#உதிரும் கணங்கள்
பொங்கி வழியும்
பேரன்பிற்குள்
நீந்தித் திளைத்து
இளைப்பாறும் கணங்களில்
வேறொன்றும்
யோசிக்கத் தோன்றுவதில்லை..
பொய்யாக வேனும்
இருந்துவிட்டுப்
போகட்டும்…
கசக்கும் மெய்களில்
காலந்தள்ளுவது
கர்ணகடூர இசையை
கேட்டுத் தொலைப்பது போல்
கொடூரமானது..
மாயை சூழுலகில்
இதுவும் மாயமாய்
மறைந்து போனாலும்..
யாசித்துப் பெறுவதற்கு
நேசமொன்றும்
நிரந்தரமானதுமில்லை..
இன்று இக்கணம்
எழிலாய்த் தோன்றுவதெதுவும்
நாளை நிறம் மாறலாம்.
நீட்சியாய்
இருந்துவிட்டும் போகலாம்.
ஆசைகளை வேரறுத்தப்பின்
ஆயுட்காலம் நீட்டித்து
ஆகப் போவதென்ன?
அகங்குழையும்
அன்பென்பது
யாரொருவரையும் காயப்படுத்தாத
அதிசயமாகட்டும்..
பற்றறுத்துப் படபடக்கும்
ஒற்றையிலை என
உதிர்தல் இலகுவாய்
இருக்க வேண்டுமென்பதே
இன்றைய பேராவல்..
00
#வாழ விடு
மெல்லத் தட்டித்
திறக்கும்
கதவுகளின் பின்னே
காத்துக் கிடக்கின்றன
ஆசைகள்…
வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளிலேறி
வானையளக்கவும்
விண்மீன்களை
விரல்களில் பிடித்து
விளையாடவும் அனுமதி வேண்டி
தயங்கி நிற்கின்றன..
முன்மொழிந்திட ஒரு துணை
முயற்சிக்க ஒரு இணை..
மூங்கில் வனத்துக்குள்
குழலூதவும்..
இசையின் நரம்பெடுத்து
யாழிசைக்கவும்
வண்ணங்களைக் குழைத்து
வானம் செய்யவும்
முயற்சிக்கட்டும்..
அபத்தங்களின் ஆரம்பங்களை
ஆராதிக்கச் சொல்லவில்லை
அப்படியே விட்டுவிடுங்கள்..
அதுவாகவும் அவளாகவும்
வாழ்ந்துவிட்டுப் போகட்டும்..
00
#மௌன மொழி
உறைந்த மௌனத்துக்குப்
பின்னே சொற்கள்
கை பிசைந்து நிற்கின்றன .
அகந் திறந்த
உண்மைகளை
உரைக்கத்
திராணியற்றுத்
திகைத்து தவிக்கின்றன..
உதிரும் எதுவொன்றும்
பொருளற்றுப் பின்வாங்கிட
பலிபீடத்தில்
கழுத்தறுக்கப்படக்
காத்துக் கிடக்கும் உயிரென
அங்கலாய்த்து
அலைமோதுகின்றன..
தாய்மொழியோ தேசியமொழியோ
எதுவும் பிரயோசனப்படாது
மௌனமே
ஆகச் சிறந்த மொழியாக
அங்கீகரிக்கப் படுகிறது
அநேக நேரங்களில்..
00
#விளையாட்டுக்களம்
சிறு சச்சரவில்
வந்த சந்திப்பிழைக்கு
சாவகாசமாய் சமாதானம்
செய்வதே
வாடிக்கையாகிறது..
வாதங்களின் முடிவில்
வரும் மனக்கசப்புக்கு
மௌனமே
மாமருந்தாகுமோ?
புரிந்தோ புரிதலற்றோ
இழைக்கப்படும்
அநீதிகள்
அம்பாரமாய்க்
குவிந்து கிடக்கின்றன..
சற்றே பொறு…
ஆசுவாசப்படுத்திக் கொண்டபின்
அடுத்த ஆட்டத்தைத்
தொடங்கலாம்..