இணைய இதழ்இணைய இதழ் 47கட்டுரைகள்

‘கைலி’ என்றொரு காலம் – இந்திரா ராஜமாணிக்கம்

கட்டுரை | வாசகசாலை

காலம் தன்னை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல பெயர்களோடு கூட உலாவரும். ‘கலர் சாப்பிடுறீங்களா?’ என்றொருமுறை தனக்கு அது பெயர் சூட்டிக்கொண்டிருந்தது. அப்போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு நிறமிருந்தது. சிலருக்கு மஞ்சள், சிலருக்கு சிவப்பு, அதிகம் பிரசித்தி பெற்றதெனில் கருப்பு. பத்திரிக்கை கொடுக்க, குசலம் விசாரிக்க, இரங்கலைத் தெரிவிக்க, சாலையில் எதிர்பட.. என யாராயிருந்தாலும் ஒரு ஸ்நேகப்பார்வைக்கான ஆரம்பகட்ட விருந்தோம்பலென்பது “கலர் சாப்பிடுறீங்களா”விலிருந்து தான் ஆரம்பித்திருந்தது. “ஓடிப்போய் அத்தைக்கு ஒரு கலர் வாங்கியா” என்று யாராவது யாரையாவது விரட்டிக்கொண்டே இருந்தனர். பெட்டி நிறைய விதவிதமான நிறங்களில் கலர்களை வைத்துக்கொண்டு தெருமுக்குக்கடை ஆசாமிகள் காத்துக்கிடந்தனர். “ஆரஞ்சு வேண்டாம், கருப்புக்கலர் குடுங்க, வெயில்ல வந்திருக்காக”

பிரியங்களை நிறங்கள் மூலம் வெளிப்படுத்துவது ஒரு வகையெனில் எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்துவது இன்னொரு வகை. ஆம்! காலம் தனது பெயரை ‘கடிதங்கள்’ என்றும் சொல்லிக்கொண்ட வேளை அது.

போஸ்ட் கார்டுகள், இன்லேண்ட் லெட்டர்கள், தபால் உறைகள், வாழ்த்து அட்டைகள், ஏர்மெயில்கள் என, உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு ஏற்றாற்போல கடிதங்களின் அளவுகோல்கள் மாறியிருந்த காலகட்டம் அது. தனது மகள் எல்.கே.ஜி தேர்ச்சியடைந்துவிட்டதாக பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட போஸ்ட் கார்டை இன்னமும் பத்திரமாக வைத்திருக்கும் அப்பாக்கள், “என் கன்னுக்குட்டிக்கு” என்று ஆரம்பிக்கும் காதல் கடிதங்களை பிள்ளைகளுக்குத் தெரியாமல் ஒளித்துவைத்திருக்கும் அம்மாக்கள் என கடிதங்களுக்கான பத்திரப்படுத்தல் விதிமுறைகள் சுவாரஸ்யமானவை. நகைக்கடன் நோட்டீஸ்களை ஏந்திவரும் தபால் கார்டுகள் ஒருபோதும் ரசிக்கப்படுவதில்லை என்பது கொசுறு. 

“நலம் நலமறிய ஆவல்” என்று எழுதப்பட்ட கடிதங்களில் விசாரிக்கப்பட்ட நலனானது ஒருபோதும் தன் சௌக்கியத்தை இழந்ததில்லை. “அந்த அக்காகிட்ட குடுத்துடு” என்று குட்டித் தூதுவர்களிடம் பயந்து பயந்து கொடுத்துவிட்டு பதிலுக்காக காத்திருப்பதும், கோலம் போட்டுக்கொண்டிருந்தவளிடம் கொடுப்பதற்கென வைத்திருந்த கடிதத்தை விடியற்காலை சைக்கிள் பயணத்தில் அவள்மீது எறிந்துவிட்டு ஓடுவதும், இரத்தத்தில் ‘ஐ லவ் யூ’ என்று எழுதிக்கொடுத்து பிரியமானவளை கலங்கச்செய்வதும் என காதல் கடிதங்களுக்கென தனி வரலாறுகள் உண்டு. எல்லாவற்றையுமே கடிதம் மூலம் பேசிக்கொண்டிருந்த காலங்களில் உறவுகளுக்கான முக்கியத்துவங்கள் சற்று கூடுதலாகவே இருந்தன. “அன்புள்ள அம்மாவிற்கு” அல்லது “ அன்புள்ள மாமாவிற்கு” என்று ஆரம்பிக்கும் கடிதங்களை கடைசியாக எப்போது பிரித்துப் படித்தோம் என்பது நினைவிலிருந்தே மறைந்திருக்கிறது. உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் குறுஞ்செய்திகள் எப்போதுமே நமக்கு யோசிப்பதற்கான கால அவகாசத்தைக் கொடுப்பதில்லை. இன்ஸ்டண்ட் கோபம், இன்ஸ்டண்ட் அழுகை, இன்ஸ்டண்ட் நிராகரிப்பு என எல்லாமே நிதானமிழக்கச் செய்யும் வஸ்துகள். சமாதானங்களை ஏந்திவரும் கையெழுத்துக் கடிதங்களை பத்திரப்படுத்தும் அலமாரிகள் வீடுகளிலிருந்து தொலைந்துபோயிருக்கின்றன.

சரி போகட்டும்! 

“கலர் சாப்பிடுறீங்களா?” என்பதில் ஆரம்பித்து கடிதங்களோடு ‘கைலி’ என்கிற காலத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்துக்கொள்ளலாம். வீட்டிற்கு வருபவர்களில் யாரெல்லாம் முக்கியமானவர்கள், யாரெல்லாம் அதிக நேரம் அல்லது அதிக நாட்கள் இருக்கப்போகிறார்களென்பதை கைலிகள்தான் முடிவு செய்தன. “பெரியப்பாவுக்கு கைலி எடுத்துக்குடு” என்று அப்பா சொல்வாராயின், அந்த பெரியப்பா நம்முடன் இன்னும் கொஞ்ச நேரம் செலவழிக்கப்போகிறார் என்பதாக அர்த்தம். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கென்றே இரண்டு, மூன்று கைலிகள் எப்போதும் அலமாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும். கிழிசல் விழாத, நிறம் மங்காத, தரைப்பகுதி அழுக்குப்படியாத, வீட்டின் வறுமையை ஒருபோதும் வெளிப்படுத்திடாத துணிகள் அவை. நூல் பிரிந்து இத்துப்போன பழைய கைலிகளில் உலாவரும் அந்தந்த வீட்டு ஆடவர்கள் மறந்தும்கூட அவற்றை உடுத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒருவேளை தங்களுடையது சல்லி சல்லியாகக் கிழிந்துவிடும் பட்சத்தில் பதுக்கப்பட்டிருந்த கைலிகள் வெளியே வந்து, உடனடியாக புதுக்கைலிகள் அவற்றிற்கு பதிலாக வைக்கப்படும். அல்லது புதுக்கைலிகள் எப்போது வாங்கப்படுகிறதோ அப்போது பதுக்கப்பட்டிருந்த கைலிகள், போனால்போகிறதென இவர்களுக்கு வழங்கப்படும்.

பரீட்சையின் கடைசி நாளென்பது ஒரு கொண்டாட்டத்திற்கான அறிகுறியாக இருந்த நாட்கள் அவை. பெரியம்மா வீடுகளுக்கும் சித்தி வீடுகளுக்கும் படையெடுக்கும் பள்ளி விடுமுறைகள் தற்போது வழக்கொழிய ஆரம்பித்திருக்கின்றன. “ட்யூசன் இருக்கு” “டென்னிஸ் கோச்சிங் இருக்கு” “ஸ்பெசல் க்ளாஸ் இருக்கு” என நிறைய காரணங்களை கையில் வைத்திருக்கிறவர்கள் ஒருபுறம் இருந்தாலும், அதையும் மீறி விருந்தாளிகளாகச் செல்கிறவர்கள் அரைமணி நேரத்திலேயே பர்முடாஸை மாற்றிக்கொண்டு, வீட்டின் சௌகர்யமான மூலையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு மொபைலை மேய ஆரம்பிப்பது சமீபத்தின் உலகநியதி. வீட்டில் கிடைக்கும் சொகுசை விருந்தாளிகளாகச் செல்லுமிடத்தில் அனுபவிக்க முடியாமற் போகும் தயக்கமே எல்லாவற்றிற்குமான காரணமாக சொல்லிக்கொள்ளலாம். அதிகபட்சமாய் சனிக்கிழமை கிளம்பி மறுபடி ஞாயிறு வீடடையும் தற்காலத்திற்கு ஒரு விடுமுறையின் ஒட்டுமொத்த கொண்டாட்டமும் உறவினர் வீட்டில் கழிவதுபற்றி எந்த அபிப்ராயங்களும் இருக்கப்போவதில்லை.

நீலத்தில் பொடிக்கட்டம் போட்ட கைலியொன்றும் சிமெண்ட் நிறத்தில் பெரிய கட்டம் போட்ட கைலியொன்றும் விருந்தாளிகளுக்கென நாங்கள் எடுத்துவைத்திருந்த வீட்டில் நாங்கள் வசித்துவந்தோம். அம்மாவின் அல்லது அப்பாவின் உடன்பிறப்புக்கள் வந்திருக்கும் பட்சத்தில் அவற்றை வெளியே எடுப்பார்கள். தாத்தா மட்டும், “பழைய கைலியே போதும்” என கேட்டு வாங்கிக் கட்டிக்கொள்வார். இவர்கள் தவிர்த்து வேறு யாராவது, அதாவது அதிகம் பரிட்சையமில்லாத, அவசரத்திற்கு தங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தில் வீட்டிற்கு வருகிறவர்களுக்கு இரண்டு கைலிகளில் எதை எடுத்துக்கொடுப்பது என்கிற குழப்பம் எப்போதும் ஏற்படும். ஓட்டைகள் தெரியாதவண்ணம் உள்பக்கமாய் விட்டுக்கட்டும் லாவகமென்பது வீட்டு ஆண்களுக்கே உரிய ஸ்பெசாலிட்டி. குறிப்பாக பிறந்தநாள், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் புதுக் கைலியும் வெள்ளை பனியனுமாய் வீடுகளில் மின்னும் அப்பாக்கள் கூடுதல் கம்பீரம்.

சரி இப்போது அந்த ‘பத்திரப்படுத்தப்பட்ட’ கைலிகளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

அதற்குச் சொந்தமானவர்களுக்கு வயதாகியிருக்கலாம், இறந்துபோயிருக்கலாம், அல்லது பர்முடாஸ் மாட்டிக்கொண்டு திரியும் பிள்ளைகளின் காவலில் வீட்டிற்குள் அடைந்துகிடக்கலாம். அலமாரிகளில் சும்மாவே இருந்ததனாலோ என்னவோ, வெளியே எடுக்கப்பட்டு மற்ற கைலிகளோடு கலந்து வைக்கபட்டிருக்கலாம்.

“ல்லல்ல.. வேலை கிடக்கு கிளம்பணும்”

“ஐயோ.. இருக்கட்டும் பரவாயில்ல. பஸ்ஸுக்கு நேரமாகிடும்”

“இந்த வழியா வந்தேன்.. அப்படியே உங்களையும் பார்த்துட்டுப் போயிடலாம்னு”

– என்கிறவர்களை ஒருபோதும் கைலிகள் சட்டைசெய்தில்லை.

கெண்டைக்கால் தெரிய கைலி கட்டுபவர்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்துபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். வலது பக்கம் ஒரு இழு, இடது பக்கம் ஒரு இழு என வாரிச்சுருட்டுபவர்கள், உயரம் காரணமாய் அல்லது பழக்கம் காரணமாய் வயிற்றை சன்னமாய் எக்கிக்கொடுத்து கொஞ்சம் வெளிப்பக்கமாய் மடித்துவிட்டுக்கொள்பவர்கள், மடிப்பின்மீது பெல்ட் மாட்டிக்கொள்பவர்கள், இரண்டு கால்களுக்கும் இடையே ஊஞ்சல் ஆட ஏற்றாற்போல பாலம் விட்டுக் கட்டுபவர்கள், எப்போதும் முட்டி தெரிய மடித்துக் கட்டுபவர்கள், மடித்துக் கட்டாமல் இருபுறமும் பக்கவாட்டுத் தொடைத் துணியை மேலேற்றி முடிச்சிட்டுக் கொள்பவர்கள், பாதம் உரசாமல் மொத்தமாய் வாரிச்சுருட்டி தொடையிடுக்கிற்குள் நுழைத்தபடி நிற்பவர்கள், இவை எதுவுமே செய்யாமல் இரண்டு கைகளாலும் விரல் நுனியில் கைலியை பிடித்தவாறே நடப்பவர்கள் என கைலிகள் ஒவ்வொருவராலும் வேறுவேறு விதமாய் கையாளப்பட்டன.

உடுத்தி உடுத்தியே வெளுத்துப்போன கைலிகள், பிறகொருநாள் தொலைக்காட்சியையோ குளிர்சாதனப் பெட்டியையோ தூசியிலிருந்து காப்பாற்றும் பாதுகவலர்களாகவும், கழுவிவிடப்பட்ட தரையில் படிந்திருந்த ஈரத்தைத் துடைத்துச் சுத்தம் செய்யும் ஆபத்பாந்தவனாகவும் மாறிப்போயின. பரண் மேலிருக்கும் அண்டாக்களை மூடுவதற்கும் புதுப்பாத்திரங்களை பத்திரப்படுத்துவதற்கும் கவசங்களாக அம்மாவின் பழைய உள்பாவாடைகள் போலவே அப்பாவின் நிறம் மங்கிய கைலிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

முதன்முதலாக தூக்கத்திலேயே வெளியேறிவிட்ட விந்துக்களின் காய்ந்த மொடமொடப்புக் கைலியினை யாருக்கும் தெரியாமல் நனைத்துப்போட்ட சிறுவர்கள் அதன்பிறகான சுயமைதுனத்தின்போது சூதானமாக இருக்கத் தொடங்கினர். ட்ராக் பேண்ட்களுக்கும் பர்முடாஸ்களுக்கும் மாறிக்கொண்ட தலைமுறைகள், கைலிகளை தங்களுக்கு முந்தைய தலைமுறைக்கென ஒதுக்கிவைக்கத் தொடங்கினர். முந்தைய தலைமுறைகளோ தங்களை இளைஞர்கள் போல் காட்டிக்கொள்வதற்காகவே ட்ராக்குகளையும் டீ ஷர்ட்டுகளையும் அணியத் தொடங்கினர். இரண்டிற்கும் நடுவிலான ஏதோவொன்று நூலிழையில் பிழைத்துக்கொண்டிருக்கின்றது.

“இதெல்லாம் ஒரு பெரிய விசயமா? நான் இப்பவும் கைலி கட்டிகிட்டுத்தான் இருக்கேன், மெயில்ல லெட்டர் அனுப்பிகிட்டுதான் இருக்கேன், வீட்டுக்கு வர்றவங்களுக்கு ஸ்ப்ரைட் ஊத்திக் குடுத்துகிட்டுதான் இருக்கேன்” என்று எங்கிருந்தோ குரல் எழுப்புகிறீர்கள் தானே! இங்கு “கைலி” என்பது வெறும் உடை மட்டுமல்ல, அது உறவுகளோடு கூடியிருந்த காலத்திற்கான அடையாளம், ஒரு தலைமுறைக்கான கொண்டாட்டம்.

“நாங்கள்லாம் அந்தக் காலத்துல..” என்பதில் கைலிகளை தாராளமாய் சேர்த்துக்கொள்ளலாம்.

*****

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button