிழைப்புப் பிழைக்கிறதுக்கு, போட்ட எடத்துக்குப் போறது ஒண்ணும் தப்பு இல்ல……என்று விட்டு மொத்தமாக ஆபீசைப் பார்த்து, எல்லாருக்கும் வர்றேன் என்று ஒரே கும்பிடாய்ப் போட்டுவிட்டுக் கிளம்பி விட்டார். இதற்குப் பெயர் மன தைரியமா? நேர்மையா? வீம்பா? அல்லது அசட்டுத் துணிச்சலா? என்று தோன்றும் பார்ப்பவர்களுக்கு. நாளைக்கு இவருக்குக் கல்யாணம் ஆச்சின்னா அந்தப் பொண்ணை வச்சு காப்பாத்துவானா இந்தாளு? இல்ல அந்தப் பொண்ணும் கோவிச்சிட்டுப் போயிடுமா இவனோட எப்டிக் குப்பை கொட்டுறதுன்னு? சுத்தக் கிராக்கா இருப்பான் போல்ருக்கே…-இப்படித்தான் சொன்னார்கள் எல்லோரும்.

எனக்குத்தான் இவரை நினைக்க நினைக்கப் பரிதாபமாய் இருந்தது. ஊரோடு ஒத்து வாழ் என்று இல்லாமல் இப்படி விநோதமாய் அலைகிறாரே…? என்று. ஒரே பிரச்னை அதுதான். இவ்வளவு வேண்டும், அவ்வளவு வேண்டும், இவ்வளவு கொடுத்தால்தான் செய்வேன், அவ்வளவு கொடுத்தால்தான் நடக்கும் என்று டிமாண்ட் பண்ணாமல், கொடுப்பதை வாங்கிக் கமுக்கமாய்ப் பையில் போட்டுக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் எந்த வம்புமில்லையே…! இந்த எளிய சூட்சுமம் இந்தாளுக்குத் தெரியவில்லையே…தெரியவில்லையா அல்லது தெரிந்தும் தெரியாதது போலிருக்கிறாரா? அட அது கூட வேண்டாம்…எனக்கு வேண்டாம்…ஆனால் என் பங்கை ஆபீசில் எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்து விடுங்கள்…என்று சொன்னாலே போதுமே…தோளில் வைத்துக் கொண்டாடுவார்களே…! கை நீட்டி வாங்கத்தான் வேண்டாம்…அவ்வப்போது பஜ்ஜி, வடை, காபி என்று வரும்போதாவது எதையும் கண்டு கொள்ளாமல் வாயில் ஊற்றி, வயிற்றில் போட்டு வைக்கலாமில்லையா? அதையும் மறுத்தால்? அதனால்தானே எல்லோருக்கும் கோபம் வருகிறது? மந்தையில் ஒரு ஆடு மட்டும் எப்படித் தனித்து மேய முடியும்? எதையோ மடியில் கட்டிக் கொண்டு ஜோசியம் பார்க்க முடியுமா? என்றதுபோல் இந்தாளைக் கண்ணுக்கு முன்னே வைத்துக் கொண்டு எந்தக் காரியத்தைத்தான் செய்ய முடியும்? என்றாவது, எதையாவது செய்து வைத்தால்? எகனைக்கு முகனையாக எதிலாவது மாட்டி விட்டு விட்டானென்றால்? விதிமுறைகளும், நடைமுறைகளும் நன்கு அறிந்தவன்…யாரிடமும் எந்த உதவிக்கும் நிற்காதவன், யாரையும் எதற்கும் அணுகாதவன்…அவசியமில்லை என்று நெஞ்சை நிமிர்த்துபவன்…யார்தான் விரும்புவார்கள்? இப்போது இவர் இருக்கும் ஸ்டேஷன் 13-வது. நம்பரே சரியில்லை. எத்தனை நாளைக்கோ இது? ஒரு பணியாளருக்கு மூன்றாண்டுக்கு மேல்தான் ஒரு அலுவலகமே மாறும். அதுவும் உள்ளூரில். இவர் ஊர் ஊராய்ப் பயணிக்கிறார். அவரது இருப்பு அவரை அப்படி அலைக்கழிக்கிறது. மாதக் கணக்கில்தான் ஒரு அலுவலகத்தில் இவர் பணியாற்றியிருக்கிறார். வருடக் கணக்கு என்கிற நாமதேயமே இவர் சரி்த்திரத்தில் இன்றுவரை இல்லை.  அநேகம் பேருக்கு சுதந்திரநாதன் எங்கிருக்கிறார்? எந்த மாவட்டத்தில் பணி புரிகிறார் என்பதே தெரியாது. அவரைப் பற்றிய கவனமும் எவருக்குமில்லை. இன்ன இடம் என்று நிலையான ஒரு முகவரி இல்லைதான் அவருக்கு. இப்போது எந்த ஊரில் எந்த அலுவலகத்தில் பணிபுரிகிறார் என்று அவர் வீட்டுக்கே தெரியுமோ என்னவோ? இப்படியாகத்தான் அவர் சர்வீஸ் கழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சமயம் நினைத்துப் பார்க்கும்போது என் மனமும் வேதனையுறுகிறதுதான். நம்மால் ஒரு நேர்மையான பணியாளர் இவ்வளவு அவதியுற வேண்டியிருக்கிறதே என்று நினைக்கையில் என் மனமும் கசிகிறதுதான். இன்னொரு செய்தி….விரைவில் அவருக்கு மேலாளர் பதவி உயர்வு வேறு வரவுள்ளது என்பதுதான் அது. 

எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ அல்லது நான் அவரிடம் மாட்டிக் கொண்டு எப்படி முழிக்கப் போகிறேனோ…? எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நான் போய் ஆண்டவனைச் சொல்கிறேனே என்று தோன்றுகிறதா? அப்பொழுதாவது அவருக்கு ஒரு நிரந்தர முகவரி கிடைக்கட்டுமே என்றுதான். அதிலாவது ஓரிடம் என்று அவர் நிலைக்க மாட்டாரா? அவர் குடும்பம் செழிக்காதா? மகிழ்ச்சியாக இருக்காதா? அந்த நந்நாளுக்காகக் காத்திருக்கிறேன் நான். பிறகு சாவகாசமாய் கடைசி காலத்திலாவது அவரை மசிய வைக்க முயலலாமே?

நான் அவருக்காக இப்படி ஏங்கிக் கொண்டிருக்க அந்த அதிசயம் நடந்தே விட்டது. சுதந்திரநாதன் எப்படியோ மீண்டும் தன் குடும்பம் இருந்த ஊருக்கே போஸ்டிங் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். இந்த அதிசயம் எப்படி நடந்தது. யாராலேயும் நம்ப முடியவில்லை. என்னால் ஊகிக்க முடிந்தது. மேலாளர் பதவி உயர்வில் சொந்த ஊர் வந்திருந்தார். ஒரு பணியாளர் ஓய்வு பெறும் கடைசி வருடத்தில் அவரை இடமாற்றல் செய்யக் கூடாது என்று ஒரு விதி உள்ளது. அதன்படி ப்ரமோஷன் லிஸ்டில் இருக்கும் அவரை வேண்டா வெறுப்பாகத் தூக்கியடித்தது தப்புதான். அடங்கிக் கிடந்தால்தானே? ஆனால், அதற்குள் இந்தப் பதவி உயர்வு கைக்கு வந்துவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான். எந்த அலுவலகத்தில் யாருக்கும் மசியாத, சீனியர் எழுத்தராய் அவர் இருந்து கழித்தாரோ அதே அலுவலகத்தில், அவர் அன்றாடம் சண்டையிட்ட, பலருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்த, யாருக்குத் தினமும் பொழுது விடிந்து பொழுது போனால் தலைவலியாய் இருந்தாரோ அவரைத் தூக்கி விட்டு விட்டு அந்த இடத்தில், அதே இடத்தில், மனதில் கறுவியது போல், சபதம் நிறைவேற்றியது போல் வந்து அமர்ந்தார் சுதந்திரநாதன்.

கடைசி ஒரு வருடத்துக்கு உள்ளூருங்கிற சலுகைல இப்டிக் கூட ஒருத்தன் வந்து உட்கார முடியுமாய்யா? அதுவும் அந்தத் திமிங்கிலத்தல்ல தூக்கி விட்டிருக்கான்? எப்டிய்யா நிகழ்ந்தது இந்த அதிசயம்? எவ்வளவோ செல்வாக்குல மிதக்குற அந்தாளுக்கு இம்மியும் தெரியாம இது நடந்து போச்சேய்யா…? இதப் பெரிய பிரஸ்டிஜ் இஷ்யூவால்ல அவரு நெனப்பாரு…?

எல்லோரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இனி என்ன நடக்குமோ என்கிற பயத்தில் நாமும் வேணும்னா எடத்த மாத்திக்குவமா என்று சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். கட்டக் கடைசியாக நான்தான் அங்கே பயன்பட்டிருப்பேனோ என்கிற சந்தேகம் மட்டும் எனக்குள் விடாது நமுட்டிக் கொண்டிருந்தது. முதலும் கடைசியுமா ஒரு தடவை…ஒரே ஒரு தடவை நான்தான் ஜெயிச்சேன். சுதந்திரநாதன்….தந்திரநாதனானது எனக்கு மட்டும்தான் தெரியும். ஒருவேளை நாள் செல்லச் செல்ல மற்றவர்களுக்கும் தெரிய வரலாம். ஆயிரந்தான் சொல்லுங்க…மனுஷன் சுயநலமானவன்தான். இல்லன்னா இப்படிப்பட்ட கல்லுளிமங்கனையும் நான் அசைச்சுப் பார்க்க முடியுமா? பிரகிருதின்னா அசலானவன்னு அர்த்தம். இயற்கையா…இயல்பானவன்னும் பொருளுண்டு. கடைசியா அந்த அசல நகலாக்கிட்டேன் பார்த்தீங்களா? அவன் இயல்பையே மாத்திட்டேன். அப்போ யார் ஜெயிச்சா? நான்தானே…!!! 

*******

ushaadeepan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. திரு.லோகநாதன் பாலமுருகன்
    ===========================
    பிரகிருதி….
    திரு உஷாதீபன் அவர்கள் நாட்டில், ஒவ்வொரு அலுவலகத்திலும் நிகழும் நிகழ்வை அப்படியே நம் கண் முன் கொண்டுவந்திருப்பார். அவர் இங்கு அலசி ஆராய்ந்த விஷயமானது இந்த நிகழ்காலத்திலும் நடந்த வண்ணமாக இருக்கிறது. ஆம் அதற்கு ஒரு விடிவு காலமே வராதா? இப்படியே தான் அதனுடன் நாம் அனைவரும் போராடவேண்டுமா? இந்த நிலைக்குக் காரணம் இந்த சமுகமா அல்லது ஒவ்வொருத் தனி மனிதனும் தன்னிடத்தில் இருக்கும் அலட்சியப் போக்கினால்! இவை இன்றும் எல்லா இடங்களிலும் செயல்பட்டு வருகின்றனவா? யார் காரணம்? யோசித்துப் பார்த்தால் பெரும்பாலோனோர் நமக்கு ஏன் இந்த ஊர் வம்பு! அவன் அப்படிச் செய்கிறான் நாமும் அப்படியே செய்தால் என்ன என்று எண்ணுவது தான் முதல் காரணம். ஏனென்றால் நாம் உண்மையாக, நேர்மையாக, ஒழுங்காக நடந்தோமேயானால் நம்மை, அனைவரும் ஒன்று சேர்ந்து முட்டாள் என்றும், பிழைக்கத் தெரியாதவனென்றும் கூறுவர்.

    இதுவரையில் நாம் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று பார்க்கிறீர்களா? எப்போது ஒரு மனிதன் தன்மானத்தை இழக்கிறானோ மற்றும் அவன் ஒழுங்காக நடப்பதிலிருந்து தவறும் போது, உண்மையிலிருந்து விடுபடும்போது, மனசாட்சியை மறக்கும் போது என்று நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் தங்களுக்குப் பிடிபடவில்லையா ஆம் எழுத்தாளர் திரு உஷாதீபன் பிரகிருதி என்று ஒரு சிறுகதையாக நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆம் லஞ்ச லாவண்யம் பற்றியே.

    கதையின் நாயகன் சுதந்திர நாதன். இந்த கதையைப் படிக்கும் போதுதான் ஒரு எழுத்தாளனால் கதையின் நாயகனின் பெயரைக் கதையின் மத்திய பகுதியில் கூடச் சொல்லலாம் என்று தெரியவரும். இந்த சுதந்திர நாதன் உண்மையானவன், உறுதியானவன், ஒழுங்கானவன், நேர்மையானவன். அவனை யாராலும் அசைக்க முடியவில்லை, ஒரு இடத்திலும் அவன் சலனம் அடையவில்லை. அதனாலேயே அவன் பல அலுவலகத்தில் வேலை மாற்றலாகிச் செல்லவேண்டிய சூழ்நிலை. இந்த முப்பத்து மூன்று வருடங்களாகலம், சுதந்திரநாதனை பார்த்துப் பார்த்துப் பிரமித்துப் போய் இந்த ஒருவன் நாயகனைப் பற்றிக் கூறும் கதையாக இங்கு எழுத்தாளர் கூறியிருப்பார். ஆனால் என் மனதில் பண நாயகம் இந்த நேர்மையான, உண்மையான நபரைப் பற்றி நமக்குக் கதையாகக்கூறுவது போல எண்ணிக்கொள்ளலாம் அதுவும் இந்த கதைக்குப் பொருத்தமாகவே இருக்கும். ஒருவர் பார்த்துப் பார்த்து இப்படியும் இருக்க முடியுமா இந்த நவீன உலகத்தில் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் ஒரு உண்மையை மட்டும் நாம் மறுக்க முடியாது இந்த கதையில் வரும் நபரை போல் ஓரிரு நபர்கள் ஆங்காங்கே இருப்பதனால் தான் என்னவோ பல நிறுவனங்கள் இன்றும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

    திரு உஷாதீபன் அவர்கள் கதைக்களத்தைத் தொய்வில்லாமல் நகர்த்திச்சென்றிருப்பார். இணையதளத்தில் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ.வாசகசாலை என்று அழுத்தவும் திரு உஷாதீபன் அவர்களின் பிரகிருதி( நேர்மை, உண்மை என்று பொருள்) கடைசியில் எறும்பு தேயத்தேயக் கல்லும் கரையும் என்பார்களே அது போலச் சுதந்திர நாதன் ஓய்வு பெறுவதற்கு முன்னால் மேலாளராக மாற்றலாகி தன் சொந்த ஊருக்கே வந்தார் அந்தக் கடைசி ஒருவருடம் அவரை அந்த பண நாயகம் ஒரு தடவை வென்றதாக எழுத்தாளர் முடித்திருப்பார். அவர் அத்துணை காலம் போராடியது வீணாகிப் போய்விட்டது என்று கதையை முடித்திருப்பார் எழுத்தாளர். எழுத்தாளருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.????????????????????????????????
    -பாலமுருகன்.லோ-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button