
ஒரு வேடிக்கை பார்ப்பவனாக,
ஒரு தேசாந்திரியாக,
ஒரு பார்வையாளனாக,
ஒரு பறவையாக,
ஒரு ஏதேனும் ஒருவனாக
கரை அமர்ந்து கடல் பார்க்கையில்,
இப்பெரும் கடலையும்
உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது.
அன்பின் சிறுகூடடைவதில்
திருப்தியடையும் பெரும்மனது போல.
*******************************************
எத்தனிமையில்,
எவ்விடத்தில் யார் இருப்பினும்,
ஏதோவொரு தூரத்தில் பேரன்பும்,
பெருங்கடலும் சூழ் உலகிது.
அலையாய்
அவ்வன்பின் கடல் சேர்கையில்,
கரை சேர்கிறோம் நாம்…
**********************************
ஆகப்பெருஞ்சுமை அதுவெனயெண்ணி
தன்மென் சிறகைப் பெருவெறுப்பில்
பிய்த்தெறியும் பறவையினெதிரில்,
ஒற்றைச் சிறகொன்று மட்டுமதுகொண்டு
தன்கடுஞ்சிறை தப்பும் பறவையின் மீது
பார்வைபட்ட தருணத்தில்
இதுவரை பிய்த்துத்தெறிந்த
நம்பிக்கைகளைப் பொருக்கியெடுத்து
அதுமுதல் மீண்டு வாழவிருக்கிறது சிறகிழந்த பறவை…
***********************************
கண்ணாடி ஜன்னலுக்கு
முன்னும், பின்னும்
மழையும், நானும்.
ஜன்னலின் முன்,
மழை பெய்துகொண்டிருக்கிறது.
ஜன்னலின் பின்,
நான் மழையை உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
ஜன்னலைக் கடந்த காற்று
எனக்கு மழையாகிறது.
மழை என்பது துளி மட்டுமல்ல, காற்றும்.
************************************
உன்னையும், என்னையும், யாரையும் பற்றி
நானென்ன புதியதாய்ச் சொல்லிட ?
நாம்,
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற
காற்றடைத்த நுரைகள் மட்டுமே.
****************************************
எவ்வளவு
நூற்றாண்டுகளை,
போர்களை,
மனிதர்களை,
மாற்றங்களை,
ஏமாற்றங்களை,
நெடுஞ்சாலைகளை,
விபத்துக்களை,
கனவுகளை,
பொய்களை,
நிஜங்களைக் கடக்க வேண்டியதாயிருக்கிறது.
ஒரு நாளின் ஒரு இரவைக் கடந்து முடிப்பதற்குள்…