
ஜெர்மனியில் ஹேம்பர்க் நகரத்தில் எல்ப் நதியின் கரையோரத்தில் புகைப்படத்திற்காக நீரினில் நின்றும் படுத்தும், போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் பத்து வயது சம்யுக்தா. நதியென்றாலும் கடல் போல் விசாலமானது. சிறு சிறு அலைகள் கரையினில் குதித்து விழுந்த வண்ணம் இருந்தன. மதியம் மூன்று மணியின் வெயிலை நதியின் ஈரம் தணித்திருந்தது. சம்யுக்தா அவளையறியாமலே நீரின் சில்லிப்பில் சிரித்துக் கொண்டேயிருந்தாள். முன் பற்களில் ஒன்று விழுந்து புதுப் பல் ஒன்று முளைக்கத் தொடங்கியிருந்தது. இன்னும் கட்டுகடங்காத ஆர்வம் திமிர, இன்னும் நதிக்கு உள்ளே செல்ல குதித்து குதித்துச் சென்றாள்.
“வேண்டாம் சம்யூ.. பெரியவங்க இல்லாம உள்ள போகக்கூடாது”அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அவளது அப்பா விவேக், காற்றின் அலையினூடே அவளிடம் சற்று சத்தமாகவும் கண்டிப்பாகவும் சொன்னான்.
“போப்பா, நான் போவேன்” என சொல்லிக் கொண்டே முன்னோக்கி ஓடிய அவளை, நதி ஆரவாரமாய் மகிழ்ந்து அலையை மூர்க்கமாக சற்று மேலெழுப்பி வாரிச் சுருட்டிக் கொண்டது.
விவேக், புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டு, “சம்யூ”எனக் கத்தினான். அலைபேசியை அங்கேயே எறிந்துவிட்டு நதியை நோக்கி வேகமாய் ஓடினான். அவனது மனைவி அஞ்சலியும், மூத்த மகள் வர்ஷாவும் கூப்பாடு போட்டார்கள்.
நீருக்குள் வழுக்கி விழுந்திருக்கலாம . பிடித்து நான்கு சாத்த வேண்டும் என்ற கோபம் உடலெங்கும் ஏற, மூர்க்கமாய் ஓடினான். அவன் அந்த நதியின் மூர்க்கத்தைப் பற்றி அறிந்திருந்திருக்கவில்லை போலும். அவள் நின்றிருந்த இடத்தில் நீருக்குள் தேடினான். காணவில்லை. அவ்வளவு பெரிய ஆழமில்லை. கண்ணாடி போல் மண்ணை காண்பித்து கொண்டிருந்த நதி, அவனுடைய கால்களின் பரபரப்பில் கலங்கிக் குழம்பியது. விவேக் குனிந்து இருபுறமும் கைகளால் களைந்து, முன்னேறிச் சென்றான்.
“சம்யூ, வெளாடாத.. வா வெளில”எனக் கத்தினான். பக்கவாட்டிலும் , முன்னும் பின்னுமாய் நீரில் நிலைகொள்ளாமல் தேடினான். அஞ்சலியும் நீருக்குள் கத்திக் கொண்டே வந்து தேடினாள். விவேக்கின் காலையும் நதி ஒரு துஷ்டப் பிள்ளை போல் இழுத்து விளையாடியது. சற்றுத் தடுமாறி பின்னுக்கு வேகமாய் வந்தான். அஞ்சலியையும் அதற்கு மேல் போகாமல் தடுத்தான்.
நதியின் நீரோட்டம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாயிருந்தது. “கரண்ட் அஞ்சு”என்று பதட்டமாய் கூறினான்.
அஞ்சலி, “ஐயோ சம்யூ”என கத்தினாள்.
விவேக் பதட்டமாய் கரையில் வர்ஷா இருக்கிறாளா எனப் பார்த்தான். அவள் கரையோரமாய் அழுதுகொண்டே நின்று கொண்டிருந்தாள். இருவரும் கரைக்கு ஓடி வந்து காவலர்கள் தென்படுகிறார்களா என பார்த்தார்கள்.
அங்கே பாதுகாப்பிற்கு சுற்றும் காவலர்களிடம் பதட்டமாய் சென்று ஜெர்மானிய மொழியில் முறையிட்டான். அவர்கள் வாக்கி டாக்கி மூலம் பலருக்கும் தகவல்கள் சொல்ல, துரிதமாய் நீருக்குள் தேட பயன்படுத்தும் உபகரணங்கள் மூலம் காவலர்கள் நீருக்குள் இறங்கினார்கள். கரையிலேயே இவர்களை தங்கிவிடச் சொன்னார்கள். அங்கு பிக்னிக்கிற்கு வந்த கூட்டம் முழுக்க அவர்களை சுற்றி நின்றுகொண்டு சமாதனப்படுத்தினரகள்.
பதட்டத்தின் விளிம்பு எப்படி இருக்கும் என அந்த தருணம் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. வேகமாய் பேசினான். நாக்கு குழறியது.
“இங்கதான் இருப்பா. எப்படியும் கண்டுபிடிச்சிடுவாங்க அஞ்சு. உடனே கூப்புட்டோமே…”அவனுக்கு நடுக்கத்தில் மூச்சு வாங்கியது. அஞ்சலியும் வர்ஷாவும் அழுவதை நிறுத்தவில்லை.
சம்யூ அவளுக்கு மிகவும் பிடித்த அடர் சிவப்பு ரோஜா நிற உடுப்பைத்தான் போட்டிருந்தாள்.
“இது வேண்டாண்டி.. சேண்ட் பிட்ல புரண்டு, பிரட்டி அழுக்கு பண்ணிடுவ…“ என அஞ்சலி சொன்னாலும், “போம்மா.. இததான் போட்டுக்குவேன், நா எவ்ளோ தூஊஊரத்துல இருந்தாலும் நீ கண்டுபிடிக்கலாம்” என தலையை வெடுக்கென ஆட்டிவிட்டு, அதைத்தான் போட்டுக்கொண்டாள்.
நதியின் தூரத்தில் அவளைக் காப்பாற்றச் சென்றவர்கள் தலைகள் தெரிகிறதா? எவரேனும் சம்யுவை மயங்கிய நிலையில் தூக்கி வர மாட்டார்களா? இதோ இங்கே என என கையைத் தூக்குகிறார்களா? அவளது ரோஜா நிற உடை தன் கண்ணிற்குத் தெரியப் போகிறதா? என அந்த தருணத்திற்காக விவேக் தவித்திருந்தான்.. எவருடைய தலையாவது நீருக்கு வெளியே தெரிந்தால், அங்கிருந்த கூட்டமே கவனித்தது. காத்திருந்தது.
அவர்கள் தேடச் சென்று அரை மணி நேரமாகிவிட்டது. மெல்ல கூட்டம் கலைய ஆரம்பித்தது. சிலர் நம்பிக்கை தரும் விதமாக ஆறுதல் தந்துவிட்டுப் போனார்கள்.
அந்தக் கரையினில் இப்போது அந்தக் குடும்பம் மட்டும் தனித்து அச்சத்துடன் நின்றுகொண்டிருந்தது. விவேக் அலைபேசியில் ஆறுதலை தேடிப் பாய்ந்தான். நண்பர்கள் மற்றும் சென்னையில் வசிக்கும் அவனுடைய பெற்றோர்கள். தாத்தா, பாட்டி என எல்லாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, பிராத்திக்கும்படி கூறினான். கூறிய வேகத்தில் அஞ்சலிக்கும், விவேக்கிற்கும் அலைபேசி ஓயாமல் அழைக்கத் தொடங்கியது
விவேக் அழைப்புகளில் அழத் தொடங்கினான். விஷயங்களை எல்லாருக்கும் ஒன்று போலவே விவரித்தான். கண்கள் நதியிலேயே நிலைக்குத்தியிருந்தன.
கேட்ட நொடியில் அவனுடைய அம்மா பார்வதி ஊரில் மயங்கி விழுந்துவிட்டாள். பெங்களூரில் வசிக்கும் அஞ்சலியின் அம்மா அவளை தாறுமாறாகத் திட்டினாள். ஜெர்மனியில் வசிக்கும் அவனுடைய தமிழ் நண்பர்கள் அந்த இடத்திற்கே வந்துவிட்டார்கள்.
மெல்ல இருட்டத் தொடங்கிவிட்டது. அரை மணி நேரம் தாண்டி அஞ்சு மணி நேரமாய் நீடித்தது. அந்த இருள் அவர்களை மேலும் கலவரப்படுத்தியது. சம்யுவை மீட்கச் சென்ற குழு வெறுங்கையுடன் வந்தது.
‘இருட்டிவிட்டது நீரும் மிகவும் கலங்கலாய் இருப்பதால், எங்களால் சரியாகத் தேட இயலவில்லை. காலையில் விடிந்ததும் வருகிறோம். நதியின் மற்றொரு எல்லையில் இருக்கும் கலங்கரைப் பகுதியில் ஆட்கள் இருக்கிறார்கள்: உடல் அங்கே ஒதுங்கினால் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். மன்னிக்கவும்’ என ஜெர்மானிய மொழியில் சொல்லிவிட்டுச் சென்றார்கள். பதிமூன்று வயது வர்ஷா தாள இயலாத வேதனையில் அழுதாள்.
திக்கற்று விக்கித்து நின்றார்கள் அனைவரும்.
“என்னங்க ஏதோ பொருள் காணாம போனமாதிரி ஈவு இரக்கமில்லாமா சொல்லிட்டுப் போறாங்க.. இதே நம்மூரா இருந்தா விடிய விடிய ஒரு கூட்டமே வந்து தேடிட்டு இருக்கும். “ ஜெர்மனிக்கு புதிதாக வந்த ஒருவன் கூறினான்.
“இங்கல்லாம் இப்படித்தாங்க. அது மட்டுமில்லாம இது ரொம்ப பெரிய ரிவர். எங்கன்னு தேடுவாங்க.. ஹோப் இல்ல“ என மற்றொருவன் விவேக்கின் காதில் படாதவாறு கவலையுடன் கூறினான். அங்கிருந்த அனவருமே பேயடித்தது போலத்தான் ஒன்றும் புலப்படாமல் இருந்தார்கள். சென்ற ஆண்டுதான் இதே போல் ஒரு சிறுவன் நீரினுள் மூழ்கி ஐந்த நாட்கள் கழித்து உடல் மீட்கப்பட்டதாக காவலர் ஒருவர் கூறினார்.
நான்கு பேராய் உற்சாகமாய் வந்தவர்கள் இப்போது மூன்று பேராய் போகிறார்கள். இது கனவா நனவா என்றே விவேக்கிற்குப் புரியவில்லை. இவர்களுடன் வீடு வரை அவனுடைய நண்பர்கள் வந்ததோடு அவர்களை தனித்து விடாமல், அன்றிரவை கடக்க குடும்பமாய் வந்து அவர்களுடனே விவேக் வீட்டில் தங்கினார்கள்.
விவேக்கிற்கு இந்தியாவிலிருந்து ஓயாமல் அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன.
“குழந்தை இல்லாமல் எப்படி வீடு திரும்புனீங்க?”
“அது என்ன விளையாட்டு பொம்மையா? இப்படி அலட்சியமாய் எந்த பெத்தவங்களாவது இருப்பாங்களா? தண்ணில சின்ன பிள்ளைய யாராவது தனியா விடுவாங்களா? ஆரம்பத்துலிருந்தே இதே அலட்சியம்தான்” என்ற வசவுகள் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன.
ஊரிலிருக்கும் ஒரு நண்பனிடம் வெடித்துவிட்டான். “ஆமாண்டா.. நாந்தான்டா கொன்னேன்…நாந்தா ஆத்துல புடிச்சு தள்ளிட்டேன்.. நீயும் என் அப்பாம்மா மாதிரியே பேசறயேடா” என மனம் வெம்பி சத்தம் போட்டான்.
அவனுக்கு பைத்தியம் பிடித்ததுபோல் கத்த வேண்டும் போலிருந்தது.
இந்த புது வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. சம்யூ கூடத்திலிருந்து மேலே படியேறியதும், வலப்பக்கம் இருக்கும் அறையை தேர்வு செய்திருந்தாள். அறையில் அவளுக்கு பிடித்தாற்போல், முழுவதும் பிங்க் நிறத்தில் வர்ண்ம் அடித்து, பார்பி சித்திரங்கள் வரைந்து அவள் என்னவெல்லாம் ஆசைப்பட்டாளோ, அவற்றால் அலங்கரித்து அறையை தந்தான்..
“எப்புட்றி இருக்கு.. அப்பா உம்மேலே எவ்ளோ பாசம் பாத்தியா” என சிரித்தபடியே சம்யூவைக் கேட்டதும், மகிழ்ச்சியில் ஓடி வந்து அவன் கழுத்தை கட்டிப்பிடித்து தொங்கி நின்ற, அதே மாடிப்படியருகே இன்று அவன் அவளை தொலைத்துவிட்டு நின்று கொண்டிருந்தான்.
நண்பர்கள் தேநீர், காபி என தயார் செய்து இவர்களுக்கு கொடுத்தார்கள். எல்லாவற்றையும் மறுத்தார்கள்.
எப்போது விடியுமென அனைவரும் காத்திருந்தார்கள். அதே சமயம் சென்னையில் விடிகாலையில் அவனுடைய அம்மா, ஈரப்புடவையை கட்டிக் கொண்டு கோவில் பிரகாரத்தின் முன்னமர்ந்து அழுதுகொண்டே மனமுருகி வேண்டினாள்.
இப்போது அவனுடன் சுற்றம் எல்லாம் பக்கபலமாய் நின்று தோள் தாங்கிக் கொண்டிருந்தது… நெடு நாட்கள் பேசாமலிருந்த அவனுடைய தம்பியும் அவனது மனைவியும் மாறி மாறி அவனிடம் பேசினார்கள். கோவிலுக்குச் சென்று சம்யுவிற்காக வேண்டிக் கொண்டார்கள். அஞ்சலியின் அம்மா ஜோசியரைத் தேடிப் போனாள்.
இப்படி ஒரு துயரம் தனக்கு நடந்திருக்கிறது என்பதையே அவனால் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நண்பர்கள் அவனது அருகிலேயே இருந்தார்கள்… விவேக் முன்பின் அறியாத இந்தியர்கள் எல்லாம் அர்த்த சாமத்தில் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். அங்கேயே வெகு நேரம் இருந்தார்கள். அவர்களுக்கு சம்யுக்தா எப்படி இருப்பாளெனத் தெரியவில்லை. அங்கே இருப்பவர்களிடம் கேட்டு அவள் புகைப்படத்தை பார்த்தார்கள். யாரும் யாருடனும் உரையாட வார்த்தைகளற்று நடமாடினர். வலுக்கட்டாயமாக ஏதாவது பேச முனைந்தனர். அவர்கள் வீட்டில் நிகழ்ந்தது போல் துக்கத்தில் இருந்தார்கள். விவேக்குடன் அஞ்சலியுடமே அருகிலேயே இருந்தார்கள். வர்ஷாவிற்கு உணவு தர முயற்சித்தார்கள். அந்த நிகழ்வு உண்மையா என அவ்வப்போது விவேக் தன்னையே கேட்டுக்கொண்டான். அந்த இரவு, அந்த வீடு, மனிதர்களால் முழுக்க நிரம்பியிருந்தது. துக்கம் தாண்டி ஏதோ ஒரு தருணத்தில் அங்கிருந்த அத்தனை பேரும் சற்று கண்ணயர்ந்தார்கள்.
மறு நாள் காலை எட்டு மணிக்கு முன்னதாகவே அவனும் அவனது நண்பர்களும் அங்கு சென்றார்கள். சற்று காலதாமதமாகத்தான் மீட்புப் படை வந்தது. அவர்களைச் சொல்லி என்ன பயன்.. அவள் ஆற்றுக்குள் செல்லும்போதே அவளுடன் அஞ்சலி அருகில் நின்றிருக்கலாம்.. தடுத்திருக்கலாம் அல்லது நாமாவது அவளருகில் நின்றிருக்கலாம். அல்லது அவளுக்கு லைஃப் ஜாக்கட் அணிவித்திருக்கலாம், நீச்சல் கற்றுக் கொடுத்திருக்கலாம். வேண்டாம்…..இனி நினைத்து என்ன பயன்? விவேக் தளர்ந்து போய் கரையில் அமர்ந்து கொண்டான். அவனருகில் சிலர் அமர்ந்து கொண்டனர். சிலர் வேறெப்படி அவள் நீரில் போயிருக்கலாம் என கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.. தூரமாய் தெரியும் மறு கரைக்கு அந்தப்புறம் க்ளோவென்ஸ்டீன் காடு இருக்கிறது. ஒருவேளை காட்டுபகுதியில் தூக்கி எறியப்பட்டிருக்கலாமோ? காட்டின் கரையையொட்டி வலப்பக்கமாய் நதி சென்று கொண்டிருக்கிறது. செல்வதென்றால் சுமார் எழு நூறு மைல் வரை செல்கிறது. செக் நாட்டில் உருவாகி, ஜெர்மனியில் பாய்ந்தோடி வடகடலில் கலக்கும் நதி. ஆங்காங்கே நதியையொட்டி இருக்கும் கிராமங்களைக் கண்டுபிடித்து அங்கு போய் தேடுவதெல்லாம் எவ்வகையில் சாத்தியம். நம் ஊர் போல் சட்டென ஒரு வீட்டிற்குள் சென்று புகைப்படம் வைத்து கேட்கவும் முடியாது… என அவர்களுக்குள் வருத்தமாய் பேசிக்கொண்டார்கள்.
விவேக் ஏதும் பேசவில்லை. கண்களில் மட்டும் கண்ணீரி வழிந்து கொண்டேயிருந்தது. முகம் சிவந்திருந்தது. தூக்கமில்லா கண்கள் வீங்கியிருந்தது. “ப்பா ப்பா” என அதிகாரமிட்டு அவனையே சுற்றி சுற்றி வளைய வரும் நான்கடி உருவம் எப்படி நொடியில் மாயமாகும்? நேற்று மதியம் நடந்தது என்ன என்பதை அப்போதுதான் உட்கிரகிக்க ஆரம்பித்தான்…புகைப்படத்திற்கு விதவிதமாய் போஸ் கொடுத்தவள் இன்னும் சற்று உள்ளே சென்று விளையாட நினைத்து செல்லும் போது நீரோட்ட மிகுதியால் நொடிப்பொழுதில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறாள். ஆழமில்லாமல் இருந்ததால், நீரின் வேகம் இன்னும் கூடுதலாக இருந்திருக்கிறது.
உண்மையை எதிர்க்கொள்ள முடியாமல் மிகவும் தடுமாறினான். அவனுக்கு மனதை விட புத்தி அதிகம் வேலை செய்யும். எல்லாவற்றையும் நடைமுறைக்கு சிந்திப்பதில் அவனைப் போல் எவருமில்லை என சொல்வதுண்டு. எத்தனையோ சவால்களை அவன் சுலபமாக்கியிருக்கிறான். அவனுக்கு வந்த பல பிரச்சனைகளை சிரித்தே கடந்தும் வந்திருக்கிறான். இவனுக்கு போய் ஏன் என்ற கேள்வி உடனிருந்த அனைவருக்குமே உதித்தது.
மதியம் வரை எந்த தகவலும் இல்லை. படகில் வந்த மீட்பு வீரர்கள், ‘உங்கள் பெண் கிடைத்தால் தகவல் அளிக்கிறோம். நீங்கள் வீடு செல்லுங்கள்’ என்றார்கள். விவேக் ஏதும் சொல்லாமல் எழுந்து முகம் துடைத்து போகலாமென்றான்.
வீட்டிற்கு வந்ததும் அஞ்சலி விவேக்கின் கண்களைப் பார்த்தே புரிந்து கொண்டாள். அவள் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அவனுடைய அலைபேசியில் நூறுக்கும் மேலாக தவறிய அழைப்புகள், குறுஞ்செய்திகளால் அலைபேசியே ஸதம்பித்துப் போயிருந்தது. அவனையுமறியாமல் அமர்ந்தவுடன் தூங்கிப்போனான். கனவுகளற்ற ஆழ் தூக்கத்தில் இருந்த போது அவனுடைய பெரு மூளை அலாரம் கொடுத்த நொடியில் துள்ளி எழுந்தான். எப்படித் தூங்கினோம் ? சம்யூ நிஜமாகவே இல்லையா? பசித்தது. எவரோ ஒரு பெண் அவனருகில் வந்தார்.
மெல்லிய குரலில், “கொஞ்சமாவது சாப்பிடுங்க.. வர்ஷாவும் சின்னப் பெண்தான். அவளுக்காகவது நீங்க திடமாகனும். அந்த குழந்தைய பாக்கவே முடில” என்றாள்.
அவன் வேறு வழியில்லாமல் தட்டை வாங்கி, கூடத்திலேயே குப்புறபடுத்திருந்த வர்ஷாவிற்கு ஒரு வாய் கட்டாய்ப்படுத்தி தந்தான். அவனும் சிறிது சாப்பிட்டான்.
அஞ்சுவின் அருகில் அமர்ந்து கையைப் பிடித்துக் கொண்டதும், அவள் அவன் மேல் சாய்ந்து எவருக்கும் கேட்காதவாறு அழுதாள்.
அலைபேசியில் காலையிலிருந்து தொடர்ந்து இவனிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்த அவனது சென்னை நண்பனின் அழைப்பை எடுத்தான்.
“இன்னும் கிடைக்கலடா..பாடி கிடச்சா சொல்றோம்னு சொல்றாங்க”
“———-“
“மிராக்கிள் மிராக்கிள்னு எல்லாரும் சொல்றீங்க. மிராக்கிள் நடந்தா நல்லாதான் இருக்கும்.. நானும் அஞ்சுவும் அவ தண்ணீல மூழ்கினத நேரடியா பாத்தோம்டா. அவ போயிட்டா… அவ்ளோதான் . மிராக்கிளாம் ஒண்ணுமில்ல. லெட்ஸ் பி ப்ராக்டிகல்”
“———“
“என்ன ஜோசியம்டா… பொறந்தப்பவே சொன்னாங்க. இவ ஜாதகம் சூப்பரா இருக்கு. இப்படி படிப்பா, அப்படி இருப்பா…நாட்டையே ஆளுவான்னு. ஒண்ணுமில்லடா போயிட்டா அவ்ளோதான்” விரக்தியாய் சொன்னான்.
“——-“
“டேய், சொல்ல சொல்ல போனாடா… என் பேச்ச கேக்கவேயில்ல. ஒரே செக்ண்ட்தான். அப்டியே விழுந்தா.. அப்றம் காணோம். எல்லாமே ரெண்டு மூணு செக்ண்ட்ஸ்ல நடந்துடுச்சு..நான் என்ன சினிமா ஹீரோவா.. அப்டியே பறந்து போய் அவள புடிக்க..எனக்கெல்லாம் சாகலாம்னு தோணுது. ஆனா, வர்ஷா இருக்காளே.. அவளுக்காவது இருக்கனுமே… சரி நான் அப்றம் பேசறேண்டா.”
வீட்டில் தங்கியிருந்த நண்பர்களும் ஒவ்வொருவராய் விடைபெற்றுக் கொண்டனர். இறுதியாய் ஒருவன் சென்ற பின்தான் அவர்களுக்கு மனம் இறுகியது. விவேக்கிற்கு தனித்து அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வதென்றே தெரியவில்லை. அவன் செல்லுமிடமெல்லாம், சம்யூ விரட்டிக் கொண்டேயிருந்தாள். “உன்ன நம்பிதாம்பா ஆத்துக்குள்ள இறங்கினேன்” என்ற அசரீரி கேட்டது.
வேகமாய் வெளிக்கதவை திறந்து வீதிக்கு வந்தான். நடைபாதையில் நடந்து சென்றான். வீட்டின் எதிரேயே அந்த வீதியையொட்டி ஒரு ஓடை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. சம்யூ “அப்பா”என சிரித்தபடி, நீச்சல் அடித்துக் கொண்டே அவன் கூடவே வருவது போலிருந்தது. அதே வேகத்தின் திரும்பி மீண்டும் வீட்டை நோக்கி நடந்தான். வாசலிலேயே அஞ்சலி விவேக்கிற்காக நின்று கொண்டிருந்தாள். தலை வாராமல், சுருள் முடி பறந்து அகோரமாய் நீட்டிக்கொண்டிருந்தது. குளியலறையில், குடிக்கும் தண்ணீர் என நீரை எங்கு பார்த்தாலும் அவள் நினைவு அவனைக் கொன்றது. வீட்டின் பின்னிலும் ஒரு ஏரி இருக்கிறது. அவன் வசிக்கும் ஊரே குளம், குட்டை ஏரிகளால் நிரம்பியிருக்கிறது. ஊரே சம்யூவால் நிறையப்பட்டிருக்கிறது. அப்படித்தான் அவனுக்கு தோன்றியது. அலைபேசியை அழைப்பை ஏற்பதை தவிர மற்ற சமயங்களில் அதனைத் தொடுவதற்கு பயந்தான். அவளை எடுத்த புகைப்ப்டங்கள்தான் இறுதியான கணங்கள். அவற்றை எந்த சமயத்திலும் பார்க்க அவனுக்குத் துணிவில்லை. அஞ்சலி மற்றும் மற்றவர்கள் எல்லாம் அந்த புகைப்படங்களை பார்த்தார்கள். ஆனால், இவன் அதனைப் பார்க்கவேயில்லை. பார்க்கவும் மாட்டான்.
ஒவ்வொரு நாளும் ஜெர்மானிய காவலர்களிடமிருந்து தகவல் வருமென காத்திருந்தார்கள். ஒரு வாரம் கடந்துவிட்டது. அவளைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எதனையும் எதிர்கொள்ளும் நிலையில் மெல்ல இயல்பிற்கு வந்தார்கள். அஞ்சலி சமூக வலைதளங்களில் இந்திய மந்திரிகளின் பெயர்களை இணைத்து, தங்களுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்தாள். ஒரு உபயோகமும் இல்லை. எவர் என்ன செய்ய முடியும்? மனிதர்கள் கடத்தியிருந்தால், கண்டுபிடித்திடலாம். இது நதி செய்த சதி. அஞ்சலி அதிகாலை வேளையில் நதியிடமும் சென்று வேண்டி தினமும் மன்றாடினாள்… ஜெர்மானிய மீட்புப்படையும் சல்லடை போட்டு தேடிக்கொண்டுதானிருந்தார்கள்.
ஊரிலிருந்து அவனுடைய அம்மா, அடித்துச் சொன்னாள்.. “இறந்து போயிருந்தா இவ்ளோ நாளெல்லாம் உடம்பு வெளி வராம இருக்காதுடா.. அவ கண்டிப்ப எங்கோ உயிரோடதான் இருப்பா. நீ நம்பிக்கை வை முதல்ல.. கண்டிப்பா கிடைப்பா பாரேன்”
ஒரு சிறு சலனம் எட்டிப் பார்த்தது. ஒருவேளை அவள் உயிரோடு இருந்தால்? ..அவனும் நம்பிக்கை தளராமல் தினமும் அந்த நதியை ஒட்டி இருக்கும் சிறு நகரங்கள், கிராமங்களில் சென்று விசாரிக்க கிளம்பினான். அங்கிருக்கும் மருத்துவமனைகளில் சென்று விசாரித்தார்கள். அவர்கள் இல்லையென்று தலையாட்டினார்கள். எவராவது விபத்தில் சேர்க்கப்பட நேரந்தால், முதலில் காவல் நிலையத்திற்குதான் புகாரளித்திருப்போம். அவ்வாறு எந்த சிறுமியும் சேர்க்கவில்லை என்றார்கள். பல இடங்களில் கேட்டு சோர்ந்து வீடு திரும்பினார்கள்.
ஒரு வாரம் என்பது தாண்டி மூன்று வாரங்கள் ஆகியது. சம்யுவைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. எந்த நிலையில் கிடைத்தாலும் தெரியப்படுத்தச் சொல்லி, சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள்.
இன்னும் அலுவலகம் செல்லவில்லை. அவனுக்கு அலுவல்கம் தேவைப்படும் விடுப்பு அளித்திருந்திருந்தது. அவனுக்கு ஊருக்கு சென்று வரவேண்டுமென தோன்றியது. அவனுக்காக இல்லையெனினும், அஞ்சலுக்கும், வர்ஷாவிற்குமாய். வர்ஷா மிகவும் மன அழுத்ததுடன் இருந்தாள். பதிமூன்று வயது வர்ஷாவை எப்போதும் சம்யூ சீண்டிக்கொண்டே இருப்பாள். ஆனால், அஞ்சலி சம்யூவை அடித்தாலோ, திட்டினாளோ, அவள் முதலில் பரிவு தேடுவது வர்ஷாவிடம்தான். வர்ஷாவிற்கு மாற்றம் வேண்டும் என சென்னைக்கு சென்று வர டிக்கட் புக் செய்தான்.
இந்த வீட்டையும் விற்றுவிட்டு, இந்தியாவே சென்றுவிடலாமென சில சமயங்களில் அவனுக்கு தோன்றியது. அவளது நினைவுகளைக் கிளறும் இந்த நகரத்தில் தன்னால் வாழமுடியுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் தற்காலிகமாய் ஒரு மனமாற்றத்திற்காக சென்னை சென்றுவிட்டு வரலாமென நினைத்தான்.
சென்னையில் கால் வைத்ததுமே ஓலங்களும் ஒப்பாரியுமாக இரு நாட்கள் கழிந்தன. தொடர்ந்து உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்குத் தெரியும் பரிகாரங்களை செய்யச் சொன்னார்கள். சம்யுக்தாவின் மரணம் உறுதிபடுத்தாத நிலையில் காரியங்கள் செய்யக்கூடாது என்பதால் ரெண்டுங்கெட்டான் நிலைமையில் எல்லாரும் இருந்தனர். நாளொரு பரிகாரமும் பிராத்தனைகளுமாய் நாட்கள் கழிந்தன.
அவனுடைய அம்மா பார்வதி, விவேக்கை கட்டாயப்படுத்தி விடிகாலை நான்கு மணிக்கு ஒரு மை ஜோசியரிடம் கூட்டிச் சென்றாள். நீட்ட வாசல் கொண்ட அந்த சிறிய வீட்டில் சிறிய கூடம் மற்றும் ஒரே ஒரு சுவாமி அறை மட்டுமிருந்தது. வீடு முழுக்க நீரினால் துடைத்து விடப்பட்டு, கோலமிடப்பட்டிருந்தது. தாடி வைத்து திருநீறு தரித்திருந்த அந்த ஜோசியர் இவர்களை அழைத்து அந்த சுவாமி அறைக்குச் சென்றார். அங்கே மின் விளக்கு எரியாமல் தீப விளக்கு மட்டுமிருந்தது. சுவர் முழுக்க சுவாமி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கீழே இரு பலகையில் வினாயகர் புகைப்படமும், அருகே கிழக்குமுகமாய ஐந்து அகல் விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன.
உட்காரச் சொல்லி கை காண்பித்தார். அவர் காண்பித்த இடங்களில் இரு பலகைகள் போடப்பட்டிருந்தன. பார்வதி பயபக்தியுடன் அமர்ந்தார். விவேக் தயக்கத்துடன் அமர்ந்தான். அவனுக்கு கலக்கமாக இருந்தது.
அவர் வடக்கு முகமாக அமர்ந்து கொண்டு மந்திரங்களைச் சொல்லி, தீபாராதனை காண்பித்து மை ஜோசியத்தை ஆரம்பித்தார். பெரிய வெற்றிலையை எடுத்து, அதில் ஒரு சிறிய கண்ணாடிச் சிமிழில் அடைக்கப்படிருந்த மையை ஆட்காட்டி விரலில் எடுத்து வெற்றிலையில் பெரிய வட்டமாய் தடவி கண்களை மூடி ஏதோ மந்திரங்களை முனக ஆரம்பித்தார். ஐந்து நிமிடங்கள் கரைந்தன. விவேக்கிற்கு அந்த சூழ்நிலை படபடப்பாக இருந்தது.
பிறகு அங்கிருந்த அகல் விளக்குகளின் ஒளியில் மையை உற்றுப் பார்த்தார்.
“பொண்ணோட உருவம் மேக்குப் பக்கம் காண்பிக்குது…… மண்டையிலோ கழுத்திலோ அடிபட்டு கிடக்குது. எதுக்கும் ஆத்தோட மறுபுறம் போய் தேடுங்க.. மத்தபடி உயிருக்கு பாதகமில்ல. உசுரோடதான் இருக்குது..தைரியமா போயிட்டு வாங்க” என்றார்.
வீட்டிற்கு வந்ததும் எல்லாரும் அவனை சலவை செய்து கொண்டிருந்தார்கள்.
“எல்லாருமே இதத்தான் சொல்றாங்க.. எல்லா வகையிலும் நீங்க ட்ரை பண்ணிட்டீங்க… ஒரு பயனும் இல்ல.. நீ இந்த சமயத்தில கடவுளை நம்பனும்“ என வீட்டிலிருந்தவர்கள் மீண்டும் ஜெர்மனிக்கு கிளம்பி போய் தேடச் சொன்னார்கள். வந்த ஒரு வார நிலையில் மீண்டும் ஜெர்மனிக்கு கிளம்பினான். ஹேம்பர்க்கில் அவனுடைய வீட்டிற்குச் செல்ல செல்ல சூனியம் கவ்விக்கொண்டது.
இந்த வீட்டிற்கு கிரகப் பிரவேசம் செய்த போது வீடு முழுக்க பூ மாலையில் அலங்கரித்திருந்தான். அலங்கார விளக்குகளால் மொத்த வீட்டையும் மின்னச் செய்து பால் காய்ச்சினான். பால்கனியில் அழகாய் உணவு மேடைகளை அமைத்திருக்கிறான். அருகிலேயே க்ரில் அடுப்பும் இருக்கிறது.. பால்கனியில் கைப்பிடி முழுவதும் ஆங்காங்கே சிறு மின் விளக்குகள் பார்ப்பதற்கு ஒரு ரிசார்ட் உணர்வு வரும் வகையில் அமைத்திருந்தான். இரவு உணவை மேசையில் வைத்து, பாடல்களை கேட்டுக்கொண்டே அனைவரும் சேர்ந்து சாப்பிட்ட நாட்களில் அவன் மிகவும் மகிழ்ந்திருந்தான்… இன்று வீட்டை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தடுமாறினான்.
மறு நாள் எழுந்து எல்ப் நதியின் மறுபுறமிருந்த காட்டுப்பகுதியில் அவனும் அவனது நண்பர்களும் சென்று தேட முனைந்தார்கள். அவர்கள் நினைத்ததை விட அது கடினமாக இருந்தது…நிறைய வண்டுக்களின் ரீங்காரங்களிலும், பூச்சிகளின் கடிகளுக்கிடையில்தான் பிரயத்தனமாய் தேடினார்கள். அங்கு அவள் வருவதற்கே சாத்தியமில்லை என தோன்றியது… ஏற்கனவே காவலர்கள் தேடிய இடங்கள்தான்.. இருப்பினும் மூன்று நாட்கள் வரை தினமும் சென்று தேடினார்கள்.
இல்லை என்று மனதை தேற்றும் சமயத்தில் மனதை சலனப்படுத்தி மீண்டும் ஏமாறிய வலியைத் தாங்க இயலாமல், அவனுடைய அம்மா அழைத்த போது, அவனுக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தையையும் கொண்டு அந்த ஜோசியரைத் திட்டினான்…அவனது அம்மாவைத் திட்டினான், எல்லாரையும் திட்டினான். சோர்ந்து போய் உடனேயே மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்தான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவனுடைய அம்மா, அப்பா, தாத்தா பாட்டி, தம்பி, அஞ்சலியின் அம்மா என எல்லாரையும் கூடத்திற்கு அழைத்தான்.
“இங்க பாருங்க.. அவ தண்ணில போயிட்டா… போயிட்டானா, போயிட்டா அவ்ளோதான்….அவ உடம்பு எங்கோ ஆழமா மண் சகதில புதைஞ்சிருக்கலாம், இல்ல, தண்ணியோட தண்ணியா கடல்ல சேர்ந்திருக்கலாம்…அவ உடம்பு கிடைச்சா என்ன பண்ணுவோம்? ஒண்ணு புதைப்போம், இல்ல அஸ்திய கடல்ல கலப்போம். இந்த ரெண்டுல ஒண்ணுதான் அவளுக்கு நடந்திருக்கு. இனிமே எந்த ஜோசியம், பரிகாரம்னு கொண்டு வராதீங்க.“ என பக்குவப்பட்ட மனதோடு நிதானமாய் சொல்லிவிட்டு அவனது அறைக்குச் சென்றான். அந்தப் பக்குவம் எத்தகையதெனில், பெரும்பாறை பிளந்து மலையிலிருந்து கூர்கற்களாய் உருண்டு, அருவியோடு விழுந்து, ஓடையின் சலசலப்பில் அலைந்து ஒரு பக்குவப்பட்ட கூழாங்கல்லாய் மாறுவது போலிருந்தது அவனது மனம்.
பார்வதி சத்தமற்று குலுங்கி அழுதாள். அதன்பின் அவனிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. அஞ்சலி சமூக வலைதளங்களில் மீண்டும் சம்யுக்தாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து அவளை எந்த நிலையில் கிடைத்தாலும் தகவல் அளிக்கும்படி ஆங்கிலத்திலும் ஜெர்மானிய மொழியிலும் பகிர்ந்து கொண்டிருந்தாள். இவர்களின் நிதானம் அத்தனை பேருக்கும் வலியை தாண்டியும் வியப்பை அளித்தது.
ஒரு வாரம் சென்றிருக்கும்.
அன்று மிகப்பெரிய நடிகரின் சினிமா வெளி வந்திருந்தது. தீபாவளி போல் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் முழுக்க இருந்தன.
வர்ஷாவிற்கு தலைவாரிக்கொண்டிருந்த அஞ்சலியிடம் விவேக் சென்றான்.
“சினிமாக்கு போலாமா அஞ்சு?”
வர்ஷா அஞ்சுவின் பிடியிலிருந்த தலையைத் திருகி விவேக்கை பார்த்தாள். எல்லாருக்கும் அது அவசியமாகியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் சிதையும் மனத்திடமிருந்து தப்பித்தாக வேண்டும். இருவருமே தலையாட்டினார்கள்.
தியேட்டரில் முகப்பில் ஒரே ஆரவாரமாய் இருந்தது. பட்டாசு சப்தங்களும், மேளங்களின் சப்தங்களும் அவர்களின் கவலைக்கு ஈடுகட்ட முடியுமா என போட்டி போட்டன. படம் ஆரம்பித்து, போய்க்கொண்டிருந்தது. ஹீரோவின் மகன் தொலைந்து பின் இறந்துவிடுவது போலொரு காட்சி வந்தது.
விவேக்கால் கவனம் குவிக்க முடியாமல் தடுமாறினான்… அஞ்சுவையும் வர்ஷாவவையும் திரும்பிப் பார்த்தான்.. மூவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.