
காரில் இரண்டு அண்ணாக்களுடன் சென்று கொண்டிருந்தேன் .வழியில் மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலில் நிறுத்தலாம் என முடிவு செய்து வழி மேல் விழி வைத்து தேடலை துவக்கினேன். .அப்பொழுது எங்களுடன் பயணம் செய்த அண்ணண் ஒருவர் ஒரு சிறிய வீட்டைக் காட்டி அங்கு நிறுத்துமாறு கூறினார். .அது உணவகம் அல்ல .ஒரு சிறு வீடு போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு சிற்றுண்டி உணவகம்.அவர் அந்த ஊரை பூர்விகமாக கொண்டவர் என்பதால் நாங்கள் எதுவும் பதில் பேசாமல் அங்கு உணவருந்த சென்றோம்
அந்த வீட்டை முதலில் நான் உங்களுக்கு வர்ணித்து விட்டு பின்பு கதைக்குள் உங்களை அனுமதிக்கிறேன்.அது ஒரு முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத இரண்டு அறைக் கொண்ட ஒரு கூரையால் நெய்த மண்வீடு. .முன்னே இரண்டு பாத்திரம் வைத்துக் கொள்ள வசதியாய் மண்ணால் செய்த அடுப்பு . அதனருகில் விறகு கட்டைகள். கிழவிக்கும் சோற்றுக்கும் சேர்த்தது போல அவ்வுளவு உயரத்துக்கு புத்தம் புதிய இரண்டு பாய்கள். வருபவர்கள் அமர்வதற்க்கு என்று தெரிந்து கொண்டேன்.
அந்த வழி செல்லும் லாரி ஓட்டுனர்கள் ,எங்களைப் போல் கிழவியைப் பற்றி தெரிந்த சிலர் மட்டும் உணவருந்தும் இடம் அதுவெனவும் கேட்டு அறிந்து கொண்டேன். அங்கு வரும் சிலர் ,சாப்பாட்டுக் கிழவி என்றழைப்பதையும் தெரிந்து கொண்டேன். தூரத்தில் ஒரு அடி பம்பு உள்ளது . அங்கு தான் கிழவி உணவுக்கு நீர் இரைக்கிறாள் என்றும் அறிந்துக் கொண்டேன். ஒரு வழியாக கிழவி சமைத்து முடித்து , மந்தார இலையில் சோறு சாம்பார் உருளை பொறியல் அப்பளம் என அமர்க்களபடுத்தி விட நன்றி கூறி, ஒரு 500ஐ கையில் திணித்துவிட்டு கிளம்பும்பொழுதுதான் அந்த கோழிக் கூடை காலில் இடிப்பட்டது, கண்ணில் தென்பட்டது.
அந்தக் கோழியும் குஞ்சுகளும் தான் தனக்கு சொந்தம் என கிழவி விரக்தியாய் கூற , நாங்கள் விடை பெற்றோம். சரி கதைக்குள் இப்போது உங்களுக்கு அனுமதி.
அந்த எழில் மிகு அப்படின்னுலாம் எழுத எனக்கும் ஆசைதான் . ஆனால் இது வெயில் காலத்தில் தோன்றிய கற்பனை. சற்று வறண்ட கதைதான்.
காலையில் விடிந்ததும் விடியாததுமாய் கிழவி அள்ளி முடிந்துக் கொண்டு சாணி தெளித்து விட்டு தூரத்தில் உள்ள அடி பம்பில் சமைப்பதற்க்கு நீர் நிரப்பி விட்டு , கோழிகளை திறந்து விடுவாள். என்னமோ அமெரிக்காவுக்கு போறாப்ல சும்மா கோழியும் அதோட இரண்டு குஞ்சுகளும் சும்மா கும்மாளமா வெளிய ஓடி வரும். கிழவிக்கு சொந்தம்னு சொல்லிக்க ஒருத்தரும் இல்லாததால அந்த கோழிக்கு ஒரு பேரு வச்சி வளர்க்குறா.
தாய்க்கோழி – சரசு
குட்டிகள் –வடிவேலு / கோவைசரளா .
கிழவிக்கு குசும்ப பாத்தீங்களா.?
அந்த இருண்ட வீட்டின் ஒரு பகுதியை கோழிக்கே கிழவி நேர்ந்து விட்டுவிட்டாள் . காலையில் தொடங்கி மாலை வரை கோழிகள் எங்கு வேண்டுமானாலும் மேயலாம். அதன் பிறகு கூடைக்குள். இது தான் வழக்கம்.
ஒரு நாள் மதியம் கிழவி சமைத்துக் கொண்டிருக்க, கோழிகள் இளைப்பாற ஒரு வேப்ப மர நிழலாப்பார்த்து போய் உட்கார்ந்துக் கொண்டது. அதுகளுக்குள் கொக்கொக் என ஏதோ பேசிக் கொண்டதை கிழவி ஒரு கண்ணால் பார்த்து விட்டு சோறு வடிக்க கிளம்பிவிட்டாள்.
கோழிகள்பேசும், ஆம்! சத்தியம்…
“அம்மா பாட்டி பாவம்ல…”
”ஆமாடி சரளா..அது சரி நீ என்ன நேத்தைக்கு அந்த மாணிக்கம் வீட்டு கோழிக்கூட கொஞ்சி கொலாவிட்டு இருக்க.தோல உரிச்சிடுவன் பாத்துக்கோ”
துள்ளி குதித்து வந்த வடிவேலு “ஆமா அம்மா சரளாவுக்கு” பவ்பவ் காட்டி மேலும் ஏத்தி விட்டான்.
”டேய் வடிவேலு நீ சும்மா இரு , அம்மாவுக்கே தெரியும் என்ன பத்தி.”
கோழியானாலும் மனுஷனாலும் போட்டு கொடுக்கற புத்தி மாறாது போல.
அத விடுங்க…
”பாட்டி பாவம்.எவ்ளோ வேல தனியா செய்றா பாருங்க”
“ ஆமாம் மா” வடிவேலும் சேர்ந்துக் கொண்டான் .
”நாம என்னடா பண்றது , அவ பெத்த புள்ளைங்க ஒன்னு குடிச்சு செத்து போச்சு, இன்னொன்னு கை கால் விழுந்து செத்துப் போச்சு.”
“இதெல்லாம் உனக்கு எப்படிம்மா தெரியும்? ”
”எங்க தாத்தா பாட்டி சொன்ன கத தான்டா…!”
”ஓஹோ !”
”ஆமா வடிவேலு நம்மளோட பரம்பரையே இவங்க வீட்லதான் வளருது காலம் காலமா.நான் செத்தா நீங்க .. நீங்க செத்த உங்க பிள்ளைங்க..கிழவிய சாவற வரைக்கும் பத்திரமா பாத்துக்கோங்கடா” ன்னு சொல்லியபடியே தன் அலகை மண்ணில் ஒரு கீறு கீறிக் கொண்டது.
”சரிம்மா” ன்னு ரெண்டு புள்ளையும் தலையை ஆட்டி வச்சிடுச்சுங்க.
கிழவி வேலைய முடிச்சுட்டு ரேஷன் கடையில தூக்கிப் போடுற அரிசி கோதுமைகள எடுத்துட்டு வந்து கோழிக்கு கொடுப்பது வாடிக்கை . நாய் மட்டும் நன்றியுள்ளது இல்லீங்க,கோழியும்தான்.
கிழவி கொஞ்சம் தானியம் போட்டுட்டு உள்ள வேலையப் பாக்க போன சமயத்துல சரளாவுக்கும் வடிவேலுக்கும் ஒரே சண்டை. சரசு ஓடி வந்து “என்னடி இப்படி கத்தற, என்னாச்சு?” ன்னு ஒரு இடி இடிச்சா சரளாவ …
“அம்மா நீயே பாரு,வடிவேலு ! பாட்டி கஷ்டப்பட்டு சுத்தம் செஞ்சி வச்ச இடத்துல , வர்றவங்க உட்கார்ந்து சாப்பிடுற இடத்துல போய் அசிங்கம் பண்ணிட்டான். பாட்டி பாவம் திரும்பவும் சுத்தம் செய்திட்டு இருக்காங்க …”
”அச்ச்சோ ! ஏன்டா அப்படி பண்ணிண… ? திரும்பவும் இப்படி பண்ணினா கண்டிப்பா அடுத்த கறி விருந்துக்கு நானே உன்ன அனுப்பி விட்ருவேன் …”
“எப்படியும் நம்மல்லாம் அங்க தான போகப் போறோம் …”
”டேய் வெளக்கமாறு பிஞ்சிடும். பாட்டி பத்தி உனக்கு தெரியாது டா . அதுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் சரி நம்மளோட உசுருல கைய வைக்காதுடா !”
”சரிம்மா இனிமே இப்படி பண்ண மாட்டேன்”னு வடிவேலு சொல்லிட்டு மேயப் போயிட்டான்.
ஆறுமணிஆகிடுச்சி , கிழவி கூடையில அடைக்க சரசு சரளான்னு கூப்பிட்ட உடனே, என்னமோ.. பாகவதர் பாட்டு கேட்க வர்றது மாதிரி அழகா வந்து கூடையில உட்கார்ந்துட்டாங்க.
“என்னங்கடி சரசக் காணோம்?” கிழவி சத்தம் கொடுத்தப்பத்தான் இவிங்களுக்கு ஆத்தா நியாபகமே வந்துச்சு.
கிழவி பரபரப்பானாள்….
”எந்த நாதாரி முண்டடி என் வீட்டு ராசாத்திய தூக்குனது , …. ”
ஊர் பக்கம் இது மாதிரி கோழி திருட்டும் அதுக்கான சண்டையும் சகஜம். கத்திட்டே பதிலுக்கு காத்திருக்காம எல்லா தெருவலயும் தேட ஆரம்பிச்சா.
மனசுக்குள்ற அந்த ராக்காயி பேரன் தான் தூக்கியிருப்பான்னு சொல்லிக்கிட்டேத் தேடப்போனா. அங்க பாத்தா அவன் சீக்கு வந்து படுக்கையில கிடக்க , சண்ட போட போனவ குசலம் விசாரிச்சிட்டு கையில இருவத திணிச்சிட்டு நெத்தில வேம்புலியாத்தா திருநீற பூசிட்டு வந்தா.
மனசு பதைபதைக்க ஆரம்பிச்சிடுச்சு.
”ஏ கிழவி! என்ன தேடிகிட்டு போறவ , இந் நேரத்துல”ன்னு, மாரிப் பைய குரலுக்கு ”சரசக் காணாம்டா”ன்னு நடந்துக்கிட்டே இருக்கா.
“ஆமா பெரிய சரசு , சினிமாவுல நடிக்க கூட்டிட்டு போயிருப்பாங்க”ன்னு எகத்தாளம் பேசிட்டு போயிட்டான்.
எதுத்தாப்புல வந்த கோயில் பூசாரி , ”பாட்டி அங்க ஒரு நாய் எதையோ தூக்கிட்டு போறத பாத்தேன். அது நம்ம சரசான்னு போயி பாரு பாட்டி”ன்னு சொல்லிட்டு போனான்.
பாட்டி மனசு துடிச்சிடுச்சி. வெயில்லக் கூட கூடைய கவுக்க மாட்டா,கிழவி. அங்கப் போனா…நாய் வாயில குத்துயிரும் கொலையுயிருமா கிடக்கா சரசு. நாயப்பத்தி விட்டுட்டு சரசப் பாத்தா ஒன்னுமேயில்ல… கழுத்தில் கடி அதனால உசுரு தப்பாதுன்னு கிழவிக்கு தெரிய ஓன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா.
ரத்தக் கரையோட தூக்கி வந்து வீட்டு பின்னாடி புதைக்க நினைக்கிறா…ஆனா எப்படி புதைப்பா உயிருக்கு உயிரா வளர்த்த உயிர.
வடிவேலும் சரளாவும்…
பாட்டி அழுகையில கலங்கி போனவங்க சரச இன்னும் பாக்கல.
பாட்டி கையில கிடந்த சரச பாத்த உடனே அவ்ளோதான். கோழி இறகெல்லாம்…காத்துல பறக்க வேக வேகமா அடிக்குதுக.
இராத்திரியே கிழவி பின் பக்கம் புதைச்சிட்டு போய் அழுதுகிட்டே படுத்துட்டா.
வடிவேலுக்கும் சரளாவுக்கும் கண்ணீர் கண் கூடை நிரம்பி வெள்ளத்துல போறாப்புல வடியுது.
மறுநாள் காலையில
கிழவி கூடையத் திறந்தா ஒரு சோகமான சூழ்நிலையை தன்னோட நடையிலேயே காமிக்குதுங்க இரண்டும். தாயப் பிரிஞ்ச குட்டிங்க …
நாட்கள் ஓட ஓட கிழவிக்கு உடலுக்கு முடியாம போயிடுச்சு. இந்த கோழிகளுக்கு சரிவர தீனி போட்டு கூடையில அடச்சு வைக்க தண்ணீ வைக்க கிழவியால முடியல.
கிழவிக்கு வாயில்லா ஜீவனுகள இப்படி தவிக்க விட மனசு வரல…
நமக்கு தான் தெரியும் இதுகளுக்கு வாயும் இருக்கு .. வயிறும் இருக்குன்னு . இதுகளப் பிரிய கிழவிக்கும் மனசு இல்ல …
ஆனாலும், அதுகள கவனிக்காம கஷ்டபடுறத பாக்க மனசு இல்ல கிழவிக்கு .
ஆடு வளத்தா அறுக்கத்தானே … கோழி வளத்தா கொல்லத்தானே ..!
எப்படியோ ஆளத்தேடி நல்ல ஆளா பாத்து வித்தா கிழவி. அவன் மட்டும் என்ன இத உறிக்காம தீவனம் போட்டு அழகு போட்டிக்கா அனுப்ப போறான் .
”சரி வா கிழவி .. கோழிய நேர்ல பாப்போம் அப்புறம் விலைய பேசுவோம்”ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தான் அந்தக் தொத்துக்காலன்.
நேர்ல பாத்தான் … இரண்டுமே நல்ல தினுசா இருந்துச்சு. ” கோழிக்கு முன்னூறு ரூபா போட்டுக்கோ கிழவி… வேணும்னா மொத்தமா ஆயிரம் ரூவா வாங்கிக்க.”
இதக் கேட்டுக்கிட்டிருந்த சரளாவுக்கு கிழவிய பிரியறதுல இருந்த வேதனை சொல்லி மாளல .. சொல்ல முடியல . அதுக ஓசை வெளிய கேக்கல. !
“சரி நாளைக்கு பொழுதுக்கு வந்து காசக் கொடுத்துட்டு தூக்கிட்டுப் போறேன் கிழவி”ன்னு சொல்லிட்டுப் போயிட்டான் தொத்துக்காலன்.
இராத்திரி ஒரு பொழுதுதான் இங்க இருக்கப் போறோம்னு தெரிஞ்சதும் ஒரே அழுக ரெண்டுத்துக்கும்.
கோழி கண்ணீரு கூடைய தாண்டல …
குளம் நிரம்ப வடித்தாலும் சோகம் சொல்ல முடியல . விடிய நேரம் கொஞ்சந்தான் இருக்கு. இது தான் கடைசியா இக்கூடையில்.
வெளிச்சம் வர வர ஆள் சத்தம் கேக்குது. வழக்கமா ஆறு மணிக்கு வர்ற கிழவி ஆளக் காணோம். கூடையின் பொத்தலில் கும்பல் கும்பலாய்.. மனித நடமாட்டம் தெரியுது . ஒன்னும் புரியல.
கோட்டிக்காலன் வந்து கூடைய திறந்துட்டே அழறான். “இனி நான் யார்க்கிட்ட காசக் கொடுத்துட்டு உங்கள தூக்கிப்போவேன்.
போங்க போய் மேயுங்க”ன்னு தொறத்த அப்பத்தான் இழவு செய்தி ஊர்ல விடியுது.. பரவுது. ஆத்தாள பிரிஞ்ச குட்டிக இப்ப கிழவியையும் பிரிவத பாத்த ஊர்க்காரன் கூட உச்ச் கொட்டினான்.
மனுஷப் பய மாதிரி அடுத்த வேலைய செய்ய ஓடல .. அங்கயே நின்னு நீர் வடிக்குதுக. அலக கீழ முட்டி அழுகுதுக
ஊர்க்காரங்க சேர்ந்து கிழவி பொணத்த சிங்காரிச்சி சுடுகாட்டுக்கு தூக்கி போறாக. அப்படியே வழியில நின்னு வடிவேலும் சரளாவும் கூவுதுக .
விடிய மட்டும் அதுக கூவறதில்ல, விழி நனையவும் கூவுதுக.. ! எல்லாம் முடிஞ்சி … எல்லாரும் ஒரு பக்கம் கலஞ்சிப் போயிட்டாங்க.
முதல்ல தாய பிரிஞ்சுதுக .. அப்புறம் இப்ப பாட்டி .. துடிதுடிச்சி போச்சுங்க . இனிமே யாரு தீவணம் போடுவா ?இனிமே யாரு கூட கவுப்பா ?
இனிமே யாரு ஏ ராசாத்தின்னு கொஞ்சுவா ?
எல்லாமும் மனசுல இடி மாதிரி விழுந்த போது , கோழிகளுக்கு கோழித் தூக்கமும் இல்லாமப் போச்சு.
ஏழாம் நாள் கறி சோறு போடுவது நம்ம ஊர்ப்பக்கம் ஐதீகம்ன்னு ஊர் பெருசொன்னு வாயத் தொறக்க …. இல்லாத கிழவிக்கு எவன் அவுப்பான்னு ஊர் மக்க கலையுதுக. வரண்ட கிராமத்துல கொடுக்க எவன் கிட்டயும் ஒன்னும் இல்லங்கறது தான் உண்மை . அப்படி இப்படி பேசி கிழவி வளர்த்த கோழி இருக்கேன்னு ஒரு பொடிசொன்னு சொல்ல .
அட ஆமாப்பா, நமக்கிது தோனலையே
சரி எல்லாரும் கூடி முடிவு எடுத்து மிச்ச சொச்சத்துக்கு கையில கிடந்து அஞ்சு பத்த போட்டாங்க .
இதப்பார்த்த வடிவேலும் சரளாவும் … அப்படியே நடுங்கி நிக்குதுக.
வடிவேலு சொல்றான் .. ”இதப் பாருடி நம்மள பெத்தவளுக்குதான் கடைசியில எதுவும் செய்ய முடியல. கிழவி தான் தூக்கிட்டுப் போய்ப் பொதச்சா . இப்ப நம்மள வளர்த்தவளுக்கு நம்ம செய்ற நன்றிக்கடன்”னு சொல்ல சரளா கண்ணுல கண்ணீரா ஓடுது.
ஏழாம் நாள் ஊர் மத்தியில கூட்டம் கூட
கோழி கழுத்தறுக்க அருவாளக் கையில பிடித்தப்படி வர்றான் மலமாடொருத்தன் .
முதல் முதலா சாகப்போறோம்ன்னு. தெரிஞ்சி உசுறக் கொடுக்க முன்னாடி வந்து நிக்குதுங்க. நன்றி இதுதானோ .!
மனுஷப்பயக்கிட்ட இல்லையே ! கோழியானாலும் கோழையில்ல !
கோழிய கையில பிடிக்க அதுக அழகா சிரிச்சுக்கிட்டே வெட்டு வாங்குதுக.
அதுக சிரிப்புச் சத்தம் உங்களுக்கும் கேட்டா.. வாங்க பேசலாம்.
Super! Nandr!!