![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/Thenmoli-das.jpg)
திருமொழி
அழிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது
அநாதிகாலம் முதல்
அங்கிருக்கிறோம்
எந்தெந்த தெய்வங்களின் வரலாறு
மறைக்கப்பட்டதோ
எந்தெந்த தெய்வங்களின் வரலாறு பொய்யாக உருவாக்கப்பட்டதோ
எந்த ஆற்றின் வழி மாற்றப்பட்டதோ
அதே நிலத்தில்
அதே ஆற்றின்
மணல்பால் பருகி
நடுகல் நெற்றியில் நன்னீர் தெளித்து
குலம் செழிக்கக் குலவையிட்டு
திணை நிலங்களின் வேர்கொண்டு
திருமந்திரம் படைத்து
வளரியும் வாளும்
பறையும் தமருவும் அதிர
நீங்கள் ஆடி நிலைத்த நிலத்தில்
நம் உயிர்ப் பாடல்கள் இருக்கின்றன
இன்னும் ஆழமாகச் செல்ல வேண்டும்
அழிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று
அங்கேயும் இருக்கிறது
மறைபொருள் காணாது மாய்வோமோ
தேசத்தில் அரசு
தனது திருகுதாளத்தை
மதத்தின் குச்சியால் அடிக்கலாம்
ஆயினும்
மக்கள் தேசத்தின் ஆணிவேரை
ஆயுதமாக ஏந்தி
நீதியால் நிலைநிறுத்துவார்கள்
எத்தனை சமயங்கள் தோன்றி மறைத்தாலும்
சித்தத்தின் சீவ நாடி …..
நிலத்தில் மறைந்து மரத்தில் பேசும்
மரத்தில் மறைந்து கல்லில் கதறும்
கல்லில் மறைந்து சொல்லில் சுடரும்
சொல்லில் சுடர்ந்து காலத்தில் சுழலும்
அழிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று
அங்கேயும் இருக்கும்
இயற்கையின் உட்கருவில் சித்தமாய்
இருப்பது
மொழி