
எந்த ஊர், எந்த மொழி அதெல்லாம் தெரியத் தேவையில்லை. பார்த்தாலே சொல்லிவிடலாம் அவன் வடக்கான் என்று. அந்த மெல்லிய நண்பகலில், அவன் கிழிந்த சட்டைக்கும், உடலில் ஆங்காங்கு இருந்த சிராய்ப்புகளுக்கும், தலையில் காயம் ஆறாமல் போடப்பட்டிருந்த கட்டுக்கும்., அவனை நிச்சயமாக அந்த புதிதாகக் கட்டியுள்ள, திறப்பு விழாவுக்குத் தயாராகி நிற்கும், அடுக்குமாடிக் குடியிருப்பின் முன்வாயிலில் விடப்போவது இல்லை. வாயில் வழியாக உள்ளே நுழையும் எண்ணமும் நிச்சயமாக அவனுக்கு இல்லை. பக்காவாக திட்டம் போட்டவனாய் எட்டிப் பார்த்து, அந்தக் கட்டிடத்தின் இடது பக்க மதில்சுவரை எகிறிக் குதித்தான். கண்காணிப்பு கேமரா அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. புதியதாய் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் இன்னும் அந்த கேமரா பதிவுகளை கவனிக்காமல் இருப்பது இவன் செய்ய வந்த வேலைக்கு உதவிக்கொண்டிருந்தது.
அவன் போக்கில் ஒரு நேர்த்தி தெரிந்தது. எங்கே செல்ல வேண்டும், எதை எடுக்க வேண்டும், எப்படித் தேட வேண்டும் என்பதில் அவனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. வாகனங்கள் நிறுத்தும் அந்த நெடிய தரைத்தளத்தில் வழக்கம்போல ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் பழுப்பு நிற சொரசொர டைல்ஸ் பதித்து இருந்தார்கள். எந்த இடத்தில் கடப்பாரை இருக்கும் என்பதை உத்தேசித்தவன், சரியாக எடுத்துவந்தான். பின்பக்க மதில்சுவரை ஒட்டிய தூணுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு டைல்ஸ் கல்லை மட்டும் லாவகமாகத் தட்டினான். சிறு பாகம் கூட உடையாமல் சீராகப் பெயர்ந்து வந்தது. தூணில் சாய்ந்து அண்டக்கொடுத்து பக்குவமாய் டைல்ஸ் கல்லை அகற்றினான். அவன் முகம் தெளிவானது. ஒரு அரைநொடி ஆசுவாசித்தான். இதுவரை எல்லாம் நேர்கோட்டில்தான் போனது. அதற்குள் கண்காணிப்பு கேமராவில் அவனைப் பார்த்துவிட்ட கண்காணிப்பாளன் வாக்கி டாக்கியில் கத்தத்தொங்கினான்.
“செக்யூரிட்டி! செக்யூரிட்டி! ஃப்ளாட்க்குள்ள எவனோ திருடன் புகுந்திருக்கான்யா! கையில கடப்பார வச்சு இருக்கான், உடனே புடிங்க!.”
பதில் வரவில்லை.
கத்தியவனுக்கு பீதியாகத் தொடங்கிய நேரத்தில், “திருடன்! திருடன்!” என்று கத்தியபடியே ஆட்களைச் சேர்த்தாள் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி. அவளின் நேர்த்தியான அலங்கார உடை, ஆபரண நகைகள் இன்று நடைபெறும் சிறப்பு விழாவுக்கு அவள் நிகழ்ச்சி மேலாளராக இருக்க வாய்ப்புள்ளதைக் காட்டியது. தரைதளப் பார்க்கிங்கில் ஆட்கள் கூடியபின், அடுத்து நடப்பது என்னவோ வழக்கமான காட்சிதான், விவரிக்கத் தேவையில்லை.
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுற்றி இருந்தோர் அவனை அடித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இப்போது வாங்கும் அடியில் அவனுக்கு உடம்பில் எங்கெங்கு காயம் வருமென்று இன்னும் தெரியவில்லை. ஆனால், அதற்கு முன்பே அவன் தலையில் ஒரு காயத்திற்கான கட்டு உள்ளதே. அந்தக் கட்டு பற்றிய கதையை தெரிந்துகொண்டு விட்டு இங்கு திரும்பி வருவது சரியாக இருக்கும்.
புறநகர் பைபாஸ் ரோடு. பரோட்டா கடை அண்ணன் மீதமான சால்னாவை மடையில் ஊற்றும் அளவுக்கு இருட்டான நேரம். மூன்று வடக்கான்கள் போதைத் தள்ளாட்டத்தில் ரோட்டின் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருத்தனர். அதில் நாம் பார்த்த வடக்கானுக்கு இதுவரை தலையில் அடிபடவில்லை. இன்னும் சற்றுநேரத்தில் பட்டுவிடும். மூவரில் இவனைத் தவிர மற்ற இருவர் “தோடி சி ஜோ பீ லி ஹை! சோரி து நஹின் கி ஹை!” என்று உணர்ச்சிப் பொங்க பாட்டு பாடியபடி வர, நம்ம வடக்கான் ரோட்டின் விளிம்பில் சிரித்து ரசித்தபடி நடந்து வந்துகொண்டிருந்தான். வாழ்வில் ஏதோ சாதித்ததைக் கொண்டாடிக்கொண்டிருந்த, சுதிசேராத அவர்களின் பாடலும் கூடவே பயணித்து வந்தது.
“மெய்ன் பி ஜானு பீனா பரி பாத் ஹேய்.!” – அலறும்படிச் சிரித்தார்கள். அவர்களுடன் சேர்ந்து பாடலும் தள்ளாடியது. இந்நேரத்தில் இந்தத் தள்ளாட்டத்தை விட அதிக தள்ளாட்டத்தில் வந்த ஒரு கார் நம்ம வடக்கானை பின்புறமாக உரசிச் சென்றது. அந்த உந்துதலில் அவன் எகிறித் தரையில் உருள, கல் ஒன்று அவன் தலையைப் பதம்பார்த்தது. பாட்டு பாடி வந்தவர்களில் ஒருவன், கோபத்துடன் கல் ஒன்றை எடுத்து அந்தக் காரின் மீது வீசினான். வீசியக் கல் பின்புற கண்ணாடியை பதம் பார்க்க, பதற்றமுற்ற கார் ரோட்டு நடுவில் இருந்த தடுப்புசுவரின் மேல் மோதி நின்றது. அதிக வேகமில்லை என்பதால் காரில் பெரிய சேதாரமில்லை. ஆனால், கார் கொடுத்த “வீல்” என்ற ஆபத்துகாலச் சத்தம் காதைப் பிடுங்கியது. கல் எறிந்தவனுக்குப் பீதியாகத் தொடங்கியது. நம்ம வடக்கான் தரையில் உருண்டு காயமும் சிராய்ப்பும் நோக எழுந்து உட்கார்ந்தான். கல்லை எறிந்தவன் பயத்தில் இவனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு மற்றொருவனைப் பார்த்து “பாக் ஜா, பாக் ஜா!” என்று அவசரப்படுத்தினான். அங்கிருந்து அவர்கள் ஓட்டம் பிடித்தனர். கார்காரன் இறங்கி வந்து தப்பித்து ஓடும் இவர்களைக் கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் விடிகாலை, அடிபட்டவனுக்கு ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைக்கு வந்தவனுக்கு, ‘போதிய ஊட்டமில்லை’ என்று குளுக்கோஸ் போடச் சொல்லி இருந்தார் டாக்டர். எப்போது இந்த இடத்தை காலி செய்வோம் என்று அந்த மூவரும் காத்துக் கொண்டு இருக்கையில், மூன்று போலீஸுடன் வந்தான் நேற்று காரில் வந்து இடித்தவன். சின்ன வயசுதான். ஒல்லியான தேகம், பணக்காரப் பார்வை. ரொம்ப கோபக்காரன் போல. சம்பவம் நடந்த இடத்தில் அதே நேரத்தில் நாய் கத்து கத்தி, நான்கு கெட்ட வார்த்தைகள் பேசி, பதிலுக்கு கல் எறிந்திருந்தால் கோபக்காரன் என்று சொல்லியிருக்கலாம். விடிவதற்குள் பிடித்துவிட வேண்டும் என்று படையுடன் வந்தவனை ரொம்பவே கோபக்காரன் என்றே கணக்கு வைக்க வேண்டியுள்ளது. கல்லெறிந்த வடக்கானும் கோபக்காரன்தான். ஆனால், புலம்பெயர் தொழிலாளியின் கோவம் என்பது குற்றமாகும் என்ற நியதி அவன் கோபத்தை நிதானிக்கவில்லை. மனித இயல்பேயானாலும், பதில் கோபமேயானாலும், வறியவன் கோபம் குற்றமல்லவா?
அதனால் இப்போது பிரச்னை இவர்களை நோக்கி வரவர அவர்களின் அச்சம் உச்சத்தைத் தொட்டது. வாழ்க்கை முடிந்து விட்டது போல மூவர் கண்ணிலும் ஒரு பயம். சின்ன கேஸ்தான், ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் பிடிபட்டால் ஏதேதோ காரணங்களுக்கு கூண்டில் ஏற்றப்பட்ட கதைகளை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். பேசும் மொழியோ, அவர்களின் பெயரோ, நேற்று மாலை சம்பாதித்த காசோ எதுவுமே அவர்களுக்குப் பெரிதாய் உதவப்போவதில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிவர். சட்டம் ஒழுங்கை சீராக்க, நாம் அடுத்து எந்த இடத்தில் பயன்படுத்தப்படப்போகிறோம் என்ற நடுக்கம். எந்தப் பிரச்சனையிலும் சிக்காமல் ஊர் வந்து சேர வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கும் சொந்தங்கள் அவர்கள் நினைவுக்கு வந்து சென்றன.
அருகில் வந்த அவர்களின் விதி, “அங்கிள்! திஸ் ஃபெல்லோ” – என்று கல் எறிந்தவனை கைகாட்டியது. அவர்கள் சரணடைந்தது போல உறைந்து நின்றார். ஓடவோ, அழவோ முயலவில்லை. கெஞ்சவும் அவர்களுக்குத் தெம்பில்லை. மேலும் அவை யாவும் பயனற்றது.
“அங்கிள்! பெரிய கேஸா போட்டு விடுங்க. கல்லு விடுறியாடா வடக்கான் நாயே! வில் ஹாவ் யு கில்டு, யு ஸ்வைன்” – பேசியவாறே அவனை நோக்கி கையை ஓங்கினான்.
“தம்பி! இங்க வேணாம்பா எல்லாரும் பாக்குறாங்க. ஆஸ்பத்திரி வேற. நாங்க பத்துக்குறோம்.” – ஏட்டய்யா கொஞ்சம் பதறினார். வேலையும் கடமையும் அடிபட்ட காரின் தரத்தையும், அடிக்க வரும் குடும்பத்தின் தகுதியையும் பொறுத்து செயல்படவேண்டி இருந்தது.
“அங்கிள்! ப்ளீஸ் டோண்ட் ஸ்டாப் மீ! எங்க மம்மி கார். எப்படி அழுறாங்க தெரியுமா? எங்க அப்பா..”
“அப்பாகிட்ட நாங்க பேசிக்குறோம் தம்பி. எல்லாம் எங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டார்”
ரொம்ப கோபக்காரன் நிறுத்துவதாய்த் தெரியவில்லை. நிறுத்துகிறான். மீண்டும் திரும்பி எகிறுகிறான்.
எரிச்சலுற்ற ஏட்டய்யா “தம்பி, இங்க பாருங்க. உங்க கிட்ட லைசென்ஸ் கெடயாது. நீங்க கார் எடுத்ததே தப்பு. அதுக்கே உங்க அப்பா கொஞ்சம் வருத்தமா இருக்காரு. நீங்க குடிச்சு வேற இருந்தீங்க, அது இன்னும் சாருக்கு தெரியாது. சொன்னா கேளுங்க. நீங்க கிளம்புங்க. எங்களுக்கும் ஆள் தேவ. எங்க வேலைய செய்யவிடுங்க”.
ரொம்ப கோபக்காரன் அடக்கமானான். மூன்றில் இருவரை போலீஸ் பிடித்தது. குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருந்ததால் நம்ம வடக்கான் கைதில் இருந்து தப்பித்தான். டாக்டருக்கு நன்றி. ஏறிக்கொண்டிருந்த குளுக்கோஸ் கண்ணீராக நம்ம வடக்கானுக்கு வெளியேறிக்கொண்டிருக்க, குற்றம் புரிந்த அனைவரும் மருத்துவமனை விட்டு வெளியேறினர்.
கைநிறைய மருந்தைக் கொடுத்து நம்ம வடக்கானை மருத்துவமனை வெளியேற்றியது. திக்கு தெரியாமல் நின்றானேயானாலும் காவல் நிலையம் இருக்கும் திசை அவனுக்குத் தெரிந்திருந்தது. தன்னால் முடிந்தவரை தேய்த்து தேய்த்து நடந்துவந்து விட்டான். பயம் ஒரு பக்கம், கேள்விகள் ஒருபக்கமென வாயிலின் ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தான். அந்தப்பக்கம் வெளியே வந்த கான்ஸ்டபிள் “என்னல வேணும்?” என்றார் அதட்டமான குரலில்.
இவன் பேசவில்லை. பார்வை மட்டும்தான்.
“யாருல நீ?” என்றவர் கொஞ்சம் விவரம் புரிந்தவராய், “இப்போ புடிச்சுட்டு வந்தானுவளே அந்த வடக்கானுக ஆளாடா நீயி?”
இப்போதும் பேசவில்லை. பார்வை மட்டும்தான். கொஞ்சம் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. வழியவில்லை. கான்ஸ்டபிளுக்குப் புரிந்தது.
“ஏம்ல எழவெடுக்கீங்க? வந்த எடத்துல வேலையப் பாத்தோமா, ஊரு போய் சேந்தோமான்னு இருக்கணும். இப்போ பாரு; ஏல! உன் ஏஜெண்ட் கிட்ட போய் பேசுல. அவன சொல்லி ஒரு வக்கீல கூட்டுவா. சீக்கிரம் வால. இவனுவோ என்னென்னவோ பிளான் போடுதானுவ.”
மூவருக்கும் சேர்த்து இருந்த ஒரே செல்போன், சம்பாதித்த காசு எல்லாமே இப்போது அதிகாரியின் மேஜையில் அனாதையாய்க் கிடந்ததை நம்ம வடக்கான் எட்டிப் பார்த்தான்.
“ஏல! அங்க என்னல பாக்க.? இங்கேயே நின்ன, உன்னையும் புடிச்சுதான் உள்ள போடுவானுவ. அப்புறம் பாத்துக்க.!”
இப்போதும் பேசவில்லை. கண்ணீரும் வழியவில்லை.
“இவன் ஒரு கதைக்கு ஆவமாட்டான் போலயே! வடக்கானுவளுக்கு பேசுறதும் புரிஞ்சு தொலைக்க மாட்டிக்கி!”
அவன் மாரைத் தொட்டு அழைத்து, “இங்க பாரு! தும் ஜா. தும் ஏஜென்ட். போன் போன்!” – போன் பேசுவதுபோல கைசைகைக் காட்டினார்.
இதெல்லாம் தேவையே இல்லை. அவனுக்கு எல்லாமே ஏற்கனவே புரிந்திருந்தது. ஒரு சிறு புன்னகை. கான்ஸ்டபிளைப் பார்த்து இருகை கூப்பினான். தேய்த்து தேய்த்து அங்கிருந்து நகர்ந்தான்.
மெல்ல சாலையில் நடந்தான். கையிலிருந்த மருந்தை பேருந்து நிழற்குடையின் இருக்கையில் வைத்து விட்டு மேலும் நடந்தான். நடக்கின்ற பிரச்னைகளை இந்த மருந்தால் சரிசெய்ய முடியாது. எதனாலும் சரி செய்ய முடியும் என்று அவனுக்குத் தோணவில்லை. எங்கு செல்வது என்ற எண்ணமே அவனுக்கு வரவில்லை. ஏஜெண்ட் கடைசி செட்டில்மெண்ட் காசு கொடுத்ததே பெரிய சண்டையில்தான். அவனிடம் இனி போய் நின்றால் அவனே போலீசில் பிடித்துக் கொடுத்தாலும் கொடுப்பான். இருந்தாலும் வேறு நாதியில்லை. இவ்வாறே எண்ணியபடி நடந்தவனுக்கு, நீண்ட பயணப் பேருந்திலிருந்து இறங்கியவனுக்குக் கண்ணில் பட்ட முதல் டீக்கடைப் போல, கண்முன் அந்த புது கட்டிடம் தெரிந்தது. துளியும் யோசிக்கவில்லை. எகிறிக் குதித்தான். இப்போது அடி வாங்கிக்கொண்டிருக்கிறான்.
அனைவரும் சேர்ந்து அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த வேளையில், கையில் பூங்கொத்துடன் பரபரப்பாக ஓடி வந்தார் செக்யூரிட்டி.
“மேடம்! மேடம்! என்னாச்சு?”
“இடியட்! எங்க போய் தொலஞ்ச. ஸீ ஹியர்! திருட்டுப் பய.”
“நீங்கதானே மேடம் பூங்கொத்து வாங்கிட்டு வர சொன்னீங்க. இருங்க மேடம் நா பாக்குறேன்.” என்றபடி கூட்டத்தைத் தள்ளினார்.
அடிவாங்கியவனைப் பார்த்த செக்யூரிட்டி கொஞ்சம் அரண்டு போனார்.
“மேடம். இவன் திருடன்லாம் இல்ல. கொளுத்து வேல பாக்குறவன். இங்கதான் ஆறு மாசமா வேல பாத்தான். இவன் கூட இவன் தம்பியும் மச்சானும் வேல பாத்தாங்க. நல்ல பையன் மேடம். திருடலாம் மாட்டான்.!”
“ஆமாயா! சர்டிபிகேட் கொடு. அவனுக்கு தெரிஞ்சு இருக்கு. இன்னிக்கு எல்லா ஓனர்ஸ்க்கும் வீட்டு கீ கொடுத்து, கோல்ட் காய்ன்ஸ் கிப்ட் பண்ணப்போறோம்னு. அத ஆட்டயப் போடத்தான் வந்து இருப்பான். இல்லேன்னா எதுக்கு எகிறி குதிக்குறான்.”
“வாசல் வழியா வந்தாலும்தான் நாம யாரும் விட்ருக்க மாட்டோமே மேடம்! அவன் எதுமே அப்டி திருட மாட்டான் மேடம். ஊசி கூட. இந்த பில்ட்ங் அவன் பாத்து பாத்து கட்டுனது.”
அது உண்மைதான். இந்த கட்டிடம் அவன் குழந்தை. அப்படி ஒரு பாசம் இந்தச் செங்கல் கோட்டையின் மேல் அவனுக்கு. ஒரு இடத்தில் சுவர் வண்ணம் சரியாக இல்லையென்றால் கூட அவனுக்குக் கோவம் வந்துவிடும். தானே தன் கையால் அதை சரி செய்வான். எந்த சுவிட்ச் போட்டால் எந்த லைட் எரியும். மொட்டைமாடி தண்ணீர் தொட்டியில் எந்தவீட்டுக்கு எந்த பங்கு என அவனால் புட்டு வைத்து விட முடியும். இப்போது அடிவாங்கி ரத்தம் சொட்டக் கிடக்கும் இந்த டைல்ஸ் கல்லின் சொரசொரப்பு அவன் கூட இருந்தவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த டைல்ஸ் மேல் கைவைத்து தேய்த்துத் தேய்த்துப் பார்த்துக்கொள்வார்கள். அப்படிதான் டைல்ஸ் பதித்துக் கொண்டிருந்த போது அந்த மூன்று பேரும் விளையாட்டாய் ஒன்றைச் செய்தனர். கடைசி டைல்ஸ் பதிக்கும்போது, தரையில் சிமெண்ட் பூசியதும் அவர்களுக்கு ஒன்று தோன்றியது. மூன்று பெரும் தங்கள் வலது கையை முழுமையாய் அந்த ஈரமான சிமென்டில் ஒன்றாக வைத்துப் பதிய வைத்தனர். சிமெண்டைக் காயவிட்டு, நிதானமாய் பின் டைல்ஸ் கல்லை மேல் வைத்து அதைப் பதியாமல் கிரௌடிங் எனப்படும் வெளிப்பூச்சை மட்டும் பூசி விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர். அந்த நாளோடு அவர்கள் வேலை அங்கே முடிகிறது. ஓரிரு நாளில் பணம் வாங்கிவிட்டு தங்கள் ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதான். அந்நாளுக்குப் பிறகு இந்த இடம் அவர்கள் இரவுகளுக்குச் சொந்தமில்லை. கடைசி நாள், கடைசி வேலை. சோறு போட்ட குழந்தைக்கு நன்றியை, ஊருக்குச் செல்லும் முன் காட்டும் டாட்டா போல அந்த மூன்று பேரும் அந்த கைகள் பதிப்பை வைத்துக் கொண்டனர்.
இப்போது எல்லாம் இழந்தவனாய் நிற்கும் அவன் மனம் இந்தக் கைகளைத் தேடியது. எகிறிக் குதித்தான். டைல்ஸ் கல்லைப் பிரித்தான். அந்தக் கைகளை வருடிப் பார்த்தான். சுற்றி இருந்த எதுவுமே அவன் காதுகளில் விழவில்லை. அந்த கைத்தடங்களின் ஈரம் இன்னும் அந்த சிமெண்ட் தரையை விட்டு நீங்கவில்லை அவனுக்கு. புதியதாய் வாங்கிய கம்மலை மாட்டிக் காட்டி “நல்லா இருக்கா” என்பாளே காதலி, அதைக் காதுகளோடு தொட்டும் பார்க்கும் போது வரும் ஒரு உணர்வை நம்மால் விவரிக்க முடியாது அல்லவா? அது போன்ற ஒரு உணர்வைத்தான் அவன் அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தான். அந்த ஈரம், பிசுபிசுப்பு அவன் வலிகளை மறைத்து அவன் காதுகளை அடைத்திருந்தது. மேற்கொண்டு விழுந்த அடிகளும் கூட வலியான உணர்வை அவன் மூளைக்குக் கடத்தவில்லை. அந்த நினைவுகள் தரும் புன்முறுவலை வலிகளாலும், வழியும் ரத்தாலும் நிறுத்த முடியவில்லை. செக்யூரிட்டி சொன்னது உண்மைதான். அவன் திருடன் இல்லை. அவன்தான் இந்த இடத்தின் ராஜா.
“வாட் தெ ஹெல்! இவரு பெரிய ஆர்க்கிடெக்ட். அப்டியே கட்டுனார்! யோவ் செக்யூரிட்டி, அவன் எதுக்கு வந்தான்னே தெரியல. போலீஸ்கிட்ட விட்ரலாம்”
“மேடம், ப்ளீஸ் மேடம். கொஞ்சம் பொறுமையா இருங்க.” – அடிவாங்கிக் கிடந்தவன் கன்னங்களைத் தட்டி, “டேய்.! டேய்! பையா! எதுக்குடா இங்க வந்த? உனக்குத்தான் வேல முடிஞ்சு போச்சேடா.!”
கொதிப்படைந்த மேடம், “சார்! செக்யூரிட்டி சார். நீங்க இந்த வடக்கான குசலம் விசாரிச்சது போதும். ஃபங்ஷனுக்கு டயம் ஆச்சு. எல்லாரும் வரப் போறாங்க. கவுன்சிலர் வர நேரம்! அய்யா, நீங்க கொஞ்சம் வாசல்ல போய் நிக்குறீங்களா?”
“மேடம். இவன ஆஸ்பத்திரி..?!”
“நீ கேட்டுக்குப் போறியா? இல்ல வேலைய விட்டுப் போறியா?”
“சாரி மேடம்.” – அவனைப் பார்த்து, “டேய் பையா, கொஞ்சம் பொறுத்துக்கோடா.” அவனைத் தரையில் போட்டு விட்டு வாசல் நோக்கி நடந்தார்.
“என்னடா பாக்குறீங்க, ஹே! அந்த டைல்ஸ் எடுத்து வை. சரி பண்ணு” – ஒருவன் சரி செய்து கொண்டிருக்கும் போதே இன்னொருவன், “மேடம். இவன என்ன பண்றது?”
“பின் கேட் வழியா வெளிய தூக்கிப் போடு. கெடக்கட்டும், அப்புறம் பாத்துக்கலாம். இங்க இந்த மாதிரி ப்ராப்ளம்ஸ் வர்ரது தெரிஞ்சா ஓனர்ஸ் ரொம்ப அபசகுனமா நெனைப்பாங்க.” – சொல்லிக்கொண்டிருக்கும்போதே கவுன்சிலர் கார் வரும் சத்தம் கேட்டது. கீழே கிடந்த பூங்கொத்தை எடுத்துக் கொண்டு கேட் நோக்கி ஓடியவள், திரும்பி, “ஹைட் தட் வடக்கான், கைஸ், குயிக்!!” என்று குசுகுசுப்பான குரலில் புருவங்களை உயர்த்திக் கூறிவிட்டு, மீண்டும் திரும்பி ஓடினாள்.
அவன் நமக்கு வடக்கான் தான். ஒடிசாவோ, பெங்காலோ, குஜராத்தின் தென் பகுதியோ, அவன் நமக்கு வடக்கான்தான். எப்படி நாகலாந்து, அசாம், மேகாலயா எல்லாம் நமக்கு சைனீஸ்காரனோ, நீள்முடி வண்ணம் தீட்டி, பல வண்ண உடை அணிந்து பணம் குறைவாய் இருந்தால் நமக்குப் புள்ளிங்கோவோ, அதுபோல் இவனும் நமக்கு வடக்கான்தான். வேண்டியதைக் கேட்டுப் பெறும் போது ‘பையா’, மத்தபடி இவன் வடக்கான்தான்.
இருவர் சேர்ந்து அவனை ஒரு பெரிய மீனைத் தூக்குவது போல் தூக்கிப் பின்வாசலில் வெளியில் கிடந்த குவியல் மண்ணில் படுக்க வைத்துவிட்டு வந்தனர். வாழ்வே இல்லாத ஊரிலிருந்து வந்து, இங்கு இருப்போர் வாழ்வாதாரத்தை அழிப்பதாகப் பழிக்கப்படும் நம்ம பையாவுக்கு ஒரு ராஜாவின் பல்லாக்குப் போல அது இருந்தது. இன்னொரு ரவுண்டு கேட்கலாம் போல. இதே மண் குவியலில் பல இரவுகளை கழித்திருக்கிறான். ஒரு ராஜாவின் மெத்தை போல் இருந்ததால், இந்த பகல் அவனைத் தாக்கியிருக்கவில்லை.
அவன் புன்முறுவலும் நிற்கவில்லை. இப்போதும் கொஞ்சம் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. வழியவில்லை. அவன் உள்ளங்கைகளில் அந்த நினைவுகளின் ஈரம் குறையவே இல்லை.
******
Nitharsanamana unmai eliyavan avan engirunthu vanthalum, athe valiyavan avan engirunthu vanthalum.