தேங்காய்ப் பால் குழம்பு
பவளமல்லியின்
காம்பு சுமக்கும்
அடர் ஆரஞ்சு வண்ணம்
பதமாய் மேலேறி
அதன் வெண் இதழில்
சங்கமித்து வெளிறிய
வண்ணம் உனது…
உன் மேனியெங்கும்
பார்த்திருக்கும்
எண்ணெய் திட்டுக்கள்
அதிகமாய் ஓலமிடாத
கடலுக்குள் அமிழ்ந்திருக்கும்
பவளப் பாறைகளை
நினைவூட்டுகின்றன
எளிமையின் பெருஞ்சுவை
உன்னில் சுனைநீராய்
ஊற்றெடுக்கும்…
பெயர் சொல்லும் போதே
பசி வந்து சேரும்…
சமையல் என்னும்
பெரும் ஆச்சரியத்தின்
சிறு கரண்டி
அதிசயம் நீ!
அரை மூடி தேங்காய்
அரைத்து விட்டு வதக்க
வரமிளகாய் சீரகம்
தாளிக்க கடுகு
கைப்பிடி கருவேப்பிலை
கர்ணனின் கொடையாய்
தாராளமாய்
சின்ன வெங்காயம்
தண்ணீரும் உப்பும்
சேர்த்தால்
கவள சாதத்தில்
பிறவி பயன் காட்டும்
மோட்ச குழம்பு தயார்…
ரசனையும் பொறுமையும்
சரிவிகிதம் சேரவேண்டும்
உன்னை உருவாக்க…
வண்ணத் திருமேனி வருந்தாது
வருடும் கரண்டிக்கும்
வலிக்காது
வாணலி சூட்டில்
கொதித்து நீ
நுரைக்காது
அலுக்காது அருகிருந்து
தொட்ட கை நிற்காது
தூளியை ஆட்டிடும்
அன்னையவள் கண்கொண்டு
உன்னை
சமைத்திறக்க வேண்டும்…
ஆவி நீர்
கலந்தால் கூட
குழைந்து விடும்
அனிச்சம் நீ…
உன்னை எழுத
பேனாவின் முனையில்
கமழ்ந்து கசிகிறது
நின் மணம்…
உன் ருசியேறிய
நாவு இன்னும்
கிறங்கியே கிடக்கிறது...
தேவதையின்
விரல் நுனி
தீண்டிய
நீரின் சுவை
நிச்சயமாய் நின் சுவை தான்…