காடாக மாறும் ஊர்
••••••••••••••••••••••••••••••••
ஊரிலிருந்து வரும் இறப்பு செய்தி
எனக்கும் ஊருக்குமிடையே
தினமும் ஓடும் ரயிலின் பெட்டியொன்றை
ரகசியமாகக் கழற்றி
கடலுக்குள் வீசுகிறது.
இறந்தவர்
பெட்டிக்குள் இருப்பதால்
எவ்வளவு விரைவாகச் சென்றாலும்
என்னால் பார்க்க முடிவதில்லை.
பெட்டி நிறைய
என்னைப் பற்றி அவர் சொன்னது
ஒலித்துக் கொண்டிருக்கும்
“ஊருக்கு அடிக்கடி வராதவன்
நினைவின் தண்டவாளத்தில்
தினமும் ஊரை ஓட்டுகிறவன் “.
கருப்புப் பெட்டியைத்
தேட முடியாத அளவுக்கு
கொந்தளித்துக் கொண்டிருக்கிறது கடல்.
ஊரின் சாலைகள் மேல்
புதிய சாலைகள் வளர்ந்து விட்டதால்
நாங்களிருவரும் நடந்த பாதை
ஆழத்தில் எங்கோ உறைந்திருக்கிறது.
அவரை எங்கிருந்தாவது
தோண்டியெடுக்க வேண்டுமென
இளைப்பாறிய மரங்களிடம் செல்கிறேன்.
பழைய வீடுகள் இடிக்கப்பட்ட தெருவில்
புதிய மரங்கள்
காட்டை வளர்க்கின்றன.
வாய்க்கால் பாலத்தின் சுவர்களில் எழும்
அரூப சிரிப்பொலிகள்
பின் தொடர்ந்து வந்து
தோள்களைத் தடவுகின்றன
மயானத்திலாவது
அவரைக் கண்டுவிடலாமென்று
வேகமாக ஓடுகிறேன்.
அங்கு இன்று காலையில்
புதிதாக இறந்தவர்
எரிந்து கொண்டிருக்கிறார்.
நான்
இவருக்காக மீண்டும்
ஊருக்குள் செல்லும் போது
ஊர் முழுவதுமே
காடாக மாறிக் கொண்டிருக்கிறது.