கவிதைகள்
Trending

கவிதைகள்- செ.கார்த்திகா

செ.கார்த்திகா

சுப்புகுட்டி தாத்தனுக்கு
தெரியாத
வேலைனு ஏதுமே
இருந்தது இல்லை

யாருக்கும் அடங்காத
மாட்டை அடக்கி ஒரே
ஆளாய் மூக்கணம்
குத்திப் போடும்

எல்லாருக்கும் ஓடி ஓடி
உழைக்கும் சுப்புக்குட்டிக்கு
ஓய்வுநேர
பொழுதுபோக்கு
குழந்தைகள் தான்

என் சோட்டு குழந்தைகளுக்கு
பனை ஓலையில்
நிலக்கடலை,
கேப்பைக் கிழங்கு
சுட்டு தரும்

பீடிப் புகையை
இழுத்தபடி கண்ணில்
புகை விடுவேன் பார்
என எங்களை நம்ப வைத்து விளையாட்டு காட்டும்

பொக்க வாய்க்கு
வெற்றிலை இடிக்கும்
போதெல்லாம் முறை வைத்து
ஆளுக்கொரு நாள்
வெத்தலை காம்பு தரும்

அரச இலை பீப்பி
தென்னங்குரும்பை பொம்மை
நுங்கு வண்டி
பனை ஓலை காத்தாடி
எல்லாம் சுப்புக்குட்டி அத்துபடி

மூக்கணும் குத்தோணும்
சுப்புக்குட்டிய பாத்தீங்களா
எள் மூட்டை தூக்கணும்
சுப்புக்குட்டிய பாத்தீங்களா

காளைக்கு
இலாடம் கட்டணும்
சுப்புக்குட்டிய பாத்தீங்களானு
குரல் கேட்காத நாளே இல்லை

மாப்ள மருமவனேனு
எல்லோரையும் முறை
வைத்து அழைக்கும்
சுப்புக்குட்டிக்கு
பனியிலும் மழையிலும்
இரவிலும் பகலிலும்
ஆதரவு மடி தந்தது
ஆலமரத்தடி தரை தான்

சுப்புக்குட்டிய பாத்தீங்களா
என்ற கேள்வி
பதில் கிடைக்காது
மீண்டும் மீண்டும்
ஒலித்த ஒரு
காலையில் தான்

ஊர் எல்லையில் நெடும்பனையொன்று
சரிந்து கிடக்கும்
சேதி பரவியது

***************

நேர்த்தியாய் அடுக்கப்பட்ட
எல்லா தின்பண்டங்களையும்
ஒரு முறை நோட்டம் இட்டு
சுருட்டிய பணத்தாள்களை நடுங்கும் கைகளால் விரித்து கொடுத்து பேரனுக்கு ஒன்றும்
பேத்திக்கு ஒன்றும்
வாங்கிய பின்
தன் மகளுக்கு பிடித்த
கடலை மிட்டாய்காக
சில்லறையை பொறுக்கி எடுக்கிற
முதியவரின் பசித்த முகம் நினைவூட்டுகிறது எப்போதும் கடைசியாகவே சாப்பிடும் அப்பாவின் முகத்தை

************

விடுமுறைக்கு வந்திருந்த பவனிக்குட்டி
ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்திச்சாம்…….
என தூக்கத்தில் உளறிய
இரவொன்றில் அறையெங்கும் பூக்களானது
பள்ளித்திறப்புக்கு பின்
எத்தனை குடம்
தண்ணீர் ஊற்றியும்
ஒரு பூக்கூட இங்கு
பூப்பதேயில்லை
அவளின்
அடுத்த விடுமுறை வரை

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button