எலக்ட்ரானிக்ஸ் சிட்டி டோல் கேட் கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் ஒரு வாரமாகப் பதிவாகி வந்தது . தினமும் ஒழுக்கமாக இரவு மூன்றரை மணிக்கு டோல்கேட்டை கடந்து சென்றது சிறுத்தை. சில சமயம் நின்று கேமராக்களுக்கு போஸ் கொடுத்தது. தூரத்திலிருந்த டோல்கேட் பூத்துகளைப் பார்த்துவிட்டு அது மெதுவாக நடந்து சென்ற போது எந்த வித பதட்டமோ, அச்சமோ இருந்ததாக தெரியவில்லை. கேமராக்களில் நிழல் போலத் தெரிந்தாலும் இருட்டில் ஜொலிக்கும் கண்கள் அதனை அடையாளம் காட்டின. பெங்களூரின் ரோடுகளில் மாடுகளைப் போல சிறுத்தைகள் நடமாடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னமும் ஆணேகல், ஜிகனி போன்ற பகுதிகளில் காணப்பட்டதாக செய்தி உண்டு. காவல்துறையினரின் ஆணைப்படி டோல்கேட் கம்பெனியினர் காவலர்களை அதிகப்படுத்தியதோடு, இரவு பத்தரைக்கு மணிக்கு மேல் நான்கு கேட்டில் மூன்றை மூடி ஒன்றை மட்டும் திறந்து வைத்து பணி ஆட்களையும் குறைத்தனர். கன்னட தொலைக்காட்சிகளில் தலைப்பு செய்தியாக சிறுத்தையின் வரவு ஒரு இரண்டு நாட்கள் ஓடியது. நிறைய பேர் சிறுத்தையைப் பார்த்ததாக சொன்னார்கள். கோணப்பன அக்ராஹாரா, ஹெப்பகோடி, பொம்மசந்திரா வரைக்கும் சிறுத்தையைப் பார்த்ததாக கண்சாட்சிகள் சொன்னார்கள். தொலைக்காட்சிகள் சிறுத்தைக்கு “மஞ்சு” என பெயர் கூட சூட்டினர். மஞ்சு, மஞ்சுநாத்தின் சுருக்கம். மனிதர்களைப் பார்த்து பயமில்லாமல் தான்தோணியாக சுதந்திரமாத்க திரியும் கம்பீரமான சிறுத்தைக்கு “மஞ்சு” உகந்த பெயரென்ன அவை நினைத்திருக்கலாம்.
சினிமா ஸ்டார் ஒருவர் மீது கற்பழிப்பு முயற்சி புகார் எழுந்த பின் தொலைக்காட்சிகளின் கவனம் மஞ்சுவை விட்டு மாறுவதற்கு முன்பு சிறுத்தைகளைப் பற்றி தொலைக்காட்சி ஞானிகள் கொடுத்த விவரங்கள் சுவாரஸ்யமானவை. புலிகள், சிங்கங்களை போல அல்லாமல் சிறுத்தைகளுக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் இருக்கிறதாம். பூர்வஜர்கள் வேட்டையாடிய நிலங்களில் இப்போது ஐம்பது மாடி குடியிருப்பு முளைத்தாலும் மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கு வேட்டையாட வருமாம். இதற்கு சாட்சியாக வெள்ளைக்காரன் பன்னேரு கட்டாவிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் வேட்டையாடிய ஆவணப் படங்களை காண்பித்தனர். இறப்பிற்கு பின் ஆன்மா உடலை விட்டு வேறுடல் தஞ்சம் புகுவது நிஜமென்றால் சிறுத்தையின் மூதாதையர்கள் சிறுத்தையாகத்தான் பிறந்திருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஞானிகளின் வாக்கு உண்மையென்றால் சிறுத்தை இனத்திற்கே தனி பகாலி வழிபாட்டு முறை இருக்க வேண்டும். அந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களுக்கு மறுஜென்மத்திலும் ஒரே இனமாக பிறப்பதற்கான உத்திரவாதம் இருக்கவேண்டும். எது எப்படியோ ஒன்று மட்டும் நிச்சயம், பண்னேருகட்டா மற்றும் அதன் அக்கம் பக்கம் இருக்கும் பகுதிகள் காடாக இருந்த போது சுதந்திரமாகத் திரிந்த சிறுத்தைப் புலிகளின் வேட்டை நிலங்களில் இப்போது சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கழுத்தில் ரேடியோ சிப் பொருத்தப்பட்ட அடையாள அட்டையை கட்டிக்கொண்டு நில வேட்டையில் திரிகிறார்கள்.
எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை ஒட்டியிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் சிறுத்தையைப் பற்றி அதிகம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை, குறைந்த பட்சம் பகலில். இரவில் வேறு விஷயம். டோல்கேட்டை ஒட்டியிருக்கும் ஹெப்பகோடி பகுதி, வட சென்னையை நினைவூட்டும் நெரிசலும் ஜன நடமாட்டமும் கொண்டது. கன்னடிகர்கள் அதிகமாய் வாழும் பகுதியில் தமிழர்கள் மீது ஒரு வித ஊமை எதிர்ப்பு இருந்தது. “கொங்கணத்தவரூ” என்பது தமிழருக்கு பொதுவாக கொடுக்கப்படும் புனை பெயர். கொங்கு நாட்டிலிருந்து வராவிட்டாலும் எல்லா தமிழர்களுக்கும் ஒரே பெயர்தான். இந்தப் போக்கை மாற்றுவதற்காக நம்மவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. நம்மூரிலேருந்து குடிவந்தவர்களிடம் கன்னடத்தில் எதாவது கேட்டால், “நீகு டமில் பர்தா?” எனக் கேட்டு நிலைமையை இன்னும் மோசமாக்கி விடுகின்றனர்.
கர்நாடக வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க டோல்கேட் பக்கத்தில் இருக்கும் புதர்களில் கூண்டு அமைத்தனர். கூண்டினுள் ஆடு ஒன்றைக்கூட கட்டினர். சிறுத்தை பிடிபடவில்லை என்றாலும் பரவாயில்லை; காலையில் ஆடு காணாமல் போனது. டோல்கேட் பக்கத்தில் இருக்கும் கசாப்பு கடையில் தொங்குவதாக தகவல். “ஓனோ குத்தே கே லியே ஆத்தா, ஜின்கெகெ அல்லா ” என்றார் காதர் கான். உருது, கன்னடம் இரண்டும் தெரிந்தால்தான் அவர் சொன்னது “அது நாய்களுக்காக வருகிறது; மான்களுக்காக அல்ல” என்பது புரியும். கூண்டினுள் கட்டியிருப்பது மான் அல்ல; ஆடு என கானிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை. “அறே பிடோ, மானு ஆடு வித்யாசமில்லா” என சொல்லிச் சிரிப்பார்.
காதர் கான் ஆட்டோ ஓட்டுநர். ஓசூர் பெங்களூர் ரோடு இரு வழி பாதையாக இருந்த போதிலிருந்தே ஹெப்பாகோடி பகுதியில் வசித்து வந்தவர். சாப்ட்வேர் கம்பெனிகள் தெற்கு பெங்களூரின் பெரிய பகுதிகளை விழுங்க ஆரம்பித்தவுடன் துவங்கிய பெரு மாற்றங்களில் முதல் படியாக கானுக்கு சொந்தமான 30×40 அடி நிலத் துண்டை ஓசூர் பெங்களூர் நான்கு வழி பெருவீதிக்கு இழப்பீடின்றி இழந்தார். பெருவீதி வந்தவுடனேயே கூடுதல் நூறு பேருந்துகளை களம் இறக்கிய சாப்ட்வேர் கம்பெனிகள், மீண்டும் முன்னேற்றம் இல்லை என கூச்சல் போட ஆரம்பித்தனர் . ஐரோப்பிய, அமெரிக்க கஸ்டமர்கள் பெங்களூருக்கு வரும்போது இப்படியா பிற்போக்குத்தனத்தை காட்டிக்கொள்வீர்கள் என சர்காரை சாடினார். நான்கு வழி பெரு வீதி போதாது நவீனத்துவத்தின் அடையாளமாக குறைந்தது மெட்ரோ அங்கு வர வேண்டும் என கூச்சலிட்டு தங்களுக்கென்றே பிரத்யேகமான மெட்ரோ ஸ்டேஷன்களை அமைத்து கொண்டனர். பெரு வீதிக்கு தாரை வார்த்து கொடுத்து, மீதமுள்ள நிலத்தையும் மெட்ரோவிற்கு இழந்து விட்டு இப்போது ஹெப்பகோடியை விட்டு ஓசூர் சாலையிலேயே இருக்கும் வீரசந்திராவில் இரண்டு அறைகள் கொண்ட வாடகை வீட்டில் தன் இரண்டு மகன்கள், மருமகள்கள் மூன்று பேத்திகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கான்.
காதர் கான் வீரசந்திராவில் ஒரு மித புள்ளி. ஹெப்பகோடி பகுதியில் வெகு நாட்களாக வசித்துவிட்டு இங்கு வந்ததால் அக்காலத்து கதைகளை நிறையச் சொல்வார். தான் திப்பு சுல்தானின் பரம்பரை என அனைவரிடமும் சொல்லிக்கொள்வார். அதற்க்கு அடையாளமாக ஆட்டோவின் பின்புறம் திப்பு புலியுடன் சண்டையிடும் படத்தை ஒட்டியிருந்தார். வீரசந்திராவிற்கு இடம் மாறினாலும் ஆட்டோ ஸ்டாண்டு ஹெப்பகோடியில்தான் இருந்தது. மீட்டர் போடாமல் ஹெப்பகோடி ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து அதிகபட்சம் பொம்மனஹள்ளி வரை பயணிகளை எற்றிச்சென்று, நிர்ணயித்த வாடகையுடன் திரும்பி வர அரை வாடகையையும் கூடுதலாக வசூலிப்பார். பொம்மனஹள்ளிக்கு மேல் போனால் வெள்ளை போலீசிடம் சிக்கும் அபாயம் இருந்ததால் அதற்கு மேல் டபுள் சார்ஜிலும் போக மாட்டார். இருந்தாலும் தினமும் குறைந்தபட்சம் நான்கு ஐந்து வாடிக்கையாளர்கள் கிடைத்து விடுவார்கள். சாப்ட்வேர் கம்பெனியை சேர்ந்தவர்கள் என்றால் கூடுதல் உற்சாகம், அவர் வைத்ததுதான் வாடகை, “என் ஜமீன் எடுத்தாங்கோ, தப்பில்லா” என்பது அவர் தரப்பு வாதம்.
அன்று மாலை சுமார் எட்டு மணியளவில் வழக்கமாக ஆட்டோவில் உட்கார்ந்து பொழுதைப் போக்கி கொண்டிருந்த காதரிடம் ஒரு பெண் ஓடி வந்து “கோர மங்களா” என்றாள். அவள் முகத்தில் பதட்டம் தெரிந்தது. வழக்கமாக அத்தகைய வாடிக்கையாளர்களுக்குகாகவே காத்திருக்கும் கான் , பொம்மனஹள்ளியை தாண்டிப் போகவேண்டும் என்பதாலும், சில்க் போர்டு சந்திப்பை இந்நேரத்தில் கடந்து செல்வதற்குள் விடிந்துவிடும் என்பதற்காகவும் “வராது” என்றார்.
“தும்ப அவசரா..” என கன்னடத்தில் ஆரம்பித்து “ரொம்ப அவசரம், என் பொண்ணு தனியா இருக்கா, பயந்து போன் பண்ணா. கம்பெனி பஸ் கிளம்பி போயிடுச்சு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, ப்ளீஸ். டபுள் சார்ஜ் வேண்ணாலும் கொடுக்குறேன்” என அழாக்குறையாக சொன்ன பெண்ணின் குரலில் அவலம் தெரிந்தது.
“இல்லா…….டிராபிக் ஜாஸ்தி….” என மழுப்பினார் கான்.
“சரி…” என்ற அந்த பெண் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ரோடோரம் போய் நின்று கொண்டு, இடது கை கட்டை விரலை மேலும் கீழுமாக ஆட்டி, போய் வரும் வாகனங்களிடம் லிப்ட் கேட்பதைப் பார்த்தார் கான். இந்த நேரத்தில் தனியாக ஒரு பெண் தெரியாதவர்களுடன் போக தயாராகிருந்தால் நிலைமை நிச்சயமாக கை மீறி போயிருக்க வேண்டும் எனத் தோன்றியது கானுக்கு.
ஆட்டோவை ஸ்டார்ட் செய்து அவள் பக்கத்தில் சென்று,
“பெட்டோ. எங்கே போகணும்?” என்றார்.
“கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன் கிட்ட” என்றாள்
“ஏழு நூறு ஆகத்தே” என்றவர், கை செய்கை காட்டி “செவன் ஹண்ட்ரேட்” எனவும் தெளிவாகச் சொன்னார். என்னதான் அவசரமென்றாலும் தொழில் தர்மத்தை மறக்க கூடாது என்பது அவர் கொள்கை.
ஆட்டோவை ஹெப்பாகோடி தாண்டி எலக்ட்ரானிக்ஸ் சிட்டி டோல் பூத் வாயிலாக வாராவதியின் மேல் வேகமாக ஓட்டினார். பின்னால் உட்கார்ந்திருந்த பெண் போனில் அவள் குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“அழாதடி குட்டி, இதோ வந்துகிட்டே இருக்கேன்” என்றாள்.
அவள் பேசிக்கொண்டிருந்தது கானுக்கு தெளிவாகப் புரிந்தது. இரண்டு நாட்களாகவே சிறுத்தை தன்னை கவ்விக்கொண்டு போய்விடும் என்ற பயத்தில் இருந்த குழந்தை இன்று பயம் அதிகமாகி அடக்கமுடியாமல் அழத் தொடங்கி இருக்கிறாள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அழுததால் பயந்து போய் குழந்தையின் அம்மாவிற்கு போன் செய்திருக்கிறாள் குழந்தையின் ஆயா. கானுக்கு விஷயம் புரிந்தவுடன், “நீங்கோ ஏன் குழந்தையை தனியாக பிட்டு வந்தீங்கோ? ஓனோ பாச்சா சோ டர் கயா” என்றார்.
“சரி கொஞ்சம் சீக்கிரம் ஓட்டுங்க” என்றாள் பெண்.
சில்க் போர்டு சந்திப்பு நல்லவேளையாக அதிகம் நெரிசல் இல்லாமல் இருந்ததால் அதனைக் கடந்து கோர மங்களா மசூதியைத் தண்டி அடுத்த சந்திப்பில் வலது புறம் திரும்பி புறவர் ஜான் மருத்துவமனையைத் தாண்டி சென்று ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் வாயிலை அடைந்தார். செக்யூரிட்டி கேட்டிலேயே ஆயாவின் இடுப்பில் உட்கார்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தது குழந்தை. அழுது அழுது கண்கள் சிவப்பாகியிருந்தன. அம்மாவைப் பார்த்ததும் இரண்டு கைகளை உயர்த்தி அம்மாவை அனைத்துக் கொண்டது. கையிலிருந்த கைப்பையை கூடத் தவற விட்டு குழந்தையை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் அந்தப் பெண். ஒரு நிமிடம் எல்லாவற்றையும் மறந்து பார்த்து கொண்டிருந்தார் கான். அம்மாவும் குழந்தையும் சுதாரித்து கொண்ட பின், தன் கையிலிருந்த பையை எடுத்து இரண்டு ஐநூறு ருபாய் நோட்டை கொடுத்து “தேங்க்ஸ்” என்றாள். கானிடம் கையில் ஒரு நூறு ருபாய் நோட்டுதான் இருந்தது. பக்கத்தில் ஏதாவது கடைகள் இருக்கிறதா என பார்ப்பதற்குள் குழந்தையை வீட்டிற்குள் கூட்டிச்சென்று மறைந்தாள் அந்தப் பெண்.
வீட்டிற்கு திரும்பும் போது அந்த குழந்தையும் அம்மாவும் கட்டி அழும் படிமம் அவர் கண்களிலேயே இருந்து. வீடு திரும்பும்போது பத்தரை மணி ஆகிவிட்டது. அவருக்கு வழக்கமான ரைஸ் பாத் சிக்கன் கரி முடித்துவிட்டு கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டு மொட்டை மாடியில்தான் அவருக்கு தினமும் படுக்கை. அன்று படுக்கச் சென்ற போது நிலவில்லா ஆகாயத்தை வெகு நேரம் பார்த்திருந்தார். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தார்.
**
கானின் கடைசி பேத்தி ஹபீபா நாய்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நாய் குட்டி தவ்வி தவ்வி ஓடியது அதன் பின் குழந்தை ஓடினாள். பிறகு நாய் குட்டி ஹபீபாவைத் துரத்தியது. இருவரும் அன்னோன்னியமாக விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தை குட்டியை எடுத்து மடியில் வைத்து கொண்டு தடவிக் கொடுத்தாள், காதுகளை இழுத்தாள், நாய் குட்டி வேடிக்கையாக குழந்தையின் கை விரல்களைக் கவ்வியது. ஹபீபா விரலை வாயிலிருந்து எடுத்து மீண்டும் விரல்களினால் குட்டியின் மூக்கைச் சீண்டினாள். நாய் குட்டி விரலை மீண்டும் கவ்வியது ஆனால், இப்போது கெட்டியாக பற்றி கொண்டது. முதலில் விரலை மீட்க முயன்ற ஹபீபா இப்போது வலியினால் அழ தொடங்கினாள். அழுகை அதிகமானது. “ஆ” வென அலறினாள்.
நாய் குட்டி மெதுவாக உருமாறத் தொடங்கியது, பற்கள், வால், ஜொலிக்கும் கண்கள். நாய்கள் ஊளையிடத் தொடங்கின. சிறுத்தையின் கரும் தோற்றம் தெளிவானது. சிறுத்தை இப்போது விரலை விட்டுவிட்டு குழந்தையின் கழுத்தைப் பற்றி கொண்டு குழந்தையை புதர்களுக்குள் இழுத்து செல்லத் தொடங்கியது. ஏதோ கத்த நினைத்து வார்த்தை வரவில்லை. நிலா வெளிச்சத்தில் சிறுத்தையின் ஜொலிக்கும் கண்களுக்குள் கானின் கண்கள் நோக்கின. அக்கண்களுள் காதர் கானின் உருவம் தெளிவாகத் தெரிந்தது. மெதுவாக சிறுத்தை வாயைத் திறந்து குழந்தையை விடுவித்தது. அத்தருணத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் இனம் கண்டுகொண்டனர். இருவரும் புலம் பெயர்க்கப்பட்டவர்கள்.