சிறுகதைகள்
Trending

மப்பு – ம.காமுத்துரை

“சாராயம் குடிக்கிறவனெல்லா கெட்டவனாய்யா?” சங்கரனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார் முத்துக்காளை. கழுத்தில் பாம்பாய்ச் சுற்றியிருந்த ஜரிகைக்கரை அங்கவஸ்திரம்  கொண்டு முகம் துடைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தார்.

அரளிப் புதரை அண்டியிருந்த துவை கல்லின் மேல் கால் வைத்து பட்டியக்கல்லில் முதுகைச் சாய்த்திருந்தனர் சங்கரனும் முத்துக்காளையும். எதிரில் தடிமனாய் வளர்ந்திருந்த பலாமரத்தில் அணில் குழாம் ஒன்று நர்சரிப்பள்ளி பிள்ளைகளைப் போல ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி கட்டிப்புரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. விளையாட்டின் சுவாரஸ்யத்தில் கீழே விழுந்து விடுமோ எனப் பதட்டமாகவும் இருந்தது.  மேற்கு மலைத்தொடரிலிருந்து இறங்கிய சாரல் கொஞ்சநேரம் பன்னீர் தூவியது போல நீரைத் தெளித்து விட்டு ஒதுங்கிக் கொண்டது. மழைத் துளிகளை ஏந்தி நின்ற மரத்தின் இலைகள், வாங்கிய நீரை சொட்டுச் சொட்டாய் மண்ணில் உதிர்த்தன.  மழைக்குப் பிந்தைய காற்று இருவரையும் குளிர்வித்தது.

எண்ணெய் தேய்த்துச் சிவந்திருக்கும் வழுக்கைத் தலையும், மூக்குத் தண்டில் சரிந்து விடாமல் ஒய்யாரமாய் ஏறி நிற்கும் கண் கண்ணாடியும் சங்கரனை மதிக்கத்தக்கவொரு நபராய் காண்பித்தது. இத்தனைக்கும் முத்துக்காளையை விட பத்து வயசுக்கு இளையவர். ஊருக்குக் கடைசியில் ஒரு தானிய அரவை மில் வைத்து நடத்தி வருகிறார்.  முத்துக்காளை முன்னால் கிராமியக் கலைஞர். ஸ்திரி பார்ட் ஆட்டக்காரர். நரையோடிய தலைமுடியை குலதெய்வம் கோயிலில் போய் மழித்து, முடிகாணிக்கை தந்து விட்டார். இயலிசை நாடக மன்ற ஓய்வூதியம் மாசந்தவறாமல் அவரைத் தேடி வருகிறது. 

பிள்ளைகளில் மூத்தவன் அரசு ஆரம்பப் பள்ளியில் தலமையாசிரியராகவும், இளையவன் பட்டதாரி ஆசிரியராகவும் வேலையில் இருக்கிறார்கள். வீடு, வாசல், கார் என நல்லநிலையில் வாழ்க்கை ஓடுகிறது. ஆனாலும் ஊருக்குள் தேடி வரும் கிராக்கிகளை அவர் தப்ப விடுவதில்லை. நிறுத்திப் பேசி அட்வான்ஸ் வாங்கி விடுவார். அட்வான்ஸ் வாங்கிய சில இடங்களில் ஆள் போட முடியாமல் திணறி ஏச்சுப்பேச்சு வாங்குவதும், ஊர்க்காரர்கள் வீட்டுக்குள் வந்து மிரட்டி விட்டுப் போகும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்தன. 

முத்துக்காளை வெறும் ஆட்டக்காரராக இருந்த மட்டும் வீட்டாள்களுக்கு இந்த மிரட்டல் விரட்டல், ஏச்சுப்பேச்சு எல்லாம் பெரிசாகத் தெரியவில்லை. ’கூத்தாடிப் பொழப்புன்னா நாலொன்னு இருந்தாத்தே வெளம்பரம்’ என பகடியையே பட்டமாய் தலையில் சூடிக் கொள்வதில் வல்லவர் முத்துக்காளை. பிள்ளைகள் தலையெடுத்த இந்நாளில் அவரது நடவடிக்கைகள் தேவையில்லாத சிரமத்தை வளர்க்கின்றன.

“திங்கச் சோறு இருக்கு, உடுத்தத் துணி இருக்கு. உனக்குன்னு இருக்க ஒரு ரூம்பும் போட்டுக் குடுத்திருக்கு. டிவி இருக்கு காத்தாடி இருக்கு. பேசாம கஞ்சியக் குடிச்சிட்டு டிவியப் பாத்துக்கிட்டு அக்கடான்னு இருக்க வேண்டிதானங் சார்!. வெத்தலபாக்கு வாங்கிக்க கடையில கணக்கும் வச்சிருக்க. இதுக்குமேல என்ன வேணும்?” முத்துக்காளையின் மூத்தமகன் ஸ்கூலுக்குப் போகும்போது மெனக்கிட்டு பைக்கை நிறுத்தி ஒப்பித்து விட்டுப் போவான்.

“காசு குடுத்தா  சாராயத்தக் குடிச்சு ரோட்ல விழுந்து கெடக்கறார்ங்க. ஸ்கூல்ல வேல பாத்துக்கிருக்கப்ப யாராச்சும் போன் போட்டுச் சொல்லும்போது எப்பிடீங்க இருக்கும்?”
சொல்லும்போது நமக்கே பாவமாய் இருக்கும். 

சீசன் நேரங்களில் மட்டுமேயான வேலை நிலவரத்தில். அட்வான்ஸ், போக்குவரத்துக்கு வாங்கியது போக, வீட்டுக்கு வரும் பணத்தில் நாலைந்து பிள்ளைகளை ஆளாக்கிய அம்மாவின் சாமர்த்தியத்தாலும், அடிமனசில் கனலாய்த் தங்கிய தன் சமூகம் குறித்த தெளிவினாலும் பள்ளியை முழுமையாய் பயன்படுத்தி தானும் தம்பியும் பள்ளிக்கல்வித்துறையிலேயே வேலை பிடித்து உடன் பிறந்த மூன்று பெண்மக்களுக்கும் மனம் கோணாமல் செய்வன செய்து, தமக்குப் பிறந்த பிள்ளைகளையும் ஆளாக்கி வரும் நேரத்தில், தங்களுக்கு உறுதுணையாய் நில்லாமல் தன் போக்கினை மாற்றிக் கொள்ளாத வேதாளமாய் முத்துக்காளையின் நடவடிக்கைகள் இருக்கின்றன என்பது பிள்ளைகளின் குற்றச்சாட்டு.

“ஆமா, இன்னிக்கித்தா நா புதுசா குடிக்கிறேன். வாந்தியெடுத்து வழில கெடக்க.? போடா, என்னமோ நேர்ல பாத்த மாதிரிதேம் பேசுவான்” மகனது புகாரை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் காக்கை எச்சத்தினைத் துடைப்பது போல தள்ளி விடுவார்.

“அப்பா, ஒனக்கு குடியில அம்பது வருச எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. இல்லீங்கள, வயசாயிருச்சுல்ல. அதுக்குத் தக்கன வச்சுக்கணும்னுதா சொல்றேன்” ரெம்பவே தன்மையாகத்தான் பேசுவான் சிங்கராசு. இளையவன் தங்கராசுதான் அடிபிடி என உரக்கச் சத்தம் கொடுப்பான். முத்துக்காளையைப் போல. 

“பெரியமனுசெ வீட்ல ஒக்காந்து வேண்டியதப் பாக்காம சவலபிள்ளயப்போல சடச்சுப் புளிச்சுக்கிட்டுத் திரியெற!” சங்கரன் ஆற்றாமை பொங்க பேசினார்.

“ஆமா, அல்லாரும் என்னியவே குத்தஞ் சொல்லுங்க.” பெண்வேசம் கட்டிப் பழகியவர் என்பதால் பழக்கதோசத்தில் முகமும் கைகளும் ஒருவெட்டு வெட்டித் திரும்பிக் கொண்டன.

இந்த நாணமும் சிருங்காரமும்தான் முத்துக்காளையை கலையுலகில் வேர் பிடிக்கச் செய்தன. முத்துதேவன்பட்டியில் நடந்த பூமாரியம்மன் ஆராட்டுவிழாவில் வெள்ளையம்மாள் வேசங்கட்டிய நாளில்  மறுநாள் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து அந்த ஊர் நாட்டாமை மகன் பெண் கேட்டு வந்து விட்டார். அதை விடவும் மேலூர் திருவிழாவில் துவங்கி அவரை பெண்ணென்றே தீர்மானம் செய்து வேலைத் தளத்தில் கற்பழிக்க முயற்சித்த சம்பவங்கள் நிறைய என, ஒரு விட்டேத்தியான பொழுதில் உட்கார்ந்து பேசிச் சிரித்துக் கழிப்பார்கள். கைகொள்ளாமல் அடர்த்தியாய் இடுப்புவரை நீண்டு கிடக்கும். தலைமுடியை வளர்க்கும் பக்குவமெல்லாம் பெண்பிள்ளைகள் வந்து விசாரித்துக் கொண்டிருப்பார்கள். 

உண்மையிலேயே முத்துக்காளை வீட்டுக்கு எது செய்யவேணும் என்பது தெரியாத அப்பாவியா! தெருப்போக்கில் யார் என்ன வேலை சொன்னலும் கூச்சமில்லாமல் செய்பவர். வீட்டில் மட்டும் குடும்பத்து ஆளாய் நின்று செய்ய சுணக்கம் காட்டுவதற்கு என்ன காரணம்?

“காரணமெல்லா இல்ல சார். பழக்கந்தான்” என அலட்சியமாகச் சொன்னான் சிங்கராசு, “பிராயத்துலயே இவரு தொழில் பழகிட்டதால வீட்டுப் பொறுப்புகளப் பூராம் அவ்வா (பாட்டி)  பாத்துக்கிட்டாங்க எந்தவொரு நெருக்கடியும் குடுத்தது கிடையாது. காசு மட்டும் கேப்பாங்க, இதே பாடுதான் எங்க ஆத்தாகிட்டயும். கட்டுன புருசன்கிட்ட வீட்டுப் பிரச்சினய நிறுத்தி, என்ன ஏதுன்னு பார் மனுசான்னு தள்ளிவிடாம, அரசெலவு சாமான் வாங்கறதிலருந்து அவசர ஆத்தரத்துக்கு அஞ்சுபத்து கடன் வாங்கறது, பிள்ளைகள ஆஸ்பத்திரி கூட்டிப் போறது, சொந்தபந்தங்கள் விசேசங்களுக்கு தலையக் காட்றதுன்னு, எது ஒண்ணுக்கும் அவர பழக்கப்படுத்தி இருந்தா நம்மவீடு, நம்மபிள்ளைக, நாமதான் இவகளுக்குப் பொறுப்புன்னு  எண்ணம் வரும். சட்டைப்பையவே பாத்துக்கிருந்தா ஆம்பளைக்கு பொறுப்பு எப்பிடி சார் வரும்!”

பள்ளிக்கூடத்தில் பாடம் எடுப்பது போல நிதானமாகப் பேசினான் சிங்கராசு. “என்னய்யா உங்கய்யாவக் குத்தம் சொல்லிப் பேச்ச ஆரம்பிச்ச, கடசீல அந்தாள உத்தமனா ஆக்கி முடிச்சிட்ட”

“உத்தமனா ஆக்கல சார். எங்க குடும்பத்துக் கதையச் சொல்றேன்.” 

“வாத்தியாருக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன பழமொழி மறந்துபோச்சு போல” சிரித்தபடி சொன்னார் சங்கரன்.

“என்ன சார் பழக்கம்? பழகிக்கிட்டே இருக்கறதுதான் பழக்கம். பழகப்பழக ஒண்ணொண்ணும் அப்டேட் ஆகணும் சார். பழசவே செஞ்சிக்கிட்டிருந்தா அது பழக்கமில்லசார். தேக்கம்..”

இந்தாளுக்கு எப்படி இப்படியொரு அறிவார்த்தமான பிள்ளைகள் வாய்த்தனர்?.  

“நீ வீட்டுக்கே போகறதில்லியாய்யா?” கிணற்றிலிருந்து ஏனைய நந்தவனத்து மரம் செடிகொடிகளுக்கான நீர்வழிப்பாதையாக இருந்த வாய்க்காலில் காலை நுழைத்தார் சங்கரன். சிலுசிலுவென மழைமேகத்தின் குளிர்ச்சி உள்ளங்காலில் உயர்ந்தது. அதனை வாங்கி அப்படியே உச்சந்தலைக்குக் கடத்த பிரயத்தனம் கொண்டவர், கைகளை விரித்து வாய்க்கால் கரைகளில் அடர்த்தியாய் வளர்ந்திருந்த பசும்புற்களின் மீது பரப்ப புல்லின் குளிர்மையும் போனசாய்க் கிட்டியது.

“கிறுக்கு, அவெங்கள மாதரி கிறுக்குத்தனமா நிய்யும் பேசாதய்யா ! வீட்டுக்குப் போகாம  ரோட்டுலயா படுத்துக் கெடக்கெ. துணிமணி மாத்தறது, குளிக்கறது இதெல்லாம் எங்கடா பண்றாருனு கேக்க வேண்டிதான. அதெல்லா நீ கேக்க மாட்டெ” ரொம்பவும் வருத்தமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

சிங்கராசு சொன்னதை எப்படிச் சொல்வதெனத் தெரியவில்லை. “அப்பா வீட்ல இருந்தார்னாலே பயம்மா இருக்குங்க. எதாச்சும் கூப்பிட்டுப் பேசினம்னா சம்பந்தமில்லாமப் பேசுறாரு. காலத்த அறிஞ்சு பேசமாட்றாரு.”

“என்னிய எதுக்கு கூப்புடுறாங்கெ”

“கூப்பிட்டா?”

“கூப்புட்டா நாஞ்சொன்னதக் கேக்கணும்ல. இத்தன படிப்பு படிக்கவச்சு ஆளாக்கி, வீடுவாசல் உருவாக்கி குடுத்தது ஆரு. அடிப்படை நாந்தான. எம் பேச்சக் கேக்கணும்ல.”

“ஊருக்கே பாடஞ்சொல்லித் தார வாத்தியார் ஆயிட்டாங்கெ. இன்னம் ஒம்பேச்சக் கேக்கணுமா”

“போ.! கேக்காத.! அதான் நா வெளிய வந்திர்ரே”

கெட்டிக்காரத்தனமான பேச்சாக இருந்தது முத்துக்காளையின் பேச்சு. நேற்று பேத்தியைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். அந்த நேரம் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வந்து விட்டார்.

“தலசான காரியம்னு பெரிய மனுசனுக்குத் தெரிய வேணாமாங்க. வாரவங்க என்னா நெனைப்பாங்க” சிங்கராசுவின் ஆதங்கம்தான் சங்கரனைக் கேட்க வைத்தது..

”அவெங்கள மாதரியே நிய்யும் பேசற! நா இல்லாம எங்க போய்ட்டேன். இருந்து பேசி, மாப்ள வீட்டாள்கள கைகுடுத்து ஒக்கார வச்சி காப்பி பலகாரமெல்லாம் சாப்டச் சொன்னது ஆர்னு கேக்க வேண்டிதான” இதில் எத்தனை சதம் மெய் என்பது விசாரணைக்குப் பிறகே தெரியும்.

”நீ அப்பவே வெளீல வந்திட்டியாமே…?” மூன்று மணிக்கு பஸ்ஸ்டாண்ட் காப்பி ஹோட்டலில்  முத்துக்காளை நின்றிருப்பதாக கேழ்வரகு மாவு அரைக்க வந்த நல்லகண்ணுத் தேவர், சங்கரனிடம் சொன்னார். “அங்கன ஒங்காள் நல்லா பளீர்னு அங்கவஸ்திரமும் பட்டு வேட்டியுமா காப்பிக் கடைல நின்டுக்கிட்டு அலப்பற குடுக்கறாரு. எதும் விஷேசமா?” 

“வேல கெராக்கி வந்து கூப்புட்டாக. போகவேணாமா?”

”ஒன்னய யாரு வேலைக்கிப் போகச் சொன்னா. மகெ மருமக வேலைக்கிப் போறாக. நீ இருந்து வீட்ட பாக்கலாம்ல.”

படாரென எழுந்த முத்துக்காளை வினோதமானவரைப் பார்ப்பதுபோல சங்கரனைப் பார்த்தார். “நீங்கள்ளாம் வெளீல போய்ச் சம்பாதிப்பீங்க. நானு வீட்டப் பாக்கணுமா?”

“ஒழச்சது போதும் ரெஸ்ட்டு எடுன்னு சொல்றாங்கய்யா அது தப்பா?. அதேன் பென்சன் காசு வருதுல்ல”

”அப்பிடிப்போடு அருவாள”  ஏகடியமாய் இழுத்தவர், “விச்சிப் போகும் வீரவாண்டி வரைக்கும்” பொம்பளையைப் போல முழங்கையை தட்டிக் கொண்டு வேகமாய் வந்தார். “கொளத்துக்குள்ள பொரண்டு குளிக்கிற மாட்ட கொடத்து தண்ணீல குளிக்கச் சொல்றியேயா”

உண்மையில் பிரச்சனை அதுவல்ல. தமிழகம் முழுக்க பட்டிதொட்டி எல்லாம் சுத்திவந்த கால்கள் வீட்டில் உட்காருமா? சொல்லப்போனால் டெல்லி, பாம்பே, கல்கத்தா என பெருநகரம் உள்பட வடமாநிலத்திலும் கலைநிகழ்ச்சி நடத்தி வந்தவர். 

“வயசாயிருச்சுன்னா வீட்டுக்கு அடங்கித் தான் ஆகணும். நாளைக்கி நானே ரிட்டையர் ஆனாலும் இதானசார் நெலம.” 

“ஒனக்கு பொண்டாட்டி இருக்கு. பிள்ளீக இருக்கு. வீட்ல சவரட்டணயா ஒக்காருவ!”

“ஒனக்கு பொண்டாட்டிதான இல்ல. பாக்கி எல்லாமே இருக்கில்ல” சங்கரன் இணைப்புக் கண்ணியை ஓடி ஓடித் தேடினார்.

“எந்த நேரம் பாத்தாலும் காசு கேக்கறார் சார். சாப்பிடச் சொன்னாலுமா காசு கேப்பாங்க”

“பின்ன, வெறுஞ்சோத்த நாய் திங்குமா?” சிங்கராசுவின் பேச்சை சங்கரன் முன்னிலையிலேயே மறுத்துப் பேசினார் முத்துக்காளை.

வெறுஞ்சோறு என்பது கறிச்சோற்றை சொல்வார். ஒரு கட்டிங் சாப்பிட்டால்தான் சோறு உள்ளிறங்குமாம். அப்படியொரு வழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார். 

“இது ஓவரில்லியா முத்துக்காள, ஒம்பொண்டாட்டி இல்லாத காலத்துல நம்மள மதிச்சு வீட்ல ஒக்கார வச்சு சோறு போடுறதே பெருசு. இதில கட்டிங் வேறயா. ஒம் பொண்டாட்டி இப்பிடிதே சோறு போட்டாளாக்கும்” ஒருநாள் இதே கேள்வியை நல்லகண்ணுத் தேவரும் கேட்டுவிட்டார்.

அதனை சிங்கராசுவும் ஒப்புக் கொண்டான். அய்யா ஊரெல்லாம் ஆடி அலுத்து சலித்து வருவாரென அம்மாவே கடைக்குப்போய் ஒரு பாட்டிலோ ரெண்டோ வாங்கி வந்து சாப்பாடு பரிமாறும்போது வைக்குமாம். 

”அவ தெய்வம்யா…!” என்ற முத்துக்காளை,

“ஈன்ற தாயை நான் கண்டதில்லை

எனது தெய்வம் வேறெங்கும் இல்லை.

பாலும்பழமும் கைகளில் ஏந்தி

பவளவாயில் புன்னகை சிந்தி

கோல மயில்போல் நீ வருவாயே ….”

உடனே பொண்டாட்டிமேல் பாட்டுப் போட்டார். பாடிக் கொண்டே நடந்து பலாமரத்தை கட்டிக் கொண்டார். பாட்டுப் பாடுகிறார் என்றால் உற்சாக மனநிலை அல்லது உருகிய நிலையில் மட்டுமே என்பதாகக் கொள்ள வேண்டும். இது உற்சாக நிலையில்லை. நந்தவனமே மௌனம் அனுஷ்டித்தது. 

வழக்கம்போல அவரே அதனை கலைத்தார். “முடியாது. இனி முடியாதுய்யா. நீங்க சொல்ற மாதிரி வீட்டுக்குள்ள எல்லாம் இருக்குது. சரித்தே, ஆனா உள்ள நொழஞ்சதும் மூச்சு முட்டுது. என்னா செய்ய?”

”எதுனால?”

வீட்டில் பிள்ளைகுட்டிகள் மொத்தமாய்க் கூடினாலோ நல்லநாள் பொல்லநாளுக்கு பொண்ணும் பொடுசுமாய் நின்றாலோ குறிப்பாக வீட்டுக்கு யாராவது பங்காளிகள் விருந்தாடியாக வந்துவிட்டாலோ போதும்.. மதியச் சாப்பாடு முடிந்து கைகழுவுவதுதான் தாமதம் மகன், மருமகள், தொடங்கி பேரன் பேத்தி வரை இவர் மீது ஆளுக்கொரு குற்றம் வாசிக்கத் துவங்குவார்கள். 

“சட்டிபொட்டி கழுவவில்ல

சமையல்வேல செய்யவில்ல

தட்டுக் கெட்ட பொம்பளயால 

மருவாத போச்சு…”

என, அல்லி அர்ச்சுனா தெருக்கூத்தில் நடக்கும் காமிக் கதை போல ஒன்னொன்னாய்ச் சொல்ல, முத்துக்காளையால் ஒவ்வொருவருக்கும் நிதானமாகப் பதில் சொல்ல முடிவதில்லை. இத்தனை கேள்வி இதுவரை ஆத்தா காலத்திலும் சரி, பொண்டாட்டி தாட்டியம் பண்ணிய நாளிலும் சரி வந்ததில்லை. 

அந்த நாளிலெல்லாம் நிதானத்திலிருந்தால் ஒன்றிரண்டு கேள்விக்கு பதில் சொல்வார். மப்பு கொஞ்சம் கூடியிருந்தால் அல்லது போதாமலிருந்தால் கிறுக்குப் பிடித்தவர் போல இன்னது செய்கிறோம் என அறியாமல் சட்டி பொட்டிகளை உடைப்பதும், பிள்ளைகளை எட்டி உதைப்பதும் கண்டமானைக்கு நடக்கும்.

அத்தனையும் பூமாதேவியாய் பொறுமையாய் தாங்கி நின்றவள் தங்கத்தாய் பேருக்கேத்த தங்கமாய் வாய்த்த புண்ணியவதி. இப்பக்கூட- சாகந்தண்டியும் மகன், மருமக்கமாரிடமிருந்து சுளுவாய் கழட்டி விடுவாள். அவள் முன்னிலையில் தன்னை ஒரு பேச்சுப் பேச விடமாட்டாள். 

தங்கத்துக்கப்பறம் வீட்டில் எல்லாமே அடங்கிப் போச்சு. கலகலப்பு, கம்பீரம், குதூகலிப்பு, கொக்கரிப்பு எதுமில்லை. பிள்ளைகளிடம் என்ன பேசமுடியும்? எத்தனை பேசமுடியும்! மருமக்கள்மாரிடம்? பேரன் பேத்திகளுக்கு புத்தி சொன்னால்தான் தாத்தா. அவர்களுக்கும் தலைக்குமேல் பாரம். படி படி என புஸ்தகக் கட்டுகளைக் கட்டி தனி வீட்டில் போட்டு அடைத்து விடுகிறார்கள். எட்டிப்பார்த்தாலும் வசவு. “புள்ளைக படிக்கணும்”

காலிபுட்டி போல் வீடும் மனசும் காற்றாடிக் கிடக்க, வழக்கம்போல பழைய சினேகிதம், கிராக்கிகளையே நாடுவதும் தேடுவதும் தேவையாகிப் போகிறது.

எதோ முடிவுக்கு வந்தவராய் பரபரவென கைகளால் முகத்தைத் துடைத்தவர் சங்கரனுக்கருகில் வந்து நின்றார். “ஒரு கேள்வி போடுறேன் கரீட்டா பதில் சொல்லணும்!” என்றவர், “எனக்கு நீஞ்சத்தெரியும். சிங்கராசுக்கு தண்ணிக்குள்ள நடக்கவே தெரியாது. அப்ப நீஞ்சத் தெரியாத சிங்கராசு கெட்டவன்னு சொன்னா ஒத்துப்பீங்களா?” 

சங்கரனுக்கு அவர் சொல்ல வந்த விசயம் விளங்கவில்லை. முத்துக்காளையும் தன்னை எதிர்பக்கமாய் திருப்பிக் கொண்டார். அழுகிறாரா? மறுபடி பலாமரத்திற்குச் சென்றவர் இடைவெளிவிட்டு கசிந்த குரலில் பேச்சைத் தொடரலானார்.

”எம் பொண்டாட்டி செத்துப் போய்ட்டாய்யா, ஒங்ககிட்ட பேசற வார்த்தகூட பெத்த பிள்ளீகிட்ட பேசமுடீலயே? ஏன்? தெரீல… அதுக்காக அவ செத்துப் போனாங்கறதுக்காக குடிக்கல. அவ இருக்கும்போதும் குடிச்சேன்ல. இன்னைக்கித்தானா புதுசா குடிக்கிறே. முடியாதுயா…விட்டா கிறுக்கனாயிருவே…”

சங்கரனுக்கு என்ன தோன்றியதோ எழுந்து வந்து முத்துக்காளையின் தோளை அணைத்துக் கொண்டார். “அதுக்காக நீ குடிக்கறத நியாயப்படுத்த முடியாதுல்ல முத்துக்காள” என மனசுக்குள் சொல்லிக் கொண்டார்

“ரைட்டு, என்னிய குடிக்க வாணாம்னு சொல்றானுகளே, சின்னவே இருக்கான்ல தங்கராசு . அவனுக்கு நாலுவயசு வரைக்கும் தெனமும் தென்னங்கள்ளு ஊத்தித்தே வளத்தே. அந்தக் கத தெரியுமா?” 

நந்தவனம் அங்கே ஒரு அடுத்தொரு கூத்து கதையினை எதிர் நோக்கிக் காத்திருந்தது. 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. என்ன சார் பழக்கம்? பழகிக்கிட்டே இருக்கறதுதான் பழக்கம். பழகப்பழக ஒண்ணொண்ணும் அப்டேட் ஆகணும் சார். பழசவே செஞ்சிக்கிட்டிருந்தா அது பழக்கமில்லசார். தேக்கம்..”
    மிக யதார்த்தமான வரிகள். எல்லாம் பழக்கம் என்று சொல்லி கொண்டே நாம் மாற மறுக்கிறோம். இந்த வரிகளை உள்வாங்கினால் அனைவரும் மாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button