கவிதைகள்
Trending

கவிதைகள்- மதுரா

மதுரா

1. எல்லாமிருந்தும்

எதுவுமில்லாத ஒரு சூன்யத்தை

நீங்களும்

தரிசித்திருக்கக் கூடும்..
தீக்குள் இருள் மாதிரி

வெறுமைக்குள்ளும்

ஒரு நிம்மதியைப்

பெற்றிருக்கக் கூடும்.
கசப்புகளை

விழுங்கி முடிக்கையிலும்

ஆசுவாசமாய்

உணர்ந்திருக்கக் கூடும்
பூக்கள் எப்போதும்

மலர்ந்துதான்

ஆகவேண்டுமென்ற

கட்டாயமென்ன?
கொஞ்சநேரம்

மொட்டாகவே இருந்துவிட்டுப்

போகட்டுமே.

 

 

2. தட்டித்

திறக்க முடியாதபடி

நடை சாத்தியிருக்கும்

உன்

கர்ப்பக்கிருகத்தில்

அத்துமீறி

பிரவேசிக்கப் போவதில்லை.

வழக்கம் போலவே

அன்புப் பூங்கொத்துகளை

வழியிலேயே வைக்கிறேன்

மனமுவந்து ஏற்றுக்கொள்வதோ

மறுதலிப்பதோ

உன்னுடையதாகவே

இருக்கட்டும்..

நேசப் பெயலொன்றும்

நிலம் பார்த்துப்

பொழிவதில்லை..

 

 

3. அவர்கள் நிலத்தில்

உழுதக் கவிதைகளைத்

தான்

நாம் உணவாக

உண்டு கொண்டிருக்கிறோம்..

அவர்கள் தறியில்

நெய்த கவிதைகளை

ஆடையாக

உடுத்திக் கொண்டிருக்கிறோம்.

அவர்கள்

கட்டி முடித்தக் கவிதைகளில்

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

ஆனாலும்

நாம் எழுதுவதைத்தான்

கவிதைகள் என

நம்பிக் கொண்டிருக்கிறோம்..

 

4. மூச்சுத் திணறிக்
கொண்டிருக்கிறாள்
அம்மன்…
எலுமிச்சை மாலைகளும்
இன்ன பிற பூமாலைகளும்
கழுத்தில் இறுக..
வெள்ளிக்கிழமை
ஊற்றிய பாலின்
பிசுபிசுப்பில்
ஊறிக் கொண்டிருக்கும்
கரப்புகள்..
அபிஷேக நீர் ஓடும்
கோமுகியின்
சுத்தப்படுத்தப்படாத
அழுகல் நாற்றம்..
படைக்கப்பட்ட
சர்க்கரைப்பொங்கலில்
கவிந்து கிடக்கிறது..
கழுத்தில் கிடக்கும்
கல்யாணி கவரிங்கின்
கனபரிமாணத்துக்காவது
யாராவது கதவுடைத்தால்
விடுதலை கிடைத்துவிடக் கூடும்…

5. #முகமூடிகள்

வழக்கம் போல்
இம்முறையும் கடைமுழுவதையும்
அலசியாகி விட்டது..
பொருத்தமான ஒன்று
அகப்படவேயில்லை..
பெரிதாதவோ சிறிதாகவோ
துருத்திக் கொண்டோ
ஏமாற்றியது..
ஓரளவு பொருந்துகிறவை
எல்லாம் என்னைப்
பிரதிபலிப்பதாகவே
இருந்து தொலைத்தது..
பேசிப் பழகுகிற
எதிர்ப்படுகிற அத்தனைபேரும்
கனகச்சிதமான ஒன்றோடு
கடந்து போகையில்
எனக்கானது மட்டும்
கிடைக்கவே இல்லை..
வெகுநேரத் தேடலில்
கடைக்காரர் காதோரமாய்
சொன்னார்..
இதற்கேற்றபடி
முகத்தை மாற்றிக் கொள்ளுங்கள்..

6. அடிமைச் சங்கிலிகளை
அறுத்து விட்டதாக
ஆனந்தப்படும் வேளையில்
அடுக்கடுக்காகப்
படிந்து கிடக்கின்றன
கண்ணுக்குத் தெரியாத
பாசத்தளைகள்…
சுதந்திரத்தைச்
சிந்திக்கும் போது
விடுதலையின் வேட்கை
விரல்நீட்டி
அழைக்கிறது..
அன்பெனும்
பிரம்மாஸ்திரத்தில்
கட்டுண்டு கிடக்கையில்
வெளியேறுவது
எங்ஙனம்?

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button