தொடர்கள்
Trending

கடலும் மனிதனும்-6 : கடற்கன்னிகள் – புனைவும் உண்மையும்

- நாராயணி சுப்ரமணியன்

லூசி சுற்றி சுற்றி நீந்திக்கொண்டிருக்கிறாள்

லவங்கப்பட்டை நிறத்தில்

மெடூசாவைப் போல காட்டுத்தனமான கூந்தல்

இன்னும் இன்னும் ஆழத்துக்குள் நீந்துகிறாள்

என்று தொடங்கும் ஜோடி பிகோல்ட்டின் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தனது சிவப்பு நிற கூந்தல் அலையடிக்க,  அழகான ஒரு கடற்கன்னி நீந்திச் செல்லும் காட்சி நம் மனதுக்குள் விரியும். தேவதைக் கதைகளில், நாட்டார் கதைகளில், ஏன் சில வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம்பெற்ற கடற்கன்னிகளின் உலகம் மந்திரங்களும் மாயாஜாலங்களும் நிறைந்தது.

இடுப்பு வரை மனிதனைப் போலவும், இடுப்பிலிருந்து மீன் போலவும் உடல் கொண்ட இந்த விந்தையான புனைவு உயிரிகளை Merfolk (கடற்குடிகள்) என்று குறிப்பிடுகிறார்கள். ஆண்கள் Mermen எனவும், பெண்கள் Mermaids (கடற்கன்னிகள்) எனவும் அழைக்கப்படுகிறார்கள். ஒரு சில மெர்மென் கதைகளும் உண்டு என்றாலும், கடற்கன்னிகள் பற்றிய கதைகளே அதிகம்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பண்டைய அஸ்ஸிரியாவில் கடற்கன்னியைப் போன்ற தோற்றம் கொண்ட அடார்காடிஸ் என்ற ஒரு கடவுள் உண்டு. கடற்கன்னிகள் பற்றிய குறிப்புகளிலேயே இதுதான் மிகவும் தொன்மம் நிறைந்தது என்கிறார்கள் வல்லுநர்கள். ஜப்பானிய நாட்டார் கதைகளில் மிகவும் கோரமான முகம் கொண்ட, நிங்கோ நோஸு என்ற ஒரு கடல்கன்னி வடிவம் உண்டு.

கடலுக்கடியில் நெசவுத் தொழில் செய்யும் கடற்குடிகள் பற்றிய நாட்டார் கதைகள் சீனாவில் பிரபலம்.  இவர்கள் நூலுக்கு பதிலாக சில சிப்பிகளிலிருந்து வரும் ஒருவகை உயிர் இழையை வைத்து நெசவு செய்கிற துணி, பனியைப் போல வெண்மையாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. கடலுக்கடியில் நெய்யப்படும் துணி என்பதால் இயற்கையாகவே இதற்குத் தண்ணீரை எதிர்க்கும் சக்தி இருக்குமாம், ஆகவே இதை நனைக்கவே முடியாதாம்! இந்த கடற்குடிகள் அழுதால் கண்ணீருக்கு பதில் முத்து உதிரும் என்றும் நம்பினார்கள் பண்டைய சீனர்கள்!

பிரிட்டன், கிரேக்கம், கொரியா, ஜப்பான், ஆப்பிரிக்கா, கரீபியன் தீவுகள், மவோரி பழங்குடியினர் நிறைந்த சில தீவுகள் என்று உலகின் பல இடங்களில் கடற்கன்னிகள் பற்றிய கதைகள் உண்டு. தங்க நிறத்தில் மின்னிய சுவண்ணமுசா என்கிற ஒரு கடற்கன்னியை பற்றி தாய்லாந்திலும் வியட்நாமிலும் பல கதைகள் உண்டு.இளவரசியான இவள், அழகான பொற்கிரீடங்கள், தங்க நகைகளுடன் சித்தரிக்கப்படுகிறாள்.

மாவீரன் அலெக்சாண்டரின் தங்கை இறந்தபின்பு கடற்கன்னியாக மாறிவிட்டதாகவும், தன்னைக் கடந்துபோகும் கப்பல்களையெல்லாம் நிறுத்தி “அரசர் அலெக்சாண்டர் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்டதாகவும் ஒரு கதை உண்டு. “அலெக்சாண்டர் உயிரோடு இருக்கிறார், உலகத்தை வென்று கொண்டிருக்கிறார்” என்று சொன்னால் மட்டுமே அவளுக்குத் திருப்தியாம். இதைத் தவிர எந்த பதிலைச் சொன்னாலும் கப்பலை அடித்து  உடைத்துவிடுவாளாம்!

தொல்குடிகளின் புனைவுகள், நாட்டார் கதைகள் ஆகியவற்றில் கலவையான பல உயிரிகளை நாம் பார்க்க முடியும். அந்த வரிசையில் மீனின் உடலும் மனித உடலும் இணைந்த உருவமாகக் கடற்கன்னிகள் உருவாக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

பொதுவாக இந்த சித்தரிப்புகள் மாயாஜாலக் கதைகளாக மட்டுமே நின்றுவிடும். ஆனால்  இந்த நவீன காலத்திலும் கடற்கன்னிகள் பற்றிய விவாதங்கள் உண்டு. “கடற்கன்னி பார்த்திருக்கீங்களா?” என்று பள்ளிக் குழந்தைகள் இன்றும் கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களிடம் விழிவிரியக் கேள்வி எழுப்புகிறார்கள். எல்லாருக்கும் கடற்கன்னிகள் மீது ஒரு ஆச்சரியம் இருந்தபடியே இருக்கிறது. அது எப்படி நடந்தது?!

இதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் நாம் பண்டைய கிரேக்கத்துக்குப் பயணிக்கவேண்டும். மனிதத் தலையும் பறவையின் உடலும் கொண்ட சைரன் என்ற உயிரி இருப்பதாக கிரேக்கர்கள் நம்பினார்கள்.

காலப்போக்கில் மனித உடலும் மீனின் வாலும் என்று மருவி, கடற்கன்னிகளின் உருவம் கொண்டவையாக சைரன்கள் சித்தரிக்கப்பட்டன. கடற்கரைகளில் நீருக்குள் மறைந்திருக்கும் சைரன்கள், மயக்கும் குரலில் பாடல் பாடும் வல்லமை உடையவை. சைரன்களின் இனிமையான குரலிலும், அழகிலும் மாலுமிகள் மயங்கும்போது, சைரன்கள் அவர்களைக் கொன்றுவிடும் என்று நம்பப்பட்டது! கடலுக்குள் மாலுமிகளை இழுத்துச் சென்று அவர்களைக் கொன்ற சைரன்கள் பற்றிய கதையும் உண்டு!உலகின் பல இடங்களில் சொல்லப்படும் யட்சி, மோகினி  கதைகளின் நெய்தல் வடிவம்தான் இது!

காலப்போக்கில் சைரன்கள் பற்றிய கதைகள்  கடற்கன்னிகளின் புனைவோடு இணைக்கப்பட்டன. கடற்கன்னிகள் ஆபத்தானவை என்று எல்லாரும் நம்ப ஆரம்பித்தார்கள். ஆண்களை வசியப்படுத்திக் கொல்லும் அழகான கடற்கன்னிகள் பற்றிய திகில் கதைகளைக் கையோடு எடுத்துக்கொண்டே கப்பலில் கிளம்பினார்கள் மாலுமிகள்.

ஆண்கள் மட்டுமே கப்பற்பயணங்கள் மேற்கொண்ட காலம் அது. மாதக்கணக்கில் பெண் வாடையே இல்லாமல் கடலில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மனதில் கடற்கன்னிகள் பற்றிய புனைவுகளும் அலையடித்துகொண்டிருந்தன.

தூரத்தில், கலங்கலாக, ஏதோ ஒன்று! மனித உடலைப் போன்ற ஒரு தோற்றம், மனிதனின் தோல் போன்ற நிறம், திமிங்கிலம் மாதிரி மீன் வடிவத்திலும் இல்லை, குழந்தைகளை மார்போடு அணைத்துக்கொண்டு உறங்கும் ஒரு பெண் போல…..மங்கலாக இரு கைகளும் தெரிகிறது…. அது கடலுக்குள் போய்விட்டது! என்ன ஆச்சரியம்! அதன் வால் கடல்கன்னியின் வாலைப் போலவே தெரிகிறது!!!

அவ்வளவுதான்.

நிலத்துக்குத் திரும்பி வந்ததும் எல்லாரையும் அழைத்து சுற்றி உட்காரவைத்து, நிலவொளியின் வெளிச்சத்தில் கதை சொன்னார்கள் மாலுமிகள். கதையைக் கேட்டவர்களும் “ஆமா, நானும் பார்த்தேன்” என்று தன்பங்குக்கு இட்டுக்கட்டிய கதையை எடுத்து விட்டார்கள். கடற்கன்னியின் வாலைப் போலக் கதைகள் நீண்டன.

இது ஒரு பக்கம் இருக்க, “அழகா இருந்திச்சு, பாடிச்சு, ஆனா நான் மதிக்கலையே. பாட்ட கேட்டு மயங்குனா கொன்னுடும்ல” என்றும் சில மாலுமிகள் கதை சொன்னார்கள். இந்தக் கடற்கன்னிகளின் பாடலைக் கேட்டு மயங்கிவிடக்கூடாது என்பதற்காகவே கடற்பயணிகள் காதில் மெழுகு வைத்து அடைத்துக் கொண்டார்கள்!

 

காலங்கள் உருண்டோட, நிலத்தில் இருக்கும் பெண் இசைக்கலைஞர்கள் மீதும் இந்தக் கதைகள் ஏற்றி சொல்லப்பட்டன். 17ம், 18ம் நூற்றாண்டுகளில் பாடகிகளெல்லாம் ஆண்களை மயக்க வந்த சைரன்கள் என்றுகூட சொல்ல ஆரம்பித்தார்கள்! கடற்கன்னிகளின் புனைவு நிலத்துக்குள்ளும் குடியேறியது!

கற்பனைக் கதாபாத்திரமான கடற்கன்னிகளை நிஜ உயிரிகளாக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். நேரில் கடற்கன்னிகளைப் பார்த்தவர்களின் கதையைக் கேட்டுவிட்டு, “கடற்கன்னி ஒரு புராணக் கதை அல்ல, அது நிஜமாக இருக்கும் உயிரி, கடலுக்கடியில் வசிக்கிறது” என்று எல்லாரும் நம்பத் தொடங்கினார்கள்.

கடற்கன்னிகள் இருப்பது சாத்தியம்தான் என்று எழுதினார் இயற்கையியலாளர் பளைனி த எல்டர். புதிய நிலங்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கிளம்பிய கொலம்பஸ், கடற்கன்னிகளைப் பார்த்ததாக 1493ல் ஒரு குறிப்பில் எழுதுகிறார் : “மூன்று கடற்கன்னிகளைப் பார்த்தேன். ஆனால் எல்லாரும் சொல்லுமளவுக்கு அவை அழகாக இல்லை. சொல்லப்போனால் அவற்றின் முகம் ஒரு ஆண் முகம் போல இருந்தது” என்கிறார்.

1614ல் ஜான் ஸ்மித் எழுதிய ஒரு குறிப்பில் “கடற்கன்னிகளுக்கு பச்சை நிறத்தில் அழகான நீளமான கூந்தல் இருக்கும்” என்ற வரி இருக்கிறது. “அதுவும் சரிதான், கடலுக்கு அடியில் இருப்பதால் கூந்தலும் பாசி படிந்துதானே இருக்கும்” என்று பலரும் சமாதானம் சொல்லிக்கொண்டார்கள்!

“கடலிலிருந்து ஒரு சிறு கால்வாய் வழியாக ஒரு ஏரிக்குள் கடற்கன்னி வந்துவிட்டாள். சிறு காயங்களோடு இருந்த அவளை நாங்கள் காப்பாற்றினோம். முதலில் பேசாமல் இருந்த அவள், பிறகு டச் மொழியைக் கற்றுக்கொண்டாள், எங்கள் மதத்தில் இணைந்தாள்” – 1600களில் ஹாலந்தில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு கதை இது.

உலகமெங்கும் “ஆமா நான் பார்த்தேன்”, “நான் ஒரு கடற்கன்னியை வீட்டுக்குள் கூட்டி வந்து வளர்த்தேன்”, “என்னோட வலையில கடற்கன்னி மாட்டிருக்கு” என்று விதவிதமாகக் கதைகள் கிளம்பின.

1840களில் “கடற்கன்னி பார்க்கலாம் வாங்க” என்ற அறிவிப்போடு பி.டி.பார்னம் ஒரு கண்காட்சியை ஆரம்பித்தார். டிக்கெட் விலை ஐம்பது செண்ட். உள்ளே போய் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம்! கொஞ்சம் மனித உடலும் கொஞ்சம் மீன் உடலும் கலந்த கலவையாக, பாடம் செய்யப்பட்ட ஒரு உடல்! எல்லாரும் வியந்துபோனார்கள். குரங்கின் உடலையும் மீனின் உடலையும் இணைத்து இந்தப் போலி உடலை அவர் உருவாக்கியது பின்னாட்களில் தெரிய வந்தது.

கடற்கன்னிகள் வெறும் கற்பனை மட்டுமே என்று அறிவியலாளர்கள் தொடர்ந்து பேசினாலும் இந்தப் புனைவு  அடிக்கடித் தலைகாட்டும். அவ்வப்போது “கரை ஒதுங்கியிருக்கும் அதிசய கடற்கன்னியைப் பாருங்கள்” என்ற ஒரு வைரல் காணொளி வெளிவரும்.

அப்படியானால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மாலுமிகள் கண்ட காட்சி பொய்யா? அதன் அடிப்படை என்ன?

சைரனியா (கடல்பசுக்கள்) என்று ஒரு கடல்வாழ் பாலூட்டி இனம் உண்டு. Dugong, Manatee என்று இரண்டு வகை கடல்பசுக்கள் உள்ளன. இவற்றை மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கிறார்கள். இந்த கடல்பசுக்களின் தோல் சில கோணங்களில் பார்த்தால் மனித நிறத்தில் தெரியும். இவற்றின் வால் கடற்கன்னிகளின் படங்களில் சித்தரிக்கப்படுகிற வால் போலத் தோற்றமளிக்கும். இவற்றின் இரு துடுப்புகளை தூரத்திலிருந்து பார்த்தால் மனிதக் கைகள் போலவே தெரியும்.

ஏற்கனவே கடற்கன்னிகள் பற்றிய சித்தரிப்புகளை யோசித்துக்கொண்டிருந்த மாலுமிகள் வெகு தூரத்திலிருந்து இந்த விலங்கை வேறு அரைகுறையாகப் பார்த்துவிட்டார்கள். “கடல் கன்னியை நேர்ல பார்த்தேன்” என்று கதை கட்டிவிட்டார்கள்! “கடற்கன்னி எலும்புக்கூடு” என்ற பெயரில் அறிவியலாளர்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் பலவும்  கடல்பசுக்களின் எலும்புக்கூடுகள்தான்!

சரி, கடற்கன்னிகள் இருக்க சாத்தியமே இல்லையா?

இல்லை. கடற்கன்னி என்ற ஒரு உயிரி கற்பனையில் மட்டும்தான் சாத்தியம். இயற்கை விதிகளின் படி இப்படி ஒரு உயிரி இருக்கவே முடியாது என்பதற்கு ஐந்து காரணிகளை முன்வைக்கிறார் கடல்வாழ் உயிரியலாளர் க்ரெய்க் மெக்ளெய்ன்:

  • மனித உடல் என்பது அதிக நேரம் கடலுக்கடியில் இருக்க ஏற்றது அல்ல. கடலுக்கடியில் இருக்கும் அதிகக் குளிரை மனிதனால் தாங்க முடியாது. அளவுக்கதிகமான கொழுப்புச் சத்து கொண்ட குண்டான உடல், உடல் முழுவது அடர்ந்த ரோமங்கள் இவை இருந்தால்தான் குளிரைத் தாங்க முடியும். கதைகளில் சொல்லப்படும் கடற்கன்னிகள் ஒல்லியாக, வழுவழுப்பான உடலுடன்தானே இருக்கிறார்கள்?!
  • மனிதனும் மீனும் கலந்து ஒரு உயிரி இருக்கிறது என்பது பரிணாமத்தின்படி சாத்தியமில்லை. மீனுக்கும் மனிதனுக்கும் இடையே நீர்நிலவாழ்வன, ஊர்வன, பறப்பன என்று பல இனங்கள் உருவாகியிருக்கின்றன. பரிணாம இடைவெளி அதிகமுள்ள இரண்டு இனங்கள் எப்படி இணைசேரும்?
  • மீன்கள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் உடல்வாகு உடையவை.மனிதன் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவன். இரண்டு உடல்வாகுகளும் சேர்ந்த ஒரு கடற்கன்னி உயிரி எப்படி சாத்தியம்? அது எப்படி இனப்பெருக்கம் செய்யும்? ஒருவேளை தற்செயலாக ஒரே ஒரு கடற்கன்னி உருவானால் கூட அடுத்த தலைமுறையில் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அது அழிந்துவிடும்!
  • மீன்களின் குடல் அமைப்பு மிகவும் சாதாரணமானது. மனிதனுக்கோ இரைப்பை, பெருங்குடல், சிறு குடல் என்று சிக்கலான உணவுப் பாதை உண்டு. மனித உடலும் மீன் இடுப்பும் கொண்ட உயிரி எவ்வாறு உணவை ஜீரணிக்கும்?!
  • இவை எல்லாவற்றையும் தாண்டி, நிஜமாகவே இந்த கடற்கன்னி இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். இத்தனை வருடங்களாகக் கடலை ஆய்வு செய்து கொண்டிருக்கும் யாருக்கும் கடற்கன்னி இருப்பதற்கான ஒரு அழுத்தமான ஆதாரம் கூடவா கிடைக்கவில்லை?!

பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன், லிட்டில் மெர்மெய்ட், ஐஸ் ஏஜ் என்று பல படங்களில் கடற்கன்னிகள் பற்றிய காட்சிகள் உண்டு. கோபன்ஹேகன் நகரில் உள்ள கடற்கன்னி சிற்பம் உலகப் புகழ்பெற்றது. தொடர்ந்து பல புனைவுகள், பாடல்கள், திரைப்படங்களின் கற்பனைக்கு இந்தக் கடற்கன்னி சித்திரம் தீனி போடுகிறது.

உண்மையில் கடல் பற்றிய பல கட்டுக்கதைகளிலேயே ஓரளவு தீங்கற்ற கதை இது. கடற்கன்னிகளை மனிதர்கள் நம்புவதால் எந்த விலங்கும் கொல்லப்படுவதில்லை, கடலுக்கும் ஆபத்து ஏற்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் “மனிதர்களைப் போன்ற உயிரிகள் கடலுக்குள் இருக்கிறது என்று தெரிந்தால் மனித இனம் கடலை இன்னும் கவனமாகப் பாதுகாக்க முன்வரும்” என்று கூட ஒரு கருத்து உண்டு!

உளவியலாளர்களைக் கேட்டால் அழகால் வசியப்படுத்திக் கொலை செய்யும் Femme fatale பெண் கதாபாத்திரங்களுக்கும் கடற்கன்னிகளுக்கும் உள்ள தொடர்பை இன்னும் நுணுக்கமாகப் பேசுவார்கள். நீளமான முடி, அழகான முகம், நீலக்கண்கள், வாளிப்பான பெண்ணுடல், மீனின் மினுங்கும் வால், மயக்கும் குரல் என்று கவர்ச்சிகரமான ஒரு சித்தரிப்பு இது. எளிதில் யாரும் உதறித் தள்ளிவிட முடியாத ஒரு  மாயாஜால தேவதைக்கதையும்கூட. அதனால்தான் அறிவியலை மீறியும் இந்தப் புனைவு இன்னும் உயிர்ப்புடன் சுற்றிக்கொண்டிருக்கிறது!

ஒற்றைப் பாடலில் கப்பலையே சிதைத்த கடற்கன்னிகளின் கதை இப்படி இருக்க, விஷம் நிறைந்தது என்று தெரிந்தும் தொடர்ந்து விருந்துகளில் பரிமாறப்படும் அதிசய மீனின்  கதை தெரியுமா?

 

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button