![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/09/cover-538x405.jpeg)
மென்சோகத்தைப் விதைத்துச்செல்லும் இசை…
13 சிறுகதைகளின் வேறுபட்ட அந்நியக் கதைக்களங்கள், எதார்த்த மனிதர்கள், அவர்களின் கதாப்பாத்திரங்கள், செயல்பாடுகள், பிரயோகிக்கும் மொழிகள், இரசித்துக் கொண்டாடும் இசை நம்மை சிந்திக்க வைக்கக் கூடியவை. அலைக்களிக்கக் கூடியவை. சிரிக்க வைக்கக்கூடியவை. உருத்தும் உண்மைகளாய் முகத்தில் அறையக்கூடியவை. ‘மூகமுனி’, ‘வன்மம்’ நாகுலுவின் இறப்பு நம்முள் பல கேள்விகளை எழுப்பக்கூடியவை. ‘மூகமுனி’யின் ஞாபகங்களும், ஜப்பானைச் சேர்ந்த ‘கூபா’வின் நினைவலைகளும் நம்மிடம் சேர்ப்பிக்க விரும்புபவை ஒன்று தானோ என்று தோன்றியது. வெவ்வேறு கதைகளைப் போல காட்சியமைக்கப்பட்டு அதன் தொடர்புகள் விளக்கப்படுகையில் ‘விலக்கம்’ நெருக்கமானதாகி விடுகின்றது. வித்யாவின் அப்பாவிற்கும், அவள் இணையான ஜிம்பார்சனுக்குமான ஒற்றுமைகளையும் , அவர்களது தர்க்கங்களையும் இருவேறு தளங்களில் தெளிவுபடுத்தி இணைத்துச் செல்கின்றன.
‘அபி ந ஜாவோ சோட்கர்’ , ஃபரீன் சமுதாயத்தின் நிர்பந்தத்தாலும், வாழ்க்கை சுமையாகி, எத்தனை அழுத்தம் வந்தாலும் , உரக்கச் சிரித்துவிட்டு அதன் முதுகில் இரண்டு முறை செல்லமாக குத்திச்செல்லும் பல பெண்களை பிரதிபலித்துச் செல்கின்றாள். நம் வாழ்நாள்முழுக்க ‘நாம் ஏன் உயிர் வாழ வேண்டும்’ என்ற ஒரு கேள்வி நம்மைச்சுற்றிக் கொண்டே வருகிறது. அதற்கான பதிலும் நாம் கொடுக்கும் முன்னுரிமைகளும் காலத்திற்கு ஏற்ப எப்படி மாறிக்கொண்டே வருகின்றது என்பதை நகைப்புடனும் உள்ளார்ந்த தேடல்களுடனும் உணர்த்துகிறது ‘ஒரே கேள்வி’. படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள், பேரப்பிள்ளைகள், தனிமை, ஆற்றாமை என்ற வட்டமடிக்கும் வாழ்வின் போதாமைகளையும், சகிப்புத்தன்மைகளையும் நாம் எப்படி ஏற்கப்பழகிவிட்டோம் என்பதை நம்மையே பரிதாபத்துடன் கூடிய ஒரு வாழ்க்கை பயணமாக அழைத்துச் செல்கின்றது.
ராகத்தின் பெயருக்கேற்ப மென்சோகத்தை ஏற்படுத்திச் செல்கிறது ‘ பாகேஶ்ரீ ‘ நாயகனின் இசைப்பயணம். இளமைத்துள்ளலுடனும், அதற்கே உண்டான பித்து நிலை , அவசரம் என்று யுவன் யுவதிகளின் எண்ணங்களின் நாடித்துடிப்பே ‘மாடர்ன் லவ் ஸ்டோரி’. கலப்புத்திருமணங்களின் நடைமுறைகளை எந்தவித அதீத பூச்சுக்கள் அன்றி காட்சிப்படுத்திகின்றாள் ‘மெஹருன்னிசா’. தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியும் அதன் குறைகளும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி நம் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியவை என்பதை தெரிந்து கொள்ள குறுநகையுடனுயே ‘2024’க்குள் பயணம் செய்யலாம். பதட்டம், மகிழ்ச்சி, படபடப்பு, வருத்தம், எதிர்பார்ப்பு என்று ஒரு திரைப்படத்தின் அத்தனை அனுபவத்தையும் அள்ளித்தந்தவன் ‘போயிகுடாவின் மாரடோனா’. எந்திரத்தனமான வாழ்வியலிலும் அரசியல்களிலும் சிக்கிக்கொண்டு எத்தனை எத்தனை மரடோனாக்கள் தங்கள் ஊரிலேயே தங்கிவிட்டார்கள் என்ற எண்ணிக்கை எவருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
நமக்கு தொந்தரவு இல்லையென்றாலும் அதை நம் பிரச்சினையாக்கி குழம்பித்தவிக்கும் இயல்பை ‘பாம்புப்படலம்’ மனிதர்கள் பிரதிபலிக்கின்றார்கள். கற்றுத்தரப்பட்ட அறம் ஒன்றாக இருந்தாலும் அன்றாட வாழ்வியலின் ஓட்டத்தில் மற்றவரின் வாதைகள் நமக்கு கடும் அயர்ச்சியுடன் நமது குறைவான சகிப்புத்தன்மையை உணரவைப்பதே ‘பிரார்த்தனை’. ‘துணிந்தபின்மனமே’..நம்மை பிடிக்காதவர்கள் என்று சில பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கும் மனிதர்கள் தான் நம்மீதான அதீத நம்பிக்கையுடன் உலாவி வருகின்றார்கள் என்பதே நம்மை பரவசப்படுத்தும் உண்மை. 2019ம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்பான சுஜாதா விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.சுரேஷின் பாகேஶ்ரீ கதைமாந்தர்கள் நம்மை தொந்தரவு செய்பவர்களாயினும் ஆன்மாவைத் தொட்டுச்செல்கின்றார்கள்.
பி.கு – மூகமுனி கதையும், கூபோ கதையும் நூலில் தவறுதலாக இணைந்து பிரசுரிக்கப்பட்டுள்ளது என்று ஆசிரியர் தெரிவித்துள்ளார்.