மொழிபெயர்ப்புகள்
Trending

அதங்கம் – ப்ரைமோ லெவி (தமிழில் – பிரபாகரன்)

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

இத்தாலிய மூலம் – ப்ரைமோ லெவி.

ஆங்கிலத்தில் – ரேமண்ட் பி. ரோசென்டல்.

தமிழில்– பிரபாகரன்.

என் பெயர் கோட்மண்ட் (Kodmund). நான் தொலை தூரத்திலிருந்து வருகிறேன். எனது நாடு தியுடா (Thiuda) என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்சம் நாங்களாவது அதை அப்படி அழைக்கிறோம். ஆனால் எங்கள் அயலவர்கள், அதாவது எம் எதிரிகள், எங்களின் நாட்டிற்கு சாக்ஸா (Saksa), நெமட் (Nemet), அலமன் (Alaman) போன்ற வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எனது நாடு இந்த வார்த்தைகள் தரக்கூடிய அர்த்தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எங்கள் நாடு அடர்ந்த காடுகள் மற்றும் நீண்ட ஆறுகள், நெடிய குளிர்காலம், சதுப்பு நிலங்கள், மூடுபனி மற்றும் வளமான மழை ஆகியவற்றைக் கொண்டது. என் மக்கள் – அதாவது என் மொழியைப் பேசுபவர்கள் – மேய்ப்பர்களாகவும் வேட்டைக்காரர்களாகவும் மற்றும் போர்வீரர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் நிலத்தில் பயிரிட விரும்புவதில்லை. இன்னும் உண்மையாக சொல்லப்போனால் அவர்கள் நிலத்தைப் பயிரிடுகிறவர்களை இழிவுபடுத்துகிறார்கள். தங்கள் மந்தைகளை அவர்களது வயல்களில் ஓட்டிச் செல்கிறார்கள். அவர்களை, அவர்களது கிராமங்களிலிருந்து வெளியேற்றம் செய்கிறார்கள். மேலும் அவர்களின் பெண்களை தங்களது அடிமைகளாக்குகிறார்கள். நான் ஒரு மேய்ப்பனோ போர்வீரனோ அல்ல. அவ்வளவு ஏன்? நான் ஒரு வேட்டைக்காரன் கூட இல்லை. இருப்பினும் எனது வர்த்தகம் வேட்டைக்காரர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டதல்ல. அது என்னை நிலத்துடன் பிணைக்கிறது. இருந்தாலும் நான் சுதந்திரமாக இருக்கிறேன். நான் ஒரு நிலத்தை சொந்தமாக வைத்தோ அல்லது அதை குத்தகைக்கு எடுத்தோ பயிர் விளைவிக்கும் ஒரு சிறு விவசாயியும் அல்ல.

ஒரு குறிப்பிட்ட கனமான பாறையை அறிந்து கொள்வது, தொலைதூர நாடுகளில் அவற்றைக் கண்டறிவது, நமக்குத் தெரிந்த ஒரு குறிப்பிட்ட வழியில் அதனை சூடாக்குவது, அதிலிருந்து கறுப்பு அதங்கத்தைப் (ஈயம்- Lead) பிரித்தெடுப்பது போன்ற செயல்களைக் கொண்டிருக்கும் இந்த வர்த்தகத்தை எனது தந்தையும், தந்தைவழி மரபில் உள்ள பிற ரோட்மண்ட்ஸும் (Rodmunds) எப்போதும் செய்துகொண்டிருக்கிறோம். என் கிராமத்திற்கு அருகில் பெரிய பாறை அடுக்குகளாலான ஒரு படுகை இருந்தது. நீல நிறப் பற்களை உடைய ரோட்மண்ட் என்று அழைக்கப்படும் எனது முன்னோர்களில் ஒருவரால் இது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது லெட்-ஸ்மித்ஸ் (Lead-smiths) கிராமம் என்பதால் இங்குள்ள அனைவருக்கும் அந்தப் பாறை அடுக்குகளை உருக்கி அதை வைத்து வேலை செய்வது எப்படி என்று தெரியும். ஆனால் ரோட்மண்ட்ஸாகிய எங்களுக்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட பாறையைக் கண்டுபிடித்து அது உண்மையான அதங்கப் பாறையா என்பதை உறுதிப்படுத்த முடியும். மேலும் மனிதர்களை ஏமாற்றுவதற்காக கடவுள்கள், மலையின் மீது பரவியிருக்கும் பல கனமான பாறைகளில் ஒன்றைக் கூட அவர்களுக்குக் காட்டவில்லை. அந்தக் கடவுள்கள்தான் நிலத்தின் கீழ் உருவாகி வளரக்கூடிய உலோகங்களின் நரம்புகளை உருவாக்கியது. ஆனால் அவை இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கண்டுபிடிப்பவர் கிட்டத்தட்ட அந்தக் கடவுளுக்குச் சமமானவர் என்பதால் அந்தக் கடவுள்கள் அவரை நேசிப்பதில்லை. அவரைக் குழப்ப முயற்சிக்கின்றன. அந்தக் கடவுள்கள் ரோட்மண்ட்ஸாகிய எங்களை நேசிப்பதில்லை. ஆனால் நாங்கள் அது பற்றி கவலைப்படுவதில்லை.

இப்போது, ​​ஐந்து அல்லது ஆறு தலைமுறைகளில் அந்தப் படுகை தீர்ந்துவிட்டது. யாரோ ஒருவர் அவை இருந்த நிலத்தின் கீழேயும் சுரங்கங்களைத் தோண்டியும் அவற்றைப் பின்பற்ற பரிந்துரைத்தார். அதைச் செய்ய முயற்சித்தாலும் அதனால் இழப்புதான் ஏற்பட்டது. இறுதியாக மிகவும் விவேகமானவர்களின் கருத்து இங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லா ஆண்களும் தங்கள் முந்தைய வர்த்தகங்களை மீண்டும் செய்யத் தொடங்கினர். ஆனால் நான் செய்யவில்லை. நாங்கள் இல்லாமல் அதங்கத்திற்கு ஒளி இல்லை. அவற்றால் எங்களின் துணை இல்லாமல் ஒளியைக் காண இயலாது. எனவே நாங்களும் அந்த அதங்கம் இல்லாமல் வாழ முடியாது. எங்களுடையது ஒரு கலை, அது எங்களை செல்வந்தர்களாக ஆக்குகிறது. ஆனால் அது எங்களை இளமையாக இறக்கச் செய்கிறது. அதங்கமானது எங்கள் இரத்தத்தில் நுழைந்து மெதுவாக அதை வற்றச் செய்வதால் இது நடக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். மற்றவர்களோ இது தெய்வங்களின் பழிவாங்கல் என்று நினைக்கிறார்கள். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரோட்மண்ட்ஸாகிய எங்கள் வாழ்க்கை குறுகியதாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் பணக்காரர்கள், மரியாதைக்குரியவர்கள், நாங்கள் உலகைப் பார்க்கிறோம். உண்மையில் நீல நிற பற்களைக் கொண்ட எனது மூதாதையரின் கதை இதிலிருந்து விதிவிலக்கானது. ஏனென்றால் அவர் கண்டுபிடித்த படுகையானது, விதிவிலக்காக, எங்களின் வாழ்க்கைக்கு மாறாக, செழிப்பானதாக இருந்தது. பொதுவாக, பல இடங்களில் நிலத்தில் துளைகளிட்டும் அகழாய்ந்தும் தனிமங்களைத் தேடும் பணியைச் செய்யும் நாங்கள், பயணிகளும் கூட. என் மூதாதையர் குளிர்சியான ஒருபோதும் அஸ்தமிக்காத சூரியனையுடைய, ஒரு தொலைதூர நாட்டிலிருந்து வந்தவர் என்றும் அங்குள்ள மக்கள் பனியால் ஆன வீடுகளிலும், ஆயிரம் அடி நீளம் கொண்ட கொடூரமான உயிரினங்கள் வாழும் கடலிலும் வாழ்கின்றனர் என்றும் என்னிடம் மற்றவர்கள் கூறினர்.

ஆகையால், ஒரே இடத்தில் ஆறு தலைமுறைகளாக எங்கள் வாழ்க்கையைக் கழித்ததற்குப் பிறகு, பாறைகளைத் தேடி, அவற்றைக் கரைப்பதற்காகவும் அல்லது மற்றவர்களால் கரைக்கப்படுவதற்காகவும் அவர்களுக்கு தங்கத்திற்கு ஈடாக இந்தக் கலையைக் கற்பிப்பதற்காகவும் நான் மீண்டும் பயணிக்க ஆரம்பித்தேன். ரோட்மண்ட்ஸாகிய நாங்கள் மந்திரவாதிகள். அதுதான் நாங்கள். நாங்கள் அதங்கத்தை தங்கமாக மாற்றுகிறோம்.

நான் தெற்கு நோக்கி பயணித்தபோது இன்னும் இளமையாகத்தான் இருந்தேன். ஒரு பிராந்தியத்தில் இருந்து மற்றொரு பிராந்தியத்திற்கு நான்கு ஆண்டுகளாக பயணம் செய்தேன். சமவெளிகளைத் தவிர்த்து, மலை பள்ளத்தாக்குகளில் ஏறினேன். அந்த நிலத்தில் என் சுத்தியலால் தட்டி சோதனை செய்தேன். ஆனால் அங்கு சொல்லும்படியாக எதுவும் இல்லை. கோடை காலத்தில் நான் வயல்களில் வேலை செய்தேன். குளிர்காலத்தில் கூடைகளை நெய்தேன் அல்லது என்னுடன் கொண்டு வந்த தங்கத்தை செலவிட்டேன். எங்களைப் பொறுத்தவரை, பெண்கள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக சேவை செய்கிறார்கள். இதனால் எங்கள் இனம் வழக்கொழிந்து போகாமல் இருக்கும் என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். ஆனால் நாங்கள் அவர்களை உடன் அழைத்துச் செல்ல மாட்டோம். அவர்களால் என்ன பயனைக் கொடுக்க முடியும்? அவர்கள் பாறையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை கற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையில், அவர்கள் தங்களது மாதவிடாய்க் காலத்தை கொண்டிருக்கும்போது பாறையைத் தொட்டால் அது இறந்த மணல் மற்றும் சாம்பலாக நொறுங்கி விடும். வழியில் நீங்கள் சந்திக்கும் சிறந்த பெண்கள், ஒரு இரவிற்கோ அல்லது ஒரு மாதத்திற்கோ உங்களுக்கு சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுடன், நீங்கள் உங்கள் மனைவிக்குப் பதிலாக, எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காமல் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். நம் எதிர்காலத்தை நாம் மட்டும் தனியாக வாழ்வதுதான் நல்லது. சதை தளர்வாகவும் வெளிர் நிறமாகவும் மாறத் தொடங்கும் போது, வயிற்று வலி ஏற்படக்கூடிய, முடி மற்றும் பற்கள் உதிர்ந்து, பற்களின் ஈறுகள் சாம்பல் நிறமாக மாறக்கூடிய, நம் எதிர்காலத்தில் நாம் தனியாக இருப்பதுதான் நல்லது.

இப்போது நான் ஒரு இடத்தை வந்தடைந்தேன். தெளிவான நாட்களில், இங்கிருந்து நீங்கள் தெற்கு நோக்கி அமைந்திருக்கும் மலைத்தொடர்களைக் காணலாம். அவற்றை அடைய வேண்டும் என்பதில் உறுதி கொண்டு வசந்த காலத்தில் நான் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். இந்த ஒட்டும் தன்மையுள்ள மென்மையான களிமன் நிலத்தால் நான் முற்றிலும் சோர்ந்து போயிருந்தேன். இது எதற்குமே பயன்படாது. இது களிமண் ஒக்கரினாக்களை (ocarinas) (காற்றின் மூலம் இசைக்கக்கூடிய ஒரு இசைக் கருவி) உருவாக்குவதற்கு மட்டுமே நல்லதாக இருக்கும். இரகசியங்கள் மற்றும் நற்குணம் இரண்டுமே இங்கு இல்லை. இந்தச் சூழலானது மலைகளில் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். பூமியின் எலும்புகளாக இருக்கும் பாறைகள் அங்கு வெளிவந்திருப்பதையும் அவை மூடப்படாமல் வெட்ட வெளியில் இருப்பதையும் நாம் காணலாம். அவை உங்கள் ஆணி அடிக்கப்பட்ட பூட்ஸின் கீழ் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் இது போன்ற, களிமண் நிறந்த சமவெளிக்கும் பாறைகளைக் கொண்ட மலைகளுக்குமிடையேயான வெவ்வேறு குணங்களை வேறுபடுத்துவது எளிதானது. சமவெளி எங்களுக்கானது இல்லை. எனவே எளிதான மலைப்பாதை எங்கே என்று நான் சுற்றிலிருப்பவர்களிடம் கேட்பேன். அவர்களிடம் அதங்கம் இருக்கிறதா, அவர்கள் அதை எங்கிருந்து வாங்கினார்கள், அதற்கு அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்றும் கேட்டேன். அவர்கள் அதற்கு அதிக பணம் செலுத்தியிருந்தனர். நான் அதிகமாக என் அருகிலேயே அதைத் தேடினேன். ஒரு சில நேரங்களில் அதங்கம் என்றால் என்னவென்று கூட அவர்களுக்குத் தெரியாது. நான் எப்போதும் என் பையில் எடுத்துச் செல்லும் அதங்கத் துண்டின் ஒரு பகுதியை அவர்களுக்குக் காட்டியபோது, ​​அவர்கள் அதை மிகவும் மென்மையாக உணர்ந்தார்கள். மேலும் என் நாட்டிலிருந்து பெறப்படும் அதங்கம் உழவுப் பொருட்களையும் வாள்களையும் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறதா!! என்று வியந்து கேலி செய்தார்கள். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் என்னால் அவர்களைப் புரிந்து கொள்ளவோ ​​அல்லது அவர்களுக்கு என்னைப் புரிந்துகொள்ள வைப்பதோ ​​முடியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ரொட்டி, பால், ஒரு கட்டில், ஒரு பெண், அடுத்த நாள் செல்ல வேண்டிய திசை, அவ்வளவுதான்.

கோடை காலத்தின் உச்சத்தில், ஒரு மதிய நேரத்தின் சூரியன் என் தலைக்கு மேல் செங்குத்தாக இருந்தபோது ஒரு பரந்த பாதை வழியாக நடந்து கொண்டிருந்தேன். ஆனால் அந்தக் கோடையிலும் இன்னும் மலையடிவார புல்வெளிகளின் மேற்பரப்பில் பனித்துகள்கள் மீதமிருந்தன. சற்று கீழே தெரியக்கூடிய பாதையில் மந்தைகளும் அவற்றை மேய்க்கக்கூடிய மேய்ப்பர்களும் இருந்தனர். இங்கிருந்து பள்ளத்தாக்கின் அடிப்பகுதியை உங்களால் காண முடியும். அது மிகவும் ஆழமானதாகவும் இன்னும் இரவின் இருளில் மூழ்கியிருப்பதாகவும் உங்களுக்குத் தோன்றும். நான் மலையிலிருந்து இறங்கி அங்கிருந்த சில கிராமங்களைக் கண்டேன். ஒரு நீரோடையின் அருகிலிருந்த ஒரு பெரிய கிராமத்தில் மலைவாழ் மக்கள் கால்நடைகள், குதிரைகள், பாலாடைக்கட்டி, ஆட்டுக் கம்பளித் தோல் மற்றும் மது என்று அழைக்கப்படும் ஒரு சிவப்பு திரவம் போன்றவற்றைப் பண்டமாற்றம் செய்வதற்காக எடுத்து வந்திருந்தனர். அவர்கள் பேசுவதைக் கேட்கும்போதெல்லாம் கிட்டத்தட்ட நான் சிரித்து விடுவேன். அவர்களின் மொழி ஒரு பண்பற்ற, கரடு முரடான அல்லது முரட்டுத்தனமான தெளிவற்ற கர்ஜனை போலவோ அல்லது ஒரு விலங்கு எழுப்பும் குர்-குர் என்ற சப்தம் போலவோ இருந்தது. அதனால் அவர்கள் எங்களைப் போன்ற ஆயுதங்களையும் கருவிகளையும் வைத்திருப்பதைக் கண்டு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. அவை இன்னும் தனித்துவமான மற்றும் விரிவானவையாக இருந்தன. என் நாட்டிலுள்ளப் பெண்களைப் போலவே அங்கிருந்த பெண்களும் நெசவு வேலை செய்தனர். அவர்கள் பாறைகளால் ஆன வீடுகளைக் கட்டுகிறார்கள். அவை அவ்வளவு அழகாக இல்லாவிட்டாலும் திடமாக இருந்தது. சில வீடுகள் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. அவை தரையில் இருந்து சில அடி உயரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. ஏனெனில் அவை மென்மையான கல் வட்டுகளால் மேற்கூரையைக் கொண்டிருந்த நான்கு அல்லது ஆறு மரத் தொகுதிகளில் தங்கியிருந்தன. இந்தக் கற்கள் எலிகளின் படையெடுப்பைத் தடுக்க உதவியது என்று நான் நம்புகிறேன். இது எனக்கு ஒரு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு என்று தோன்றியது. கூரைகள் அகலமான, தட்டையான கற்களால் வைக்கோல் குடிசையால் செய்யப்படவில்லை. அவர்களுக்கு பீர் என்றால் என்ன என்று தெரியாது.

நான் உடனடியாக பள்ளத்தாக்குப் பகுதிகளிலிருந்த சில உயரமான இடங்களில் இருக்கக்கூடிய பாறைகளில் சில துளைகளும் மற்றும் சிதிலமடந்த சிறு சிறு கற்களின் குவியல்களும் இருப்பதைக் கண்டேன். இவை இந்தப் பகுதிகளில் சிலர் பாறைகளைத் தோண்டி அகழ்ந்து கனிமங்களைத் தேடும் வேலையைப் பார்த்தனர் என்பதற்கான அறிகுறி. ஆனால் தேவையில்லாத சந்தேகத்தைத் தூண்டுவதைத் தவிர்ப்பதற்காக, நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. என்னைப் போன்ற வெளிநாட்டவர் ஒருவர் ஏற்கனவே அதிகமாகவே அதைச் செய்துவிட்டார். பின்பு நான் அங்கிருந்து இறங்கி, விரைவாக ஓடிக் கொண்டிருந்த ஒரு நீரோடைக்குச் சென்றேன். (எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதன் நீர் கலங்களாகவும் மற்றும் பாலுடன் கலந்ததைப் போல வெள்ளை நிறமாகவும் இருந்தது. இது என் நாட்டில் நான் எப்போதும் கேள்விப்பட்டிராத அல்லது பார்த்திராத ஒன்று) நான் அந்தக் கற்களை பொறுமையாக ஆராய ஆரம்பித்தேன். இது எங்கள் தந்திரங்களில் ஒன்றாகும். ஒரு ஓடையில் தொலை தூரத்திலிருந்து வரும் கற்கள் அதை புரிந்துகொள்பவரிடம் தெளிவாகப் பேசுகின்றன. அதில் எல்லா வகையானக் கற்களும் உதாரணமாக சிக்கி முக்கிக் கற்கள், பச்சைக் கற்கள், சுண்ணாம்புக் கற்கள், கிரானைட், இரும்புக் கற்கள், நாங்கள் கால்மீடா (galmeida) என்று அழைக்கும் கற்கள் போன்றவை சிறிதளவாகவேனும் இருந்தன. ஆனால் இவை எல்லாம் எனக்கு விருப்பமில்லாதவை. இன்னும் ஒரு நிலையான சிந்தனை எனக்கு இருந்தது. இது போன்றொரு பள்ளத்தாக்கிலிருக்கக்கூடிய ஒரு சிவப்புப் பாறையில் சில வெள்ளை நிறக் கோடுகளும் மற்றும் அதிகமான இரும்புகளுமிருந்தால், அதங்கப் பாறைகளை நாம் நிச்சயமாகத் தவிர்க்க இயலாது.

நான் அந்த நீரோடையின் பாதையிலே கீழே இறங்கினேன். ஓரளவு கற்பாறைகள் மீதும், ஓரளவு என்னால் முடிந்த இடத்திலேயேயும் அலைந்து திரிந்தேன். ஒரு வேட்டையாடும் நாயைப் போல என் பார்வையை நிலத்திலையே தீவிரமாக பதித்துக் கொண்டேன். இதோ, இதோ! இந்த நீரோடை மற்றொரு சிறிய நீரோடையுடன் சங்கமிக்கும் இடத்திற்கு சற்று கீழே, மில்லியன் கணக்கான பிற கற்களில் ஒரு கல்லைக் கண்டுவிட்டேன். மற்ற எல்லாவற்றையும் போலவே இதுவும் ஒரு கல். சிறிய கருப்பு புள்ளிகள் கொண்ட ஒரு இருண்ட வெள்ளைக் கல். சரியாக, ஒரு வேட்டை நாய்க்கு நிகழ்வதைப் போலவே இது என்னைப் பதட்டமாகவும், அசைவற்றதாகவும் ஆக்கி விட்டது. நான் அதை கையில் எடுத்தேன். அது கனமாக இருந்தது. அதற்கு அடுத்ததும் அது போன்றது ஆனால் சிறியது. நாங்கள் அரிதாகவே தவறு செய்கிறோம். ஆனால் இந்த முறை எந்த தவறும் செய்யாமல் நான் அதை நசுக்கி, அதைச் சோதிக்க என்னுடன் ஒரு கனமான பெரிய துண்டையும் எடுத்துக் கொண்டேன். ஒரு நல்ல, தீவிரமாக பாறைகளை அகழ்ந்து கனிம வளங்களைத் தேடுபவர், மற்றவர்களிடமோ அல்லது தன்னிடமோ பொய்களைச் சொல்ல விரும்பாதவர், ஒரு பாறை அல்லது கற்களின் வெளிப்புறத் தோற்றங்களை நம்பக்கூடாது. ஏனென்றால் இறந்ததாகத் தோன்றும் பாறை, நம்மை மிகவும் ஏமாற்றக் கூடும். சில சமயங்களில் அதைத் தோண்டி வெளியே எடுக்கும் போது அதன் தன்மையைக் கூட மாற்றும். நிறத்தை மாற்றும் சில பாம்புகளைப் போல. அதனால் உங்களால் அவற்றைப் பார்க்க முடியாது. ஆகவே, கனிம வளங்களைத் தேடுபவர் அவருடன் எல்லாவற்றையும் கொண்டு செல்கிறார். ஒரு களிமண் புடக்கலன் (Crucible), கரி, எளிதில் தீப்பற்றக்கூடிய மரம், எஃகு துண்டுகள், மற்றும் ரகசியமான மற்றொரு கருவி. அது என்ன என்று நான் இங்கு குறிப்பிட முடியாது. அது ஒரு பாறை நல்லதா இல்லையா என்பதைக் துல்லியமாக கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகிறது.

அன்று மாலை நான் பாதையிலிருந்து விலகிய ஒரு இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு ஒரு அடுப்பு அமைத்து அதில் நன்கு சீரான அடுக்குகளுடன் கட்டமைக்கப்பட்ட சிலிக்காவால் செய்யப்பட்ட புடக்கலனில் நன்கு தூளாக்கப்பட்ட அந்தத் துண்டை வைத்து, அரை மணி நேரம் அதை சூடாக்கினேன். பின்னர் அதை சில நேரம் குளிர்வித்ததற்குப் பிறகு, அதை திறந்து உடைத்தேன். அதில் ஒரு பளபளப்பான கனமான சிறிய வட்டு இருந்தது. அதை நீங்கள் உங்கள் கை விரல் நகங்களால் கூட மதிப்பிடலாம். இது உங்கள் இதயத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும் மற்றும் நீண்ட நடைப்பயணத்தின் சோர்வு உங்கள் கால்களிலிருந்து மறைந்துவிடும். இதை நாங்கள் “சிறிய ராஜா” என்று அழைக்கிறோம்.

இந்தக் கட்டத்தில் நாங்கள் முடிக்கவில்லை. மாறாக, பெரும்பாலான பணிகள் இன்னும் செய்யப்பட உள்ளன. நீங்கள் மறுபடியும் நீரோடைக்கு மேலே செல்ல வேண்டும். அதன் ஒவ்வொரு கிளைகளிலும் இது போன்ற நல்ல கற்கள் தொடர்ந்து கிடைக்கிறதா என வலது புறமும் இடதுபுறமும் தேடிப் பார்க்க வேண்டும். அதன் படி நானும் அந்தப் பெரிய நீரோட்டத்தின் வழியாகவே சிறிது தூரம் நடந்து சென்றேன். அங்கு அந்தக் கற்கள் நிறையவே இருந்ததன. ஆனால் அது மேலும் மேலும் சிதறியதாக இருந்தது. பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானதாகவும் மற்றும் செங்குத்தானதாகவும் குறுகிய மலையிடுக்காகவும் இருந்ததால் அதில் ஏறுவது கேள்விக்குறியாக இருந்தது. நான் அங்குள்ள மேய்ப்பர்களிடம் கேட்ட போது, அந்த மலையிடுக்கைச் சுற்றி வர உண்மையில் வழி இல்லை என்று அவர்கள் சைகைகள் மற்றும் மெல்லிய குரல்களால் எனக்குப் புரிய வைத்தார்கள். ஆனால் நீங்கள் பெரிய பள்ளத்தாக்குக்கு மறுபடியும் சென்றால் ஒரு சிறிய அகலமான சாலையைக் காணலாம். இது டிரிங்கோ (Tringo) என்று அவர்கள் அழைக்கக்கூடிய ஒரு பாதை வழியாக சென்று பள்ளத்தாக்குக்கின் மேலே சற்றுத் தொலைவில் இறங்கி, கொம்பு வைத்த மிருகங்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு இடத்தில் முடிவடைந்தன. எனவே அது மேய்ச்சல் நிலமாகவும், மேய்ப்பர்கள், ரொட்டி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிலமாகவும் இருந்தது. நான் நடக்க ஆரம்பித்தேன். சாலையையும் ட்ரிங்கோவையும் எளிதாகக் கண்டுபிடித்தேன். அங்கிருந்து மிக அழகான நாட்டிற்குச் சென்றேன்.

எனக்கு நேராக ஒரு நீண்ட சுரங்கப்பாதை போன்ற பார்வையில் நான் பச்சை நிறமுடைய லார்ச் (larches) வகை செடிகளைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்கைக் கண்டேன். அந்தக் கோடையின் உச்சத்திலும் தொலைதூர மலைகளில் வெண்மையான பனித்துளிகள் இருந்தன. பள்ளத்தாக்கு முடிவடையும் என் காலடியில் குடிசைகள் மற்றும் மந்தைகள் நிறைந்த ஒரு பரந்த புல்வெளி காணப்பட்டது. நான் இப்போது களைப்படைந்திருந்தேன். நான் வெகுதூரம் நடந்து சென்ற பின்பு அங்கிருந்த மேய்ப்பர்களால் நிறுத்தப்பட்டேன். அவர்கள் என் மேல் அவநம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால் தங்கத்தின் மதிப்பை அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள். அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யாமல் சில நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவர்களின் மொழியின் சில சொற்களைக் கற்றுக்கொள்வதற்கு நான் இந்த நாட்களைப் பயன்படுத்திக் கொண்டேன்- அவர்கள் மலைகளை “பென்” (Pen) என்றும், புல்வெளிகளை “த்சா” (tza) என்றும், கோடையின் பனியை “ரோயிசா”, (Roisa) என்றும் செம்மறி ஆடுகளை “ஃப்யா” (Fea) என்றும் அவர்களின் வீடுகளை “பெய்ட்” (Bait) என்றும் அழைத்தனர். அவர்களின் வீடுகளின் கீழ் பகுதி பாறையால் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அதில் தங்கள் வாழ்வாதாரங்களை சேகரித்து வைத்திருந்தனர். மேல் பகுதியானது மரத்தால் செய்யப்பட்டிருந்தது. நான் ஏற்கனவே கூறியது போல கற்களால் செய்யப்பட்டிருந்த மீதமுள்ள பகுதியில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். அதில் அவர்கள் வைக்கோல் மற்றும் நீண்ட நாட்களுக்குத் தேவையான உணவு வகைகளையும் சேமிக்கிறார்கள். அவர்கள் சண்டை செய்யும் குணமுள்ள மக்கள். ஆனால் அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை. அவர்கள் கொஞ்சமாகவே பேசினார்கள். என்னை மோசமாக நடத்தவில்லை.

நான் ஓய்வெடுத்ததற்குப் பின்பு, என் தேடலை மீண்டும் தொடங்கினேன். இன்னும் நீரோடையின் அமைப்போடு, புல்வெளிகளோ காடுகளோ இல்லாமல், நீளமான, குறுகலான, மற்றும் வெறிச்சோடிய ஊசி இலை பள்ளத்தாக்குக்கு இணையான ஒரு பள்ளத்தாக்கில் நழுவி விழுந்து நான் காயமடைந்தேன். அதன் வழியாக ஓடிய நீரோடை நல்ல பாறைகளால் நிறைந்திருந்தது. நான் தேடுவதை நெருங்கி விட்டதாக உணர்ந்தேன். இதற்கு எனக்கு மூன்று நாட்கள் ஆனது. இரவு நேரங்களில் நான் திறந்த வெளியிலே தூங்கினேன். உண்மையில், நான் தூங்காமல், பொறுமையிழந்து, வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே இரவைக் கடந்து சென்றேன். அதனால் வானம் விரைவில் விடிந்து விடும்.

படுகையானது மிகவும் கூர்மையான உயரமுடைய வற்றியக் கணவாயின் அருகே அதன் பாதையிலிருந்து விலகியிருந்தது. வெள்ளைப் பாறை இங்கேயும் அங்கேயும் வெட்டுப்பட்டு, புற்களுக்கு நடுவே, ஒரு கைக்கு எட்டக்கூடியதாக இருந்தது. மேலும் எல்லாவற்றிலும் செழிப்பான கருப்புப் பாறையைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு அல்லது மூன்று அடி நிலத்தை தோண்ட வேண்டியதுதான். நான் இதுவரை அவற்றைப் பார்த்ததில்லை. ஆனால் என் தந்தை எனக்கு அது பற்றி விவரித்திருக்கிறார். கசடு இல்லாத ஒரு சிறிய பாறை நூறு ஆண்களை நூறு ஆண்டுகள் வேலை செய்ய வைக்கக் கூடும். இங்கு விசித்திரமான விஷயம் என்னவென்றால், யாரோ ஒருவர் ஏற்கனவே இங்கே இருந்திருக்க வேண்டும். அதற்கு அடையாளமாக அங்கிருந்த ஒரு சுரங்கப்பாதையின் திறப்பு, ஒரு பாறயின் பின்னால் பாதி மறைக்கப்பட்டிருந்தது. (இது நிச்சயமாக ஒரு நோக்கத்திற்காகவே வைக்கப்பட்டிருக்க வேண்டும்), அந்தப் பாதை மிகவும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அதன் பெட்டகத்திலிருந்து ஸ்டாலாக்டைட்டுகள் (stalactites) என் விரல்கள் வரை தொங்கிக் கொண்டிருந்தன. தரையில் அழுகிய மரத்தின் சில பகுதிகளும் ஒரு சில அரிக்கப்பட்ட எலும்பு துண்டுகளும் இருந்தன. மீதமுள்ளவை நரிகளால் எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். உண்மையில் இங்கு நரிகளின் கால்தடங்களும், ஓநாய்களின் கால்தடங்களும் இருந்தன. ஆனால் சேற்றில் இருந்து வெளியேறிய அரை மண்டை ஓடு நிச்சயமாக ஒரு மனிதனுடையதுதான். இதை விளக்குவது கடினமான விஷயம். ஆனால் ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட முறை இது நடந்துள்ளது. தான் எங்கிருந்து, எப்போது வருகிறோம் என்பது தனக்கு மட்டுமே தெரிந்த, சில தொலைதூர இடத்திலிருந்து, ஒருவேளை அங்கு வெள்ளம் வருவதற்கு முன்பு, வந்த யாரோ ஒருவர், உலோகத்தின் நரம்பைக் கண்டுபிடிக்கிறார். அவர் யாரிடமும் எதுவும் சொல்லாமல், பாறையைத் தோண்டுவதற்கு தானாகவே முயற்சி செய்கிறார். அதனால் நீண்ட நாட்கள் அங்கையே இருந்து, இறந்து தன் எலும்புகளை அங்கேயே விட்டுவிடுகிறார். பின்னர் நூற்றாண்டுகள் கடந்து செல்கின்றன. எந்த சுரங்கப்பாதையிலோ அல்லது குகையிலோ நீங்கள் தோண்டினால் இறந்தவர்களின் எலும்புகளைக் காணலாம் என என் தந்தை என்னிடம் ஒரு முறை கூறினார்.

சுருக்கமாக, படுகையானது அங்கு இருந்தது. நான் திறந்த வெளியில் எனது சோதனைகளைச் செய்ய ஆரம்பித்தேன். என்னால் முடிந்தவரை அங்கு ஒரு உலை கட்டி முடித்துப் பின், கீழே சென்று ஒரு மரத்துடன் மேலே வந்தேன். நான் என் முதுகில் சுமக்கக்கூடிய அளவுக்கு அதங்கத்தை அந்த உலையில் வைத்து உருக்கிவிட்டு, மீண்டும் பள்ளத்தாக்குக்குத் திரும்பினேன். மேய்ச்சல் நிலத்தில் உள்ளவர்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை. நான் டிரிங்கோவைத் தொடர்ந்தேன். மறுபுறம் சேல்ஸ் (Sales) என்று அழைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமத்திற்கு என் கையில் வைத்திருந்த அதங்கத்துடன் வந்த போது அங்கு சந்தை நாளாக இருந்தது. ஒரு சிலர் என்னை வழிமறித்து நிறுத்தத் தொடங்கினர். அதை எடைபோட்டு என்னிடம் அவர்கள் கேட்ட கேள்வியில் எனக்கு பாதி மட்டுமே புரிந்தது. என் கையில் இருப்பது எந்த வகையில், எப்படி நல்லது, அதற்கு எவ்வளவு செலவாகிறது, எங்கிருந்து வந்தது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. பின்னர் எச்சரிக்கையான தோற்றமுடைய, கம்பளித் தொப்பி அணிந்த ஒரு நபர் என்னிடம் வந்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொண்டோம். நீங்கள் அந்தப் பொருளை ஒரு சுத்தியலால் வெல்ல முடியும் என்று நான் அவருக்குக் காட்டினேன். உண்மையில், அங்கேயே நான் ஒரு சுத்தியலையும் கருங்கல்லையும் கண்டுபிடித்து, அதை அடுக்குகளாகவும் தாள்களாகவும் வடிவமைப்பது எவ்வளவு எளிது என்பதை அவருக்கு விளக்கினேன். அந்தத் தாள்களைக் கொண்டு, அதன் ஒரு பக்கத்தில் சூடான சிவந்த இரும்பை வைத்து வெல்டிங் செய்து, நீங்கள் குழாய்களை உருவாக்கலாம் என்றும் மேலும், “மரக் குழாய்கள், எடுத்துக்காட்டாக, அந்த ஊரில் உள்ள மழைநீர்க் குழாய்கள் கசியக்கூடும் மற்றும் அழுகவும் கூடும். வெண்கலக் குழாய்களை உருவாக்குவது கடினம். அவை குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும்போது வயிற்றுப் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. அதற்குப் பதிலாக அதங்கக் குழாய்கள் என்றென்றும் நீடிக்கும். மிக எளிதாக அவற்றை ஒன்றிணைக்க முடியும்” என்றும் அவரிடம் விளக்கினேன். இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு, நான் பல சீரற்ற வாய்ப்புகள் எடுத்து அவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். அதங்கத் தாள் மூலம் நீங்கள் இறந்தவர்களுக்கான சவப்பெட்டிகளையும் தயாரிக்கலாம். இதனால் அவை புழுக்கள் வளராமல் உலர்ந்த மற்றும் மெல்லியதாக மாறும். எனவே அதில் வைக்கப்படும் உடலின் ஆத்மாவும் சிதறடிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது ஒரு நல்ல விஷயம். மேலும் அதங்கத்தை வைத்து நீங்கள் இறந்தவர்களுக்கான சிறிய சிலை வைக்கலாம். அவை வெண்கலம் போல பளபளப்பாக இருக்காது என்றாலும், உண்மையில் அவை துக்கத்தின் அர்த்தத்திற்கு ஏற்றது போல் சற்று இருளாகவும், சற்று அடக்கமாகவும் இருக்கும். இந்த விஷயங்கள் அவருக்குப் பெரிதும் ஆர்வமாக இருப்பதை நான் தெரிந்து கொண்டவுடன், “ஒருவர் தன் புறத் தோற்றத்திற்கு அப்பால் சென்று விட்டால், அதாவது இறந்து விட்டால், அதங்கம் உண்மையில் மரணத்தின் உலோகம்” என்று விளக்கினேன். ஏனென்றால் அது மரணத்தைத் தருகிறது, ஏனெனில் அதன் எடை வீழ்ச்சியடைய விரும்புகிறது, மற்றும் வீழ்வது என்பது சடலங்களின் பண்பு. ஏனெனில் அதன் நிறம் மங்கலாக அதாவது இறந்துவிட்டது. ஏனென்றால் இது டூஸ்டோ (Tuisto) கிரகத்தின் உலோகம். இது கிரகங்களில் மிக மெதுவானது, அதாவது இறந்தவர்களின் கிரகம். என் கருத்துப்படி, அதங்கம் என்பது மற்ற எல்லா பொருட்களிலிருந்தும் வேறுபட்ட ஒரு பொருள். நீங்கள் சோர்வாக இருப்பதாக நினைக்கும் ஒரு உலோகம். ஒருவேளை அது தன்னை மாற்றிக் கொள்வதில் சோர்வாக இருக்கலாம். அது இனி தன்னை மாற்றிக் கொள்ள விரும்பாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக, கெட்டியான ஆயுள் கொண்ட எத்தனை தனிமங்கள் தங்கள் சொந்த நெருப்பில் எரிக்கப்பட்டன என்பது அதன் சாம்பல்களுக்கு மட்டுமே தெரியும். இவை நான் உண்மையில் என் மூளைக்குள் நினைக்கும் விஷயங்கள். ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள நான் அவைகளை உருவாக்கியது அல்ல. போர்வியோ (Borvio) என்று பெயரிடப்பட்ட அந்த மனிதர், இதையெல்லாம் தனது வாய் “அகபேப்புடன்” (agape) கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் நான் சொன்னது போலவே இருக்க வேண்டும் என்றும், அந்தக் கிரகம் தனது ஊரில் உள்ள ஒரு கடவுளுக்கு புனிதமானது என்றும் அது ‘சனி’ என்று அழைக்கப்பட்டு அரிவாள் போல சித்தரிக்கப்படுகிறது என்றும் கூறினார். இப்போது மிக முக்கியமான விஷயத்தைப் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. அவர் இன்னும் என் சாந்தமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆவல்கொண்டிருக்கும் இந்த சமயத்தின் போது, நான் கண்டறிந்த படுகைகளையும் அதங்கத்தைக் கரைக்கும் நுட்பம் மற்றும் அந்த உலோகத்தின் முக்கிய பயன்பாடுகளின் துல்லியமான வழிமுறைகள் போன்றவற்றை அவரிடம் ஒப்படைக்க முப்பது பவுண்டுகள் தங்கத்தைக் கேட்டேன். எங்கிருக்கிறது என யாருக்கும் தெரியாத, ஒரு ஆண் பன்றியின் உருவம் பொறிக்கப்பட்ட சில வெண்கல நாணயங்களை கொடுப்பதாக அவர் எனக்கு ஒரு சலுகை அளித்தார். ஆனால் நான் அவைகள் மீது எச்சிலைத் துப்பினேன்: “தங்கம் மட்டும்தான், மற்ற முட்டாள்தனத்தை தவிருங்கள்” என்றேன். எப்படியிருந்தாலும், கால்நடையாகப் பயணிக்கும் ஒருவருக்கு முப்பது பவுண்டுகள் என்பது அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். மற்றும் போர்வியோவுக்கும் அது தெரியும் என்பது எனக்குத் தெரியும். எனவே இருபது பவுண்டுகளுக்கு ஒப்பந்தத்தை முடித்தோம். நான் அவருடன் அந்தப் படுகைக்கு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது மட்டுமே சரியானது. நாங்கள் மீண்டும் பள்ளத்தாக்குக்கு வந்ததும், அவர் எனக்கு தங்கத்தை கொடுத்தார். நான் இருபது தங்கங்களையும் சோதித்தேன். அவை தரமானவையாகவும் மற்றும் நல்ல எடையைக் கொண்டவையாகவும் இருந்தன. நாங்கள் இந்தச் சூழலைக் கொண்டாட முடிவெடுத்து மதுவை அழகாக குடித்து முடித்தோம்.

இது ஒரு பிரியாவிடைக் குடியும் கூட. அந்த நாடு என்னைப் பயணிக்க வலியுறுத்தவில்லை. ஆனால் பல காரணங்கள் என் பயணத்தைத் தொடர என்னைத் தூண்டின. முதலாவது: ஆலிவ் மற்றும் எலுமிச்சை வளருவதாக அவர்கள் சொன்ன வெப்பமான நாடுகளை நான் பார்க்க விரும்பினேன். இரண்டாவது: நான் கடலைப் பார்க்க விரும்பினேன். என் மூதாதையர் நீல பற்களுடன் வந்த புயல் கடல் அல்ல, ஆனால் உப்பு இருக்கும், அதை உற்பத்தி செய்யும் கடல் அது. மூன்றாவது: தங்கத்தை வைத்திருப்பதற்கும் அதை உங்கள் முதுகில் சுமப்பதற்கும் எந்த அர்த்தமும் இல்லை. இரவில் அல்லது குடிப்பழக்கத்தின் போது யாராவது அதை உங்களிடமிருந்து பயங்கரவாதத்துடன் திருடி விடுவார்கள். நான்காவது, மற்றும் சுருக்கமாக: கடலையும் மாலுமிகளையும் அறிந்து கொள்வதற்காக தங்கத்தை ஒரு கடல் பயணத்தில் செலவழிக்க விரும்பினேன். ஏனென்றால் மாலுமிகளுக்கு அதங்கம் தேவை. அது என்னவென்றே அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் கூட.

எனவே அங்கிருந்து கிளம்பி, ஒரு பெரிய வறட்சியான பள்ளத்தாக்கு, கீழே ஒரு சமவெளியை அடையும் வரை நான் இரண்டு மாதங்கள் நடந்தே பயணம் செய்தேன். இங்கிருந்த புல்வெளிகள், கோதுமைக் களங்கள் மற்றும் எரிந்த ஒரு சுள்ளியின் கூர்மையான வாசனை என் நாட்டின் ஏக்கத்தை எனக்குத் தந்தது. உலகின் எல்லா நாடுகளிலும், இலையுதிர் காலம், ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பூமியின் எரியும் கிளைகளின் இறந்த இலைகளின் வாசனையை ஒரே போலக் காட்டும். சுருக்கமாக, தன் இறுதி காலத்தை நெருங்கும் விஷயங்களைப் போலவே இருக்கும். மேலும் அதைத்தான், அந்த இறுதிக் காலத்தைதான், நீங்கள் “என்றென்றும்” நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இரண்டு ஆறுகளின் சங்கமத்தில் இருக்கும் ஒரு வலுவான, பலப்படுத்தப்பட்ட நகரத்தின் வழியாக இங்கு வந்தேன். ஆனால் அது என் நாட்டைப் போல பெரிய நாடு அல்ல. அடிமைகள், இறைச்சிகள், ஒயின் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சந்தைக் கண்காட்சி அங்கு இருந்தது. மேலும் அங்கு கொஞ்சம் சுத்தமில்லாத, ஆனால் திடமான, பரட்டைத் தலையுடைய பெண்களும் நல்ல நெருப்பைக் கொண்ட ஒரு சாப்பாட்டு விடுதியும் இருந்தன. நான் குளிர்காலத்தை அங்கேயே கழித்தேன். அது என் நாட்டைப் போல பனிமூட்டமாக இருந்தது. நான் மீண்டும் மார்ச் மாதத்தில் கிளம்பினேன். ஒரு மாத நடைப்பயணத்திற்குப் பிறகு, நீலநிறமில்லாத ஆனால் சாம்பல் நிறமுடைய ஒரு காட்டெருமை போல சினம் கொண்டு மூர்க்கமாக ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் கடலைக் கண்டேன். அது நிலத்தை விழுங்க விரும்புவதைப் போல தன்னைத் தானே நிலத்தில் தூக்கி எறிந்து கொண்டிருந்தது. அதற்கு ஓய்வென்றால் என்னவென்று தெரியாது. அது உலகின் தொடக்கத்திலிருந்து ஒருபோதும் ஓய்வெடுக்கவில்லை என்ற எண்ணத்தில், என் தைரியம் என்னைக் கைவிட்டது. ஆனால் நான் இன்னும் கிழக்கு நோக்கி, கடற்கரையோரம் என் நடையைத் தொடர்ந்தேன். ஏனென்றால் கடல் என்னைக் கவர்ந்தது. அதிலிருந்து என்னால் என்னை விடுவிக்க முடியவில்லை.

நான் மற்றொரு நகரத்தைக் கண்டுபிடித்தேன். அதன் பின்பு எனக்கு வேறொரு இடத்திற்குப் பயணிக்கத் தோன்றவில்லை. என் தங்கமும் இப்போது தீரத் தொடங்கி விட்டது. அங்கிருந்தவர்கள் அனைவரும் மீனவர்கள் மற்றும் அந்நிய நாட்டு மக்கள். அவர்கள் பல்வேறு, மிக தொலைதூர நாடுகளிலிருந்து கப்பல் மூலம் வந்தவர்கள். அவர்கள் வாங்கி விற்கும் வேலையைப் பார்த்தார்கள். இரவில் அவர்கள் பெண்களிடம் சண்டையிட்டு, அங்கிருந்த சந்து வழிகளில் ஒருவருக்கொருவர் கத்தியால் குத்திக் கொண்டார்கள். பின்னர் நானும் ஒரு தோல் உறையில் வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு கனமான கத்தியை வாங்கி அதை என் ஆடைக்குக் கீழே இடுப்பில் கட்டிக் கொண்டேன். அவர்கள் கண்ணாடிகளை அறிந்திருக்கவில்லை. ஆனால் பளபளப்பை அறிந்திருந்தனர். அதாவது, அவர்கள் மெருகூட்டப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட சிறிய கண்ணாடிகள், மலிவான பொருட்கள், உடனடியாக கீறப்பட்டு வண்ணங்களை சிதைக்கும் வகைகள் போன்றவற்றை மட்டுமே வைத்திருந்தனர். உங்களிடம் அதங்கம் இருந்தால் கண்ணாடியை உருவாக்குவது கடினம் அல்ல. ஆனால் ஒரு ரகசியத்துடன், அதை பிரிப்பது பற்றி நான் அவர்களிடம் வம்பு செய்தேன். இது ஒரு கலை என்றும் அது ரோட்மண்ட்ஸாகிய எங்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் அந்தக் கலையை ஃப்ரிகா என்ற பெண் தெய்வம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்றும் வாதிட்டேன். மற்றும் அவர்கள் உண்மையற்ற சில முட்டாள் தனமான விஷயங்களை முழுமையாக எந்த வித கேள்விகளுமின்றி அப்படியே நம்பியிருந்தனர்.

எனக்கு இப்போது பணம் தேவை. நான் என்னைச் சுற்றிலும் என் பார்வையை ஓட விட்ட போது அங்கிருந்த ஒரு துறைமுகத்திற்கு அருகில் பலகணிச் சட்டங்களுக்குக் கண்ணாடி பொருத்தும் பணியாளர் ஒருவர் இருப்பதைக் கண்டேன். அவர் புத்திசாலித்தனமாகத் தோன்றினார். அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

அவரிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். முதலாவதாக, நான் மிகவும் விரும்பிய, அந்தக் கண்ணாடியை காற்றின் மூலம் அசைக்கக்கூடிய உத்தியை அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஒரு நாள் அல்லது இன்னொரு நாள் நானும் அதங்கம் அல்லது உருகிய வெண்கலத்தையும் இதே போல காற்றின் மூலம் வீச வைக்க முயற்சிப்பேன் (ஆனால் அவை மிகவும் திரவ வடிவமானது, நான் அதில் வெற்றி பெறுவேனா என்பது சந்தேகம்தான்). எவ்வாறாயினும், சூடான கண்ணாடிப் பலகையில் நீங்கள் உருகிய அதங்கத்தை ஊற்றுவதன் மூலம் பெரிதாக இல்லாத ஆனால் குறைபாடுகளும் ஏதுமில்லாத நன்கு ஒளிரக்கூடிய கண்ணாடியைப் பெறலாம் எனவும் அந்தக் கண்ணாடி பல ஆண்டுகளாக நீடிக்கும் எனவும் அவருக்குக் கற்பித்தேன். அவர் உண்மையில் திறமையானவர். அவர் வண்ணக் கண்ணாடி மற்றும் வண்ணமயமான பார்ப்பதற்கு அழகாக இருக்கக்கூடிய பல்வேறு திட்டுகளுடைய கண்ணாடி சட்டகங்களை உருவாக்குவதற்கு அவரிடம் ஒரு ரகசியமான திட்டம் இருந்தது. என்னிடம் அவருடன் ஒத்துழைப்பதற்கான உற்சாகம் இருந்தது. மேலும் வட்டமான குடுவை போன்ற அமைப்புடைய காற்றில் அசையக்கூடிய கண்ணாடியை உருவாக்க ஒரு செயல்முறையை கண்டுபிடித்தேன். அதில் அதங்கத்தை ஊற்றினேன் அல்லது அதன் வெளிப்புறத்தில் அதங்கத்தைப் பரப்பினேன். நீங்கள் அதன் வழியாக உங்களைப் பார்த்தால், நீங்களே மிகப் பெரியதாகவோ மிகச் சிறியதாகவோ அல்லது மிக கோணலாகவோத் தெரிவீர்கள். இந்தக் கண்ணாடிகள் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எல்லா குழந்தைகளும் அவற்றைப் பெற விருப்பம் கொண்டனர். கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் நாங்கள் வணிகர்களுக்கு இந்தக் கண்ணாடியை விற்றோம். அவர்கள் அதற்கு தாராளமாகவே பணம் செலுத்தினர். இதற்கிடையில் நான் அவர்களுடன் பேசி அவர்களில் பலருக்குத் தெரிந்த ஒரு பிராந்தியத்தைப் பற்றி என்னால் முடிந்த அளவு தகவல்களைச் சேகரிக்க முயற்சித்தேன்.

கடலில் தங்கள் வாழ்நாளில் பாதியைக் கழித்த அந்த மக்கள், கார்டினல் புள்ளிகள் மற்றும் தூரங்களைப் பற்றிய குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருந்ததைப் பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவரும், தெற்கே ஆயிரம் மைல்கள் பயணம் செய்வதன் மூலம், மற்றவர்கள் அதைவிட பத்து மடங்கு தொலைவில் என்றார்கள். நீங்கள் துகள்களாக கொதித்துக் கொண்டிருக்கும் சூரியனைக் கொண்ட ஒரு நிலத்திற்கு வருவீர்கள் என்றும் அங்கு அசாதாரணமான மரங்களும் விலங்குகளும் நிறைந்திருக்கும் என்றும் மேலும் அங்கு கருப்புத் தோல் கொண்ட மூர்க்கமான ஆண்கள் வசிக்கின்றனர் என்றும் ஒப்புக் கொண்டனர். ஆனால் பலர், உங்களின் பாதி வழியிலேயே உலோகங்களின் தீவான “இக்னுசா” (Icnusa) என்ற பெரிய தீவை நீங்கள் சந்திப்பீர்கள் என உறுதியாகக் கூறினர். இந்தத் தீவைப் பற்றிய விசித்திரமான கதைகளை அவர்கள் சொன்னார்கள். “அந்தத் தீவில் ராட்சசர்கள் வசித்து வந்தனர். அதேசமயம் குதிரைகள், எருதுகள், முயல்கள் மற்றும் கோழிகள் கூட மிகவும் சிறியதாக இருந்தன. பெண்கள் கட்டளைகளை வழங்கினர் மற்றும் போர்களை நடத்தினர். அதே நேரத்தில் ஆண்கள் கால்நடைகளை கவனித்துக் கொண்டு கம்பளியை சுழற்றினர். இந்த ராட்சசர்கள் மனிதர்களை, குறிப்பாக அயல்நாட்டினரை விழுங்கியவர்கள். இது முழு வேசித்தனத்தின் நிலம், அங்கு கணவர்கள் மனைவிகளை பரிமாறிக்கொண்டனர் மற்றும் விலங்குகள் கூட எந்த வறைமுறையுமின்றி தொடர்பு வைத்திருந்தன. பூனைகளுடன் ஓநாய்களும், மாடுகளுடன் கரடிகளும் தொடர்பு வைத்திருந்தன. பெண்களின் கர்ப்ப காலம் மூன்று நாட்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்து, உடனடியாக அதனிடம் கூறினர்: “நகர்ந்து சென்று, கத்தரிக்கோலை கொண்டு வரவும், விளக்கை ஏற்றவும் அதனால் நான் உங்கள் தொப்புள் கொடியை வெட்ட முடியும்.”” இன்னும் சிலர், “அதன் கடற்கரைகளில் மலைகள் போன்ற பெரிய பாறைகளால் கட்டப்பட்ட கோட்டைகள் உள்ளன; அந்தத் தீவில் உள்ள அனைத்தும் பாறைகளால் ஆனவை-ஈட்டிகளின் நுனிகள், விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் சக்கரங்கள், பெண்களின் சீப்பு மற்றும் தையல் ஊசிகள் கூட பாறைகளால் ஆனவை. சமைக்க பயன்படுத்தும் பானைகளும், எரியும் கற்களைக் கொண்டுள்ளன. அந்த எறியும் கற்கள் பானைகளின் கீழ் வைத்துப் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களின் சாலைகளில், இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அவற்றைக் காக்க, பார்க்க பயமுறுத்தும் அரக்கர்கள் உள்ளனர்” என்றும் கூறினர். இவை எல்லாவற்றையும் நான் ஒரு மோசமான முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்குள் நான் வெடிக்கும் அளவுக்கு சத்தமாக சிரித்தேன். ஏனென்றால் இப்போது நான் உலகில் போதுமான அளவு சுற்றித் திரிந்துவிட்டேன். எல்லாமே உங்கள் சொந்த ஊரைப் போன்றது என்பதை அறிவேன். மீதமுள்ளவர்களுக்கு, நானும் திரும்பி வந்து, நான் இருந்த நாடுகளைப் பற்றிய கதைகளைச் சொல்லும்போது, வித்தியாசமான கதைகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் என்னை மகிழ்விக்கிறேன். உண்மையில், இங்கே அவர்கள் என் நாட்டைப் பற்றிய அருமையான கதைகளைச் சொல்கிறார்கள். உதாரணமாக, எங்கள் எருமைக்கு முழங்கால்கள் இல்லை எனவும், அவற்றை வேட்டையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மரங்கள் வழியாக வெறுமனே பார்ப்பது மட்டும்தான் என்றனர். ஏனென்றால் அவை இரவில் ஓய்வெடுக்க அந்த மரத்தில் சாயும்போது, அவற்றின் எடை தாங்காமல் மரம் உடைவதால் அவை கீழே விழுந்து விடும். மீண்டும் அவற்றால் எழுந்திருக்க முடியாது எனக் கூறுகின்றனர்.

இருப்பினும், உலோகங்களைப் பொறுத்தவரை, அவை அனைத்தும் உடன்பட்டன. பல வணிகர்கள் மற்றும் கப்பல் கேப்டன்கள் பல்வேறு தீவுகளிலிருந்து ஏராளமான மூல (எந்த வேதி வினைகளுக்கும் உட்படுத்தப்படாத) உலோகத்தை அல்லது நன்கு சுத்தப்படுத்தப்பட்ட உலோகத்தை நிலத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவை நாட்டுப்புற மக்கள் மற்றும் அவர்களின் வழக்குகளிலிருந்து அவர்கள் எந்த உலோகத்தைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் ஒரே மொழியைப் பேசவில்லை. குறிப்பாக யாரும் என்னுடைய மொழியைப் பேசவில்லை. மேலும், சொற்களில் பெரும் குழப்பம் இருந்தது. உதாரணமாக, “கலிபே” (kalibe) என்று அவர்கள் சொல்வது, அவை இரும்பு, வெள்ளி அல்லது வெண்கலம் இவற்றில் எதைக் குறிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முற்றிலும் வழி இல்லை. மற்றவர்கள் “சைடர்” (sider) இரும்பு அல்லது பனி என்று அழைத்தனர். மேலும் மலைகளில் உள்ள பனி, பல நூற்றாண்டுகள் கடந்து, கடினமான பாறையின் கீழ், இறுகி, முதலில் பாறை படிகமாகவும் பின்னர் இரும்பு கொண்ட பாறையாகவும் இருக்கும் என்று வலியுறுத்தும் அளவுக்கு அவர்கள் அறியாதவர்களாக இருந்தனர்.

அப்பட்டமாகக் கூறுவதென்றால், நான் பெண்கள் செய்யக்கூடிய தொழில்களால் மிகவும் சோர்ந்துபோயிருந்தேன். மேலும் இந்த இக்னுசாவைப் பார்க்க விரும்பினேன். இந்த வியாபாரத்தில் எனது பங்கை நான் பலகணிச் சட்டங்களுக்குக் கண்ணாடி பொருத்தும் பணியாளராகிய என் ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்திருந்தேன். அந்தப் பணத்துடனும், கண்ணாடியிலிருந்து நான் சம்பாதித்த பணத்துடனும், ஒரு சரக்குக் கப்பலில் ஏறினேன். ஆனால் நீங்கள் குளிர்காலத்தில் பயணம் செய்வதற்காக வெளியேற வேண்டாம். வடக்குக் காற்று, அல்லது மேற்குக் காற்று, அல்லது தெற்குக் காற்று, அல்லது தென்மேற்குக் காற்று-சுருக்கமாக, எந்தக் காற்றும் உங்கள் பயணத்திற்கு நல்லதல்ல. ஏப்ரல் மாதம் வரை சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் நிலத்தில் தங்குவதும், குடிபோதையில், பகடை விளையாட்டுகளில் உங்கள் ஆடைகளை பந்தயம் வைக்கவும், துறைமுகத்தில் சில பெண்களை கர்ப்பமாகப் பெறுவதும் மட்டுமே.

நாங்கள் ஏப்ரல் மாதம் புறப்பட்டோம். கப்பலில் மது குடங்கள் ஏற்றப்பட்டன. உரிமையாளரைத் தவிர, குழுத் தலைவரும், நான்கு மாலுமிகளும் இருந்தனர். இருபது படகோட்டிகள் தங்கள் பலகைகளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தனர். குழுத் தலைவர் கிருதி (Kriti) யிலிருந்து வந்தவர். அவர் ஒரு பெரிய பொய் சொல்லி. அவர் “பெரிய காதுகள்”-“பிக் எயர்ஸ்” என்று அழைக்கப்படும் ஆண்கள் வாழ்ந்த ஒரு நாட்டைப் பற்றிய கதைகளைச் சொன்னார். அவர்களின் காதுகள் மிகப் பெரியவையாகவும், அவை குளிர்காலத்தில் தூங்குவதற்காக தங்களை மூடிக்கொள்கின்றன என்றும் மற்றும் ஆண்களின் மொழியைப் புரிந்துகொள்ளும், தன் முன் பகுதியில் வால் கொண்ட ஆல்பில் (Alfil) என்று அழைக்கப்படும் விலங்குகளைப் பற்றியும் கூறினார்.

கப்பல் வாழ்க்கையில் என்னைப் பழக்கப்படுத்திக்கொள்வதில் எனக்கு சிக்கல் இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கொஞ்சம் வலதுபுறமாகவும், கொஞ்சம் இடதுபுறமாகவும் குலுங்கி குலுங்கி அது உங்கள் காலடியில் நடனமாடுகிறது. இங்கு சாப்பிடுவதும் தூங்குவதும் கடினம். மேலும் நீங்கள் இடமின்மை காரணமாக ஒருவருக்கொருவர் மற்றவர் காலில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். தவிர, சங்கிலியால் கட்டப்பட்ட படகோட்டிகள் உங்களைப் போன்ற மூர்க்கமான கண்களால் உற்று நோக்குகிறார்கள். அவர்கள் உண்மையில் சங்கிலியால் பிணைக்கப்படாவிட்டால், அவர்கள் உங்களை மின்னளொளியில் சிறு சிறு துண்டுகளாக கிழித்து விடுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சில நேரங்களில் அது நடக்கும் என்று உரிமையாளர் என்னிடம் கூறினார். மறுபுறம், காற்று சாதகமாக இருக்கும்போது, ​கப்பலில் விரிக்கப்பட்டிருக்கும் ​பாயானது காற்றின் திசையில் கப்பலை நகர்த்துகிறது. படகோட்டிகள் தங்கள் துடுப்புகளைத் தூக்குகிறார்கள். நீங்கள் ஒரு மந்திரிக்கப்பட்ட மௌனத்தில் பறக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். டால்பின்கள் தண்ணீரிலிருந்து வெளியேறுவதை நீங்கள் காண்கிறீர்கள். அவைகளின் முனகல்களின் வெளிப்பாட்டிலிருந்து மாலுமிகள் அடுத்த நாள் நமக்கு இருக்கும் வானிலை பற்றித் தங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறார்கள். அந்தக் கப்பல் அதன் தளத்தில் நன்கு பூசப்பட்டிருந்தது. ஆனாலும் அதன் அடிப்பகுதியின் கட்டையானது முழுவதும் துளைகளால் நிரம்பியிருந்தது. அவை கப்பல் புழுக்களால் உண்டானது என்று அவர்கள் விளக்கினர். துறைமுகத்திலும், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்கள் அனைத்தும் புழு சாப்பிடுவதை நான் கண்டேன். எதுவும் செய்வதற்கில்லை என்று கேப்டனாக இருந்த உரிமையாளர் கூறினார். கப்பல் பழையதாக இருக்கும்போது, அது உடைந்து எரிகிறது. நங்கூரத்திற்கும் அதே நிலைதான் ஆனால் எனக்கு ஒரு யோசனை இருந்தது. இரும்பிலிருந்து அதை உருவாக்குவது முட்டாள்தனம். துரு அதை விழுங்குகிறது. அது இரண்டு வருடங்கள் கூட நீடிக்காது. மற்றும் மீன்பிடி வலைகள்? அந்த மாலுமிகள், காற்று நன்றாக இருக்கும்போது, மர மிதவைகள் மற்றும் கப்பலின் அடி பாரமாக இருக்கும் பாறைகளைக் கொண்ட ஒரு வலையை விரித்தனர். பாறைகள்! அவைகளில் அதங்கம் இருந்திருந்தால் அவர்கள் இதை விட நான்கு மடங்கு குறைவான சிக்கல்களை சந்தித்திருக்கலாம். நிச்சயமாக நான் யாரிடமும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ஆனால் நீங்களும் புரிந்து கொள்வீர்கள். இக்னுசாவின் குடலில் இருந்து நான் அதங்கத்தைத் தோண்டி எடுப்பேன் என்று நான் ஏற்கனவே யோசித்துக்கொண்டிருந்தேன். கரடியை சுடுவதற்கு முன்பு நான் கரடிகளின் தோல்களை விற்றேன்.

கடலில் பதினொரு நாட்கள் பயணத்திற்குப் பிறகு நாங்கள் அந்தத் தீவைப் பார்த்தோம். படகுகள் மூலம் ஒரு சிறிய துறைமுகத்திற்குள் நுழைந்தோம். எங்களைச் சுற்றி கிரானைட் பாறைகளாக இருந்தன. அடிமைகள் தூண்களை செதுக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் பூதங்கள் அல்ல, அவர்கள் சொந்தக் காதுகளில் தூங்கவில்லை. அவர்கள் எங்களைப் போலவே இருந்தனர் மற்றும் மாலுமிகளுடன் போதுமான அளவு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்களுடைய காவலர்கள் அவர்களைப் பேச விடவில்லை. இது பாறைகள் மற்றும் காற்றின் நிலம், இது எனக்குப் பிடித்திருந்தது. இங்கு வீசக்கூடிய காற்றானது கசப்பான மூலிகைகள் மற்றும் காட்டு வாசனையால் நிறைந்திருந்தது. மக்கள் வலுவாகவும் எளிமையாகவும் இருந்தனர்.

இரண்டு நாட்கள் நடந்து செல்லும் அளவிற்கு உலோகங்களின் நிலம் இருந்தது. நான் ஒரு கழுதையை அதன் ஓட்டுனருடன் வேலைக்கு அமர்த்தினேன். இது நிஜமாகவே கொஞ்சம் உண்மைதான். அவை சிறிய கழுதைகளாக இருந்தன (அந்த நிலப்பரப்பில் சொன்னது போல பூனைகளைப் போல இல்லை என்றாலும்) ஆனால் அவை வலுவானவையாகவும் மற்றும் கடினமானவையாகவும் இருந்தன. சுருக்கமாக, எல்லா வதந்திகளிலும் சில உண்மை இருக்கலாம். ஒருவேளை ஒரு புதிர் போன்ற சொற்களின் திரைகளுக்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு உண்மை. உதாரணமாக, பாறை கோட்டைகளின் கதை மிகவும் சரியானது என்று நான் நேரில் கண்டேன். அவை மலைகள் போல பெரியவை அல்ல. ஆனால் திடமானவை. அவை ஒழுங்கான வடிவத்தில் இருந்தன. வெட்டப்பட்ட கற்களால் துல்லியமாக பொருத்தப்படுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எல்லோரும் “அந்தக் கோட்டைகள் எப்போதுமே இருந்திருக்கின்றன” என்று கூறுகிறார்கள். ஆனால் யாருக்கும் அவை யாரால், எப்படி, ஏன், எப்போது கட்டப்பட்டன என்பது தெரியாது. இருப்பினும், தீவுவாசிகள் வெளிநாட்டினரை விழுங்குகிறார்கள் என்பது ஒரு பெரிய பொய். அவர்களின் நிலம் அனைவருக்கும் சொந்தமானது போல, அவர்கள் எந்தவிதமான சிரமங்களை செய்யாமலும், மர்மங்களில் ஈடுபடாமலும் என்னுடைய சுரங்கத்திற்கு என்னை அழைத்துச் சென்றனர்.

ஒரு வேட்டை நாய் விளையாட்டு நிறைந்த ஒரு மரத்திற்குள் நுழைந்து மோப்பம் பிடித்துக் கொண்டே தாவி, எல்லா இடங்களிலும் நடுங்கி, அரை பைத்தியக்காரத்தனமாகச் செல்லும்போது, உங்களை குடிக்க வைப்பதற்கு இந்த உலோகங்களின் நிலம் போதுமானது.

இது கடலுக்கு அருகில் உள்ளது. இங்குள்ள மலைத்தொடர்களின் உயரமான பகுதிகள் கூர்மையான பாறைகளாக இருந்தன. அதன் அருகிலும், தொலைவிலும் மற்றும் அடிவானத்திற்கு செல்லும் வழியிலும், ஒருவர் சுற்றிலும் சுதந்திரமான மற்றும் அடிமை மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் ஒரு வார்ப்பகத்திலிருந்து வரும் புகைகளை காண்கிறார். மற்றும் எரியும் கல்லின் கதையும் உண்மைதான். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. இது எளிதில் நெருப்பைப் பிடிக்காது. ஆனால் அப்படிப் பிடித்துவிட்டால் அது அதிக வெப்பத்தை உருவாக்கி நீண்ட நேரம் நீடித்தெரியும். அவர்கள் அதை கழுதைகளின் முதுகில் கூடைகளில் வைத்து கடவுளுக்கேத் தெரிந்த இடத்திலிருந்து கொண்டு வந்தார்கள். அது கருப்பாகவும், எண்ணெய்ப்பசையுடன் வழவழப்பாகவும், உடையக்கூடியதாகவும் இருந்தது. அதனால் அது மிகவும் கனமாக இல்லை.

எனவே, நான் சொல்வது போல், அங்கே அற்புதமான கற்கள் உள்ளன. நிச்சயமாக ஒருபோதும் பார்த்திராத உலோகங்களுடன் அவை சேரும்போது கனமானவையாக மாறுகின்றன. அவற்றின் மேற்பரப்பில் வெள்ளை, வயலட் மற்றும் நீல நிறக் கோடுகள் இருந்தன. அந்த நிலத்தின் அடியில் நரம்புகளின் அற்புதமான தடங்கள் இருக்க வேண்டும். அந்த நிலத்தில் தட்டுவது, தோண்டுவது மற்றும் சோதனை செய்வது போன்ற வேலைகளில் நான் விருப்பத்துடன் என்னை இழந்திருப்பேன். ஆனால் நான் ஒரு கோட்மண்ட், என் பாறை அதங்கம். நான் உடனடியாக அங்கு வேலையை ஆரம்பித்தேன்.

நாட்டின் மேற்கு எல்லையில் ஒரு படுகையை நான் கண்டறிந்தேன். அங்கு யாரும் இதற்கு முன்னர் தேடவில்லை என்று நான் நம்புகிறேன். உண்மையில், அங்கு எந்தவிதமான குழிகளும், சுரங்கங்களும், இடிபாடுகளும் இல்லை. மேற்பரப்பில் எந்த அறிகுறிகளும் இல்லை. மேற்பரப்பில் உள்ள பாறைகள் மற்ற பாறைகளைப் போலவே இருந்தன. ஆனால் சற்று கீழே, அதங்கம் இருந்தது. இது நான் அடிக்கடி நினைத்த ஒரு விஷயம், எங்கள் கண்கள், அனுபவம் மற்றும் திறனுடன் உலோகத்தைக் கண்டுபிடிப்போம் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் உண்மையில் எங்களுக்கு எது வழிகாட்டுகிறது என்பது மிகவும் ஆழமான ஒன்று. சால்மன் வகை மீன்களை அவை மீண்டும் தங்கள் ஆறுகளை நோக்கிச் செல்ல வழிநடத்தும் அல்லது பறவைகளை தங்கள் கூடுகளுக்குத் திருப்பும் ஒரு விசை அல்லது சக்தி போன்றது அது.

நீரோட்டம் பார்ப்பவர்களைப் போலவே இதுவும் நம்மிடம் நிகழ்கிறது. அவர்களைத் தண்ணீருக்கருகில் கொண்டு செல்ல எது வழிகாட்டுகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஏதோ அவர்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்களின் கைகளில் உள்ள மந்திரக்கோலை அல்லது தேங்காயை திருப்புகிறது.

எப்படி என்று என்னால் கூறமுடியாது, ஆனால் அதங்கம் இருந்தது. நான் அதை என் காலடியில் உணர்ந்தேன். அது கொந்தளிப்பான, நச்சுத்தன்மையுள்ள, கனமான ஒன்றாக இருந்தது. ஒரு சிற்றாறின் ஓரத்திலே இரண்டு மைல் தூரத்திற்கு அது நீண்டிருந்தது. அங்கு காட்டுத் தேனீக்கள் மின்னல் தாக்கிய மரத்தின் தண்டுகளில் கூடு கட்டியிருந்தன.

இங்கு வந்த குறுகிய காலத்திலே எனக்காக நிலத்தைத் தோண்டக்கூடிய அடிமைகளை வாங்கினேன். கொஞ்சம் பணம் ஒதுக்கியவுடன் நானும் ஒரு பெண்ணை வாங்கியது ஒரு நல்ல நேரம் மட்டுமல்ல. நான் அவளை கவனமாகத் தேர்ந்தெடுத்தேன். அவள் அழகுக்காக அவ்வளவாகப் பார்க்கவில்லை. மாறாக அவள் ஆரோக்கியமாகவும் அகலமான இடுப்பைக் கொண்டவளாகவும் இளமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். நான் அவளை அப்படித் தேர்ந்தெடுத்தேன். அதனால் அவள் எனக்கு ஒரு ரோட்மண்ட் தருகிறாள். எங்கள் கலை அழியாது. என் கைகளும் முழங்கால்களும் நடுங்கத் தொடங்கியுள்ள, என் பற்கள் என் ஈறுகளில் தளர்ந்து, கடலில் இருந்து வந்த என் மூதாதையரைப் போல நீல நிறமாக மாறிவிட்ட இந்த வயதிலும் நான் என் கலையில் பின் தங்கிருக்கவில்லை. இந்த ரோட்மண்ட் வரவிருக்கும் குளிர்காலத்தின் முடிவில் பிறப்பான். பனை மரங்கள் வளரும், உப்பு படியக்கூடிய இந்த நிலத்தில், இரவில் காட்டு நாய்கள் கரடியின் பாதையில் ஓடுவதைக் கேட்கலாம். இந்தக் கிராமத்தில் நான் காட்டுத் தேனீக்கள் நிறைந்த ஒரு சிற்றாறின் ஓரத்தில் அதங்கத்தைக் கண்டுபிடித்து அதை உருக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். அந்த கிராமத்திற்கு நான் மறந்துபோகும் என் மொழியில் ஒரு பெயரைக் கொடுக்க விரும்பியிருப்பேன். “பக் டெர் பின்னென்” (Bak der Binnen), அதாவது “தேனீக்களின் சிற்றாறு” (Brook of the Bees). ஆனால் இங்குள்ள மக்கள் அந்தப் பெயரை ஓரளவு மட்டுமே ஏற்றுக்கொண்டனர். தங்களுக்குள், தங்கள் மொழியில்- அது இப்போது என்னுடையது- அவர்கள் அதை “பாகு அபிஸ்” (Bacu Abis) என்று அழைக்கிறார்கள்.

குறிப்பு:

இந்தக் கதையானது இத்தாலிய மூலத்தில் “ப்ரைமோ லெவி” அவர்கள் எழுதிய “Il sistema periodic” என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான, ரேமண்ட் பி. ரோசென்டல் அவர்கள் மொழிபெயர்த்த “தி பீரியாடிக் டேபிள்” (The Periodic Table) என்ற புத்தகத்தில் உள்ள “Lead” என்ற சிறுகதையின் தமிழாக்கமாகும். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் பதிப்புரிமையானது “ஸ்கோகன் புக்ஸ்” (Schocken Books Inc.) என்ற பதிப்பகத்தையேச் சாரும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button