இணைய இதழ் 105குறுங்கதைகள்

குறுங்கதைகள் – தயாஜி

குறுங்கதைகள் | வாசகசாலை

பழைய குற்றவாளி

இன்று ராஜாவிற்கு திருமணம். நல்ல பழக்கவழக்கம். நல்ல வேலை. நல்ல

சம்பளம். நல்ல அழகு. நல்ல உயரம். நல்ல வாட்டசாட்டம். நல்ல கருகரு தலைமுடி, நல்ல குடும்பம்; என இப்படி பல நல்லவற்றை வைத்திருக்கும் இளைஞனுக்கு திருமணம் என்பதே இன்றைய தினத்தில் அதிசயம்தான்.

இப்போதெல்லாம் அதிசயங்கள் மீது யாருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. அதனால், திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.

ஒரு நிமிடம் பொறுத்திருந்தால் ராஜா தன் ராணிக்கு தாலி கட்டியிருப்பான். வந்தவர்களும் ஆசிர்வதித்து சாப்பாட்டிற்கு சென்றிருப்பார்கள். அதற்குள்ளாக வந்துவிட்டார்கள் காவல் துறையினர்.

கல்யாண மண்டபத்தைச் சுற்றிவளைத்துவிட்டார்கள். ஒவ்வொருவர் கையிலும் துப்பாக்கி. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதால் பலத்த பாதுகாப்புடனே வந்திருக்கிறார்கள். யாரும் தப்பித்துவிடக் கூடாது என்பதால் ஐந்து ட்ரோன்களை கேமராக்கள் பொருத்தி மண்டபத்தின் முன் வாசல் பின் வாசல் என எங்கெல்லாம் ஆள் வெளியேறுவதற்கான இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் பறக்க வைத்திருக்கிறார்கள்.

குண்டுகள் துளைக்காத பாதுகாப்பு ஆடை அணிந்திருந்த சிலர் மெல்ல மெல்ல முன்னேறினார்கள். மணமேடையில் மணமகனை துப்பாக்கி முனையில் கைது செய்கிறார்கள்.

ராஜாவின் எந்த அசைவும் அவர்களுக்கு பாதிப்பைக் கொடுக்கலாம் என்கிற கவனம் அவர்களின் கண்களிலும், எந்த நேரத்திலும் துப்பாக்கியைப் பயன்படுத்தலாம் என்கிற எச்சரிக்கையுணர்வு துப்பாக்கியைப் பிடித்திருக்கும் அவர்களின் விரலின் அழுத்தத்திலும் இருக்கிறது.

இன்னும் சில நாட்களில் அரசாங்க நிகழ்ச்சி ஒன்று இந்த வட்டாரத்தில்

நடக்கவுள்ளதால், அமைதியைக் கெடுக்கும் அச்சத்தைக் கொடுக்கக்கூடிய குற்றவாளிகளை முன்கூட்டியே கைது செய்வதற்கான ஏற்பாடுதான் இது.

ஆம் ராஜா, எந்நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு குற்றவாளி.

அரசாங்கம் அவன் மீது எப்போது கண் வைத்திருக்கிறது. எல்லோர் முன்னிலையிலும் ராஜாவை கைது செய்வதறற்கான ஆதாரத்தை ஒருவர் ஒலிபெருக்கியில் வாசிக்கின்றார்.

யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

எட்டு வயதில் சைக்கிள் திருடியதாக சந்தேகத்தின் பெயரில் அவனை

விசாரித்திருக்கிறார்கள். யார் புகார் கொடுத்திருந்தார்கள், இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள், சைக்கிளை திருடியது யார், அது திரும்ப கிடைத்ததா இல்லையா, உண்மையிலேயே அந்தச் சைக்கிள் காணமல்தான் போனதா போன்ற இன்ன பிற எந்த விபரங்களும் அவர்களிடம் இல்லை.

கைதுக்கான ஒரே காரணம்; ராஜா ஒரு பழைய குற்றவாளி. அவர்களின்

குற்றப்பதிவு சேமிப்பில் அது மட்டும்தான் இருக்கிறது. அரசாங்கத்திற்கு இந்த ஒரு வலுவான ஆதாரம் போதாதா குற்றவாளிகளை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்க?

அவள் போர்ன் ஸ்டார்

சொன்னால் நம்புங்கள். அவள் அப்படித்தான் எனக்கு அறிமுகமானாள்.

தொடக்கத்தில் நான் கூடத்தான் அவளை நம்பவில்லை. ஏதாவது புகைப்படமோ வீடியோவோ இருந்தால் அனுப்புங்கள்; அப்போதுதான் நம்புவேன் என்றேன். அடுத்த நொடியில் எனது இன்பாக்ஸ்கள் நிறைந்தன.

எனக்கு கை பரபரத்தது. உடனே எல்லாவற்றையும் திறந்து பார்க்க ஆரம்பித்தேன். எல்லா புகைப்படத்திலும் பலவித ஆடைகளுடன் இருந்தாள். சரி, போகப்போக மாற்றம் இருக்குமென்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த படங்களைப் பார்த்தேன். ஏமாந்தேன்.

போகட்டும். வீடியோக்களிலாவது ஏதும் இருக்கிறதா என பார்த்தேன். சுத்தம். அதில் மருந்துக்கு கூட எதுவும் இல்லை. சினிமா வசனங்களின் பின்னணியில் அவள் அவளது நடிப்பு திறனை காட்டிகொண்டிருக்கிறாள்.

பிறகு ஏன் போர்ன் ஸ்டார் என அறிமுகம் செய்து கொண்டாள் என மனம் குழம்பியது. ஒருவேளை நடிக்க வந்து வாய்ப்பு கிடைக்காமல் வேதனையிலும் வறுமையிலும் இப்படி இறங்கிவிட்டாளோ எனத் தோன்றியது.

எதற்கும் அவளிடமே ஒரு ஒப்புதல் கடிதத்தை வாங்கிவிட்டால் நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாம் எனத் தோன்றியது. கேட்டேன். உடனே பதில் மின்னஞ்சல் வந்தது. இம்முறை முழுக்கவும் ஆங்கிலத்தில் இருந்தது.

இப்போதுதான் எனக்கு பகீரென்றது. ஆங்கிலத்தில் ‘Born Star’ என்பதைத்தான் தமிழில் போர்ன் ஸ்டார் என எழுதி என்னிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறாள். நல்லவேளையாக நான் வேறெதுவும் அவளிடம் கேட்டிருக்கவில்லை.

இனி நீங்களாவது தமிழை தமிழாகவும், ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும்

எழுதுங்களேன்; ப்ளீஸ்…

குமரு என்னும் குமரகுருபரன்கள்

“அம்மா…! அம்மா…!” வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அம்மாவை கூப்பிட்டான் மணி. “அம்மா… கிச்சன்ல இருக்காங்க ஏன்… இப்ப அவளை கூப்டற..?” என்ற வாக்கிலேயே அப்பா கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“அம்மா இன்னிக்கு உங்க பிரண்டை பார்த்தேன் தெரியுமா…? உன்னை கேட்டதா சொல்ல சொன்னாரு…”

அம்மா அவசர அவசரமாக சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார். அப்பாவும் கைப்பேசியைக் கீழே வைத்தார்.

“என்னது எனக்கு கூட்டாளியா… யாரு…?”

“அவரு பேரு குமரகுருவாம்… நீங்க கூட குமரு.. குமருன்னு கூப்டுவீங்களாம்…”

“ஓ உங்கம்மாவுக்கு கூட்டாளிங்கலாம் இருக்காங்களா…அவளுக்கு கிச்சன்தானே உலகம்… பரவாலையே…”

“நீங்க ஒன்னு இவன்தான் எதோ உளறான்னா நீங்களும் சேர்ந்துகிட்டீங்க…”

“இல்லம்மா அவரு உங்க பிரண்டுன்னுதான் சொன்னாரு.. என் முகத்தைப்

பார்த்தோன்னவே நீ காமாட்சி புள்ளையான்னு கேட்டாரும்மா… உங்க கூடதான் தமிழ் ஸ்கூலு படிச்சாராம்…”

“எவனாச்சும் ஏதாச்சும் சொல்லுவான்.. கண்டவன்கிட்டலாம் உனக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு…” என அம்மா பேசி முடிப்பதற்குள் அப்பாவிற்கு கைப்பேசி அழைப்பு வந்தது. எதும் நடக்காதது மாதிரி கைப்பேசியை எடுத்து வாசலுக்குப் போனார்.

“சரி நீ வா.. கிச்சன்ல டீ கலக்கியிருக்கேன் வந்து எடுத்துக்கோ..”

அம்மாவும் மணியும் சமையலறைக்கு வந்தனர். அம்மா ஒரு குவளை நிறைய தேநீரை ஊற்றி மணிக்கு கொடுத்து, அவனது தலையைத் தடவினார்.

“ஏன் யா.. குமரு வேறெதும் கேட்டானா…. இப்ப எப்படி இருக்கான்…” மணி, ஒரு முறை அப்பாவை எட்டிப் பார்த்துவிட்டு அம்மாவிடம் நடந்ததை முதலில் இருந்து சொல்லத் தொடங்கினான்.

-tayag17@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button