கூதிர்காலப் பின்னிரவில்
அற்புதம் நிகழ்ந்துவிடாதாவென
பட்டினப் பிரவேசம் செய்திருந்த
முதல்தலைமுறைப் பட்டதாரி
பேருந்து நிலைய வெற்றிருக்கையில் அமர்ந்தபடி வான் பார்க்க
சிரித்துக் கொண்டிருந்த நிலவு நோக்கி
நல்லை அல்லை என்றவனின் கைகளில்
அம்மா கொடுத்துவிட்ட குறுந்தொகை.
***
துர்மரணக் கனவுகள் தூக்கம் கலைக்கையில்
மீண்டும் மூட மறுக்கும் இமைகளுக்கு
மஞ்சள் நிறம் பூசியபடி விளக்கொளி சுடர்விட
தன்னிழல் பார்த்து பயம் தொற்றிப் பதறுகையில்
ரத்தக் கவுச்சியுடன் சில்லிட்டுக் காற்று வீச
எங்கிருந்தோ விருட்டென வந்தமர்ந்த விட்டிலின் பார்வையில்
ஒட்டுமொத்த இனத்தின் மரண ஓலம்.
***
சுழல் ராட்டினம்
கண்ணாடி வளையல் கடை
கலர் ரிப்பன்
சேமியா ஐஸ்
அச்சு மருதாணி
பனவோலை பதநீர்
ஆப்பிள் பலூன்
பீப்பீ கொட்டு
எல்லாம் வரைந்தாயிற்று
சப்பரத்தில் அவளையும்.
*********