இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

கூண்டு – கவிதைக்காரன் இளங்கோ

சிறுகதை | வாசகசாலை

மோகனப்ரியாவுக்கு டூ-வீலரைத் தவிர்த்துவிட்டு மெட்ரோ ரயிலில் பயணிப்பது மனரீதியாக சமீபத்திய தேவையென இருந்தது. ஒப்பந்தபடி மூன்றுவருட குத்தகைக் காலம் முடியும் முன்னே ஃபிளாட்டை காலி பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மகளின் கல்யாணப் பத்திரிகையை கையில் கொடுத்துவிட்டு, ‘சீக்கிரம் வேற இடம் பார்த்துக்கோங்க மேடம், அவசியப்பட்டா.. லீஸ் அமௌன்ட்டை முன்னாடியே தந்திடறேன்’ என்று நல்லவிதமாகவே சொல்லிவிட்டு வீட்டுக்காரர் போய்விட்டார். அவர் வந்துபோன முந்தின நாள்வரையில் இதைக் குறித்த யோசனைகூட தலைக்குள் கிடையாது. அடுத்த குடியிருப்புக்கான இடம் தேடி லோல்படுவதின் எரிச்சலை இந்த இரண்டு வாரங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக எட்டியிருக்கிறாள்.

வீடு பிடித்துக்கொடுக்கும் தரகர்களின் அடுத்தடுத்த மொபைல் அழைப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய திடீர் நிர்ப்பந்தத்திற்குள் நுழைந்துவிட்ட எரிச்சலின் தொடக்கமாக அது இருந்தது.

“கிரவுண்ட் ஃப்ளோர் வேணாம்ண்ணே.. ஒரு கார், ஒரு டூ-வீலர் இருக்கு.. பார்க்கிங்ல பிரச்சனை இருக்கக்கூடாது. லிஃப்ட் இல்லனாலும் பரவாயில்லை.. யெஸ்.. யெஸ்.. பக்கத்தில நிறைய ஃபேமிலிஸ் இருக்கணும். பால்கனி இருக்கிறது முக்கியம். மொட்டைமாடி அக்ஸஸிபில் ஈஸியா இருக்கணும்.. ம்ம்.. ம்ம்.. நோ.. நோ.. சிம்பிளான அப்பார்ட்மெண்ட்டா இருந்தாலே எனக்கு ஓகேதான்.. ம்ம்.. ம்ம்.. இல்லண்ணே.. கேட்டட் கம்யூனிட்டி வேணாம்.. ஆமா.. ஆமா.. அதான்.. அதான்.. அதிலருந்துதானே வெளியே வரப்போறேன்.. யெஸ்.. யெஸ்.. நாட் அகெயின்.. ம்ம்.. ம்.. இல்லண்ணே.. இல்லண்ணே.. லீஸ் மட்டும்தான் ஒத்துவரும். அப்டியே பாருங்களேன்.. ஆமா.. ஆமா.. என்ன வொர்க் பண்றேங்கறதை மட்டும் தெளிவா புரிய வச்சிடுங்க.. ஆமா.. ஆமா.. அதல்லாம் நான் எக்ஸ்ப்ளைன் பண்ணிக்கிறேன்… ஓகேண்ணே.. ஓகேண்ணே.. வச்சிடறேன்.. பை..”

அதே விஷயங்களை மீண்டும் மீண்டும் ஒரே தொனியில் வெவ்வேறு தரகர்களிடம் பேசிப் பேசியே உருவாகிற சலிப்பு அவளை அயற்சியடைய வைத்தது. வேலை சம்பந்தப்பட்ட கெடுபிடிகளுக்கு மனதளவிலும் கொஞ்சம் விடுமுறை கொடுத்தாள். தான் இல்லாத இடத்தில் தன் இருப்பை சமாளித்துக்கொள்ள அவளுக்கென ஓர் உதவியாளன் இருந்தான்.

சினிமாவில் இணை நடன இயக்குனராக இருப்பதின் அனுகூலங்களும் அசௌகரியங்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இவ்வாழ்வில் சுண்டப்படுவது அவளுக்கு வாடிக்கைதான். ஜாடை காட்டினாலே படுக்க வந்துவிடுவாள் என்று முயற்சிக்கும் ஆசாமிகளில் வாரத்திற்கு இரண்டு பேரையாவது கடந்து போயாக வேண்டும். என் மூலதனம் உடல் அல்ல நடனம் என்பது இந்த முட்டாள்களுக்கு எப்போதுமே விளங்கிடப்போவதில்லை. அதுவொரு தலையெழுத்து என்கிற முடிவுக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிறது.

மெட்ரோ குகையின் இருப்புப்பாதைக்குள் ரயிலில் பயணித்தபடி வேடிக்கைப் பார்க்க நினைத்தால் பக்கவாட்டில் விரைந்து செல்லும் இருட்சுவர்கள் சுவாரசியமற்றவையாக இருந்தன. எதிர்வரிசை பிம்பங்களும் தன் பிம்பமும் ஒரு கொலாஜ் ஓவியமாக அகன்ற ஜன்னல் கண்ணாடிகளில் அர்த்தமற்று பிரதிபலிக்கின்ற அசௌகரியம் மட்டுமே எஞ்சுகிறது. திடுமென நிலையத்திலிருந்து ஆகாயம் நோக்கி வெளிப்பட்டு அப்பயணம் தொடரும்போது நகரத்தையே வளைத்துப் பிடித்துவிட்ட ஓர் உணர்வு அவளுக்கு வந்துபோனது. ஒரு பக்கக் காதில் மட்டுமே நுழைந்திருக்கும் ஹியர்ஃபோனில் இசை கேட்டபடியே அசைந்துகொண்டிருக்கும் அவளுடைய தலைக்கூந்தல் கோல்டன் பிரவுன் நிறத்தில் இருந்தது. அது, சுருள் சுருளாக முதுகின் மேற்பரப்பு தொடங்கின இடத்திலேயே முடிந்துபோய் தொங்கியது. பாதை வளைவுகளில் ரயில் நெளிந்து திரும்பும்போதெல்லாம் அக்கூந்தலும் மென்மையாக அசைந்தது.

அவளை சைட் அடித்தபடி எதிர்வரிசையில் சூயிங்கம் மென்றுகொண்டு ஓர் இளைஞன் உட்கார்ந்திருந்தான். மடியில் கிடத்தியிருந்த முதுகுப்பையின்மீது ‘பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே’ நாவலை பறவையைப் போல விரித்து குப்புறக் கவிழ்த்திருந்தான். அவனுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த ஓர் இளம் தம்பதியருக்கு நடுவிலே வாகாக சாய்ந்தமர்ந்திருந்த குட்டிப் பாப்பா ஒருத்தி மோவாயில் இரு கைகளையும் ஊன்றியபடி ப்ரியாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இளம் அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு மொபைலில் தத்தம் உலகில் சஞ்சரித்திருந்தார்கள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் ப்ரியா திருமங்கலம் நிறுத்தத்தில் இறங்கி மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியேறினாள். சாலையில் காத்திருந்த ரகுவரன் அவளை தன்னுடைய ராயல் என்ஃபீல்டு பைக்கில் பிக்கப் பண்ணிக்கொண்டான். ஆரஞ்சு நிறத்திலான யூ வடிவ ஹெல்மெட்டிற்குள் பொருந்தியிருந்த ப்ரியாவின் முகம் அவளுடைய அடையாளத்தை பறித்திருந்தது. போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு கணக்கு காட்டுவதற்காகவே விற்பனையாகும் அவ்வகை பிலியன் ஹெல்மெட்டுகள் பெரும்பாலும் தரமற்றவை. ப்ரியா அணிந்திருந்தது தரமான ஒன்று. அவளுக்கு அவளுடைய தலை முக்கியம்.

“என்னக்கா ப்ரொஜெக்ட் ஊத்திக்கிச்சா? மூஞ்சி டல்லா இருக்கு?”

“விஸ்காம் பசங்க.. வீடியோ ஆல்பம் பண்றாங்க.. ராப் ஸாங்.. அஞ்சு நாளு வொர்க்தான்.. மூவ்மெண்ட்ஸ்லாம் பால் டப்பா ஸ்டைல்ல வேணுங்கறாங்க..”

“அது சரி.. அவன் திடீர்னு டிரெண்ட் அடிச்சிட்டான்.. பாய்ஸ் மட்டுமாக்கா?”

வெயிலும் வெக்கை காற்றும் முகத்தில் அறையவே, பையிலிருந்து கூலர்ஸ் எடுத்து அணிந்துகொண்டாள்.

“ஒன்லி கேர்ல்ஸ்.. ஸாங் பீட் நல்லாருக்கு.. பாடல் வரிகள் ரொம்ப சூப்பரா இருக்கு..”

“அப்புறமென்ன..?”

“பேமெண்ட் உதைக்குதுடா..”

அவனுடைய ஹெல்மெட் மண்டை அமைதியாக மேலும் கீழும் அசைந்தது. ஒரு நிமிடம் எதுவும் சொல்லவில்லை. பைக் விரைந்து கொண்டிருந்தது. தலையை சாய்த்து வட்ட வடிவ ரியர்-வியூ கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். ஒரு சிக்னலில் பிற வாகனங்களுக்கிடையே பாந்தமாய் முன்னேறி சொருகி நிறுத்தினான். நிறுத்தும்போது ஓர் அலுங்கல் கிடையாது.

“வீடு ஷிஃப்டிங் வேற இருக்குல்லக்கா.. ஒத்துக்கிட்டா செலவுக்கு ஆகும்ல..?”

பதில் சொல்லவில்லை. லாஜிக்காக பார்த்தால் சரியாகத்தான் சொல்லுகிறான்.

சிக்னலின் டிஜிடல் எண்கள் குறைந்துகொண்டே வந்தன. பச்சைநிற அம்புக்குறிக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். இதய வடிவத்தில் சிகப்பு ஒளிர்ந்தது. யாருடைய ஐடியா இது என யோசித்தாள். வாகன ஓட்டிகளை நோக்கி.. பிரியமானவர்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள். அவசரப்படாதீர்கள் என்கிற குறியீடாக அது அவளுக்குப் பட்டது. அந்த இதயத்தையே வெறித்திருந்தாள். அது அணைந்து பச்சை எரிந்தபோது முதல் கியரைத் தட்டி ஆக்ஸிலேட்டரை முறுக்கி க்ளட்சை விடுவித்தான். விலுக்கென்று ப்ரியாவின் உடலை முன்னுக்கு இழுத்து உலுக்கிவிட்டு நகர்ந்தது. அது பழைய ராயல் என்ஃபீல்டு.

“இன்னும் நீ சரி பண்ணலியா..?”

“இந்த பைக்கோட டாக்டரு ஊருக்குப் போயிருக்கான்.. இது அவனுக்குத்தான் ஒத்துழைக்கும்..”

“நீயேன்டா.. புல்லட்டை வச்சிக்கிட்டு மல்லுக்கட்டுற..? மைலேஜ் கம்மியாத்தான தரும். இன்னும் முழுசா ரெடி ஆகாத இந்த சிட்டிக்குள்ள எப்படி இது ஒத்துவரும்? துட்டுக்குப் புடிச்ச கேடு..”

“கரெக்ட்டு”

“வேறென்னவாம்?”

“ஒரு கெத்து..”

ஹெல்மெட்டைத் தட்டினாள்.

“ஒன் தலை..”

மீண்டும் அமைதி. காற்றின் படபடப்பு. ஓவர்டேக் பண்ணுகிற ஆட்டோ. காதருகே அலறிவிட்டு ஓயும் ஹாரன்கள். குடைநிழலுக்குள் கரும்பு ஜூஸ். பானி பூரி குடங்கள். எல்.ஈ.டி. மின்கம்பத்தில் வந்தமரும் காகம். பட்ஸ் விற்கும் சிறுமிகள். பால்பாயின்ட் பேனாக்களை வைத்திருக்கும் இளம் கைகள். நடைபாதையை உடைத்துப் புடைத்துக்கொண்டிருக்கும் ராட்சச மின்சார கேபிள்கள். பான்பராக் கறை பற்களோடுகுத்துக்காலிட்டுஉட்கார்ந்திருக்கும் வட மாநிலத்துப் பரட்டைகள்..

“இந்த ஆல்பம் நீ பண்றியாடா?”

பைக் வேகங் குறைந்து.. தயங்கி ஓரங்கட்டியது. கண்ணாடியில் அவளைப் பார்த்தான்.

“போட்டு பாக்குறியாக்கா? பெட்ரோல் செலவை நானே மேனேஜ் பண்ணிக்குவேன்க்கா.. பயமுறுத்தாத”

“டேய்..”

“பணங்காசு எப்படியும் வருங்கா.. எனக்கு சாதிக்கணும்.. அதுக்காக.. அவசரம்லாம் படலை.. கழட்டி வுட்றாத”

அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவனுடைய பதற்றம் புரிந்தது. அது நியாயமான ஒன்றுதான். சினிமாவில் இருக்கிற தொழில் போட்டியில் சரியான இடம் தகைந்து நிற்பது லேசுபட்ட காரியமல்ல. இன்னும் அவளே முதன்மையான நடன இயக்குனராகவில்லை. தகுதி இருந்தும் தயக்கம் இருக்கிறது. ரகுவரன் நல்ல நடனக்காரன். ஆர்வக்கோளாறான ஆள் அல்ல. அது ப்ரியாவுக்கு பலமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.

“இல்ல.. நிஜமாத்தான் சொன்னேன். நீ முயற்சி பண்ணு.. நான் பேக்யார்ட் சப்போர்ட்டா இருக்கறேன்.. இந்த வீடு விஷயமா அலையறதுல எனக்கு கவனம் ஃபோகஸ் ஆக மாட்டேங்குதுடா ராக்.. யமுனா விஷயம் வேற மண்டைக்குள்ள ஓடிக்கிட்டிருக்கு.. சரி, அது என் பாடு.. கெடக்கட்டும்.. கிடைக்கற வாய்ப்பை விட்டுற வேணாம்.. பேமெண்ட் கம்மினாலும் பரவால்லைங்கறல்ல.. தென் இட்ஸ் ஓகே.. அப்போ நீயே பண்ணு. வர்றதுல சரிக்குப் பாதி..ஷேர்.. டீலா?”

அவனால் அதை நம்ப முடியவில்லை. ஹூய்ய்ய்.. என்று அலறி சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். அவளுக்கு ஹைஃபை செய்துவிட்டு வானை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி காற்றைக் குத்தினான்.

பால்கனியில் நின்றபடி நகரத்தை வேடிக்கை பார்த்தாள். வெளிச்சப் புள்ளிகள் மேய்கிற இரவின் உடலென இந்நகரம் மல்லாந்து கிடந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கே இப்படியான பொழுதுகள்? மனித அணுக்கம் இல்லாமல், தனித் தனி தீவுகளாக கான்க்ரீட் பெட்டிகளுக்குள் அடைந்துகொள்கிற வசதி அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் எளிதாக அமைந்துவிடுகிறது. எவரைப் பற்றியும் எவரும் அக்கறைப்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை. பிறர் சார்ந்த பொறுப்புகள் கிடையாது. கவலைகள் குறைவு. அடுத்தவர்களின் சொந்தக் கதைகளை கடனேயென தலைக்குள் சுமந்து திரிய வேண்டியதில்லை.

இதெல்லாம்தான் ஒரு கரையின் விளிம்பிலிருந்து மறுகரையை நோக்கும்போது உருவாகின்ற ஈர்ப்பு. வாழ்வதற்கான உறவு பிணைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்விடுமோ என்கிற பெருங்குழப்பமும் அவளுக்கு உண்டு.

சற்றுமுன் மும்பையிலிருந்து யமுனா வீடியோ காலில் அழைத்திருந்தாள். ப்ரியாவின் பதினாலு வயது மகள். அவள் அங்கே தன் தகப்பனுடன் வாழ்கிறாள். ப்ரியாவுக்கு ரிஷியோடான குடும்ப வாழ்க்கை ரத்தாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. நிறைய மல்லுக்கட்டல்களுக்குப் பின்னும் அவளால் சட்டப்படி, நீதிமன்றத்தில் அம்மா-பெண் குழந்தை என்கிற உரிமையின் வழியாக சைல்ட் கஸ்டடியில் யமுனாவை தன்பக்கம் இழுத்துக்கொள்ள முடியவில்லை. பொய் குற்றச்சாட்டு, போலி சான்றுகள், உணர்வுபூர்வமான கத்தல், கதறல் என அனைத்து நாடகமும் யமுனாவின் கண்முன்னேயே அரங்கேறி முடிந்தபோது அசிங்கமாக இருந்தது. ரிஷியின் உயர் சமூகத்து செல்வாக்கு என்னவென்று உரைத்தது.

அன்றைய தினத்தின் தலைக்குனிவும் ஆதரவற்ற நிலையும் எப்போதும் நெஞ்சுக்குள்ளே துருப்பிடித்த உலோகமாக உருண்டுகொண்டே இருக்கிறது.

பிரிவின் தொடக்கக் காலத்தில் தவித்து அழுதுகொண்டேயிருந்த யமுனா நான்கே வருடங்களில் அப்பாவின் பெண்ணாக மாறிப் போய்விட்டாள். வாடிக்கையான போக்குவரத்து மெல்ல மெல்ல குறைந்து போவதில் ஆரம்பித்தது. பிறகு, தானாக தேடிவருகிற சந்திப்புகள் குறைந்தன. இரண்டு பக்கத்திலுமே பொருந்தாத சந்தர்ப்பங்கள் பலதும் முளைத்திருந்தன. தற்போது பேசுவதும் தேய்ந்து வருகிறது. வாட்ஸப் வீடியோ கால் மட்டுமே சிறிய ஆறுதல். யமுனாவின் உற்சாகமற்ற முகத்தையாவது பார்த்துவிட முடிகிறது. ஆனாலும், ப்ரியாவுக்கு தன் உரிமையை சுலபமாக விட்டுக்கொடுத்துவிட முடியாது. அவ்வப்போது விமானப்பயணமாகக் கிளம்பிப் போய் ஓர் எட்டு நேரிலும் பார்த்துவிட்டு வந்துவிடுவாள். என்றாவது ஒருநாள் யமுனாவாகவே தன்னைத் தேடி வருவாள் என்கிற நம்பிக்கையை வலுப்படுத்தி வைத்திருக்கிறாள்.

வாழ்வின்மீது பிடிப்பு விடுபட்டுவிடாமல் இருப்பதற்கான புதிய வீட்டுச்சூழலையே தற்போது தேடுகிறாள். தனிமை மனம் அதனை நாடுகிறது. பிற குடும்பங்களுக்கு மத்தியில் இருந்துகொண்டு, அவர்களின் சின்னச் சின்ன சந்தோஷத் தருணங்களை வேடிக்கை பார்த்து அனுபவித்து, அவர்களோடு பேசிப் பழகி உறவாடி.. இத்தனிமையால் தன் மென்உணர்வுகள் நீர்த்துப் போய்விடாமல் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஈடுகட்ட வேண்டி தகுந்த சூழல் அமைந்திடவே ஏங்குகிறாள்.

ஆனால், இதுபோன்ற அவசரத்திற்கோ தனிப்பட்ட ஏக்கத்திற்கோ சுலபமாக தீனி போடும் தயவு இச்சமூகத்திற்கு கிடையாது. அதனுடைய ஒப்பீட்டிளவில் உதிரிகளின் மீதான தகுதிகள் முற்றிலும் வேறாக இருக்கிறது. அவ்வுதிரிகளின் பட்டியலில்.. திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், விவாகரத்து ஆனவர்கள், ஒற்றைப் பெற்றோர், தன்பால் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், திருநம்பிகள் என ஓர் அவல வரிசை நீள்கிறது. நண்பர்களுடனான பல கதை விவாதங்களில் இதையெல்லாம் பேச நேருகிற இடங்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்கிற பழக்கம் உள்ளவள்.

இப்படி முன்தீர்மானங்களில் இயங்கும் மனித இதயத்தை வென்றெடுப்பது கடினம் என்பது அவளுக்குத் தெரியும்.

யமுனாவின் படிப்பு, பதின்வயதுக்குரிய பருவ மாற்றங்கள், என எத்தனையோ இருந்தும்கூட அவற்றைத் தகவல்களாக மட்டுமாவது தொடர்ந்து பேசித் தெரிந்துகொள்கிற விசாரிப்பு வழக்கம் மட்டும் இன்னும் தடை செய்யப்படவில்லை. இத்தனைப் பெரிய இருளுக்குள் எங்கோ தனக்கான சிறிய வெளிச்சமாக யமுனாவை அணைந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற துடிப்பு அவளுக்குள்ளே இருந்தது.

“ஸாரி மேடம்.. சிங்கிள் வுமனுக்கு வீடு விடறதுக்கு யோசிக்கிறாங்க.. அதுவும் உங்க கண்டிஷன்களோட ஒத்துப் போற இடங்கள் ரொம்ப கம்மியா இருக்குது”

“ஆச்சரியமா இருக்குதுண்ணே.. இவ்ளோ பெரிய சிட்டியில ஒன்னு கூடவா இல்ல..? நான் வேணா பேசிப் பாக்கட்டும்மா? நான் பேசினா கன்வின்ஸ் ஆகுவாங்கல்ல? ஆள பாக்காமயே எப்படி முடிவு பண்ணுறாங்க? புரியலையே..”

“சினிமாவுல இருக்கறீங்கன்னு சொன்னாலே.. வேண்டான்னுடறாங்க.. மேடம்..”

“சரிதான்.. கோடம்பாக்கம், வடபழனி விருகம்பாக்கம் வளசரவாக்கம் வரைக்குமே சான்ஸ் இருக்குல்லண்ணே..”

“லீஸூக்கு விடுறதுக்கு யாருக்குமே ஐடியா இல்ல.. மேடம்..”

“டான்ஸர்னு சொன்னீங்களாண்ணே..”

“இன்னும் அவுட்டர்ல பாக்கலாமா மேடம்? ஈஸியா கெடைச்சிடும்..”

அவர் நாசூக்காகத் தவிர்க்கிறார். சற்று நேரம் லைனில் அமைதி காத்தாள். உள்ளுக்குள்ளே ஒரு ஜயன்ட் வீல் மெதுவாக சுற்றத் தொடங்கியது.

“அதுக்கு நாம கேட்டட் கம்யூனிட்டிலேயே தேடி புடிச்சுடலாமே.. தொல்லையே கிடையாது.. என்ன ஒன்னு.. திரும்பவும் தனியா கிடக்கணும்.. பரவால்ல விடுங்கண்ணே..”

“அப்போ அப்படியே செஞ்சிரலாமா.. மேடம்?”

டுத்த வாரத்தின் முடிவில் மொத்தத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு பல்லாவரத்தில் ஒரு கேட்டட் கம்யூனிட்டி வளாகத்திற்குள்ளே ஒரு பிளாக்கின் பதினோராவது மாடி ஃபிளாட்டில் குடிபுகுந்தாள். லிஃப்டின் வேகம், உயரத்தை உணராதவாறு இலகுவாக்கியது. அனைத்தையும் ஒழுங்குப்படுத்திக்கொள்ள ரகுவரன் ஓரளவிற்கு உதவி செய்தான்.

“யக்கா.. அட்மின்ல விசாரிச்சிட்டேன்.. நமக்கு எதிர் ஃபிளாட்டில ஒரு டைரக்டர்தான் இருக்கறாராம். பேரு தனசேகர். கூகிள் பண்ணி பார்த்தேன். நோ யூஸ்க்கா.. ஆளு.. மேக்ஸிமம் அவுட்டோர்லயே இருப்பாராம். இன்னைக்குப் பூரா வாட்ச் பண்ணேன். இப்பவும் பூட்டித்தான் இருக்குது. இருந்திருந்தா இன்ட்ரோ ஆகியிருந்திருக்கலாம்ல..”

“டேய் லூஸூ.. உன்னை யாரு விசாரிக்கச் சொன்னது? ஒரே ஃபீல்டுன்னு தெரிஞ்சிகிட்டது வரைக்கும் ஓகே.. இத பாரு.. நானா கூப்பிடாம.. நீயா இங்கே வந்து நிக்கக்கூடாது.. முதல்ல.. கிளம்பு.. போயி பிராக்டிஸ ஆரம்பி.. நாளைக்கு ஸ்டுடியோவுக்கு வர்றேன். என்ன பண்ணியிருக்கன்னு பார்க்கணும்.. ஓடு.. ஓடு..”

அவன் தலையை சொறிந்துகொண்டு சரி என்பதாகச் சிரித்தான். அவனை நெருங்கிச் சென்று ஹக் பண்ணி விடுவித்தாள்.

“பார்த்துப் போ..”

முனாவோடு எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படத்தை ஃபிரேம் பண்ணி வைத்திருந்தாள். ஒவ்வொரு மாதமும் அது மாறிக்கொண்டே இருக்கும். யமுனாவின் இன்றைய உருவம் அவளுக்கு கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதை வைப்பதற்கு ஹாலின் அலமாரியைத் துழாவியபோது ஒரு புகைப்படம் கிடைத்தது. ஓர் ஆணும் ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையும் முகம் மலர சிரித்து போஸ் கொடுத்திருந்தார்கள். அதுவொரு முக்கியமான புகைப்படம் என்பதை பார்த்ததுமே அவளால் உணரமுடிந்தது. அம்முகங்களை மீறி ஈர்த்தது அவ்விருவரின் சிரிப்புத்தான். யமுனா கடனே என்று ஒரு புன்னகை செய்வாள். ப்ரியாவுக்கு அதுவே போதும் என்பதாக இருக்கும். இந்த அப்பா பெண் சிரிப்பின் ஈர்ப்பு அவளைத் தாக்கியது. ஆனால், இங்கு குடியிருந்தவர்கள் இதைத் தவறவிட்டு போய்விட்டார்களா? அல்லது தேவையில்லையென்று போட்டுவிட்டுப் போய்விட்டார்களா? தேவையில்லை என்று எப்படி போட்டுவிட முடியும்? அப்படியென்றால் ஏன்? அதனை எவருடையதோ என்று மனம் ஏற்க மறுத்தது.

புகைப்படமாக உறைந்து தேங்கிவிடும் முகபாவனைகளின் காரணங்களை காலத்திற்கும் மனம் சுமப்பதற்கான ஏற்பாடுதானே இந்த ஞாபக அடுக்குகள். கைவிடப்பட்ட அந்தப் புகைப்படம் அவளுக்குள் சிறு துக்கத்தை படரச் செய்தது. யமுனாவும் தானும் இருக்கிற புகைப்பட ஃபிரேமுக்கு பக்கத்திலேயே அதை சாய்த்து வைத்தாள்.

அதையே பார்த்தபடி ஸோஃபாவில் உட்கார்ந்துவிட்டவள் தூங்கிப் போனாள். வாசல் அழைப்பு மணி ஒலித்தது. முழித்து கண் அசக்கி எழுந்துபோய் பீப் ஹோலில் பார்த்தாள். உயரமாக ஒருவன் நின்றிருந்தான். யாரிவன்? யோசனையோடு கதவைத் தாழ் நீக்கினாள். கம்பி கேட்டிற்கு அந்தப் பக்கம் சிரித்த முகத்தோடு அவன் நின்றான். இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.

“ஹாய்.. நான் எதிர் ஃபிளாட்டில இருக்கிறேன்.. ஐம் தனா. தனசேகர். என்னைப் பத்தி அட்மின்ல விசாரிச்சீங்களாம்.. கீழ சொன்னாங்க..”

அவன் தன் ஃபிளாட்டை சுட்டிக்காட்டி பேசியபோதுதான் அவளுக்கு விஷயம் உரைத்தது. அந்த ஃபிளாட்டின் கதவு அகலத் திறந்திருந்தது.

“ஓ..! ஐம் ஸாரி.. அது வந்து.. இருங்க.. ப்ளீஸ் வெயிட்..”

அவசரமாக சாவி எடுத்து வந்து கம்பி கேட்டைத் திறந்துவிட்டாள்.

“உள்ளே வாங்க..”

அவன், சிரித்தபடியே உள்ளே வந்தான். கை குலுக்கினான்.

“ஐம் ப்ரியா.. கோ-டான்ஸ் மாஸ்டர்..”

“யாருகிட்ட வொர்க் பண்றீங்க ப்ரியா?”

விபரங்கள் சொன்னாள். அவன் திருப்தியாக தலையை அசைத்துக் கொண்டான். எடுத்த எடுப்பிலேயே தன் பெயரை ரொம்ப இயல்பாகச் சொல்லி அழைத்தது அவளை ஆச்சரியப்படுத்தியிருந்தது. அதேவேளை, பக்கா சினிமாக்காரனாக இருப்பானோ என்கிற உஷார்த்தனமும் காது விடைத்தது.

“நம்ம முதல் சந்திப்பே ஆக்ஸிடென்ட் ஆன மாதிரி இருக்க வேண்டாம். என் அசிஸ்டென்ட்தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டான். ஸோ.. டோண்ட் பீ மிஸ்டேக்கன்..”

“நோ இஸ்யூஸ் ப்ரியா.. அப்புறம்.. நீங்களும் என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம்”

“ஓகே..! டீயா? காபியா? சொல்லுங்க.. ரெடி பண்ணிடறேன்”

மீண்டும் சிரித்தான்.

“நோ.. நோ.. நான் உங்களை இன்வைட் பண்ணதான் வந்தேன்.. இஃப் யூ டோண்ட் மைண்ட்.. வில் யூ ஜாய்ன் ஃபார் எ காஃபி வித் மீ?”

இவனை நிச்சயமாய் இதற்குமுன் எங்கோ பார்த்திருக்கிறோம். எந்த ஷூட்டிங் ஸ்பாட்டாக இருக்கும் என்று வேகமாக ஒரு ஜயன்ட் வீலை தலைக்குள்ளே இழுத்துவிட்டாள். அது ஒரு சுற்று சுற்றிவந்து வெறுமை கூண்டுகளோடு தேமேவென நின்றது.

தனா, அவளுடைய ஒப்புதலுக்காக காத்திருந்தான். அவள் சுதாரித்துவிட்டு ‘ஆம்’ என்பதாகத் தலையை ஆட்டினாள். சிறிய புன்னகையோடு அவனைப் பின் தொடர்ந்து எதிர் ஃபிளாட்டிற்குள் நுழைந்தாள். அவன் அவளுக்கு இருக்கையைக் காட்டிவிட்டு சமையலறை பக்கமாகப் போனான்.

ஹால் சுத்தமாக இருந்தது. பெரிய பிளாஸ்மா டிவி சுவரை ஆக்கிரமித்திருந்தது. அதன் கீழே, அதே அகலத்திற்கு சவுண்ட் பார், ஸ்பீக்கர்கள் என அமைக்கப்பட்டிருந்தன. சற்றுத்தள்ளிப் போடப்பட்டிருந்த மேஜைமீது ஒரு லேப்டாப் திறந்த நிலையில் இருந்தது. நிறைய புத்தகங்கள் ஒழுங்கற்று சரிந்திருந்தன. தரையிலும் புத்தகங்கள் கிடந்தன. ஒரு பீன் பேக் இருந்தது. தன்னுடைய ஃபிளாட்டின் அதே பாணி வடிவமைப்புத்தான் இதுவும் என்பதை கவனித்தாள். இனம்புரியாத ஒருவித மட்கிய வாடை மட்டும் காற்றில் கலந்திருந்தது. நீண்டநாட்கள் கழித்து வந்திருப்பானாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.

பெரிதுபடுத்தப்பட்ட ஒரு புகைப்படம் சுவரில் மாட்டியிருந்தது. அதில் அவனும் இன்னொருவனும் கேமரா லென்ஸை உற்றுப் பார்த்தபடி இருந்ததை யாரோ க்ளிக் பண்ணியிருக்கிறார்கள். அது ரொம்ப சுமாரான புகைப்படம். இதைப்போய் மாட்டி வைத்திருக்கிறானே என்று உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.

காஃபி கோப்பைகளோடு வெளிப்பட்டவன் அவளிடம் ஒன்றை நீட்டினான்.

“அது என்னோட க்ளோஸ் ஃபிரண்ட் நித்திலன். ரெண்டு பேரும் சேர்ந்துதான் படம் டைரக்ட் பண்ணப் போறோம். எங்களோட முதல் ப்ராஜெக்ட். வேலை நடந்துக்கிட்டு இருக்கு. இது கேண்டிட் க்ளிக். என்னோட ஃபேவரைட். அதான் இங்க தொங்குது”

“ஸாரி.. ஐ கான்ட் கண்ட்ரோல் மைசெல்ஃப்.. நீங்க கிச்சன்ல இருக்கும்போது சிரிச்சிட்டேன்”

‘ஆம்’ என்பதாக தலையசைத்துக்கொண்டான். உதடு பிரிந்து சிரித்தான்.

“மெமரீஸோட லேயர்ல உறைஞ்சு போகிற தருணங்களை எதேச்சையா க்ளிக் பண்ணிடும்போது மட்டும்தான் அது உருப்படியான கேண்டிட் மொமெண்டா மாறும்னு நம்புறேன். அது எடுத்தவர் பொறுப்புமல்ல. பார்ப்பவரின் அர்த்தமுமல்ல. அந்த ஃபிரேம்ல சிக்கிட்டவங்களுக்கு மட்டுமேயான பிரத்யேக உணர்வு.. அதுவொரு பிரபஞ்ச அன்பளிப்பு. ரைட்? தட்ஸ் வாட் மை தியரி..”

ப்ரியாவுக்கு அவன்மீது சிறிய மரியாதை உருவாகத் தொடங்கியது. அவன் சொல்லச் சொல்ல.. அவனையே பார்த்திருந்தவள் திடுக்கிட்டாள். காஃபி கோப்பையை டீப்பாய் மீது வைத்தாள். சட்டென எழுந்துகொண்டாள்.

“வெயிட். இதோ வர்றேன்..”

கிட்டத்தட்ட தன்னுடைய ஃபிளாட் நோக்கி ஓடியவள், நொடிகளில் திரும்பி வந்தாள். கையில் அந்தப் புகைப்படம் இருந்தது. அவன் அதைப் பார்த்தான்.

“இது நீங்கதானே..?”

“முதல்ல உக்காருங்க.. காஃபியை கண்டினியூ பண்ணுங்க..”

அவன் பதற்றப்படவில்லை. புகைப்படத்தை வாங்கிக் கொண்டான். அதில் அவனுக்கு குறுந்தாடியும் அடர்ந்த கேசமும் இருந்தது. இப்போது ஒட்டவெட்டிய முடியும் சுத்தமாக மழிக்கப்பட்ட தாடையுமாக இருந்தான். மீசையை டிரிம் பண்ணியிருந்தான். உதடு விளிம்புகள் முழுமையாகத் தெரிந்தன. அதனாலேயே அவன் ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் புன்னகையின் அகலம் அப்நார்மலாக இருந்தது. யோசனையோடு இடது காது மடலை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தான்.

“அங்கேயே விட்டுட்டு போயிட்டாங்களா! ப்ச்.. இந்தக் குட்டி பேரு வர்ஷா. நான்னா அவளுக்கு கொள்ளைப் பிரியம்.. அந்த குடும்பத்தோட எனக்கு நல்ல நட்பு இருந்தது. பை மை ப்ரொஃபஷன் ஒரு விஷயத்துல மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆயிடுச்சி. அதை சரி பண்ண முடியலை. எனக்கோ சரி பண்ணிக்கவும் தோனலை. சீக்கிரமாவே காலி பண்ணிட்டாங்க. அவங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கத்தான் இங்க வர்றதை குறைச்சுகிட்டேன். போயிட்டாங்கன்னு பத்து நாளுக்கு முன்னாடியே தகவல் வந்திருச்சி. எனக்குத்தான் வர மனசு இல்ல.. பூட்டின கதவை எதிர்கொள்ள முடியாதுல்ல.. பட் இந்தக் குட்டி தேவதையை மிஸ் பண்றேன்..”

ப்ரியாவிற்குள்ளே ஜயன்ட் வீல் ரிவர்ஸில் சுற்றத் தொடங்கியது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. காஃபி கோப்பையின் விளிம்பை விரலால் வட்டமிட்டபடியே உட்கார்ந்திருந்தாள்.

“பாருங்க.. உங்களால இப்போ எனக்கு ரெண்டாவது அன்பளிப்பு கிடைச்சிருக்கு..”

புகைப்படத்தை ஆட்டிக் காண்பித்தான்.

“என்ன ஆச்சு..? எப்பவும் யாரோட பர்சனலையும் தெரிஞ்சிக்கக்கூடாதுன்னு நினைப்பேன். ஆனா, இப்போ அந்த ஃபிளாட்ல நான் வந்து உக்காந்திருக்கேன்.. வாட் வென்ட் ராங்.?”

“பெரிசா ஒன்னுமில்ல ப்ரியா.. நித்தியும் நானும் இதுக்கு முன்னாடி பண்ணுனது ஒரு டாக்குமென்ட்ரி.. அதுக்கு நிறைய உழைச்சிருக்கோம்.. கிட்டத்தட்ட நாலு வருஷம். ஆனா, இன்னும் வெளிய வரலை. பிகாஸ்.. என்.ஸி.பியில அப்ரூவல் ஆகலை.. அங்கே.. ஒரே டேபிள்ல பல வருஷமா தூங்குது”

“எதைப் பத்தின டாக்குமென்ட்ரி..?”

“டிரக் டிராஃபிக்கிங்..”

ப்ரியா திருதிருவென முழித்தாள். பின்னே மெதுவாகக் கேட்டாள்.

“அதனால என்ன? டாக்குமென்ட்ரி தான?”

“அதேதான்.. நாம ஒரே இனம். அதனால, சிம்பிளா தோனுதுல உங்களுக்கு. ஆனா, பொதுஜனத்துக்கு அந்த விஷயமெல்லாம் அப்படியில்ல. எதிர்வீட்டுல இருந்தவர் ஒரு பொது ஜனம். அது அவரு தப்புமில்ல..”

“சத்தியமா புரியல..”

“இருங்க.. பேனிக் ஆகாதீங்க.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஓடின மாதிரி பாதியில எழுந்து ஓடிடாதீங்க.. முழுசா சொல்லி முடிச்சிடுறேன்.. என்கிட்டே டிரக் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் கைவசம் இருக்கும். அதுவும் தேவைப்பட்டாத்தான். பட்.. நாட் இன் எ டேஞ்சர் மோட்.. ஓகே? பொன்ராஜ்னு ஒரு சப்ளையர் எப்பயாவது என்னைத் தேடி வருவான். அவனா வர மாட்டான். நான் கூப்பிட்டனுப்பினா வருவான். அந்த டாக்குமென்ட்ரியை உருவாக்கும்போது எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினவன். நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அதெல்லாம் ஒரு ரிஸ்கியான ஹெல்ப்னு வச்சுக்கோங்களேன். ஒன்ஸ் ஐ வாஸ் இன் எ டிப்ரஷன்.. அப்போ சில நேரம் தேவைப்பட்டா ஜாயின்ட் எடுத்துப்பேன். ஐ ஹாவ் மை கண்ட்ரோல்.. சரியா..? அப்போ.. அது ரிலேட்டடா.. பொன்ராஜ்கிட்ட ஒருமுறை பர்வத மலை சித்தர்கள் பத்தி பேசிட்டிருக்கும்போது.. இந்தக் குட்டி வர்ஷா திடீர்னு இங்க வந்துட்டா.. நைஸா பேச்சை மாத்தி.. அதை ஒரு சாமி கதையா மாத்தி விட்டுட்டேன்.. ஆனா, இதை மிஸ்டர் பொது ஜனம் எப்படியோ ஸ்மெல் பண்ணிட்டாரு போல.. மறுநாள் காலையில கூப்பிட்டு மூஞ்சை பாறை மாதிரி வச்சிக்கிட்டு ரொம்ப ஜெண்டிலா.. இனிமே எங்க வீட்டுக்கு வராதீங்க பாஸ்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு.. ஒரு வகையில என் சைடு தப்புதான். பட், அவ்ளோ பெரிய தப்பு இல்லைல்ல.. அந்த மனுஷன் விஷயத்தையே வேற ஸ்டைல்ல ஹாண்டில் பண்ணியிருந்திருக்கலாமோன்னு பலநாள் யோசிச்சிருக்கேன்.. என்ன பண்ணுறது? அவருக்கு இருந்தது தகப்பன் ரோல்..”

காஃபியை ஒரு மிடறு குடித்தாள்.

“இனிமே குட்டி தேவதைக்கிட்ட என்னை ஒரு சாத்தான் ரேஞ்சுக்கு சொல்லி வைப்பாங்க. அப்போத்தான் அவ மனசுலர்ந்து நான் முழுசா நீங்குவேன்.. கரெக்ட்தான? ஏஞ்சல் வெர்சஸ் டீமன்..”

அவனையே பார்த்திருந்தாள்.

“நீங்க என்னடான்னா.. ஒரு தூதுவர் போல அந்த ஃபோட்டோவை என்கிட்டே கொண்டுவந்து கொடுத்திருக்கீங்க.. இதுல ஆச்சரியம் பாருங்க.. வர்ஷாவோட அம்மா அதை மறைச்சு வச்சிருந்து வேணுமின்னே விட்டுட்டுப் போயிருக்காங்க. எனக்கு தேவதையை எவ்ளோ பிடிக்கும்னு அவங்களுக்கு மனசறிய நல்லாவே தெரியும். என்ன இருந்தாலும் அவங்க ஒரு அம்மால்ல..”

“மே பீ..”

தனா, அவளைக் கூர்ந்து நோக்கினான். மெல்லச் சிரித்தான்.

“காஃபி நல்லாருக்கு.. டேவிட் ஆஃபா?”

“ப்பா.. பயங்கரமான ஆளு.. நீங்க”

ப்ரியா, பக்கவாட்டில் ஹாலின் கடைக்கோடியில் இருந்த பால்கனியைத் திரும்பிப் பார்த்தாள். அரைகுறையாக மூடியிருந்த திரைச்சீலை காற்றில் அசைந்துகொண்டே இருந்ததில் அங்கே வேறு யாரோ அல்லது எதுவோ மறைந்திருப்பதை உருப்படியாகக் காட்டாமல் தடுத்தது போலிருந்தது. எழுந்துகொண்டாள். அதை நெருங்கியபோது ஒரு பழகிய இடத்துக்கு வந்திருக்கிறோம் என்கிற உணர்வு சட்டென அவளைத் தாக்கியது. திரையை விலக்கியவள் அவளையறியாமல் ஆர்வத்தில் துள்ளியபடி ‘ஐ!’ என்று சப்தமிட்டாள். கோப்பையிலிருந்து இரண்டு சொட்டு தரையில் விழுந்து தெறித்தது.

ஒரு முட்டை வடிவ மூங்கில் ஊஞ்சல் பால்கனி உத்தரத்திலிருந்து ஒற்றைச் சங்கிலியின் பிணைப்பில் தொங்கிக்கொண்டிருந்தது. இடவலமாக அசைந்து கொண்டிருந்தது. அவளைப் பின்தொடர்ந்து வந்தவனைத் திரும்பிப் பார்த்தாள். உட்காரலாமா என்பதை கண்களாலேயே கேட்டாள். அவன் சைகையில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே போய் குட்டி பஞ்சு குஷனை எடுத்துவந்து அதில் போட்டான்.

அப்போது திடுமென ஹை டெசிபலில் ஒரு பூனையின் குரல் ஹாலுக்குள்ளிருந்து அழைத்தது. அவன், ஹாலுக்குத் திரும்பிப் போனான். அது அவனுடைய மொபைல் ரிங் டோன். அவனை ஒரு விசித்திரமான ஆள் என்று நினைத்துக்கொண்டாள்.

இவனை சந்திப்பதற்காகவே பழைய வீட்டுக்காரரின் மகளுக்கு திருமணம் முடிவானதோ! யோசித்துக்கொண்டே ஊஞ்சலில் உட்கார்ந்தவள் ஆசையோடு இப்படியும் அப்படியுமாக அசைந்தாள். தரைக்கும் அவளுடைய பாத விரல்களுக்கும் இடையே மூன்று இஞ்ச் இடைவெளி இருந்தது. அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. இந்த ஒருமாத அலைச்சலின் தொடர்ச்சியில் அக்கணத்தில் ஒரு சிறு நிம்மதியை உணர்ந்தாள்.

இந்தப் பதினோராவது மாடியின் உயரத்திலிருந்து கீழே பார்க்கும்போது மனிதர்கள் பூச்சி வடிவில் மேலும் மேலும் சிறுத்துப் போய்விட்டிருக்கிறார்கள்.

இன்னும்கூட உயரே உயரே என மேகங்களையும் ஊடுருவி கடந்து போக ஒரு லிஃப்ட், ஒரு தளம், ஒரு பால்கனி இருந்தால் நன்றாக இருக்குமோ என முதன்முறையாக அவளுக்குத் தோன்றியது.

கண்மூடி காஃபியை அனுபவித்துக் குடித்தாள். யமுனா, ரிஷி, வர்ஷா, ரகுவரன், தனா, நித்திலன் என ஒவ்வொரு பிம்பமாக தனித்தனியாக உருண்டு திரண்டு கண்களுக்குள்ளே அடைபட்டு குழைந்து குழைந்து சுழன்றார்கள்.

அவள் அந்த ஜயன்ட் வீலாக மாறியிருந்தாள்.

elangomib@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button