தொடர்கள்
Trending

காரிருள் நிலவு-2 – தமயந்தி

முன் குறிப்பு :

இது எழுத்தாளர் தமயந்தி நமது தளத்தில் எழுதிய ‘குவாரண்டைன்https://vasagasalai.com/quarantine-shortstory/  என்ற சிறுகதையின் தொடர்ச்சி. எனவே வாசகர்கள் முதலில் அச்சிறுகதையைப் படித்துவிட்டு இத்தொடருக்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

 வீட்டின் மூடிய கதவைத் திறக்கும் போது ஒரு கனவைப் பாதியில் கிழித்துப் போட்டது போலத்தான் அவள் உணர்ந்தாள். பேருந்தில் அடித்த விடியற்காலை ஈரக்காற்று இன்னும் காலைக் கட்டிக் கொண்டு தானிருப்பதாய் தோன்றிற்று. பக்கத்து வீட்டு அமுதா பால் வாங்கினபடி, ”க்கா.. வந்துட்டியா.. உனக்கும் தரவா?” என்றாள். பதில் கிடைக்காமல் போக அவளாகவே உள்ளே வந்து பத்து ரூபாய் பாக்கெட்டை மேஜை மீது போட்டு விட்டு “க்காஉனக்கு லெட்டர் வந்திருக்கு.. இரு..; எடுத்தாரேன்.. எப்டி வந்த? பஸ் ஓடுச்சா?“ என்றாள்.

ஆமா அமுதா.. ஆனா ரொம்ப பஸ் போன மாரி தெரில

அவள் வெளியே போன வேகத்தில் கதவு கிறீச்சென்றது. முகம் கழுவி துப்பட்டா நுனியில் துடைத்த போது கண்ணாடியில் தெரிந்த முகம் பாதரசமற்று இருந்தது. ஒரு காலத்தில் மிக களையான முகமாய் எல்லோரும் சொன்ன முகம். ராஜன் பஸ் ஏற்றி விடும் போது சொன்ன வார்த்தைகள் கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சியாய் பறப்பது போலிருக்க சட்டென தன்னை உலுப்பிக் கொண்டாள்.”நோ ரொமாண்டிசிசம்என்று சற்று சத்தமாகவே சொன்னாள்

அமுதா லெட்டரைக் கொண்டு வந்து மேஜையில் போட்டாள். இரண்டு மூன்று இலக்கிய பத்திரிகைகள் , பணம் கேட்டு ஒரு கிறிஸ்தவ ஊழிய நிறுவனம் எழுதிய ஒரு கடிதம். அவள் லேசாக சிரித்துஉக்காரு அமுதா.. டீ போடுறேன்என்றாள்

இல்லக்காவேணாம்எங்க வூட்டுக்காரர் இன்னிக்கு வருவார்னு நினைக்கறேன்.. காலலயே ஃபோன் போட்டேன்.. அவர் எடுக்கல.. வந்தார்னா இட்லி ஊத்தணும்.. இல்லன்னா.. கொஞ்சம் சோறு இருக்கு.. தண்ணி ஊத்தி சாப்டா போச்சு..”

ங்கப்பாரு.. வயிறு ஊதிட்டு போகுது அமுதா.. வேணாம்ரொம்ப அரிசி சாப்டாத

அடப் போக்கா.. கல்யாணம் கட்டியாச்சு.. இனிமே என்ன? உனக்கு ஏதாச்சும் செஞ்சி தரட்டுமா?”

இல்லை என்று இவள் தலையசைக்க அமுதா வெளியே போனாள். இவள் ஆயாசமாக இலக்கிய பத்திரிகைகளைப் புரட்ட ஃபோன் அடித்தது. ராஜன் குரலில் ஒரு அவசரம் இருந்தது . “எப்ப போன மதி? ஒரு ஃபோன் போட்டா கொறஞ்சிப் போயிருவியா?”

ஏழரைக்கா வந்துட்டேன்ஃபோன் போடலாம்னு நினச்சேன்.. அப்றம் வேணாம்னு எனக்கு நானே சொல்லிக்கிட்ட்டேன்.

அப்ப நான் வச்சிறவா?”

சாப்டியா?”

என்ன மயித்துக்கு கேக்கற? ஆஹ்.. போநீ முதல்ல சாப்டு

நான் சாப்டேன்

ஆமா மொகரக்கட்ட.. தின்னலன்னா எப்டி பேசுவன்னு தெரியாது எனக்கு?”

அவன் ஃபோனை வைத்து விட்டான். இவள் ஒரு நிமிஷம் மலைப்பாக பெருமூச்சு விட்டு பின் எழுந்து போய், மறுபடி கண்ணாடி முன் நின்று அங்குமிங்குமாகப் பார்க்கிறாள்.  

-எழுதிய பக்கங்களைப் பார்த்தேன். பக்கத்திலிருந்த ஃபோனில் அவனது குறுந்தகவல் மேலே தெரியும்படி மினுங்கிற்று. அதை கையில் எடுத்தேன். பிரிக்க வேண்டாமெனத் தோன்றிற்றுஅந்த நீல நிற டிக் அவன் குறுந்தகவலுக்காக காத்திருந்த மாதிரி இருக்குமென நினைத்தேன். பின் மெல்ல எழுந்து வெளியே வந்தேன். தூறல் விழுந்து சுவர்க்காரை தோளில் விழுந்தது

மறுபடி ஒரு குறுந்தகவல் ஒலி. காரையை தட்டி விட்டவளின் கால்கள் மெல்ல அலைபேசி நோக்கி நடக்கின்றன. மேஜை மீதிருக்கும் அதை எடுக்கும் போது விரல்கள் நடுங்கின. ஆனால் அது வேறு ஏதோ ஒரு ப்யூட்டி பார்லரின் மெசேஜ். மனசு ஏமாற்றமானது. வாழ்வின் அத்தனை ஏமாற்றங்களையும் அந்த ஒற்றை ரொடியில் கடந்தாற் போலிருந்தது. இல்லை இது நல்லதற்கல்ல. அப்படி என்ன பெரிதாக சொல்லி விட்டான் கண்டக்டரிடம்? வொய்ப் தான்னு சொன்னான். ஆனால், அதற்காக அவன் வீட்டிற்கு அழைத்துப் போக முடியுமா அவனால்?

ஏன் வீட்டுக்கு அழைத்து போக வேண்டும்? ஏன் இந்த சமூகத்தில் ஒரு கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ வேண்டும்? ஒரே வீட்டில் வாழும் அனைவரும் கணவன் மனைவியாகத்தான் வாழ்கிறார்களா? எனக்கு சிரிப்பு வந்தது. தனியாக சிரிப்பது கூட அந்த நிமிடத்தை அழகாக்கியது. மெல்ல அலைபேசியை எடுத்து அவனது குறுந்தகவலை திறக்க போகும் போது சுட்டை அழைத்தான்

சுட்டையின் பெயர் அவனை முதன்முதலில் ஒரு இலக்கிய விழாவில் சந்திக்கும் போது வித்தியாசமாய் தோன்ற பின் வரிசையில் அமர்ந்திருந்த அவனை நான் கழுத்தே திரும்பினாற் போல் திரும்பிப் பார்த்தேன். சின்ன உருவம் தான். ஆனால் ரொம்ப நாள் கழித்து வீட்டுக்குள் நுழையும் ஒரு தம்பி சிரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தான்அன்றைய கூட்டம் ஒரு மொக்கைக் கூட்டம். அது முடிந்து பயங்கர தலைவலியுடன் நான் நின்றிருந்த போது என் முன் காப்பியை நீட்டினான்

குடிங்கோ..தல வலிக்கோ?

இலங்கையா?”

ஓம்..எப்டி கண்டுப்பிடி..”

எங்கப்பா இலங்கை தான்.. ”

அவன் சட்டெனப் பெரிதாய் சிரித்துநெனச்சன்..க்காவுக்கு அந்த சாயல் இருக்குதுஎன்றான். நிலைக்கொள்ளாமல் அவனது விரல்கள் காப்பியின் பேப்பர் தம்பளரில் தாளமிட்டன. நான் வவுனியா. எல்லோரும் ஷெல் ப்ளாஸ்டில் இறந்துட்டாங்க என்றவன் நீங்க என்று ஆரம்பித்து பின் நிறுத்திஆஹ்.. அப்பா தானே?” என்றான். நான் லேசாக புன்னகைத்துஜாப்னாஎன்றேன். அவன் என்னையே உற்று பார்த்துசந்தோஷமாயிருக்கக்கா..நிரம்ப நாள் கழித்து என்னோட அக்காவ நான் சந்திச்ச மாரி தோணுதுஎன்றான்

அப்போது உள்ளிருந்து ஒருவன் முழு போதையில் அவனை அடிக்கச் சாட அவன் காப்பியை என் மேல் சிந்தத் தள்ளினான். போதையில் இருந்தவன் தரையில் சப்பென விழசுட்டை அவன் முதுகில் கால் வைத்து மிதித்தான். ஒரு நிமிடத்தில் எனக்கு என்ன நடக்கிறதென தெரியவில்லை. வெறும் கையசைகளாய் கண் முன் நிழல்களாக நடனமாடின. ஏதேதோ குரல்கள் கேட்டு கடைசியில் போதையில் இருந்தவனை எங்கோ தூக்கினபடி போக, சுட்டை     “மன்னிச்சிக்கோங்கோஎன்றான் என்னைப் பார்க்காமலே. என் சுரிதாரில் சிந்தியிருந்த காப்பியை அப்போதுதான் கவனித்தவன் பதறி தன் கைக்குட்டையை எடுத்து தன்னிச்சையாகத் துடைத்தான்.

தெரிஞ்சவங்களா

ஆமாஇங்க அவன் கூட தான் என்ன தங்க வச்சிருந்தான். கவிஞன். நல்லா குடிப்பான். என்னோட சித்தி முகாம்ல இருக்கவர் என்னப் பாக்க வருவார். அவர்ட்ட போய் எனக்கு கிட்னி ஓப்ரேஷன்னு சொல்லி அவர் பத்து வருஷமா சேத்து செஞ்ச ஒரு சங்கலியை வித்து இருபதாயிரம் வாங்கிட்டான். ஏமாத்துக்காரன்..எச்ச பய க்கா அவன். கவிஞன்னு சொல்ற எச்ச கவிஞன்.”

நான் சிரித்தேன். அவன் என் கூடவே நடந்து வந்தான். “ஏன் சிரிக்கீங்க?”

அவன் பணத்துக்காக பழகலன்னு உங்களுக்கு தெரிலேன்னா நீங்க தான ஏமாந்தீங்க? பின்ன அவம்மேல ஏன் பழி சொல்லணும்?“

எழுதுறீங்க இல்லேயக்கா..அப்டி தான் பேசணோம்..”

சிறிது தூரம் வேகமாக முன்னால் போய் விட்டு அதே மாதிரி திரும்பி வந்துக்காசந்திச்சது சந்தோஷம்..மொத சந்திப்புலே சண்டை போடக் கூடாது..வாரேன்என்று கை கொடுத்தான்

சாப்ட போலாமா..பசிக்கிஎன்றேன்

சுத்த திருநெவேலி. அந்த பசிக்கிதுல இருக்குறது எங்கலே வச்சீங்க?”

அவன் சிரித்தான். அவன் அலைபேசிக்கு ஒரு கால் வர அவன் அதை பக்கவாட்டில் அழுத்தி சைலண்டில் போட்டு விட்டு பின் மீண்டும் சிரித்தான்

காதலியோ?”

அவன் பதில் சொல்வதற்குள் மீண்டும் அலைபேசி அடித்தது. அவன் ஃபோனை எடுத்து ஸ்விட்ச் ஆஃப் செய்தபடிஅவன் தான் அக்காஅடிக்க சாடினானேஎன்று சிரித்தான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவனும் நானும் சிரித்தபடியே ஹோட்டலுக்குள் நுழைந்தோம். தண்ணீர் குடித்தபடி, “நீங்க முகாம்ல இருந்தீங்களா?” என்றேன்

இல்லக்கா.. கள்ளத்தோணி

நான் அவனையே உற்று பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து சிரித்து, “பெண் பிள்ளைகள் மாரி ஃப்ஸ் செய்யாமல் என்னோடு ஹோட்டலுக்கு சாப்ட வந்தீகள். நன்றி .எனக்கும் பசித்தது.” என்றான்

பெண் பிள்ளைகள் ஹோட்டலில் சாப்டாதோ?”

க்காபாத்த உடனே வர மாட்டாள்க்காஉண்மை தானே

யாரயும் நம்ப முடியாது தான?”

ஓம் ஓம்அதானே?” என்றவன்ஒண்ணு பணம்..இல்லன்னா உடல்இதில்லாமே வேறென்ன எதிர்பார்ப்பள்?”

சர்வர் வந்து மெனு கேட்க அவன் ஆப்பமும் சம்பலும் சொன்னான். அதை அத்தனை சுவைத்தும் சாப்பிட்டான். இடையிடையில் சவைத்தபடியே நாசூக்காகப் பேசினான். நான் வேலை பார்க்கும் பதிப்பகத்தில் அவன் கவிதைகளைப் போட முடியுமா என்று கேட்டு விட்டு சட்டென கை கழுவ எழுந்து சென்றான். நான் ஒரு நிமிடம் திகைத்து பின் எழுந்து கைக்கழுவப் போன போது சிரித்தான்.

தப்பா எடுத்துக்காதீங்கோநீங்க அந்த பதிப்பகத்துல வேல பாக்கதாலதான் நான் காப்பி கொண்டு வந்தேன்…“

நான் எதுவுமே சொல்லாமல் சிரித்தபடி நகர்ந்து பில்லுக்கு பணம் வைத்தேன்

கொடுக்கணும்னு ஆச தான். ஆனா இல்லக்காதேங்க்ஸ்

ஒரு நாள் வீட்டுக்கு வாங்கநான் நல்லா சமைப்பேன்

எழுத்துக்காரங்க சமைப்பாங்கன்னு தெரியும்க்கா.. எங்கப்பா ஐயாக்கு சமையக்காரரா தான் இருந்தார்

ஐயாவா?”

ஓம்.. நம்ம ஐயா பிரபாகரய்யா தான்

நான் புருவம் தூக்கபிரபாகரன் பிள்ளைண்டு சொல்ல போறேன்னு நினச்சியளாக்கா…” என்று சிரித்தான்.”அவசியமில்லக்காபுத்தகம் போட முடிமான்னு பகடி தாஞ் செஞ்சேன்

கைக்கொடுத்து விட்டு வேகவேகமாக அவன் ஆர் எம் கேவி சந்தில் நடந்து போனான். நான் கொஞ்ச நேரம் அவன் தெரு திரும்பும் வரை அங்கேயே நின்று   விட்டுப்  பின் நடக்கத் தொடங்கினேன். அந்த தெருவில் நடப்பதெனக்கு உவப்பானதாயில்லை. திருமணமாகி அந்த முட்டுச்சந்தில் தான் முதன்முதலில் குடித்தனம்மினி லாரியில் அப்பா வாங்கிக் கொடுத்த ஸ்டீல் பீரோ மரக்கட்டிலுடன் வந்து இறங்கினோம். இறங்கிய நொடி இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஜெரால்டு தயங்கி, “ சீக்கிரமா வக்கீல் பாத்துடுறேன்.. கவலப்படாத..அதுவரைக்கும் நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்என்றான். அப்பா மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தார்.

 

அந்த வீடு ஒரே பாந்தைக்  கொண்ட வீடு. நடு அறைகளில் ட்யூப்லைட்டைப் போட்டாலன்றி வெளிச்சம் வராது. பால் காய்ச்சி சுபிட்சம் பிறந்தது என்று மகிழ்ந்தார்கள். நான் அம்மாவையே முறைத்துப் பார்த்தேன். அவளுக்கு நேர் மேல் ஒரு மரப்பல்லி இருந்தது. அது அவள் தலையில் விழுந்து அவள் கத்தினால் எப்படி இருக்கும் என்று தோன்றிற்று.

இந்த கல்யாணம் வேணாம்ம்மா

ஏனாம் கேளுங்க?” அம்மா அப்பாவைப் பார்த்துக் கேட்க அப்பா தலை குனிந்தார்

ஆமா.. நீங்க மெளன சாமியார்.. எவன பாத்தாலும் அவ வேணாம்பா

நீங்க ராஜனட்ட ஒரு தடவ

காலோரம் காப்பி தம்பளர் வந்து விழுந்தது. நான் சட்டென நகர்ந்தேன்

அவன் என்ன வேலக்கு போறானா? நீங்க சொல்ல மாட்டீங்களாக்கும்..இப்டி இருந்தா அவ ஆட தான் செய்வா

அப்பா அமைதியாய் இருக்க, “என்ன ஆடுனேனாம்என்றேன்

என்னமோ எழுதுன.. சரினோம்.. அதும் இந்த ப்ரீயட்ஸ் அது இதுன்னுலாம் எழுதிக்கிட்டு.. ச்சை.. அசிங்கமா நாலு பேர் பேச மாட்டாங்க?”

ஏன் அவங்களுக்கு வராதா?“

இதான்..இதான்இந்தத் திமிர்தான்.. பாத்தீங்களா..இந்த கொழுப்பத்தான் சொல்றேன்போன தடவ சரோஜா வீட்ல போய் ஃபோன் போட்டு அந்த கோயம்புத்தூர் பையன வேணாம் சொல்ல சொன்ன தான?”

ஆமா….நான்தான் சொன்னேன்

அந்த மரப்பல்லி அம்மாவின் தலைக்கு மேல் போய் ஒரு ஷெல்ஃபினுள் நுழைந்து கொள்ள எனக்கு உடல் விதர்த்தது. ஜெரால்டை மட்டுமே நான் நம்பினேன். எப்படியாவது எனக்கு விவாகரத்து வாங்கித் தரும் மவுன ராகம் மோகன் மாதிரி தான் அவன் தெரிந்தான்.

நீ கவலப்படாத மதிஎன்னால என்கேஜ்மெண்ட்ட நிறுத்த முடில.. ரெஸ்பெக்ட் யுவர் ஃபீலிங்க்ஸ். நான் எல்லாமே ஏற்பாடு செய்றேன்என்று சொன்னவன் கடவுள் அனுப்பியவனாகவே தெரிந்தான்.

அதுஅது வந்து..”

சொல்லுங்க

அவன் கைகள் லட்டை பிய்த்துக் கொண்டிருந்தது

ஏன் ? மேல படிக்கணுமா?”

இல்லநா ஒரு பையன லவ் பண்றேன்

சொல்ல வேண்டிது தான சார்ட்ட

அவன் அப்பாவை சார் என்று தான் சொன்னான். அவரின் ட்யூஷன் செண்டரில் படித்தவன். அப்போதெல்லாம் அப்பாவுக்கு  சார்மினார் சிகரெட் வாங்க இவள் டூட்டோரியலுக்கு போவாள். ஒன்றிரண்டு முறை அவள் ஜெரால்டை பார்த்திருக்கிறாள்

அப்பாக்கு தெரியும்

அப்ப ..பின்ன என்ன எதுக்கு?”

அதுஅதுஅம்மாக்குப் பிடிக்கல..இதுக்கு முன்னால ரெண்டு தடவ நிச்சயதார்த்தம் முடிவு செஞ்சாங்க…”

பின்ன?”

நான் போன் பேசி நிறுத்திட்டேன்அதான்

அவன் என்னை மேலும் கீழுமாய் பார்த்தான். அவனுக்கென்ன தெரியும்அது எவ்வளவு கஷ்டம் என்று. அதில் ஒரு மாப்பிள்ளை கோயம்புத்தூரில் மில் வேலை. மில் நம்பரைக் கண்டுப்பிடித்து அதன் பிறகாய் பல முறை சைக்கிள் மிதித்து வனஜா வீட்டுக்குப் போக வேண்டும். ஒவ்வொரு முறையும் அந்த மாப்பிள்ளை எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அவள் வீட்டு லேண்ட் லைனை சுழற்றுவேன். அதுவும் வனஜாவின் அப்பா கடைக்குப் போகும் வரை காத்திருக்க வேண்டும்

கடக்கும் போது வனஜா, ”மதிக்கு ஒரு ஃபோன் போடணும்ப்பாஎன்பாள். அவர் தலையை அசைத்து விட்டுக் கிளம்புவார்.

பதிலுக்கு நான் வனஜாவுக்கு காதல் கடிதம் கவிதை போல எழுதிக் கொடுக்க வேண்டும். அவள் ஒரு பெட்ரோல் பங்க் பையனை அப்போது காதலித்தாள். நான் அவ்வளவு நேர்மையாக அவள் எனக்கு ஃபோன் செய்ய செய்யும் உதவிகளுக்காக நான் கடிதம் எழுதிக் கொடுப்பேன். ஒரு நாள் அந்த மில் மாப்பிள்ளையே ஃபோன் எடுத்து நான் மிகப் பெரிய ப்ரியத்துடன் தான் அவனுக்கு ஃபோன் செய்ததாய் நினைத்தான்

வந்து..நான் மதி பேசுறேன்

பரவால்லயே..” அவன் புளாங்கிதப்பட்டு பேசும் போது – “இல்ல.. ஒரு ஹெல்ப்.. இந்த கல்யாணம் பிடிக்கலன்னு சொல்லிடுங்களேன்

ஏன்..”

நா..நா வேற ஒரு பையன…”

லவ் பண்றி..றியா..ங்க?”

அவன் திணறினான். மிஷின் சத்தங்களுக்கு நடுவில் அவன் குரல் எண்ணெய் பிசினோடு இழுக்கும் கரி மாதிரி இழுத்தது

ஆமா..ப்ளீஸ்

அவன் ஃபோனை டொக்கென்று வைத்து விட்டான். ஒரு வாரம் கழித்து அவர்கள் வீட்டிலிருந்து அவனுக்கு என்னைப் பார்த்தால் ஒரு தங்கை சாயலே இருப்பதாக தோன்றுவதாகச்சொல்லி வேறு இடத்தில் தயவு செய்து மாப்பிள்ளை பாருங்கள் என்று கடிதம் வந்தது. இன்லேண்ட் லெட்டர்

அலைபேசி அடித்தபடியே இருந்தது

சுட்டை காலிங்என்று வந்தது. நான் எடுத்துஎன்னடா மோனேஎன்றேன்.

இப்டி மோனேன்னு பாசமா நீங்க கூப்டா நான் என்ன செய்வேன்? அழைக்கத்தானே செய்வேன்என்று சிரித்தவன்க்காகாதலிச்சிருக்கியா?” என்று கேட்டான். ஒரு நிமிடம் ராஜனின் முகம் நினைவுக்கு வர சுட்டையின் அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு விட்டு நான் ராஜனின் குறுந்தகவலைப் பார்த்தேன் 

பக்கி.. சாப்பிட்டாயா?” என்றிருந்தது. லேசாக சிரித்தேன்

என்ன காதலிச்சிருக்கே போலிருக்குஎன்றான் சுட்டை.

ஆமா..”

நான் இன்னிக்கு செம்மையா ஒரு காதல் கதை எழுதிருக்கேன்க்கா. என் முதல் காதலி  சுப்ரஜா, ரெண்டாம் காதலி, டயானா, மூணாம் காதலி டிபர்டினா எல்லாரையும் பத்தின கதை

இரு இரு..என்ன பேர் சொன்ன..”

இதுங்க எல்லாரோட முத எழுத்து தான் எண்ட பேருக்கா..அத விடுங்கஇந்தக் கதைலே ஒரு மேஜிக்கல் ரியலிசம் ட்ரை செஞ்சிருக்கேன். அத உங்கட்ட வாசிக்க கொண்டு வரணோம்வீட்ல தானே இருக்கியள்?”

இல்லசாப்டியா?”

ஆச்சு.. கஞ்சி.. வீட்ல இல்லயா? பொய் சொல்லாதேயுள்..பின்னாள்ல இத வாசிக்கலன்னு நாண்டுட்டு நிக்கப் போறேள். இப்ப வாசிச்சா இத நான்தான் முதல்ல வாசிச்சேனாக்கும்னு சொல்லலாமில்ல? அது செரி. பொய் சொல்றநான் இப்ப வரப்படாதுன்னு உன்ற மனசு சொல்லுது போல.. நீயெல்லாம் எப்டி காதலிச்சயோ? பாவம் அவன்

செகண்ட் காலில் ராஜன் காலிங் என்று வந்தது. சுட்டையிடம் மேலும் பேச வாக்கியத்தைத் தேடும் முன் அவன் கட் செய்ய ராஜன் என்னை அழைத்தபடி இருந்தான்

( தொடரும் )

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button