
“ஏதாவது செய் மச்சா, என்னால முடியல”
கிழக்கு மேற்காகச் செல்லும் பெரிய வாய்க்கால் பாலத்தின்மேல் வைத்து முன்னிரவு பத்துமணிக்கு நிறைபோதையில் சங்கர் என்னிடம் சொன்னான். இப்போதெல்லாம் அவன் அங்குதான் கிடக்கிறான் என்று கேள்விப்பட்டிருந்தேன். அருகாமையில் தோட்டங்களோ சாளைகளோ எதுவுமில்லாத கொறங்காட்டு வெளி அது. சாயங்காலம் ஏழுமணிக்குப் பிறகு நடமாட்டம் இருக்காது. மரங்கள், பறவைகள், கொடிகள், எறும்புக்குழிகள், உடும்புகள், கீரிகள், பாம்புகள், கதிவேலிகள் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டு ஒருகாலத்தில் இங்கெல்லாம் திரிந்திருக்கிறேன்.
முன்பு இட்டேறியாக இருந்த பாதை என் செல்வாக்கினால்தான் தார்ச்சாலையாக மாறியது. பெரிய வாய்க்கால் பாலம் ஒரு முடக்கில் இருக்கிறது. முத்துக்குட்டி மாமன் ஜீப்பை வளைவில் திருப்பும்போதே சங்கர் திண்டில் படுத்திருப்பது புலப்பட்டது. முகத்தில் விழுந்த முன்விளக்குகளின் வெளிச்சம் உறைக்காத மயக்கத்தில் கிடந்தான். ஜீப்பை நிறுத்திய மாமன் விளக்குகளை அணைத்ததும் பெளர்ணமி நிலவின் பால்வெளிச்சம் துலங்கித் தெரிந்தது.
டேஷ்போர்டில் துப்பாக்கி இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினேன். அதை எப்போதும் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருந்தே பழகிவிட்டது. ஜீப்பின் பின்புறத்தில் இறங்கிய முருகனும் சோமுவும் ஆளுக்கொரு திசையில் நோட்டமிட்டனர். நான் வேட்டியை அவிழ்த்து உதறிக் கட்டுகையில் காற்றில் வாசனையை முகர்ந்தவாறு மாமன் நாற்புறமும் கண்களைச் சுழற்றி உன்னிப்பாகப் பார்த்தார். நிலவொளியில் தரை தெளிவாகத் தெரிந்தாலும் டார்ச்சை இயக்கி மண்பரப்பில் தாரை பார்த்தார்.
“என்ன மாமா? நம்ம ஊரு, நம்ம இடம். இங்க என்ன பயம்?”
நான் சொன்னதற்கு அவர் மறுமொழி சொல்லவில்லை. என் கருத்துக்கு உடன்படாதபோது மெளனம்தான் அவருடைய பதிலாக இருக்கும்.
“என்ன இப்படிக் கெடக்கறான், முழிப்பானான்னு தெரியலீயே? டேய் மாப்ளே சங்கரு”
விழிப்படைந்த சங்கர் சில வினாடிகள் அலங்க மலங்க முழித்துவிட்டு கண்களைக் கசக்கியவாறு எழுந்தான். எங்களைக் கண்டவுடன் போதையின் இருள் படிந்திருந்த முகத்தில் மெல்லிய பிரகாசம் தோன்றியது. முகத்தைக் கைகளால் தேய்த்துவிட்டுக்கொண்டு தொண்டையைக் கமறி எச்சிலைத் துப்பினான்.
“ஏன்டா மாப்ள இந்நேரத்துக்கு இங்க படுத்திருக்க? தோட்டத்துக்குப் போவலீயா?”
“போனா அந்தாளோட நச்சு தாங்கமுடியல மச்சா, வார்த்தையில கொத்திக் கொத்தியே கொல்றாரு”
லேசான தள்ளாட்டத்தோடு எழுந்துபோய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தவனிடம் முத்துக்குட்டி மாமன் சொன்னார்.
“சொல்லாமயா இருப்பாங்க? நீயுந்தான் அடங்கறியா? இருபத்துநாலு மணிநேரமும் போதையில கெடந்தா பெத்த அப்பனுக்கு எப்படி இருக்கும்? அவரு இருந்த இருப்புக்கும் கெளவரத்துக்கும் நீ பண்ற காரியமெல்லாம் மதிப்பாவா இருக்கு?”
“ப்ச்” சலிப்போடு சப்புக் கொட்டியவாறு திண்டில் உட்கார்ந்தான்.
“சாப்டியாடா மாப்ள?” என் கேள்விக்கு மெளனமாக இருந்தான்.
”முருகா” குரல் கொடுத்தவுடன் ஜீப்பின் உள்ளிருந்த புரோட்டா பார்சல்களில் ஒன்றையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வந்து திண்டில் வைத்தான் முருகன்.
“எல்லாத்தையும் எடு, இங்கேயே சாப்ட்றலாம்”
“இங்க எதுக்கு மாப்ள? சாளைக்குப் போயிறலாமே?”- மாமன் சொன்னார்.
அவருடைய பாதுகாப்புணர்வு எனக்குக் கவசமாகவும் கேடயமாகவும் இருப்பது உண்மைதான் என்றாலும் சமயங்களில் அது அதிகரித்துவிடுகிறது.
“நெலாவெளிச்சம் நல்லாருக்குது மாமா, அப்படியே மாப்ளகூடயும் சேர்ந்து சாப்ட்ட மாதிரியாச்சு”
வடக்குத் திசையிலிருந்து செம்போத்தின் குரல் அகாலமாகக் கேட்டது. வேலியில் இரவுப்பூச்சிகளின் ரீங்காரம். மேற்கிலிருந்து வீசிய காற்றில் நிலத்தின் வாசனையோடு சாராயம் காய்ச்சுவதற்காக பட்டை உரிக்கப்பட்ட வெள்ளை வேலான் மரத்தின் கசப்பும் பரவியிருந்தது. பார்சல்களைப் பிரித்தபோது புரோட்டா குருமாவின் வாசனை மற்ற வாசனைகளை மட்டுப்படுத்தியது. நான்கைந்து வாய் உண்டுவிட்டு போதுமென்று வைத்துவிட்டான் சங்கர். குடி அவனுடைய உடலை உருக்கிவிட்டிருந்தது. அவன் ஒதுக்கியதையும் முத்துக்குட்டி மாமன் எடுத்துக்கொண்டார். அவருக்குப் பொந்தை வயிறு. எத்தனை இருந்தாலும் இழுக்கும். முருகனும் சோமுவும் அதே போலத்தான், வலுவாக உண்ணக்கூடியவர்கள். எனக்குப் பசி தணிந்தால் போதும், சுவைக்காக உண்பதில்லை. உண்டு முடிக்கும்வரை ஒருவரும் பேசவில்லை. பார்சல் காகிதங்கள் எல்லாவற்றையும் சுருட்டிக்கட்டி வாய்க்காலுக்குள் வீசினான் முருகன்.
“கைல காசில்ல மச்சா, ஏதாவது குடுத்துட்டுப் போ”
“ஏன்டா, அதுக்காக எல்லாத்தையும் தூக்கிட்டுப்போய் வித்துக் குடிக்கிறதா? கைக்குக் கெடைக்கற ஒண்ணு வுடாம தூக்கிட்டுப் போய் வித்துக் குடிக்கிறயாமா? குடிகாரன்னு பேர் வாங்கியாச்சு, திருடன்னு புதுப்பட்டம் வாங்கறதுதான் இனி பாக்கி”
“சும்மா நொய்நொய்னு பேசாத சித்தப்பா, எனக்குச் சேரவேண்டியத நானே எடுத்துக்கறேன். எங்கப்பனுக்கென்ன இன்னொரு பையனா இருக்கறான்? காசு கேட்டா ஒழுங்கு மரியாதையா கொடுக்கணும் அந்தாளு”
எரிச்சலான குரலில் சங்கர் சொன்னபோது மாமன் மெளனமாகிவிட்டார். எனக்கு மனப்புன்னகை தோன்றியது. இருவரும் உறவில் பங்காளிகளாக இருந்தலும் பேச்சுவார்த்தையெல்லாம் மாமன் மச்சானைப் போலத்தான். ஆனாலும் பார்க்க நேர்கிறபோது சங்கருக்கு கருக்கிடை சொல்ல அவர் தவறுவதில்லை. பார்வையிலிருந்து அவன் மறைந்தவுடன் தாயில்லாமல் வளர்ந்து நாசமாகிவிட்டதாகச் சொல்லி வருத்தப்படுவது அவருடைய வழக்கம்.
சட்டைப் பாக்கெட்டில் இருந்த ஐந்நூறுரூபாய்த் தாள்களை எடுத்துப் பார்த்தேன். ஆறு இருந்தன. அதை அப்படியே நீட்ட வாங்கிச்சுருட்டி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். அது அதிகம் என்பதுபோல் மாமன் முகத்தைக் காட்டினார். அவனுடைய தோட்டத்துக்குச் செல்லும் இட்டேறியில் அவனை இறக்கிவிட்டுக் கிளம்பினோம். அன்றிரவு உறக்கம் கூடாமல் படுத்திருந்தபோது ஏதேனும் செய்யும்படி சங்கர் சொன்னது திரும்பத்திரும்ப யோசனையில் வந்தது.
அவன் சொன்னதுக்கு ஒரே அர்த்தம்தான், மறைபொருள் ஏதுமில்லை. தன் தந்தையை மிரட்டச் சொல்கிறான். நான் சொன்னால் அவர் கேட்பார், அந்தப் பலம் என் பேச்சுக்கு இருக்கிறது என்று நினைக்கிறான். இத்தனை வருஷங்களாக தன் அப்பாவைக் கண்டிருந்தும் சங்கர் இவ்வளவு பேதமையாக இருப்பது ஆச்சரியப்படுத்தியது.
முப்பது வருஷங்களாக ஈஸ்வரனைப் பார்க்கிறேன். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவருடைய கண்களில் வெறுப்பு படர்கிறது, ஏறிட்டுப் பார்க்காமல் புறக்கணிக்கிறார். முன்பெல்லாம் போய்ப் பேசினால் பொருட்படுத்துபவராகத்தான் இருந்தார். என்னைப் பற்றிய எதிர்மறையான சித்திரம் ஊர்வெளிகளுக்குள் ரகசியமாய்ப் பரவத் தொடங்கியபோது அவர் மாறிவிட்டார். ஓய்வுபெற்ற ஆசிரியரும் கடும் ஒழுக்கவாதியுமான அவர் அப்படித்தான் இருப்பார் என்று அவருடைய அலட்சியத்தை ஒருவிதத்தில் ஏற்றுக்கொண்டேன்.
சாதிசனம், பங்கும் பங்காளி, மாமன் மச்சான் என்று பரவிக்கிடக்கும் ஊர் வெளிகளுக்குள் நான் பிரச்சனைகளுக்குச் செல்வதில்லை. அப்படிச் செய்வது என் உயிர் நரம்புகளை நானே அறுத்துக்கொள்வதைப் போன்றது. ஆனால், என்னிடம் பைசலுக்கு வருபவர்களை மறுப்பதுமில்லை. பரிபாலனம் செய்யப்படாத அதிகாரம் தன் வீரியத்தை விரைவில் இழந்துவிடும். பைசல் செய்வதென்பது ஒரு கணக்குதான். ஒரு வழக்குக்கு இருதரப்புக்கும் மகிழ்ச்சியூட்டும் தீர்வு என்ற சாத்தியமில்லை. மனச்சமாதானம் கூடக்குறைய உண்டானாலும் பெருத்த நஷ்டமென்று இருதரப்பும் நினைக்காத வகையில் பிரச்சனைகளை முடித்து வைப்பதே என் வழக்கம். சில பிரச்சனைகளின் இயல்பறிந்து தலையிடாமல் ஒதுங்கிக்கொள்வதும் உண்டு.
என்னிடம் அதிகாரம் இருக்கிறது என்று வருகிறார்கள். உருட்டவும் மிரட்டவும் வலுப் படைத்தவன் என்று நம்புகிறார்கள். கொடுக்கப்படும் மரியாதையில் முக்கால்பங்கு எனக்கானது அல்ல, என்னிடமிருப்பதாக அவர்கள் நம்பும் அதிகாரத்துக்குத்தான். ஒருகாலத்தில் இதே மனிதர்களின் மத்தியில் அடையாளமற்றவனாக இருந்தபோது இவர்கள் என்னைப் பொருட்படுத்தியதேயில்லை. நாளை காற்று திசைமாறும்போது அவர்கள் வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு நீதியின் வியாக்கியானம் பேசுவார்கள்.
இதையெல்லாம் வெகுகாலத்திற்கு முன்பே உணர்ந்துவிட்டேன். நீதியும் ஒழுக்க விதிகளும் மனிதர்களின் அனுபவங்களைக் கட்டுப்படுத்துகின்றன என்பது என்னுடைய எண்ணம். அவற்றின் கட்டுப்பாடு உருவாக்கும் அச்சத்தினால் மனிதர்கள் மந்தைகளாக மாறிப்போய் அடையச் சாத்தியமுள்ள வாழ்க்கையனுபவ உச்சங்களை மனிதர்கள் இழந்துவிட்டார்கள். அந்த அச்சத்தை நான் உதறிவிட்டதால் எளியவர்களால் முடியாத சில காரியங்களை என்னால் செய்யமுடிகிறது. ஆனால், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய கலகவாதியோ அராஜகவாதியோ அல்ல நான். நிழல் உலகத்தில் அதன் இயல்புக்கேற்ப புழங்குபவன். அவ்வளவே.
ஒரு முரண்பாடாக மனிதர்களிடம் இருக்கும் அச்சம்தான் என் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கிறது. ஆபத்தின்முன் பயப்படாத மனிதர்களைப் பார்த்ததேயில்லை. பெருங்குற்றம் என்று சட்டத்தாலும் பெரும்பாவம் என்று அறத்தாலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிற உயிர்க்கொலையிலும் சிலமுறை ஈடுபட நேர்ந்திருக்கிறது. இறுதிக்கணங்களில் கண்களில் படரும் உயிர் மீதான ஏக்கத்தில் மனிதர்களின் முதுகெலும்பு கூழாவதைக் கண்டிருக்கிறேன். பெருமிதங்கள் அழிந்து உயிருக்காக காலைப் பிடித்து யாசிக்கையில் மனச்சலனமடையாமல் என்னால் காரியமாற்ற முடிந்திருக்கிறது.
மனிதர்களுக்கு நிகழும் விஷயங்கள் நன்மையென்றும் தீமையென்றும் வரையறுக்கப்பட்டிருந்தாலும் எனக்கு அவை முக்கியமில்லை. விஷயங்களின் பெரிய வரைவில் சமநிலை பேணுதலின்பொருட்டு நன்மையும் தீமையுமான காரியங்கள் உலகில் நிகழ்கின்றன. இந்த சமநிலை பேணலை நீதி என்று உலகம் சொல்லக்கூடும். ஆனால், நான் வரையறைகளின் சுமையை என்மேல் ஏற்றிக்கொள்வதில்லை. நிகழவேண்டிய காரியங்கள் தம்மை நிகழ்த்திக்கொள்ளும் வெறும் கருவி நான். எனக்கென்ன குற்றவுணர்வு?
சங்கரைப்போல தன்னழிவை உருவாக்கிக்கொள்ள என் இருபதுகளின் பிற்பகுதியில் எல்லா வாய்ப்புகளும் இருந்தன. அக்காவை இந்த ஊருக்குக் கொடுத்திருந்தது. குடும்பத்தில் நாங்கள் இருவர் மட்டுமே. அவளோடு நானும் இந்த ஊருக்கு வந்தேன். மச்சான் அப்புராணி. பெரிய விசேஷங்கள் ஏதுமற்ற சராசரியான வாழ்க்கை. சில மாதங்களுக்கு கார்மெண்ட்ஸ் கம்பெனி வேலைக்குப் போவதும் சில மாதங்கள் எதிலும் ஒட்டாமல் திரிவதுமாய் இருந்தேன். கொரங்காடுகளுக்குள் இலக்கற்றுத் திரிந்துகொண்டு மரத்தடிகளில் படுத்துக்கிடப்பேன். விடுமுறை நாட்களில் என்னோடு காடுகளுக்குள் சுற்ற வந்துவிடுவான் சங்கர். என்னோடிருப்பதில் ஏதோ ஆறுதலை அடைகிறான் என்பது புரிந்தது.
அந்தக் காலத்தில்தான் தலைவரின் கண்ணில் பட்டேன். அவர் அந்த ஊரில் பெண்ணெடுத்தவர். அரசியலில் வளரத் தொடங்கியிருந்தார். எனக்குப் பங்காளி முறைதான். எப்போதும் திருத்தமான தோற்றத்தில் சிரித்த முகத்தோடு வெள்ளையில் இருப்பார். அவரைப் பார்க்க நேரும்போதெல்லாம் என் உடலில் கட்டுப்படுத்தமுடியாத பணிவு குழைந்ததின் காரணம் இன்னுங்கூட பிடிபடவில்லை. பூர்வ பந்தம் என்பார்களே, அதுபோல ஒன்று. என்னுடைய பணிவும் அவருடைய கனிவும் தம்மை உணர்ந்துகொண்டன. அருகில் அழைத்துக் கேட்டார்.
“கூட இருக்கறியா பொன்னா?”
அன்றிலிருந்து அவரது நிழலாகத் தொடர்கிறேன். செய்யக்கூடாத ஆனால் செய்யதாகவேண்டிய சில வேலைகளைச் செய்வதற்கு நம்பிக்கையான ஆளாக மாறினேன். என் மீதான அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை வளர்வதற்கு விதையாக விழுந்த சம்பவம் விரைவிலேயே நடந்தது. அன்றைக்குத் தலைவரின் தோட்டத்தில் ஒரு பஞ்சாயத்து. இரண்டுமே வலுவான தரப்புகள். பேச்சின் உஷ்ணமான தருணமொன்றில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஆசாமி சபையில் சொல்லக்கூடாத சொல்லால் தலைவரை ஏசிவிட்டான். தலைவரின் முகத்தில் இருட்டும் சுருக்கமும் படர்ந்ததைக் கண்டேன். எல்லோரும் மெளனமாக இருந்தபோது நான் தயங்கவில்லை. பாய்ந்துபோய் வலுவான அறையை அவனுக்குக் கொடுத்தேன். அவமானத்தோடு அந்த ஆசாமி திரும்ப முண்ட முயற்சி செய்தபோது மீண்டும் சரசரவென்று நாலைந்து அடிகள் பொடனியில் கொடுத்தேன். யாரோ இடையில் புகுந்து தடுத்து இழுத்தார்கள்.
“வுடு பொன்னா, பரவால்ல வுடு பொன்னா, நாம யாரு, நம்ம அருமை என்னன்னு தெரீயமா வாய வுட்டுட்டாப்ல”
தலைவரின் குரலில் தணிந்து திரும்பியபோது குறுஞ்சிரிப்பால் அரவணைத்துக்கொண்டார். அன்றிலிருந்து அவருக்கு வலக்கரமானேன். சூதும் வாதும் நிறைந்த நிழல் உலகத்தின் விஷயங்களுக்குள் புழங்க ஆரம்பித்தவுடன் என் வாழ்க்கையில் முன்பிருந்த வெறுமை அழிந்தது. உலகத்தை உண்மையில் யார் நிர்வகிக்கிறார்கள் என்பது தெரிந்தது. அதிகாரத்தை நிர்வகிப்பது எப்படி என்ற பாலபாடம் பிடிபட்டது.
தலைவருக்கு சுக்ரதிசை அடித்தது. சரசரவென்று வளர ஆரம்பித்தார். தேர்தலில் நிற்க எதிர்பாராத வாய்ப்புக் கிடைக்க சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அவருடைய நிழலைப்போல் இருந்தாலும் பொதுப்பார்வைக்கு என்னை மறைத்துக்கொண்டேன். எந்தவொரு புகைப்படத்திலும் இருக்கமாட்டேன். கூட்டங்களில் விலகியே இருப்பேன். அவருடன் காரில் ஏறுவதில்லை. ஆனால், அவருடைய ஒவ்வொரு காரியங்களும் அசைவுகளும் என்னுடைய கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்கும். காரியசித்திக்கு வருபவர்களில் விவரமானவர்கள் அங்குமிங்கும் அலையாமல் முதலிலேயே என்னிடம் வந்துவிடுவார்கள்.
பணம், பணம், அது வந்து குவியும் வேகத்தைக்கண்டு பிரமிப்பாகத்தான் இருந்தது. அக்கா, மச்சான், பாப்பா, பாப்பாவின் மாப்பிள்ளை என்று பலரின் பேரில் நிலங்களிலும் வேறுவகையிலும் முதலீடுகளைச் செய்தேன். அக்காவுக்கு நான் என்னவாக மாறியிருக்கிறேன் என்று தெரிந்தாலும் எதன்பொருட்டோ இதெல்லாம் புரியாதவள் போல் நடந்துகொண்டாள். பழைய சேலையைக் கட்டிக்கொண்டு இன்னும் ஆடுமேய்க்கிறாள். நல்ல துணிகள் உடுத்தி நகைநட்டுக்கள் போட்டுக்கொண்டு இருக்கும்படி நான் சொன்னபோது வெறுமையாகச் சிரித்தாள். பிறகு நான் வற்புறுத்திச் சொல்லவில்லை.
தலைக்குக் கறுப்புச்சாயம் பூசுவது மற்றும் வெள்ளை வேட்டி சட்டையைத் தவிர எனக்கு வேறு அலங்காரங்கள் இல்லை. மோதிரம், செயின் போடுவதிலெல்லாம் விருப்பமில்லை. பெண் சகவாசங்கள் சுத்தமாக இல்லை, அதில் எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. பெண்களின் மூலம் என்னை மடக்க வைக்கப்பட்ட பொறிகளை அனாயசமாகக் கடந்திருக்கிறேன். அரசியலில் தலைவரை முடக்க வேண்டுமானால் முதலில் என்னை முறிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு நடந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.
தலைவரைப் பாதுகாப்பதில் எனக்கு எப்போதுமே சூதானம்தான். எதிரி முளைக்கும்போதே அங்கே கண்காணிப்பை ஊன்றிவிடுவேன். பணத்தை விசிறினால் வேவுக்கு எத்தனையோ ஆட்கள் இருக்கிறார்கள். சமயங்களில் வேவுக்கு வேவு வைப்பதும் உண்டு. மாவட்டத்திற்குள் நிழல் உலகத்தின் ஆட்களோ கூலிப்படையோ நுழைந்தால் முதல் துப்பு எனக்குத்தான் வரும். சிலமாதங்களில் தலைவருக்கு உயர்பதவி கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமானபோது இன்னும் ஜாக்கிரதையானேன். நிழற்காரியங்களில் நான்கைந்து அடுக்குகளுக்குப் பின்னால் என்னை இருத்திக்கொண்டேன்.
நான் அடைந்திருக்கும் இடத்தைக் குறித்து எனக்குப் பெருமிதமும் இல்லை, கழிவிரக்கமும் இல்லை. என் மனதில் நீதியின் சுமையோ பாவபுண்ணியங்களின் அழுத்தமோ இல்லை. நான் நாசமாகத்தான் போவேன் என்று யாரோ எனக்கு சாபம்விட்ட தகவலை முத்துக்குட்டி மாமன் சொன்னபோது சிரிப்புதான் வந்தது. பெரும்பாலான மனிதர்கள் உண்மையில் பிள்ளைப்பூச்சிகள், அவர்களுக்கு இந்த உலகத்தைக் குறித்தும் வாழ்க்கையைப் பற்றியும் ஒன்றுமே தெரியாது.
“தெல்லவேரிங்கறது செரியாத்தான் இருக்குது. இல்லீனா ஊர்ல திரியற ரெளடிப் பசங்களக் கூட்டிக்கிட்டுப் பெத்த அப்பங்கிட்டயே பஞ்சாயத்துப் பேச எவனாவது வருவானா? இதையெல்லாம் வேற எங்கயாவது வைச்சிக்கோணும், எங்கிட்ட ஆகாது”
நான் செய்ததெல்லாம் சங்கரைக் கொஞ்சம் கனிவோடு நடத்தும்படி வேண்டிக்கொண்டது மட்டுமே. அதற்குத்தான் ஈஸ்வரன் பொரிந்து கொண்டிருந்தார். அவர் என்னை அமரச் சொல்லாததைப் பொருட்படுத்தவில்லை. அவர் இப்படித்தான் பேசுவார், கோபப்படுவார், வார்த்தைகளை இறைப்பார் என்பதையெல்லாம் எதிர்பார்த்திருந்ததால் அமைதியாக இருந்தேன்.
“அண்ணா, நாங்க மட்டும் அவன் கெடோணும்னு நெனைக்கறமா, இல்ல எங்ககூட அவனச் சேத்துட்டுச் சுத்தறமா, தோளுக்குமேல வளர்ந்துட்டான், தாயில்லாப் புள்ள, நிம்மதியில்லாம அலையிறான். நாம கொஞ்சம் பாந்தமா இருந்தா அவன் திருந்தலாமில்லியா? அத நெனைச்சுதான் மாப்ள உங்ககிட்ட சொல்றாரு, அதுக்காக நீங்க மாப்ளய வார்த்தை பேசறது சரியில்ல” முத்துக்குட்டி மாமன் சொன்னார்.
“அக்கல் பொறுக்கித் திங்கற குக்கலுக்கெல்லாம் எனக்குப் புத்தி சொல்லத் தகுதியில்ல”
முத்துக்குட்டி மாமனின் முகத்தில் அவமானம் படர்ந்து வார்த்தைகள் தெறித்தன.
“யாரைடா குக்கலுங்கற? புள்ள வளத்தத் தெரியாத தற்குறி நீ… கையக் கால முறிச்சு எறிஞ்சுடுவேன் பாத்துக்கோ”
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சங்கர் மெளனமாக நின்றிருந்தான். நான் முத்துக்குட்டி மாமனைக் கண்களால் தணித்துவிட்டு ஈஸ்வரனிடம் சொன்னேன்.
“மாமா, நீங்க சொல்றமாதிரி நா ரெளடியாவே இருந்துட்டுப் போறேன். ஆனா, அந்த எண்ணத்தோட உங்ககிட்ட வரலை. தோளுக்கு மேலே வளர்ந்த பையன், கொஞ்சம் விட்டுப் பிடிங்க”
“தப்புப் பண்றவனுக்கு சப்போர்ட் பண்றதுதான உன்ற தொழிலு? உண்மையில யோக்கியனா இருக்கிறவன் அந்தத் தட்டுவானி நாய்க்குத்தான் புத்தி சொல்லோணும்”
அதற்குப் பிறகு அவரிடம் எதுவும் பேசாமல் வந்துவிட்டோம். நான் சங்கரிடம் பலமுறை சொல்லத்தான் செய்திருக்கிறேன். அழுத்திச் சொல்வது என் இயல்பில் இல்லை. அவனுடைய் அம்மா இறந்தபோது அவனுக்கு ஏழெட்டு வயதிருக்கும். ஈஸ்வரன் இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆசிரியர் வேலை, தோட்டந்தொரவு என்று மதிப்பும் செல்வாக்குமாக இருந்தாலும் மனைவியை இழந்ததில் தடுமாறிவிட்டார். மகனைக் கண்டிப்போடு வளர்க்க நினைத்தது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிட்டது.
சங்கர் கல்லூரிக்குப் படிக்கப்போனதில் முழுமையாகப் பிறழ்ந்து குடியில் தடம்மாறிவிட்டான். நான் தலைவரோடு பயணிக்கத் தொடங்கிவிட்டதால் வேறு விஷயங்களில் கவனம் குறைந்துவிட்டது. கல்லூரிக்குப் போகாமல் நின்றுவிட்டிருந்தவனை ஒரு கெடாவெட்டில் பார்த்தபோது என்னுடனே இருந்துவிடும் விருப்பத்தைச் சொன்னான். அவன் அதற்கானவன் அல்ல என்பதைச் சொல்லி அனுப்பிவைத்தேன்.
சங்கர் விஷயமாக ஈஸ்வரனைப் பார்த்துவிட்டு வந்தபின்பு ஊர்ப்பக்கமாகச் செல்லமுடியவில்லை. நிறைய வெளிவேலைகள் அமைந்துவிட்டன. அன்று மாவட்டத்தின் தலைநகரத்தில் இருந்தபோது சரக எஸ்.ஐ அழைத்தார். சங்கர் ஈஸ்வரனை கொலை செய்துவிட்டதாக தகவல் கிடைத்து வந்திருப்பதாகவும், சங்கர் பேசமறுத்துப் பித்துப்பிடித்தாற்போல் அமர்ந்திருப்பதாகவும் சொன்னார். நான் வரும்வரை காரியங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும்படி கேட்டுக்கொண்டு அவசரமாக ஊருக்குக் கிளம்பினேன். நான் போனபோது ஊரே திரண்டிருந்தது. கண்டவுடன் சங்கர் கதறியழுதான்.
“நா ஒண்ணுமே பண்ணல மச்சா, நா வெளிய போய்ட்டு வரும்போதே வாசப்படியில தடுக்கி வுழுந்து மண்டைல அடிபட்டுக் கெடந்தாங்க. அதுக்குள்ள எல்லோரும் நா அப்பாவக் கொன்னுட்டதா சொல்றாங்க. யாராவது அவங்க அப்பாவக் கொல்லுவாங்களா மச்சா?”
ஈஸ்வரனின் உடலைப் பார்த்தபோது அவருடைய முகத்தில் நிம்மதியற்ற கோலம் உறைந்திருந்தது. என்னை ஏசிய பேச்சு ஞாபகத்திற்கு வந்தாலும் விருப்புவெறுப்பாக எந்த உணர்ச்சியும் எனக்குள் எழவில்லை. விஷயங்களின் பெரிய வரைவில் சமநிலை பேணுதலின் பொருட்டு நன்மையும் தீமையுமான காரியங்கள் உலகில் நிகழ்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்.
டி.எஸ்.பி வரை விஷயம் சென்றுவிட்டதாகவும் உடனடியாக உடலைப் போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்ப வேண்டுமென்றும் எஸ்.ஐ கூறினார். சங்கரை அனாவசியமாக வழக்கில் சிக்க வைக்குமளவுக்கு எதையும் செய்துவிடவேண்டாமென்றும், மீதியை நான் பார்த்துக்கொள்வதாகவும் சொன்னேன். சந்தேக மரணமாக வழக்கு பதியப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து மறுநாள் உடல் வந்தவுடன் காரியங்களை சங்கரின் பங்காளிகளிடம் விட்டுவிட்டு பின்னால் இருந்துகொண்டேன்.
விபத்தின் மூலம் மரணம் நேரிட்டிருப்பதற்கான வலுவான சாத்தியம் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சங்கர் இதைச் செய்திருப்பான் என்று யாராலும் கற்பனைகூட செய்யமுடியாது. இருந்தாலும் எவரோ ஊருக்குள் பேச்சைக் கிளப்பிவிட்டுவிட்டார்கள். என் தொடர்புகளின் மூலம் சில அழுத்தங்களைக் கொடுத்து வழக்கை முடித்து அவனுக்குத் தொந்தரவில்லாமல் பார்த்துக்கொண்டேன்.
நான் திரும்பவும் வெளியே இருக்கவேண்டியிருந்தது. சங்கர் அடிக்கடி போனில் அழைத்து நேரில் பேசவேண்டும் என்பான். குடிப்பதை நிறுத்திவிட்டதாக அவன் சொன்னபோது சும்மா சொல்கிறான் என்று நினைத்தேன். ஆனால், முத்துக்குட்டி மாமன் அதை உறுதிப்படுத்தினார். அது மட்டுமில்லாமல் அவன் கோவில் கோவிலாக அலைவதாகக் கேள்விப்பட்டபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
“எழவு, மனுசன் செத்துத்தான் இந்த நாய்க்கு புத்தி வந்திருக்குது. இருக்கும்போது வந்திருந்தா அந்த மனுசனுக்கு கொஞ்சம் நிம்மதியாவது கெடைச்சிருக்கும்” முத்துக்குட்டி மாமன் சொன்னார்.
அடுத்தமுறை ஊருக்குப் போனபோது நேராக தோட்டத்துக்கு வந்துவிட்டான். டீ சர்ட்டோடு காவி வேட்டி அணிந்து கழுத்தில் துண்டு போட்டிருந்தான். அவன் கண்களில் வினோதமான மருள் படிந்திருந்தது. பேசவேண்டுமென்று தென்னந்தோப்புக்குள் கூட்டிப்போனான்.
“ரொம்பப் பயமா இருக்குது மச்சா. நைட் சாளையில் தனியா இருக்கவே முடியல”
“ஏண்டா மாப்ள? இந்த மாதிரி சூழ்நிலை எல்லோருக்கும் வர்றதுதானே? பயப்பட்டா ஆவுமா? தைரியமா இரு”
சில கணங்கள் அமைதியாக இருந்தவன் பார்வையை எங்கோ வைத்துக்கொண்டு சொன்னான்.
“அதில்ல மச்சா, அன்னிக்கு அப்பாவுக்கும் எனக்கும் பேச்சுக் கடுசாயிருச்சு, கண்டமேனிக்கு அடிக்க ஆரம்பிச்சிட்டாரு, கோவத்துல ஒரு தள்ளு தள்ளிட்டேன். அதுல தலைல அடிபட்டுத்தான்… அப்ப சிக்கிக்கக் கூடாதுன்னு தோணுச்சு, ஆனா, அதுக்கப்பறம் என்னால இதை மனசுல வெச்சுத் தாங்கவே முடியல. இருபத்து நாலு மணி நேரமும் கண்ணுக்கு முன்னாடி இதுவே நிக்குது. பெரும்பாவம் பண்ணிட்டேன் மச்சா, ரொம்பப் பயமா இருக்குது” சொல்லிவிட்டுத் தேம்பியழுதான்.
என்னைப் போன்ற ஒருவனிடம் இதைச் சொல்லி அழுவதில் உள்ள அபத்தம் அவனுக்குப் புரியவில்லை. ஆனால், என்ன செய்ய? வாழ்க்கை அப்படித்தான் காய்களை நகர்த்துகிறது.
“சரிடா மாப்ள. வுடு, தெரியாமாத்தானே ஆயிப்போச்சு? எங்கிட்ட சொன்னதோட இத மறந்துரு, எங்காவது வெளியபோய் கொஞ்சநாள் இருந்துட்டு வா, மெட்ராஸ், பெங்களூர்னு போ. நா ஏற்பாடு பண்றேன்”
“யோசிச்சுச் சொல்றேன் மச்சா”
ஆனால், அவன் அழைக்கவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு நானே அழைத்தபோது டிரெயினில் காசிக்குப் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னான். அவன் தணிந்து திரும்பட்டும் என்று விட்டுவிட்டேன். அதுவுமில்லாமல் தலைவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு என் கவனத்தை வேறெங்கும் செலுத்த முடியாத விதத்தில் மாற்றிவிட்டது. பல விஷயங்கள் தீர்மானித்திருந்த திசையிலிருந்து மாறிவிட்டன. தலைவர் தன் மகனை முன்னிலைப்படுத்தத் தொடங்கினார். என் கட்டுப்பாட்டிலிருந்த விஷயங்கள் பலவும் மெல்ல முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கின. தலைவருடைய மகனின் அரசியல் வேறுமாதிரியாக இருப்பது ஓரிரு மாதங்களுக்குள்ளேயே தெரிந்துவிட்டது. என் இடத்தை நிரப்ப அவனுடைய தலைமுறையைச் சேர்ந்த புது ஆட்கள் வந்துவிட்டார்கள்.
முத்துக்குட்டி மாமனுக்கு சர்க்கரை வந்து ஊரோடு முடங்கிவிட்டார். நான் தலைவரோடுதான் இருந்தேன். முருகனும் சோமுவும் என்னோடுதான் இருந்தார்கள். ஆனால், என் முக்கியத்துவம் சுருங்கிவிட்டது. தலைவரின் மகன் அவ்வப்போது அழைத்து ஏதாவது யோசனை கேட்பான். நெருக்கமாக அண்டவிடாமலும் முழுக்க விலக்கிவிடாமலும் ஒரு இடைவெளியில் என்னை வைத்திருந்தான். பலவருஷங்களுக்கு முன்னால் தலைவரிடம் வருவதற்கு முன்பு மனதிலிருந்த வெறுமை திரும்பவும் சூழத் தொடங்கியது.
ஏதேனும் புதிதாகச் செய்யவேண்டும். கடவுளின் மீது நம்பிக்கை இல்லை, ஆகவே அந்தத் திசை ஒத்துவராது. எனக்கு முக்கியத்துவம் உள்ள இடத்திற்கு மாறுவது குறித்த யோசனையும் எழுந்தது. சில முக்கியஸ்தர்களிடமிருந்து வரவேற்புச் சமிக்ஞைகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. ஆனால், தலைவரின் காலத்தில் அதைச் செய்ய விருப்பப்படவில்லை. அப்படியான மாற்றம் இப்போது நிலவும் சமநிலையை குலைத்துப் புதிய பிரச்சனைகளை உருவாக்கும். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்து தீபாவளி கழித்துத் தீர்மானிக்கலாம் என்ற முடிவிலிருந்தேன்.
தீபாவளிக்கு முதல்நாள் முருகனோடும் சோமுவோடும் போய் துணிகள் எடுத்தேன். இனிப்புகளும் பலகாரங்களும் பட்டாசுகளும் வாங்கினோம். அவர்களை அனுப்பிவிட்டு நான் ஊருக்குக் கிளம்பும்போது மணி எட்டரை ஆகிவிட்டது. விடிந்தால் தீபாவளி. பெரிய வாய்க்கால் பாலத்தை நெருங்கும்போது இரவின் கெட்டித்த இருட்டை ஊடுருவிய ஜீப்பின் விளக்கு வெளிச்சத்தில் பாலத்தின் நடுவில் கைகால்கள் கட்டப்பட்டு வாயில் திணிக்கப்பட்டிருந்த துணியோடு கிடந்த சங்கரைக் கண்டேன். கால்கள் அனிச்சையாக பிரேக்கை அழுத்தின.
ஒரே கணம். அந்த ஒற்றைக் கணத்தில் எது என்னைச் சூழ்ந்திருக்கிறது என்று விளங்கிவிட்டது. எங்கு என்னைத் தொடமுடியாது என்று நினைத்திருந்தேனோ அதே இடத்தில் சந்தேகத்தின் நிழலை எள்ளளவுகூட உணரமுடியாத விதத்தில் கண்ணி வைக்கப்பட்டிருக்கிறது. எந்தக் கணக்கின் தீர்க்கப்படாத மிச்சம் இது? இதன் சூத்ரதாரிகள் யார்? வேகமாக டேஷ்போர்டை நீக்கினேன். துப்பாக்கியைக் காணவில்லை. அவசரமாகச் சீட்டுக்குக் கீழே தேடியபோது ஆயுதங்கள் சுத்தமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. பிசிறில்லாமல் வேலை செய்திருக்கிறார்கள். நிமிர்ந்து பார்த்தபோது தப்பித்துவிடச் சொல்லும் இறைஞ்சலை உடலின் அசைவுகள் வழியே சங்கர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
பாலத்தின் மறுபக்கத்திலிருந்து கறுப்பு முகமூடியோடு இருவர் வந்தார்கள். பார்த்தவுடனே தெரிந்துவிட்டது, தெற்கத்திக் கூலிப்படை. ஒருவன் குனிந்து கத்தியை சங்கரின் கழுத்தில் வைத்தான். இன்னொருவன் அரிவாளை ஆட்டி வண்டியிலிருந்து இறங்கும்படி சைகை செய்தான். நான் உள்ளுணர்வில் பின்புறம் திரும்பிப் பார்த்தேன். வண்டியை பின்னால் எடுக்க முடியாத அளவுக்கு ஏழெட்டுப் பெரிய கற்களை மூன்று பேர் உருட்டிவந்து ரோட்டில் போட்டார்கள். பக்கவாட்டின் இரண்டு புறங்களிலும் ஆளுக்கொருவர் வந்து நின்றார்கள். மொத்தம் ஏழு பேர். ஒரே அழுத்தாக ஜீப்பை முன்னால் செலுத்துவதே தப்பிப்பதற்கான சிறிய சாத்தியமாக இருந்தாலும் சங்கரை முன்னால் கிடத்தியிருக்கிறார்கள்.
இதுமாதிரியான சூழ்நிலை எப்போதுமே என்னைத் தொடர்ந்தது என்பது தெரியும். ஆனால் என்ன, நிகழும் விதம் முற்றிலும் எதிர்பாராதது. இந்தக் காட்சிக்குள் சங்கர் இல்லாமலிருந்தால் விஷயங்கள் வேறுவிதமாக இருந்திருக்கும். ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக ஜீப்பை அணைத்துவிட்டு இறங்கியபோது டார்ச் விளக்கின் வெளிச்சங்கள் என் முகத்தில் விழுந்தன.
“நா எதுவும் சிரமத்தக் கொடுக்கமாட்டேன். ஆனா, அவன் கண்முன்னாடி வேண்டாம், சின்னப்பையன், தாங்க மாட்டான், என் காரியம் ஆனதையும் அவன விட்டுருங்கடா. மாப்ள… ஒண்ணும் ஆகாது, நீ தைரியமா இரு”
நான் சொன்னதைக் கேட்ட ஒருவன் டார்ச்சை சங்கரிடம் திருப்பியபோது அவனுடைய கண்களில் கண்ணீரைக் கண்டேன். எதிர்பாராத கணத்தில் என் கால் இடறிவிடப்பட தரையில் மல்லாந்தேன். சரசரவென்று கயிற்றால் பிணைத்துக் கட்டப்பட்ட என் கால்களும் கைகளும் திமிறாமல் இருப்பதற்காக வலுவான கால்கள் அவற்றின் மீது ஏறி நின்றன. என் வாயில் துணி திணிக்கப்பட்டது. இருட்டில் பளபளவென்று மின்னும் பட்டயமொன்று என் கழுத்தில் வைக்கப்பட்டது. நான் பயப்படவில்லை. என் உடல் நடுங்கவில்லை. விஷயங்களின் பெரிய வரைவில் சமநிலை பேணுதலின்பொருட்டு நன்மையும் தீமையுமான காரியங்கள் உலகில் நிகழ்கின்றன. இதுவும் அதுவே. அவர்கள் சங்கரை எதுவும் செய்யாமல் விட்டுவிடவேண்டும் என்பதே என் கடைசி நினைவாக இருந்தது.