
கான் ஒலி
இந்தக் கானகம்
ஒளிபொருந்திய
சூரியனால் உயிர்ப்பிக்கப்படுகிறது
தூரத்துப் புல்வெளிகளில்
உருமறையும் விலங்கின்
நகர்வில் கானகத்தின் விழிகள்
திறக்கின்றன
பறவைகளின் ஒட்டுமொத்த ஓசையையும்
விழுங்கி வீழும் அருவியில்
பறவைகள் ஒருபோதும் நீராடுவதில்லை
பகல் உச்சி
உக்கிர வெயில் விழுங்கி
இரையுண்ட முதலையாய்
மதியத்தை வெறிக்கிறது
கானகம்
காட்டு எலிகளின்
தாகந்தணிக்க
ஓடும் நீரோடையில்
மங்கிய வெளிச்சம்
புல்வெளிப் பச்சையும்
பாம்புவெளி மஞ்சளும்
ஒருசேர நெளிந்தோடும்
மலைவிளிம்பில்
மாலைநேரக்
கதிர்கள் இறங்குகின்றன
இரவு வருவதற்குள்
இருப்பிடங்களைத்
தேடியலையும்
கானுயிர்கள்
நதியில் நீராடும் ஒலி
கானகத்து மந்தகாசத்தைச்
சற்றே அசைக்கிறது
ஒரே ஒரு
குருவி மட்டும், ‘க்விக்’ .’க்விக்.’ ‘க்விக்’ என
இரவில் நிகழும்
யானைக் குளியலை
பட்டுப்போன கிளையின்
நீட்சியிலிருந்து
பார்த்துக்கொண்டேயிருக்கிறது.
****
இசைக்காத கலைஞன்
வாழறையில்தான்
இருக்கின்றன
கிடாரும்
கீ போர்டும்
பூஜை அறையில்
வீற்றிருக்கிறது வீணை
பரணில் தூங்குகின்றன
கருணாமிர்த சாகரமும்
மும்மூர்த்திக் கீர்த்தனைகளும்.
ஆரோகணத்துக்கும் அவரோகணத்துக்கும்
இடையில்
அல்லாடும் சப்தங்களை
ஜன்னல் குருவிகள் பாடுகின்றன
மீட்டாத விரல்களில்
இசையின் தாளகதி
உறைந்திருக்கிறது
சொடுக்கும் கணத்தில்
பிடித்ததைக் கொட்டும்
யூ டியூப்
அமைதியாகக் கணினி மேசையில்
இசைக்காமல்
பார்த்துக் கொண்டிருக்கிறது
யாவற்றையும்
ஆனைத் தொட்டிலின்
கிலுகிலுப்பை.
***
கோவில் தூண்களில்
ஒயில் காட்டும்
பதுமைகள்
நாதசுர ஒலியாய்
வளைநெளிகின்றனர்
சுற்றுப் பிரகார
மரங்களின் பொந்துகள்
புல்லாங்குழல்
துளைகளாக
கிளிகள் கீகிக்கின்றன
அருகிருக்கும் கடலின்
உடைதிரை ஓசை
வலம்புரியின் உட்குழிவில்
சுழன்றாடுகிறது
மேக நகர்வு எழுப்பும் ஒலி
கொடிமர உராய்வில்
குதிரைவால் மயிரிழை
வயலினாக இழைந்தோடுகிறது.
கோவில் வாயில்
வழி வந்த காற்று
பாடிக்கொண்டேயிருக்கிறது
பிச்சைக்காரனின்
துயரப் பாடலை.
***
வீடு வரும் பாதைகளில்தான்
எத்துனை இரைச்சல்
மண்டையுள்ளிருந்து குடையும்
அலுவலக மணியின் ரீங்காரம்
அசுர நாதம்
ஏரி தொடும்
மலையடிவாரத்தில்
தவழ்கிறது மலையின் பாடல்
வேனிலை அழைக்கும்
குயிலின் ஓசை
தேவநாதம்.
மந்தகாமினியின்
காதோர குழல் வளைவில்
சுழன்றோடுகிறதே
மௌனம்
அதோ
மண் தளர்த்தி
தரை பிளக்கும்
முளையின் ஒலி
என் குரல்தான்
மௌனத்தின் விடுபடல்
துளிரெழும் தருணம்
உற்சாகப் பெருக்கில்
நிசப்தங்களை உடைக்கும்
தெருவில் பாடும்
விழியற்றவனின் குரலைத்தான்
வீடு முழுதும் நிரப்புகிறேன்.
*****
வாசகசாலை பற்றி முன்பே அறிந்துள்ளேன். தற்போது வாசிக்க ஆரம்பித்துள்ளேன். கவிதைகள் வாசிப்பது பிடிக்கும். ஆனால் சிறுகதைகளை நான் மிகவும் விரும்புகிறவன். வாசகசாலையில் இந்த வாசகன் தொடர்ந்து நடக்க விரும்புகிறேன் .