அதகளத்தி-1
தன் ஒற்றைக் கையைத்
தேடி அலைகிறாள்
அதகளத்தி
கண்டவர் உண்டோ?
எனப் பார்ப்பவரிடம் கேட்க
கொப்புளித்து ஊறும்
குருதி துடைத்து மருந்திட
போனது தெரியலையோ
என மறுசொல் கேட்டு
சட்டெனத் தன்
மொழுங்கையைப் பார்த்து
கொடும்பாலை போல
பெருஞ்சினம் எய்தித்
தன் உடலைத் தானே தின்று விழுங்க
எஞ்சிய சதைத்துணுக்கும்
உடைந்த எலும்பும்
கொடி நரம்பும்
பலப்பல உருவாய்
நிலம் காண வந்தன
எண்ண முடியா
பல கைகளோடு
அட்டகாசமாய்
இடிச்சிரிப்பு சிரித்து
துள்ளலாய் நடந்து போகிறாள் குழைமண்ணில்…
அதகளத்தி-2
அதகளத்தி
நெடு நெடுவென
உயரம் கொண்டாள்
அகண்ட தோளினை
நன்கு அகட்டி
தன் மார்பை நீவினாள்
ஊற்றுப்பெருக்காய்
நீள் நிலம் முழுதும்
பால் பீச்சிக்கொண்டது
அந்தக் குருதிப்பாலில்
பெருவெளியே மூழ்கிக்கிடந்தன
முக்காலமும் மறைந்துக்கொண்டதில்
கலங்கி நின்றன
சிறு உயிரியும் பெரு உயிரியும்
என் செய்க? எனப் பல்லோர்
புலம்பலுற்றதொரு
ஐந்திணையில்
அங்குல சாணில்
ஒரு மெல்விரல்
அன்னையே! என குரல் தந்தது
திரும்பிப்பார்த்தாள்
அரைத்த மிளகாய்ச் சாறின்
நிறமொத்த கண்ணின்
சினந்தணிந்து,
மார்பிலிருந்து கையை எடுக்க
காலம் சுழலத்தொடங்கியதில்
தாய்ப்பாலை ஒவ்வொருவருக்கும்
பீய்ச்சி
மண்சங்கில்
துளித் துளியாக
ஊட்டுகிறாள்
அதில் பச்சை இறைச்சியின்
கவுச்சியும் கலந்திருந்தது.
அதகளத்தி-3
அதகளத்தி அசைந்து நகர்ந்தாள்
வளைந்த பூவையொத்த
கடும் இருட்டு மண்ணடியில்
கூர்கற் கால் கிழிக்க
பெருநடை விரித்தாள்
வழியெங்கும்
பேயின் கொடும்பற்களாய்
மண் தூவிக்கிடக்க
நீர் நீங்கிய நிலம்
உயிர் துறந்ததாய், தனக்குத்தானே
இரங்கற்பா பாடி நின்றது
ஓலக்குரல் காதறைய கேட்டு
சற்றே நின்றவள்
கொம்புடைந்த மதர்த்த யானை
அதிர்ந்து திமிறுதல் போல
தன் பாதத்தை
இருள் புழுதி பறக்கத் தட்டியதில்
துளைத்தெழுந்த
கொள்ளிச்சுடுமண்
அடியில் செருகி செருகி
பீறீட்டு உச்சிதொட்டது
நீரும் நிலமும்
ஒன்றாய்க் கலக்க
விடியலுக்கு முன்பே
கொத்துக் கொத்தாய்
மலையும் மரமுமாய்
குறிஞ்சித்திணை நட்டவளாய்
அநாயசமாய் உதடு சுழித்து
நடந்து போகிறாள்.
அச்சம்,மடம், நாணம்,பயிர்ப்பு என்கிற பெண்ணின் இலக்கணத்தில் தாண்டி,அதகளத்திக்குள் எத்தனை உணர்வு,வெளிப்பாடு!!!. மிக அழகான,ஆளுமைநிறைந்த படைப்பு.
பயணம் தொடர வாழ்த்துக்கள்