
சோமு இல்லை. வேறு யாரோ வந்து கதவைத் திறந்தார்கள். சுந்தரத்திற்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை. திறந்த பெண்ணுக்கும் இவரைப் பார்த்ததும் ஒரு சிறு தயக்கமும் கூச்சமும் வந்திருந்தது. நைட்டியைக் கீழ்ப் பக்கமாக நெஞ்சுப் பகுதியில் இழுத்துவிட்டுக் கொண்டு, பாதி கதவைத் திறந்த வாக்கில் நின்றாள். வாசல் நடை தெருவை ஒட்டி இருந்தது. சுந்தரத்துக்குப் பின்னால் மத்தியான வெயிலும் ஒரு ஆளைப் போல அவரோடு உள்ளே நுழையத் தயாராக நின்றது.
“சோமு இல்லையா?” என்று கேட்டார். இன்னும் கொஞ்சம் கதவை அகலத் திறந்து ஒதுங்கி நின்று, அவரை உள்ளே வரவிடுவது போலவும் வரவிடாமல் மறிப்பது போலவும் நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்து லேசாகச் சிரித்தார். பின் பக்கம் உடையைத் தளர்த்திவிட்டுக் கொள்கிற முனைப்பிலேயே இருந்தபடி, “உள்ளே இருக்கா” என்று சொன்னாள்.
“ஏனத்தை எல்லாம் ஒழிச்சுப் போட்டுட்டு, கொஞ்சம் எல்லாரும் படுத்து எழுந்திருக்கிற நேரம். தொந்தரவு பண்ணிட்டேன் போல” என்று சுந்தரம் நடையைத் தாண்டிப் பட்டாசலில் காலை வைத்தார். அந்தப் பெண் கதவை மறுபடி சாத்துவதா வேண்டாமா என்ற யோசனையில் அங்கேயே இருந்தது. “திறந்தே இருக்கட்டுமே, இப்போ என்ன?” என்று மீண்டும் சிரித்தார். “சுந்தரம் பெரியப்பா வந்திருக்கா’ன்னு அவகிட்ட சொல்லும்மா” என்றார்.
இரண்டு பேர் உட்கார்கிற ஒரு சோபாவும் இரண்டு நாற்காலிகளும் இருந்தன. முதலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தவர், அது ஏதோ அசௌகரியமாக இருப்பது போல, இரட்டை சோபாவிற்கு மாறினார். நார்க்கட்டில் பின்னல் போலக் கண் கண்ணாக இருந்த அந்தப் பிரம்பு வழுவழுப்பு அவருக்குப் பிடித்திருந்தது. தடவிக் கொண்டே இருந்த கையை முகர்ந்தவர் அதில் ஒரு பிரம்பு வாடையை எதிர்பார்த்தார். திருவாசகம் டாக்டர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்த அவருடைய பதின்மூன்று வயது அல்சேஷியன் நாயின் வயோதிக வாடை தான் அடித்தது. இத்தனைக்கும் டாக்டர் வீட்டில் லைபாய் சோப் போட்டுக் கழுவத்தான் செய்தார். இடையில் முக்கால் மணி நேரம் பஸ்ஸில் வேறு பிரயாணம் செய்து வந்திருக்கிறார்.
“வரும் போது அப்படியே ஒரு செம்பு குடிக்கத் தண்ணி கொண்டுட்டு வா, தாயி” என்றார். சுற்றிப் பார்க்க ஆரம்பித்தார். வேணியும் ராமையா அண்ணாச்சியும் இருக்கிற அந்த போட்டோவைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. வேணி மதினி அந்தப் படத்தில் அவ்வளவு அழகாக இருப்பாள். பஃப் கை வைத்த ரவிக்கை. என்ன நிறத்துப் பட்டோ? கருப்பு வெள்ளையில் மாங்காய் பார்டருடன் துடிப்பாக இருக்கும்.
அப்படிப் பார்த்தால் ராமையா அண்ணாச்சி வேணி மதினியை விடக் களை என்று சொல்ல முடியாது. கொஞ்சம் மட்டு தான்.. மேலக்கால் பண்ணையார் குடும்பத்துக்கே உண்டான பணக்காரக் களையும் தோரணையும் இருந்ததே தவிர மற்றபடி குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. என்னதான் கோட்டுப் போட்டு, அதற்கு வெளியே வெள்ளைக் காலர் தெரியும் படியாக இருந்தாலும் மதினியோடு இருக்கிற அந்தப் படத்தில் வேணி மதினி போட்டிருந்த ஜிமிக்கிக்குப் பக்கத்தில் கூட வரமுடியாது அவருடைய தங்கப் பித்தான்கள். வேணி மதினி அந்த ஃபோட்டோ சட்டத்துக்குள் இருந்து குதித்து வெளியே வந்துவிடுவது போல இருப்பதாக எப்போதும் சுந்தரத்துக்குத் தோன்றும்.
“வாங்க பெரியப்பா” கொஞ்சம் அவசரமாகவே சோமு உள்ளே இருந்து முடியைக் காதோரம் ஒதுக்கிச் செருகிக் கொண்டே வந்தாள். சோமுவுக்கு இப்போது ஐம்பது வயதாவது இருக்கும். வேணி மதினியின் ஐம்பது வயதைத் தன்னிடம் அப்படியே வாங்கிப் பத்திரப் படுத்தியது போல சோமு ஒரு திரட்சியான அழகுடன் வந்து கொண்டிருந்தாள். கை இரண்டையும் உயர்த்திக் கொண்டை போட்டதில் சேலை விலகியிருந்தது. சுந்தரத்துக்கு அப்படிப் அவளைப் பார்க்க ரொம்பவும் விருப்பம் உண்டாயிற்று. அவரை அறியாமலே இருந்த இடத்தைவிட்டு எழுந்து, அவளை அப்படியே அணைத்துக் கொள்ளப் போவது போலக் கையை சற்று விரித்தபடி நின்றிருந்தார்..
“நல்லா இருக்கியா சோமு?” என்று கேட்கும் போது அவர் பார்வையைச் சிறிதும் அகற்றவே இல்லை. தான் நினைத்தது போலச் செருக முடியாத அலுப்பில் கூந்தலை ‘அட’ என்று முனங்கிக்கொண்டே விட்டுவிட, தன் முடிச்சைத் தானே அவிழ்த்துக்கொண்டு சோமுவின் முதுகுப் பக்கம் ஒரு தயக்கமான நொடியில் அவ்வளவு முடியும் படுதாவாக இறங்கியது. அதை முன் பக்கமாக வழித்து வலது தோளின் பக்கம் போட்டவளாக வந்து, “உட்காருங்க பெரியப்பா” என்று சுந்தரத்தின் பக்கம் உட்கார்ந்தாள். சுந்தரம் அதை எதிர்பார்க்கவும் இல்லை. எதிர்பார்க்கவும் செய்தார். சற்று உயரத்தில் மிதந்து வந்து தணிந்து உட்கார்கிற அவளின் பக்கத்தில் தன் கைகளை உடலோடு சேர்த்தபடி அமர்ந்தார். ஏற்கனவே ஒரு பறவை அமர்ந்திருக்கும் கிளையில் இன்னொரு பறவை சிறகு ஒடுக்கி இறங்கும் நேரத்தின் சிறு வெக்கையும் இடம் பெயரும் காற்றும் அங்கு உண்டாயிற்று.
“எப்படி இருக்கீங்க பெரியப்பா?” என்று சோமு அவருடைய வலது கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டாள். சற்று நைந்த பழைய நூல் சேலையின் மிருதுவான மடிப்பில் அவளுடைய கைகளுக்குள் சுந்தரத்தின் வலது கை இருந்தது. சுந்தரம் ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருந்தார்.
“கதவைத் திறந்துவிட்டது யாருண்ணு தெரியலையே?” என்று மெதுவாகக் கையை உருவித் தன் இடது கையில் ஒப்படைத்துவிட்டுக் கேட்டார். வலது கையைத்தான் சோமு மடியில் வைத்திருந்தாள். சுந்தரத்தின் இடது முன்கை ரோமம் அனைத்தும் சுருளுக்குள் சுருளாகச் சிலிர்த்திருந்தன. ஒரு கடிஎறும்பு தனியாகவும் வேகமாகவும் அந்த முடிகளுக்கு ஊடாக இப்போது போனால் நன்றாக இருக்கும்.
“என் கூட ஒண்ணா வேலை பார்க்கா?” என்று சொல்லிவிட்டு, உள் பக்கமாகப் பார்த்து “அங்கே ஒத்தையில என்னத்தை உருட்டிக்கிட்டு இருக்கே. இங்கே வந்து எங்க கூட உட்காரு. வா” என்று சத்தம் கொடுத்தாள். “வரட்டும், வரட்டும்” என்று சுந்தரம் சொன்னார். அப்படிச் சொன்னதில் அவருக்கு ஒரு தடங்கலாக இருந்த சிறு தூரத்தைக் கடந்துவிட்டது போல இருந்தது. சோமுவின் கையை எடுத்துத் தன் கைகளில் வைத்துக் கொண்டார். தட்டிக்கொடுத்தார்.
“அம்மையைக் கடைசி வரைக்கும் நல்லாப் பார்த்துக் கிட்டே” என்று தட்டிக் கொடுப்பதை நிறுத்தித் தரையையே பார்த்தார். உள்ளே இருந்து நறுக்கின எலுமிச்சம்பழ வாடை வந்தது. சுந்தரம் எப்போதோ பார்த்த ஒரு விளைந்த எலுமிச்சம் பழத்தின் பாதி மூடியையும் நடுவில் அறுபட்ட விதையையும் திரித் திரியாய் ஒன்றுக்குள் ஒன்றாய் அப்பியிருந்த சதைப் பற்றையும் நினைத்துக்கொண்டார்.
“அம்மை ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாளா? இல்லையே?” என்றார். நான்கு வருஷங்களுக்கு முன்பு வேணி மதினிக்கு ரொம்ப முடியாமல் போய், இடது பக்க மார்பைக் கூட எடுத்துவிட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். அதைக் கேள்விப்பட்ட சமயத்தில் சுந்தரத்தால் அதைத் தாங்கவே முடியாமல் இருந்தது. அவருக்குள் பொக்கிஷமாக வைத்திருந்த ஒரு உருவம் அநியாயமாக மூளியாகிவிட்டதாகவே நினைத்தார்.
“அது வந்தா பொழைக்க மாட்டாங்கண்ணு சொல்லுவாங்க. .அதிலெ இருந்து எல்லாம் கூடத் தப்பிச்சு வந்துட்டாளே,பாவி” என்று எதையும் குறிப்பிடாமல் மொட்டையாகக் கேட்டவர், குனிந்த தலையை நிமிர்த்தி சோமுவைப் பார்த்து விட்டுக் குனிந்து கொண்டார். தான் சோமுவின் முகத்தைத்தான் பார்த்திருக்க வேண்டும், அங்கே பார்த்திருக்கக் கூடாது என்று விரல்களை விரைப்பாக நீட்டி நகக் கண்களைப் பார்த்தார். நகக் கண்களில் என்ன , “நீ செய்தது தப்பு, சரி என்றா எழுதியிருக்கப் போகிறது?”
“அப்படி ஒரு ஆப்பரேஷன் ஆகியிருக்குண்ணு கேள்விப்பட்ட உடனே நான் மதினியைப் பார்த்துட்டு வந்துரணும்னு புறப்பட்டேன். உம் பெரியம்மையைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே. ஆடு ஆடுண்ணு ஆடித் தீர்த்துட்டா. இத்தனை காலம் இல்லாம அவளைப் போயி உமக்கு இப்ப என்ன பார்வை.? இது வரைக்கும் அவ என் குடியைக் கெடுத்தது போதாதா?அப்படி இப்படிண்ணு ஆதி ராமாயணத்தை எல்லாம் ஆரம்பிச்சுட்டா”
சுந்தரம் இதைக் கூடுமானவரை நிதானமாகத்தான் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் தொண்டை நெரிந்து குரல் மாறி எப்படியோ ஆகிவிட்டது. வெளியே சொல்லவில்லையே தவிர சோமு பக்கத்தில் இப்படி அவர் இருக்கும் போது கூட, அவரைப் பார்த்து அவ்வளவு அசிங்கம் அசிங்கமாக ராஜம்மா என்று அவர் கூப்பிடுகிற ராஜேஸ்வரி கேட்டதெல்லாம் அப்படியே காதில் விழுந்தது.
“அவ அப்படியே உம்மகிட்ட அவுத்துக் காட்டுவா. நீரு ரெண்டு இருக்கா, ஒண்ணு இருக்கான்னு தடவிப் பார்த்துச் சொல்லீட்டு வரப் போறேராக்கும்?” பல்லைக் கடித்துக்கொண்டு ராஜம்மா கத்தும் போது, வாசலில் இ.பி. ரீடிங் எடுக்கிறவர் வராண்டாவில் நின்று கொண்டு இருந்தார். இங்கே இருந்து பார்த்தால் தெரியாது. ஆனால் அன்றைக்கு மீட்டருக்குப் பின்னால் அவர் அந்த வெள்ளைக் கார்டைச் செருகிவிட்டு,உதிர்ந்து கிடக்கும் வாதாம் இலைகளைத் தாண்டி, வாசல் இரும்புக் கதவின் நாதாங்கியை வெளியிலிருந்து கையைக் கொடுத்துப் போட்டுப் போவது வரை மௌனப் படம் ஓடுவது போல இருந்தது.
“நீங்க வராட்டா என்ன. ஆவலாதியா? அம்மைக்கு இது எல்லாம் தெரியாதா என்ன? அம்மைக்கும் சரி, எனக்கும் சரி, கோர்ட்டு,கேஸுண்ணு எவ்வளவு நீங்க அலைஞ்சிருக்கியோ, செஞ்சிருக்கியோ?!” -சோமு முன்னை விடவும் சுந்தரத்தின் பக்கத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டாள். ரொம்ப நாள் பெட்டிக்குள் இருந்து எடுத்து உடுத்தின நூல் சேலை போல ஒரு வாசனை அடித்தது. இப்போது உவர் மண் போட்டு எந்த ஊரில் இப்படி வெள்ளாவி வைக்கிறார்கள்?
“இது உங்க அம்மை சேலையா?” சுந்தரம் சோமுவைப் பார்த்துக் கேட்டார். “இல்லையே” என்று முதலில் சொன்னவள். “அம்மா சேலை கட்டுகிறதை எல்லாம் கடைசியில விட்டாச்சு. அனேகமா நைட்டி தான் லாஸ்ட் வரைக்கும்” சோமு அப்படிச் சொன்னாலும், சுந்தரத்துக்கு அது வேணி மதினியுடைய சேலை என்றே தோன்றியது. அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது கூட மதினிதான், சோமு இல்லை.
சுந்தரத்திற்கு மறுபடியும் ராஜம்மாள் ஞாபகம்தான் வந்தது. அவளுடைய வெவ்வேறு வக்கிரமான குரல்கள் ஒன்றின் பின் ஒன்றாக அவரைப் பலகையில் சாய்ந்து நிற்க வைத்துச் சுற்றுக் கோடுகள் வரைந்து, கத்திகளாக வீசப்படுவது போல இருந்தார். ஒரு ஈர மரத்தில் கூர்மையான முனை இறங்கும் போது உண்டாகும் ஒருவித இறுக்கமான சதசதப்பு, கழுத்துப் பக்கம் உண்டாயிற்று அவருக்கு.
“என்னை அம்புட்டுப் பாடாப்படுத்தினா. ராமையா அண்ணாச்சிக்கு அப்படி ஆகும்னு யாருக்குத் தெரியும். உங்க அம்மையையும் என்னையும் சேர்த்து வாயில வந்தது எல்லாம் பேசினா. சேகருக்கு ராத்திரியே ஆக்ஸிடெண்ட் ஆகி சாத்தூர் ரோட்டில ஆம்புலன்ஸ் வராம பாடி வெயில்ல கிடக்காம்.” சோமு பாவம் ராஜம்னு அவகிட்டே சொல்லுதேன். “ஈரமே இல்லாம, பவம் என்ன பாவம். அம்மையை அவுத்துவிட்டது மாதிரி மகளையும் அவுத்து விட்டாச்சு. உமக்கு இப்ப ஒண்ணுக்கு ரெண்டா வசதியாப் போச்சுல்லா’ங்கா. கடைசியில என்ன கதி கிடைச்சுது அவளுக்கு? ஆளும் இல்லாம தேளும் இல்லாம, கண் காணாத இடத்தில போயிச் சேந்தா. பேருதான் யு.எஸ். என்னையும் மகனையும் விட்டால், எண்ணிப் பத்துப் பேர் கூட இருக்காது குழியில இறக்கும் போது.,” சுந்தரத்தின் குரலில் ஒரு ஆங்காரம் வந்திருந்தது இப்போது. “இது எல்லாம் வேண்டும் உனக்கு” என்று அவர் ராஜம்மாளிடம் கணக்குத் தீர்க்க ஆரம்பித்திருந்தார்.
சோமு “பெரியப்பா” என்று அவர் தோளில் கையை வைத்து சாந்தப்படுத்தினாள்.. தெரு வாசலைப் பார்க்க வேறு மாதிரி இருந்தது. இந்த இடத்தில் இருந்து அவள் எத்தனையோ தடவை பார்த்த ஒன்றுதான். இப்படி அதைப் பார்த்தது இல்லை.. திறந்த கதவு வழியாக வெயில் ஒரு தடுக்குப் போல் உள்ளே சாய்ந்திருந்தது. இன்று காலையில் கூடப் பெருக்கிய தரைதான். குதித்துக் குதித்து உள்ளே வந்த அடைக்கலாங் குருவி ஒரு துரும்பைப் பொறுக்கி வெளியே பறந்தது. அடிக்கடி இந்தப் பக்கம் நடமாடுகிற நாய். தெரு நடையில் படுத்திருந்தது. நேற்றை விட அதற்கு அதிக வயதானது போன்ற தோற்றம். ஒரு நாளில் அப்படி எல்லாம் ஆகிவிடுமா என்ன?
“யோசனை எங்கே போயிட்டு சோமு? கண்டதும் கழியதுமாப் பேசி, வேண்டாத குப்பையை எல்லாம் கிளறி விட்டுட்டேன். எனக்கும் வேற புகல் இல்லை” சுந்தரம் அவளிடம் சொன்னார். “கூடு கட்டுது போல” என்று தொடர்பே இல்லாமல் சோமு சுந்தரத்திடம் சொல்லும் சமயம் அவளுக்குள் அந்தக் குருவி பறந்த சத்தம் வந்து போனது.
“என்ன உளறிக்கிட்டு இருக்கே?” என்று சொல்லிக்கொண்டே அடுப்படி உள்ளே இருந்து ஒரு எவர்சில்வர் ஜாடியும் தம்ளர்களுமாக வருகிறவளைச் சுந்தரம் பார்த்தார். கதவைத் திறந்த போது பார்த்ததை விட, இப்போது சுந்தரத்துக்கு அவளைப் பிடித்திருந்தது. சோமுவிடம் பேசிய குரலில் இருந்து வேறு குரலுக்கு மாற வேண்டும் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.
“யம்மா, நீ இவ்வளவு நேரம் வீட்டுக்குள்ள தான் இருந்தியா. இந்த ஆளைப் பார்த்தா வில்லங்கமான ஆளா இருப்பான் போலயேண்ணு புறவாசல் கதவைத் திறந்துக்கிட்டு வெளியில போயிட்டியோண்ணு நினச்சேன். உன் கிட்டே ஒரு செம்பு தண்ணி குடிக்கக் கேட்டதுக்கு இந்தப் பாடா?” – சுந்தரம் இடம் மாறி முதலில் உட்கார்ந்த ஒற்றை நாற்காலிக்கு மாறினார். பெருங்கால் பிடித்து மரத்துப் போயிருந்தது. தரையில் இடது காலை நான்கைந்து தடவை தட்டிக்கொண்டார். மோட்டார் ஓடுவது போல் காலுக்குள் ஏற்பட்டிருந்த அந்த விருவிருப்பு இன்னும் அடங்கவில்லை.
“எலுமிச்சம்பழம் கிடந்தது. போஞ்சி போட்டு எடுத்துட்டு வாரேன். அதான் கொஞ்சம் லேட்டாயிட்டு” என்று அவள் தம்ளர்களில் ஊற்ற ஆரம்பித்த போது, “பெரியப்பாவுக்கு ஒரு தம்ளர் எல்லாம் காணாது” என்று சோமு வந்து உட்கார்ந்தாள். சோமுவும் இப்போது எதிர் நாற்காலிக்கு வந்திருந்தாள். ஒரு காலை மடக்கி நெஞ்சோடு வைத்து, இன்னொரு காலைத் தளர்வாகத் தரையில் நீட்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்து, “வசதியா உட்கார்ந்தா என்ன?’’ என்றார்.
“பெரியப்பா, இவ நர்கிஸ்.” என்று சொல்லி முடிப்பதற்குள் சுந்தரம், “அப்பதையே பார்த்தேன். மீசையெல்லாம் வச்சிருக்கா” என்று சிரித்தார். கை எட்டுகிற தூரத்தில் இருந்திருந்தால் தட்டிக்கொடுத்திருப்பார். நர்கிஸ் மேலுதட்டிலும் முன் கைகளிலும் பூனைமுடிகள் இருந்தன. அவர் அப்படிச் சொல்கையில் அவள் ஒன்றுமே இல்லாமல் போஞ்சியை ஊற்றிக் கொண்டு இருந்தாள். எலுமிச்சைக் கொட்டை ஒன்று ஒரு தம்ளரில் கிடந்தது. கரண்டிக் குழிக்குள் விழாமல் அது வழுவழுத்துத் தப்பிக் கொண்டே போனது.
“சில பேருக்கு அது நல்லாத் தான் இருக்கு” என்று சுந்தரம் சிரித்தபடியே ஒரு மடக்கு வாயில் விட்டுக்கொண்டார். எலுமிச்சைக் கரகரப்பும் உப்பு ருசியும் அவரை மேலும் வேறொருவராக மாற்றியது. “கதவைத் திறக்கும் போது நீ நைட்டிதானே போட்டிருந்தே. அதுக்குள்ளே எப்போ சேலைக்குப் போனே? அதை நான் கவனிக்கவே இல்லையே’ என்று சொன்னவர், இதை விட அது உனக்கு நல்லா இருந்துது” என்று நெஞ்சுப்பக்கம் இழுத்துவிடுவதுபோல் சைகை காட்டினார். தாராளமாக வாய்விட்டுச் சிரித்தார்.
அப்படி அதிரச் சிரித்ததில் மூத்திரம் ஒரு சொட்டு இறங்கினது போல இருந்தது அவருக்கு. “சோமு, பாத்ரூம் எங்கே இருக்கு? ஒண்ணுக்குப் போணும்” என்று சொன்னார். நர்கிஸ் அது இருக்கிற திசையைக் காட்டினாள். சோமு “வாங்க, காட்டுதேன்” என்று எழுந்தாள். அதற்குள் மேலும் இரண்டு மூன்று சொட்டுக் கசிந்துவிட்டது தெரிந்தது.
சோமு முன்னால் போய்க் கொண்டு இருந்தாள். அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த நர்கிஸ்ஸிடம் “என்ன பார்க்கே?” என்று சிரித்தார். நர்கிஸ் அப்படிப் பார்த்தது அவருக்கு நெருக்கமாக இருந்தது. “வயசு ஆயிட்டுதுல்லா?” என்று சிரித்தார். “வந்திருதேன்” என்பது போல, இங்கிருந்து அங்கே வரை கையை வீசிக் காட்டினார். “போயிட்டு வாங்க” என்று நர்கிஸ் அவரைப் பார்த்துக் கும்பிட்டாள். இப்போது எதற்குக் கும்பிட வேண்டும் என்று தெரியவில்லை. கிறுக்குப் பிள்ளையாக இருப்பாள் போல இருக்கிறது.
“இதுதான் அம்மை ரூம். இருப்பு, குளிப்பு எல்லாம் கடேசி வரைக்கும் இங்கே தான்” பின்னால் வந்துகொண்டிருந்த சுந்தரத்திடம் சொன்னாள். நிலைப் பக்கம் இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு சுந்தரம் அப்படியே நின்றார். இது தான் வேணி மதினி இருந்த அறை என்று தெரிந்ததும் அவருக்கு என்னமோ போல ஆகிவிட்டது. கண்ணைக்கட்டிக் கொண்டு வந்தது. “இங்க வச்சுதான் சீவம் போச்சா?” என்று கேட்க நினைத்ததை மாற்றி, “அடங்கினது இந்த ரூம்புல வச்சா?” என்றார். சோமு தலையசைப்பதற்கு முன்பே அவர் இரண்டு கையையும் உயர்த்திக் கும்பிட ஆரம்பித்திருந்தார்.
பாத்ரூம் கதவை அகலமாகத் திறந்து வைத்தாள். சுவிட்சைப் போட்டாள். “லைட்டு என்னத்துக்கு?” என்று சுந்தரம் சொல்லும் போது “இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு அவசரமாக மறுபடி உள்ளே போய், நர்கிஸ் களைந்து போட்டிருந்த நைட்டியை உருவித் தோளில் போட்டுக்கொண்டு வந்தாள். தூத்தல் விழ ஆரம்பிக்கும் போது கொடியில் காயப் போட்ட துணிகளை உருவி, முகம் முங்கிவிடுகிற உயரத்திற்குப் போட்டபடி அவருடன் பேசுகிற வேணி மதினி நினைவு வந்தது. ராஜம்மாள் கூட அப்படியான தோற்றத்தில் நன்றாகவே இருந்திருக்கிறாள். சோமுவும் இப்போது நன்றாக இருக்கிறாள். தோளில் அள்ளிப்போடுகிற துணிகள் என்னமோ செய்துவிடத்தான் செய்கின்றன.
“அது அங்கன கிடந்தாத் தான் என்ன? நான் என்ன இங்க குடியிருக்கவா போறேன்?” என்று சுந்தரம் உள்ளே போனார். அவருக்கும் கொஞ்சம் அவசரம்தான். “நீ நிக்காண்டாம். நான் வந்திருவேன்.” என்று கதவை ஒஞ்சரித்துக்கொண்டே சத்தம் கொடுத்தார். இப்படிப் பாத்ரூமில் இருந்து வெளியே இருக்கும் ஒருவருடன் பேசி ரொம்ப காலம் ஆகியிருந்தது. அவருக்கு ராஜம்மாவைத் தேடாமல் இல்லை.
கை காலைத் துடைத்துக் கொள்வதற்கு சோமு ஒரு துண்டைப் போட்டிருந்தாள். சுந்தரம் கையில் ஒவ்வொரு விரலாகத் துடைத்துக் கொண்டே அந்த அறையையே பார்த்துக்கொண்டு நின்றார். ராமையா அண்ணாச்சி வீட்டு மேல அறையில் சன்னலோரமாக ஒரு மேஜையும் நாற்காலியும் கிடக்கும். வேணி மதினி ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்திருப்பாள். ஒரு ஆள் தாராளமாக அதில் உட்கார முடியும். சன்னலுக்கு அந்தப் புறம் இரண்டு நாரத்தைச் செடிகள் உண்டு. நாரத்தை பூக்கிற காலத்தைப் பற்றி ஒரு தடவை வேணி மதினி அவருடன் பேசிக்கொண்டு இருந்தாள். சுந்தரம் மேஜையில் கையை ஊன்றியிருந்தார். மேஜை மீது இருந்த டேபிள் ஃபேன் ஓடுகிற அதிர்வு கைவழியாகச் சுந்தரத்துக்குள் இறங்கிக் கால் பெருவிரல் நகம் வரை ஓடிக் காணாமல் போனது. அது எங்கே போயிருக்கும்?
சோமு தேடிக் கொண்டு வந்துவிட்டாள். கையில் இருந்த துண்டை வாங்கிக் கொள்வது போலக் கையை நீட்டினாள். “நான் வச்சிருக்கேன்” என்று சுந்தரம் சொன்னார். எதற்கு அதை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் இப்படித்தான் ஏதாவது தோன்றுகிறது.
நர்கிஸ் இரண்டு இருக்கை சோஃபாவில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அன்றைய தினசரியை வாசித்துக் கொண்டிருந்தாள். கண்ணாடி போட்டிருந்தாள். அவள் வெவ்வேறு ஆளாக மாறிக்கொண்டே இருப்பது போலச் சுந்தரத்துக்கு இருந்தது. இப்போது முக்கால் வாசிப் பேர் கருப்பு ஃப்ரேம் போட்ட கண்ணாடிதான் போடுகிறார்கள் போல. “பேப்பர்ல இன்னைக்கு என்ன போட்டிருக்கான்?” என்று சுந்தரம் அவள் பக்கம் உட்கார்ந்தார். தினசரியைச் சரசரப்பின்றி அதன் மடக்கு வடிவத்திற்குள் கொண்டு வந்தபின் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்த நர்கிஸிடம் “கண்ணாடி உனக்கு நல்லா இருக்கு. அப்படியே உன்னை ஒரு ஃபோட்டோ பிடிச்சு இங்க மாட்டீரலாம்” என்றார்.
சுந்தரத்துக்கு வேணி மதனியும் ராமையா அண்ணாச்சியும் இருக்கிற அந்த ஃபோட்டோ ஞாபகம் வந்தது. அவர் நர்கிஸ் பக்கம் வசமாகத் திரும்பி உட்கார்ந்து “நீ அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறியா?” என்று கேள்வியில் ஆரம்பித்தார். அதைப் பற்றிச் சொல்வதற்கு முன் தற்செயலாக சுந்தரம் அவருடைய இரண்டு உள்ளங்கைகளையும் உரசித் தேய்த்துக்கொண்டு முகர்ந்து பார்த்தார்.
இப்போது அவருடைய கிழட்டு நாயின் வாசனை தவிர, கூடுதலாக எலுமிச்சையின் வாசனையும் வந்திருந்தது. அது எலுமிச்சையின் வாசனையா நாரத்தம் பூ வாசனையா என்று திட்டமாக அவரால் சொல்ல முடியவில்லை.