கடலும் மனிதனும்: 14- மௌனத்தின் கரைகள்: வனவிலங்குப் பாதுகாப்பு பற்றிய சில படிப்பினைகள்
- நாராயணி சுப்ரமணியன்
உலகின் மிகப்பெரிய மீன் இனம் இது. சராசரியாக நாற்பது அடி நீளம், இருபது டன் எடை கொண்ட பிரம்மாண்டமான விலங்கு. வாயின் சராசரி அகலம் மட்டுமே ஐந்து அடி! தோலின் ஆழம் 15 சென்டிமீட்டர்! மிதவை விலங்குகளையும், சிறு மீன்களையும் உண்ணும் சாதுவான விலங்கு. சுறா இனத்தைச் சேர்ந்தது என்பதாலும், அளவில் பெரியதாக இருக்கிறது என்பதாலும் இதற்கு சூட்டப்பட்ட ஆங்கிலப் பெயர் Whale shark (திமிங்கில சுறா). தமிழில் அம்மிணி உளுவை, வளுவம், பனைமீன், பனைவாயன், புள்ளியன்சுறா என்று பல பெயர்கள். மடகாஸ்கர் மொழியில் “பல கோடி நட்சத்திரங்கள்” என்ற பொருள் தரும் கவித்துவமான பெயரும் உண்டு.
“இது நம்மள ஒண்ணும் செய்யாது, சாதுவான மீன். ஆனா சின்ன படகு, கட்டுமரம் வெச்சிருந்தோம்னா சும்மா மோதிச்சின்னாலே படகு கவுந்துடும். அதுனால இந்த மீனைப் பார்த்தாலே படகை தூரமா கொண்டு போய்டுவோம்” என்பதே இந்த மீனைப் பற்றிய தமிழக மீனவர்களின் பொதுவான பார்வை.
திமிங்கில சுறாவை விவரிக்கிற பல அறிவியலாளர்கள், “elusive” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். “கைக்கு அகப்படாமல் மறைந்துவிடுகிற“, “எளிதில் பிடிபடாத” என்று இதற்குப் பலவிதமாகப் பொருள்கொள்ள முடியும். மனிதர்களுக்கும் திமிங்கில சுறாவுக்கும் இடையிலான உறவுகூட நம் புரிதலுக்கு அகப்படாமல் நழுவிக்கொண்டேபோகிற ஒன்றுதானோ என்று அடிக்கடித் தோன்றும். 1768ல் இந்த மீன் பற்றிய முதல் வரலாற்றுப் பதிவு எழுதப்பட்டிருக்கிறது. பழங்கால இலக்கியங்கள் தொடங்கிப் பல வரலாற்றுக் குறிப்புகளில் இந்த மீனுக்கு இடம் உண்டு. ஆனால் இன்றுவரை இந்த மீன் எங்கே போகிறது, இதன் வலசைப்பாதை எது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. குட்டிபோடும் இனமான இந்த மீன் குட்டிபோடும் நிகழ்வு என்பது இத்தனைகால அறிவியல் வரலாற்றில் இன்னமுமே ஆவணப்படுத்தப்படவில்லை. இந்த மீனின் இனப்பெருக்கம், சூழலியல் பற்றிய பல தகவல்கள் இன்னும் யூகங்களாக மட்டுமே புகைமூட்டத்துக்குள் ஒளிந்துகொண்டிருக்கின்றன.சுற்றியுள்ள எல்லா மீனவ கிராமங்களிலும் இந்த மீனின் புகைப்படத்தைக் காட்டிவிட்டு “இந்த மீனைப் பார்த்தோம்” என்ற தகவலைச் சுமந்துவருகிற ஒரு தொலைபேசி அழைப்புக்காக வாரக்கணக்கில் காத்திருக்கும் பல அறிவியலாளர்களை அறிவேன்.
இன்னொரு பக்கம் பெரிய நகைமுரணாக, இந்த மீன் வணிகரீதியாக சுரண்டப்படுவதும் இதன் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருவதும் நடந்துகொண்டே இருக்கிறது. “ஏதாவது ஒரு புதிய தகவல் கிடைத்துவிடாதா?” என்று ஏங்கிக்கொண்டிருக்கும் அறிவியலாளர்கள் ஒருபக்கம் என்றால், சர்வதேச சட்டங்களின் மூக்குக்குக் கீழேயே திமிங்கிலசுறாக்களை ஏற்றுமதி செய்யும் ரகசிய தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. அவர்களைப் பொறுத்தவரை இந்த மீன் ஒரு சராசரியான ஏற்றுமதிப்பண்டம், அவ்வளவுதான்.
மனிதனுக்கும் திமிங்கில சுறாவுக்குமான இந்த சிக்கலான பிணைப்பிற்கு இன்னொரு நெகிழ்ச்சியான முகமும் உண்டு. அழிந்துவருகின்ற ஒரு உயிரினத்தைப் பற்றி உள்ளூர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையே அந்த விலங்குக்குப் பாதுகாவலர்களாக மாற்றிய ஒரு வெற்றிக்கதை அது.
குஜராத்தின் சௌராஷ்டிரா கடலோரத்தில், 1980களில் தொடங்குகிறது இந்தப் பயணம். அதிகமாக விவசாயம் செய்ய முடியாத ஒரு நிலப்பகுதியில், உப்பு மற்றும் அதுசார்ந்த தொழிற்சாலைகளும் மீன்பிடித்தொழிலும் மட்டுமே வாழ்வாதாரங்களாக இருந்துகொண்டிருந்தன. இந்தக் கடலோரப் பகுதிகளில் அடிக்கடி தென்படுகிற மீன் அது, சாம்பல் அல்லது கருநீல நிறத்தில், வெள்ளைப் புள்ளிகளுடன் பார்ப்பதற்கே வித்தியாசமாகத் தெரியும் பெரிய மீன். உணவுக்கோ விற்பனைக்கோ எந்த வகையிலும் பயன்படாத மீன் என்றாலும் இந்த மீனின் மிகப்பெரிய கல்லீரலிலிருந்து கிடைக்கும் எண்ணெய் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. தொடர்ந்து கடலில் இயக்கப்படும்போது மரப்படகுகள் உப்புநீரில் ஊறிவிடாமல் இருக்க (Waterproofing) இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.கல்லீரலிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்க தனியாக எந்த ஒரு தொழில்நுட்பமும் தேவையில்லை என்பது கூடுதல் வசதி. ஒரு பெரிய திமிங்கிலசுறாவைப் பிடித்துவிட்டாலே பல லிட்டர் எண்ணெயை எளிதில் செலவின்றிப் பெற்றுவிடலாம்!
1990கள் வரை நிலைமை இதுவாகத்தான் இருந்தது. அவ்வப்போது பிடிக்கப்படும் திமிங்கில சுறாவின் கல்லீரலை மட்டும் வெட்டி எடுத்துக்கொள்வார்கள், மற்ற பகுதிகள் குப்பையில் எறியப்படும்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தாய்வான் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இந்த மீனுக்குக் கிராக்கி அதிகமானது. வெள்ளை நிறத்தில் திடமானதாக இருந்த இந்த மீனின் இறைச்சி பெரிதும் விரும்பப்பட்டது. சோயா பாலாடைக்கட்டி போலவே இந்த மீனின் இறைச்சி மென்மையாக, வெண்ணிறமாக இருந்ததால் “Tofu Shark” என்ற காரணப்பெயரோடு இந்த மீன் கடைகளில் விற்கப்பட்டது.
இந்த வணிகத்தின் அதிர்வலைகள் குஜராத்தையும் எட்டின. கல்லீரல் எண்ணெயை மட்டுமே எடுத்துக்கொண்டு வீணாகத் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்த ஒரு மீனுக்கு வணிகரீதியாகவும் மதிப்பு இருக்கிறது என்பது இனிப்பான செய்தியாக வந்து இறங்கியது. காலப்போக்கில் சீனாவின் சுறா துடுப்பு வணிகத்துக்குள்ளும் இந்த மீனின் பெயர் இணைக்கப்பட்டது. திமிங்கில சுறாக்களின் துடுப்புகளும் நல்ல விலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்லி இந்த மீனின் குருத்தெலும்புகளையும் வணிகர்கள் நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டார்கள்.
முற்றிலும் புதிய, லாபகரமான ஒரு மீன்வேட்டை ஆரம்பமானது.
“கயிறு கடையாத்த கடுநடை எறி உளி” என்ற வரிகளில், கயிற்றோடு ஒரு நீண்ட கழியை எறிந்து திமிங்கிலத்தைப் போன்ற பெரிய மீன்களை பரதவர்கள் பிடிப்பார்கள் என்று பதிவு செய்கிறது குறுந்தொகை (188). திமிங்கிலங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் Harpoon என்ற கருவியோடு இதைப் பொறுத்திப் பார்க்கலாம். வலைகளுக்குள் அடங்காத பெரிய மீன்களைக் கையாளுவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள மீனவத் தொல்குடிகள் பயன்படுத்தும் யுத்தி இது.
இந்த மரபை ஒட்டியே ஒரு நீண்ட கழி, நைலான் கயிறுகள், சில ப்ளாஸ்டிக் பீப்பாய்கள் ஆகியவற்றோடு திமிங்கிலசுறாவைத் தேடிப் புறப்பட்டார்கள் சௌராஷ்டிராவின் மீனவர்கள். பிடிக்கும் மீனையோ அல்லது வலைகளையோ கடலின் மேற்பரப்பிலேயே வைத்துகொள்வதற்கு சில மிதவைகள் தேவை. இந்த மிதவைகள் தமிழகக் கடலோரப்பகுதிகளில் போயா என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Buoy என்பார்கள். பொதுவாக மிதவைகள் சிறிய பந்துபோலத்தான் இருக்கும்,ஆனால் இந்த மீன் அளவில் மிகப்பெரியது என்பதால் பெரிய ப்ளாஸ்டிக் பீப்பாய்கள் தேவைப்பட்டன.
சில நாட்களுக்குள்ளேயே இந்த மீனை வெற்றிகரமாகப் பிடித்துக் கரைக்குக் கொண்டுவரும் வித்தையை செழுமைப்படுத்தினார்கள் சௌராஷ்டிரா பகுதி மீனவர்கள். பெரிய துண்டங்களாக மீனை வெட்டி ஏற்றுமதிக்கான வணிகர்களிடம் மீனை விற்றுவிடுவார்கள். மீனவர்கள் தங்களது சிறு படகுகளில், உயிரையே பணயம் வைத்து இந்த மீனைக் கரைக்கு இழுத்து வருவார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் நிகர லாபத்தை விடவும் பலமடங்கு அதிகம் சம்பாதித்தார்கள் ஏற்றுமதி வணிகர்கள். ஆனால் மற்ற மீன்களிலிருந்து கிடைக்கும் லாபத்தை விடவும் ஒரே ஒரு திமிங்கில சுறாவிலிருந்து கிடைக்கும் வருமானம் அதிகம். ஆகவே இந்த மீனைத் தேடி வேட்டையாடுவது அதிகரித்தது. இது பல வருடங்கள் தொடர்ந்து நடந்தது. மீன்பிடி முறையில் பீப்பாய்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த மீனை Barrel fish என்று குஜராத்தி மொழியில் அழைக்கத் தொடங்கினார்கள் உள்ளூர் மக்கள்.
இந்த சூழ்நிலையில்தான் திமிங்கில சுறாவைப் பற்றிய பல குழந்தைப்பருவ நினைவுகளுடன் குஜராத் கடற்கரையில் வந்து இறங்கினார் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் மைக் பாண்டே. மூன்று வருடங்கள் தொடர்ந்து களப்பணிகளில் ஈடுபட்டு, குஜராத் கடற்கரைகளில் வேட்டையாடப்படும் திமிங்கில சுறாக்களை மையப்படுத்தி “Shores of silence” என்கிற ஆவணப்படத்தை 2001ல் வெளியிட்டார். “இந்தியாவில் திமிங்கில சுறாக்கள் கிடையாது” என்று நம்பிக்கொண்டிருந்த மேலைநாட்டு அறிவியல் உலகம் ஆவணப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. “மீனவர்கள் ஒரு கிலோ திமிங்கில சுறாவை வெறும் ஒரு ரூபாய்க்கு விற்கிறார்கள், ஆனால் ஏற்றுமதி மாஃபியாவைச் சேர்ந்தவர்கள் ஒரு கிலோவை 100 அமெரிக்க டாலர்கள்வரை விலைவைத்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்” என்பதுபோன்ற பல விஷயங்களை ஆவணப்படத்தின்மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் மைக் பாண்டே.
உலகெங்கிலும் ஆவணப்படம் பேசப்பட்டது. “பசுமை ஆஸ்கர்” என்று செல்லமாக அழைக்கப்படும் வைல்ட்ஸ்க்ரீன் பாண்டா விருது இந்த ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது. சுற்றுசூழல் ஆர்வலர்கள், வனவிலங்குப் பாதுகாப்பு இயக்கங்கள், சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் என்று பலரின் பார்வையும் குஜராத்தை நோக்கித் திரும்பியது. கள நிலவரம், மீனவர்களின் நிலை என்று பல்வேறு விவாதங்களை நடத்தத் தொடங்கியவர்கள், “சட்டரீதியான பாதுகாப்பு” என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்திற்குக் கீழ் இந்த விலங்கு பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்படவேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
முதலில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குத் தயக்கம் இருந்தது என்பதுதான் உண்மை. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன:
- மீன் இனங்களைப் பிடிப்பது, மீன்பிடித் தொழில் சார்ந்த வரையறைகள், விவாதங்கள் எல்லாமே மத்திய விவசாய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருபவை. ஆனால் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டமோ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருவது. ஆகவே இந்த மீனை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கொண்டுவருவது சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
- இந்தப் பாதுகாப்புச் சட்டத்தை முழுவதுமாக செயலாக்குவதில் களத்தில் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சில தயக்கங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
பல விவாதங்களுக்குப் பிறகு 2001ல் திமிங்கில சுறா பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டது. தேசிய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி இந்த மீனைப் பிடிப்பதும் கொல்வதும் குற்றம் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது! வனவிலங்குச் சட்டத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் மீன் இனம் இது! இந்த மிகப்பெரிய வரலாற்று நிகழ்வின் ஆரம்பப் புள்ளி ஒரு தனி மனிதனின் சொந்த முயற்சியில் எடுக்கப்பட்ட அந்த ஆவணப்படம்!
இந்த உரையாடல் சர்வதேசத் தளங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த பல சூழலியல் ஆராய்ச்சியாளர்கள், திட்ட வல்லுநர்களின் தொடர் அழுத்தம் காரணமாக, 2003ல் இந்த மீன் CITES பட்டியலில் சேர்க்கப்பட்டது. சந்தையில் எந்தெந்த விலங்குகளை விற்பதற்குத் தடை இருக்கிறது என்று அறிவுறுத்தும் சர்வதேசப் பட்டியல் அது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டதன்மூலம் திமிங்கில சுறாவுக்கான பாதுகாப்பு வளையம் சர்வதேச அளவில் உறுதிசெய்யப்பட்டது!
சட்ட வரையறைகள், கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே போதாது என்பதுதான் கள யதார்த்தம். இதை உணர்ந்த சூழலியல் செயல்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு குஜராத்தில் நிலைமையை ஆராய்ந்தனர். இந்த மீனைப் பற்றிய பொதுவான நம்பிக்கைகள், மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டார்கள். பிரம்மாண்டமான திமிங்கில சுறா பொம்மைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தினார்கள்.அதன்பிறகு ஒரு பரிசோதனை முயற்சியில் இறங்கினார்கள்.
ஆன்மீக சொற்பொழிவாளரான மொராரி பாபு என்பவர் 2003ல் ஒரு உரை நிகழ்த்தினார். பேச்சின் சாராம்சம் மதத்தைப் பற்றியதல்ல, குஜராத்தின் கடற்கரைகளில் வந்துசெல்லும் திமிங்கில சுறாவைப் பற்றியது! “பிறந்த வீட்டுக்குப் பிரசவத்துக்காக வரும் பெண்ணை நினைத்துப் பாருங்கள், அவளை நாம் எத்தனை ஆதுரத்துடன் வரவேற்போம். நமது கடற்கரைகளுக்கு வரும் இந்தத் திமிங்கில சுறாவும் அப்படித்தான்” என்று தொடங்கி, இந்தமீனைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றித் தொடர்ந்து பேசினார். “வாலி” (Vhali) என்ற பெயர் கொண்ட ஒரு பெண், பிறந்த வீட்டுக்கு பிரசவத்துக்கு வருவதையும், குட்டிகளை சுமந்துகொண்டு குஜராத் கடற்கரைகளுக்குத் திமிங்கில சுறா வருவதையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்து ஒரு நாடகமும் குஜராத்தின் பல ஊர்களில் நடத்தப்பட்டது.
திமிங்கில சுறாக்கள் பற்றிய பொதுமக்களின் நம்பிக்கை மெதுவாக மாற ஆரம்பித்தது. “பீப்பாய் மீன்” என்ற பெயரை விட்டுவிட்டு, இந்த மீனை வாலி என்று பலரும் அழைக்கத் தொடங்கினார்கள். இந்த மீனைப் பிடிப்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.
நேரடியாக இந்த மீன் பிடிக்கப்படுவதில்லை என்றாலும், தற்செயலாக இந்த மீன் வலையில் மாட்டிக்கொள்வது அடிக்கடி நடக்கும். இந்த மீன் பாதுகாக்கப்பட்ட மீன் என்பதால் இதைப் பிடிப்பது சட்டப்படி தவறு. ஆனால் இந்த மீனை விடுவிக்கவேண்டுமானால் வலையை அறுத்தாகவேண்டும். பல்லாயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள வலையை அறுப்பது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் வலையை அறுத்து மீனை விடுவிப்பதில் மீனவர்கள் தயக்கம் காட்டினார்கள். 2007ம் ஆண்டிலிருந்து மாட்டிக்கொண்ட திமிங்கில சுறாவை வலையை அறுத்து விடுவிக்கும் மீனவர்களுக்கு நஷ்ட ஈடு தரப்படுகிறது. அதே சமயம் இதை நடைமுறைப்படுத்துவதில் பல சறுக்கல்கள் இருப்பதாகக் குரல்கள் ஒலிக்கின்றன.
திமிங்கில சுறாவை வணிகநோக்கில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இந்தப் பிரச்சனை முற்றிலும் வேறு விதமாகத் தீர்க்கப்பட்டது. திமிங்கில சுறாவைத் தடைசெய்யப்பட்ட விலங்காக அறிவித்தவுடன், அதை நம்பியிருந்த பல மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு மாற்று வாழ்வாதாரமாக, “திமிங்கில சுறா சுற்றுலா” (Whale shark tourism) முன்வைக்கப்பட்டது. திமிங்கில சுறாவைப் பார்க்க, அதன் அருகில் நீந்த, புகைப்படம் எடுத்துக்கொள்ள சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதன்மூலம் மீனவர்களுக்கு ஒரு புதிய வருமானம் கிடைத்தது.
சுற்றுலாவுக்கு ஆதாரமாக இருக்கும் விலங்குகளைப் பாதுகாப்பதில் உள்ளூர் மக்கள் எவ்வளவு முனைப்பு காட்டுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அந்தமானில் உள்ள பல சிறு தீவுகளில், கடலுக்கடியில் மீன்களைப் பார்ப்பது ஒரு பிரபலமான சுற்றுலா செயல்பாடாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை இதற்காக அழைத்துவருவது, கடலுக்குள் கூட்டிச் செல்வது, தங்கும் வசதி, உணவு என்று இதையொட்டியே ஒரு சிறிய வணிகத் தளம் ஒருவாகிவிடும். அப்படிப்பட்ட இடங்களில் பொதுவாக மீன்பிடித் தொழில் நடத்தப்படாது. அது எழுதப்படாத ஒரு விதியாக இருக்கக்கூடும். மீன்களைப் பிடிப்பதற்காக விஞ்ஞானிகள் சென்றால்கூட “கடலுக்குள் சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிப்போய் இந்த மீன்களைக் காட்டித்தான் பிழைப்பு நடத்துகிறோம், நீங்கள் மீன்களைப் பிடித்துக்கொண்டு போய்விட்டால் எங்கள் நிலைமை என்னாவது?” என்று சொல்லித் தடுத்துவிடுவார்கள்!
துரதிருஷ்டவசமாக, இந்தியாவைப் பொறுத்தவரை “திமிங்கில சுறா சுற்றுலா” என்பது இன்றுவரை ஒரு எட்டாக் கனவு. திமிங்கில சுறாக்கள் அதிகமாகக் காணப்படும் கடற்பகுதிகள் எல்லாம் கலங்கல்தன்மை நிறைந்தவை. ஆகவே திமிங்கில சுறாக்களைக் கடலுக்கடியில் பார்ப்பதோ அவற்றோடு நீந்துவதோ இங்கே சாத்தியமில்லை. அதனாலேயே மாற்று வழிமுறைகளின்மூலமாக திமிங்கில சுறாக்களைப் பாதுகாப்பதைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பெரிய கப்பல்களில் அடிபட்டு திமிங்கில சுறாக்கள் தொடர்ந்து இறக்கின்றன, அவற்றைத் தடுப்பது எப்படி என்பதும் தீவிரமாக ஆராயப்படுகிறது.
“வனவிலங்குப் பாதுகாப்பை எப்படி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது?” என்பதற்கான உலகளாவிய பொது கையேடு கிடையவே கிடையாது. பல காரணங்களைப் பொறுத்து அது இடத்துக்கு இடம் மாறுபடும். அதிலும் வாழ்வாதாரமாக மாறிவிட்ட இதுபோன்ற ஒரு மீனைப் பாதுகாப்பது இன்னும் சிக்கலானது. “இந்த மீனைப் பிடிக்காதீங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு விலகிவிட முடியாது, மாற்று வாழ்வாதாரம் தொடங்கி அவர்களின் பல கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லியாகவேண்டும். சர்வதேசச் சந்தையில் இந்த மீனுக்கான தேவை எங்கிருந்து வருகிறது என்பதைத் தேடிப் போய், அதையும் அழித்தொழிக்கவேண்டும். இந்த மீன் தென்படும் கடலோரப் பகுதிகள் அனைத்தையும் ஆராய்ந்து, அந்தந்த நாடுகளில் எல்லாம் பாதுகாப்புக்கான சட்டங்கள் எப்படியிருக்கின்றன என்பதை சரிபார்க்கவேண்டும். எல்லாம் ஒரு புள்ளியில் இணைந்தால் மட்டுமே இதுபோன்ற விலங்குகளைப் பாதுகாக்கமுடியும்.
பீப்பாய் மீன் என்று அழைக்கப்பட்ட ஒரு மீனைப் பாதுகாக்க, இப்போது “வாலியின் நண்பர்கள்” என்ற பெயரில் மாநிலமெங்கும் சிறு அமைப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு ஆரம்பகட்ட, சிறிய வெற்றியாகக் கூடத் தெரியலாம், எதிர்காலம் இன்னும் குழப்பமான பல சவால்களைக் கொண்டுவரலாம். ஆனால் வனவிலங்குப் பாதுகாப்பைப் பொறுத்தவரை இதுபோன்ற சிறிய வெற்றிகளைப் பற்றிக்கொண்டுதான் தொடர்ந்து முன்னோக்கிப் பயணிக்கவேண்டியிருக்கிறது!
மனிதர்களின் அறிவியல் தேடலுக்கு அகப்படாமல் நீந்திக்கொண்டிருக்கும் திமிங்கில சுறா ஒரு பக்கம் என்றால், முழுக்கவே வணிகமயமாக மாறி, மனிதர்களிடம் மாட்டிக்கொண்ட மீனைத் தெரியுமா?
தொடரும்…
மிகவும் பயனுள்ள கட்டுரை.
இந்த திமிங்கல சுறா இனம் தமிழக கடல் பகுதிகளிலும் உண்டா.
இந்த இனத்தைக் காக்க நாம் என்ன பங்களிப்பு செய்ய வேண்டும், அதையும் அறிவுறுத்தினால்
முடிந்த அளவு உதவுவோம்.
நமது கடல்சார் பல்கலைக் கழக மாணவர்கள், ஆரய்ச்சியாளர்களின் பங்களிப்பு இதில் எந்தளவு இருக்கிறது.
மத்திய மாநில அரசுகள் இந்த சுறா இனம் காக்க ஏதாவது உதவி செய்கின்றனவா