![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/04/reva.jpg)
நம்பிக்கொண்டதின் உள்ளொளிக் கூடு
இருப்பதாய் காண்பித்த ஒத்துழைப்பு
அத்தனை உறுதியாக இல்லாத தோற்றத்தால்
பிழை கூட்டி நயம் செய்கிறது
காத்திருப்பின் பெயராகி
இருப்பு
கரைகிற காலத்தின் மேல் எழுதிக்கொண்ட
வாத்சல்யத்தின் இருமுனை வழிக்குள்
பிறழ்கிற இடைவெளி
தூக்கிச் சுமக்கிறது
நம்பிக்கொண்டிருந்த தோள் சுமையை
இறக்குதல்
இறைஞ்சுதலாகும் கணத்தைத் தான்
தேர்ந்தெடுக்கிறது
பிரியப்பட்டது
இறுதியில்
உத்திரவாதத்தின் வாத நுனியில் ஒட்டப்படுகிற
இலக்கமாகிறது தர்க்கம் தோய்ந்த
கணத்தின்
இதுவரைக்குமானது
ஆனதின் திசை விடுத்து
உடன்வருகிற வெளிச்சத்தை மையமாக்கி
எரிகிறது
சுமை
*********
ஒரு ஆமாம்-மைப் போல் அது
ஆம் அவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டார்கள்
சத்தங்கள் மொத்தமாய் தெறித்துவிடும்
யூகத்தில்
முத்தம் எழுதப்பட்டிருந்தது
ஓர் உயிரை
அதன் மெய் அளவில் பறக்கவைத்தபடி
இட்டுக்கொண்ட இடுகுறிக்குள்
அடங்கிவிடுவதில்லை
பசியளவை அறிந்திடாத பாத்திரம்
சொல் அளவு
சொன்னதின் அளவாக்கும் போது
நிழல் தோகை
மழையாய் விரிகிறது
அசைந்தாடும் மனம்
அர்த்தங்கள் குமிழாக்கி உடையும் வெயில் வண்ணம்
எண்ணிச் சிதற
எடுத்துச் சேர்க்க
கைக்குள் இருக்கிற வானவில்
வளைத்துக் கொடுக்கிறது
முத்தத்தை
போல் முத்தமாய்
ஆம் அவர்கள் அப்படித்தான் நம்பிக்கொண்டார்கள்
*********
நகலாகும் பொழுது
மேடையின் மீது தான்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
ஒரு தனிமை
சமயத்தில்
நானதை தொட்டுத் தொட்டு பார்க்கும் கணத்தில்
ஒட்டிக்கொண்டுவிடுகிறது
உடையும் நிழலுக்கு துணையேற்று
*********