தொடர்கள்

கட்டற்ற வெளி – 2

கி.ச.திலீபன்

குளித்து முடித்து விட்டு உடை மாற்றினேன். இது போன்ற நெடுந்தூர பயணம் மேற்கொள்கையில் சந்திக்க நேரும் சிக்கல் என்னவென்றால் பயணக்களைப்பு உடலை சோர்வாக்கியிருக்கும். ஓய்வெடுக்கலாம் என்றால் ஊர் சுற்றும் பேராவல் எங்காவது நம்மை விரையத் தூண்டிக் கொண்டே இருக்கும். விடவும் முடியாத தொடவும் முடியாத அவஸ்தை அது. அந்த அவஸ்தையோடுதான் ஷூவை மாட்டிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தேன். அங்கிருந்தவரிடம் சாரநாத் செல்வதற்கான பேருந்துக்கு எங்கு செல்ல வேண்டும்? என்று கேட்டேன். மெல்லச் சிரித்தபடியே அவர் “பஸ்ஸா… அதெல்லாங் கிடையாது பாஸ்… கார்னர்ல போய் நின்னா ஷேர் ஆட்டோ வரும்” என்றார். சாரநாத் போய்விட்டு மாலையிலிருந்து இரவு வரையில் காசியில் சுற்றித் திரிய வேண்டும் என்கிற என் திட்டத்தை அவரிடம் சொன்னேன். ஆறு மணிக்கெல்லாம் கங்கைக் கரைக்கு வந்து விடும்படி சொன்னார். 06.30 மணிக்கு கங்கா ஆர்த்தி தொடங்கும். கங்கைக்கரையின் படித்துறையில் நின்றபடி கங்கைக்கு தீபாராதனை செய்யும் நிகழ்வுதுதான் கங்கா ஆர்த்தி. நாள் தவறாமல் மாலை கங்கா ஆர்த்தி நடைபெறும். கங்கையில் வெள்ளம் வந்து படித்துறை முழுவதும் மூழ்கினால் கூட அதன் விளிம்பில் நின்று ஆர்த்தி காட்டுவார்கள். காசிக்கு வருகிறவர்கள் அவசியம் கங்கா ஆர்த்தியைப் பார்த்தே ஆக வேண்டும் என்றார்.

நான் ஷேர் ஆட்டோ ஏறி சாரநாத் நோக்கிப் பயணப்பட்டேன். காசியிலிருந்து சாரநாத் 12 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இடையில் ஓரிடத்தில் இறங்கி இன்னொரு ஷேர் ஆட்டோ மாற வேண்டும். நான் ட்ரைவருக்குப் பக்கத்தில் கிடைத்த கொஞ்ச இடத்தில் உடலின் ஒரு பகுதியை வெளியே விட்டபடி அமர்ந்திருந்தேன். வேடிக்கை பார்ப்பதை விட மகத்தான் செயல் வேறென்னவாக இருக்க முடியும்? என் கண்ணுக்குச் சிக்கிய எல்லாவற்றையும் பார்த்தேன். காசியின் நகரத் தெருக்கள் எல்லாமே மிகக் குறுகலாக இருக்கின்றன. நான் சுற்றிய வரையிலும் காசியில் பேருந்து என்ற ஒன்றைப் பார்க்கவே இல்லை. ஆட்டோக்களைக் காட்டிலும் சைக்கிள் ரிக்‌ஷாக்களை அதிகம் பார்க்க முடிந்தது. இன்னமும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழக்கத்தில் இருப்பதை நான் காசியில்தான் பார்த்தேன். மண் புழுதியைக் கிளப்பும்படியாக தார் காணாத சாலைகளில் குலுங்கிக் குலுங்கிச் சென்றது ஷேர் ஆட்டோ. தமிழ்நாட்டில் பிறந்த ஒருவன் இப்படியொரு அழுக்கான ஊரைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.காசியும் சாரநாத்தும் இந்தியாவின் முக்கியமான வரலாற்று நகரங்கள் என்பதோடு வழிபாட்டுத் தளங்களும் கூட. இப்படியிருக்கையில் இவற்றுக்கிடையில் பேருந்து வசதி கூட இல்லை என்பதை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.சாரநாத்தை அடைந்தேன். நெடிந்துயர்ந்துயர்ந்த ஸ்தூபியை முதலில் பார்த்தேன். அப்பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் இந்த ஸ்தூபி தெரியும். புராதன சின்னங்கள் நமக்குள் பாய்ச்சும் வரலாற்றுணர்வு தீவிரமானது. அப்போது நம் மனம் நிகழ்காலத்திலிருந்து கரைந்து மறைந்து போய் அவ்வரலாற்றுடனான தனது சம்மந்தத்தினைத் தேட விழையும். சாலை ஓரத்தில் வரிசையாக சிறு வியாபாரிகள் கடை விரித்திருந்தனர். புத்தர் சிலைதான் அங்கு முக்கியமான விற்பனைப் பொருளாக இருந்தது. புத்தர் தியான நிலையில் அமர்ந்திருக்கும்படியான சிறிய மண் சிலை ஒன்று 5 ரூபாய், அதே நிலையில் அளவில் சற்று பெரிய மண் சிலை 10 ரூபாய், புத்தர் கண்களை மூடி நித்ய அமைதி கொண்டிருக்கும் டெரகோட்டா 10 ரூபாய் என்று விற்கப்பட்டது. சுற்றி முடித்து விட்டுக் கிளம்புகையில் வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டு ஸ்தூபியைப் பார்க்கச் சென்றேன். அதன் கீழ்பாதி கற்களால் ஆனது. அக்கல்லில் புத்தர் உருவங்கள் செதுக்கப்பட்டு கலையம்சம் நிரம்பியதாய் இருந்தது. பாதிக்கு மேல் செங்கற்களால் எழுப்பப்பட்டிருந்தது.

ஸ்தூபியைச் சுற்றி இடிபாடுகளால் சிதிலங்களாக எஞ்சி நிற்கும் சிறிய அளவிலான ஸ்தூபிகளைப் பார்க்க முடிந்தது. வரலாறே சிதிலங்களால் நிரம்பியதுதானே. எழுப்பப்பட்டதும், தகர்க்கப்பட்டதும்தானே. அசோகப்பேரரசில் நிறுவப்பட்ட இச்சின்னங்கள் சுல்தான்களின் படையெடுப்பில் தகர்க்கப்பட்டிருக்கின்றன. அசோகரால் நிறுவப்பட்ட வெற்றித் தூண் படையெடுப்புகளால் துண்டாடப்பட்டது. அதன் பகுதிகளும், நமது தேசியச் சின்னமான நான்கு சிங்கங்கள் மற்றும் தர்ம சக்கரம் ஆகியவை சாரநாத் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் பார்த்த போது வரலாற்றுணர்வையெல்லாம் தாண்டிய பரவச உணர்வு என்னுள் துளிர்த்தது. பள்ளிப் பாடப்புத்தகத்தில் படங்களில் பார்த்தவற்றை நேரடியாகக் காண்கையில் உள்ளூர ஏற்படும் பரவசம். சாரநாத், கயா, குஷிநகர் இம்மூன்றும் பௌத்தர்களின் முக்கியமான வழிபாட்டுத் தலங்கள். பௌத்த மரபு சாரநாத்தில்தான் தொடங்கியது. உலகளவிலிருந்தும் இம்மூன்று தலங்களுக்கும் பௌத்தர்கள் வருகிறார்கள். சீனா, ஜப்பான், திபெத் போன்ற மங்கோலியப் பகுதிகளில் இருந்து வந்த பலரைப் பார்க்க முடிந்தது. அவர்களிடம் தீவிரமான வழிபாட்டு நோக்கம் இருந்தது. ஆனால் இந்தியர்கள் பலர் குடும்பத்தோடு சுற்றுலாவுக்கான மனநிலையோடுதான் வந்திருந்தனர். அங்கு  மங்கோலியப் பெண்ணொருத்தி என் கவனத்தை ஈர்த்தாள். குள்ளமாக, மெலிந்து காணப்பட்டாள். டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தாள். சிறிய இடைவெளியில் நாங்கள் இருவரும் ஒரே இலக்கை நோக்கிப் பயணித்தோம். அது அங்கிருந்த பௌத்தக் கோவில். ஆங்கிலம், சீனம், இந்திக்கு அடுத்து தமிழிலும் ‘தொப்பியை கழற்றி வைக்கவும்’ என எழுதப்பட்டிருந்தது. இருவரும் ஷூக்களை கழற்றி விட்டு உள்ளே போனோம். அவள் என் கவனத்தை ஈர்த்ததன் முக்கியக் காரணமே அவளிடம் ஒரு தீவிரத்தன்மை வெளிப்பட்டது. தனியாளாக வந்திருக்கக் கூடும் என நினைக்கத் தோன்றியது. அவள் மண்டியிட்டு சிரம் தாழ்த்தி புத்தரை வணங்கினாள். விழுந்து, எழுந்து மீண்டும் மீண்டும் வணங்கினாள். அவள் வணங்கும் தொனி, அதிலிருந்த பற்று, அவளிடம் நிலை கொண்டிருந்த அமைதி என அனைத்தையும் ஒரு பார்வையாளனாய் கவனித்துக் கொண்டிருந்தேன். கோவிலை விட்டு அவள் சென்ற பிறகு நான் அங்கிருந்த ஓவியங்களைப் பார்க்கத் தொடங்கினேன். தனது பின்புறத்தில் ஆரா என்கிற ஒளிவட்டத்தோடு புத்தர் தன் மக்களுக்கு போதனை செய்வதைப் போன்றான ஓவியங்கள். கோவிலை ஒரு சுற்று பார்த்து விட்டு வெளியே வந்த போது அவள் எங்கு சென்றாள் எனத் தெரியவில்லை.வெளியே வந்து புற்களின் மேல் அமர்ந்தபடி சாரநாத் ஸ்தூபியை எச்சலனமும் இன்றி சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். கங்கை கொண்ட சோழபுரம் செல்லும்போதெல்லாம் இப்படித்தான் சோழீஸ்வரர் கோவிலைப் பார்த்துக் கொண்டிருப்பேன். மாபெரும் சாதனைகளை எல்லாம் அமைதியுடனும், பிரம்மிப்புடனும்தான் பார்க்க முடிகிறது. கால ஓட்டத்தில் கரைந்து விடாமல் நிலைகொண்டிருப்பவையே வரலாறாகிறது. சோழீஸ்வரம் கோவிலைப் பார்க்கும்போதெல்லாம் ராசேந்திரசோழன் கங்கையை வெற்றி கொண்ட நிகழ்வு என்னுள் காட்சிகளாக விரியும். அதே போல்தான் அந்த ஸ்தூபியைப் பார்க்கையில் அசோகப்பேரரசு பற்றிய உருவகங்கள் என்னுள் தோன்றியபடி இருந்தன. அசோகர் புத்த மதத்தைப் பரப்புவதற்காக தனது மகன் மகேந்திரன் மற்றும் மகள் சங்கமித்ரையை இலங்கைக்கு அனுப்பினார் என்று சமூக அறிவியல் பாடத்தில் படித்தபோது என்னுள் தோன்றிய சித்திரங்கள் எல்லாம் எனக்குள் மீள்பிரசுரமாகிக் கொண்டிருந்தது.

மாலை வேளையின் இளவெயில் அடித்தது. மணி 4 ஐத் தொட்டிருந்தது. நான் சாரநாத்திலிருந்து காசிக்குக் கிளம்பினேன். கிளம்பும் முன் புத்தர் சிலைகள் சிலவற்றை வாங்கினேன். செய்தித்தாளில் சுருட்டிக் கொடுத்தார்கள். அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் கங்கைக்கரைக்கு வந்த போது ஓரளவு மக்கள் திரள். படித்துறையில் இறங்கிச் சென்றால் வரிசையாகப் படகுகள். படகோட்டிகள் ஆட்களைக் கூவிக்கூவி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். 6 மணி ஆகியிருந்தது. அரை மணி நேரத்தில் கங்கா ஆர்த்தி தொடங்கும். கங்கா ஆர்த்தியை கங்கையின் மேல் படகில் நின்றபடி பார்ப்பதானால் அதற்கு 20 ரூபாய் வாடகை. அதுவே 50 ரூபாய் கொடுத்தால் அந்த அரை மணி நேரத்துக்குள் சிறிது தூரம் படகில் அழைத்துச் சென்று கங்கா ஆர்த்தி நடைபெறும்போது படித்துறைக்குக் கொண்டு வந்து நிறுத்துவார்கள். நான் 50 ரூபாய் கொடுத்து ஒரு படகில் ஏறினேன். படகில் நின்றபடி படித்துறையைப் பார்த்தேன். காசியின் அழகே அப்படித்துறைதான். படித்துறை நெடுகிலும் எழுந்திருக்கும் பழமையான கட்டடங்களை கங்கையோடும், அதன் அடங்காச் சலனத்தால் குலுங்கியபடியே நிற்கும் படகுகளோடும் சேர்த்துப் பார்க்கையில் பேரழகாய்த் தெரியும். இருளத் தொடங்கிய அவ்வேளையில் நான் கண்ட படித்துறையின் காட்சி பேரற்புதமாய் இருந்தது. காலத்தை அப்படியே இருத்தி அக்காட்சியிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்குப் பிறகு சில ஆட்கள் ஏறிய பிற்பாடு படகு புறப்பட்டது.கங்கையின் அகலம் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடுகிறது. காசியில் அநேகமாக 2 கி.மீ அகலம் இருக்கலாம் என நினைக்கிறேன். நான் சென்றபோது கங்கையில் கால்வாசி அளவே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு சில மாதங்கள் முன்புதான் வெள்ளம் வந்து படித்துறையைத் தாண்டியும் தண்ணீர் ஓடியதாக படகோட்டி தெரிவித்தார். படகு செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் படித்துறையைப் பார்த்துக் கொண்டு நின்றேன். படித்துறை என்னை விட்டு நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. படகு அதற்கான எல்லையை அடைந்து திரும்புகையில் நன்றாகவே இருட்டி விட்டது. படித்துறை மின் விளக்குகளால் ஒளிர்ந்தது. படித்துறையை மொய்ப்பது போன்று படகுகள் கூட்டமாக நிறுத்தப்பட்டிருந்தன. எங்களது படகும் அக்கூட்டத்தில் ஒன்றாகப் போய் நின்றது. கங்கா ஆர்த்தியைப் பார்ப்பதற்காக படித்துறையிலும், படகுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்து நின்றார்கள். வேறுபட்ட புதிய அனுபவங்கள் வழியாகத்தான் நம்மை எப்போதும் உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும். நான் அப்படியொரு அனுபவத்துக்காகக் காத்திருந்தேன்…                                                                                                                                                பயணிப்போம்… 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button