சுள்ளிகளென உடல்கள் எரிய
ஆகுதிகளாகிய அவைகளின்
ஓலமொழி புரியாமல்
மயானத்தில் எதைத் தேடுகிறீர் அரசே
சுவரென நின்ற தீண்டாமையையா?
பேரிடருக்குள் சிதையுண்ட
துகள்களில் ஒட்டிய குரூரத்தையா?
உடைந்த கூடுகளில்
நசுங்கிக் கிடக்கும் மனிதம்
வெறித்த விழிகளில்
தேங்கிய கனவுகள்
ஒருபோதும் அகப்படாது
நழுவிச் செல்லும் மீனென ஊடுருவும்
உன் வருகையை உறுதி செய்தன
லத்திகளில் உறையாமல் சொட்டிக்கொண்டிருக்கும்
குருதித் துளிகள்
சைரன் ஒளிர குளிரூட்டப்பட்ட
வாகனத்தில் பவனிவரும்
பதட்டமற்ற விழிகள் அறியாது
தானமென வழங்கப்பட்ட
விழிகள் அறியாது
சாதிகளின் உருவமும் வண்ணமும்
சக்கரத்தில் சிக்கிய எறும்பின் வலி.