1.வரைந்தவுடன்
சிலையாக மாறுபவள்
???????????????
அம்மாவின் கைகள் சூம்பியிருக்கின்றன
செவ்வக வயிற்றில் உறங்கும் சிறுவனை
உதைத்துச் சுருட்டுகிறது குளிர்
கதகதப்புக்காக முட்டும்போது
மோதி நிறுத்துகிறது பெரும்பாறை.
வானம் பார்த்த அவளது கண்கள்
அசைவற்று நிற்கும் போது
உடைந்துள்ள இதழ்கள்
இறங்கி முத்தமிட முடியாதபடி
அடைத்துக் கொள்கிறது
வரையும் போது
நெளிந்த முகம்.
அம்மாவை முழுதாக வரைந்த போதும்
ஒவ்வொன்றும் தனியாக
அசைவற்று நிற்கிறது.
வரைந்தவுடன் சிலையாவதற்காகவா
மனதில் எழுகிறாள் அம்மா ?
இன்னும் தீவிரமாக
இறுக்குகிறது குளிர் இரவு.
அணைப்பதற்காக வளையும் அம்மாவின் கைகள்
வெளியிலேயே உடைகின்றன.
மூங்கில்கள் கருகும் மணம்
நாசியை அடைக்க
குப்புறப்படுத்து முத்தமிடுகிறான்
ஆழத்தில் உறைகிறது அழுகுரல்.
மூச்சில்லாத அவளது நாசிகளில்
கண்ணீரைச் சேர்ப்பவன்
உயிர் வருகிறதா என
கன்னத்தில் அடிக்கிறான்.
எதுவுமே சொல்லாத அம்மா
அப்போதும்
கோடுகளாக உறைந்திருக்கிறாள்.
கர்ப்பகாலம் வேண்டும் போலிருந்தது
அம்மாவின் வயிறு
பெரிதாக உப்பும்படி
குடையொன்றை விரித்தபடி
கண்ணை மூடிக் கொள்கிறான்
நெருங்க முடியாத மழை
வெளியே நின்று
வெறுமனே
அவன் தூங்குவதை
பார்த்துக் கொண்டிருக்கிறது.
2. நெற்றியில் வெடிக்கும் மூங்கில்
??????????????
நெற்றியில் வெடிக்கும் மூங்கிலிலிருந்து
குழலுடன் குதிக்கிறாள் முதற்காதலி.
தினமும் அவள்
கூந்தல் பின்னிக் கொள்ளும்
அக்காவின் வீட்டை
தழுவிச் செல்லும் பாவாடை
மண்ணை இறுகப் பற்றிக்கொண்டு
பூமியென விரிகிறது.
தட்டான் பிடிப்பதை மறந்து
வண்ணங்களுக்குள்
சுழன்று கொண்டிருக்கிறேன்.
நிலைப்படியில் நின்று பார்க்கும்
இரண்டாவது காதலி
சற்றே உயரமாக இருப்பது
அவஸ்தையாக இருக்கிறது காதலுக்கு
முதுகைத் திருகும் விழிகள்
தண்டுவடத்தில் துளையிடும் போது
குழலிசை வெளியேறுகிறது.
வெட்கமேதுமின்றி
வியர்வையைத் துடைத்துக் கொள்கிறேன்.
கோபத்துடன் முறைக்கும்
மூன்றாவது காதலி
தாயமாடும் திண்ணையில்
முறுக்கிய மீசையைப்
பிடுங்கி ஊதுகிறாள்.
சமையலறையில்
கொதிக்கும் எண்ணையில்
கட்டி உருளுகின்றன
கடுகும் உளுந்தும்
குள்ள மனிதனாக
அவள் முன்பு நின்று
அடிவாங்குகிறேன்.
நான்காவது காதலிக்கு
எதுவுமே தெரியாததால்
இறுக்கமாகத் தழுவுகிறாள்.
“ஐ லவ் யூ சோ மச் ”
முத்தங்களில் அமிழ்ந்தடங்குகிறது.
முதுகு தடவும் விரல்கள்
உள்ளாடைப் பட்டையைத் தொட்டதும்
தலை குனிந்து நிற்கிறேன்
முகம் நிமிர்த்தும் கைகளில்
சுழன்று பெருகுகின்றன
நான்கு முகங்கள்.
கடலுக்குள் அமர்ந்து
மழையெழுப்பிப் புதைக்கும்
விளையாட்டை ஆடுகிறோம்
நானும் புதியவளும்.
நடுவில் வந்தமரும்
பார்வையாளர்கள் நால்வரும்
ஊற்றாகிப் பொங்குகிறார்கள்
எங்களைத் தூக்கி வீசியபடி
கனத்துப் பெய்கிறது மழை.