1972 பங்குனி
ஆத்தியப்பனுக்கு உடலில் எறும்புகள் ஊர்வதுபோல் உணர்வு. காலையிலிருந்தே அப்படித்தான் இருந்தது. இப்படியான உணர்வுகள் வரும்போது அவர் மனதில் இனம்புரியாத சந்தோஷம் கொப்பளிக்கும். ஆண் யானைகளின் காதில் நீர் வடியும் மத்துக்காலத்துக்கு ஒப்பானது அது. ஆனால், இவ்வளவு நாட்களாக இல்லாமல் இன்று திடீரென ஏன் இப்படி என்று தெரியவில்லை. அவருக்கு 59 வயதாகிறது. வேம்பாரிலிருந்து வறுமையான தன் பதின்ம வயதில் விருதுநகருக்குப் பிழைக்க வந்தவர். பஞ்சுப்பேட்டையில் எடுபிடி பையனாக வேலையில் சேர்ந்து அங்கேயே பஞ்சுத் தரகராக மாறி, குறைந்த லாபத்துக்கு சரக்கைக் கைமாற்றிவிட்டு, கொள்முதல் செய்யத் தொடங்கி என இன்று பேட்டையின் பெரிய வியாபாரம் அவருடையதுதான். இப்போது எல்லாம் மகன் கதிரேசன்தான் வியாபாரத்தைக் கவனித்துக்கொள்கிறான். அப்பாவின் பாதி வயது அவனுக்கு.
ஆத்தியப்பன் சராசரிக்கும் கூடுதல் உயரம், மழைக்கால பனைமர நிறம். வெள்ளை டெர்லின் வேஷ்டி, முழங்கை வரை சுருட்டிவிடப்பட்ட வெள்ளைச் சட்டை. தலையில் நிறைய பஞ்சு சொரிந்து கிடப்பது போன்ற அதிகமான வெண்முடிகள். ஆத்தியப்பனுக்கு சிறு வயதிலிருந்தே சரும வியாதி இருந்தது. ஆங்காங்கே மீன் செதில்களைப் போலிருந்த தோல் இப்போது உடலின் பெரும்பான்மையாக மாறிவிட்டது. பாதிநேரம் நமைச்சல் தாங்காமல் உடலைச் சொறிந்துகொண்டேயிருப்பார். அப்படிச் சொறிந்துகொள்ளும்போது கறுத்த அவரின் தோல்களிலிருந்து வெள்ளையாகச் செதில் செதிலாகக் கொட்டும். சொறிந்த இடத்தில் வெள்ளையாக வரிவரிக்கோடுகள் தெரியும்.
கணபதியம்மாள் பின்கட்டில் மதிய உணவு தயார்செய்துகொண்டிருந்தாள். சூரை நாற்காலியிலிருந்து எழும்பி மெள்ள கணபதியம்மாளின் முதுகுப் பக்கமாக உரசியபடியே நின்றார். “இப்படி உடம்பை வெச்சிட்டு சமையல் பண்ற இடத்துக்கு வராதீங்கனு எத்தன தடவ சொல்றேன். சாப்பிடுற சாப்பாட்டுல ஏதாவது பட்டுடப் போகுது…” எரிச்சலாக முகத்தை வைத்துக்கொண்டு தள்ளிப் போகச் சொன்னாள் கணபதியம்மாள். கொஞ்சம் தள்ளிப்போய் நின்றுகொண்டு, ‘இன்னைக்கு ஒரு நாள் மட்டுமாவது’ என்பதுபோலப் பார்த்தார். எரிச்சல் குறையாத கணபதியம்மாளின் முகத்தைப் பார்த்தபடியே சில விநாடிகள் நின்றவர் என்ன நினைத்தாரோ, திடுமென ஓடிப்போய் கணபதியம்மாளின் ஸ்தூலமான உடலைக் கட்டி அணைத்துக்கொண்டார். விலகி, அரிசி களைந்த பாத்திரத்தைக் கோபமாக சமையல் மேடையில் வைத்துவிட்டு நரகலை மிதித்துவிட்டவரைப்போல ச்சீய்… என்று விலகி நின்றுகொண்டார் கணபதியம்மாள். மெள்ள தன்னிடமிருந்து எறும்புகள் கீழிறங்கி தடதடவென ஓடிக் கொண்டிருப்பதைப்போல உணர்ந்தார் ஆத்தியப்பன். அதற்குள் கணபதியம்மாள் கத்தத் தொடங்கிவிட்டாள். “எத்தன தடவ சொல்றது விருப்பமில்லன்னு, இந்த வயசுல கேக்குதோ… எனக்கும் ஒட்டிக்கிறதுக்கா?” ஆத்தியப்பன் முகத்தில் எந்த உணர்ச்சியுமற்று அந்த அறையிலிருந்து வெளியேறினார். மீண்டும் போய் சூரல் நாற்காலியில் உட்கார்ந்தார். முன்புபோல இயல்பாக, சாவகாசமாக அவரால் உட்கார முடியவில்லை. எழுந்து முக்கு ரோடு வரை நடந்துவிட்டு வந்தால் தேவலாம் போலிருந்தது. எழுந்து வெற்றுடம்பின்மீது சட்டையை சாத்திக்கொண்டு வெளியேறினார். பாதிதூரம் நடந்தவர் மேற்கொண்டு செல்லப் பிடிக்காமல் கிட்டங்கிக்குச் செல்லத் தீர்மானித்தார். அடுத்த தெருவில்தான் அவரின் பஞ்சு கிட்டங்கி இருந்தது.
வழியில் சரக்கொன்றை மரமொன்று பூக்களைச் சொரிந்துகொண்டிருந்தது.
அது அப்படியொன்றும் ரசிக்கத்தக்கதல்ல என்பதுபோல நடந்து கிட்டங்கிக்கு வந்தார். வெளியே பெரிய மர உத்திரமொன்றின் மேலிருந்து கிட்டங்கியின் முழங்கையளவு சாவியைத் துழாவியெடுத்துத் திறந்தார். நீளமும் அகலமுமான விஸ்தாரமான பழைய கருங்கல் கட்டடம் அது. மேலே ரெட்டை யானை கொல்லம் ஓட்டால் வேயப்பட்ட கூரை. ஆங்காங்கே அகன்ற மரத் தூண்கள் நடப்பட்டு உத்திரத்தைத் தாங்கிக்கொண்டிருந்தன. கிட்டங்கியின் மூன்றில் இரண்டரை பங்கு இடத்தில் பஞ்சு திணிக்கப்பட்ட பெரிய பெரிய மர நிறக் கோணிகள் அடுக்கப்பட்டுக்கிடந்தன. அந்தக் கிட்டங்கியைப் பார்க்கும் போதெல்லாம் இந்த உலகத்தின் அத்தனை மனிதர்களுக்கும் ஆடை நெய்யவும், அத்தனை நோயாளிகளின் புண்களுக்கும் பஞ்சுகள் இருப்பதாகவும் தோன்றும். ஆனால், இயல்பில் மனிதர் தன் முழங்காலுக்குக் கீழ் சொறிந்து சொறிந்து கொதகொதவென இருக்கும் புண்ணுக்கும் அதில் வடியும் சீழ் நீருக்கும் நுனிப் பஞ்சுகூட இரக்கப்பட்டுக் கொடுக்க மாட்டார். மீண்டும் ஆத்தியப்பனுக்கு அந்த நினைப்புதான் அரிக்கத் தொடங்கியது. காமத்துக்குத்தான் எத்தனை ஆயிரம் கதவுகள். எந்தக் கதவு எப்போது திறக்கும் என்பது யாருக்கும் தெரிவது இல்லை. தெரிந்தாலாவது அடைத்துவைக்கலாம். வயதான உடலிலும் அது திறந்து கொள்வதுதான் கொடுமை. அடைக்கத் தெரியாமல் அவமானப்படுவது அதைவிடக் கொடுமையாக இருக்கிறது என நினைத்துக்கொண்டார் .
அவருக்கு நல்ல சம்போகம் கிடைத்து பத்து வருடமாவது இருக்கும்.
அப்போதெல்லாம் கையிலும், கால்களிலும் இவ்வளவு தோல் அரிப்பும் புண்களும் இல்லை. இப்போது கணபதியும் ஐம்பதைக் கடந்துவிட்டாள். எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோலவே இந்த வயதுக்கான உபாதைகளும், எரிச்சலும் இயல்புதான் என்றாலும், இந்த விலகலுக்கு தோல் வியாதிதான் முக்கியமான காரணமாக இருக்கும். முன்பெல்லாம் அதிகமாக கிட்டங்கியில்தான் விரும்பி தங்கிக்கொள்வார். யாரோ கிட்டங்கிக்குள் வருவது போலிருப்பதைக் கண்டு ஏறிட்டார். கதிரேசன்தான். கையில், பித்தளை தூக்குச் சட்டியும் குழம்பு பாத்திரமும் எடுத்து வந்திருந்தான். முகத்தை இறுக்கமாக வைத்திருந்தான். கணபதி ஏதாவது சொல்லியிருக்கக்கூடும். கால்வாசி ஜாடையாகச் சொன்னாலும் புரிந்துகொள்ளும் பக்குவம் கூடியவன். இல்லையென்றால் அப்பாவிடம் இருந்து இவ்வளவு சீக்கிரமாக வியாபாரத்தைக் கற்றிருக்க மாட்டான்.
கதிரேசனே ஆரம்பித்தான், “கிட்டங்கியிலேயே தங்கிக்கோப்பா… சோறு இங்கேயே கொண்டுவந்துடுறோம். வீட்ல சின்னக் குழந்தையிருக்கு. சாப்பிடுற சாப்பாட்ல விழுந்திருது. நீயும் விடாம பரட்டு பரட்டுனு சொறிஞ்சுக்கிட்டே இருக்க. மதுர பெரியாஸ்பத்ரியில காட்டலாம்னா வேண்டாங்குற. இவ்வளவு சொத்தை வச்சி என்னதான் பண்ணப் போறியோ?’’ சாப்பாட்டை எட்ட வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டான். பொழுதுசாய கதிரேசன் இரண்டு பைகளில் கொஞ்சம் துணிமணிகளையும், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களையும் எடுத்துவைத்துவிட்டுக் கிளம்பினான்.
மனிதர் வீம்பாக அங்கேயே சாப்பிடாமல் படுத்துக்கிடந்தார். இரண்டு நாட்களாக பஞ்சுப் பேட்டைக்கும் செல்லவில்லை. மதிய வேளைகளில் எப்போதாவது லாரிகளில் பெரிய பெரிய சாக்குகளில் பஞ்சுகள் வந்து இறங்கும் அல்லது கிட்டங்கியிலிருந்து வெளியேறிச் செல்லும். இரவு உணவு கொடுக்க கணபதியம்மாள் வந்தபோது கதிரேசனின் சிறு மகளையும் உடன் அழைத்து வந்திருந்தாள். குழந்தை தன்னிடம் வந்தபோதும் சுரத்தே இல்லாதவராக உரையாடினார். மதிய உணவு எடுத்து வந்திருந்த பாத்திரங்களை வொயர் பின்னல் கூடையில் எடுத்து வைத்தபடியே கிட்டங்கி எடுபிடி வேலைக்கு அருகிலிருக்கும் மீசலூரிலிருந்து ஒரு பெண்ணை வரச் சொல்லியிருக்கிறேன் என்றாள். ஆத்தியப்பனிடமிருந்து ஒரு “ம்…, ம்கூம்…” இல்லை.
காலையில் மாநிறத்தில் ஒடிசலான பெண்ணொருத்தி வந்து நின்றாள். கூடவே, கணபதியம்மாளும் வந்திருந்தாள். அவளை ஆவுடைத்தங்கம் என்று அழைத்தாள் கனபதியம்மாள். ஆவுடைத்தங்கத்துக்கு சோபையான முகம். ஆனால், அவள் கண்கள் அவ்வளவு தீர்க்கமாக நிரம்ப ஒளியுடன் இருந்தன. எதற்கோ பின்னால் திரும்பி நடந்தாள்.
நெளு நெளுவென நீளமான கூந்தல் அவள் புட்டம் வரை இருந்தது.
33வயது மதிக்கலாம். கணபதியம்மாள் சென்றதும் கிட்டங்கியின் அகன்ற வாசலில்போய் அமர்ந்து அவசியமற்ற ஏதோ ஒன்றை நிலைகுத்திப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஆத்தியப்பன், காலையில் பேட்டை வரை போய்விட்டு நடுமதியம் கிட்டங்கிக்கு வந்தார். அப்போதும் ஆவுடைத்தங்கம் கிட்டங்கி வாசலிலேயே நிலைகுத்தி உட்கார்ந்திருந்தாள். அவர் நுழைந்ததும் எழுந்துபோய் தண்ணீர் எடுத்துவந்து சொம்பை நீட்டினாள். கிட்டங்கியில் ஏதோ மாற்றம் வந்திருப்பதை உணர்ந்தார். கொஞ்சம்கூட தரையில் உதிரிப் பஞ்சுகள் இல்லை. சிறு பஞ்சு தெறிப்புகளைக்கூட கவனமாக அள்ளி சாக்குகளின் உப்பலான வயிற்றில் திணித்திருந்தாள் ஆவுடைத்தங்கம். உணவுப் பாத்திரங்களைக் கொண்டுவந்து ஆத்தியப்பன் அமரும் கட்டிலின் முன்னால் பரப்பினாள். சிறிது சத்தம்கூட இல்லாமல் அந்தப் பாத்திரங்களை அவள் எடுத்துவைக்கும் முறை அவருக்குப் பிடித்திருந்தது. எடுத்துவைத்த முதல் வாயிலேயே உணவின் சுவை மாறியிருப்பதை உணர்ந்தார். பின் கட்டிலில் படுத்தபடி சிறிதுநேரம் பனை ஓலை விசிறியால் தனக்குத்தானே விசிறியபடியே உறக்கத்தை எதிர் நோக்கியபடியிருந்தார். சிறிது நேரத்துக்குப் பின் மிச்ச உணவுகளை உண்டு முடித்து பாத்திரங்களைக் கழுவி வெயில் விழும் இடத்தில் கவிழ்த்து வைத்தாள். ஆவுடை மீண்டும் வாசலில் போய் குத்துக்கால் போட்டு அமர்ந்துகொண்டாள்.
மதியம் மூன்று மணியிருக்கும். அப்போது வாசலில் இரண்டு மருத்துவச்சிகள் வெள்ளை நிற உடையோடு சைக்கிளில் வந்து இறங்கினார்கள். ஒரு பெண்ணின் கேரியரில் சாம்பல் நிறப் பெட்டி ஒன்று இருந்தது. பெட்டியில், கறுப்பு பட்டையாய் தோளில் சாய்த்துக்கொள்ளும் நீளப் பிடியும் இருந்தது. “பெரியவர உசுப்புங்க… வீட்டுக்குப் போனோம்… கிட்டங்கில இருக்கார்னு சொன்னாங்க” சத்தம் கேட்டு ஆத்தியப்பனே எழுந்தார். அந்த இரு பெண்களும் ஆவுடையிடம் பேச்சை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தார்கள். ஆத்தியப்பன் அதற்குள் முகம் கழுவிவிட்டு சட்டையை மேலே சாத்தினார். ஆவுடையும் உள்ளே நுழைந்தாள். இருவரில் இளையவளான மருத்துவச்சி வெந்நீர் கொண்டுவரச் சொல்லி கிட்டத்தட்ட உத்தரவிட்டாள். ஆவுடை ஏதும் புரியாமல் கிட்டங்கியின் வெளியே போய் அடுப்பைப் பற்றவைத்தாள்.
அவள் வெந்நீரோடு உள்ளேறும்போதுதான் கவனித்தாள். ஆத்தியப்பன் தன் வேஷ்டியை முழங்கால் வரை ஏற்றிவிட்டிருந்தார். இரண்டு கால்களின் கீழும் அழுக்கேறிய சல்லாத்துணி சுற்றப்பட்டிருந்தது. மஞ்சளும் ரத்தம் கசிந்த கறையும் அதில் இருந்தன. அதில் மூத்த பெண் அந்தத் துணியை உரித்தாள். உள்ளிருந்து துண்டுத் துண்டாக பஞ்சு உதிர்ந்தபடியிருந்தது. முகத்தைச் சுளித்தபடியே அந்தப் பெண் எல்லா துணிகளையும் விருப்பமற்று இரு விரல்களால் தள்ளிப் போட்டாள். இன்னும் புண் ஆறவே இல்லை என்றாள் இளையவள். ஆவுடையிடமிருந்து வெந்நீரை வாங்கி அவரின் கால்களின் கீழே வைத்தபடியே, கொஞ்சம் பஞ்சுகளை வெந்நீரில் முக்கி புண்களின் மேலிருந்த மஞ்சள் களிம்பின் அழுக்கையும் ரத்தம் மற்றும் சீழ் வடிந்த கறையையும் அவர்கள் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். பருமனான மூத்த மருத்துவச்சி அந்தப் புண்களை இறந்த எலியைப் பார்ப்பதுபோலப் பார்த்தாள். ஆவுடை, தன் கண்களை அந்தப் புண்களின் மீதிருந்து நீக்கவே இல்லை. அவளின் கண்களில் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தது. சில நிமிடங்களில் புண்கள் முழுக்கச் சுத்தம் செய்யப்பட்டு குளிப்பாட்டி முடித்த குழந்தையைப் போலிருந்தது. ஆவுடையின் கண்களில் நீரின் பளபளப்பும் பிரயாசையுமிருந்தன. மூத்தவள் இப்போது களிம்பு டப்பாவை எடுத்து இரண்டு விரல்களால் மஞ்சள் களிம்பை அள்ளி புண்ணின் மேல் அப்பத் தொடங்கினாள். இளையவள் இப்போது சல்லாத் துணியையும், பஞ்சையும் தேவையான அளவுக்கு அருகில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். புண்ணை மீண்டும் மூடப்போவதை ஆவுடையால் தாங்க முடியவில்லை. மௌனமாக அழத் தொடங்கினாள். அவளை அறியாமலேயே கண்களிலிருந்து கயிறுபோல கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. அவளுக்கே இந்தச் செய்கை வியப்பாக இருந்தது. நோய்மை பீடிக்கப்பட்ட அந்த இரண்டு கால்களையும் இரு குழந்தையைப்போல பாவிக்கத் தொடங்கிவிட்டாள். தன் மேல் அன்பு செலுத்தவும், தான் அன்பு செலுத்தவும் யாருமே இல்லாத இந்த வாழ்க்கையில் அந்த இரண்டு கால்களின் மீதும் இரக்கமும் காருண்யமும் கொப்பளிக்கத் தொடங்கியது. இப்போது மூத்தவள் கால்களில் சல்லாத் துணியைச் சுற்றத் தொடங்கினாள். ‘என் பிள்ளைகளின் மேல் துணியைச் சுற்றி மூடாதே… மூடாதே…’ என்று வாய்விட்டு கத்திவிடலாம் போலிருந்தது ஆவுடைக்கு. சேலை நுனியால் வாயை மூடி, துணியை இறுக்கக் கடித்துக்கொண்டாள்.
அந்த இடத்தைவிட்டு தன் பார்வையை மாற்றினாள். ஆத்தியப்பன் தன் சட்டைப் பையிலிருந்து ஓர் ஐந்து ரூபாய் தாளை எடுத்து மூத்த மருத்துவச்சியின் கையில் கொடுத்தார். அது அவர்களுக்கு ஏமாற்றமான தொகையாக இருக்கும்போல, விருப்பம்இல்லாமல் வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள். ஆவுடையின் கண்ணில் இப்போது புண்களிருக்கும் அந்த இரு கால்கள் மட்டுமே தெரிந்தன. வேறு எல்லாமே அவளின் பார்வையிலிருந்து மறைந்திருந்தது. மௌனமான அந்த இரு புண் குழந்தைகள் மட்டுமே அவளுக்கு திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தபடி இருந்தன.
வாசலில் போய்க் குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டாள். அமர்ந்தபடியே உறங்கத் தொடங்கியவள் இரவுதான் விழித்தாள். கிட்டங்கி முழுக்க மென் மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்தது. மஞ்சள் குண்டு பல்ப் மட்டும் ஆத்தியப்பனுக்கு நேர் மேலே எரிந்துகொண்டிருந்தது. எழுந்ததும் துணி சுற்றியக் குழந்தைக்கு மூச்சு முட்டுமென பித்துக்காரியைப்போல் வேஷ்டியை முழங்கால் வரை உயர்த்த முற்படுகையில் ஆத்தியப்பன் விழித்துக்கொண்டார். என்னவென்று காரணம் கேட்டபோது தீர்க்கமாகச் சொன்னாள். “புண்களைப் பார்க்க வேண்டும்!”ஆத்தியப்பன் புரியாதவராக நெற்றியைச் சுருக்கியபடி மீண்டும் கேட்டார். “என்னது?” மீண்டும் அதையே தீர்க்கமாகச் சொன்னாள். “அந்தப் புண்களைப் பார்க்கணும். என் ஊரில் நாட்டுவைத்தியர் ஒருவர் இருக்கிறார். ‘காலில் புண் வந்தால் அதை இறுக்கமாகக் கட்டக் கூடாது. உலரவிடணும்.’ என்று சொல்வார்.” “சரி இந்த நேரத்தில் அதற்கு என்ன செய்ய?.” “புண்ணின் மேலிருக்கும் கட்டை அவிழ்க்கணும்.” “காலையில் அவிழ்த்துப் போடலாம். போய்த் தூங்கு…” சொல்லி முடிப்பதற்குள்…
கட்டிலிலிருந்து தொங்கப்போட்டு கிடக்கும் கால்களின் அருகில் போய் அமர்ந்துகொண்டாள். ஆத்தியப்பன் குழப்பமாகப் பார்த்தார். ஆவுடை, அவரின் கால்களைப் பிடித்து கட்டுகளை அவிழ்க்கத் தொடங்கினாள். விறுவிறுவென கட்டுகள் அவிழ்ந்தன. அவளுக்கு மட்டும் பெருமூச்சு வாங்கும் குழந்தையின் மூச்சுச் சத்தம் தெளிவாகக் கேட்டது. களிம்புகளை அதே பஞ்சினால் எடுத்து வழித்துப் போட்டாள். ஆவுடையின் முகம் பிரகாசமடைந்தது. கண்கள் மினுங்கின. மிகுந்த பிரயாசையோடு பார்த்தாள். போய்ப் படுத்துக்கொள்ளச் சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு புண்களிருக்கும் திசைநோக்கி திரும்பிப் படுத்துக்கொண்டாள். சிறு மஞ்சள் பல்பின் வெளிச்சத்தில் புண்கள் தெளிவற்றும் தெளிவாகவும் தெரிந்தன. காலையில் ஆத்தியப்பன் எழுந்து பேட்டை வரை சென்று வந்தார். மதியம் வரும்போது வாசலில் மேல்சட்டை அணியாத கிராமத்துப் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். ஆத்தியப்பனைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினார். மீசலூரிலிருந்து வந்திருப்பதைச் சொன்னதும் காரணம் புரிந்தது. லாரி ஒன்று கிட்டங்கியில் பஞ்சுப் பொதிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. கதிரேசன் உள்ளே இருப்பானா என எண்ணினார். ஆனால், கதிரேசன் தன் மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துகொண்டிருந்தான். விறுவிறுவென உள்ளே சென்று பார்த்தார். பஞ்சு எடை பார்த்து விலாசம் போட்டுக்கொண்டிருந்தாள் ஆவுடை. எப்போதும் எடைபோடும் இடத்தில் யாராவது நிற்க வேண்டும். கதிரேசன் ஒன்றும் சொல்லவில்லை.
லாரி கிளம்பிச் சென்றதும் மீசலூர் பெரியவர் ஆத்தியப்பனின் வேட்டியை முழங்காலுக்கு ஏற்றி, புண் கால்களுக்குப் பண்டுவம் பார்க்கத் தொடங்கினார். கால்களுக்கு ஆமணக்கு எண்ணெய் போன்ற நீர்மைகொண்ட திரவம் ஒன்றை, தான் எடுத்துவந்திருந்த கோழி இறகால் பூசி விட்டார். அதில் அடர்த்தியான கசப்பு நெடி வீசியது. உடலில் வேறு எங்கெல்லாம் அரிப்பின் தீவிரம் இருக்கிறது என்று கேட்டார். தினமும் அதே திரவத்தை இருவேளை பூசிக்கொள்ளும்படியும் விரைவில் புண்கள் உலர்ந்துவிடும் என்றும், பத்து நாள் கழிந்தபின் வந்து மீண்டும் பார்ப்பதாகவும் சொல்லிவிட்டுக் கிளம்பினார். ஆத்தியப்பன் வேட்டியைத் தன் முழங்காலுக்கு மேல் மடித்து விட்டபடி கிளம்பிவிட்டார். தினமும் காலையிலும் இரவிலும் ஆவுடையே அந்தப் புண்களின் மேல் கோழி இறகால் மருந்து பூசிக்கொண்டிருந்தாள். புண்கள் உலரவில்லை என்றாலும், இப்போது எல்லாம் அரிப்பு பெரும்பாலும் அடங்கிவிட்டிருப்பதாகச் சொன்னார்.
கோடையின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒரு நாள் இரவு கோடைமழை அடைமழையாகப் பிடித்துக்கொண்டது. மழை பெய்யத் தொடங்க நினைக்கையிலேயே அவசரமாக வெளியே கிடக்கும் பஞ்சு நிரம்பிய ஓரிரு போராக்களையும் காலி சாக்குகளையும் பிசிறு பஞ்சுகளையும் ஒற்றை ஆளாக அள்ளி கிட்டங்கிக்குள் வைத்திருந்தாள். மழை உரத்துப் பெய்யத் தொடங்கியது. மழையோடு ஆத்தியப்பன் அவள் வைத்திருந்த புளிப்பு ஊறிய பூண்டுக் குழம்பைப் போட்டு சாப்பிட்டு முடித்து உடலைக் கட்டிலில் கிடத்தினார். ஆவுடை, எண்ணெய்ப் புட்டியோடு அவர் அருகில் வந்து நின்றாள். புண்கள் என்னும் தன் இரட்டைக் குழந்தைகளை அந்தக் குறை மஞ்சள் வெளிச்சத்தில் பார்த்தபடியே நின்றாள். வெளியே பெய்யும் மழை மண்வாசனையை மட்டுமல்லாமல் அவளின் உடலுக்குள்ளிருந்து தாய்மையைக் கிளர்த்தியது.
ஏதோ நினைத்தவராக எழுந்து அமர்ந்தார். வேட்டியை முழங்காலுக்கு மேலே சுருட்டிவிட்டபடி மருந்து தேய்த்துக்கொள்ள கால்களை ஆயத்தப்படுத்தினார். பெரும் உவப்பான ஒரு காரியத்தைச் செய்ய இருப்பவளைப்போல ஆவுடை பரபரப்பாக கோழி இறகைத் தேடினாள். வழக்கமாக நான்கு ஐந்து முறை பயன்படுத்திய இறகை தூக்கி எறிந்துவிடுவாள். எப்போதும் இறகுகளை வைக்கும் ஓட்டின் கீழிருக்கும் மர உத்திரத்தில் கையை விட்டுத் துழாவினாள். ஓரிரு இறகுகள் சிக்கின. அது எல்லாவற்றிலும் ஆத்தியப்பன் காது குடைந்த அழுக்கு அப்பிப் போயிருந்தது. தன் குழந்தைகளின் மேல் இப்படியான இறகை வைத்து தடவிக்கொடுக்க விரும்பாதவளாக வெறும் கையோடு போனாள். கால்களின் கீழ் அமர்ந்து குழந்தைகளை அவ்வளவு பிரயாசையோடும் வாஞ்சையோடும் பார்த்தாள். பின், தன் பிருஷ்டம் வரையிருக்கும் நீண்ட கருத்த முடியின் நுனியை முன்னெடுத்து மருந்து எண்ணெய்க் கிண்ணத்துக்குள் முக்கி எடுத்தாள். விநோதமாகப் பார்த்தார் ஆத்தியப்பன். ஆனாலும், தடுக்கவில்லை. மெள்ள புண்களின்மீது எவ்வளவு மென்மையாகத் தொடமுடியுமோ அப்படித் தொட்டுத் தடவினாள். ஏசுநாதருக்கு மக்தலீனா தன் நீண்ட சுருள் கூந்தலால் தொட்டு அவரின் பாதத்தில் பரிமள தைலத்தைத் தோய்த்த சம்பவத்தைப் போன்றிருந்தது அது. அந்தக் குழந்தைகள் மெள்ள கண்கள் சொருகி அதை ஏற்றுக்கொள்வதைப்போல உணர்ந்தாள்.
ஆத்தியப்பனுக்கு சிலிர்ப்பு அடங்கவே இல்லை. இவ்வளவு நாளில் உடல் இவ்வளவு பரவசம் கொண்டதை அவர் உணர்ந்ததே இல்லை. தவிர தன் வாதையான முதிய உடலை இவ்வளவு மரியாதையாக ஒரு பெண் கையாள்வதைப் பார்த்ததும் அவருக்கு உடைந்து அழுதுவிட வேண்டும்போலிருந்தது. புண்களின்மீது இறகால் வருட வருட, தன் உடலிலிருந்து சட்டென்று ஆயிரம் கதவுகள் திறந்துகொண்டதை உணர்ந்தார். கடிவாய் இல்லாத கறுப்பு எறும்புகள் லட்சக்கணக்கில் உடலெல்லாம் ஏறி அங்குமிங்குமாக ஊர்வதுபோல உணர்ந்தார். சிலிர்ப்பின் உச்சத்தில் காலருகே அமர்ந்திருக்கும் ஆவுடையின் தோளில் தன் கரங்களை வைத்தார். சரிந்து தரையில் அமர்ந்து இறுக ஆவுடையை அணைத்துக்கொண்டார். ஆவுடை மறுப்பேதும் சொல்லவில்லை. கட்டிலில் உடலைக் கிடத்த உந்தப்பட்டபோது ஆத்தியப்பன் ஆடைகளை உரித்துப் போட்டிருந்தார். ஆவுடை, தயக்கம்கொண்டவளாக தன் குழந்தைகளின் முன்னால் செய்ய இயலாதக் காரியம் என்பதைப்போல மஞ்சள் வெளிச்சத்தை முற்றிலும் நிறுத்தினாள். சிறிது நேரத்திற்குப் பின் ஆத்தியப்பன்தான் மீண்டும் வெளிச்சத்தை மீட்டுக்கொண்டுவந்தார். முற்றிலும் எடை இழந்த மனிதரைப்போல அமர்ந்திருந்தார். கண்களில் ஈரம் கசிந்திருந்தது. திடுமென விம்மி அழ வேண்டும்போலிருந்தது அவருக்கு. நிமிராமல் குனிந்தே இருந்தார். சற்றுத் தள்ளி சுவரில் சாய்ந்தபடி ஆவுடை அமைதியாக நிலைகுத்தி தன் பிள்ளைகளை மீண்டும் பார்த்தபடியிருந்தாள். இருவருமே பேசத் துணியவில்லை . அங்கே நெடுநேரம் மஞ்சள் அமைதி மட்டுமே இருந்தது. ஆத்தியப்பனுக்கு உடலில் இப்போது கடி எறும்புகள் லட்சக்கணக்கில் ஏறி கடிக்கத் தொடங்கியதைப்போல உணர்ந்தார். வலிபொறுக்கமாட்டாதவராக ஆவுடையிடம் தயக்கத்துடன் பேசத் தொடங்கினார்.
முதல் வார்த்தையாக, “உன் குழந்தை எங்கே?” ஆவுடை சட்டென நிமிர்ந்து பார்த்துவிட்டு குனிந்தபடியே அமர்ந்தாள். தயக்கமாக ஆத்தியப்பன் மீண்டும் கேட்டார், “உன் மார்பில் இன்னும் பால் கசிகிறது.” பேச்சை நிறுத்தினார். ஆவுடையின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழத்தொடங்கின. வந்து அருகில் உட்கார்ந்தார். அவளின் பாதத்தில் கையை வைத்து, தன்னை மன்னித்துவிடும்படி கூறினார். ஆவுடை, அதை பெரிதாகச் சட்டை செய்யவில்லை. மீண்டும் குனிந்து கண்ணீர் சிந்தியபடியே இருந்தாள். மீண்டும் தயக்கத்துடன் கேட்டார், “உன் குழந்தை எங்கே?”
“செத்துப்போச்சி!” நெற்றி சுருக்கத்தோடு கூர்ந்து அவளைப் பார்த்தார். “ஆமா செத்துப்போச்சி…” துக்கம் பீடித்தக் குரலில் பேசத் தொடங்கினாள். “எங்க அப்பா சமையல் செட்டுல வேலைக்குப் போனாரு. கல்யாணம் காட்சிக்கு சமைச்சிப் போடுவாரு. அவர்கூட வேலைபார்த்த பாண்டிக்குத்தான் என்னைக் கல்யாணம் பண்ணி வச்சாரு. மருமகனும் மாமனும் ஒண்ணா உக்காந்து சாராயம் குடிப்பாங்க. கல்யாணம் பண்ணி வச்ச மூணு மாசத்துல அப்பா இறந்துபோயிட்டாரு. ஏழு மாசத்துல புருஷன்காரன் விட்டுட்டு ஓடிட்டான். சமையல் செட்டுல வேலபாத்த சண்முக அக்காவ இழுத்துட்டு ஓடிப்போயிட்டான். அப்ப, என் வவுத்துல புள்ளைய விட்டுட்டுப் போயிருந்தான். ஒத்தையா கழுத்துல கிடந்தத வெச்சு அஞ்சி மாசம், காதுல கிடந்தத வெச்சு ரெண்டு மாசம்னு ஓட்டுனேன். என் அப்பாவோட சிநேகிதர் ஒருத்தர் மாரியப்பன்னு… மரக் கடையில வேல பாத்தாரு. வலி எடுத்த நாளுல விருதுநகர் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்து விட்டுட்டு போனாரு. மூணு நாளா ஆளே வரல. ரெண்டாம் நாளில குழந்தையப் பெத்து போட்டேன். விரிப்புத் துணிகூட இல்லாம மார்கழி மாசம் வெளி வராந்தாவுல கிடத்திட்டுப் போனாங்க. குழந்தை ராத்திரி எல்லாம் அழுதுச்சு. பக்கத்துல படுத்துக்கிடந்தவங்கதான் விரிப்புக்கு ஓலைப்பாயும் போர்த்த கொஞ்சம் துணியும் கொடுத்தாங்க. விடியும்போது குழந்தை விறைச்சுக் கிடந்துச்சு. ஊருக்குக் கொண்டு வரவும் நாதியில்லை. அங்கேயே புதைச்சிருவோம்னு சொன்ன கம்பவுண்டர் விடாப்பிடியா பன்னிரண்டு ரூபா கேட்டான். விறைச்ச உடம்பை கையில ரெண்டு மணி நேரம் வச்சிருந்திட்டு குடுத்திட்டு வந்துட்டேன். ஒரு ரிக் ஷா வண்டி பிடிச்சி ஏறினேன். கிளம்பும்போது கம்பவுண்டர், ஆஸ்பத்திரிக்கி பின்னாடி குப்பைத் தொட்டில பெரிய சருவத் தாளுல சுத்தி எதையோ எறிஞ்சதைப் பார்த்தேன். ரெண்டு மூணு நாய்ங்க வேகமா ஓடிப் போச்சி… நான் ரிக் ஷாவுல உக்கார்ந்தபடியே பலகீனமான என் கையை மட்டும் அசைச்சு நாய்களை விரட்ட முயற்சி பண்ணினேன். முடியலை. அப்போ அது மட்டும்தான் முடிஞ்சது.” சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆவுடை உடைந்து அழத் தொடங்கினாள்.
“சாப்பாட்டுக்கு வக்கில்லாம எங்கயாவது வீட்டு வேலை பார்க்கலாம்னு பழையபடி விருதுநகர் வந்து மரக்கடை மாரியப்பனைப் பாத்தேன். அவர்தான் ஏலக்காய் கடை குணசீலன் அண்ணாச்சி கடைல போய் வேலை பார்க்கச் சொன்னாரு. அவரின் மாமியார் தொண்டுகிழம். நடை கிடையாது.பீ மூத்திரம் அள்ளிப்போட ஆள் இல்லை. மூணு மாசம் இருந்தேன். மூணு மாசத்துல கிழவி செத்துப்போச்சு. கொஞ்ச நாள்ல என்னையக் கிளம்பச் சொன்னாங்க. பழையபடி மாரியப்பனைத்தான் வந்து பார்த்தேன். இந்தத் தடவை வேற ஒரு வேலை பார்த்துக் கொடுக்கிறதாச் சொல்லி ஊரோட ஒதுக்குப்புறத்தில ஒரு வீட்ல தங்க வெச்சார். அன்னிக்கு ராத்திரியே குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து, பல தடவை…’’ எனச் சொல்லிவிட்டு அழுதாள். “அவருக்கு என் அப்பா வயசு’’ எனச் சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள்.
ஆத்தியப்பன் “என்னை மன்னிச்சுடு…மன்னிச்சுடு…’’ என்று அவளின் பாதத்தில் விழுந்தார். அவள் இறுக்கமாக மௌனமாக இருந்தாள். “இங்கிருந்தும் போயிடுவியா?” என்று கேட்டார் . மௌனமாகத் தீர்க்கமாகத் தன் குழந்தைகளைப் பார்த்தபடியே இருந்தாள். எந்த அசைவும் இல்லை.
காலையில் விடிந்ததும் முதல் வேலையாக ஆவுடை இருக்கிறாளா எனத் தேடினார். ஆவுடை அங்கேதான் கிட்டங்கியின் வெளியே தகரக் கொட்டகையில் சமைத்துக்கொண்டிருந்தாள். அந்த இரவுக்குப் பிறகு, ஆத்தியப்பன் தொடர்ந்து எடையற்ற மனிதனாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். கால்களின் புண்களும் முழுக்க ஆறவே இல்லை. நீர்மையான அந்த எண்ணெய்ப் பூச்சு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஆவுடையின் நுனிக் கூந்தலைத் தொட்டுத்தொட்டு பூசப்பட்டே வந்தது. இருவரும் அதை விரும்பினார்கள். புண்கள் விரைந்து ஆறாமல் இருக்க வேண்டுமென்பதே இருவரின் தலையாயப் பிரார்த்தனையாக இருந்தது. கணபதியம்மாளுக்கு நிறையவே புரிந்துகொள்ள முடிந்தது. ஆவுடையைத் தன் சகோதரியைப்போல் பாவிக்கத் தொடங்கி இருந்தாள். ஒரு நாள் அதிகாலையில் கிட்டங்கிக் கயிற்றுக் கட்டிலில் நீண்ட நேரம் உத்திரத்தைப் பார்த்தபடி இமைக்காமல் ஆத்தியப்பன் கிடந்தார். வேகமாக ஆவுடை முழங்கால் வரை வேஷ்டியை உயர்த்தி தன் இரு குழந்தைகளின் மீதும் கையைவைத்துப் பார்த்தாள். இரண்டு குழந்தைகளும் சில்லிட்டு கிடந்தன. இவர்கள் இருவரையும் தவிர, தன் பெரும் காருண்யத்தை செலுத்த இந்த உலகில் இனி எவரும் இல்லை என்பதுபோல முடங்கிப்போய் கிட்டங்கியின் வாசலில் போய் அமர்ந்துகொண்டாள்.
கதிரேசன் எதார்த்தமாக அப்போது கிட்டங்கிக்கு வந்தான். கணபதியம்மாள் ஓடி வந்தாள். எல்லா சடங்குகளும் இங்கே கிட்டங்கியிலேயே நடக்க வேண்டுமெனச் சொன்னாள். ஆவுடைதான் ஆத்தியப்பனை இறுதிக் குளியல் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டாள். கதிரேசன் மறுத்துப் பேசவில்லை. நீர் வசதி இருக்கும் இடத்தில் ஒரு பெரிய நாற்காலியில் கொண்டுபோய் ஆத்தியப்பனை அமரவைத்துவிட்டு கதிரேசன் கிளம்பினான். கணபதி, ஆவுடையை அந்த இடத்திற்கு அழைத்து வந்தாள். பெரிய பித்தளை அண்டாவில் நீர் நிரம்பி இருந்தது. சிறிதுநேரம் கழிந்து கதிரேசன் வந்தான். ஆத்தியப்பனின் வேஷ்டியை முழங்கால் வரை ஏற்றி விட்டு இரு கால்களுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றியபடியிருந்தாள். கதிரேசன் அங்கிருந்து நகர்ந்துபோய் இன்னும் இன்னும் நீரை அள்ளிக்கொண்டுவந்து அண்டாவை நிரப்பினான். ஐந்தாம் முறை நீர் ஊற்ற வருகையில் ஆவுடை, தன் நீண்ட கூந்தலால் தன் இரு குழந்தைகளையும் தொட்டு தொட்டு ஈரத்தை ஒத்தி எடுத்துக்கொண்டிருந்தாள். கணபதியம்மாள் ஆவுடையை எங்கேயும் போக வேண்டாமென்றும் தன்னோடே தங்கிவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாள். ஆவுடை மறுத்துவிட்டாள். வேண்டுமென்றால், கிட்டங்கியில் தங்க அனுமதிக்கும்படி கேட்டாள்.
மூன்று மாதம் ஆகியிருந்தது. இந்த மூன்று மாதத்தில் தன் தலைக்கு நீர்காட்டாமல் வைத்திருந்தாள். இறந்த குழந்தைகளின் வாசம் அதில் வீசுகிறதா என தினமும் தன் கூந்தலை முன்னால் இழுத்து நுகர்ந்தபடியே இருந்தாள். சில நாட்களில், ஆவுடை கடுமையான டைஃபாய்டு காய்ச்சலில் அவதிப்பட்டாள். காய்ச்சலின் முடிவில் அவளின் முடிகள் எல்லாம் கிட்டத்தட்ட கொட்டிப்போயிருந்தது. புட்டம் வரை இருந்த கருத்த கேசம் இப்போது பிடரி வரைகூட இல்லாமல் அதுவும் கிட்டத்தட்ட நோய்மை பூத்து கரும்பித்தளை நிறத்தில் இருந்தது.
(இந்த சிறுகதை விகடன் ‘தடம்’ பிப்ரவரி 2017 இதழில் வெளியானது. ஆசிரியரின் முறையான அனுமதி பெற்று ‘கதைக்களம்’ பகுதிக்காக சேர்க்கப்பட்டுள்ளது.)