ஆண்டு : 2047
இடம்: ஆரியவர்த்
தலைவர்: டாக்டர் ஜோஷி
குறிக்கோள்: பிரித்து வைத்தலின் மூலமாக அமைதியை நிலைநாட்டுவது. ஒவ்வொரு செக்டரும் (பகுதியும்) வானுயர்ந்த சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளன.
இவ்வார்த்தைகளுடன் தொடங்குகிறது “LEILA (லேய்லா)” என்ற NETFLIX SERIES.
“FIRE” “WATER” “EARTH” ஆகிய படங்களை இயக்கிய தீபா மேத்தா தான் இத்தொடரை வடிவமைத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து ஷங்கர் ராமன் மற்றும் பவன் குமார் ஆகியோரும் இயக்கியுள்ளனர். 2017 ஆம் ஆண்டு இதே பெயரில் பரயாக் அக்பர் என்பவர் எழுதி வெளி வந்த நாவலைத் தழுவி ஊர்மி ஜூவேகர், சுஹானி கன்வர், பாட்ரிக் கிரஹாம் ஆகியோரால் சீரீஸ் பாணி கதை சொல்லலுக்கு எழுதப்பட்டுள்ளது. ஹூமா குரேஷி, சித்தார்த், சஞ்செய் சூரி ஆகிய நடிகர்களின் நடிப்பில் இந்த வெப் சீரீஸ் உருவாகியுள்ளது.
”லேய்லா” ஒரு டிஸ்டோபியன் (dystopian) கதை. ”A dystopia is a community or society that is undesirable or frightening.” “மக்களால் விரும்ப முடியாத,அவர்களை பயமுறுத்தக் கூடிய சமூகம்” என்பதைத்தான் டிஸ்டோபியன் சமூகம் என்று சொல்கிறோம். இது “யுடோபியா (Utopia)” என்று சொல்லப்படும், சகலரும் வாழ ஏதுவான சமூகம்/ வாழ்நிலை என்பதற்கு நேரெதிரானது. “டிஸ்டோபியன்” வகை திரைப்படங்கள் ஆங்கிலத்தில்/ பிற மொழிகளில் அதிகம் வந்திருக்கின்றன. உதாரணமாக எனக்கு மிகவும் பிடித்த Natalie Portman நடித்த “V for Vendetta”, Christian Bale நடித்த “Equiilibrium”, Charlize Theron நடித்த “Mad Max: Fury Road” ஆகியவற்றைக் கூறலாம். இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. என் நினைவுக்கு வருபவை இவை தான். இந்த டிஸ்டோபியன் வகைப் படங்களில் படம் எடுக்கும் நாடு, எடுப்பவர் ஆகியவற்றை பொருத்து “நீதியற்ற சமூகமாக” அவர்கள் எம்மாதிரியான சமூகத்தை சித்தரிக்கிறார்கள் என்பதும் மாறுபடும். உதாரணத்திற்கு George Orwell எழுதிய “1984” என்ற நாவல், அதே பெயரில் வெளிவந்த திரைப்படம் இரண்டுமே USSR-ல் இருந்த கம்யூனிச அரசை “நீதியற்ற சமூகமாக” சித்தரித்து வெளிவந்தது.
லேய்லா உருவாக்கும் டிஸ்டோபியன் உலகம் எத்தகையது?
”லேய்லா” 2047 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பிக்கிறது. ஷாலினி (ஹூமா குரேஷி) ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்திருக்கும் பஞ்சகர்மி (5 வது அடுக்கு- உயர் சாதியை குறிக்கும்) பெண். தன் மகள் லேய்லா, மற்றும் கணவர் ஆகியோர் அவர்களின் upper class வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென வீட்டின் உயரமான சுவர் எகிறி குதித்து சிலர் உள்ளே வந்து அவர்களை தாக்குகிறார்கள். திருட்டுத்தனமாக தண்ணீர் சேகரித்ததற்காக என்று சொல்லி நடக்கும் தாக்குதலில் ஷாலினியின் கணவர் கொல்லப்படுகிறார். அவர்களின் மகளை அங்கேயே விட்டு விட்டு, ஷாலினியை இழுத்துச் செல்கிறார்கள்.
இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் திரை விரியும் போது “ஆர்யவர்தம்” என்ற சித்தாந்தத்தை நம்பும் ஒரு சூழல் நிலவுவதையும், அதில் பெண்கள் “குடும்பப் பெண்களாக” இருக்க பயிற்சி அளிக்கப்படுவதும், “சுத்தமுள்ளவர்களாக” இருக்க பயிற்சி அளிக்கப்படுவதும் இருக்கிறது. இவற்றை சரியாக செய்பவர்கள் “சுத்தத்தன்மை தேர்வு” என்கிற ஒரு தேர்வுமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெற்றால் அவர்கள் வெளியுலகத்திற்குச் சென்று ஆர்யவர்த்தத்தின் பெண்களாக வாழ முடியும். இல்லையேல் “லேபர் கேம்ப்” என்றழைக்கப்படும் கடுமையான உடலுழைப்பு வேலைகள் செய்யும் முகாமுக்கு அனுப்பப்டுவார்கள். ஆர்யவர்த உலகம், மதம் விட்டு, அடுக்கு (சாதி) விட்டு திருமணம் செய்து வாழ்பவர்களை நல்வழிப்படுத்துவதற்கும், அவர்களுக்கு பிறக்கும் கலப்பு இரத்த குழந்தைகளை அழித்தொழிக்கவும் செய்து வருகிறது. அந்த ஊரில் ஒரே ஒரு குடிசைப் பகுதி மட்டுமே ஆர்யவர்தத்திற்கு எதிரான இடமாக இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து “ஆர்யவர்தத்திற்கு” எதிராக போராடுகிறார்கள். “ஆர்யவர்தத்தை” எதிர்க்கும் அறிவு ஜூவிகளும், சாதாரண மனிதர்களும் அழித்தொழிக்கப்படுகிறார்கள். பெண்களை நல்வழிப்படுத்தும் செண்டரில் இருந்து லேபர் கேம்ப்-க்கு கொண்டு செல்லப்படும் ஷாலினியின் பொறுப்பு ஆபிஸராக சித்தார்த். சிறு குழுவாக இயங்கிவரும் எதிர்ப்பியக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார். ஷாலினிக்கு தன் குழந்தையை மீட்டெடுக்க வேண்டும், சித்தார்த்துக்கும் தன் சித்தாந்தம் வெற்றியடைய வேண்டும், ஆர்யவர்த்ததிற்கு இவர்கள் இருவருமே இனம் காணப்பட்டு அழித்தொழிக்கப்பட வேண்டும். இது தான் லேய்லா-வின் டிஸ்டோப்பியன் உலகம்.
இதை வாசிக்கும் போது ”2047 ஏன், 2019-லயே நம்ம இப்படி தான ஆகிட்டிருக்கோம்” என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை இல்லையா? அது தான் இந்த சீரீஸை, அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்றாக மாற்றுகிறது. இந்தியாவின் இன்றைய அரசியல் சூழலுக்கு அப்படியே அச்சு பிசகாமல் பொருந்திப் போகிறது இந்த சீரீஸ்.
ஒரு GREY TONE, ஒரு அழுத்தமான மனநிலையை முதல் காட்சியிலிருந்தே நமக்குள் படர விடுகிறார்கள். ஒவ்வொரு ஃபிரேமிலும் ஒரு இறுக்கம் இருக்கிறது. சுதந்திரமாக இருக்கிறவர்கள் கூட இறுக்கமாக இருக்கிறார்கள். அதுவே பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. தண்ணீர் பஞ்சம், மின்சாரத் தட்டுப்பாடு, மேலதிகமான மாசு ஆகியவையும் நம்முள் மிகப்பெரும் பயத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் சில genre களில் கதைகள் சொல்ல முடியுமா என்று யோசனையாக இருக்கும். Zombie, Martial art, Futuristic படங்கள் வரிசையில் dystopian கதைகள் convincing ஆக சொல்லப்படுமா என்ற ஐயம் நிறைய பேருக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு வெளிவந்த “Mard ko Dard Nahi Hota” என்ற இந்தி படம் Martial Art-ஐ மும்பையின் வீதிகளுக்கு கொண்டு வந்தது, மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதே போல “டிஸ்டோபியாவை” இந்திய பார்வையாளர்களுக்கு “லேய்லா” அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிராபிக்ஸ் பயன்படுத்தியிருக்கும் போதும், நிஜ இடங்களில் (நொய்டா உட்பட) நிறைய ஷூட் செய்திருக்கிறார்கள். இது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
“லேய்லா” வோடு எனக்கு சில மாற்று கருத்துகளும் இருக்கின்றன. பெண்களை நல்வழிப்படுத்தும் செண்டர்களில் திருநங்கைகள் கண்காணிப்பாளர்களாக இருக்கிறார்கள். அவர்களை மோசமானவர்களாக காட்சிப்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் மிகவும் stereotypical-ஆக கையாண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக ஷாலினியின் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணும் அவளது கணவரும், இன்று “ஆர்யவர்தத்தில்” மிகவும் உயரிய இடத்தில் இருக்கிறார்கள். ஆர்யவர்தத்தை பறைசாற்றுபவர்களாக இருக்கிறார்கள். வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது இது சரியில்லாததாக படுகிறது. எனக்கு தோன்றிய மாற்றுகருத்துகள் வேறு யாருக்கும் தோன்றினால், அதை பற்றி பேசும் போது தான் எனக்கே தெளிவு பிறக்கும் என்று நினைக்கிறேன்.
ஷாலினியின் கதாபாத்திர சித்தரிப்பு சுவாரஸ்யமானது. அவர் தான் இந்த சீரீஸை தூக்கி சுமக்கிறார். அதனால் அவரை ஓவர் நல்லவராக காட்டாமல் க்ரே ஷேடில் வைத்திருப்பது அருமையாக இருக்கிறது. தான் தப்பித்து தன் மகளைத் தேடுவதற்காக நண்பர்களை காட்டி கொடுக்க துணிகிறார், சித்தார்த்தை ஆபத்தில் வைக்க துணிகிறார். இவை ஹூமா-வின் கேரக்டரை சுவாரஸ்யமாக்குகிறது. உள்ளபடியே நன்றாக இருந்தாலும் ஃபெர்பார்மன்ஸ் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இறுதியாக, முக்கியமாக நான் சொல்ல நினைப்பது, நம்முடைய இந்த அரசியல் சூழலில் டிஸ்டோப்பியாவுக்கும், யுடோப்பியாவுக்குமான வித்தியாசம் எள்ளளவில் தான் இருக்கிறது. இந்திய தேசியம், இந்து, இந்தியா என்று பேசுவதை டிஸ்டோபியாவாக பார்க்கும் நாமே, தமிழ்நாட்டின் சில அடிப்படைவாத தமிழ் தேசிய இயக்கங்கள்/கட்சி இங்கிருக்கும் சாதிய, வர்க்க, மத வேறுபாடுகளைப் பற்றி மூடி மறைத்து தமிழ், தமிழர், தமிழன் தான் ஆள வேண்டும் என்று பேசுவதை யுடோப்பியாவாக பார்க்கிறோம். இது ஆபத்தான விஷயம். ”லேய்லா”வை பார்க்கும் போது இதையும் மனதில் வைத்துக் கொண்டு பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
“லேய்லா” என்ற இந்த தொடரை நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கக் கோரி அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதற்கு முன் அனைவரும் பார்த்துவிடுவது அவசியமாகிறது.