“நான் சொல்லப் போறது கதை மாதிரி தோணும். நம்பக் கஷ்டமாக் கூட இருக்கும். பட், அதான் என்னோட பின்புல உண்மை” என்றார் திலகன். ரவியும் செல்வினும் புன்னகைத்துக் கொண்டார்கள். திலகன் தன் கையிலிருந்த நிறங்கெட்ட திரவத்தை மேலும் ஒரு மடக்கு உறிஞ்சியபடியே, “என்ன சிரிக்கிறீங்க..? போதையில பேசுறேன்றதால சிரிப்பா?”. அவர் குரல் மலரினும் மென்மையாய் சப்தித்தது. விடிந்தால் ரவிக்கு பெரியதோர் தொகை தேவை. செல்வின்தான் ஐடியா தந்தான். “ஏன்யா அங்கயும் இங்கயும் அலையுறே..? திலகன் ஸாருக்கு எத்தனை வேலை பார்த்திருக்க. கேளு தருவார்” என்றான். கேட்டான். வரச்சொன்னது இந்த பாருக்கு.
ரம்மியம் என்ற பேரிலான அந்த பார் குடிக்கென்றே பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் இருட்டு. இருட்டு மட்டும்தான். திறந்த கண்களுக்குத் தட்டுப்பட்டதெல்லாம் குழப்பமான தோற்றங்கள். மிக அருகே சென்று பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய பிம்பங்கள். பெரும்பாலும் அடுத்த மேசைக்கு எதுவுமே கேட்காமல் ஆங்காங்கே பேசிக்கொள்ளும் ரகசியங்கள். அந்த இரவைக் கூடியமட்டும் தங்களுடையதாக மாற்றிக்கொள்ள உத்தேசித்து வந்தமர்ந்து இருந்த மொத்த அன்னியர்கள். போதாக்குறைக்கு எங்கிருந்தோ கசிந்து கொண்டிருந்த வாத்திய இசை. மதுக் கூடத்தில் சாஸ்திரிய சங்கீத இசைக் கோவைகளை ஒலிக்க விடும் வழக்கத்தை யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ‘நிச்சயமாக அவன் ஒரு பொறுக்கி’ என மனத்துக்குள் நினைத்தார் திலகன். வாய்விட்டு அதையே சொல்லவும் செய்தார். ரவி அவரைப் பார்த்து இப்போது ஒரு கோடளவு சிரித்தான்.”அப்படி இல்லைங்க அது ஒரு முரண் சுவை சப்பாத்தியும் சாம்பாரும் ஒரு சேஞ்சுக்கு சாப்பிட்டு பார்க்கலாம் இல்லையா?”
தன் ஆட்காட்டி விரலால் துப்பாக்கி போல் செய்து நெற்றியில் சுயமாக சுட்டுக் கொண்டார் திலகன்.
“பேச்சு எங்கேயோ மாறுது” என்றபடியே மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப விரும்பினார்.
“இப்ப எனக்கு நாற்பத்தி ஏழு வயசு நான் சொல்றது 25 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. எந்த திசையில் போறதுன்னு தெரியாத பருவம். அப்ப நாங்க மதுரையில இருந்தோம். கஷ்டம் வறுமைன்னு சொல்ல முடியாது. ஆனாலும் எங்களுக்கு எப்பவுமே பணத்தேவை இருந்துட்டே இருந்தது. அப்பா இறந்து போய் மழைக்குக் கூரை இல்லாம கஷ்டப்படுற ஆடு மாடுங்களைப் போல ஆளுக்கொரு திசையில் அலைஞ்சோம். அப்பா தன் ஆகப்பெரிய கடன்களை எங்க மூணு பேருக்கும் பகிர்ந்து கொடுத்துட்டு போயிருந்தார். இன்னும் மூணு பேர் சேர்ந்தாக் கூட அடைக்க முடியாத அதிகம் அந்தக் கடனோட அளவு.” – செருமிக் கொண்டார். சப்ளையர் வந்து திரும்பும் வரை காத்திருந்தார்.
“அம்மா ஒரு பாத்திரக் கடையில் வேலை பார்த்தாங்க அக்கா ஆடிட்டர் ஆபீஸ்ல. நான் ஏரியால ஒரு ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்து இருந்தேன் எனக்கு என்ன வேலை தெரியுமா? சீனியர் ஒருத்தர் சேலைகளை எடுத்து விரிச்சு காண்பிப்பார். வந்தவங்க வாங்கினது போக மத்த சேலைங்களை மறுபடி மடிச்சு பெட்டியில் வச்சி அடுக்கணும். நான் பாவமா அந்த சேலைங்க பாவமான்னு தெரியாது. தூக்கத்தில் கூட கலைஞ்சி கிடக்குற துணிமணிங்களைத் தன்னிச்சையாக கைகள் மடிக்கும். கனவுல புடவைங்க கடலா அலையா மழையா பொங்கிப் பெருகும். எத்தனையோ தடவை தூக்கதுக்கு நடுவுல புதுத் துணி வாசம் மென்னியை முறிக்கத் தாங்கமாட்டாம எந்திரிச்சிருக்கேன்”.
சிரித்தார். பதிலுக்கு ரவியும் செல்வினும் சிரிக்கவில்லை. அது அவருக்குத் தேவையான முகபாவமாக இருந்திருக்கக் கூடும்.
“ஒரு கட்டத்துல துணிமணின்னாலே மனசு முழுக்க வெறுப்பாயிருச்சு. யாராவது கூட்டமா பொம்பளைங்க சேலை எடுக்க வந்தாலே மனசுக்குள்ள கோவம் பொங்கும். நான் நினைச்சா வேற வேலைக்கு போய் இருக்கலாம். என்ன ஒன்னு, அந்த வேற வேலை வேறுவிதமாக கஷ்டமாக இருந்திருக்கும். ஒவ்வொரு நாளும் வேலை முடிச்சி வந்து படுக்கையில சாய்றப்ப முகம் தெரியாத பொம்பளைங்க என் மூஞ்சிலேயே மிதிச்சிட்டு போனாப்ல அசந்து வரும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல். எப்படா இந்தத் துணின்ற ஜெயில்ல இருந்து விடுதலை கிடைக்கும்னு ஏங்கிட்டிருந்தேன்.
என் குடும்ப நிலைமையை விட என் சொந்த வறுமை கொஞ்சம் பெருசுதான். சம்பளத்தை அப்படியே அம்மாட்ட கொடுக்கணும். எதுனா சம்பளம் ஜாஸ்தி பண்றாங்களா அப்டின்னு ஒவ்வொரு மாசமும் கேட்பா..ஓவர்டைம் பார்த்தியே அந்தக் கணக்கு எங்கன்னு கேட்டு வாங்கிக்குவா. எல்லாத்தையும் பிடுங்கி எடுத்து கடங்காரங்க வந்ததும் பிரிச்சி பிரிச்சு அப்பாவோட கடன்களை அடைப்பா. அவளுக்கு அதென்னவோ வைராக்கியம். இதோ இப்ப குடிக்கிறதுக்கு நாம செலவு பண்றமே, இதை விட அந்தத் தொகை ரொம்பக் கம்மிதான். ஆனா, வேறொரு காலம் இல்லியா..? அது வெறும் கடன் இல்லை. எங்கப்பா எங்களுக்கு செஞ்சுட்டுப் போன துரோகம். நிரந்தரமா எங்க மூணு பேருக்கும் முன்னாடி ஊசலாடிட்டு இருந்த எங்களோட மான–அவமானம். அதைத் தீர்க்கத்தான் வருஷக்கணக்கா ஓடிட்டிருந்தோம் நாங்க மூணு பேரும்.
நாலு பேர் தூக்க வேண்டிய பல்லக்கை நாங்க மூணு பேர் சுமந்தோம். வாழ்க்கையோட கலர்ஃபுல் காலகட்டம் ஒண்ணு எனக்கு மட்டும்…எங்களுக்கு மட்டும் கருப்பு–வெள்ளையிலயே தீர்ந்து போச்சி. சின்சியாரிட்டிக்காகவே எங்கம்மா தலையை சுத்தியல் கொண்டு உடைக்கலாமான்னு ஆத்திரம் வரும். ஆனா, அப்பா செத்தப்போ என்னையும் அக்காவையும் கொன்னுட்டு தானும் செத்திடாம எங்களை வளர்த்து, அப்பாவோட அத்தனை கடனையும் அடைச்சவ அவதான். நான் ஒரு மாதிரி அம்மா பிள்ளை. நல்லதா ஒரு சட்டை கிடையாது. நாலு இடத்துக்குப் போய் வர முடியாது. நகைங்க, வாட்சு, மோதிரம் ஏன் நல்ல கடையில முடி வெட்டக் கூடப் போனதில்லை. வருசத்துக்கு ரெண்டே படம். அதும் எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்த ராமலட்சுமி டூரிங்க் டாக்கீஸ்தான். டவுன் தியேட்டர் எப்பிடி இருக்கும்னு எனக்கும் அக்காவுக்கும் தெரியவே தெரியாது. அந்த ரெண்டு படத்துக்கே என்னமோ வெள்ளைக்காரன் சுதந்திரம் தந்தாப்ல பெருமிதமா எங்களைக் கூட்டிப் போவா அம்மா. அதையே நாள்கணக்கா சொல்லிக் காமிச்சிட்டே இருப்பா. நானும் அக்காவும் பயங்கரமா சிரிச்சுக்குவம். அம்மாவோட கண்டிஷனையெல்லாம் நானும் அக்காவும் ஏன் ஒப்புக்கிட்டோம்..? அது இன்னொரு வியப்பு. ஒரு மாதிரி அடிமைப்படுறதோட சுகம் எங்களுக்குப் பழகிட்டதோ என்னவோ”
தொடர்ந்து இருமினார். ‘எங்கக்கா என்னைய நினைக்கிறாளா’ என்று முணுமுணுத்துக் கொண்டவர் மீண்டும் ஒரு பாட்டில் பார்லி திரவத்தைக் குளிரோடு கேட்டு வாங்கினார். “சட்னு தூங்கி எழுந்திருக்கப்ப பணக்காரங்களாயிட்டா எப்டி இருக்கும்னு அடிக்கடி கேட்பேன் அக்காகிட்ட. அவ சொல்லுவா க்ராஜூவலா ஏறினாத்தாண்டா உயரம் இனிக்கும். சட்டுன்னு மாறினா ஒட்டாதுன்னுவா. பாம்பு சட்டையை உரிக்கிறாப்ல அத்தனை கஷ்டத்தையும் உதிர்த்திட்டுத்தான் செல்வந்தத்தை அணியனும்னுவா. அது அவளோட தியரி. நெறைய வாசிப்பா செண்டிரல் லைப்ரரில இருந்து தடிமனான புஸ்தகங்களை எடுத்துட்டு வருவா. அம்மா அதுக்கு மட்டும் திட்ட மாட்டா. இரவல் தானே..விலைக்கு வாங்கலையேன்றதால கூட இருக்கலாம்.
ஒரு நா ராத்திரி நல்ல மழை கரண்ட் இல்லை அம்மா அடிச்சு போட்ட மாதிரி தூங்குறா. நானும் அக்காவும் ஜன்னல் பக்கத்துல நின்னுகிட்டு ரொம்ப நேரம் மழையை வேடிக்கை பாத்துட்டு இருந்தோம் ரொம்ப சன்னமான குரலில் பேசிக்கிட்டே இருந்தோம். என்னென்னவோ பேசுனோம். அக்காவை பத்தி எனக்குத் தெரியாத பல விஷயங்களை அன்னிக்கு தெரிஞ்சுக்கிட்டேன். சரித்திர காலத்ல ராணியுடைய உற்ற தோழிக்கு அவ சம்மந்தப்பட்ட அத்தனை ரகசியங்களும் தெரியும்தானே.? அப்படித்தான் எனக்கும் அக்காவோட உலகம் முழுவதுமாத் தெரிய வந்தது. அக்கா வேலை பார்க்கிற இடத்தில் பழக்கமான ஒருத்தர காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவர் ஆந்திராக்காரர். தமிழ் கொஞ்சித் தான் பேசுவார்.
அக்கா கெளம்பிப் போனது தெரிஞ்சு அம்மா ஒண்ணுமே சொல்லல. அல்லும் பகலும் அரும்பாடுபட்டு ஈட்டுற பணத்தை, வந்து வந்து வாங்கிட்டுப் போற பல கடங்காரப் பசங்களைக் கூட கோபம், ஆத்திரம், வெறுப்பு, விரக்தி, எரிச்சல்னு எந்த உணர்ச்சியும் காட்டாமத்தான் டீல் பண்ணுவா.ஒரு மாதிரி ஏளனத்துக்கு முந்தைய புள்ளியில நிரந்தரமா உறைஞ்சிருக்கும் அவளோட முகம். கடன் முழுசும் முடிஞ்சதும் அவனுங்க கொழஞ்சி நன்றி சொல்லும் போது கூட நன்கொடை தந்த வள்ளல் மாதிரி கம்பீரத்தோட அம்மா முகம் சுடர்ந்திருக்கும்.
நான் ஒரு மாதிரி அம்மா புள்ள. அவதான் என்னை வளர்த்தவ”
‘போரடிக்கிறேனா’ என்று சம்பிரதாயமாகக் கேட்டார். ரவியும் செல்வினும் இல்லை என்றாற் போல் தலையசைத்ததை கவனித்தாற் போல் தெரியவில்லை.
“நான் சொல்ல வந்த கதை இன்னும் இருக்கு. அக்கா கல்யாணம் ஆன மறுநாள். அம்மா என்னைக் கூப்பிட்டா. கையில மடிச்சாப்ல காகிதம் ஒண்ணு. அழப்போறா..கத்தப்போறான்னு என் ஆயிரம் யூகங்களை தவிடு பொடியாக்குறா. இதைப் படின்னு எங்கிட்ட நீட்டுறா. மனசு நடுங்குது. நீயே சொல்லும்மான்றேன். ச்சீ…படிறான்னா அப்டின்னு அதட்டுறா. அம்மா பயங்கர ஸ்ட்ராங்க் அப்டின்னு நினைச்சிட்டே அந்தக் கடிதாசியை பிரிக்கிறேன்.
‘மனசுக்கு பிடித்தவரோடு வாழப் போகிறேன். மாதா மாதம் தொடர்ந்து கடனடைக்க மணியார்டர் அனுப்புவேன்.’
அவ்ளோதான். அன்புள்ள அம்மாவுக்கு அப்டின்னு ஆரம்பிக்கல. இப்படிக்கு அப்டின்னு கையெழுத்து போடலை. ஜஸ்ட் டூ லைன்ஸ். அவ்ளோ தான். சிம்பிள். இதுக்கப்புறம் அம்மா சொன்னதுதான் ஹைலைட். இதைக் கூட உனக்குக் காட்டிட்ருக்க மாட்டேன். அவ போயிட்டான்னு நீ உன் பங்கை கட் பண்ணிடக் கூடாதில்லையா.. அதான் காட்ணேன் அப்டின்னாளே பார்க்கலாம். கண்ணாடியை சரி பண்ணிட்டு ரூமுக்குள்ள போயிட்டா.
பணம் இருக்குறப்போ அதோட மதிப்பைவிட இல்லாதப்போ பலமடங்கு அதிகம். இன்னும் ஈசியா சொல்றேன் தூரத்திலிருந்து பார்க்கிறப்போ ஒரு கிணறு..அதோட உருவம் நமக்கு ஒரு சைஸ்ல தெரியும். அதையே எட்டிப் பாக்குறப்போ..? இறங்கி பார்க்கிறப்போ..? அது பூதாகரமாக மாறும் இல்லையா? அப்படித்தான் பணத்தோட முகமும்.
அல்மோஸ்ட் எல்லாக் கடனையும் தீர்த்தாச்சி. இன்னும் ஒரிரண்டு மாசங்கள்ல நான் துணி மடிக்கிற வேலையை விட்டுட்டு சென்னை, பம்பாய்னு போகலாம்ன்ற முடிவுல இருந்தேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. என்னவோ காய்ச்சல். வீட்ல இருந்ததே இல்லை. ரெண்டு மூணு நாளா சுருண்டு படுத்திட்டிருந்தா. நான் வேலை பார்த்த ஜவுளிக்கடையில் பொங்கலுக்கு மட்டும்தான் லீவு தருவாங்க. எங்க ஓனர் சைட்ல நெருங்குன சொந்தத்ல எதோ மேரேஜ்னு ரெண்டு நாள் கடை லீவு. எதிர்பாராமக் கிடைச்ச ஆனந்தம். எனக்கு எங்க போறதுனு தெரியலை. ஏப்ரல் 10 ஆம் தேதி 1998 ஆம் வருஷம். நல்லா நினைவிருக்கு. அம்மா சாவுறதுக்கு நாலு நாள் முந்தி. அதெப்படி மறக்கும்..?
கிடைச்ச பஸ்ல ஏறி அரசரடி டர்னிங்குல எறங்குறேன். எதுத்தாப்ல சோலமலை தியேட்டர் வாசல்ல பயங்கரக் கூட்டம். கமல் பிரபுதேவா சேர்ந்து நடிச்ச படம். பாட்டெல்லாம் அதிரி புதிரி ஹிட். எறங்கி நாலெட்டு நடக்குறேன் என்னவோ கனம் குறைஞ்சாப்ல பாண்ட் பாக்கெட்ல இருந்த பர்ஸைக் காணம். அடப்பாவிங்களா..எங்கிட்ட என்ன பெரிசா இருந்திடப் போவுது. நாலஞ்சு பத்து ரூபா இருந்திருந்தா அதிகம். அழுகை வர்றாப்ல ஒருமாதிரி மயக்கத்துக்குப் பக்கத்ல போய்ட்டேன். கால் செருப்பு வேற பிஞ்சிபோச்சி. கொதிக்கிற வெய்யில். அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாம சட்டுன்னு மூத்திரம் வந்திருச்சி. ஜெயில் ரோடு ஆரம்பத்துல ஒரு கட்டணக் கழிப்பறை.வாசல்ல ஒரு தாத்தா மட்டும் சத்தமா ரேடியோ வச்சிக் கேட்டுட்டு இருந்தாரு. இடது பாக்கெட்ல இருந்து இருந்த சில்லறையெல்லாம் சேகரிச்சு டேபிள்ல வச்சிட்டு உள்ற போறேன். யாருமே இல்லாத இடத்ல மனுஷன் ஈஸியா கலங்கிருவான். சப்தம் வராம லேசா அழுதேன். அப்பத்தான் என்னைத் தாண்டி ஒருத்தன் உள்பக்கமா போறதைக் கவனிக்கிறேன். பருமனா உடம்புக்கு பொருத்தமில்லாத மெல்லிசான பூப்போட்ட சட்டை, கழுத்தில் நாலஞ்சு தங்க சங்கிலி. கக்கத்துல ஒரு லெதர் பேக்.”
மிச்சமிருந்த பானத்தை அனேகமாக முழுவதும் நுரைபொங்கத் தன் குவளையில் வார்த்துக் கொண்டு மடக்கு மடக்காகக் குடித்தார். தட்டில் இருந்த வெள்ளரித் துண்டுகளில் சிலவற்றை எடுத்துக் ‘கர்ரக்..கொர்ரக்’ என சப்தமாகத் தின்றார்.
“எனக்குள்ளே என் சந்ததியில் எப்போதோ நிகழ்ந்த ஒரு பிழை மறுபடியும் உயிர்த்தாப்ல ஆழத்ல ஒரு குரல் கேட்டுது. ‘விடாத திலகன்…இப்போ முடியாட்டி எப்பவுமே முடியாது.இவன்தான் உன்னக் கரையேத்த வந்த தேவதூதன்..கமான்…கமான்’. எங்கிருந்தோ வந்த ஆத்திரத்தில் அவனை அப்படியே மூத்திர பிறையில் கீழே தள்ளி
.
.
.
நாலு
அஞ்சு
ஆறு
ஏழு
தொடர்ந்து மிதிக்கிறேன். மயங்கிப் போறவரைக்கும் மிதிச்சு அவனோட பையை மட்டும் எடுத்து என் பேண்டுக்குள்ள செருகிக்கிட்டு எதுவுமே நடக்காத மாதிரி வெளியேறி ரோடு கிராஸ் பண்ணி சோலமலை தியேட்டர் வாசலுக்குப் போனேன். கத்தையான ரூவா நோட்டுக்கள்லேருந்து ஒரே ஒரு 100 ரூவாயை எடுத்தேன். பையை மறுபடி பத்திரம் பண்ணிக்கிட்டேன். அஞ்சு ரூபா டிக்கெட் நாப்பது ரூபா பிளாக்கில் வாங்கிட்டு நேரா உள்ள போயிட்டேன்.
மறுநாள் பேப்பர்ல ‘கழிவறையில் வியாபாரியிடம் பணம் பறித்த அடையாளம் தெரியாத திருடன். போலீஸ் தேடுகிறது’ அப்படின்னு படிச்சேன். நடந்த நிஜம் பேப்பர்ல கூடுதலா ஜோடனையோட வந்திருந்தது. எனக்கு அவனோட முகம் கூட ஞாபகம் இல்லை. அஃப்கோர்ஸ், அதை நான் சரியாப் பார்க்கவே இல்லை. அவனுக்கும் எனக்கும் ஒரே ஒரு பகை தான் அது பணம். என்கிட்டே இருந்த கடைசி சொற்பத்தை நான் அப்பத்தான் இழந்திருந்தேன். அப்ப என் முகத்துக்கு முன்னாடி அவன் தன்னோட பணத்தை டிஸ்ப்ளே செஞ்சதுதான் அவனோட தப்பான்னு தெரியலை. ரொம்ப நாளா ஜீரோல இருந்த என் கையிருப்பு மாறி முதன்முதலா ஒரு லம்ப்ஸம் தொகை கைக்குக் கிடைச்சது அப்போதான். அங்கேயிருந்து தொடங்கி எத்தனையோ ட்ராவல் பண்ணி இன்னிக்கு வரைக்கும் வந்தாச்சு.”
பெருமூச்சு விட்ட திலகன் சோகையாக சிரிக்க முயன்றார். தன் முன் இருந்த இருவரின் கண்களிலும் எதாவது பின்னூட்டம் தெரிகிறதா என்று தேடினார்.
“அந்த ஒரே ஒரு தப்பு. அதுதான் என் தொடக்கம் அதோட நிழல் இன்னும் நீண்டுகிட்டே இருக்கு. அதோட வாசனை என்னை விட்டுப் போகவே இல்லை. இப்பக் கூட அவனோ, அவனைச் சேர்ந்தவங்களோ என்னை தேடிட்டே இருக்காங்க, வரப்போறாங்கன்ற பயம் இருக்கத்தான் செய்யுது.” ஓங்கிக் குரலெடுத்து இருமியவர், “இத பாரு செல்வின்…இந்தக் கதையை எங்கிட்டேருந்து தெரிஞ்சுகிட்ட நீயோ ரவியோ கூட அது என் அப்பாதான்.. சித்தப்பாதான்.. மாமாதான்.. ஆசான்தான் அப்டின்னு மறைச்சி வச்சிருக்கிற துப்பாக்கியை எடுத்து ‘டுமீல்’னு சுட்டாக் கூட ஆச்சரியம் வராது எனக்கு.” எழுந்து தன் கைத்துண்டை எடுத்து முகமெல்லாம் துடைத்துக் கொண்டார்.
“ஆனா, அதெல்லாம் நடக்காது” – மெல்லக் கண் மூடித் திறந்தவர், “ஏன்னா, எந்த ஒரு கதையும் யார் இஷ்டப்படியும் நடக்குறதில்லை”
பாக்கெட்டில் கைவிட்டு ஒரு கவரை எடுத்தார். “ ரவீ… இந்தா, நீ கேட்ட பணம். திருப்பி எல்லாம் தர வேண்டாம் வச்சிக்க”. என்றவர் சின்னதாக மௌனித்து விட்டு “ஏன்னா, இதும் என்னோடது இல்ல”
மெல்லத் தயங்கித் தயங்கி வெளியே போனார். காத்திருந்த அவருடைய டிரைவர் அவரைக் கைத்தாங்கலாக காரில் ஏற்றி உட்காரவைத்தான். ஏளனத்துக்கு முந்தைய சிரிப்பொன்றை உதடுகளில் உறைய வைத்துக் கொண்டு கடந்து போனார் திலகன் .
ரவி நிம்மதியாக பெருமூச்சு விட்டான். “போதையாய்ட்டாப்ல….எங்க பணத்தை நாளப்பின்ன தரேன்னு சொல்லிடுவாரோன்னு பயந்திட்ருந்தேன்” என்றான்.
“அதெல்லாம் கன் மாதிரி கொடுத்திடுவார்” என சிரித்த செல்வினிடம், “ஏன் மச்சி செம த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் இல்ல அவரோடது” எனக் கேட்க, “ ரவீ…எனக்கு வேற ஒரு மர்டர் ஸ்டோரி சொன்னாப்டி ரெண்டு மாசத்துக்கு முன்னாடி. அதுலயும் அவங்க அம்மா பத்தி சொன்ன போர்ஷன் மட்டும் அப்டியே இருந்திச்சி.” என்றவன் டூவீலரை உதைத்துக் கொண்டே “உனக்கு சொன்ன கதையை மட்டும் நீ நம்பு.போதும்” என்றான்.
*******
சார் ‘கதை’அருமையான கதை. வாழ்த்துகள்…